மருமகளாயிருந்து மாமியாளானவள்




(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல, தாயும் – மகனும் இருந்தாங்க. அந்த ஊர்ல கெடைக்கிற வேலைகளச் செஞ்சு, பொளச்சுக்கிட்டிருந்தாங்க. மகனுக்கு, கலியாணம் முடிக்கிற வயசு வந்திருச்சு. ஒரு ஏழப் பொண்ணப் பாத்து, கலியாணஞ் செஞ்சு வச்சா.
வந்த மருமக, அமதியா இல்லாம, அடங்காப்பிடாரியா இருந்தா. மாமியா பாவம், நம்ம பாத்து, மகனுக்குக் கட்டி வச்சப் பொண்ணுதா. இப்ப நம்மளே கொற சொன்னா எப்டிண்டு, மருமக என்னா செஞ்சாலும், மகங்கிட்டச் சொல்லாம, இருந்துக்கிருவா. மருமகளுக்குப் பயந்துகிட்டு, அவ செய்யுற அடாவடித்தனங்களை மகங்கிட்டச் சொல்றதில்ல. புருசங்கிட்டப் பக்குவமா நடந்துக்கிருவா. இப்பயும் அப்படித்தான, மக முன்னால, மாமியாளுக்கு பயப்படுறவ போல நடிக்கிறது. எங்கம்மாகிட்ட, நல்லா நடந்துகண்டு சொல்லிட்டு, அவ வேலயப் பாத்துக்கிட்டிருந்தர்.
ஒருநா, மாமியா குளிக்கயில, மருமகளக் கூப்பிட்டு, முதுகு தேச்சு விடுண்டு சொன்னா. சொல்லவும், ஏண்டி! கெழவி ஒனக்கு முதுகா தேய்க்கணும்? தேய்க்கிறே, தேய்க்கிறேண்ட்டு, காலத் தூக்கி முதுகுல வச்சு, காலாலயே மேலுத் தேய்க்கிறா.
அடிப்பாவி! இப்படியா செய்யுற. செய்யி! இதுதர் ஒனக்கும் கெடைக்கும்ண்ட்டு, அண்ணக்கி ராத்திரியே, மாமியா செத்துப் போயிட்டா.
இவளுக்கு ஒரு மகன் பொறந்தர். ஆருக்கு? காலத் தூக்கி மாமியாளுக்கு முதுகு தேச்சாளே, அந்த மருமகளுக்கு. மகன் பெறந்து, வளந்தா. இவளுக்கு வயசாயிருச்சு. மகனுக்கு, ஒரு கலியாணம் முடிச்சு வச்சுட்டு, செவனேண்டு இருக்கலாம்ண்ட்டு, வெளியெல்லாம் பொண்ணுத்தேடுனா, கடசில ஒரு பொண்ணப் பாத்துக் கலியாணம் முடிச்சு வச்சா, மருமக, ரெம்ப ஒழுக்கமானவ, மாமியா, காலால சொல்ற வேலய, கையால் செய்யணும்ண்டு நெனக்கிறவ. அப்டிப்பட்டவள,
இந்த மருமகளாயிருந்து மாமியாளானவ, குளுச்சுக்கிட்டு, முதுகு தேச்சு விடக் கூப்பிட்டா. கூப்டவும், போனா, போனவ, கையால் முதுகு தேய்க்கணும்ணடு நெனச்சு, கைய முதுகுக்கு கொண்டு போறா, ஆனா, கையி முதுகு தேய்க்கப் போக மாட்டேங்குது. காலுதர், முதுகுக்குப் போகுது.
காலாலயே மாமியாளுக்கு முதுகு தேச்சு விட்டுட்டு, மாமியாகிட்ட வந்து, அத்த! கையால முதுகு தேய்க்கணும்ண்டு, கைய முதுகுக்குக் கொண்டுபோனே. ஆனா, கையி போக மாட்டேண்டுருச்சு. கால்தா போச்சு. அதனாலதர், காலால முதுகு தேச்சே. என்னயப் பொறுத்துக்கிறணும்ண்டு சொன்னா.
ஆண்டவன்! அவரவர்க்கு வச்சதுதாமா நடக்கும். நான்.. ஏ… மாமியாளுக்கு என்னா செஞ்சேனோ? அதுதாமா எனக்குக் கெடைக்கும்.
ஏ… மாமியாளுக்கு, நர் காலால முதுகு தேச்சுவிட்டே. இப்ப எனக்கு நிய்யி தேய்க்கிற. இதுல என்னம்மா தப்பு.
ஆண்டவன் ஒருத்த சும்மாவா இருக்கர். ஒலகத்ல நடக்குறதுகள ஒண்ணு விடாமப் பாத்துக்கிட்டுதா இருக்கா.
செஞ்சத, செஞ்சாத்தாம்மா தீரும்ண்டு மொனங்கிக்கிட்டாளாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.