மருக்கொழுந்து மங்கை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 9, 2025
பார்வையிட்டோர்: 474 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

16. அற்புதப் போர் முறை

போட்டி அரங்கத்தில் குதித்த உதயசந்திரன், புன்முறு வலுடன் மகாராணியின் மேடையை நோக்கி நடந்தான். மகாராணி பிரேமவர்த்தினியின் அருகிலிருந்த மேகலாவிற்கு வியப்புத் தாளவில்லை. 

சாளரத்தில் தோன்றிய ஆணழகன், அவளுக்கு எதிரே வருவதைக் கண்டு திகைப்புற்றாள். கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு அவனைக் கூர்ந்து பார்த்தாள். 

“ஓ…! இவனையா கனவில் கண்டேன்…இவனை இங்கே சந்திக்கப் போவதைத்ததான் கடவுள் அப்படிக் கனவில் காட்டி உணர்த்தினாரோ…? ஆ…! எவ்வளவு கம்பீர மாக வருகிறான்…!” – மேகலா பரபரப்படைந்தாள்.

கண் இமைக்காமல் பார்த்தாள். அவன் நெருங்க நெருங்க அவள் பரபரப்படைந்தாள். அவனுடைய முகத்தை மிக்க ஆர்வத்துடன் பார்த்தாள். மகாராணிக்கு எதிரே போய் நின்றதும் தலை குனிந்து வணங்கினான். வணங்கிவிட்டு நிமிர்ந்த அவனுடைய பார்வை, மேகலா வின் பக்கம் திரும்பியது. அவனுடையகண்களைச் சந்தித்த போது, அவளுடைய மனத்துள் இனிமையான உணர்வு மலர்ந்ததை உணர்ந்தாள். உடல், சிலிர்த்து அடங்கியது. 

அவளுடைய பார்வை தன்னையே வெறித்ததை உணர்ந்த உதயசந்திரன் தன் பார்வையைத் திசை திருப்பி னான். மேகலா தன்னைப் பார்த்து முறுவலித்ததாக நினைத் தான். மீண்டும் அவனுடைய பார்வை அவளிடம் திரும்பிய போது அவளிடம் சித்திரமாயன் ஏதோ கூறிக் கொண்டி ருந்தான். 

தன்னைக்கோட்டைவாயிலில் சவுக்கால் அடித்ததைத் தான் கூறுகிறானோ என்ற சந்தேகம் உதயசந்திரனிடம் எழவே அவனுள் கோபம் கிளர்ந்தெழுந்தது. சட்டென்று திரும்பி நடக்க முனைந்தான். அப்போது சித்திரமாயனின் குரல் கேட்டது. 

“வீரனே, உன் பெயர் என்ன ?” என்று கேட்டான், சித்திரமாயன். 

உதயசந்திரன் திரும்பி சித்திரமாயனைப் பார்த்து, “உதயசந்திரன்” என்றான். 

மேகலாவின் உதடுகள் அந்தப் பெயரை முணு முணுத்தன. 

“வீரனே, உனக்கு வேண்டிய குத்துவாளைப் பெற்றுக் கொள்ளலாம்” என்றான், சித்திரமாயன். 

“எனக்கு ஆயுதம் தேவை இல்லை என்றான்” உதயசந்திரன். 

“ஆ…! ஆயுதம் இல்லாமலா? எப்படித் தாக்க முடியும் ? இதோ இதைப் பெற்றுக் கொள்” என்று கூறிய இளவரசன் அருகில் நின்ற வாணராயனைப் பார்த்துக் கையை அசைத்தான். உடனே வாணராயன், தன் இடையிலிருந்து குத்துவாளை எடுத்து, உதயசந்திரனிடம் வீசினான். தன்னை நோக்கிப் பறந்து வந்த வாளை லாகவமாகப்பற்றிக் கொண்ட உதயசந்திரன், “நன்றி, இளவரசே, எனக்கு ஆயுதம் தேவை இல்லை. இந்த யானையைச் சாய்க்க என் கைகளே போதும்” என்று கூறிவிட்டு, குத்துவாளை வாணராயனை நோக்கித் திருப்பி வீசி எறிந்தான். 

மாணவர்கள் இருந்த மேடையிலிருந்து உற்சாக ஆரவாரம் எழுந்தது. 

“திமிர் பிடித்தவன். வீணாக சாகப்போகிறான்” என்று இளவரசன் முனகினான். 

மேகலா கலக்கமடைந்தாள்-‘ஐயோ, அந்தக் கொடிய முரடனிடம் நீ ஆயுதமின்றியே போரிடுவதா? உன்னுடைய அழகியமேனி, அந்த முரடனிடம் சிக்கி சின்னாபின்னமாகி விடுமே. வேண்டாம் வீரனே, விஷப்பரீட்சை வேண்டாம்.’ 

அவள் மனம் ஓலமிட்டது. மக்கள் திகைத்தனர். கூட்டத்திலிருந்து பலர் அவனை ஆயுதம் பெற்றுக் கொள்ளும்படி கூவினர். உதயசந்திரன், வேறு எதையும் கவனியாமல், அரங்கின் நடுவே நின்று கொண்டிருந்த பல்லவ வீரனை நோக்கி நடந்தான். இலங்கை வீரர்கள், அவனை உற்சாகப்படுத்த ஆரவாரம் செய்தார்கள். 

பார்வையாளர் பகுதியிலிருந்த பெண்கள், அவனுக்காக இரங்கி வருந்தினர். “ஐயோ பாவம்” என்று சில பெண்கள் வாய்விட்டே அரற்றினர். 

உதயசந்திரனும் பல்லவ வீரனும் எதிர்க்க ஆயத்தமாகி விட்டனர். போட்டி மைதானமே மூச்சுவிட மறந்து போய் திகைத்திருந்தது. ஊசி விழுந்தால் கூட ஒலி கேட்கும். எல்லாருடைய மனத்திலும் பதைபதைப்பு. 

அரங்கத்தில் இருவரும் சில வினாடிகள் பதி போட் னர். பல்லவ வீரன் குறுவாளைக் கையில் ஏந்தியபடி இரையை நோக்கும் புலியைப் போல் உறுமினான். உதய சந்திரன், எச்சலனமும் இல்லாமல், கால்களைச் சற்று அகற்றி நின்றவாறு, இரு கைகளையும் சற்று முன்னே நீட்டி, தயாராக நின்றான். 

திடீரென்று பல்லவ வீரன், குத்துவாளால் தாக்கினான். உதயசந்திரன், சாமர்த்தியமாக விலகவே, இலக்குத் தவறிய வேகத்தில் பல்லவ வீரன், சற்றுத் தடுமாறினான். மறுகணம், உறுமிக்கொண்டே பாயத் தயாராக நின்றான். உதயசந்திரன், பல்லவவீரனின் கண்களை உற்றுப் பார்த்தான். திடீரென்று உதயசந்திரனின் வலதுகரம் மட்டும் இயங்கியது. மறு கணம், பல்லவ வீரன், “ஓ…” என்று பயங்கரமாக ஒரு மிருகத்தைப் போல் அலறியபடிப் பின்னால் சாய்ந்து, இரண்டு எட்டுகள் தள்ளாடினான். பிறகு, கீழே விழுந்து அலறித் துடித்தான். அவனுடைய ஒரு கண்ணிலிருந்து இரத்தம் கொட்டி, அவன் முகத்தை விகாரப்படுத்திக் கொண்டி ருந்தது. அவன் கையிலிருந்த குத்துவாள், தூரப் போய் விழுந்து கிடந்தது. உதயசந்திரன், பாய்ந்து சென்று, கீழே கதறிக் கொண்டிருந்த பல்லவ வீரனின் ஒரு காலைப் பற்றி முறுக்கி, முதுகில் மிதித்தபடித் திருகினான். பல்லவ வீரன் துடித்துக் கதறினான். 

“வீரனே, தோல்வியை ஒப்புக் கொள்கிறாயா?” என்று கேட்டான், உதயசந்திரன். 

பல்லவ வீரன், “தோற்றேன், தோற்றேன். என்னை விட்டுவிடு” என்று கதறினான். 

அவனை உதறிவிட்டு உதயசந்திரன், வெற்றிப் பெருமையுடன் மகாராணியை நோக்கி நடந்தான். 

எல்லாம் சில கண நேரங்களுக்குள் நடைபெற்று முடிந்துவிட்டன. அரங்கில் என்ன நேர்ந்ததென்றே பார்வை யாளர்களுக்குப் புரியவில்லை. ஒரு மின்வெட்டும் நேரத் தில் உதயசந்திரன் அசைந்தது தெரிந்தது; உடனே, பல்லவ வீரன் சாய்ந்தது தெரிந்தது ! ஒரு முரட்டு வீரனை சிலவினாடி களுக்குள் ஆயுதமின்றியே வீழ்த்திவிட்ட அதிசயத்தை மக்களால் நம்பவே முடியவில்லை. ஒரு பெரிய போராட் டத்தை எதிர் பார்த்திருந்த மக்களுக்கு, சில வினாடிகளுக்குள் சண்டை முடிந்துவிட்டது, ஏமாற்றத்தைக் கொடுத்தது. 

உதயசந்திரன், மகாராணியை நோக்கி நடந்தபோது மக்கள் உற்சாகத்தினால் ஆரவாரம் செய்தார்கள். பெண்கள், பெருமகிழ்ச்சியால் கைகொட்டினார்கள். மாணவர்கள், துள்ளிக் குதித்தார்கள். 

லீனா, மகிழ்ச்சி தாளாமல் டெங்லீயின் மனைவியை இறுகக் கட்டிக் கொண்டாள். 

“நிச்சயம் வெற்றிபெறுவான் என்று எனக்குத் தெரியும்” என்றான்,ராஜன் நம்பூதிரி. 

“நான் ரொம்பப் பயந்து போய்விட்டேன்” என்று கூறிப் பெருமூச்சுவிட்டார், டெங்லீ. “மகாசூரன்தான்” என்றார். 

தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த உதயசந்திரனை வியப்போடும், ஆர்வத்தோடும் பார்த்துக் கொண்டிருந் தாள், மகாராணி. அவன் அவளுக்கு எதிரே வந்து வணங்கி நின்றபோது, “வீரனே, நீ ஏமாற்றி அவனை வீழ்த்தி விட்டாய்” என்றான், இளவரசன். 

இதைக் கேட்டுத் திகைப்புடன் நிமிர்ந்து இளவரசனைப் பார்த்தான், உதயசந்திரன். 

“அவனுடைய கண்களைத் தந்திரமாகக் குத்திக் குருடாக்கி விட்டாய். குருடனை வெல்வது வீரத்தனமா?” என்றான், இளவரசன். 

உதயசந்திரனுக்குக் கோபம் மூண்டது. “இப்போது நடைபெற்றது, இஷ்டபாணிப்போர். அந்த வீரன், இந்தப் பாணியில் போரிடத்தான் அழைத்தான். இந்தப்பாணியில் பின்பக்கமிருந்துதான் தாக்கக்கூடாதே தவிர, உடலின் எந்தப் பகுதியையும் தாக்கலாம். இளவரசர் போட்டியின் விதிகளை மறந்துவிட்டார் போலும்” என்றான் உதயசந்திரன். 

“போட்டியின் விதிமுறைகளைப்பற்றி நீ எனக்கு நினைவூட்ட வேண்டியதில்லை. ஒரு குருடனை வீழ்த்தியவனை வீரன் என்று ஏற்க முடியாது. உன்னுடைய வீரத்தைக் காட்ட வேண்டுமானால், இன்னொரு சந்தர்ப்பம் அளிக்கிறேன்” என்றான், இளவரசன். 

உதயசந்திரன், கோபத்துடன் சித்திரமாயனை ஏறிட்டு நோக்கினான். “இளவரசே, போட்டியின் விதிமுறை வழுவாமல் தான் போரிட்டேன். வெற்றி பெற்று வந்த பிறகு, ஒப்புக்கொள்ள மறுப்பது விந்தைதான். தாங்கள் கூறிய படியே என் திறமையை இந்த அரங்கத்திலேயே காண்பிக்கிறேன். சந்தர்ப்பம் கொடுக்கிறீர்களா?” என்றான். 

“ஒ… இப்போதே உன் திறமையைக் காண்பிக்கலாம். இங்குள்ள எந்த வீரனோடும் நீ போரிடலாம்” என்றான், இளவரசன், அலட்சியமாக. 

“வீரனை நானே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டான், உதயசந்திரன். 

“உன் இஷ்டம்.” 

“இளவரசே, இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தின் இளவரசர்,தாங்கள். தாங்களும் ஒரு வீரர்தாம். உங்களுக்கு இஷ்டமான எந்த ஆயுதத்தையும் ஏந்தி வாருங்கள். எத்தனை ஆயுதங்களையும் ஏந்தி வாருங்கள். தேவையானால், உங்கள் மெய்க்காப்பாளனையும் உடன் அழைத்து வாருங்கள். நான் ஆயுதமின்றியே உங்களை வெல்கிறேன். நான் போட்டிக்குத் தயார்” என்று கூறி, சித்திரமாயனை உறுத்துப்பார்த்தான், உதயசந்திரன். 

இளவரசன் துணுக்குற்றான். மக்களிடமிருந்து சல சலப்புத் தோன்றியது. கூட்டத்தில் மாணவன் ஒருவன், “அழைப்பை ஏற்க வேண்டும்” என்று உரக்கக் கூவியது கேட்டது. 

இளவரசனின் கண்கள் சிவந்தன. கீழே அரங்கில் நின்று கொண்டிருந்த உதயசந்திரனை வெறிக்கப் பார்த்தவாறு, “எனக்கே அழைப்பு விடுகிறாயா ?” என்று உறுமினான். 

“தாங்கள் ஒரு வீரர் என்று நினைத்தேன்” என்றான், உதயசந்திரன், சிரித்தபடி. 

மக்கள் ஆர்ப்பரித்தனர். உதயசந்திரனைப் பலர் உற்சாகப்படுத்தி எழுப்பிய குரல் கேட்டது. 

இளவரசன் கோபத்தோடு திரும்பி, வாணராயனின் உடைவாளை உருவி எடுத்தான். 

‘வா,வா…அந்த ராஜநாகத்தைத் தப்பவிட்டுவிட்டேன். இப்போது உன்னை ஒரு பாம்பை அடித்து நசுக்குவது போல் நசுக்கி விடுகிறேன். வா…’ உதயசந்திரன் உள்ளூரக் குமுறினான். 

அப்போது, முதன் மந்திரி தரணிகொண்ட போசர் எழுந்து இடைமறித்தார். 

“பொறுங்கள் இளவரசே. தாங்கள் போட்டியில் ஈடுபடலாகாது. பொறுமையாக அமருங்கள்” என்று கூறி விட்டு, உதயசந்திரனிடம் திரும்பி, “வீரனே, ராஜ குடும்பத் தினர் இந்தப் போட்டியில் பங்கு கொள்ளக்கூடாது. ஆகவே, உன்னுடைய வலிந்த அழைப்பை இளவரசர் ஏற்கத் தயாராயிருந்தாலும், அவர் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாது. உன்னுடைய திறமையை வேறு வீரர்களிடம் தான் காட்ட வேண்டும்” என்று கூறியதும், உதயசந்திரனின் முகம் ஏமாற்றத்தால் சுருங்கியது. 

சித்திரமாயன் வாளை வாணராயனிடம் எறிந்துவிட்டு ஆசனத்தில் அமர்ந்தபடியே சொன்னான். 

“வீரனே, ராஜ குடும்பச் சம்பிரதாயம் என்னைப் போரிடவிடாமல் தடுத்துவிட்டது. இல்லையென்றால் திமிர் பிடித்த உன்னை இப்போதே அடக்கியிருப்பேன். நீ வீரன் தான் என்பதை நான் அனுப்பும் வீரர்களிடம் காட்ட முடியுமா பார்.” 

தன்னைத் திமிர் பிடித்தவன் என்று சித்திரமாயன் கூறியதைக் கேட்டுக் கொதித்தான், உதயசந்திரன். அந்தக் கோபத்தில் இரைந்து கத்தினான். 

“யாரை வேண்டுமானாலும் அனுப்புங்கள். எத்தனை பேர் வேண்டுமானாலும் வரட்டும்.” 

“இரண்டு பேர் போதும் உன் திமிரை அடக்க” என்று சித்திரமாயன் கூறிவிட்டு வாணராயனிடம் ஏதோ கூறினான். வாணராயன் போட்டி அறிவிப்பாளரிடம் ஏதோ கூற, போட்டி அறிவிப்பாளர் மேடையிலிருந்து இறங்கி, பல்லவ வீரர்கள் இருந்த இடத்தை நோக்கி விரைந்தார். 

என்ன நடைபெறுமோ என்று எல்லோரும் திகைப் புடன் இருந்தனர். சற்று நேரத்தில், இரண்டு வாள் வீரர்கள் அரங்கில் தோன்றினார்கள். 

“வீரனே, உன் திறமையை இந்த இரண்டு வீரர்களிடம் காண்பி. உனக்கும் வாள் தேவையானால் தரச் சொல்லு கிறேன். இவர்களை ஒரே சமயத்தில் போரிட்டு வென்று விட்டால், ஆயிரம் பொற்காசுகள் உனக்கே கிடைக்கும்” என்றான்,இளவரசன். 

உதயசந்திரன் அலட்சியமாக இளவரசனைப் பார்த் தான். “கேவலம் பொற்காசுகளுக்காக நான் இந்த அரங்கில் இறங்கவில்லை. நான் வெற்றி பெற்ற பிறகு, அந்தப் பொற் காசுகளை என்னுடைய கடிகைக்கு வழங்கி விடுவேன்” என்று கூறிவிட்டு, அரங்கின் நடுவில் நின்று கொண்டிருந்த வாள் வீரர்களை நோக்கி விரைந்தான். 

மேகலாவின் மனம், மிகுந்த வேதனைக்குள்ளாகி இருந்தது. இறந்து விடுவானே என்று மனம் பதைபதைத்தது. 

லீனா, பதற்றமடைந்திருந்தாள். ராஜன் நம்பூதிரி இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான். டெங்லீ, பயத்தினால் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். 

உதயசந்திரன், அரங்கின் நடுப்பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, மேடையிலிருந்து ஒரு கீச்சுக் குரல் உரக்க ஒலித்தது. “வீரனே, வாளை ஏந்திக்கொள். நிராயுதபாணியாகப் போரிடாதே.” 

உதயசந்திரன் சிரித்தபடியே திரும்பிப் பார்த்தான். மேடையில் சிறுவன் பல்லவமல்லன் நின்றுகொண்டு, மீண்டும் கையை ஆட்டி, அதையே சொன்னான். உதயசந்திரன் சிரித்தபடியே, “எனக்கு ஆயுதம் தேவையில்லை. என்னுடைய கைகளும் கால்களுமே எனக்கு ஆயுதங்கள்” என்று கூறிவிட்டு, அரங்கின் மையத்தை நோக்கி நடந்தான். 

மக்கள் பதை பதைத்தனர். “அந்த இளைஞனை தீர்த்துக் கட்டி விடுவார்கள் போலிருக்கிறதே” என்று சிலர் ஆற்றாமைப்பட்டனர். 

“தீர்த்துக் கட்ட வேண்டியதுதான். இளவரசரையே வலிய அழைத்தானே. எவ்வளவு அகம்பாவம்” என்று கூடச் சிலர் கறுவினர். “இளவரசர் நியாயமாகவா நடந்தார்? அவனடைந்த வெற்றியை ஒப்புக் கொள்ள மறுத்தது அநியாயந்தானே. அவரை அவன் வலிய அழைத்ததில் என்ன தவறு? வீரப் போட்டியில் ராஜவம்சம் என்ன, சாதாரண வம்சம் என்ன? வீரத்தில் ராஜ வீரம் பிரஜை வீரம் என்றா இருக்கிறது?” என்று யாரோ ஒருவன் கூறினான். 

சற்று நேரத்தில் கூட்டத்தினரிடையே தோன்றியிருந்த சலசலப்பு நின்று விட்டது. எல்லோருடைய கவனமும் அரங்கத்தில் நிலைத்து நின்றது. 

வாளேந்தி நின்ற வீரர்கள் இருவரும் உதயசந்திரனைத் தாக்க ஆயத்தமானார்கள். உதயசந்திரன் அவர்களுக்கு முன்னே நிராயுதபாணியாக நின்றான். இரண்டு ஓநாய் களுக்கிடையே அழகான ஒரு முயல் குட்டி நிற்பது போலிருந்தது. ஆனால் இந்த முயல் குட்டி எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது! தாக்குதலை எதிர்நோக்கித் தயாராயிருந்தான் உதயசந்திரன். இரு பல்லவ வீரர்களும் ஒரே சமயத்தில் அவன் மீது வாட்களை வீசியபோது, உதயசந்திரன் சட்டெனக் குனிந்து விலகவே, இரு வாட்களின் வீச்சும் வெற்று வீச்சாகி, ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. வாள் வீரர்கள் சினம் கொண்டு மீண்டும் தாக்கத் தொடங்கினர். 

மக்கள் மிகுந்த வியப்போடும், பீதியோடும் கவனித் துக்கொண்டிருந்தனர். எந்தக் கணத்திலும் உதயசந்திரனின் உடல் வெட்டுண்டு கீழே சாயலாம் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு எதிராகப் போர் நீண்டுகொண்டிருந்தது. 

”ஓ…. அந்த இளைஞன் மந்திர சக்தி நிறைந்தவனா யிருக்க வேண்டும். இல்லையென்றால், இரண்டு வாட்களின் வீச்சையும் எப்படி சமாளிக்கமுடியும் ?” என்று கூட்டத்தில் யாரோ ஒருவன் வியந்தான். 

நேரம் ஆக ஆக, போரின் தன்மை பயங்கரமாக மாறியது. வாள் வீரர்கள் மிகுந்த ஆக்ரோஷத்தோடு தாக்கினார்கள். ஆனால் அவர்களுடைய பாய்ச்சல்கள் அனைத்தும் வீணாகிக்கொண்டிருந்தன. வாள் வீரர்கள் இருவரும் களைப்படையத் தொடங்கினர். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வாளை ஓங்கும் போது ஓர் இடத்தில் தென்படும் உதயசந்திரன், வாளை வீசும்போது வேறு இடத்தில் போய் நிற்கும் விந்தையை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

மக்களுக்கு வியப்புத் தாளவில்லை. அவர்களால் நம்பக் கூட முடியவில்லை. ஏதோ ஜாலவித்தை நடைபெறுவதைப் போல் விழி பிதுங்கப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்படி ஒரு போர் முறையை அவர்கள் பார்த்ததுமில்லை, கேள்விப்பட்டதுமில்லை. 

உதயசந்திரனின் கைகளும் கால்களும் எப்படியெல்லாமோ இயங்கின. சில சமயம் உயரத் துள்ளினான். சில சமயம் ஒரு காலை ஊன்றி மறுகாலைத் தூக்கியபோது, எதிரி எகிறிப் போய் விழுந்ததைக் கண்டு பிரமிப்பாயிருந்தது. 

பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தான், உதயசந்திரன். சற்று நேரம் தற்காப்புப் பாணியில் இயங்கிக் கொண்டிருந் தவன், சட்டென்று போரின் பாணியை மாற்றினான். திடீரென்று அந்தரத்தில் துள்ளினான். மறுகணம், வாள் வீரர்களின் கைகளிலிருந்த வாட்கள் எகிறிப் போய்த் தூர விழுந்தன. 


மைதானம் முழுவதும் கரகோஷம் எழுந்தது. உணர்ச்சிப் பெருக்கால் பலர் துள்ளிக் குதித்தனர். பெண்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. 

வாள் வீரர்கள் இருவரும் பாய்ந்து சென்று வாட்களை எடுப்பதற்குள் உதயசந்திரன், அவர்கள் மீது பாய்ந்தான். இரு வீரர்களும் துடித்துத் துள்ளித் தூர விழுந்தனர். ஒரு வீரன், விழுந்த வேகத்தோடு எழுந்து விட்டான். இன்னொரு வன் குப்புற விழுந்து சற்றுநேரம் அப்படியே கிடந்தான். எழுந்த வீரனைத் தாக்கத் தயாரானான், உதயசந்திரன். அந்த வீரன், சற்று தூரத்தில் விழுந்து கிடந்த வாளினை எடுக்க முயன்றான். உதயசந்திரன் அவனை மறித்துக் கொண்டு அவன் மீது பாயப் பதிபோட்டான். 

குப்புற விழுந்து கிடந்த வீரன், மெல்லத் தலையைத் தூக்கிப் பார்த்தான். உதயசந்திரன் மறுபக்கமாகத் திரும்பி மற்றவனை எதிர்க்கத் தயாராக நின்றதைக் கண்டதும், எட்டிய தூரத்தில் கிடந்த வாளினைப் பற்றியவாறு துள்ளி எழுந்து உதயசந்திரனின் பின்புறத்தில் பாய்ந்தான். 

மக்கள், “ஐயோ, ஐயோ” என்று அலறினார்கள். “பின்னால் பார், பின்னால் பார்” என்று மாணவர்கள் கூச்சலிட்டனர். 

உதயசந்திரன் நிலமையைப் புரிந்துக் கொண்டு, பின் பக்கம் வந்தவனைத் தன் காலால் எவ்வித் தாக்குவதற்குள், அவனுடைய இடது தோளில் பின்னாலிருந்து பாய்ந்த வாள், ஆழப்பதிந்துவிட்டது. 

மக்கள், “ஆஹா…ஹா…” என்று கூக்குரலிட்டனர். 

உதயசந்திரன் தோளை வலது கையால் பற்றியபடியே சட்டெனத் திரும்பித் துள்ளிக் குதித்து, பின்னால் தாக்கியவனின் முகத்தில் காலால் உதைத்தான். இடி மாதிரி விழுந்த உதையினால் அந்த வீரன் மண்டை உடைந்து, மூளை அந்த ரத்தில் சிதறியது. மறுகணம், உதயசந்திரனும் மயங்கிக் கீழே விழுந்தான். தோளிலிருந்து இரத்தம் பொங்கி வழிந்து தரையை நனைத்தது. எஞ்சியிருந்த வீரன் பாய்ந்து கீழே கிடந்த வாளினை எடுத்துக் கொண்டு குருதிக்குள் மயங்கிக் கிடந்த உதயசந்திரனை நெருங்கினான். ஒரு கணம் நிமிர்ந்து மேடையிலிருந்த இளவரசனைப் பார்த்தான். இளவரசன், தலையை அசைத்தான். மறுகணம், அந்த வீரன் உதயசந்திரனைக் கொல்ல வாளினை ஓங்கினான். 

திகைப்பினால் மைதானமே ஊமையாகக் கிடந்தது. அப்போது, “நிறுத்து…” என்று மேடையிலிருந்து ஓர் உரத்த குரல் கேட்டது. சிறுவன் பல்லவ மல்லன் எழுந்து நின்றவாறு கோபத்துடன் கூறினான். “நிறுத்து. பின்னாலிருந்து தாக்கியது அநியாயம். கீழே மயங்கி விழுந்தவனைத் தொடாதே. வெளியே போ…” 

வாளை ஓங்கி நின்ற வீரன், திகைத்தபடி நின்றான். மாணவர்கள் பக்கமிருந்து, “போ வெளியே… விலகிப்போ” என்று கூச்சல் கிளம்பியது. 

“அநியாயம்… பின்னாலிருந்து தாக்கியது அநியாயம்” என்று மக்கள் கூக்குரலிட்டனர். 

மாணவர்கள் பலர், தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து அரங்கத்துக்குள் செல்ல முயன்றார்கள். காவலர்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்கள். 

மைதானத்தில் பெரும் கலகம் விளைந்துவிடும் போலிருந்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட முதன் மந்திரி, அரங்கில் வாளேந்தி நின்றுகொண்டிருந்த வீரனை நோக்கி, 

“அப்பால் போ சீக்கிரம்” என்று உத்தரவிட்டார். 

இளவரசன், கோபத்துடன் திரும்பி, முதன் மந்திரியை வெறிக்கப் பார்த்தான். அரங்கத்தில் நின்ற வாள் வீரன், சற்றுத் தயங்கவே, முதன் மந்திரி கோபத்தில் கர்ஜித்தார்: “வீரனே, உடனே வெளியே போ. உம், போ சீக்கிரம்.” 

வாள் வீரன் தலைகுனிந்தபடியே அரங்கத்தை விட்டு விலகிச்சென்றான். 

பார்வையாளர்களிடையே பரபரப்பும், குழப்பமும் தோன்றி விட்டன. லீனா, மயங்கி டெங்லீயின் மனைவி மீது சாய்ந்து விட்டாள். ராஜன் நம்பூதிரி, பதற்றமடைந்தவனாய் டெங்லீயைப் பார்த்தான். 

“வா, அவனை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடலாம். விரைவில் மருந்திட வேண்டும். வா, போகலாம்” என்று அவனிடம் கூறி எழுந்த டெங்லீ, தம் மனைவியைப்பார்த்து லீனாவைப் பத்திரமாகக் கூட்டிக்கொண்டு இரதத்துக்கு வருமாறு கூறிவிட்டு, போட்டி அரங்கை நோக்கி விரைந்தார். அவருக்குப் பின்னே பதற்றத்துடன் ராஜன் நம்பூதிரி ஓடினான். 

17. முதன் மந்திரிக்கு ஆபத்து 

போட்டி அரங்கில் விழுந்து கிடந்த உதயசந்திரனை டெங்லீ தம் வீட்டுக்கு விரைந்து எடுத்துச் சென்றார். வைத்தியரைத் தேடி அவர் சென்றிருந்தபோது, முதன் மந்திரி அனுப்பி வைத்த ஒரு வைத்தியர், பல்லக்கில் வந்து இறங்கி னார். உதயசந்திரனைச் சோதித்துப்பார்த்துவிட்டு, தோளில் ஏற்பட்டிருந்த வெட்டுக்காயத்துக்கு மருந்திட்டுக் கட்டினார். “காயம் பலமாயிருந்தாலும், ஆபத்தில்லை. விஷம் தோய்ந்த வாள். அதனால்தான் மயக்கம்” என்றார். 

“மயக்கம் தெளிய நேரமாகுமோ?” என்று லீனா, கேட்டாள். 

“ஆகலாம். இரத்தம் அதிகமாகக் கொட்டியிருக்கிறது. நாடி பலவீனமாயிருக்கிறது. ஒரு பச்சிலை தருகிறேன். ஒரு நாழிகைக்கு ஒரு முறை இலையைக் கசக்கி மூக்கினுள் இரண்டு சொட்டு விடுங்கள். பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை” என்றார் வைத்தியர். 

அப்போது புத்தகடிகை மாணவர்கள் சிலரும், கடிகை யின் வைத்தியப் பிரிவைச் சேர்ந்த மகாபண்டிதர் ஞான பாலரும் வந்தனர். ஞானபாலரைக் கண்டதும், மந்திரியின் வைத்தியர் பணிவுடன் வணங்கி, உதயசந்திரனுக்குத் தாம் பிரயோகித்திருந்த மருந்தைப் பற்றிக் கூறினார். பிறகு தோளில் கட்டியிருந்த கட்டை அவிழ்த்துக் காட்டினார். உதயசந்திரனின் நாடியைப் பிடித்துப் பார்த்து விட்டு ஞானபாலர் திருப்தியடைந்தார். பிறகு, மந்திரியின் வைத்தி யரிடம், “இவனைக் கடிகைக்கு எடுத்துக் செல்கிறோம்” என்றார். 

“இங்கேயே இருக்கட்டும். நாங்கள் நன்றாக கவனித் துக்கொள்வோம்” என்றாள், லீனா. 

“இவர் எங்கள் கடிகையைச் சேர்ந்தவர். எங்கள் வைத் திய நிலையத்துக்குக் கொண்டு போய் நாங்கள் நன்றாகக் கவனிப்போம்” என்றான் ஒரு மாணவன். 

“இங்கு இவருக்கு எவ்வித அசௌகரியமும் இராது” என்றாள் லீனா. 

அப்போது டெங்லீ, ஒரு வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்தார். ஏற்கெனவே, காஞ்சி நகரில் சிறந்த வைத்தியர்கள் இருவர் அங்கிருந்ததைக் கண்டு பெரு மகிழ்ச்சி கொண்டார். 

உதயசந்திரனைக் கடிகைக்கு எடுத்துச் செல்வது பற்றி ஞானபாலர் கூறியதும், டெங்லீ சற்று யோசித்தார். லீனா சட்டென்று, “நாங்கள் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்வோம்” என்றாள். டெங்லீ, அவள் கூறியதை ஆமோதித்தார்.ஞானபாலர் புன்முறுவலுடன் லீனாவைப் பார்த்து, “நோயாளிக்கு ஒரு பெண்ணைப்போல் வேறு யாரும் சிறந்த பணிவிடை செய்துவிட முடியாது” என்று கூறி விடைபெற்றார். 

கடிகையைச் சேர்ந்தவர்கள் சென்ற பிறகு, முதன் மந்திரியின் வைத்தியர் சற்று நேரம் அங்கிருந்து கவனித்து விட்டு, மாலையில் வந்து பார்ப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார். போகும்போது, அருகிலிருந்த ராஜன் நம்பூதிரியிடம், “இவனைப் படுக்கையை விட்டு எழுந்திராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எழுந்தால் மீண்டும் மயக்கம் வரும். ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்” என்றார். 

மூன்று நாழிகைகளுக்குப் பிறகு ஓர் அலங்காரப் பல்லக்கு டெங்லீயின் வீட்டு முன்பு இறங்கியது. டெங்லீ, பல்லக்கை நெருங்கியதும், அதிலிருந்து இறங்கிய ஒரு பருத்த மனிதர், பல்லக்கின் அருகிலேயே நின்றார். பல்லக்கு தூக்கிகளில் ஒருவன் டெங்லீயை நெருங்கி, “அரண்மனை வைத்தியர் வந்திருக்கிறார்” என்றான். 

அதன் பிறகு, வைத்தியர், பல்லக்கை விட்டு விலகி டெங்லீயின் அருகே சென்றார். ஏற்கனவே, முதன் மந்திரி யின் வைத்தியர் வந்துவிட்டுப் போனதை அறிந்ததும், அரண்மனை வைத்தியரின் முகம் சுருங்கியது. பிறகு அலட்சியமாக, “சின்ன ராணியார் அனுப்பி வைத்ததால் வந்தேன்” என்று கூறிவிட்டுப் பல்லக்கை நோக்கி நடந்தார். 

“உள்ளே வந்து நோயாளியைப் பார்த்துவிட்டுச் சொன்றால் என்ன குறைந்து விடும் ? அரண்மனை வைத்தியர் என்னும் திமிர்” என்றான், அருகே நின்ற ராஜன் நம்பூதிரி. 

“அரண்மனை வைத்தியரல்லவா, அப்படித்தானிருப்பார்” என்றார், டெங்லீ. “இந்த மாதிரி ஆசாமிகள் வைத் தியம் செய்வதைவிட அதிகாரம்தான் அதிகம் செய்வார்கள். இவர்களிடம் வைத்தியம் செய்யாமலிருப்பதே மேல். இவர்களால் நோயாளிக்குத் தான் இடைஞ்சல்” என்றார். 

உதயசந்திரனுக்கு மறுநாட் காலையில்தான் மயக்கம் தெளியத் தொடங்கியது. மிகவும் சோர்ந்து போயிருந்தான். தனக்கு நேர்ந்ததைப் பற்றிய நினைவு வந்ததும், பரபரப் புடன் எழுந்திருக்க முயன்றான். அருகிலிருந்த லீனா, அவனைத் தடுத்து மீண்டும் படுக்க வைத்தாள். 

“என்னை இங்கேயா எடுத்து வந்தீர்கள். கடிகையில் சேர்த்திருக்கலாமே” என்றான். 

“ஏன், நான் கவனித்துக் கொள்ள மாட்டேனா?” என்றாள், லீனா. அவளுடைய அன்பு அவனை நெகிழ வைத்தது. 

“என்னால் உங்கள் எல்லாருக்கும் சங்கடம்.” 

“சங்கடம் ஏதுமில்லை. முதன் மந்திரியின் வைத்தியர் வந்து பார்த்துக் கொள்கிறார்.” 

திடீரென்று உதயசந்திரன் பதற்றமடைந்தான். 

“இப்போது என்ன நேரம்? மாலை தானே?” என்று கேட்டுக் கொண்டே எழுந்திருக்க முயன்றான். 

“பலவீனமாயிருக்கிறீர்கள். எழுந்திருக்கக் கூடாது” என்று தடுத்தாள், லீனா. 

“நான் நன்றாகத்தானிருக்கிறேன். இப்போது நேரம் என்ன?” 

“நேரம் தெரிந்து என்ன செய்யப் போகிறீர்கள்? இப்போது காலை நேரம்.” 

“ஐயோ, காலை நேரமா? எத்தனை நாளாக மயங்கி யிருந்தேன்?” 

“பதற்றமடையாதீர்கள். உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. நேற்று நண்பகலில் காயமடைந்து விழுந்தீர்கள்.” 

“நான் உடனே வெளியே போக வேண்டும். முக்கி மான வேலை இருக்கிறது” என்று கூறியவாறே உதயசந்திரன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்தான். லீனா, தடுக்க முனைந்தாள். அவன் கட்டிலிலிருந்து இறங்கவும் முயன்றான். 

“எழுந்திருக்கக் கூடாது என்று வைத்தியர் சொல்லி யிருக்கிறார்” என்றாள், லீனா. 

“வைத்தியருக்கு ஒன்றும் தெரியாது” என்று கூறிக் கொண்டே, எழுந்து நின்றான். நின்றதுமே மயக்கம் வருவது போன்ற உணர்வு தோன்றியது. கண்கள் இருண்டன. மீண்டும் கட்டிலில் அமர்ந்தான். கண்களை மூடிக்கொண்டான். லீனா பயத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த டெங்லீயின் மனைவி, பதற்றமடைந்தவளாய், “ஐயோ எழுந்து உட்கார்ந்திருக்கிறானே, எழுந்தால் மயக்கம் வரும் என்று வைத்தியர் எச்சரித்தாரே” என்று சீன மொழியில் சொன்னாள். 

“கேட்காமல் எழுந்திருக்கிறார்” என்றாள் லீனா.

அப்போது ராஜன் நம்பூதிரி உள்ளே வரவே, லீனா, தைரியமடைந்தாள். “உங்கள் நண்பர் சொன்னால் கேட்பதில்லை. எழுந்திருக்கிறார்” என்றாள். 

ராஜன் நம்பூதிரி விரைந்து சென்று, உதயசந்திரனின் தோளை அணைத்தவாறு மெல்லப் படுக்க வைத்தான். உதயசந்திரனின் படபடப்பு அடங்கவில்லை. 

“ராஜன், நான் உடனே முதல் மந்திரியைப் பார்க்க வேண்டும்” என்றான். 

ராஜன் நம்பூதிரி சிரித்தான். 

”எதற்கு? போட்டியில் அறிவித்த ஆயிரம் பொற்காசுகளை வாங்கவா?” 

“பெரிய இரகசியம். நீயாவது முதன் மந்திரியைப் போய் உடனே சந்திக்க வேண்டும்.” 

”நினைத்த நேரத்தில் முதன்மந்திரியைச் சந்திக்க முடியுமா? இப்போது முதன்மந்திரி போட்டி மைதானத்தில் போட்டிகளை ரசித்துக் கொண்டிருப்பார்” என்றான், ராஜன் நம்பூதிரி. 

உதயசந்திரன் மீண்டும் எழுந்திருக்க முயன்றான். ராஜன் நம்பூதிரி, அவனை அழுத்திப் பிடித்துக்கொண்டான். அப்போது உள்ளே வந்த வைத்தியர், “என்ன எழுந்து ஓட வேண்டும் என்கிறானா? இன்று படுக்கையை விட்டு நகரவே கூடாது” என்றார், கண்டிப்புடன். 

“இவர் முதன் மந்திரியின் வைத்தியர். முதன்மந்திரியே உனக்காக நேற்று இவரை உடனே அனுப்பி வைத்தார்” என்றான், ராஜன் நம்பூதிரி. 

இதைக் கேட்டதும் உதயசந்திரனின் பரபரப்பு அதிகமாகியது. “வைத்தியரே, எனக்கு வைத்தியம் பிறகு செய்து கொள்ளலாம். தாங்கள் உடனே முதன் மந்திரியைச் சந்திக்க வேண்டும்” என்றான். 

வைத்தியர், புரியாமல் அவனைப் பார்த்து விழித்தார். 

“முதன் மந்திரிக்கு ஆபத்து. போட்டி மைதானத்தில் தான் அவருக்கு ஆபத்து காத்திருக்கிறது. நீங்கள் உடனே அவரைச் சந்திக்க வேண்டும்.” 

வைத்தியர் அவனைச் சந்தேகத்தோடு பார்த்தார். அருகில் அமர்ந்து நாடித் துடிப்பைச் சோதிக்க அவன் கையைப் பற்றினார். உதயசந்திரன், வெடுக்கென்று கையை விடுவித்துக் கொண்டு, “நான் ஜன்னி கண்டு பிதற்றுகிறேனா என்று நினைக்க வேண்டாம். உண்மையிலேயே ஒரு பெரிய சதி பற்றிய இரகசியம் எனக்குத் தெரியும். உங்களுடைய மந்திரியைக் காப்பாற்ற நினைத்தால், உடனே ஓடிப்போய் அவரை எச்சரியுங்கள்” என்றான். 

வைத்தியர் திகைத்தார். “இந்தச் சமயத்தில், முதன் மந்திரியைச் சந்திக்க முடியாதே” என்றார். 

“சந்தித்தே ஆக வேண்டும்.” 

“அவருடைய மெய்க்காவலர்களில் யாரையாவது சந்திக்க முடியும்.” 

“அதுபோதும். வைத்தியரே, நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள், இது பரம இரகசியம். உடனே, போய், மெய்க்காப்பாளனிடம் சொல்லி முதன் மந்திரியைக் காப்பாற்றச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு, சதித் திட்டம் முழுவதையும் விவரித்தான். பிறகு, “ஐயோ, இது பரம இரகசியம். ஜாக்கிரதை. இது உங்களுக்குத் தெரியும் என்று வெளியே தெரிந்தாலே உங்கள் உயிருக்கு ஆபத்து. சீக்கிரம் செல்லுங்கள்” என்றான். 

சில நொடிகளில் வைத்தியரின் பல்லக்கு, போட்டி மைதானத்தை நோக்கி விரைந்தது. வைத்தியர் சென்ற பிறகுதான் உதயசந்திரன் அமைதியடைந்தான். ராஜன் நம்பூதிரி திகைப்புடன், “இவ்வளவு இரகசியம் உனக்கு எப்படித் தெரிந்தது? இதை நேற்றே நீ, மைதானத்தில் முதன்மந்திரிக்குத் தெரியும்படியாகச் செய்திருக்கலாமே” என்றான். 

“நேற்றுவரை இந்தச் சதி பற்றி நான் அக்கறையே கொள்ளவில்லை. ஏதோ ராஜாங்க விஷயம் என்று இருந்து விட்டேன். நேற்று மைதானத்தில் முதன் மந்திரியை நேரில் கண்ட பிறகு தான் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று தோன்றியது” என்றான் உதயசந்திரன். பிறகு சொன்னான் “முதன் மந்திரிக்கு எவ்வளவு உயர்ந்த மனசு. எனக்காகத் தம்முடைய வைத்தியரையே அனுப்பி வைத்திருக்கிறாரே! ஓ, எவ்வளவு பரந்த மனம் ! என்னுடைய நன்றிக்கடனைச் செலுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன்.” 

ராஜன் நம்பூதிரியின் கையைப் பற்றிக் கொண்டு, “எனக்கு ஒரு உதவி செய்வாயா?” என்று கேட்டான். 

ராஜன் நம்பூதிரி அவனை வியப்புடன் பார்த்தான். 

“மைதானத்துக்குப் போய் என்ன நடக்கிறது என்று பார்த்து வந்து சொல்லேன். முதன்மந்திரிக்கு என்னாகுமோ என்று மனம் பதறுகிறது” என்றான், உதயசந்திரன். 

“சரி, நான் போய் பார்த்து வருகிறேன். வைத்தியர் போய் எச்சரித்துவிடுவார். மந்திரிக்கு ஒன்றும் நேராது. நான் உனக்கு நல்ல செய்தி கொண்டு வருகிறேன். நிம்மதியாக இரு” என்று கூறிவிட்டு வெளியே போக எழுந்தான், ராஜன் நம்பூதிரி. லீனாவைப் பார்த்து, “போய்விட்டு வந்துவிடு கிறேன். அவன் எழுந்து நடவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறிவிட்டு வெளியே விரைந்தான். 


மாலையில் முதன்மந்திரி தரணி கொண்ட போசரின் மாளிகையைச் சுற்றி இரதங்களும், பல்லக்குகளும் காணப் பட்டன. மாளிகையின் உள்ளே, நகரப் பிரமுகர்களும், கோட்டத் தலைவர்களும் கூடியிருந்தார்கள். எல்லாரு டைய முகங்களிலும் கவலை படிந்திருந்தது. முதன்மந்திரி, எவ்விதச் சஞ்சலமும் இன்றி, புன்முறுவலோடிருந்தார். 

“இதை இப்படியே விட்டுவிடக் கூடாது” என்றார் ஜெயவர்மர். 

முதன் மந்திரி, சிரித்தார். “இதை ஆராய வேண்டிய அவசியமே இல்லை. சதியின் மூலகர்த்தா யார் என்பதை நானே யூகித்து விட்டேன்” என்றார். 

“அப்படியானால், உடனே சிறைப்பிடித்துத் தண்டித்து விடவேண்டியது தானே. இதில் தாமதம் ஏன் ? யாரென்று கூறுங்கள். இப்போதே சிறைப்பிடித்து விடுகிறேன்.” 

“இப்போது அதற்கு அவசரம் இல்லை. அதற்கான காலம் நெருங்கவில்லை. நீங்கள் யாரும் இதுபற்றிப் பயம் கொள்ள வேண்டாம்” என்றார், முதன்மந்திரி. 

“நல்ல வேளை, உங்கள் அந்தரங்க மெய்க்காப்பாளன், தக்க சமயத்தில் உங்களைத் தூரத் தள்ளியிருக்காவிட்டால், என்ன ஆகியிருக்கும். ஓ… உங்களை நோக்கிப் பாய்ந்து வந்த அம்பு, உங்களுக்குப்பின்னாலிருந்த மரத்தூணில் எவ்வளவு ஆழமாகப் பதிந்து நின்றது!” என்றார், இரணியவர்மர், கவலையுடன். 

“அந்தச் சம்பவத்துக்குச் சில வினாடிகளுக்கு முன்பு தான் சதியின் விவரம் என் மெய்க்காப்பாளனுக்குத் தெரிய வந்தது. என்னிடம் கூட அவன் அது பற்றிச் சொல்ல அவகாசம் இல்லை. சதிகாரர்கள், மிகக் கச்சிதமாகத்தான் திட்டமிட்டிருக்கிறார்கள். கடவுள் பிரார்த்தனை முடிந்து, மூன்றாவது முறையாகக் கொம்பு ஊதி முடிக்கும் போது அம்பு எய்வதாக ஏற்பாடு. அம்பு எய்தவனையும் அவன் மரத்திலிருந்து இறங்குவதற்குள் சிறைப்பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டான், மெய்க்காப்பாளன்” என்றார், முதன் மந்திரி. எல்லாரும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். 

“எய்தவனைப் பிடித்தாகிவிட்டதா? அவனிடமிருந்து உண்மையைக் கறந்து விடலாமே” என்றார், ஜெயவர்மர். 

“அவன் உயிரோடில்லையே. அவனைச் சிறைப் பிடித்துக்கொண்டு சென்றபோது, குளக்கரைத் தோப்பின் அருகே எங்கிருந்தோ ஒரு அம்பு வந்து அவன் மீது பாய்ந்து விட்டது. அவன் தான் ஒரே சாட்சி. சதிகாரர்கள், கெட்டிக்காரர்கள்” என்று கூறிச் சிரித்தார், முதன் மந்திரி. பிறகு, “மகாராணி என்னைக் கூப்பிட்டனுப்பியிருக்கிறார். இப்போது அங்குதான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றார். 

எல்லாரும் விடைபெற்றுச் சென்றதும், கடைசியாக விடைபெற்ற இரணியவர்மரிடம், “இன்று இரவு இரண்டு குற்றவாளிகளை உங்கள் மாளிகைக்கு அனுப்பி வைக் கிறேன். உங்கள் பாதுகாப்பில் இருக்கட்டும்” என்றார் முதன் மந்திரி. 

“யார் அவர்கள்?” 

“இந்தச் சதியில் சம்பந்தப்பட்டவர்கள் தாம். ஜாக்கிர தையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, முதன் மந்திரி, அரண்மனைக்குச் செல்வதற்காகப்பல்லக்கில் ஏறினார். 

முதன் மந்திரியைக் கண்டதும் மகாராணி, “கடவுள் கிருபையால் உங்களுக்கு ஒன்றும் நேரவில்லை. மைதானத்தில் நடந்ததைக் கண்டதிலிருந்து என் மனமே சரியில்லை” என்றாள். 

“கடவுளுடைய கிருபையும், தங்களுடைய அபிமான மும் தாம் என்னைக் காப்பாற்றின” என்றார், முதன் மந்திரி. 

“குற்றவாளியை உடனே பிடித்துத் தண்டிக்க வேண்டும்” என்றாள், மகாராணி, கோபத்துடன். 

“ஆகட்டும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கிறேன்.” 

“காஞ்சியிலேயே இப்படிச் சதி நடப்பதென்றால், எவ்வளவு துணிச்சல் இருக்கவேண்டும். இனி, தாங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்” என்றாள் மகாராணி. 

முதன் மந்திரி சிரித்தார். “தேவி, ராஜ்ய காரியங்களில் இருப்பவர்கள் இதையெல்லாம் எதிர்பார்த்துத் தானிருக்க வேண்டும். இதற்கெல்லாம் அஞ்சி ஒளிந்தால், ஆட்சி நடைபெற முடியாது” என்றார். 

“அரங்கத்தில் நேற்று ஒரு வீரன் விழுந்தானே, நலமாயிருக்கிறானா? உங்கள் வைத்தியர் தாம் கவனித்துக் கொள்கிறார் போலிருக்கிறது” 

“ஆபத்து ஒன்றுமில்லை. ஆனாலும் எழுந்து நடமாட நாலைந்து நாட்களாகும்.” 

“போட்டி நல்ல முறையில் நிறைவு பெறாமல், குழப்பத்தில் முடிந்தது தான் வருத்தமாயிருக்கிறது. காஞ்சி நகரில் முதன் மந்திரிக்கு எதிராக இப்படி ஒரு நடவடி கையை நான் சகிக்க முடியாது. நாட்டில் இந்த மாதிரி நடப்பதை மன்னிக்க முடியாது. மக்களிடையே பயமும், மரியாதையும் குறைந்துவருகின்றன. ஊர்த்தலைவர்களும், கோட்டத்தலைவர்களும் கூட ராஜாங்க உத்தரவுகளை சரி வர மதிக்கவில்லை. பல இடங்களிலிருந்து தகவல்கள் வருகின்றனவே” என்றார் மகாராணி கவலையுடன். 

“எனக்கும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. சில வணிகர்களின் போக்கு சரியாக இல்லை. அவர்களுடைய பேராசையினால் விலைவாசி ஏறிக்கொண்டிருக்கிறது. விலைவாசி ஏறும்போது மக்கள் அதிருப்தியடைகின்றனர்.” 

“வணிகர்கள் நஷ்டத்தில் விற்கவேண்டும் என்கிறீர்களா?” என்றார் ராணி. 

“கொள்ளை லாபம் வைக்கிறார்கள். கொள்முதல் விலையில் அரைக்கால் பாகம் தான் கூடுதல் லாபம் பெறலாம் என்ற விதியைத் திடீரென்று எடுத்துவிட்டீர்கள். அது தீமையை விளைவிக்கும் என்று மந்திரிசபையில் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். தாங்கள் கேட்க மறுத்து விட்டீர்கள்” என்றார் மந்திரி. 

“வணிகர்களால் அரசுக்கு ஆதாயம் இருக்கும்போது அவர்களுடைய விருப்பத்தை நாம் கொஞ்சம் கவனிக்க வேண்டாமா?” 

“அதற்காகக் கொள்ளை லாபமடிக்க அனுமதிக்கக் கூடாது, தேவி. இளவரசர் ஒரு குறிப்பிட்ட வணிகருக்கு சுங்க வரியிலிருந்து விலக்களித்திருக்கிறார்.” 

“அவனுக்கு வேண்டியவர்களுக்கு சலுகை காட்டி யிருப்பான்” என்றாள் மகாராணி. 

“தேவி, எந்த வரி பற்றியும் மந்திரி சபையின் ஆலோச னையின் பேரில் தான் முடிவு எடுக்கப்பட வேண்டும். வரி விஷயத்தில் பாரபட்சம் கூடாது. ஒரு வணிகருக்கு மட்டும் சலுகை என்றால் அது, மற்ற வணிகர்களையும் பாதிக்கும். நாட்டுப் பொருளாதாரம் சீர்கெட்டுவிடும்.” 

“மந்திரிசபை, என்னுடைய யோசனைக்காகத்தானே தவிர, வேறென்ன? எனக்கும் யோசிக்கும் திறன் உண்டு, முதன்மந்திரியாரே. என் மனசாட்சிப்படி தான் நான் நடப் பேன்” என்றாள், பிரேமவர்த்தினி, கோபத்துடன். பிறகு, 

“எல்லா ஊர்த்தலைவர்களையும், நாட்டார்களையும் பதவி நீக்கம் செய்யலாம் என்றிருக்கிறேன்” என்றாள். 

“ஆ…!” முதன் மந்திரி பதறிப்போனார். 

“தேவி, அப்படி ஏதாவது கட்டளை அனுப்பி விடாதீர்கள். காலம் காலமாக இருந்து வரும் ஆட்சி அமைப்பு இது. இதனுடைய கட்டுக்கோப்பை உடைத்து விட்டோமென்றால், ஆட்சியின் சீரே கெட்டுவிடும்” என்று பதற்றத்துடன் கூறினார், முதன்மந்திரி. 

“அரசின் கட்டளைகளை மதியாதவர்களை நான் மன்னிக்கத் தயாரில்லை. ஊர்த்தலைவர்களும், நாட்டார் களும் ஆட்சியின் கட்டளைகளை அந்தந்த இடங்களில் ஒழுங்காக நிறைவேற்றுகின்றனரா என்று கண்காணிப் பதற்குத்தானே இருக்கிறார்கள்.” 

“தேவி, அந்தத் தலைவர்கள் அனைவரும் ஊர் மக்களா லும் நகரத்து மக்களாலும் கோயில் சந்நிதியில் தெய்வ சாட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அந்தத் தலைவர் கள் அனைவரும் ஒழுக்கசீலர்கள். மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள். திடீரென்று அவர்களை நீக்கினால், மக்கள் கிளர்ந்தெழுவார்கள்.” 

“மக்கள், மக்கள், மக்கள். மக்களை ஆளத்தான் நானி ருக்கிறேனே தவிர, மக்கள் என்னை ஆள்வதற்காக அல்ல. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மந்திரியாரே, தாங்கள் வரவரக் கோழையாகிவிட்டீர்கள். வயதாகி விட்டது. மனத் தெம்பில்லை” என்று கோபத்தில் இரைந்தாள் பிரேம வர்த்தினி. 

“தேவி, நாட்டை ஆள்வதற்கு உடல் பலத்தைவிட மூளை பலந்தான் தேவை” என்றார், முதன் மந்திரி. 

“எனக்கு மூளை இல்லை என்கிறீர்களா?” கோபம் தணியாமலே கேட்டாள். 

“தேவி தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. எனக்கு உடலில் தெம்பில்லை என்றாலும், அறிவு தளர்ந்து விடவில்லை என்று கூற வந்தேன்” என்றார், புன்முறுவ லுடன். பிறகு, 

“அந்தத் தலைவர்களுக்கான பதவிக்காலம் முடிய இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன. அதன் பிறகு, மக்களே தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க விட்டு விடுவதுதான் நல்லது” என்றார். 

“என்னுடைய கட்டளைகளை மதிக்காதவர்கள் பதவியில் இருக்கக் கூடாது.” 

“அவர்களை நீக்கிவிட்டால், பதிலுக்கு வேறு தலைவர்கள் உடனே வேண்டுமே?” 

“நாமே தலைவர்களை நியமித்து அனுப்பிவிட்டால் போகிறது” என்றாள், பிரேமவர்த்தினி. 

“தேவி, இதுவரை தங்களால் மாற்றப்பட்ட விதி முறைகள் அனைத்தும் சக்ரவர்த்தி அமுலாக்கிக் கொண்டு வந்தவைகள்தாம். சக்ரவர்த்தியின் அனுமதியின்றி, பழக்கத்திலுள்ள சட்ட திட்டங்களை அனுசரிக்காம லிருப்பது உசிதமாக எனக்குப் படவில்லை.” 

“மாற்ற வேண்டிய சூழ்நிலை வரும்போது மாற்றித் தான் ஆகவேண்டும். ஒரே விதமான சட்டதிட்டங்கள் எல்லாக் காலத்துக்கும் பொருந்தாது. காலம் மாறும்போது, விதி முறைகளையும் நாம் மாற்றி யமைக்கத்தானே வேண்டும். மேலும், போர்க்களத்தி லிருக்கும் சக்கரவர்த்தியிடம் போய் இப்போது யோசனை கேட்க முடியுமா?” 

“அப்படி ஏதும் அவசரச் சூழ்நிலை ஏற்பட வில்லையே. மக்களுக்கு மன்னர் அளித்திருக்கும் சுதந்திரங் களைப் பறிக்கும்படியாக நாம் நடந்து கொள்வதே உசிதம் இல்லை என்பது என் கருத்து. மன்னர் திரும்பி வந்ததும் மந்திரிசபை மீது குற்றம் காணக் கூடாது தேவி.” 

“மக்களுக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுத்திருப்பதே தவறு. சுதந்திரத்தைப் பேணத் தெரியாத மக்களிடம் அதை அளிப்பதே ஆபத்து. மந்திரியாரே, ஏதாவது குறை இருக்குமானால், எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். மன்னருக்கு நான் பதில் சொல்லிக் கொள்கிறேன்” என்றாள், பிரேமவர்த்தினி. 

முதன் மந்திரி புன்னகைத்தவாறே, “மன்னருக்குத் தங்கள் மீதுள்ள அபிமானத்தை நானறிவேன் தேவி. ஆனால் இப்போது நாம் உண்டாக்கும் மாறுபாடுகளால் பின்னால் மன்னருக்குத் தாம் தர்மசங்கடம் ஏற்படும். நாம் செய்துவிட்ட தவறுகள் அனைத்தையும் திருத்த நீண்ட காலமாகும்” என்றார். பிறகு, மிகுந்த மனச்சோர்வுடன், “தேவி, தாங்கள் எடுக்க உத்தேசித்திருக்கும் இந்த முடிவு, நாடு முழுவதையும் பாதிக்கும். நாம் ஒரு போரில் ஈடுபட் டிருக்கும்போது, உள் நாட்டில் கலகம் ஏற்பட்டுவிடக் கூடாது. அப்படி ஏதாவது ஏற்பட்டால், நம்மால் சமாளிக்க முடியாது. சக்கரவர்த்தி இல்லாத இந்த நேரத்தில், நமக்குத் தேவையானது அமைதி. அதற்குக் குந்தகம் விளையும் படியான கட்டளைகளை நாம் தவிர்ப்பது நல்லது. முதன் மந்திரி என்னும் முறையில் நான் தங்களுக்குச் சொல்லும் யோசனை இது” என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டு எழுந்தார். 

அரண்மனையிலிருந்து அவர் வெளியேறியபோது, நன்றாக இருட்டிவிட்டது. மனத்தில் உற்சாகமில்லை. பல்லக்கு சற்று தூரம் சென்றதும், அருகில் குதிரைகளில் வந்துகொண்டிருந்த மெய்க்காப்பாளர்களிடம் பல்லக்கை, சீனத் தோப்புக்குக் கொண்டு செல்லும்படிப் பணித்தார். 

18. மகாராணியின் மனக்கலக்கம் 

வாசலில் குதிரைகளின் குளம்படி ஒலியும், ஆள் அரவமும் கேட்கவே, டெங்லீ ஒரு தீவட்டியை ஏந்தியவாறு வீட்டினுள்ளிருந்து வாசலுக்கு வந்தார். சற்று தூரத்தில் சிலர் தீவட்டி ஏந்தி நின்றதையும், ஒரு பல்லக்கு இறங்கி நின்ற தையும் அதைச் சுற்றி சில குதிரை வீரர்களிருந்ததையும் கண்டு திகைத்தபடி நின்றார். ஒரு வீரன் டெங்லீயை நெருங்கி, “முதன் மந்திரி வருகிறார்” என்றான். 

டெங்லீ பரபரப்புடன் பல்லக்கை நெருங்கி, முதன் மந்திரியை வரவேற்றார். டெங்லீக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. முதன்மந்திரியைக் கண்ட பதற்றத்தில் வாய் குழறியது. “தாங்கள் என் இல்லம் தேடி வந்தது என் பாக்கியம்” என்றார். 

“தாங்கள் தானே சீன வணிக சபையின் தலைவர் டெங்லீ ?” என்று கேட்டார், முதன்மந்திரி. 

“ஆமாம்” என்று கூறிவிட்டு மௌனமாக நின்றார். டெங்லீ. மந்திரியை வீட்டினுள்ளே கூப்பிடக்கூடத் தோன்றாமல் நின்றார். 

“தங்கள் வீட்டில்தானே அந்த வீரன்…?” என்று முதன் மந்திரி கேட்டார். 

“ஆமாம், வாருங்கள், வாருங்கள்” என்று அழைத்த வாறு தீவட்டியைப் பிடித்துக் கொண்டு முன்னே நடந்தார், டெங்லீ. 

வீட்டினுள் பெரிய அறை ஒன்றில் உதயசந்திரன் படுத் திருந்தான். லீனா அருகிலிருந்து வறுத்த தவிட்டினால் சூடு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தாள். அருகில் அகல் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அறையினுள்ளே டெங்லீயும், முதன்மந்திரியும் சென்றதும் லீனா திடுக்கிட்டு எழுந்தாள். தலையைத் தூக்கிப் பார்த்த உதயசந்திரன், முதன் மந்திரியைக் கண்டதும் பரபரப்படைந்து எழுந்திருக்க முயன்றான். முதன்மந்திரி பாய்ந்து சென்று அவன் தோளைப் பற்றி, “வேண்டாம், படுத்திரு” என்றார். 

உதயசந்திரன் உட்கார்ந்தபடியே முதன்மந்திரியைப் பார்த்து, “தங்களை வணங்கக்கூட முடியாதபடி தோளில் காயம்” என்றான். 

“உன் வணக்கத்தை உன் கண்களிலேயே பெற்று விட்டேன்” என்று கூறியபடியே அவனுடைய வலக்கரத் தைப்பற்றிக் கொண்டார். 

டெங்லீ, அவருக்காக ஓர் ஆசனத்தை எடுத்துப் போட்டார். முதன்மந்திரி அதில் அமராமல் உதயசந்திரனுக்கு அருகில் கட்டிலில் அமர்ந்து விட்டார். உதயசந்திரன் கூசினான். பல்லவ சாம்ராஜ்யத்தின் முதன்மந்திரி, தன் அருகில் அமர்ந்திருக்கிறாரே என்ற கூச்சம். 

“தம்பி, உனக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை” என்றார் முதன்மந்திரி. 

“நான்தான் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், ஐயா. தாங்கள் அரங்கத்தில் அந்த வீரனை விலகிச்செல்லும் படி உத்தரவிட்டிருக்கவில்லையென்றால், என்னை இரண்டு துண்டுகளாக்கி இருப்பான்” என்றான் உதய சந்திரன். 

“நீ காயம்பட்டு விழுந்த பிறகும் நினைவு வந்தவுடனே என்னைக் காப்பாற்ற வைத்தியரை அனுப்பி வைத்த உனக்கு நான் தான் நன்றி செலுத்த வேண்டும். உண்மை யிலேயே உன்னைக் காப்பாற்றியவன் பல்லவமல்லன் தான். அந்தச் சிறுவன்தான் முதலில் எழுந்து, உன் எதிரியைத் தடுத்தவன்” என்று கூறிய முதன்மந்திரி, திரும்பிப் பார்த்து ‘இவனை நான் அழைத்துச் சென்று கவனித்துக் கொள் கிறேன்” என்று டெங்லீயிடம் கூறினார். 

சட்டென்று லீனா, “நாங்கள் இங்கே நன்றாகத்தான் கவனித்துக் கொள்கிறோம்” என்றாள். 

முதன்மந்திரி திகைப்புற்றுத் திரும்பி அவளைப்பார்த் தார். பயத்தினால் அவளுடைய இமைகள் படபடத்தன. முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள். முதன்மந்திரியின் முகத்தில் புன்முறுவல் தோன்றியது. 

“உங்கள் மகளா?” என்று டெங்லீயிடம் கேட்டார். 

“பெற்ற மகள் அல்ல. என் வளர்ப்பு மகள்” என்றார் டெங்லீ. பிறகு அவளுடைய வரலாற்றைக் கூறினார். அதைக் கேட்ட முதன்மந்திரியின் கண்களில் இரக்கம் சுரந்தது. மிகுந்த அன்புடன் அவளைத் திரும்பிப் பார்த்தார். அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. 

“அழாதே அம்மா. டெங்லீ உன்னைக் கவனித்துக் கொள்வார்.நானும் உன்னை என் மகள் போல் கவனித்துக் கொள்வேன். பல்லவநாடு, உனக்கு சுபிட்சமளிக்கும்’ என்றார். பிறகு உதயசந்திரனிடம் திரும்பி, “உன்மீது அக்கறை உள்ளவர்கள் இங்கு இருக்கிறார்கள், உன்னை நன்றாகக் கவனித்துக் கொள்ள. என்னுடைய வைத்தியர் தினமும் இருமுறை வந்து கவனித்துக் கொள்வார்” என்றார். “உன் பெயர் என்ன சொன்னாய்?” என்று கேட்டார். 

“உதயசந்திர பூசான்.” 

“ஓ…நீ பூசான்வமிசத்தைச் சேர்ந்தவனா? மாமல்ல புரத்து தேவேந்திர பூசானின் வமிசமா நீ?”- மிகுந்த வியப் போடு கேட்டார், முதன் மந்திரி. 

“ஆமாம், ஐயா.” 

“தம்பி உன்னுடைய வமிசத்தின் பெருமைக்குத் தகுந்த படிதான் நடந்திருக்கிறாய், ஆதியில் நரசிம்மவர்ம பல்ல வரின் படை, சேனாபதி பரஞ்சோதியின் தலைமையில் வாதாபியை நோக்கிப் படையெடுத்துச் சென்றபோது, தேவேந்திர பூசான் தான் குதிரைப் படைக்குத் தலைமை தாங்கிச் சென்றார். உங்களுடைய வமிசம், பரம்பரையாகப் பல்லவ நாட்டுக்கு வீரத்தொண்டு செய்துவந்திருக்கிறது. பூசான் வமிசத்து வீரத்தையும் துணிச்சலையும் நேற்று போட்டி அரங்கில் கண்டேன்!” என்று கூறியபடி மிகுந்த வாஞ்சையுடன் உதயசந்திரன் கையைப் பற்றிக்கொண்டார். “நான் இதுவரை பார்த்தும் கேட்டும் இராத புது மாதிரியான போர் முறையைக் கையாண்டாயே! இதை எங்கே கற்றாய்?” என்று கேட்டார். 

“இலங்கைத் தீவில், சிகிரியா மலைக்குகைகளில் உள்ள சில பௌத்த பிக்ஷக்களுக்கு இந்தப் போர் முறை தெரியும். அவர்களிடம் நான் பத்து ஆண்டுகளாகப் பயின்றேன். சீன தேசத்துக்குச் சென்றிருக்கும் சில பௌத்த பிக்ஷுக்களுக்கும் இந்தப் போர் முறை தெரியும் ” என்றான் உதயசந்திரன். 

“அற்புதமான போர் முறை ! எவ்வளவு வேகம் எவ் வளவு நுணுக்கம் ! நினைக்கவே பிரமிப்பாயிருக்கிறது… நீ இதை பல்லவநாட்டுப் படை வீரர்களுக்குப் பயிற்சி யளிக்கலாமே.” 

“ஐயா, இந்தப் போர் முறை, தற்காப்புக்காகத்தானே தவிர, யாரையும் வலியச் சென்று தாக்குவதற்காக அல்ல. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே, அதுவும் நம் முடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய தருணத்தில் மட்டுமே, எதிரியை இந்த முறையில் கொல்ல லாம். எனக்கு இதைப் பயிற்றுவிக்க ஆரம்பித்தபோதே பிரமாணம் வாங்கினார்கள்.” 

“பௌத்தர்களுடைய தத்துவங்களும், நெறிகளும் மிகவும் உயர்ந்தவை. சிறந்த ஒரு போர் முறையைக் கண்டு பிடித்து, அதைத் தற்காப்புக்கு மட்டுமே பயன்படுத்தலாம் என்ற கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கும் அவர் களுடைய உயர்ந்த மனதுக்கு ஈடு சொல்ல இந்த உலகத்தில் வேறென்ன இருக்கிறது” என்று வியந்தார், முதன் மந்திரி. 

“பௌத்த ஞானிகள், கொல்லும் ஆயுதத்தைத் தீண்டக் கூடாது என்னும் கொள்கை இருப்பதால், ஆயுதமின்றியே தன்னைக் காத்துக் கொள்ள பயன்படுத்தும் ஒரு தற்காப்புப் பயிற்சி இது. இதைத் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே, அவர்களுடைய குணங்களைச் சோதித்த பிறகுதான் கற்றுக் கொடுக்கவேண்டும் என்னும் நியதியும் உண்டு.” 

”உனக்கு வேறு என்ன பயிற்சி உண்டு?” ”குதிரை ஏற்றம் மட்டும் தெரியும்.” 

“நீ பௌத்த மதத்தைச் சேர்ந்தவனா?“” 

“பத்து வயதுவரை என் பாட்டனாரால் சைவனாக வளர்க்கப்பட்டேன். பிக்ஷக்களின் பொறுப்பில் இலங்கை யிலிருந்த பத்து ஆண்டுகளும் பௌத்த நெறிகளின்படி வளர்க்கப்பட்டேன்” என்றான், உதயசந்திரன். 

“தம்பி உன்னை நினைக்க நினைக்க எனக்குப் பெருமை யாக இருக்கிறது. பல்லவநாடு உன்னை நன்கு பயன்படுத் திக் கொள்ளவேண்டும். வருங்காலம் உனக்குப் பிரகாசமா யிருக்கும். பூசான் வமிசத்துத் தொண்டும், தியாகமும் இந் நாட்டுப் பெருமையை இன்னும் உன் மூலமாக உயர்த்த லாம்” என்றார் முதன்மந்திரி உற்சாகத்துடன். 

அவருடைய புகழ்ச்சி, உதயசந்திரனுக்கு நாணத்தை உண்டு பண்ணியது. பேச்சை திசை திருப்பினான். 

‘ஐயா, அம்பெய்தவனைப் பிடித்து விட்டீர்களல்லவா?” 

”உடனேயே பிடித்து விட்டார்கள். ஆனால் அவனைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றபோது, சதி காரர்கள் மறைந்திருந்து அம்பெய்து அவனைக் கொன்று விட்டார்கள். அவன் இலங்கையிலிருந்து வந்தவன்.” 

“அவனோடு இலங்கையிலிருந்து வந்திருக்கும் மற்றவர்களைப் பிடித்து விசாரிக்கலாமே?” 

“அவன் பிடிபட்டான் என்று தெரிந்ததுமே அவனு டைய மற்ற இரு கூட்டாளிகளும் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டார்கள். 

“ஐயோ, அவர்கள் அகப்பட்டால் அவர்களையும் கொன்றுவிடுவார்களே. ஐயா, இந்தச் சதியே அரண்மனை யில் உருவானதுதான். தயவு செய்து, இதைப்பற்றி எப்படி நானறிந்தேன் என்பதை மட்டும் கேட்காதீர்கள்” என்றான் உதயசந்திரன். 

“அரண்மனையில் உருவான சதிதான் என்று நானும் யூகித்தேன். உன்னை இது பற்றி நான் விசாரிக்கப் போவ தில்லை. தப்பிய இலங்கை வீரர்கள் ஏரியை அடுத்தகாட்டுக் குள் ஒளிந்திருந்ததாகவும், என்னுடைய ஒற்றர்கள் பிடித்தி ருப்பதாகவும் சற்று முன்பு செய்தி கிடைத்தது. அவர்கள் என் பொறுப்பில் தாமிருப்பார்கள். சதி பற்றிய விசாரணை வரும்போது அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நீயும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். சதி பற்றிய விவரம் உனக்குத் தெரியும் என்பது வெளியே தெரிந்தால், உன் உயிருக்கும் ஆபத்து” என்று முதன்மந்திரி எச்சரித்தார். 

அங்கிருந்து முதன்மந்திரி விடை பெற்றபோது, லீனாவிடம், “இவனை உன் பொறுப்பில் விட்டுச் செல் கிறேன். உன்னுடைய கவனிப்பால்தான் இவன் விரைவில் குணமடைய வேண்டும்” என்றார். 


மேகலா மிகவும் கலக்கமுற்றிருந்தாள். பலவித எண்ணங்கள் மனத்தில் குமைந்து கொண்டிருந்தன. 

வீரப்போட்டி அரங்கில் உதயசந்திரனைக் கண்ட திலிருந்தே அவளுடைய மனத்தில் அமைதியில்லை. அரங் கில் அவன் நடத்திய அற்புதமான போர், அவள் நினைவில் தோன்றிக்கொண்டே இருந்தது. அவனுடைய அழகிய மேனியில் வாள் பதிந்து இரத்தம் கொட்டி, அவன் கீழே விழுந்தபோது, அவள் மனம் பதைபதைத்தது. அவன் காப்பாற்றப்பட்டு விட்டான் என்பதை அறிந்த பிறகுதான் அவளுக்கு ஏற்பட்டிருந்த படபடப்பு அடங்கியது. 

அரண்மனை வைத்தியரை அனுப்பி வைத்தாள். ஆனால் அதற்குள் முதன்மந்திரியின் வைத்தியர் முந்தி விட்டார் என்பதை அறிந்தபோது அவளுக்கு ஏமாற்றமா யிருந்தது. உதயசந்திரனை அரண்மனைக்கு அழைத்து வந்து தன்னுடைய அந்தரங்க மெய்க்காப்பாளனாக வைத் துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள். இரவு முழுவதும் கனவில் உதயசந்திரன் தோன்றிக் கொண்டி ருந்தான். அவனை உடனே சந்திக்க வேண்டும் என்னும் துடிப்பு அதிகரித்தது. ஆனால் அவன் எழுந்து நடமாடவே நாலைந்து நாட்களுக்கு மேலாகும் என்பதை அறிந்து தன் ஆவலை அடக்கிக் கொண்டாள். அரங்கில் அவளை அவன் பார்த்தபோது அவன் முகத்திலிருந்த முறுவல், அவள் இதயத்தைக் கிளறிவிட்டுக் கொண்டேயிருந்தது. 

அதே வேளையில் மகாராணி பிரேமவர்த்தினியும் பல எண்ணங்களினால் குழம்பியிருந்தாள். அப்போதுதான் முதன்மந்திரி வந்து சேர்ந்தார். நாட்டின் பிரச்சினைகளும், சொந்த உணர்வுகளும் அவளைப் பாடாய்ப் படுத்தின. முதன்மந்திரி வந்துபோன பிறகு அவளுடைய மனக் கலக்கம் அதிகமாகியது. 

இளவரசனுடைய நடவடிக்கைகள், காஞ்சி நகரில் மக்களிடையே அதிருப்தியை விளைவித்து வருவதாக அவளுக்குச் செய்திகள் எட்டிக் கொண்டிருந்தன. ஆனால் அவனைக் கண்டிக்கவும் அவள் விரும்பவில்லை. சக்ரவர்த் தியின் முதலாவது பட்டமகிஷியின் மகன், சித்திரமாயன். அவனைக் கண்டித்தால், மாற்றாந்தாய்ப் பொறாமையால் அவனைக் கண்டிப்பதாக அவன் எண்ணி விடுவானோ என்று பயந்தாள். மேலும், சித்திரமாயன்தான் வருங்காலச் சக்கரவர்த்தி. இப்போதையச் சக்கரவர்த்திக்கு வயதாகி விட்டது. விரைவிலேயே சித்திரமாயன் அரியணை ஏறலாம். அவனுடைய அபிமானத்தைப் பெற்றால்தான் வருங்காலத்தில் அவள் செல்வாக்குடன் வாழமுடியும். சித்திரமாயனும் தன் மீது சிற்றன்னை என்ற முறையில் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறான் என்பதையும் அவள் புரிந்து கொண்டாள். 

அப்போது சித்திரமாயனை எதிர்பார்த்துத்தான் காத்தி ருந்தாள். சித்திரமாயன் வந்ததும், முதன் மந்திரி வந்து போனதை அவனிடம் விவரித்தாள். அப்போது சித்திரமாயன் சொன்னான்: 

“சின்னம்மா, இந்தக் கிழவர் சாணக்கிய தந்திரம் உள்ள வர். சக்ரவர்த்தி இல்லாத சமயத்தில் உங்களைப் பொம்மை ராணியாக ஆக்கிவிடப் பார்க்கிறார். அதிகாரம் முழுவதை யும் தம் கையில் வைத்துக் கொள்ளத் திட்டம் போடுகிறார்.” “உன்னுடைய நடவடிக்கையால் பல கேடுகள் விளைந்திருப்பதாகச் சொல்கிறார்” என்றார் பிரேமவர்த்தினி. 

“நான் என்ன அப்படிச்செய்துவிட்டேன்?” 

“ஒரு யவன வணிகருக்குச் சுங்கச் சலுகை கொடுத்திருக்கிறாயாம்.’ 

“கொடுத்தால் என்னவாம்? வீரப் போட்டி நடைபெறு வதற்காகப் பெரும் தொகை கொடுத்தாரே. இல்லையென் றால் நம் அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்தல்லவா செலவு செய்யவேண்டி வந்திருக்கும். அந்த வணிகரின் சலுகைக் காகத்தான் உத்தரவில் அன்று உங்கள் முத்திரையை வாங்கி னேன். சின்னம்மா, முதன்மந்திரி தான் ஊர்த் தலைவர்கள் எல்லாரையும் தூண்டிவிட்டிருக்கிறார். சக்ரவர்த்தி இல்லாத சமயத்தில், மக்களைத் தூண்டி கிளர்ச்சி செய்ய வைத்து நம்மைச் சங்கடத்துக்குள்ளாக்க நினைக்கிறார். இதற்கு இரணியவர்மரும் துணையாக இருக்கிறார். கோட்டைத் தளபதி பதவியிலிருந்து அவரை விடுவித்து விட்டால், அவர் தம்முடைய படையுடன் அவருடைய மண்டலத்துக்குத் திரும்பிவிடுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர், சக்ரவர்த்தி போர்க்களத்திலிருந்து திரும்பி வரும்வரை காஞ்சி யில்தான் தங்கியிருக்கப் போகிறாராம். அவர் இங்கிருக்கும் வரை நமக்குத் தொந்திரவுதான். நாம் எச்சரிக்கையாக இல்லையென்றால் நமக்குத்தான் ஆபத்து” என்றான் சித்திரமாயன். 

இதைக் கேட்டதும் பிரேமவர்த்தினி பயந்துபோனாள். “இது உண்மையானால், இப்போதே மந்திரி சபையைக் கலைத்துவிட்டு, வேறு மந்திரி சபையை அமைத்துக் கொள் வோமே” என்றாள். 

“நாமாகக் கலைத்ததாக இருக்கக் கூடாது. அதுவா கவே கலைந்துவிட வேண்டும். இரண்டாவது மந்திரி அச்சுதபட்டர் நம்முடைய பக்கம். அவர் முதன் மந்திரியாக வேண்டும் என்று விரும்புகிறார். நேற்றே மந்திரி சபை கலைந்திருக்க வேண்டியது. தப்பிவிட்டது” என்றான், சித்திரமாயன். 

பிரேமவர்த்தினி புரியாமல் விழித்தாள். “நேற்றே கலைந்திருக்க வேண்டுமா?” 

சித்திரமாயன் சிரித்தான். “சின்னம்மா, உங்கள் மன அமைதியைக் கெடுத்துக் கொண்டிருக்கும் பேயை நேற்றே ஒழித்து விடத் திட்டம் போட்டேன். தப்பி விட்டாரே” என்றான். 

“ஓ.. !” வியப்புடன் கூவினாள், பிரேமவர்த்தினி. “நான் நினைத்தேன், நீதான் ஏதாவது ஏற்பாடு செய்திருப் பாய் என்று” என்றாள். பிறகு, “உன் திட்டம் தோல்வி யடைந்து விட்டதே” என்றாள், வருத்தத்துடன். 

“கொஞ்சம் பொறுங்கள். இவரையெல்லாம் சீக்கிரம் அடக்கி உங்கள் காலில் வந்து விழ வைக்கிறேன்” என்றான், சித்திரமாயன். பிறகு, “ஊர்த்தலைவர்களையும், நகரத்தலை வர் களையும் நீக்கவேண்டியது பற்றிய கட்டளையை நம் வாயில்கேட்பாரைக் (அரண்மனைக் காரியதரிசி) கொண்டு வரையச் சொல்லட்டுமா?” என்று கேட்டான். 

“இந்த விஷயத்தில் நாம் அவசரப் பட வேண்டாம். ஒரே சமயத்தில் எல்லாத் தலைவர்களையும் நீக்குவதை விட ஒவ்வொரு தலைவராக மெள்ள மெள்ள நீக்குவது நல்லது” என்றாள், பிரேமவர்த்தினி. 

“அதுவும் நல்லதுதான்” என்ற சித்திரமாயன், “நம் முடைய யோகிருத்திர பரமாச்சாரிக்கும் காஞ்சியில் எதிர்ப்பு இருக்கிறது. சைவர்களும், வைணவர்களும் நேற்று இரவு, கைலாசநாதர் கோயில் திடலில் கூடி எதிர்ப்புத் தெரிவித்துப் பேசியிருக்கிறார்கள்” என்றான். 

“இவர்களுக்கு வேறு வேலை இல்லை. சமணர்களை எதிர்த்து விரட்டினார்கள். பௌத்தர்களை விரட்டினார்கள். இப்போது ருத்திர பரமாச்சாரி அகப்பட்டிருக்கிறார். இதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. மேலும், பரமாச்சாரி வெளியே வந்து பிரசாரம் செய்வது கூடக்கிடையாது. எல்லாம் அவருடைய ஆசிரமத்துக்குள்தாம் பிறகென்ன?” 

“ஆசிரமத்துக்கு அவ்வளவு பெரிய தோப்பை மான்ய மாகக் கொடுத்ததையும் எதிர்க்கிறார்கள்.” 

“நீ அதைப் பற்றி அக்கறை எடுக்க வேண்டாம். கோயில்களுக்கும் நாம் கூடுதலான மான்யங்கள் கொடுத்து விட்டால் அடங்கி விடுவார்கள்” என்றாள். 

சித்திரமாயன் சென்ற பிறகும் பிரேமவர்த்தினியின் மனக்கலக்கம் தீரவில்லை. தான் மகாராணியாக இருந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் போது, மக்கள் பயமின்றி எதிர்க்கிறார்களே என்ற எண்ணந்தான் அவளுக்கு மிகுந்த கோபத்தை உண்டு பண்ணியது. தன்னைப் பெண் தானே என்று எல்லாரும் அலட்சியப் படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் அவள் கோபத்தைக் கிளறியது. தன்னுடைய ஆட்சியில் அவள் எவ்வித நடவடிக்கை எடுத்தாலும், சக்ரவர்த்தி குறைகூற மாட்டார் என்ற தைரியம் அவளுக்கு இருந்தது. அவளை எதிர்த்துக் கண்டிக்கும் துணிவு, சக்கரவர்த்திக்கு கிடையாது. அவளுடைய கண் வீச்சுக்கு நொடிப்பொழுதில் அவர் தோற்றுப் போவார். அவருடைய பலவீனம் எத்தகையது என்று அவளுக்கு நன்கு தெரியும். 

இப்போது அவளுடைய கவலையெல்லாம், வருங் காலத்தில் தன்னுடைய செல்வாக்கை எப்படி நிலை நிறுத்துவது என்பதைப் பற்றித்தாம். சில மாதங்களாக ஆட்சி அதிகாரத்தை அனுபவித்தவளுக்கு, அதனுடைய போதை நன்கு ஏறியிருந்தது. 

– தொடரும்…

– மருக்கொழுந்து மங்கை (சரித்திர நாவல்), முதற் பதிப்பு: மே 1995, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

ர.சு.நல்லபெருமாள் ர.சு.நல்லபெருமாள் (ரவணசமுத்திரம் சுப்பையா பிள்ளை நல்லபெருமாள்) (நவம்பர் 1930 - ஏப்ரல் 20, 2011) தமிழ் நாவலாசிரியர். திருநெல்வேலியில் வாழ்ந்தவர். காந்தியக் கொள்கைகளையும் சைவசித்தாந்த நோக்கையும் கொண்டு எழுதியவர். மார்க்ஸியத்துக்கு எதிரான வலதுசாரி பொருளியல் சிந்தனைகளும் ஃப்ராய்டிய உளவியல் ஆய்வுமுறைமையும் கொண்டவர். வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்தும் பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர். 1945-ல் தன் 15 வயதில் எழுதிய வீண்வேதனை அவருடைய முதல் படைப்பு. கல்கி இதழில் இரு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *