மருதம்




நல்வெள்ளை முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தாள். அவள் அழுதுகொண்டிருப்பது அவளது உடல் குழுங்குவதில் தெரிகிறது,அதனைக் கண்ட சேந்தன் அவளை நோக்கி மிக விரைவாக வந்து அவளின் தோளைப் பற்றி தன்பக்கம் திருப்புகிறான்..
நல்வெள்ளையின் கண்கள் சிவந்தும் கன்னங்கள் உப்பியும் கிடக்கின்றன.
சேந்தன் திகைத்துப் போகிறான்.
ஒருநாழிகைப் பொழுதின் முன்புதான் சேந்தனும் நல்வெள்ளையும் வைகைநதிக் கரைக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்திருந்தார்கள்.
பலகாலம் காதலராகி -….பின் திருமணத்தில் இணைந்த பின் வரும் முதல் வைகைப் பெருக்கு இது …… அதனால் இப் பெருக்கு அவர்களுக்கு மிக அழகானது…மகிழ்ச்சியைத்தருவது….. …
அதற்குள் என்ன நிகழ்ந்திருக்கும்…
சேந்தனால் ஊகிக்கமுடியவில்லை.
கார்காலம் தொடங்கிவிட்டது…
கடல்நீரை உண்ட மேகம் கரு மலைகளாய் மாறிற்று, அவை உயர்து பேரழகின் இருப்பிடமாய்த் திகழ்ந்த மலைமுகடுகளில் ஒடுங்கி பெருமழையாகப் பெய்கிறது..
மழை நீர். அருவி வழி ஓடி வைகையில் கலந்து புதுப் புனலாக கரைபுரண்டு ஓடுகிறது…
அதன் வழியில் குறுக்கிட்ட மரங்களையும் கற்களையும் பூக்களையும் தன்னுள் இழுத்தபடி மலைச்சாரலில் இறங்கி சமதரையில் பேரோசை எழுப்பிய படி ஓடுகிறது…
இன்னும் பருவமடையாத சிறுமி துள்ளிக் குதித்து ஓடுவாளே, அது போல வைகை மகளும் ஓடுகிறாள்.
புதுப்புனலை வரவேற்க மதுரை நகரமே தயாராகிவிட்டது. வைகை ஆறு விழாக்கோலம் பூண்டிருந்தது..
ஆண்களும் பெண்களும் வைகையை வணங்குவதற்காகவும் அதில் நீராடி மகிழுவதற்காகவும் புறப்பட்டு விட்டார்கள்.
ஆராதனைக்கு வேண்டிய பூ,தூப தீபங்கள் ,பொன் மீனோடு தாம் நீராடுவதற்கான சாந்துப் பொருகளையும் விளையாடுவதற்கான பந்து ,புனை முதலானவற்றையும் தாங்கியவராய் தமது தேர்களிலோ, குதிரைகளிலோ,மாட்டு வண்டிகளிலோ நீண்ட தூரம் பயணித்து குடும்பமாகவோ, தம் இணையுடனோ. தனியாகவோ ஆற்றங்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
ஆராதனை முடிந்த பின்னர் நீர் விளையாட்டுகள் தொடங்கின. பெண்கள் தம் கணவரோடு நீரைக்குடைந்து விளயாட விரும்பினர்,.ஆனால் கணவர்கள் சிலரோ தமது காதல் பரத்தையருடன் நீராடும் ஆர்வத்தை மறைக்கமுடியாது திண்டாடினர்.. தம் மனைவியரில் நின்றும் விலகி சொல்லப்போனால் அவர்களுக்கு ஒளித்து தாம் விரும்பிய பரத்தையரை அடைவதற்கு அவர்களுக்கு நல்வெள்ளை. சேந்தன் போன்ற ஆடல்மகளிரான விறலியரினதும் பாணர்களதும் துணை தேவைப்பட்டது.
விறலியரும் பாணரும் தம்மைப் பேணுவார் குறைந்து வறுமையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த காலம் இது, குறுநில மன்னர்கள் அழிந்து மூவேந்தர்களின் ஆட்சிக்குள் தமிழகம் முழுவதும் வந்துகொண்டிருந்தது.அரசர்கள் முன்புபோல் பாண்கடன் என்றவகையில் கலைஞர்களை அதிகம் பேணுவதில்லை. எழுத்தறிவும் நூலறிவும் கொண்ட புலவரும் வடநாடுகளில் இருந்து புதிதாய் வந்து குடியேறும் பார்ப்பனர்களும் மூவேந்தர்களின் விருப்பத்துக்கு உரியவராய் முதன்மைபெறத் தொடங்கிவிட்டார்கள். இதனால் பாண்குடியில் ஒருசிலர் தாம் உயிரெனக் கருதிய கலைகளைவிட்டு மீன்பிடித்தல் முதலான வேறு தொழில்களை நாடிப் போய்விட்டார்கள்.ஆனால் நல்வெள்ளை சேந்தன் முதலியோர் தம் கலைக்கு முழுக்குப் போட்டுவிட விரும்பவில்லை. கலை அவர்கள் நாடி நரம்புகளில் எல்லாம் ஊடுருவி இரத்ததில் கலந்துவிட்டிருந்தது.கலைகள் அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்ததோடு வேறு தொழில்கள் எவற்றையும் அவர்கள் அறியாதவர்களாகவும் இருந்தனர்.இந்தநிலையில் தான் மருதநிலத்து இளைஞர்கள் இவர்களது கலைக்கு ஆதரவு அளித்தனர்.இவர்களது வறுமையைப் போக்கவும் உதவினர். அவர்களது பரத்தையருக்கும் கலைகளில் ஈடுபாடு மிகுதியாய் இருந்தது. அவர்களும் கூத்துக் கலையையும் இசைக்கலையையும் கற்க விரும்பினார்கள். இந்தத் தொடர்பு காரணமாக நல்வெள்ளையும் சேந்தனும் மற்றும் கீரன் முதலிய பாணரும் புதுப்புனல் விழாவில் இசையும் நடனமுமாய் இவர்களோடு பொழுதை மிகவும் மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருந்தனர்.
ஓம்பூரில் மிகவும் பிரபலமான பெரும் நிலக்கிழான் நாகன் தனது காதல் பரத்தையான மருதியை தாம் நீராடிக்கொண்டிருந்த இடத்துக்கு அழைத்துவருமாறு சேந்தனைக் கேட்டுக்கொண்டான். சேந்தன் மருதியைத் தேடிச்சென்றுவிட்டபோதுதான் நல் வெள்ளைக்கு ஏதோ நிகழ்ந்திருக்க வேண்டும்.
சேந்தனுக்கும் நிலக் கிழான் நாகனுக்கும் எற்பட்ட நட்பு சுவாரசியமானது.
சேந்தன் விழவுக்களத்தில் சிறிய யாழை வைத்து மீட்டிக் கொண்டிருந்தான் ,பல நாள் சரியான உணவின்றி பனங்குருத்தையும் உப்புக்கீரையும் மட்டுமே உண்டதால் அவன் வயிறு மிகவும் ஒட்டியிருந்தது. அரவு விழுங்கிய நிலவென கண்களில் கருவட்டம் சூழ்ந்து அவை ஒளியிழந்து காணப்பட்டன. ,ஆனாலும் தன்பசியை தன் யாழிசையால் வென்றுவிடத் துடிப்பவன் போல் பாலைப் பண்ணை மீட்டிக்கொண்டிருந்தான்.
பரத்தையர் சிலருடன் விழவுக்களத்துக்கு வந்த நாகன் சேந்தனை முதல் முதலில் அங்குதான் கண்டான். இசைப்பிரியனான நாகனை சேந்தனின் இசை ஏதோசெய்தது. மனதினைப் பிசையவைத்து கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
அன்றுமுதல் நாகன் சேந்தனின் புரவலனாகிவிட்டான். பசி என்ற கொடுங் கூற்றுவன் சேந்தனின் பக்கம் திரும்பவே இல்லை. தனது பரத்தையர் சூழ நாகன் இருந்தாலும் சேந்தனின் இசையில் கட்டுண்ட நாகமாகவே இருப்பது சேந்தனுக்கு மிகவும் ஆச்சரியத்தத்தைத் தந்தது. சேந்தனும் தன் இசைத் திறமையெல்லாவற்றையும் வெளியிட வாய்ப்புக்கிடைத்தமைக்காக மகிழ்ச்சியில் திளைத்தான்,
நாகனுக்கும் சேந்தனுக்கும் இடையே நட்புதான் நிலவியதா…? உண்மையில் அந்த உறவின் தன்மை எது எனக் கூற முடியாதிருந்தது…
சேந்தனின் இசைக்கு நாகன் அடிமை என்றாலும் இசையில்லாத நேரங்களில் சேந்தனை நாகன் வெறும் சேவகன் போலவே நடத்தினான்.புதிது புதிதாகப் பரத்தையரைப் பெற்றுத்தரும் தரகனாக
சேந்தன் மாற வேண்டியிருந்தது. . அவ்வப்போது நாகனின் மனைவியான நக்கண்ணையிடம் சென்று அவள் ஊடலைத் தவிர்க்குமாறு வேண்டும் தூதுவனாகவும் இருக்கவேண்டியிருந்தது.
நக்கண்ணை பருவ மங்கையாக கட்டழகியாக இருந்தபோது…இன்று போல் வைகைப் பெருக்கிற்காக வந்திருந்தபோதுதான்….. நாகன் அவளைக் கண்டு காதல் கொண்டான். நக்கண்ணையும் நாகன் மீது முதல் பார்வையிலேயே காதல் வயப்பட்டாள்.
தன்காதலனே கணவனாக வரவேண்டும் என வைகையில் நீராடி நோம்பிருந்து நாகனைக் கைப்பிடித்தாள்.
நக்கண்னையை மணம் முடித்த புதிதில் அவளை விட்டு விலக முடியாதவனாய் அவள் காதலில் முயங்கிக் கிடந்தவன் தான் நாகன்.
ஆனால், சில வருடங்கள் கழிந்த பின் , நக்கண்ணை தாயான பின்பு அவளிடமிருந்து சிறித்து சிறிதாக விலகி…பரத்தையின் முயக்கத்தில் இன்பம் காணுபவனாய் ,,,,, களியாட்டங்களில் …தன்னிலை மறப்பவனாய் அவன் மாறிய போது…குடும்பம் என்ற வண்டியின் அச்சாணி ஆட்டங்காணத்தொடங்கியது…
தாய்மையில் கனிந்து கிடக்கிறாள் நக்கண்ணை.
நாகனின் உதிரத்தில் பிறந்த மகன் மாறன்,,, நாளை நாகனின் குலத்து வாரிசு…அவனைப் பத்துமாதங்கள் சுமந்து பெற்று காத்து வருபவள் அவள்-…
தாயாகியதால் நக்கண்ணைக்கு பெரு மகிழ்ச்சிமட்டுமல்ல பெருமையும் தான்…அல்லாமலும் மகனைப் பெற்ற தாயானதால் அவள் வாழ்வு நிறைவு பெற்றதாக இந்தச் சமூகம் கூறுகிறது,அவளை விழவு முதலாட்டி எனப் போற்றுகிறது, குடும்பத்தின் கௌரவத்துக்குரிய பட்டமல்லவ்வா இது…
அனாலும் மனதின் ஓரத்தில் சிறு நெருடல்….
மகனைப் பெற்ற போது அவள் முன்னைய கட்டழகு குறைந்துவிட்டது….
மகன் பால் அருந்துவதனால் தனங்கள் சரிந்து பாலின் பிசுபிசுப்பிலும் பால் மணத்துடன் காணப்படுகிறது.
ஆரம்பத்தில் அவள் வழங்கிய இன்பத்தை தன் கணவனுக்கு வழங்க முடியாது இருப்பதுதான் அவன் பரத்தையை நாடக் காரணமாக இருக்குமோ என்று தன் நெஞ்சை அடிக்கடிகேட்டு மருகிறாள்.தாழ்வுச் சிக்கலில் உலன்று போகிறாள்…
ஆனால் நாகன் போன்ற மருத நில ஆடவர்கள் தம் மனைவியரிடம் இருந்து விலகிச் செல்வதற்கு இது காரணமில்லையே…
வைகையின் கருணையால் நெல்வயல்கள் செழித்து வளர்கிறது .ஆடு மாடுகள் பெருகி மருத நிலத்தின் வளம் பெருகுகிறது. நிலவுடைமையாளன் நிலத்தில் வேலை செய்பவர்கள் என்ற் பிரிவு ஏற்பட்டுவிட்டது. நிலவுடைமையாளனுக்கு கிடைக்கும் ஓய்வு அவனை கலைகள் போன்ற பிற விடயங்களில் ஈடுபட வைக்கிறது. பரத்தையரை நாட வைக்கிறது, இந்தப் போக்குக்கு நாகனும் விதிவிலக்கல்லவே …
நாகன் இன்று பெரும் நிலத்துக்குச் சொந்தக்காரன் .அவனின் இல்லத்தின் கொல்லையில் பசுவும் காளையுமாகப் பலமாடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவனது நிலத்தை உழுது பாடுபட உழவர்கள் இருக்கிறார்கள். அவனிடம் அழகிய தேரும் அதனை ஓட்டிச்செல்லப் பாகனும் இருக்கிறான்.
நக்கண்ணை வரமுன் ஒரு பசுவும் சிறிய வீடு ஒன்றும் மட்டுமே அவன் குடும்பத்துக்கென்று இருந்தது.இச்செல்வமெல்லாம் முன்பு அவனின் காதலுக்குரியவளாய் இருந்து பின்பு மனைவியாக அவன் இல்லத்திற்கு நக்கண்ணை வந்தபின் வந்தவையே.என்ற நினைப்பு அவனுக்கு இருப்பதாகத்தெரியவில்லை…
பரத்தையின் வீடடில் பலகாலம் கழித்துவிட்டு தன் வீட்டுக்கு எப்போதாவது நினைத்துக் கொண்டு வரும் கணவன் மீது ஊடலைத்தாண்டிய வெறுப்பும் கோபமும் அடைகிறாள் நக்கண்னை. அந்தக் கோபம் நாகனின் தூதகனாகச் செல்லும் சேந்தனின் பக்கமும் திருபுவது வழமை.
இந்த நேரங்களில் நக்கண்ணையின் முன் செல்ல சேந்தனுக்கு என்றுமே துணிவு வருவதில்லை. கண்களில் கனலும் நெஞ்சில் ஏக்கமுமாய் தோன்றும் நக்கண்ணையிடம் நாகனுக்காகப் பொய்மை பேசுவதென்பது சேந்தனுக்கு பெரும் சோதனையாகவே இருக்கும்.ஆனாலும் செஞ்சோற்றுக் கடனுக்காக அவன் பொய் பேச வேண்டியிருந்தது.
அன்று ஒரு நாள் நக்கண்ணையின் கோபத்தைத் தணித்து அவளை நாகனிடம் சேர்த்துவைப்பதற்காக இல்லம் சென்றிருந்தான் சேந்தன் . அங்கு யாழைமீட்டியபடி நாகனும் நக்கண்ணையும் காதலித்தகாலத்து நினைவுகளை மீட்டும் வகையில் அமைந்த காதல் பாடல்களைப் பாடிக்கொன்டிருந்தான், சேந்தன்…
நக்கண்ணையினால் சகிக்க முடியவில்லை.
“என்னுடைய அழகு அழிந்தாலும் அழியட்டும். உந்து தலைவனை என்னருகில் நெருங்க விடமாட்டேன். அவனைத்தொடுவது என்பது கழித்து எறியப்பட்ட மட்கலத்தை தொடுவது போலவுள்ளது .எனவே உன் தலைவன் வீட்டுக்கு வர வேண்டியதில்லை. அவனைத்தழுவி இன்புற்ற பரத்தையுடன் நீண்டகாலம் வாழட்டும்.”என வெறுப்பின் உச்சியில் நின்று நக்கண்ணை பேசிய போது …
அவள் முன் நாகனுக்காகத் தூது சென்ற சேந்தன் கூனிக் குறுகித்தான் போனான்.
இவ்வாறு வெறுப்புற்று ஏசிய நக்கண்ணை தன் கணவனைப் பிரிந்து வாழ முடிந்ததா…?
விழவு முதலாட்டி என்ற பட்டம் பெற்று குடும்பம் என்ற வட்டத்துக்குள் சுழன்று அதனைக்கட்டிக்காக்கும் பொறுப்பையும் சுமக்கும் காரணத்தாலா,,,?
அல்லது …சொத்துரிமையற்ற அவள் தனித்து வாழ்ந்தால் பிள்ளைக்கு பால் வழங்கக் கூட முடியாத வறுமையால் வாட நேரும் என்பதாலா ….. ?
பிரிந்தால்… விழவு முதலாட்டி என்று போற்றும் சமூகம் நாளை பலவாறு ஏசும் என்பதாலா…?
பிரிந்து செல்லாது இருக்கிறாள்.
சேந்தனிடம் பெரிய மூச்சு ஒன்று தோன்றி காற்றைச் சூடு படுத்துகிறது…நினைவுச் சுழியில் அகப்பட்டு எங்கெல்லாமோ சஞ்சரித்த சேந்தனை
நல்வெள்ளையின் அழுகை அவளிடத்தில் வர வைக்கிறது. .
நல்வெள்ளை சேந்தனின் தோள்களில் சாய்ந்து மேலும் அழுகிறாள்.
“என்ன நல்ளை என்ன நடந்தது?”
நல்வெள்ளை தனது அழுகையைக் கட்டுப்படுதியவளாய் கண்களை அழுத்தித் துடைத்துக் கொள்கிறாள் .
“சேந்தா.! நாங்கள் விறலியராய் பிறந்திருக்கக் கூடாது. பிறந்திருந்தாலும் தன்மான உணர்வுடன் பிறந்திருக்கக்கூடாது” என்றாள் நள்வெள்ளை.
“இப்பொழுது உங்கள் தன்மான உணர்வுக்கு என்ன கேடு வந்துவிட்டது?
“அழுகையின் காரணத்தைச் சொல்லாது புதிராக நல்வெள்ளை பேசுவது சேந்தனுக்கு சிறிது எரிச்சலைத் தருகிறது.
“எங்கள் அன்னை இளவெயினி எத்தனை சிறப்பாக இருந்தார் என்பது உனக்குத் தெரியும்தானே”
ஆமாம் இளவெயினி அன்னை கூத்தில் சிறந்தவர். ஆடுகளத்தில் அவர் குரவையிட்டு ஆடத்தொடங்கியதும் கூட்டம் அலை மோதும்.
அது மட்டுமா அவர் பாடவும் வல்லவராயிற்றே ..வஞ்சி நகர மன்னன் இவரது பாடலால் மகிழ்ந்து அணிகலங்களையும் பொற்தாமரையையும் வழங்கி பெருமைசெய்தது கூட நினைவில் நிற்கிறது நள்ளை . அதற்கும் நீ அழுததற்கும் என்ன தொடர்பு?.
சேந்தன் கேட்டபடியே அவளை உற்று நோக்குகிறாள்.
அவர்கள் காலத்தில் நம்பெண்கள் முல்லைசான்ற கற்புடையவராய் போற்றப்பட்டார்கள். ஆனால் இன்று நாம் எப்படி மற்றவர்களால் பார்க்கப் படுகிறோம் தெரியுமா….?
சேந்தன் அவளைக் கதைக்கவிட்டு மௌனமாக இருக்கிறான்.
“சேந்தா ! நான் உன்னை எதிர்நோக்கி நின்றேன். அப்பொழுது மருத நில மங்கையர் சிலர் என்னைக் கண்டவுடன் உள்ளத்தில் கோபமும் அதேசமயம் மருட்சியும் கொண்டவர்களாய் என்னை உற்று நோக்கினார்கள். அவர்களுள் ஒருத்தி கூறிய வார்த்தைகள் என்னெஞ்சை குத்தி வருத்தத்தை ஏற்படுத்தின.”
என்றபோது நள்ளையின் கண்களில் மீண்டும் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
அப்படி உன் மனம் நோகும் வண்ணம் அவர்கள் என்னதான் கூறினார்கள்.
அவசரப்படுத்தினான் சேந்தன்.
“விறலியரான நாங்கள் அழகிய கண்களையும் அடர்ந்த கூந்தலையும் பருத்த தோள்களையும் நேர்த்தியான பற்களையும் திரண்ட நெருங்கிய தொடையையும் உடையவராய் தழையுடை அணிந்து திருவிழாவில் பொலிவுடன் வந்து நிற்கிறோமாம்”.
நள்ளை முடிக்கமுன் சேந்தன் அவசரமாகத் தலையிடுகிறான்.
“அவர்கள் கூட விறலியரான உங்கள் அழகை இரசிக்கும் அளவுக்கு பேரழகிகளாக் இருக்கிறீர்கள் என்பதற்காக் மகிழ்ச்சியடைவதை விடுத்து நீ கவலையடைகிறாயே”
“அவர்கள் எங்கள் அழகை ரசித்தால் எனக்கும் மகிழ்ச்சிதான், .ஆனால் அவர்கள் எங்கள் நடத்தையைல்லவா விமர்சிக்கிறார்கள்”.
சேந்தன், நள்ளை கூற முனைவது புரியாதவனாய் புருவங்களைச் சுருக்கி நோக்குகிறான்,
“இவர்கள், எங்களது காதலர்களை மேலும் மேலும் புதிய பரத்தையர்களிடம் அழைத்துச் செல்லாதவாறு காதலர்களை அழைத்துக் கொண்டு ஓடி ஒளிந்து கொள்வோம்- என எனது காதுபடச் சொல்லிவிட்டு மிகவிரைவாக தமது காதலர்களை அழைத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள்”.
சேந்தனுக்கு இப்பொழுது நள்ளையின் அழுகைக்கான் காரணம் முழுமையாகப் புரிந்துவிட்டது.
அவன் வாய்விட்டுச் சிரிக்கிறான்.
“நள்ளை இதற்காகவா அழுதாய்.! அவர்கள் கணவர்களுக்கு மன அடக்கமில்லை. அல்லது அவர்களை அடக்கியாளும் திறன் இந்தப் பெண்களிடம் இல்லை . எய்தவன் இருக்க அம்மை நோகும் இவர்கள் சொன்னார்கள் என்றா இந்த அழுகை அழுகிறாய்”.
“இல்லைப் சேந்தா பலசமயங்களில் நாமும் மருதநில ஆடவருக்கு பரத்தையர் விடயத்தில் உதவத்தானே செய்கிறோம்.மருத நில ஆடவர்கள் அதற்காகத்தரும் பொருள் கொண்டு வாழத்தானே செய்கிறோம். நாமும் பெண்கள் பரத்தையரும் பரிதாவத்துக்குரிய பெண்கள். மருதநிலத் தலைவியரும் பெண்கள். இந்த மூவரையும் ஏதோ ஒருவகையில் மருத நில ஆடவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்”. என்றாள் நள்ளை:
“அது உண்மைதான்.நாம் தான் தினம் தினம் பார்க்கிறோமே.. பரத்தையர் படும் துன்பங்களை…
கொண்டி மகளிராகக் கொண்டு வரப்பட்ட பகை நாட்டுப் பெண்களில் பலர் பரத்தையராகும் சூழல் ஏற்பட்டுவிட்டது. குல மகளிரான அவர்கள் சமூகத்தால் பரத்தையராக்கப்பட்டபோது வாழவும் முடியாமல் சாகவும் பிடிக்காமலும் அவர்கள் படும் உள்நெருக்குவாரத்தின் ஓர் விளைவும்தான் அவர்களது நடத்தையும் அல்லவா…
ஆம் சேந்தா ! அவர்கள் தங்களை வஞ்சித்த இந்த சமூகத்தை ஒருவகையில் பழிவாங்குவதாகவே அவர்களது நடத்தைகள் அமைவதாக எனக்கும் தோன்றுகிறது.
பரத்தையர் நடத்தைகள் மருத நிலத் தலைவியரை பாதிப்பது போல எமது நடத்தைகளும் சிறிய அளவில் அவர்களைப் பாதிக்கத்தான் செய்கிறது. அதற்கு நாம் என்னசெய்வது….. நமது கலைகளுக்கு முன்போல் மக்கள் செல்வாக்கும் அரசனின் செல்வாக்கும் கிடைக்குமானால் செல்வச் செழிப்புக்காரணமாய் தடுமாறும் ஆடவர்களை பின்தொடரும் இழிநிலைக்கு ஆளாகுவோமா?”
நாளை இந்த நிலை மாறுமா? விடை தெரியாத கோள்விக்குள் சிக்கியவர்களாய் சேந்தனும் நள்ளையும் மௌனமாகிறார்கள்..