கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 11, 2025
பார்வையிட்டோர்: 2,354 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

19. அந்தப்புர விருந்தாளி 

உதயசந்திரனின் காயம் குணமடைந்து நடமாடும் தெம்பைப் பெற்று விட்டான். ஆனால் சற்று சோர்வுடனி ருந்தான். இரண்டு நாட்களில் பௌத்த கடிகைக்குப் போவதாக முடிவு செய்தான். அவன் போகப் போவது லீனாவுக்கு மனவேதனையைக் கொடுத்தது. 

“நீங்கள் இங்கிருந்தபடியே கடிகையில் பணிபுரிய முடியாதா?” என்று கேட்டாள். 

“இங்கேயே இருப்பதா?” என்று கேட்டுச் சிரித்தான் தயசந்திரன். “அதெப்படி? நான் அந்நியன், டெங்லீக்கும் எனக்கும் என்ன உறவு?” என்றான். 

லீனாவுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. கண் கள் கலங்கின. அவள் என்ன சொல்ல நினைக்கிறாள் என்ப தைப் புரிந்து கொண்ட உதயசந்திரனின் மனம் மிகவும் நெகிழ்ந்து விட்டது. 

குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்தவன். அந்நியோன்யமான பாசத்தை அவன் அனுபவித்ததில்லை. அவன் காயமடைந்து படுத்திருந்தபோது, லீனா காட்டிய பரிவும் பாசமும் அவனுள்ளே புத்துணர்வை ஏற்படுத்தி யிருந்தன. அவளுடைய பணிவிடையின்போது அவளி டம் தென்பட்ட அக்கறையும், கனிவும் அவன் மீது அவள் எவ்வளவு தூரம் அன்பு கொண்டுவிட்டாள் என்பதை உணர்த்தின. அவனுடைய பிரிவை அவள் தாளமாட்டாள் என்பதை அவன் புரிந்துகொண்ட போது, அந்தரங்கமான அன்பின் சக்தியை உணர்ந்துகொண்டான். அவன் கேட் டான்: “இது உன்னுடைய வீடா, நான் எப்போதும் தங்குவதற்கு?” 

“நமக்கென்று ஒரு வீடு கட்டிக்கொள்வோம்” என்றாள் லீனா. 

அவள், அவனையும் இணைத்து, பன்மையில் சொன் னதும், அந்தச் சொல்லில் தொனித்த உரிமையின் அழுத் தத்தை உணர்ந்து உள்ளம் சிலிர்த்தான். அவன் சொன்னான்: “இன்னும் எனக்கென்று நிரந்தரமாக ஒரு பணியை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போதைக்கு பௌத்த கடிகையில் இருப்பேன். அடிக்கடி இங்கே வருவேன். தைரியமாக இரு.” 

“மருக்கொழுத்துத் தோட்டம் போட வேண்டிய தற்கான ஏற்பாடு நடக்கிறது. டெங்லீதாத்தா, எனக்காக ஒரு பெரிய தோட்டம் போட்டுத் தர சம்மதித்திருக்கிறார். நான் கொண்டு வந்திருக்கும் செடிகளும், விதைகளும் பெரிய தோட்டத்துக்குப் போதும். நீங்கள் அதைக் கண்காணிக் கலாமே” என்றாள் லீனா. 

“எனக்கு அத்துறையில் ஒன்றும் தெரியாதே?” 

“நான் கற்றுத் தருகிறேன்” என்றாள், உற்சாகத்துடன். 

“கடைசியில் என்னை ஒரு வணிகனாக மாற்றி விடுவது என்று தீர்மானித்து விட்டாயா?” என்று கூறிச் சிரித்தான். அவளும் சிரித்தாள். மந்தகாசமான சிரிப்பு அவனைப் பரவசப்படுத்தியது. அவளுடைய கையைப் பற்றி தன் மார்பின் மீது வைத்து அழுத்திக்கொண்டான். ஆழ்ந்த அன்பின் ஸ்பரிசம், இனிமையைப் பொழிந்து கொண்டிருந்தது. 

அப்போது வாசலில் ஆள் அரவம் கேட்கவே, உதயசந்திரன் எழுந்து வெளியே எட்டிப் பார்த்தான். வாசலிலிருந்த மரத்தின் நிழலில் ஓர் அலங்காரப் பல்லக்கு இறங்கியிருந்தது. ஒரு வீரன் குதிரையிலிருந்து இறங்கி, வீட்டை நோக்கி, வந்தான். மேகலாவின் திருமுகத்தை உதயசந்திரனிடம் கொடுத்தான். அந்த ஓலையில் உதய சந்திரனை அரண்மனைக்கு வந்து போகுமாறு பணித்து, மேகலாவின் முத்திரை இடப் பெற்றிருந்தது. 

“தேவியார் தங்களை அழைத்து வர பல்லக்கு அனுப்பியிருக்கிறார்கள்” என்றான் குதிரை வீரன். 

உதயசந்திரன் பரபரப்படைந்தவனாய், “ஏன்?” என்று கேட்டான். 

“தெரியாதய்யா. சின்னராணியார் தங்களைத் தக்க மரியாதையுடன் அழைத்து வர வேண்டும் என்று கட்டளை யிட்டிருக்கிறார்கள்” என்றான் வீரன். 

உதயசந்திரன் லீனாவிடம், “நான் போய்விட்டு உடனே திரும்பிவிடுகிறேன். ராஜன் நம்பூதிரி வருவான். இருக்கச் சொல். விரைவில் வந்துவிடுவேன்” என்று கூறி விட்டு அரண்மனைக்குப் புறப்பட்டான். 

உதயசந்திரனின் பல்லக்கு அரண்மனையின் அந்தப் புரத் தோட்டத்தில் இறங்கியது. பல்லக்கிலிருந்து அவன் இறங்கியதுமே இரு தாதிகள் அவனை வரவேற்று, அந்தப் புரத்தினுள் அழைத்துச் சென்றனர். 

அந்தப்புரத்தின் அமைப்பும், அலங்காரங்களும், அவனுக்கு திகைப்பை ஊட்டின. வியந்தவாறே தாதிகளைத் தொடர்ந்து சென்றான். அவனை மேகலாவின் அறைக்குள் அனுப்பிவிட்டு தாதியர்கள் இருவரும் வெளியே நின்றனர். உள்ளே சென்ற உதயசந்திரன், அலங்கார ஆசனம் ஒன்றில் மேகலா ஒய்யாரமாகச் சாய்ந்திருந்ததைக் கண்டு சற்றுத் தயங்கி நின்றான். 

“வீரனே, உள்ளே வா” என்ற அழைப்பு அவனுடைய கூச்சத்தைத் தணித்தது. 

அவளை அணுகி தலை குனிந்து வணங்கினான். அவனுக்கு ஓர் ஆசனத்தைக் காட்டி அமரச் சொன்னாள். எதிரே அமரக் கூசியவனாய் மௌனமாக நின்றான். 

“வீரனே, நீ இப்போது என்னுடைய விருந்தாளி. கூசாமல் இப்படி உட்கார்” என்றாள் மேகலா. 

“இப்படியே நிற்கிறேன், சின்னராணி அவர்களே” என்றான். சொற்கள் தடுமாறின. 

“வீரனே, விருந்தாளியை உபசரிக்க வேண்டியதுஎன் கடமை. கூசாமல் இப்படி அமரலாம்” என்றாள் மேகலா. அவள் முகத்தில் புன்முறுவல் மலர்ந்தது. உதயசந்திரன் கூச்சத்துடன் ஆசனத்தின் விளிம்பில் அமர்ந்து கொண்டான். 

“உடல் நலமாகிவிட்டதா? அன்று அரங்கத்தில் நீ விழுந்த போது நான் மிகவும் பதறிப்போனேன்” என்றாள் மேகலா. 

“நலம்தான், சின்னராணி அவர்களே” என்று கூறியவனின் பார்வை, அவளுடைய கண்களைச் சந்தித் தது. ஒரு கணம் அவன் உடல் சிலிர்த்து அடங்கியது. அவ ளுடைய பார்வை அவனுள் நுழைந்து, துழாவுவதுபோல் உணர்ந்தான். 

ஒ…! சின்ன ராணியின் கண்களில் தாம் எவ்வளவு காந்தம் ! ஒரு பார்வைக்கு இவ்வளவு ஆகர்ஷ்ண சக்தி இருக்குமா…? 

“நீ அன்று காட்டிய திறமை, என் நினைவில் நிற்கின்றது. என்னால் மறக்கவே முடியாது” என்றாள் மேகலா. 

“நன்றி, தேவியாரே” என்றான் உதயசந்திரன். அவ ளுடையபுகழ்ச்சி, கூச்சத்தை உண்டாக்கியது. 

அவனைப் பற்றி விசாரித்தாள். அவனுடைய வரலாற் றைக் கேட்டாள். அவன் கூறியவைகளை மிக்க ஆவ லோடுகேட்டாள். அந்தச் சமயத்தில் அவள் காட்டிய ஆர்வ மும், பேச்சின் குழைவும் உதயசந்திரனுக்கு உள்ளூர ஏதோ ஒருவிதச் சலனத்தை உண்டுபண்ணின. அவளுடைய கண்களில் தெரிந்த ஆர்வத்தின் துடிப்பு, அவனைத் திணற வைத்தது. அவனுடைய உள் மனம், அவனை எச்சரிப்பது போல் உணர்ந்தான். 

திடீரென்று அவள் சொன்னாள்: “வீரனே! கடிகைப் பணியைவிட உயர்ந்த பதவியை வகிக்கத் தகுந்தவன் நீ. விருப்பம் இருக்குமானால் உனக்குத் தகுந்த பதவி தருகிறேன்.” 

உதயசந்திரன் உள்ளுணர்வு எச்சரித்தது. “கடிகையில் பணிபுரிவது எனக்குத் திருப்தியாகவும் இருக்கிறது, மனதுக்கு அமைதியாகவும் இருக்கிறது” என்றான். 

“உன்னுடைய திறமையைக் கண்ட பிறகு, உனக்குத் தகுந்த பதவியை அளித்து, உன்னைக் கௌரவிக்க வேண் டும் என்று எண்ணினேன். வீரனே! உன்னை என் அருகி லேயே வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய அந்தரங்க மெய்க்காப்பாளனாக நீ பணி புரியலாமே” என்று கூறிவிட்டு மேகலா அவனை ஆவலு டன் பார்த்தாள். பார்வையின் காந்தம், அவனைச் சூழ்ந்து பரவி அழுத்துவது போலிருந்தது. 

“சின்ன ராணி அவர்களே, நான் அவ்வளவு பொறுப்புள்ள பதவிக்கு அருகதையுள்ளவனல்லன்” என்றான் உதயசந்திரன் பதற்றத்துடன். 

மேகலா கலகலவெனச் சிரித்தாள். 

“வீரனே, ஏன் இப்படிப் பதறுகிறாய்? என்னருகில் எனக்குக் காவலாக இருப்பது அவ்வளவு பயங்கரமானதா? “தங்களுடைய பாதுகாவலனாகப் பணி புரிய பாக் கியம் செய்திருக்கவேண்டும். ஆனால், அதற்கு நான் தகுதி யுள்ளவனல்லன்.” 

“உன்னுடைய தகுதி எனக்குத் தெரியும். நீ என்னருகில் இருந்தால் எனக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.” 

“தேவியாரே, மன்னித்தருளவேண்டும். என்னுடைய மனம் இந்த மாதிரியான பணியில் ஈடுபடாது. கடிகையின் பணியில் நான் அமைதியுடன் வாழ்கிறேன்.” 

“அரண்மனையில் உன் அமைதி கெட்டுவிடும் என்று எண்ணுகிறாயா?” 

“நான் காடுகளிலும் குகைகளிலும் துறவிகளுக்கிடை யில் வாழ்ந்து பழக்கப்பட்டவன். அரண்மனையின் சூழ் நிலைக்கு என் மனம் இசைந்துவராது.” 

“வீரனே ! அவசரப்பட்டு நீ முடிவுக்கு வரவேண்டாம். என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து விட்டேன். நீ ஏற்றுக்கொண்டால், என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடையும். னக்கும் நல்ல வருங்காலம் அமையும்” என்று கூறிய வாறே மேகலா கைகளைத் தட்டினாள். 

ஒரு தாதி பெரிய தாம்பாளத்தில் மலர்களும், பழங்களும் வைத்து ஏந்தியபடி உள்ளே வந்தாள். 

“வீரனே ! உன் பெயர் உதயசந்திரன்தானே? உன் பெயரைப் போல அழகாகப் பேசுகிறாய். போட்டியில் அறிவித்த பரிசை அளிக்கவே உன்னை இங்கே வரவழைத் தேன்” என்றாள் மேகலா. 

“போட்டியில் நான் காயம்பட்டு வீழ்ந்துவிட்டேனே” என்றான் உதயசந்திரன். 

“விதிமுறைகளுக்கு மாறாக, உன்னைப் பின்புறமிருந்து தாக்கிவிட்டான். இல்லையென்றால், அவர்களை நொடிப் பொழுதில் வீழ்த்தியிருப்பாயே. இப்போது தரும் பரிசு, என் அன்புப் பரிசு. பெற்றுக் கொள்” என்று கூறிய மேகலா, தாதியின் கையிலிருந்த தாம்பாளத்திலிருந்து பட்டுப்பீதாம் பரம் ஒன்றை எடுத்துப் பிரித்து, அவனுடைய தோளைச் சுற்றிப் போர்த்தினாள். 

அவனை மிக நெருங்கி நின்று, பீதாம்பரத்தைப் போர்த்தியபோது, அவளுடைய பெருமூச்சின் சூட்டையும், மேனியின் சுகந்தத்தையும் உணர்ந்தான். அவளுடைய வாயிலிருந்து வீசிய தாம்பூல வாசனையைக் கூட முடிந்தது. அவனுடைய உடல் சற்று நடுங்கியது. அவ்வ ளவு உயர்ந்த மரியாதையைத் தாள முடியாமல் நடுங்கினான். 

பீதாம்பரத்தை அவனுடைய தோள்களைச் சுற்றிப் போர்த்திவிட்டு, தாம்பாளத்திலிருந்த ஆயிரம் பொற் காசுகள் அடங்கிய பட்டுப் பையை எடுத்துக் கொள்ளும் படிக் கூறினாள். நடுங்கிய கரங்களால் பண முடிப்பை ஏற்றுக்கொண்டான். 

“வீரனே, உன்னுடைய திறமைக்கு இவையெல்லாம் அற்பமே” என்றாள் மேகலா. 

“இந்தப் பொருட்களை விடத் தாங்கள் என் மீது காட்டும் அன்பே எனக்குப் பெரிது” என்றான் உதயசந்திரன். 

மேகலாவின் முகம் மலர்ந்தது. மந்தகாசமாகச் சிரித்தாள். “இனிமையாகப் பேசுகிறாய்” என்றாள். பிறகு, “நீ இந்த அரண்மனைக்கு இதற்கு முன் வந்திருக்கிறாயா?” என்று கேட்டாள். 

உதயசந்திரன் திடுக்கிட்டான். சுரங்கப்பாதையில் வந்து பார்த்ததை அறிந்திருப்பாளோ என்ற எண்ணம் தோன்றியதும், பயத்தால் அவன் உடல் சிலிர்த்தது. “இல்லை” என்றான். 

“உதயசந்திரன், உன்னை இதற்கு முன் எங்கோ பார்த் ததுபோலிருக்கிறது. ஒரு வேளை போன ஜென்மத்தில்கூட இருக்கலாமோ என்னவோ” என்று கூறிக் கலகலவெனச் சிரித்தாள். 

அவனுடைய பெயரை அவள் உச்சரித்ததும், தயசந்திரன் துணுக்குற்றான். அவள் உச்சரித்த விதத்தி லிருந்து அவனுடைய பெயரின் இனிமையில் அவள் லயிப்பதாக உணர்ந்தான். 

”உதயசந்திரன்,நீ இங்கே பணி புரிவதைப் பற்றி நன்கு சிந்தித்து இரண்டு நாளில் முடிவு சொல். அவசரம் இல்லை” என்று கூறிவிட்டு, அவனிடம் முத்திரையிட்ட வெள்ளி மோதிரம் ஒன்றைக் கொடுத்தாள். “இங்கே நீ வரும்போது இதைக் காட்டினால், உன்னைச் சோதிக்காமலே உள்ளே வர அனுமதிப்பார்கள். பத்திரமாக வைத்துக்கொள்” என்றாள். 

உதயசந்திரன், மோதிரத்தை வாங்கியபோது அவன் கரங்கள் சிறிது நடுங்கின. மேகலா, ஒரு காவல்வீரனை அழைத்து, “இவனை அழைத்துப்போய் விட்டுவிட்டு வா” என்று பணித்தாள். பிறகு, உதயசந்திரனிடம் திரும்பி “சென்று வா, வீரனே” என்றாள். 

அவன் அவளை வணங்கிவிட்டுக் காவல் வீரனைத் தொடர்ந்து வெளியே நடந்தான். அரண்மனையை விட்டு வெளியே வந்த பிறகுதான் அவனுடைய மனம் நிதானத் துக்கு வந்தது. பெருவெள்ளத்தின் சூழலில் அகப்பட்டு மூச்சுத் திணறித் தத்தளித்தவனைப் போல் திணறிவிட்டான். 

மேகலாவைப்பற்றிய நினைவு, அவனைத் தொடர்ந்து வந்தது – “சென்றுவா, வீரனே…” 

நீ எப்போது திரும்ப வருவாய் என்று கேட்பது போலி ருந்ததே. அப்போது அவளுடைய கண்களில் ஒருவிதத் தவிப்புத் தெரிந்ததே. அவளுடைய பார்வையின் இயல் பான தன்மையே அப்படித்தானா…? 

ஓ! எவ்வளவு உயர்ந்த மரியாதை அவனுக்கு அரண்மனையில் கிடைத்துவிட்டது! ஒரு சாதாரண பிரஜை, கனவிலும் எதிர்பார்க்க முடியுமா, ஒரு ராணி தன் கையாலேயே பட்டுப் பீதாம்பரத்தைப் போர்த்துவா ளென்று… தாராளமாக அந்தப்புரத்தினுள் சென்று வருவ தற்கு முத்திரை மோதிரம் தந்தாளே… 

இவ்வளவு மரியாதை எனக்கு ஏன் ? இது வெறும் மரியாதையாகத் தெரியவில்லையே. என்னிடம் ஏதோ எதிர்பார்த்துச் செய்யும் பணிவிடை மாதிரியல்லவா தோன்றுகிறது.ஒரு ராணிக்கு நான் எந்தவிதத்தில் உதவ முடியும்…? அவளுடைய பார்வை… அதில் தெரிந்த தாபம்… பேச்சின் குழைவு… 

அப்படியும் இருக்குமோ…? உதயசந்திரா, ஜாக்கிரதை. ராஜநாகத்தின் வழுவழுப்பான அழகிய உடல், நினைவில் தோன்றியது. கண்களைப் பயத்தால் மூடிக் கொண்டான். 

உதயசந்திரன், புரிந்தும் புரியாமலும் குழம்பினான். திரும்பிச் சென்று லீனாவை கண்ட பிறகு, அவனுடைய மனம் அமைதியடைந்தது. 

20. மகா சுகம் 

முதன் மந்திரி தரணிகொண்ட போசரின் மாளிகை யில், இரவு கோட்டத் தலைவர்கள் கூடியிருந்தார்கள். வீரப்போட்டியை முன்னிட்டு வந்த தலைவர்கள், மறுநாள் தங்கள் கோட்டங்களுக்குச் செல்வதாக இருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் இரணியவர்மரும் இருந்தார். 

காஞ்சி நகரில் பல பிரச்சினைகள் தோன்றியிருந்தன. ஆங்காங்கே பலர், இரகசியமாகக் கைதுசெய்யப்பட்டு பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மகாராணி யின் உத்தரவுகளுக்கு அதிருப்தி தெரிவிப்பவர்கள் என்று யார் மீதெல்லாம் சந்தேகம் தோன்றியதோ அவர்கள் எல்லாரும் சிறை பிடிக்கப்பட்டிருந்தனர். ஏரிவாரியத் தலைவர் ஒருவரும், தோட்டவாரியத் தலைவர் ஒருவரும் கைதானவர்களில் முக்கியமானவர்கள். ஆங்காங்கே மக்கள் சிறுசிறு கலகங்களை உண்டுபண்ணியதற்கு அந்தத் தலை வர்கள் ஆதரவு கொடுத்தார்கள் என்ற சந்தேகத்தின் மீது சிறைபடுத்தப்பட்டிருந்தனர். அதனால் மக்களிடையே பீதி குடிகொண்டிருந்தது. எந்தச் சமயத்திலும் யாரும் சிறைக்கு அனுப்பப்படலாம் என்ற பயம், நகர் முழுவதும் பரவி யிருந்தது. பல ஊர்களின் தலைவர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். 

இவையெல்லாவற்றையும் பற்றி முதன் மந்திரியும், மற்றவர்களும் ஆலோசனை நடத்தினர். மகாராணியின் சர்வாதிகாரமும், சித்திரமாயனின் தலையீடும் நாட்டின் நலனைக் கெடுத்துக்கொண்டிருந்ததைப் பற்றி மிகுந்த கவலை கொண்டனர். 

“விரைவில் மகாராணி ஆட்சியில் பெரும் மாறுதலை ஏற்படுத்த முடிவு செய்திருக்கிறார் என்றே அஞ்கிறேன். ஊர்த் தலைவர்களையும், நகரத் தலைவர்களையும் நீக்கி விட்டு, அரசே அந்தத் தலைவர்களை நியமிப்பதாக ஒரு திட்டம், மகாராணி வகுத்திருக்கிறார்” என்றார், முதன் மந்திரி. 

“அப்படியா…?” எல்லோரும் பதறியபடி கூவினர். “தலைவர்களை நீக்குவதா? ஆட்சியின் அமைப்பும், அமைதியுமே சீர்குலைந்துவிடுமே” என்றார், குன்றக் கோட்டத் தலைவர். 

“அதைப்பற்றி மகாராணி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தம்முடைய மனசாட்சிப்படி நடப்பதாகக் கூறுகிறார்.” 

“மகாராணியின் மனசாட்சி, மக்களின் சுதந்திரத்தை பறிக்கும்படியா கூறுகிறது?” என்று கோபத்தில் இரைந்தார், இரணியவர்மர். 

“மகாராணியின் மனசாட்சி என்னவென்றே புரிந்து கொள்ளமுடியவில்லையே. இப்போது அவளுடைய மனச்சாட்சியின் வாகனம் அச்சுதபட்டர்தாம்” என்று கூறிச் சிரித்தார், முதன் மந்திரி. பிறகு சொன்னார். “போரைக் காரணம் காட்டி, மேலும் சில வரிகளை விதிக்க முடிவு செய்திருக்கிறார். அரசாங்கப் பண்டாரத்தில் போதிய செல்வம் இருக்கிறது. அரண்மனையின் ஊதாரிச் செல வுக்கு ஒரு வழியைக் கையாள உத்தேசித்திருக்கிறார்கள். இதற்கு அச்சுதப் பட்டரும் துணையிருக்கிறார். திருமணத் துக்குக் கூட வரிவிதிக்க முடிவாகியிருக்கிறது.” 

“திருமணத்துக்கு வரியா ? என்ன விந்தையாக இருக்கிறது ! காதலிக்கக் கூட பல்லவ நாட்டில் வரி செலுத்த வேண்டும் போலிருக்கிறது” என்று இரைந்தார், களத்தூர் கோட்டத் தலைவர். 

“மகாராணியாருக்கு திருமணத்தின் மீது ஏன் இவ் வளவு கோபமோ?” என்று குன்றக் கோட்டத் தலைவர் கேட்டார். 

“ஜனப்பெருக்கம் ஏறுவதால் நாட்டின் பிரச்னைகள் கூடுகிறதாம். திருமணத்துக்கு வரிவித்தால், திருமணம் நடை பெறுவது குறையலாம்; அதனால் குழந்தை பெறுவதும் குறையும் என்று நினைக்கிறார்கள்” என்றார் முதன் மந்திரி. 

“திருமணம் நடைபெறுவதற்கு இடைஞ்சல் ஏற்பட் டால், திருட்டுத்தனமாக குழந்தைகள் பெறுவது அதிகமாகி விடுமே. பல்லவ நாடு முழுவதும் திருட்டுக் குழந்தைகளாக நிரம்பட்டும் என்று விரும்புகிறார்களா மகாராணி?” என்று கேட்டார், இரணியவர்மர். பிறகு, “மக்கள் திருமண வரியை ஏற்பார்களா? ஏற்கெனவே பொருமிக்கொண்டிருக்கிறார் கள். புனிதமான திருமணத்துக்கும் வரி என்றால் கொதித் தெழுவார்கள்” என்றார். 

“கடிகைகளுக்கும் வரிவிதிக்க அச்சுதபட்டர் யோசனை கூறியிருக்கிறார். கடிகையில் கல்வி கற்கும் ஒவ் வொரு சீடனுக்கும் தலைக்கு இரண்டு கழஞ்சு காசுகள் வரி செலுத்த வேண்டும் என்று வடமொழிக் கடிகைக்கு மட்டும் நேற்று உத்தரவு போயிருக்கிறது” என்றார், முதன் மந்திரி. 

“எதற்காக வடமொழிக் கடிகைக்கு மட்டும் வரி?” என்று ஒரு கோட்டத் தலைவர் கேட்டார். 

“அச்சுதபட்டரின் மகன் வடமொழிக் கடிகையில் மாணவனாக இருந்தான். அங்கே அவன் ஏதோ ஒழுக்கக் கேடாக நடக்கவே, கடிகையைவிட்டு அவனை நீக்கி விட்டார்கள். அந்தக் கோபந்தான், அச்சுதப்பட்டருக்கு” என்றார், முதன்மந்திரி. பிறகு சொன்னார்: “கடிகைத் தலைவர் கோபம் கொண்டிருக்கிறார். கடிகை மாணவர்கள் இன்று காலையில் அரண்மனையின் முன்பு கூடி, ஆர்ப் பாட்டம் செய்திருக்கிறார்கள். காவல் வீரர்கள், குதிரையில் வந்து கலைத்ததில் ஒரு மாணவனுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது. இரண்டு மாணவர்களைப் பிடித்துச் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.” 

“முதன் மந்திரி சம்மதித்தால் இப்போதே என் படையை ஏவிச் சிறைப்பட்டிருப்பவர்களை விடுவித்து விடுகிறேன்” என்றார், இரணியவர்மர் கோபத்துடன் 

“பொறுங்கள். அப்படி ஏதும் அசம்பாவிதம் தலை நகரில் நேர்ந்துவிடக் கூடாது. உங்களுடைய படை மோது மேயானால், உள்நாட்டுக் கலகமே தோன்றிவிடும்” என் றார், மந்திரி. 

“நாம் இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு சும்மா யிருந்தால், நாளை சக்ரவர்த்தி திரும்பியதும் நம்மீதுதான் குறை கூறுவார். போர்க்களத்துக்கு ஒரு தூதுவனை அனுப்பி, சக்ரவர்த்திக்கு இங்குள்ள நிலைமையை எடுத்துச் சொன்னால் நல்லது. முதன் மந்திரியார் அதற்கு ஏற்பாடு செய்யலாம்” என்றார், இரணியவர்மர். 

இந்த யோசனையை அனைவரும் ஏற்றுக் கொண் டனர். கூட்டம் முடிந்து எல்லாரும் விடைபெற்றபோது 

முதன் மந்திரி சொன்னார்: “தலைநகரில் நிலைமை சரி யில்லை. ஏதாவது குழப்பம் நேரலாமோ என்று ஐயுறு கிறேன். உங்களுடைய உதவி தலைநகருக்கு எந்தச் சமயத் திலும் தேவைப்படலாம். எப்போதும் தயாராகவே இருங்கள்.” 

“முதன் மந்திரி அவர்களுக்கு எங்கள் துணை எப் போதும் இருக்கும்” என்று உறுதி கூறி, எல்லாரும் விடை பெற்றனர். இரணியவர்மர் கடைசியில் விடைபெற்றபோது, “நீங்கள் பிடித்து அனுப்பி வைத்த இலங்கைச் சதிகாரர்களை என்ன செய்வது?” என்று கேட்டார். 

“உங்கள் வசமே பத்திரமாக இருக்கட்டும். இவர்களை வெளியில் விட்டால் இவர்களுடைய உயிருக்கு ஆபத்து. இவர்கள் நம் வசமிருக்கிறார்கள் என்பது அரண்மனைக்குத் தெரியாது. அரண்மனை வீரர்கள் இன்னும் இவர்களைப் பல்லவ நாடு முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இது பற்றிய விசாரணைக்கு, மன்னர் வந்ததும் ஏற்பாடுகளை விரைவில் செய்வேன். அப்போது இவர்கள் பயன்படு வார்கள்” என்றார், முதன் மந்திரி. 


உதயசந்திரன் பூரணமாகக் குணமடைந்து பௌத்த கடிகைக்குச் சென்று விட்டான். டெங்லீகூடச் சொன்னார். “தம்பீ, நீ இங்கேயே தங்கியிருந்து, கடிகைக்குப் போய் வாயேன். நீ எங்களோடிருந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சி யாயிருக்கும், லீனாவின் துக்கம் கொஞ்சம் குறையும்” என்றார். 

“சில காலம் நான் கடிகையிலேயே இருக்கிறேன். அடிக்கடி நான் இங்கே வந்துபோவேன்” என்றான், உதய சந்திரன். 

“தம்பீ, லீனா மனத்தில் என்ன நினைக்கிறாள் என்பதை நான் ஓரளவு புரிந்து கொண்டேன். உன் மனசுதான் தெரிய வேண்டும்” என்றார், டெங்லீ. 

உதயசந்திரன், நாணத்துடன் சிரித்தான். டெங்லீ சொன்னார்: “எதையும் என்னிடம் சொல்லக் கூச்சப் படாதே. உன்னை என் மகனைப் போல எண்ணியிருக் கிறேன். நீ சம்மதித்தால் இந்தச் சீனத் தோப்புக் குள்ளேயே உங்கள் இருவருக்கும் அழகான வீடு கட்டித் தருகிறேன்.” 

“ஐயா, உங்களுடைய அன்புக்கு எப்படி நான் நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. நானும் லீனாவும் சந்தித்த விதமே கடவுளுடைய செயல்தான். நான் நல்ல பதவியில் அமர்ந்ததும் மற்ற விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கலாம் என்றிருக்கிறேன்” என்றான், உதயசந்திரன். 

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உதசயந்திரன் லீனாவைக் காணவந்தான். அவனுடைய வரவு ஒன்றுதான் அவளுக்குத் தெம்பளித்துக் கொண்டிருந்தது. 

பௌத்த கடிகையில் பணிபுரிந்ததில், உதயசந்திரனின் பொழுது கழிந்தது. மாலை வேளையில், ராஜன் நம்பூதிரி, தவறாமல் அவனைக் காணச் சென்றான். ஒரு நாள், மாலை, உதயசந்திரனும், ராஜன் நம்பூதிரியும் ருத்திர பரமாச்சாரியின் ஆசிரமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப் போது, உதயசந்திரன், “வடமொழிக் கடிகைக்கு மட்டும் வரி விதித்திருக்கிறார்களாமே, ஏன்?” என்று கேட்டான். 

“தமிழ்க் கடிகைகள் வளர வேண்டுமாம், அதற்காக வடமொழிக் கடிகைக்கு வரியாம்” என்றான்,ராஜன் நம்பூதிரி. “வடமொழிக் கடிகையை ஒடுக்கித்தான் தமிழ்க் கடிகை யைக் காப்பாற்ற வேண்டுமா ? என்னமூடத்தனம்.’ 

“உலகப் புகழ்பெற்ற கடிகை இது. இந்தக் கடிகை தோன்றி கிட்டத்தட்ட எண்ணூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்தக் கடிகை, காஞ்சியிலிருப்பது, காஞ்சிக்கே பெருமை. எங்கள் கடிகைத் தலைவர் எதிர்ப்புத் தெரிவித்தபோது, கடிகையை மூடி விடும்படி செய்து விடு வதாக இளவரசன் மிரட்டினானாம். இரண்டு மாணவர் களை சிறையிலிட்டிருக்கிறார்கள். ஒருவனுக்கு மண்டையில் காயம்.” 

“கடிகையின் பெருமையை உணராத மகா மூடர்களா யிருக்கிறார்களே” என்றான், உதயசந்திரன். 

“எங்கள் மாணவர்கள் சிறைப்பட்டதை அறிந்ததும் எங்கள் தலைவர், கடிகையை வேறு நாட்டுக்கு மாற்றி விடப் போவதாக எச்சரித்தார். அதற்கு அச்சுதப்பட்டர் என்ற மந்திரி, ‘இன்னொரு நாட்டுக்கு, கடிகை மாறுவது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. இந்தக் கடிகை போய் விடுவதால் ஒன்றும் குடி மூழ்கிப் போய்விடாது’ என்றாராம். 

“ஒரு மந்திரியா இப்படி மூடத்தனமாக பேசியிருக்கிறார்?” 

“எங்கள் கடிகைக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை அறிந்த பாண்டிய மன்னரும், சோழ மன்னரும் கடிகை யைத் தங்கள் நாட்டில் வரவேற்பதாகக் கூறி, தூதர்களை அனுப்பி யிருக்கிறார்கள்.” 

“ஐயோ, உங்கள் தலைவர் சம்மதித்து விட்டாரா?” 

“நல்ல வேளையாக சம்மதிக்கவில்லை. முதன்மந்திரி தரணிகொண்டபோசர், இன்று எங்கள் கடிகைக்கு வந்து தலைவரைச் சமாதானப்படுத்தியிருக்கிறார். வந்த தூதர் களை உடனே நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தர விட்டிருக்கிறார். நல்ல வேளை, முதன்மந்திரி தக்க சமயத்தில் காப்பாற்றினார். இல்லையென்றால், கடிகை பாண்டிய நாட்டுக்கோ, சோழ நாட்டுக்கோ போய்விடும்” என்றான் ராஜன் நம்பூதிரி. “மாணவர்களையும் விரைவில் சிறையி லிருந்து விடுவிக்க ஆவன செய்வதாக முதன்மந்திரி வாக் குறுதி கொடுத்திருக்கிறார்” என்றான். 

“பதவியில் மூடர்களும், வெறியர்களும் இருந்தால் இப்படித்தான் அருமை பெருமை தெரியாமல் நடந்துகொள் வார்கள்” என்றான் உதயசந்திரன். பிறகு, “முட்டாள் ராஜ குமாரனுக்கு அதி முட்டாள் மந்திரி யோசனை கூறினால் எப்படியிருக்கும்” என்றான். 

“அரசாட்சியின் மூல தத்துவங்களையே புரிந்து கொள் ளாதவர்கள் ஆளவந்தால், இப்படித்தான் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார்கள். ஆட்சியில் இருப்பவருக்கு மக்களுடைய ஆதரவுதான் மிகவும் முக்கியம். எவ்வளவு சங்கடப் பட்டாவது அதைப் பெற முயல வேண்டும். மகாராணி அதைச் செய்வதை விட்டுவிட்டு, ஒரேயடியாக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறாள்” என்றான், ராஜன் நம்பூதிரி. 

“ஆனால், நாட்டில் புதிதாக ஏதாவது சட்ட திட்டங் களைப் புகுத்தும் போது, மக்கள் எதிர்ப்பார்களே. ஒரே சமயத்தில் சட்டங்களையும் புகுத்தி, மக்களின் அபிமானத் தையும் பெறமுடியாதல்லவா?” என்றான், உதயசந்திரன். 

“அதில் சங்கடம் ஒன்றுமில்லை. மக்களை ஏமாற்று வது எளிது. சுதந்திரத்தின் நிழலை மட்டும் கொஞ்சம் காட்டி, மக்களை ஏமாற்றிவிடலாம்.” 

“எல்லாருமா ஏமாறுவார்கள்?” 

“அறிவாளிகள் ஏமாறமாட்டார்கள். ஆனால், அப்படிச் சிந்திப்பவர்கள், கொஞ்சப் பேர்கள்தாமே. அவர் களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்களை ஒழித்து விட்டால் போதும்.’ 

“ஓ…அதற்கு மனசாட்சி இடம் கொடுக்காதே. ஈவிரக்க மின்றி,நல்லவர்களை அழிக்க மனம் இடம் தருமா?’ 

“ஆட்சியிலிருப்பவர்கள் சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி தங்கள் குணங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான். ஒரு காரியத்தில் வெற்றி பெறுவதற்காகச் சிறந்ததாகத்தான் மதிக்கும் லட்சியங்களைக் கூடக் கைவிட நேரலாம். மனிதனுடைய கொள்கைகளைவிட, சந்தர்ப்பங்கள்தாம் வலுவுள்ளவை. வெற்றி வேண்டுமானால், மகாராணி, தன்னுடைய சொந்த லட்சியங்களையும், மனசாட்சியையும் கைவிடத் துணிய வேண்டும். முடிவு நல்லதாயிருந்தால், வழிமுறைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. வெற்றி பெற்ற பிறகு, யாரும் மகாராணியைக் குறைகூற மாட்டார்கள்” என்றான், ராஜன் நம்பூதிரி. 

“அரியணையிலிருப்பவள் கடுமையாக நடந்து கொண்டால், மக்களுக்கு அவள் மீது அன்பு இருக்காதே, அச்சந்தானே தோன்றும்” என்றான், உதயசந்திரன். 

“அன்பும் அச்சமும் இருக்க வேண்டியதுதான். ஆனால் அந்த இரண்டில் ஒன்றைத்தான் பெற முடியும் என்றால், மகாராணி, மக்களிடமிருந்து அன்பைப் பெறுவ தைவிட அச்சத்தைப் பெறுவதுதான் நல்லது. இன்று அன்பு காட்டும் மக்கள் நாளை எதிர்க்கலாம். ஆனால், அச்சந்தான் அடக்கி ஆளும். புகழ்பெற்ற வலிமைமிக்க பல வல்லரசுகள் அச்சத்தின் மீதுதான் வளர்ந்தனவே தவிர, அன்பின் அடிப் படையில் அல்ல.” 

“உன்னை இந்நாட்டின் முதன் மந்திரியாக நியமித்தால், நாட்டைக் கிடுகிடுவென நடுங்க வைத்துவிடுவாய்போலி ருக்கிறதே”என்றான், உதயசந்திரன். “சின்ன ராணிக்குத்தான் உன்மீது அபிமானம் இருக்கிறதே. உன்னை அரண்ம னைக்கே அழைத்து மரியாதை செய்திருக்கிறார் !உன்னைக் குருவாகவும் ஏற்றுக் கொண்டுவிட்டாள். என்னை ஒரு மந்திரியாக நியமிக்கச் சொல்லேன்” என்று கூறிச் சிரித்தான், ராஜன் நம்பூதிரி. 

“நான் இப்போது ஏதாவது சலுகை கேட்டால், உடனே கொடுத்துவிடுவாள். அவளுக்கு அந்தரங்க மெய்க்காப் பாளனாக இருக்கும்படி வேண்டினாள். மறுத்து விட்டேன். எனக்குத் தெரிந்த தற்காப்புப் போர்முறையைக் கற்றுத்தர வேண்டும் என்றாள். அதற்கும் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவள் வற்புறுத்தி வேண் டவே, அவளுக்குக் கற்றுக்கொடுக்கிறேன்” என்றான் உதய சந்திரன். பிறகு சொன்னான்: 

“ராஜன் எனக்கு அவளைச் சந்திக்கவே நடுக்கமா யிருக்கிறது. அவளுடைய அழகு ஆபத்தானது. என்னை அடிக்கடி சந்திக்கத்தான் போர்முறையைப் பழகுகிறாளே தவிர, உண்மையில் இந்தப் பயிற்சியில் அவளுக்கு நாட்ட மில்லை. அவளுடைய அழகும், இளமையும், பார்வையின் அதீதமான சக்தியும் என்னை வென்றுவிடுமோ என்று பயமாயிருக்கிறது.’ 

“நீ தோற்றுப் போனால்தான் என்ன? தோல்வியில் ஆதாயம் இருக்குமானால், வெற்றியைவிடத் தோல்வியே மேல். அரசாங்கத்தில் மிக உயர்ந்த நிலையில் நீ இருக்கலாமே. ராணியின் அந்தரங்கமான அபிமானம் உன் மீதிருக் கும்போது, உனக்கு நிகர் யார் இருக்க முடியும்?” 

“ஒழுக்கத்தை ஒதுக்கிவிட்டுப் பதவிதான் சிறந்தது என்கிறாயா ?” ராஜன் நம்பூதிரி சிரித்தான். 

“சிறந்தது என்று சொல்லவில்லை. யதார்த்தத்தைச் சொன்னேன். ஒழுக்கம், நெறிமுறைகள் என்று சொல்லிக் கொண்டு, வாழ்க்கையின் மேம்பாட்டுக்கு உதவும் ஓர் அரிய சந்தர்ப்பத்தைக் கைவிடுவானேன். காமநுகர்ச்சியில் ஒழுக்கம் என்பதெல்லாம் நாமாக ஏற்படுத்திக் கொண்டது தானே?” என்றான். 

“எனக்கு உயர்பதவி மீதெல்லாம் மோகம் இல்லை. எங்கிருந்தாலும், அமைதியாக வாழவேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அதனால்தான் அரண்மனைக்குச் செல் லவே பயப்படுகிறேன்.” 

“எங்கள் கடிகையின் ஜோதிட மகாபண்டிதர் உன்னு டைய ஜாதகத்தைப் பற்றிச் சொன்னாரே, மறந்துவிட் டாயா? நீ அமைதியான வாழ்வையே பெறமுடியாது. எப் போதும் பரபரப்பு அடையும் படியான வாழ்க்கைதான் அமையும் என்றாரே. இன்னொன்றும் கூறினாரே; வருங் காலத்தில் உன்னுடைய புகழும் செல்வாக்கும் மிகுந்து இருக்கும்; ராஜசேவகம் தான் உன்னுடைய தொழில் என்று உறுதியாகக் கூறினாரே!” 

“அதுதான் எனக்குப் பயமாயிருக்கிறது. ராஜன், ஒரு பெண்ணுக்கு அந்தரங்க மெய்க்காப்பாளனாக இருப்பதைத் தான் ராஜசேவகம் என்றாரோ?” என்று கேட்டுச் சிரித்தான், உதயசந்திரன். 

இருவரும் பேசிக்கொண்டே ருத்திர பரமாச்சாரியின் ஆசிரமத் தோட்டத்தினுள் சென்றபோது, ஆசிரமத்துச் சீடன் ஒருவன் அவர்களை மறித்தான். “நீங்கள் யார்?” என்று கேட்டான். 

“கடிகையைச் சேர்ந்தவர்கள். நாங்கள் உள்ளே போகத் தடை ஏதும் உண்டோ?” என்று கேட்டான் ராஜன் நம்பூதிரி. 

“சாதாரண மக்கள் இங்கே வர அனுமதி இல்லை. தத்துவ ரீதியாகத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் மட் டுமே இங்கே வரலாம். வேடிக்கை பார்க்க நினைப்பவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. நீங்கள் உள்ளே போகலாம்” என்று சீடன் அவர்களை உள்ளே செல்ல அனுமதித் தான். 

அடர்த்தியாகப் பல மரங்கள் நிறைந்து காடு போலி ருந்த பெரிய தோட்டத்தினுள் யோகிருத்திர பரமாச்சாரியின் ஆசிரமம் அமைந்திருந்தது. தோட்டத்தில் ஆங்காங்கே பல்லக்குகளும், இரதங்களும் காணப்பட்டன. பரமாச்சாரி யின் உபந்நியாசத்தைக் கேட்க மண்டபம் போல் அமைந் திருந்த பெரிய கட்டடத்தில் பலர் கூடியிருந்தனர். ஒரு சிறு மேடையில் யோகிருத்திர பரமாச்சாரி அமர்ந்து போதித்துக் கொண்டிருந்தார். அவர் கூறியவற்றை எல்லாரும் மிகுந்த கவனத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள். 

அவர் சொன்னார்: “உலகத்தை அது எப்படி இருக் கிறதோ அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஒதுக்கவேண்டியது ஒன்றுமே இல்லை. இன்பம், துன்பம், கோபம், தாபம், ஆசை, பொறாமை, மோகம், வஞ்சகம், காமம், அன்பு எல்லாமே இந்த உலகத்தைச் சார்ந்தவைதாம். எல்லாக் குணங்களும் உங்களிடம் உள்ளவையே. உங் களை நீங்களே விலகியிருந்து கவனியுங்கள். அப்போது, எந்தக் குணமும் உங்களைப் பாதிக்காமலிருப்பதை உணர் வீர்கள். உணர்ச்சி வசப்பட்டு உங்களை நீங்களே மறந்து போகும் போதுதான் குணங்கள், உங்களை ஆளத்தொடங்கி விடுகின்றன” என்றார். 

ஒருவர் குறுக்கிட்டு, “உணர்வுகளை அடக்கி எப்படி வாழ்வது?” என்று கேட்டார். 

யோகி புன்முறுவலுடன் சொன்னார். “அடக்க வேண்டாம். எப்படி வாழவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படியே வாழுங்கள். முழுமையாக வாழுங்கள். வாழ்க் கையில் கிடைக்கும் எந்த அனுபவத்தையும் நீங்கள் இழக்க வேண்டியதில்லை. எந்த சுகத்தையும் ஒதுக்க வேண்டிய தில்லை. ஆனால் எப்படி வாழ்ந்தாலும், எப்படி வாழ்கி றோம் என்ற நினைவை மட்டும் விட்டுவிடாதீர்கள். முழுமை யான உலக அனுபவமே, பேரானந்த உணர்வைக் கொடுக்க முடியும். உலகத்தைத் துறந்து விலகி நிற்பவன், கடவுளை எட்டிவிட முடியாது. வைதீக மதங்கள் கடவுளை ஏற்கின்றன. ஆனால், கடவுளால் படைக்கப்பட்ட உலகத் தையும், உலக அனுபவங்களையும் அவை ஏற்க மறுப்பது எவ்வளவு அறிவீனமானது. பிரபஞ்சம் முழுவதையும் காதலியுங்கள். மகாசுகத்தைப் பெறுவீர்கள். ஆணும் பெண்ணுமாக அனுபவிக்கும் மோக மயக்கத்தில் கிடைப் பது இன்பம். இதே மயக்கம் பிரபஞ்சத்தோடு ஏற்படும் போதுகிடைப்பது பேரின்பம். உலகம் முழுவதையும் ஒட்டு மொத்தமாகக் காதலியுங்கள். இதுதான் கடவுளை உணர இலகுவான மார்க்கம், எளிமையான மார்க்கம்.” 

யோகியின் பேச்சில் எல்லாரும் லயித்திருந்தார்கள். அவருடைய கோட்பாடுகளை வைதீகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும், மறுக்கவும் முடிய வில்லை. உலகானுபவத்தோடு ஒட்டிவரும் ஒரு கோட் பாட்டை, குறைத்து மதிப்பிட முடியவில்லை. காம சுகத் தைப் பற்றி யோகி கூறியபோது, வைதீகர்கள் முகங்களைச் சுளித்தார்கள், திகைத்தார்கள். 

யோகி சொன்னார்: “சாதனையின் லட்சியமே மகா சுகத்தைப் பெறுவது, அதுதான் பேரின்ப நிலை. எங்கும் நிறைந்த பேரொளியோடு இரண்டறக் கலந்து உணரும் மகாசுகத்தை அனுபவிக்கும் நிலை. இந்த மகாசுகத்தின் ஆரம்பநிலைதான், ஆணும் பெண்ணுமாக அனுபவிக்கும் காமசுகம். காம உணர்வின் உச்ச நிலையில், ஆணும் பெண்ணும் தன்னுணர்வு அழிந்து, இரண்டறக் கலந்து விடும் போது கிடைக்கும் சுகம்தான், மகாசுகத்தின் அடிப்படை. காம உணர்வில், சித்தம், உடலில் கீழ் நோக்கிப் பாய்கின்றது. சித்தத்தை மேல் நோக்கிச் செலுத்தும் சாதனையைப் பயின்றால், குண்டலினி சக்தி படிப்படியாக எழும். சித்தம்,பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கும் சக்தியோடு மயங்கி, இரண்டறக் கலக்கும் பேரானந்த உணர்வைப்பெற முடியும்.” பேசி முடித்துவிட்டு பராமாச் சாரி எழுந்தார். கூட்டம் கலையத் தொடங்கியது. போகம் என்றாலே விலக்கப்படவேண்டிய ஒன்று என்ற எண்ணத் தில் ஊறிவிட்ட வைதீகர்கள் தங்களுக்குள் சர்ச்சை செய்து கொண்டே சென்றனர். உதயசந்திரனும், ராஜன் நம்பூதிரியும் ஆசிரமத்தினுள் சென்று பார்க்க விரும்பினர். இருவரும் ருத்திர பரமாச்சாரியின் அனுமதி பெற்று ஆசிரமத்தினுள் சென்றனர். 

ஒரு பகுதியில், சில ஆண்களும் பெண்களும் சம்மணம் போட்டு அமர்ந்தவாறு தியானத்தில் ஆழ்ந்திருந் தனர். மற்றொரு பகுதியில் சிலர் நின்றவாறு தங்களை மறந்த நிலையில் கண்களை மூடி ஆடிக்கொண்டிருந்தனர். வியப்போடு பார்த்துக்கொண்டு சென்ற இருவரும், ஒரு பெரிய அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றபோது, திகைத்து நின்றனர். அறைக்குள் ஒரு சிறிய அகல்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஆணும் பெண்ணுமாகப் பலர் காதலில் ஈடுபட்டு மெய்மறந்திருந்த காட்சியைக் கண்டனர். அறை முழுவதும் நிசப்தம் நிலவியது. சுற்றிலும் ஏதோ சக்தி வாய்ந்த உணர்வு அலைகள் மட்டும் அழுத்தமாகப் பரவி வியாபித்திருப்பது போல் உணர்ந்தார்கள். 

பேரமைதி கொண்ட அந்தச் சூழ்நிலையில், இயக்கம் எல்லாம் ஸ்தம்பித்துப் போய், ஆனந்த மயமான உணர்வு மட்டுமே பூரண ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. அங்கிருந்த ஒவ்வோர் ஆணும் பெண்ணும் பின்னிப் பிணைந்துகொண்டு, ‘தான்’ என்னும் உணர்வை இழந்து, பிரபஞ்சத்தின் மூலத் தத்துவத்தோடு கலந்து விட்டவர்களைப் போலிருந்தார்கள். அங்கு தோன்றிய ஒவ்வொருவர் நிலையையும் கண்ட இருவருக்கும் வியப்பு மேலிட்டது. 

இருவரும் ஆசிரமத்தைவிட்டு வெளியே வந்தபோது, உதயசந்திரன், “அங்கே நாம் பார்த்தோமே, அந்தக் காட்சிகள் உனக்கு என்ன உணர்வை ஏற்படுத்தின?” என்று கேட்டான். 

“இரண்டிரண்டு யோகிகளாக மோன நிலையில் இணைந்து, ஏதோ ஒரு தெய்வ சந்நிதியில் தியானத்திலிருப்பதாக உணர்ந்தேன்” என்றான் ராஜன் நம்பூதிரி. 

“எனக்கும் அப்படித்தான் தோன்றியது” என்றான் உதயசந்திரன். 

“அவர்கள் இணைந்து காதலில் மயங்கி ஒன்றி இருந்த நிலை ஒரு சித்திரம் போல் காட்சி தந்தது. மாமல்லபுரம் பாறைகளில் இந்தக் காட்சிகளை சிற்பங்களாகச் செதுக்கினால்கூட நன்றாயிருக்கும். சாதகர்கள், எப்படிக் காதல் லீலையையும் ஒரு யோக சாதனையாக அனுபவிக்கிறார்கள் என்பது மக்களுக்குப்புரியும்” என்றான், ராஜன் நம்பூதிரி. 

“வைதீகர்களும், சிந்தனையற்றவர்களும் இந்தக்காட்சி களை விரசம் என்று எதிர்ப்பார்கள்.” 

“பரமாச்சாரி ஒன்று சொன்னாரே, கவனித்தாயா ? ரசம் என்றோ, விரசம் என்றோ எதுவும் இல்லை. பக்குவப்பட்ட மனம் வித்தியாசம் காணாது, என்றாரே! எவ்வளவு உண்மை!” 

“நான் இலங்கையிலிருந்தபோது, பௌத்த பிக்ஷுக் களில் பலர், இந்த நெறியைப் பின்பற்றியதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால், போதி தர்மர் என்ற பௌத்த ஞானி, இலங்கைக்கும் சென்றாராம். அவர் இந்தக் கோட்பாடுகளை பௌத்த நெறிகளில் புகுத்தினாராம். பௌத்தர்களில் ஹீனயான பௌத்தர்கள் இதை ஏற்காமல், கடும் துறவற வாழ்க்கையையே நெறி யாகக் கொண்டுவிட்டார்கள். மஹாயான பௌத்தர்கள் தாம், இந்த தத்துவங்களைக் கடைப்பிடிக்கிறார்கள். நான் இலங்கையிலிருந்தது மஹாயான மடம் தான். ஆனால், அவர்கள் இந்த நெறியை எல்லாருக்கும் போதிப்பதில்லை. உண்மையிலேயே இந்த நெறிகளைப் பயிலவேண்டும் என்னும் விருப்பமும், மனப்பக்குவமும் உள்ளவர்கள் யாரா வது அவர்களை அண்டினால், அவர்களுக்கு மட்டும் இரகசியமாகப் போதிக்கிறார்கள்” என்றான், உதயசந்திரன். 

“நீயும் இந்த நெறியைப் பற்றி அறிந்திருக்கலாமே” என்றான்,ராஜன் நம்பூதிரி. 

“எனக்கு இன்னும் பக்குவம் இல்லையே. ஒரு பெண் ணைக் கண்டதும் பேதலிக்கும் மனம்தானே எனக்கிருக் கிறது. பரமாச்சாரி சொன்னாரே, ‘ஆண், பெண் உறவை வெறி கொண்ட ஒரு இச்சையாகப் பாவியாமல், புனிதமான ஒரு யோக சாதனையாகப் பயின்றால்தான், போக இன்பத் தின் பூரணத்துவத்தை உணரமுடியும்; அப்படி உணரும் பக்குவத்தைப் பெறும்போதுதான் ஒரு சாதகன், மகாசுகத் தின் முதல்படியிலேயே காலடி வைக்கமுடியும், இல்லை யென்றால், அனுபவித்த போகம், வெறும் இச்சைத் தணிப் பாகவே முடிந்துவிடும்’ என்று, அது எவ்வளவு உண்மை!” 

“இன்றைய மதங்களினாலும், சமூக நாகரிகப் போக் காலும் காம சுகத்தை அணுகும் முறையே பாதிக்கப் பட்டுவிட்டது. உலக இயற்கையோடு ஒட்டி உறவாடி, மனித இயல்போடு இசைந்து ஒழுகும் இந்த மாபெரும் தத்துவத்தை வைதீகர்கள் தீவிரமாக எதிர்க்கிறார்கள். வாழ்க்கையின் பரஸ்பர ஈர்ப்புச் சக்தியின் இனிமையான போக்கையும் வலிமையையும் புரிந்து கொள்ளாமல், இந்த வைதீகர்கள், காதல் அனுபவத்தை ஒதுக்கி வைத்தது எவ்வளவு கொடுமை. இயற்கையைப் புரிந்து கொள்ளாமல், போலித்தனமான வாழ்க்கை முறையை வகுத்துவிட்டார் களே! பிற்காலத்தில் இந்தப் போலித்தனத்தை உடைத் தெறிந்து கொண்டு இளைஞர்கள் வெளியேறத்தான் போகி றார்கள். ஆனால், அப்போது பரமாச்சாரியார் போன்ற ஒரு வழிகாட்டி இல்லாமற் போனால், காம விரசங்களும், வக்கிரங்களும் சமூகத்தைச் சூழ்ந்து கொள்ளும்” என்றான், ராஜன் நம்பூதிரி. பிறகு சொன்னான்: 

“சக்தி வழிபாடும் காபாலிகர்களின் நெறியும் கிட்டத் தட்ட இந்தப் பாதையில்தானே இருக்கின்றன. திருமூலர் கூட காமசுகத்தின் மேன்மையைப் பற்றி பரியங்க யோகம் என்னும் தலைப்பில், மூன்றாம் தந்திரத்தில், இருபதுபாட்டுக் களில் விளக்கியிருக்கிறார். போகத்தை எவ்வளவு நேரம் அனுபவிக்கவேண்டும் என்றுகூட விளக்குகிறார் !போகம், யோகமாக மாறும் அனுபவம் அது.” 

“பின்னே ஏன் இந்த வைதீகர்கள் இதை எதிர்க் கிறார்கள்?” என்று கேட்டான் உதயசந்திரன். 

“தத்துவங்களில் அவர்கள் தெளிவடையாததால்தான். தாங்கள் கூறும் தத்துவங்கள் மட்டும்தாம் சிறந்தவை என்னும் மூடவெறியும் காரணம். தங்களுடைய செல் வாக்கை சமூகத்தில் வளர்ப்பதற்காகப் பலர் போலி வேஷம் போடுகிறார்கள். பரமாச்சாரியாரின் கோட்பாடுகளைச் சரிவர புரிந்து கொள்ளாததால்தான், அதை ஒரு காமக் களியாட்ட இயக்கம் என்று தவறாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். உபநிஷத்தில் கூட இந்த தாத்பர் யங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. சிவசக்தி என்ற தத்து வமே இதுதான்” என்றான் ராஜன் நம்பூதிரி. 

இருவரும் பேசிக்கொண்டே ஐராவதேச்சுரர் கோயில் பக்கம் வந்தபோது, அங்கே மக்கள் கும்பல் கும்பலாகக் கூடி நின்றார்கள். ராஜன் நம்பூதிரி, கூட்டத்தை அணுகி விசாரித் தான். மகாராணி விதித்திருந்த திருமண வரியை குறைகூறிப் பேசிவிட்டதால் கோயில் அமிர்தகணத்தாரில் (தர்மகர்த்தா) ஒருவர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை அறிந்தான். “பேசக்கூட சுதந்திரம் இல்லாமற் போய்விட்டதே” என்று முணுமுணுத்தான். 

உதயசந்திரன் பௌத்த கடிகைக்குத் திரும்பியபோது அவனுக்காக அரண்மனைப்பல்லக்கு காத்திருந்தது. 

21. உணர்வுகளின் ஆதிக்கம் 

அரண்மனையில் மகாராணி பிரேமவர்த்தினியின் அறைக்குள் பரபரப்புடன் சென்றான், சித்திரமாயன். 

“சின்னம்மா, கொள்ளை சம்பந்தமாக விசாரிக்க ஏன் அவசரமாக உத்தரவு கொடுத்தீர்கள் ? அதுவும் நம் ஒற்றர் படையின் துணைத்தலைவரிடம் பொறுப்பை விடலாமா?” என்று கோபத்துடன் கேட்டான். 

“ஏன்,துணைத்தலைவன் திறமையானவனாயிற்றே? இரண்டுநாட்களில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவான்” என்றாள், மகராணி. 

“என்னிடம் கேட்காமல், நீங்கள் அவசரப்பட்டு உத்தர விடலாமா?” 

“முதன் மந்திரிதாம் கொள்ளை பற்றித் தீவிர விசாரணை நடைபெறவேண்டும் என்றார். இந்தக் கொள்ளையால் நகர மக்களே பீதியடைந்திருக்கிறார்கள் என்றார். ஆறு லட்சம் பொற்காசுகளைக் கொள்ளை யடித்தார்களாமே?” 

“நீங்கள் விவரம் தெரியாமல் உத்தரவிட்டுவிட்டீர்கள். அந்த யவனன் தான் யவன வணிகசபையின் தலைவன். ஒரு வணிகருக்கு நான் சுங்கச் சலுகை கொடுத்ததை அவன்தான் தீவிரமாக ஆட்சேபித்தான். சலுகை பெற்ற வணிகனைச் சபையிலிருந்து நீக்கி, அவனுடைய வாணி பமே நசித்துப் போகும்படியாகச் செய்து கொண்டிருக் கிறான், அவனைச் சபையிலிருந்து நீக்கும்படி முதன் மந்திரிதாம் யோசனை கூறியிருக்கிறார்.” 

“ஓ, அதற்காக நீ செய்த வேலையா இது. இதை முன்பே என்னிடம் தெரிவித்து விட்டுச் செய்வதுதானே. இப்போ தென்ன ஒற்றர்படைத்துணைத் தலைவனை மேற்கொண்டு அதுபற்றி விசாரிக்க வேண்டாம் என்று கட்டளை யிட்டுவிட்டால் போகிறது” என்றாள், பிரேமவர்த்தினி. 

“இனி முடியாது. அவனைத்தான் முதன் மந்திரியின் பொறுப்பில் விட்டுவிட்டீர்களே. இதற்குள் அவன் என்னு டைய ஆட்கள் கொள்ளையடித்த இடத்தில் விட்டு வந்த தடயங்களைக் கைப்பற்றியிருப்பான்.” 

“என்ன தடயங்கள்?” 

“யவனக் காவலாளிகள் எதிர்த்துத் தாக்கியதில் நம் வீரர்களின் குதிரைகளில் ஒன்று பலத்த காயமடைந்து அங்கேயே விழுந்துவிட்டது. நம்முடைய வீரன் ஒருவனின் குத்துவாளும் அங்கே விழுந்துவிட்டது. குத்துவாளில், அரண்மனையின் முத்திரை இருக்கிறது. கிடைத்த தடயங் களைக் கொண்டு ஆராய்ந்தால் உண்மை தெரிந்துவிடும். அதற்குள் நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.” 

“எல்லாம் உன்னுடைய தவறுதான். என்னிடம் முன்பே இதுபற்றிச் சொல்லியிருந்தால் இவ்வளவு சிக்கல் வந்திருக்காது.” 

“கொள்ளையடிக்கத் தூண்டியவன் யாரென்றும் தெரிந்துவிடப் போகிறது” என்று கூறியவாறே ஆசனத்தில் சாய்ந்தான், சித்திரமாயன். 

“சரி, இனி என்ன செய்வது என்பதைப் பற்றி யோசிப் போம்” என்றாள் பிரேமவர்த்தினி. 

“ஏவிவிட்டவன் நான்தான் என்று நிச்சயமாக அனுமா னிக்க முடியாவிட்டாலும், தடயங்களிலிருந்து கொள்ளை யில் அரண்மனைக்குச் சம்பந்தம் உண்டு என்று தெரிய வரும். நீங்களும் இதற்கு உடந்தை என்றாகிவிடும். இன்று இரவுக்குள் ஏதாவது செய்தாக வேண்டும்” என்று கூறி விட்டு, சித்திரமாயன் வேகமாக எழுந்து வெளியேறினான். 

மகாராணிக்கு சித்திரமாயனின் நடவடிக்கை அச்சத் தையும், வெறுப்பையும் அளித்தது. அவனைப் பகைக்க அவளால் முடியாது. அவன்தான் வருங்காலச் சக்ரவர்த்தி. அவன் எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். 


அந்தப்புரத்தில், மேகலா, படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். மனமும் உடலும் பரபரத்துக் கெண்டி ருந்தன. உதயசந்திரனை எதிர்நோக்கியிருந்தாள். அவன் அன்று போர்ப் பயிற்சி அளிக்கவேண்டிய நாள். உதய சந்திரன் சற்றுக் காலதாமதமாகவே வந்து சேர்ந்தான். 

அவனைக் கண்டதும் அகமும் முகமும் மலர வரவேற்றாள்,மேகலா. 

“ஏன், இன்று நேரமாகிவிட்டது?” என்று கேட்டாள்.

“ருத்திர பரமாச்சாரியின் பிரசங்கம் கேட்கச் சென்றிருந் தேன்” என்றான், உதயசந்திரன். 

“ஓ… ! அவருடைய நெறிகளைப் பழகுகிறாயா?” என்று ஆவலுடன் கேட்டாள். 

“இல்லை சின்னராணியாரே, அவ்வளவுக்கு நான் பக்குவமடையவில்லை” 

“என்னை ராணி என்றழைக்க வேண்டாம் என்று அன்றே கூறிவிட்டேனே. தேவி என்றாலே போதும்” என் றாள், பிறகு, ‘பரமாச்சாரியின் தத்துவங்கள் எனக்கும் மிக வும் பிடிக்கும்” என்றாள். 

உதயசந்திரன் மௌனமாயிருந்தான். அவனுடைய நினைவில், ஆசிரமத்தில் கண்ட காதல் காட்சிகள் நிழ லாடின. மேகலா தொடர்ந்து பேசினாள்; “நீ கற்றுக் கொடுத்த பயிற்சியைச் செய்து பார்த்தேன். கையும் காலும் சரியா கவே இயங்கவில்லை.” 

“தேவி, இது சாதாரணப் பயிற்சி போன்றதல்ல. இதற்கு மிகுந்த கவனம் வேண்டும். பயிற்சியில் சிந்தை ஒடுங்க வேண்டும்” என்றான் உதயசந்திரன். 

மேகலா, அழகாகச் சிரித்தாள். “சிந்தை தான் எங்கோ சிதறுகிறதே” என்று கூறியவாறே அவன் கண்களை உற்றுப் பார்த்தாள். குறுநகை தோன்றியது. 

“முயற்சி செய்தால் வெற்றி கிட்டும்” என்றான். 

“வெற்றி கிடைக்கும் என்றுதான் நம்பிக் கொண்டிருக் கிறேன்” என்று கூறினாள். அவளுடைய கண்களில் தெரிந்த தாபம், அவனை நெகிழ வைத்தது. மலரச் சிரித்தாள். அவன், தரையை நோக்கினான். 

சற்று நேரத்தில் பயிற்சிக்குத் தயாராக வந்து அவனுக்கு எதிரே நின்றாள். பயிற்சிக்குத் தகுந்தவாறு உடையணிந் திருந்தாள். அவளை அந்தக் கோலத்தில் கண்டபோ தெல்லாம் அவனுடைய மனம் படபடத்தது. அவளுடைய கச்சையணிந்த எழுச்சியும், பார்வையின் கவர்ச்சியும் அவனை மிகவும் சோதித்தன. 

உதயசந்திரன், பயிற்சியைத் தொடங்கினான். பயிற்சி யின் போது அவளுடைய அங்கங்களின் அசைவுகளில் அவனுடைய பார்வை பதிந்தபோதெல்லாம், மனக்குரங்கைத் தூர விரட்ட எண்ணினான். ஆனால் மனம், பார்வையின் திசையிலேயே செல்ல முரண்டு பண்ணியது. 

சற்று நேரம் பயிற்சி செய்ததும் மேகலா களைப்புற்று ஆசனத்தில் சாய்ந்தாள். முகத்தில் வியர்வை முத்துமுத்தாக அரும்பியிருந்தது. மூச்சு வாங்கியதால் கக்சையை மீறிய மார்பகம் விம்மித் தணிந்து கொண்டிருந்தது. 

ஓ…சோர்வும் இவளுடைய முகத்துக்கு அழகாக இருக் கிறதே! முகத்தில் வியர்வை அரும்பியிருப்பதுதான் எவ் வளவுகவர்ச்சியாக இருக்கிறது ! கோயில் குளத்தின் செந்தா மரை இதழ்களில் காலை வேளையில், நீர் முத்துக்கள் பள பளக்கும்போது கூட இவ்வளவு அழகாயிராது… ஓ, இந்த வியர்வையில் கூட சுகந்தம் இருக்கிறதே…! 

உதயசந்திரன் தன்னுடையரசனையை எண்ணி, தனக் குள்ளேயே சிரித்துக் கொண்டான். மேகலா, ஒரு சிறு துண்டினால் முகத்தை ஒற்றிக் கொண்டே கேட்டாள்; “ருத்திர பரமாச்சாரியின் பிரசங்கம் கேட்டாயே, காதலைப் பற்றி அவர் கூறியதைக் கேட்டிருப்பாயே?” 

உதயசந்திரன் பதில் ஏதும் கூறாமல் அவளை உற்றுப் பார்த்தான். 

“மகா சுகத்தைப் பற்றிச் சொல்லியிருப்பாரே” என்றாள். 

“ஆமாம்” என்றான் உதயசந்திரன். 

“காதல் இன்பந்தான் மகா சுகத்தின் அடிப்படை என்கிறாரே, நீ என்ன நினைக்கிறாய்?” இந்தக் கேள்வி, உதயசந்திரனைத் திகைக்க வைத்தது. 

நான் என்ன நினைத்தால் இவளுக்கென்ன…? 

“எனக்கு அவர் கூறுவது சரியென்றே தோன்றுகிறது. வாழ்க்கையில் மிகுந்த சக்தி வாய்ந்த உணர்வு, காதல் தானே? பேரானந்தத்தை உணர்வதற்கு, அவ்வளவு சக்தி வாய்ந்த இனிமையான காதல் உணர்வுதான் அடிப்படை என்று அவர் சொல்வது, உண்மையாகத்தானிருக்க வேண் டும்.நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டாள். 

மீண்டும் உதயசந்திரன், சங்கடத்துக்குள்ளானான். பதில் கூற முடியாமல் திணறினான். 

மேகலா, மெல்ல சிரித்தபடி கேட்டாள்: “என்ன பதிலே இல்லை? காதல் உணர்வுகளுக்கு நீ இன்னும் வசப்பட்ட தில்லையா?” 

அவளுடைய சிரிப்பின் அலைகள், அவனை மெல்ல வருடிச்சென்றன. அதனுடைய கதகதப்பில், அவனுடைய இரத்தம், விரைந்தோடத் தொடங்கியது. ஓர் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தான். 

“திருமணத்தைப்பற்றி அவர் கூறியது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. திருமணம், வெறும் சடங்கு. ஒரு சம்பிர தாயம். ஓர் ஆணும் பெண்ணும், கணவன் மனைவி என்ற கடமைக்குள் பணிபுரியும் சாரமற்ற ஒரு கட்டுக்கோப்பு என்றாரே, எவ்வளவு உண்மை!” என்றாள், மேகலா. பிறகு, கையிலிருந்த துண்டை, ஆசனத்தில் வீசிவிட்டு மீண்டும் பயிற்சிக்காக எழுந்தாள் உதயசந்திரனும் எழுந்தான். இரு வரும் எதிர் எதிரே நின்றனர். அவன் புதுப் பயிற்சியின் முத்திரைகளை விவரித்தான். அந்த முத்திரைகளை அவள் சரிவரச் செய்துகாட்ட முடியாமல் தவறிழைத்தாள். அவளு டைய கைகளைத் தீண்டி அவளுக்குப் பயிற்சியளிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டதும், உதயசந்திரனின் மனம், சற்று நடுங்கியது. 

“முத்திரைகள் சரியாக வரவில்லையே. கையைப் பற்றி, எப்படி என்று காட்டேன்” என்றாள், மேகலா. 

அவளுடைய புஜங்களைப் பற்றி, முத்திரைகளைச் சொல்லிக் கொடுத்தபோது, அவனுடைய உடலில் சிலிர்ப்பு ஏற்பட்டது. அதே சமயம், அவளுடைய உடலும் மெல்ல அதிர்ந்ததை அவனுடைய கைகள் உணர்ந்தன. 

எவ்வளவு குளிர்ந்த தோள்கள்… ! பட்டுப் போன்ற மேனிதான் எவ்வளவு மிருதுவாக இருக்கிறது. 

அவனுடைய பார்வை, அவளுடைய தோளிலிருந்து இறங்கி, வியர்வையில் நனைந்து பளபளத்த மார்பகங்களில் பதிந்தது. அவனை மிக நெருங்கியிருந்த அவளுடைய மார் பகங்கள், அவனுடைய பார்வையை விலக விடாமல் மறித் தன. பெருமூச்சோடு அவனுடைய பார்வை உயர்ந்த போது, அவளுடைய கண்களைச் சந்தித்தது. அப்போது, அவள் சொன்னாள்: “காதல் இன்பத்தின் பூரணமான உச்சநிலை யைக் கணவன்-மனைவி என்ற பந்தத்தில் பெற முடியாது; காதலர்களால் மட்டுமேதான் பெறமுடியும் என்றல்லவா ருத்ரபராமாச்சாரி சொன்னார் ! உலகத்தில் கணவன் மனைவி என்ற நிர்பந்தமான உறவுக்குள் அடங்கியவர்களிடம் காதல் எங்கே இருக்கிறது? ஆணும் பெண்ணும் கணவன், மனைவி என்ற பாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்கள். இதயம் ஒன்றிய காதலுணர்வு, தாம்பத்தியத்தில் இல்லையே.ஒரு வரை ஒருவர் நெருங்கும்போது, இச்சையை தீர்க்கிறார்களே தவிர, அந்த நெருக்கத்தில் இதயம் இணையவில்லையே. உயிர் ஒன்று சேரவில்லையே. மணவாழ்க்கை இந்தச் சமுதாயச் சடங்கே தவிர வேறென்ன ? ஓ… ! வாழ்க்கையை எவ்வளவு ஆழ்ந்து ஆராய்ந்திருக்கிறார், பரமாச்சாரி ! நீயும் கேட்டிருப்பாயே?” 

அவள் ஏதோ ஒன்றைச் சொல்வதற்கு, சுற்றி வளைத் துத் தவிக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டான் உதய சந்திரன். “ஆமாம் தேவி, கேட்டேன்” என்றான். அப்போது அவனுடைய குரல் குழைந்தது. 

“இதயங்கள் ஒன்றுபட்டு, ஒருவருக்காக ஒருவர் ஏங்கி, காதலின் இன்பத்தை நிலை மறந்து நுகரும்போதுதான், சுகானுபவத்தின் பூரணமான நிலையை எட்ட முடியும் என்று அவர் சொன்னது எவ்வளவு உண்மை!” என்று மெல்லிய குரலில் அவன் காதருகே சொல்லிப் பெருமூச்சு விட்டாள், மேகலா. 

அவனுக்கு மிக அண்மையில் அவள் இருந்ததால், அவளுடைய பெருமூச்சு அவன் முகத்தைச் சூடாக்கியது. மிக நெருங்கியிருந்த கண்கள், பசைபோல் அவனுடைய பார்வையோடு ஒட்டிக்கொண்டன. பயிற்சிக்காக அவளு டைய தோளைப் பற்றியவன், பற்றியவாறே நின்றான். இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி, எப்படிச் சுருங்கியதென்றே அவன் உணரவில்லை. அவளுடைய கனத்த மார்பகங்கள், எந்தக் கணமும் அவனுடைய மார் பைத் தீண்டிவிடும் நிலையில் மிக நெருங்கி, விம்மித் தணிந்து கொண்டிருந்தன. அவனைச்சுற்றி ஒருவித சுகந்தம் பரவி இருந்தது. அவனை அங்கும் இங்கும் நகர விடாமல் உணர்ச்சிகளின் அலைகள் சுற்றிச் சூழ்ந்து கொண்டன. அவளுடைய வியர்வையின் நெடியில் கிறங்கினான். 

“உதயசந்திரா, அப்படி ஒரு சுகானுபவத்தை உணரத் துடிக்கும் இதயத்தை உன்னால் உணர முடியவில்லையா?” என்று அவனுடைய காதில் மேகலாவின் மெல்லிய குரல் விழுந்தது. மறுகணம், அப்படி ஓர் அனுபவத்துக்காக ஏங்கும் அவளுடைய இருதயத்தின் துடிப்பை, உதயசந்திரன் தன் மார்பின் மீது உணர்ந்தான் ! அவனது மார்பில் நன்கு அழுந்தி உணர்த்திய அந்த துடிப்பின் உணர்வுகள், அவன் உடலையும் ஊடுருவிப் பரவி, ஆட்கொண்டு மயக்கின. ஆடைகள், மெல்ல மெல்ல நெகிழ்ந்தன. 

உணர்ச்சிகளின் கோரப்பசிக்கு, பூரித்த அங்கங்கள், இரை தேடிக் கொண்டிருந்தன. உதயசந்திரனின் கரங்கள், மெல்ல மெல்லப் பரவியபோது மேகலா முனகினாள். அவனுடைய உடலுக்குள் தன்னையே மறைத்து, ஒருமை யாகி விடும் துடிப்பில் பற்றிப் படர்ந்தாள். பரவசமானாள். 

அப்போது சில விநாடிகளுக்கு அந்த அறையில் நிசப்தம் நிலவியது. வெளி உலகம் முழுவதும் மறைந்து விட்டது. இருந்தவை, ஆனந்த மயமான உணர்வுகள் ! உணர்வுகள்!உணர்வுகள் !… 

உணர்வுகளின் அலையில், இரு உயிர்கள் உல்லாச மாக மிதக்கத் துடித்தன. 

திடீரென்று உதயசந்திரனின் அறிவில் ஓர் அதிர்ச்சி. உணர்ச்சிகள் பட்டென்று அறுந்தன. கண்களை மெல்ல விழித்தான்- 

‘இரண்டு யோகிகள், மோன நிலையில் இணைந்து, ஏதோ ஒரு தெய்வ சந்நிதியில், தியானத்தில் இருப்பதாக உணர்ந்தேன்…’- 

ராஜன் நம்பூதிரியின் குரல், எங்கிருந்தோ மிக மெல்லிய தாகக்கேட்டது. 

உதயசந்திரனின் அறிவில் ஏதோ உறுத்தியது. கண்களை நன்கு விரித்துப் பார்த்தான். 


மேகலாவின் கண்கள் தாமரை மொட்டுக்களைப் போல் மெல்லத்திறந்தன. பெருமூச்சு, சீறிச் சீறி வெளியேறிக் கொண்டிருந்தது. உடல்முழுவதும் வியர்த்து அந்த ஈரத்தின் பளபளப்பில் அவளுடைய தங்கநிற அங்கங்கள் ஜொலித் துக்கொண்டிருந்தன. கண்களில் தாபம். 

உதயசந்திரனுக்கு ராஜநாகம் தெரிந்தது-அழகும், மென்மையும், பளபளப்பும் பொருந்திய ராஜநாகம், ஆள் உயரத்துக்கு படமெடுத்து அவனை அணைத்து நின்றது… 

ஆஹா, எவ்வளவு அழகு…! எவ்வளவு கவர்ச்சி…! ஐயோ, என்ன சீற்றம் இது… ? சீறும் ஒலி கேட்கிறதே! 

சட்டென்று அணைத்திருந்த தன்னுடைய கரங்களை எடுத்தான். தன்னை அணைத்துப் பின்னியிருந்த மேகலா வின் கரங்களையும் விலக்கினான். தன் மீது ஒட்டிக் கிடந்த வளைத்தன் உடலிலிருந்து உரித்துப் பிரித்து விலக்கி நிறுத்தினான். 

“மகாராணி… மகாராணி…”-உதயசந்திரன் பதறினான். நாக்குழறியது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. 

மேகலா, ஆழ்ந்த மயக்கத்திலிருந்து விடுபட்டவளாய் அவனை வெறிக்கப் பார்த்தவாறு நின்றாள். 

“மன்னியுங்கள், தேவி” என்று பதற்றத்தோடு கூறி விட்டு, அந்த அறையிலிருந்து வேகமாக வெளியேறினான். அந்தப்புரத் தோட்டத்திலிருந்த பல்லக்கை அடைந்தபோது தான் சற்று நிதானமடைந்தான். உடல் நடுங்கிக் கொண்டிருந் தது. ஒரு பெரிய விபத்திலிருந்து தெய்வாதீனமாகத் தப்பி வந்து விட்டதாக எண்ணியவாறே பல்லக்கில் ஏறினான். 


உதயசந்திரன் இரவு முழுவதும் உறங்காமல் தவித்துக் கொண்டிருந்தான். அரண்மனையில் ஏற்பட்ட அனுபவம் அவன் மனத்தில் நடுக்கத்தை உண்டுபண்ணியிருந்தது. லீனாவை உடனே காணவேண்டுமென்ற தவிப்பு ஏற்பட் டது. மறுநாட் காலையில் லீனாவைக் காணப் புறப்பட் டான். யவனச் சேரிக்குச் செல்லும் சிறு வீதி வழியாக அவன் சென்ற போது பெரும் கூட்டம் அங்கு கூடியிருந்தது. ஒரு இரதம், ஒரு வீட்டின் முன் பகுதியில் மோதிச் சரிந்து கிடந்தது. ஏதோ விபத்து என்பதைப் புரிந்துகொண்டு கூட்டத்தை நெருங்கினான். இரதத்தின் சக்கரத்தில் அடிபட்டு ஒருவன், உடல் நைந்து போய் இரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந் தான். இரதசாரதியைக் கூட்டத்தினர் பிடித்து வைத்திருந் தனர். சாரதி புலம்பிக் கொண்டிருந்தான். 

”குதிரை திடீரென்று மிரண்டு போய்விட்டது. கட்டுப் படுத்த முடியவில்லை” என்றான், “ஐயோ, இன்று யார் முகத்தில் விழித்தேனோ” என்று புலம்பினான். 

“அடிபட்டவன் யார்?” – உதயசந்திரன் விசாரித்தான். 

“தெரியவில்லை. யவனச் சேரியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். பின்னால் வேகமாக வந்த இரதம், அவனை நெருங்கியதும், திடீரென்று வீதியைவிட்டு விலகி, அவன் மீது ஏறி, இந்த வீட்டையும் இடித்துவிட்டு நின்றது. குதிரை திமிறிக் கொண்டு ஓடிவிட்டது” என்றான் ஒருவன். 

மற்றொருவன், “ஊஹும், அப்படியில்லை. நான் தான் பார்த்தேனே, குதிரைதான் முதலில் அவனை மோதித் தள்ளியது. பிறகு தான் சக்கரம் அவன் மீது ஏறியது” என்றான். 

“யார் சொன்னது? நான்தான் வரும்போதே பார்த் தேனே. அவன் தான் திடீரென்று வீதியின் குறுக்கே வந்து விட்டான். சாரதி, இரதத்தை விலக்கப் பார்த்தான். முடிய வில்லை. அதனால் தான் இரதம் வீட்டுச் சுவரில் போய் முட்டியது” என்றான் இன்னொருவன். 

“அதெல்லாம் ஒன்றுமில்லை. சாரதி, மது அருந்தி யிருக்கிறான். போதையில் வேகமாக ஓட்டி வந்தான். ஆள் மீது ஏற்றி விட்டான். நான் அவன் பக்கத்தில் நின்றேனே. மதுவின் நெடி அடிக்கிறது” என்றான், ஒருவன். 

அப்போது குதிரையில் சில வீரர்கள் வரவே கூட்டம் விலகி வழிவிட்டது. வந்தவர்கள் இரத சாரதியைப் பிடித்துச் சென்றார்கள். கீழே கிடந்த பிரேதத்தை ஒரு வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு போய்விட்டார்கள். 

உதயசந்திரனின் மனம் விபத்தைக் கண்டதினால் இன்னும் கலக்கமடைந்திருந்தது. லீனாவைக் காணவேண் டும் என்ற தவிப்பில் சீனத் தோப்பை நோக்கி விரைந்து நடந்தான்.

– தொடரும்…

– 1985, தினமணி கதிரில் தொடர்கதையாக வெளிவந்தது.

– மருக்கொழுந்து மங்கை (சரித்திர நாவல்), முதற் பதிப்பு: மே 1995, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

ர.சு.நல்லபெருமாள் ர.சு.நல்லபெருமாள் (ரவணசமுத்திரம் சுப்பையா பிள்ளை நல்லபெருமாள்) (நவம்பர் 1930 - ஏப்ரல் 20, 2011) தமிழ் நாவலாசிரியர். திருநெல்வேலியில் வாழ்ந்தவர். காந்தியக் கொள்கைகளையும் சைவசித்தாந்த நோக்கையும் கொண்டு எழுதியவர். மார்க்ஸியத்துக்கு எதிரான வலதுசாரி பொருளியல் சிந்தனைகளும் ஃப்ராய்டிய உளவியல் ஆய்வுமுறைமையும் கொண்டவர். வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்தும் பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர். 1945-ல் தன் 15 வயதில் எழுதிய வீண்வேதனை அவருடைய முதல் படைப்பு. கல்கி இதழில் இரு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *