மரியாதை – ஒரு பக்க கதை





தனசேகர் ராணுவத்தில் 20 ஆண்டு சேவையை முடித்துவிட்டு, சென்னைக்கு வந்து பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து வசதியாக வாழ்ந்து வந்தான். ஒருநாள் தன் மனைவியுடன் ஷாப்பிங் சென்றவன், காரை ஷாப்பிங் மாலுக்குள் நிறுத்தாமல், கடைக்கு வெளியே சாலையோரத்தில் நிறுத்திவிட்டு வந்தான்.
இன்னொரு முறை அங்கே சென்றபோதும் காரை கடைக்கு வெளியேதான் நிறுத்தினான். அவன் ஏன் காரை ஷாப்பிங் மாலுக்குள் நிறுத்தாமல் வெளியே நிறுத்துகிறான்? என்பது அவனுடைய மனைவி மாலதிக்குப் புரியாத புதிராக இருந்தது.
அன்று அந்தக் கடைக்கு ஷாப்பிங் போய்விட்டுத் திரும்பும்போது, தனது சந்தேகத்தைக் கேட்டாள். அதற்கு தனசேகர் சொன்னான்:
“இந்த ஷாப்பிங் மாலில் செக்யூரிட்டி வேலை செய்பவர் ராணுவத்தில் எனக்கு ஆபிஸராக இருந்தவர். இப்போது காரை நான் ஓட்டிக் கொண்டு ஷாப்பிங்மாலிலிருந்து வெளியே வந்தால் எனக்காக அவர் கேட்டைத் திறந்துவிடுவாரே… அதை என்னால் சகிக்க முடியுமா? ”
கணவனின் நல்ல பண்பை எண்ணிப் பெருமைப்பட்டாள் மாலதி.
– எஸ்.எஸ்.ராஜேஷ், சென்னை-91. (ஜனவரி 2012)