கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 21, 2026
பார்வையிட்டோர்: 185 
வாசிப்பு நேரம்: 20 நிமிடங்கள்

(1990ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

காவல் நிலையத்தின் சுற்று வளாகம்.வேப்ப மரநிழலில் கும்பல் கும்பலாய் கைதாகி உட்கார்ந்திருப் பவர்களில் நம்ம பேப்பர் சம்முகம். அவனுக்கு ‘வெறுக், வெறுக்’ கென்றிருந்தது. ரத்தமயமான கட்டிடமும், ரத்தமயமான கதைகளும் சேர்ந்து, சூழலையே ஒருமாதிரி பயங்கரமாக்கியிருக்கிறது. 

சம்முகத்திற்கு மனசு கிடந்து ‘திக் திக்’ கென்று அடித்துக் கொள்கிறது. போலீஸ்காரர்களைக் கண் டாலே குடை கண்ட காளைமாடாக வெருளுகிறது. 

கனத்த பூட்ஸ்கள் ‘நெறுக், நெறுக்’ கென்று கர்ஜிக்க குறுக்கும் நெருக்குமாய் வந்து போகிற போலீஸ்காரர்கள். 

கீழே தூக்கிப்போட்டு இந்தப் பூட்ஸ்காலால் ஒரு மிதி மிதித்தால்… என்ன ஆகும்? நெஞ்சுக் கூடு நொறுங்கி ரத்தம் கட்டிப்போகும், சாவுதான் மிஞ்சும். 

அவனுக்குள் குலை பதறுகிறது. மனசு முழுக்க பயம் ஜில்லென்று ஓடிப்பரவி, அடிவயிற்றில் ‘பகீர்’ என்கிற நடுக்கம். 

வலையில் சிக்கிக் கொண்ட மைனாக்குஞ்சாக ‘விலுக், விலுக்’ கென்று முழித்துக் கொண்டிருந்தான். அங்கும் இங்குமாய் பறவையாட… தவித்துக் கொண்டிருந்தான். 

அவன் வம்சத்தில் யாரும் போலீஸ் ஸ்டேஷனின் திசையைப் பார்த்ததில்லை. இவனும் இப்பத்தான்… போலீஸ்காரர்களை இத்தனை கிட்டத்தில் பார்க்கிறான். தடதடத்து வந்து மூச்சடங்கிய மோட்டார்பைக். இறங்கி ‘டக், டக்’ கென வருகிற இன்ஸ்பெக்டர். சுமுகமாக இருந்த போலீஸ்காரர்கள் அவர் வாடையை நுகர்ந்த வுடன் பரபரப்பான வேகம். விறைத்த நிலையில் சல்யூட் அடித்த தடதடப்பு. 

அதைப் பொருட்படுத்தாமல், அலட்சியமாய் தொப்பியை எடுத்து, கைக்குட்டையால் முன்வழுக் கையை துடைத்துக் கொள்வது… 

ஏதோ ஒருமாயாலோகமாகத் தோன்றியது சம்முகத் துக்கு. பயத்தில் நெஞ்சு திணறியது. மூச்சடைப்பது போலிருக்கிறது. 

நம்மஊர் நல்லசிவம் கொஞ்சம் கூட பயமில்லாமல் அந்தப் பெரிய ஆபிஸரை நெருங்குகிறானே. சிரிப்புடன் ‘விஷ்’ பண்ணுகிறானே. 

“என்ன தலைவரே… மறியலெல்லாம்முடிஞ்சதா?” 

”ம்… முடிஞ்சிருச்சு சார்?” 

‘“எத்தனைபேர் அரெஸ்டாகியிருக்கீக?” 

”எழுபத்தேழு, சார்” 

”ம்… அப்படியா! வெரிகுட்” 

“சார்…ஒரு சின்ன விஷயம்” 

“சொல்லுங்க” 

“மறியல்லே அரெஸ்ட் ஆகியிருக்கிற எங்க ஆளுக பூராவும் கிராமத்து ஜனங்கள். வஞ்சகமில்லாத உழைப் பாளிங்க. அவுகளுக்கு மதியச் சாப்பாடு கொஞ்சம் கணிசமா இருக்கணும்” 

“அதெப்படி தலைவரே? சர்க்கார்லே ஒதுக்கியிருக் கிற ரேசனைத்தானே நாங்க குடுக்கமுடியும்?’ 

“அது ஒருகோழிக்குஞ்சுக்குக் கூட பத்தாது சார்” 

“வாஸ்தவந்தான். நாங்க சர்க்கார் நிர்ணயிச்சிருக் கிற படிக்காசை உங்ககிட்டே குடுத்துடுறோம், நீங்களே சாப்புட்டுங்கங்க” 

“அதெப்படி? இன்னிக்கு நாங்க எல்லாரும் உங்க விருந்தாளிங்க. நீங்கதான் உபசரிக்கணும்” 

“மேற்கொண்டு ஆகுற செலவை யாருகுடுக்குறது” 

“நீங்கதான் எப்படியாச்சும் சமாளிக்கணும்” 

இன்ஸ்பெக்டர் சிரித்தார். அது ஒரு வகையான நமுட்டுச்சிரிப்பு. அவரது கருத்த உதடுகளில் மெல்லிய பரிகாசம். 

“கைதிகளோட ரேசனை உயர்த்தணும்னு நீங்க தனியா ஒரு போராட்டம் நடத்தலாமே” 

நல்லசிவம் தயக்கமில்லாமல் சட்டென்று பதிலைக் சொன்னான்: “சார், ரேசன் குறைவாயிருப்பதாலே நிஜத்துலே சிரமப்படுறது நீங்கதானே சார்? நீங்க போராட்டம் நடத்துங்க. நாங்க தார்மீக ஆதரவு தர்றோம்” 

இன்ஸ்பெக்டர் பெரிதாகச் சிரித்தார். ஏதோ ஜோக் கைக் கேட்டுவிட்டவரைப் போல அவருக்குச் சிரிப் பாணி பொத்துக் கொண்டு வந்தது. 

‘அடேயப்பா..! அசந்தா… எங்ககிட்டேயே கொடியை குடுத்து, கோஷம் போட வைச்சிருவீக போலிருக்கே!’ 

சம்முகம் இதைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. ஏதோ அதிச ய த்தைக் கண்டவனைப் போல மலைத்துப் போய்க் கிடந் தான். 

போலீஸ்காரார்களே மயிலைக் கண்ட சர்ப்பமாக பம்மிப் பதுங்குகிறார்கள். வியர்த்து, மூச்சுக்கு முந்நூறு ‘ஐயா போடுகிறார்கள். அப்பேற்பட்ட ஆபீஸரிடம்போய் தைர்யமாக நின்று, சரிசமதையாகப் பேசுகிறானே நல்ல சிவம்! அதுவும் எத்தனை சர்வசாதாரணமாக! ஏதோ பக்கத்து வீட்டுக்காரனிடம் பேசுகிற மாதிரிபேசுகிறானே கெட்டிக்காரன்தான்! 

அவரும் இவனைத் ‘தலைவரே’ என்கிறாரே…. 

நல்லசிவம் ஊரில் ஒரு சின்ன விவசாயி. வீடு முழுக்க கடன். எந்நேரமும் டைரியும் பையுமாக ஊர்வழி போய் வருகிற அவனைப் பார்த்து, ‘வேலையத்தவன்’ என்றுதான் ஊரில் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

‘பொதுச் சோலி’, ‘கட்சிச் சோலி’ என்று பொழுதுக் கும் ஊர் ஊராய் அலைகிறானே இவனெல்லாம் எங்கே உருப்படப் போகிறான்’ என்றுதான் சம்முகம் கூட பல தடவை நினைத்திருக்கிறான். 

அங்கு பார்த்தால்…. கதை வேறு மாதிரியாகத் தெரிகிறதே! 

இவனுக்கு இத்தனை அத்தாரிட்டி இருக்கிறதே… அடேயப்பா, சின்னவணாக இருந்தாலும், இத்தனை மரியாதை செல்வாக்கு இருந்தாலும்- அடக்கமானவ னாக இருந்திருக்கிறானே …. 

சம்முகத்துக்குள் ஒரு மகிழ்ச்சியான பிரமிப்பு, நம்ம ஊர்லேயும் இப்படியோரு பையனா’ என்று ஆச்சர்யம் என்றால் ஆச்சர்யம், அப்படி ஆச்சர்யம். 

ஸ்டேசன் வளாகத்திற்குள்ளேயே, இடதுபக்கத்தில் ஒரு கீற்றுக் கொட்டகை. கீழே சிமென்ட் தளம். அதில் ஒரு மேசை போட்டு. நீளப்பெஞ்ச்சில் ஒரு போலீஸ்காரர் 

மறியல் கைதிகளை ஒரு பேரேட்டில் பதிந்துகொண் டிருகிறார். இன்னொரு போலீஸ்காரர், கைதிகளை விசாரித்துக் கொண்டும், சட்டையை கழற்றச் சொல்லி அங்க அடையாளங்களைப் பார்த்து தேடிக் கொண்டும், பதிகிறவருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். 

“நெக்ஸ்ட்’’ 

“ம்” 

“இது நம்பர் எத்தினி?” 

“டொன்டி செவன் போடுங்க. 

”சரி. பேரு?” 

”ராமசாமி” 

“தகப்பனார் பேரு?” 

“முத்தையா. வடக்குத்ருெ. ஆமர்நாடு.” 

“மச்சம் இருக்கா?” 

“நெத்தியின் இடது புறம் ஒரு நீளத் தழும்பு வலது புஜத்தின் பின் இறக்கத்தில் ஒரு மச்சம்” 

“வேற திங்க்ஸ்?” 

“ஒரு வேட்டி, சட்டை, பனியன், டிராயர்” 

”வாட்ச், மோதிரம்?” 

“நத்திங்.” 

“ரைட். ராமசாமி யாரு? இதுலே ஒரு கையெ த்ழுதுப் போடும். போடத்தெரியுமா, கை நாட்டா?” 

“போட்டுருவேன்.’ 

“ம். சரி. போடும். இந்தாரும் பேனா. இதுபேனா. கலப்பையில்லே. மெதுவா. ஒடிஞ்சிராம். இது தான் கையெழுத்தா? மெட்ராஸ்லே கிளம்பி, கொல்லத்துலே வந்து நிக்குதே. ரைட். நெக்ஸ்ட்” 

பெயர் பதியப்பட்டவர்கள் கீற்றுக் கொட்டகைக்குள் உட்கார்ந்திருந்தனர். அங்கே, ஏகமாய் தளவாடச் சாமான்கள். உடைந்த சைக்கிள்கள். 

சம்முகமும் சட்டையைக் கழற்றிக் கொண்டான். சொல்வதற்கு மச்சத்தை தேடிக் கண்டு பிடித்துக் கொண்டான். 

பெயர் பதிகிற பேரேடு ரொம்பப் பெரிசு. கேட்கிற விபரங்கள் நிறைய. மனைவி, குழந்தைகள் உட்பட விசாரித்துப் பதிவு செய்கிறார்கள். பதிகிற தடபுடலைப் பார்த்தால்… மனசு படபடக்கிறது. 

பலமான அஸ்திவாரமாகத் தெரிகிறது. 

சாயங்காலம் விடுதலை செய்யப் போவதற்கு, எதற்கு 

இத்தனை தடபுடல்? விடமாட்டார்களோ 

ஜெயிலில் கொண்டு போய் அடைத்து விடுவார்களோ மாதக் கணக்கில் போட்டுத் தள்ளி விடுவார்… 

ஸ்டேசன் முன் ஒரு ஜீப். அதற்குப் பின்னால், வெள்ளைப் பூதமாய் நிற்கிற பெரிய வேன்.பஸ் மாதிரி, அதில் அள்ளிப்போட்டுக் கொண்டு போய்விடுவார்களோ… 

பயத்தில் மனசு உலர்ந்தது. நா வறண்டது தண் ணீர் குடிக்க வேண்டும். சிவப்பான மண் குடத்தில் தண்ணீர் இருக்கிறது. இன்ஸ்பெக்டர் மேஜைப் பக்க மாய் இருக்கிறது. எல்லோரும் போய் குடிக்கிறார்கள் 

ரொம்பத் தயக்கத்திற்குப் பிறகு சம்முகம் மெல்ல பூனைபோல போனான். தண்ணீர் குடித்தான். தெற்குப் பக்கத்தில் லாக்கப் ரூம். உள்ளே- 

கறுத்த மனிதன் கிடந்தான். கறுத்த கைலி தவிர உடம்பில் வேறு துணியில்லை. அடி நிறைய வாங்கிய உடம்பு. சதை பிடிப்பான இடமெல்லாம் தடிப்புதடிப் பாக வீக்கம். 

கிழக்குப் பக்கம் ஒரு அறை. அலமாரி நிறைய அழுக்குப் பேரேடுகள். பேப்பர் கற்றைகள். வயர்லெஸ் அலறுகிறது… 

“ராஜபாளையம் தாலுகாபீஸ் முன் மறியல். சைது அறுபத்திமூன்று. தலைமை ரவி. விருதுநகர் கைது ஆன வர்கள் எம்பத்தி நாலு. தலைமை பெருமாள். ஓவர்.” 

சரி கதை முடிந்தது . எல்லா இடங்களிலும் இதே கூத்துத் தானா? அப்போ…. இன்னக்குச் சாயங் காலம் நிச்சயமாக விடப்போறதில்லை. மத்திய ஜெயி லில் தான் நாளைப் பொழுது விடியப் போகுது. 

நாறிப் போய் விடும் பிழைப்பு… 

இன்ஸ்பெக்டருடன் பேசி விட்டு வருகிற நல்ல சிவத்தைப் பார்த்தான், சம்முகம். அவன் முகம் இருண்டு கிடக்கிறது. கண்ணில் ஒரு தர்மசங்கடம். 

இது நல்ல அறிகுறி இல்லை. சம்முகம் மனசுக் குள் கூடுகட்டுற சந்தேகத் தேனீக்கள். சஞ்சலச் சிலந் திகள், கூட்டுக்குள் ஏகமாய் இருட்டு. 

நழுவிக் கொண்டு ஓடுகிற நினைவுகள். 

2 

சம்முகத்திற்கு எந்தக் கட்சியிலும் ஈடுபாடு கிடையாது. எல்லாக் கட்சிகனையும் சகட்டுமேனிக்கு விமர்சிப்பான். நல்லது என்று தெரிந்தால் பாராட்டு வான். ரொம்பப் பொதுவான மனிதன். 

அவனுண்டு, அவன் பாடுகள் உண்டு. நல்ல சம் சாரி. வெவ்வேறு இடத்தில் துண்டு துண்டாய் ரெண்டு ஏக்கர் புஞ்சை. பம்ப் ஷெட் கிணறு. 

பொழுதுக்கும் பாடுபடுவான். அப்பவும் பாடுகள் மிஞ்சிக் கிடக்கு. பொழுது காணாது. எந்நேரமும் காட் டிலும் வீட்டிலும் எதையாவது நோண்டிக் கொண்டே யிருப்பான். கை ஒருநேரம் கூட சும்மாபிருக்காது. 

சோம்பிச் சும்மாயிருந்தால், ரத்தம் செத்துப்போகும் என்பான். ரத்தம் சூடாக ஓடிக்கொண்டேயிருக்க வேண் டும். அப்போதுதான் உடம்பும் திடப்படும்; ஆயுளும் கெட்டிப்படும் என்பான். 

அப்படி உழைப்பை நேசிக்கிறவன் சண்முகம். வியர் வை நாற்றத்தில் சுகம் காண்கிறவன், மண்ணைமிதித்து உயிரைச் சிந்தினால்…. ஒன்றுக்கு ஆயிரமாக அள்ளித் தரும் என்று நம்புகிறவன். 

அப்பேற்பட்ட சம்சாரி சம்முகத்துக்கு சாஸ்வதமாய் ஒரு மனக்குறை தீராதமனக்குறை. 

இந்தச் சம்சாரிகளை நம்பித் தான் நாடு. இவன் சாட்டைக் குச்சியை வீசிச் சுழற்றினால் தான், தேசச் சக்கரம் சரியாக உருளும் 

சம்சாரி சலித்துப் போய், ஏர்க்கலப்பையை மூலை யில் சாத்தி விட்டால்…. நாடு எதைத் தின்று உயிர் வாழும்? ‘மாத்திரையை உண்டு, மனுசன் ஜீவிக்க முடியுமா? 

சம்சாரி என்ன லட்சணத்தில் இருக்கிறானோ, அப்ப டித்தான் நாடும் இருக்கும். இவன் வாழ்ந்தால் வா ழும்; வீழ்ந்தால் வீழும். 

இப்பேற்பட்ட சம்சாரிகளை நாட்டில் சீந்துவார் உண்டா, ஏந்துவாருண்டா? 

மத்தளத்துக்கு இரு பக்கம் இடி. சம்சாரிகளுக்கு திரும்பிய பக்கமெல்லாம் இடிகள் தான். 

ரூபாயை நீட்டி சரக்கு வாங்க எந்தக் கடையில் போய் நின்றாலும் இடி தான். பாடுபட்டு விளைய வைத்த பருத்தி, மிளகாய் வற்றலை விற்று ரூபாய்க்கு போனால் பேரிடி, கரண்டு ஆபீஸ்க்குப் போனால் இடி. கடன் வாங்க கூட்டுறவு சங்கத்துக்குப் போய் நின்றால், கிடைப்பது இடிகள்தான். தாலூகாபீஸ் போனாலும் அது தான் கதை. 

இடிவிழாமல் இவன் என்றைக்குத் தப்பியிருக்கிறான்? 

இத்தனை இடிபாடுகளில் இடுப்பொடிந்து கிடக்கிற சம்சாரிகளுக்காக கை தூக்கி விட ஒரு கையாவது நீண்டது உண்டா? ஊஹீம், ஒரு குஞ்சு கூட கிடையாது. 

நாதியற்றுக் கிடக்கிற இவனின் துன்பங்கள்- துய ரங்கள் – இழப்புகள்- கொஞ்சமா, நஞ்சமா? சொல்லி மாளுமா? எழுதித் தீருமா? எழுதிக் குவித்தால், அந்த இமயமலையே மூழ்கிப் போய் விடுமே… 

நல்லதங்காள் கதையெல்லாம், இவன் படுகிற சோகத்தின் கால் தூசி பெறுமா? 

தொழில் நடத்துகிற முதலாளிமார்களுக்கு கவலை யில்லை. சர்க்காரே காவல். தொழிலாளிகளுக்கும் வெள் ளைச் சட்டை உத்யோகஸ்தர்களுக்கும் என்னென்னவோ சங்கம் இருக்கிறது; கட்சிகள் இருக்கிறது. 

சம்சாரிகளுக்கு அப்படி யார் இருக்கிறார்கள்? 

சம்சாரிகளிடம் குற்றம் குறைகள் இல்லையா? இருக்கத் தான் செய்கின்றன. 

சாதிச் சங்கக் கூட்டங்களில் தவறாமல் போய் உட் கார்ந்து சவடால் அடிப்பதற்கு சலிக்காத சம்சாரி, சம் சாரிகள் சங்கத்தில் கூப்பிட்டாலும் வந்து உட்கார்வது இல்லையே…. 

கையகலப் பொழிக்காக சண்டை சச்சரவு போட்டு வம்பு வழக்கு பண்ணி, போலீஸ் ஸ்டேஷன் போய் வசவு வாங்கி, பகையைப் பொத்திப் பொத்தி அடைகாக்கிற இவன், சம்சாரிகள் கடனாளியாகி, காலம் காலமாய் சீரழிவற்தகு என்ன காரணம் என்று யோசிப்பதற்கு ஒரு இடத்தில் ஒற்றுமையாகக் கூடுவதில்லையே…. 

இவனுக்கு யார் கற்றுத் தருவது? திருத்துவது? இவன் உருப்படாமல்…. நாடு மட்டும் எப்படி உருப்பட்டு விடும்? 

சம்முகம் தினசரி டீக்கடைக்கு வருவான். டீயும் குடிப்பான். டீ குடித்தாலும் குடிக்காவிட்டாலும், நிச்சய மாகப் பேப்பர் பார்ப்பான். பத்திரிக்கைகளை ஒரு வரி விடாமல் வாசிப்பான். 

சகல செய்திகளையும் மேய்ந்து அசை போடுவான். அதனால் அவனுக்கு ஊரில் பட்டப் பெயரே, ‘பேப்பர் சம்முகம்.’ 

பத்திரிக்கைகளில் என்ன இருக்கிறது? நிறைய கொலைகள் விழுகின்றன. சிறுமிகள் கற்பழிக்கப்படுகிறார்கள். ரிக்ஷா ரெங்கன்கள் தோன்றுகிறார்கள். லாட்ஜ் களில் ‘அழகிகள்’ பிடிபட்டு, கண்ணீர்க்கதை வடிக்கிறார்கள். 

சம்சாசரி வாழ்க்கையைப் பற்றி ஒரு வரிச் செய்தி கூட வந்ததுண்டா? சம்சாரி வாழ்க்கையை உயர்த்துவ தற்காக எந்தக் கட்டுரையாவது கவலைப்பட்டதுண்டா?’ 

ஞாபகமேயில்லை… படித்ததாக. 

ரெண்டு வருஷத்துக்கு முந்தித்தான் உருப்படியாக ரெண்டு தகவல்கள். 

விவசாயிகளுக்கு பத்தாயிரம் கடன் தள்ளுபடி என்ற செய்தியை ஒன்று விடாமல் வாசித்தான். உற்சாகமாக வாசித்தான். 

எப்போ மூவாயிரம் ரூபாய் வாங்கிய கடன், வட்டி; தவணை கடந்த வட்டி, அபராத வட்டி என்று எல்லாம் கூட்டுச் சேர்ந்து ஏழாயிரத்துச் சொச்சமாயிருந்த கூட்டுறவுக் கடன் ரத்து செய்யப்பட்டது. 

அதே போல் …. பம்ப் ஷெட்டுக்கு இலவச மின்சாரம்.

சம்சாரியையும் மதித்துச் சலுகைகளா? ஆச்சர்ய மான சந்தோசம் தான். மடத்து வாசலில் உட்கார்ந்து கொண்டு, இதைப் பற்றியே வாய் குளிரப் பேசுவான். பாராட்டுவான். 

இந்தத் தேர்தலில் கூட சலுகைகள் கொடுத்த கட்சிகளுக்குத்தான் ஓட்டுப் போடுவதாக இருந்தான். நல்லசிவத்தை தெருவில் பார்த்தால் நட்புடன் ஒரு சிரிப்பு சிரிப்பான். 

நல்லசிவம் அந்தக் கட்சிகளுக்கு கூட்டணிக்காரன். 

அப்பத்தான் அந்தப் பேரிடி. உலகமே உடைந்து நொறுங்கி தலையில் விழுந்த மாதிரி, அந்தச் செய்தி. 

தமிழ் நாட்டுக்கு ஓட்டுக் கேட்டு வந்த அந்தப் பெரீய்ய தலைவரை வெடிகுண்டு வைத்துக் கொன்று விட்டார்கள், பாவிகள். 

நம்பிக்கையோடு கையேந்தி வந்த தலைவரைக் கொள்வதற்கு எவனுக்காவது மனசு வருமா? வந்திருக்கிறதே…. 

அந்தத் தலைவர் துண்டு துண்டாய் பிய்ந்து போய்க் கிடந்ததை பஞ்சாயத்து டி.வி.யில் பார்த்த மனசுகள் எல்லாம் பதறியது. தேகம் நடுங்கியது. காணச் சகியாத மாபாதகம். 

தானே அங்கு உடல் சிதறிக் கிடக்கிற மாதிரி ஒரு பதைப்பு, சம்முகத்துக்கு. 

போதாக் குறைக்கு, இந்த வங்கொடுமையான கோலத்தை பெரிய பெரிய போஸ்டராக்கி, மூலை முடுக்கெல்லாம் ஒட்டி விட்டார்கள். 

பார்க்கப் பார்க்க மனசு பதைக்கிறது. 

வாடிய பயிர் கண்டு, மனசு கருகிப் போய் ஓடி ஓடி நீர் பாய்ச்சுகிற ஈர மனசுக்காரன், சம்சாரி. கையேந்தி நின்றால் எந்த அந்நியனுக்கும் உள்ளதைக் கொடுத்து, முகம் குளிரச் செய்கிற சம்சாரி. 

கேட்க வேண்டுமா? 

தேர்தல் அன்றைக்கு க்யூவில் நின்று கொண்டிருந்த இவனை, குறுக்கும் நெடுக்குமாய் ஓடியலைந்த நல்ல சிவம் ஒரு எதிர்பார்ப்போடு பார்த்தான். மின்னலாய் ஒரு புன்னகையை வீசினான். 

சம்முகமும் சிரித்தான். உதட்டில் ஒட்டிருந்தது, ஏளனம். ‘போங்கடா … வேலையத்த பயல்களா என்ப தைப் போல. உள்ளே போனான். 

மடிந்த தலைவரின் மடியில் ஓட்டைப் போட்டு விட்டு வந்தான். 

இப்போது…என்னாயிற்று? 

ஊமையன் கண்ட கெட்ட கனவாகிப் போயிற்று. யாரிடம் சொல்ல முடியும்? எப்படிச் சொல்ல? என்னத் தைச் சொல்ல? 

உர உப்புமூடை விலை கூடிப்போய் விட்டது. 

கொஞ்சமா? மூடைக்கு எழுபது ரூபாய் கூடுதல். பூச்சி மருந்து தாறுமாறாக விஷமாய் விலை ஏறி விட்டது. 

சம்சாரி…. சர்வநாசம் தான். 

தேசத்தின் மதிப்பைக் குறைப்பதைப் போல பண மதிப்பைக் குறைத்து விட்டார்கள். மானத்தை ஏலம் போட்டு கூவி விற்கிற மாதிரி…. தங்கத்தை அள்ளிக் கொண்டு போய் விற்று விட்டார்கள். 

பீடி விலை கூடுதல். சிகரெட் விலை கூடுதல். சகல பொருளும் விலைகூடுதல். இன்னும் கூடும். முடிவில்லா மல் கூடும். 

அனுதாபப்பட்ட சம்சாரிக்கு, இப்போது யார் அனு தாபப்படுவார்கள்? 

சம்முகத்துக்கு பேப்பர்களை வாசிக்க வாசிக்க மனசு கொதித்தது. யார் மீது கோபப்பட? 

நாமே நமக்கு தீ வைத்துக் கொண்டு, ‘எரிகிறதே, எரிகிறதே’ என்று கத்திக் கதறினால்….யார் என்னசெய்ய முடியும்? யாரைக் குற்றம் சொல்ல முடியும்? 

உரலுக்குள்ளே தலையைக் கொடுத்தாகி விட்டது. உருவிக் கொள்ள இனி முடியாது. உலக்கைக்குப் பயந்தால்…. என்ன ஆகும்? 

சம்சாரி மண்டை நொறுங்கிச் சாக வேண்டியது தான். 

சம்முகம் உள்ளுக்குள் வெதும்பினான். ரொம்பப் புழுங்கினான். 

பேப்பரைப் படித்த இளவட்டங்கள், பட்ஜெட்குறித் து பலதும் பேசினார்கள். அப்படியும் இப்படியுமாகக் கத் திக் கரைந்தார். மறுத்தும் ஆதரித்தும் இரைந்தார்கள். 

சம்முகம் வெறுப்போடு அவர்களைப் பார்த்தான். ஒன்றும் பேசத் தோன்றவில்லை. என்ன பேச யோக்ய தை இருக்கிறது? என்ன நியாயம் இருக்கிறது? பேசித் தான், என்ன ஆகப் போகிறது? நாமே வைத்த தீ. பற்றிக் கொண்டு எரிகிறது. கத்திக் கதறி ஆகப் போவ தென்ன? 

சம்முகம் மனம் வெம்பிப் போயிருந்தான். 

3

அப்போது தான்- 

நல்லசிவம் அந்த நோட்டீசை நீட்டினான். உழவர் களை வாட்டி வதைக்கிற பட்ஜெட்டை எதிர்த்து மாநி லம் தழுவிய மாபெரும் மறியல் போராட்டமாம். சம்மு கம் நிமிர்ந்து பார்த்தான். 

நல்லசிவம் முகத்தில் அதே சிரிப்பு. கோதுமை முகத் தில் மெல்லிய புன்னகை. கபடமில்லாத புன்னகை. காரித்துப்பினாலும் துடைத்துக் கொண்டு, சிந்துகிற அதே புன்னகை. 

நல்லசிவம் கட்சிக்காரர்களே, ஒரு டைப்புதான். ஊருக்கு நாலுபேர்தான் இருப்பார்கள். உடும்புப்பிடியா இருப்பார்கள். தோற்றாலும், ஜெயித்தாலும், என்றும் போல் என்றைக்கும் மக்களுக்காக போராடிக் கொண் டேயிருப்பார்கள். 

பலனைப் பற்றிக் கவலைப்படாமல், கர்மத்தைச் செய்து கொண்டேயிருக்கிற கர்மயோகிகள். நல்ல பையன்கள். 

“என்னா நல்லசிவம்?’ 

“படிச்சுப் பாருங்க.” 

“படிச்சிட்டேன். தேர்தல்லே தான் ஜனங்க, உங்க ளை மொட்டையடிச்ச மாதிரி ஆக்கிட்டாங்களே, அப்பு றமும் எதுக்கு இதெல்லாம்….?” 

“சிலுவையிலே அறைபட்டு சாகக் கிடக்கிறப்போ கூட ஏசுநாதர் என்ன சொன்னாரு? ‘இன்ன தென்று அறியாமல் பாவம் செய்கிறார். கர்த்தரே, இவர்களை மன்னித்து இரட்சியும்’ ன்னாரு.” 

“அப்போ…. நீங்க ஏசுநாதர் மாதிரியா?” 

“இல்லே. நாங்க போற பெரிய பயணத்துலே இடையிலே வர்றதுதான் தேர்தல். தேர்தல்லே ஜெயிக் கிறது மட்டும் எங்க கடைசி லட்சியம் இல்லே.” 

”அப்புறம்?” 

“இந்தத் தேசமே புதுசா மாறனும். ஏழை பணக் கரான்வித்தியாசமில்லாம, எல்லா இந்தியனும் அண் ணன் தம்பிகளா அன்போட வாழணும். இந்த மண்ணு லே அன்பு ஒன்னு தான் பூக்கணும், காய்க்கணும் கனி யணும்.” 

‘‘அதுக்கு?’’ 

“அன்புக்கு இடமில்லாம, மனுசனை மிருகமா மாத் துற இந்தச் சமுதாயத்தை மாத்தணும். அப்படி மாத்துற சக்தி யார்கிட்டே யிருக்கு? தலைவர்களாலே மட் டும் முடியாது. ஜனங்க தான் சரித்திரத்தை மாத்தி புதுசா எழுத முடியும்.” 

“அந்த ஜனங்கதான் உங்களைக் கண்டு காத தூ ரத்துக்கு ஓடுறாங்களே. கிட்ட வர மாட்டேங்கிறாங்களே?” 

“வருவாங்க. இன்னிக்கு அல்லது நாளைக்கு, நிச் சயமா வருவாங்க. அவங்க வாழ்க்கையை மாத்தி யமைக்க வேண்டிய அவசியத்தை அவங்களே உணரு வாங்க.” 

“அதுவரைக்கும் அவுகளுக்காக நீங்க போராட்டம் நடத்துவிகளாக்கும்?” 

“அதுக்குப் பிறகும் தான்.” 

சீந்துவாரற்ற சம்சாரிகளுக்காக போராடுகிற கர்ம யோகிகள் இவர்கள். இவர்களைச் சீந்துகிற சம்சாரிக ளும் இல்லை. நல்ல கூத்துதான், இது! 

“சரி …இப்ப என்ன விஷயம்?” 

“அதான், பாத்திகளே…. உர உப்பு விலை ஏறியி ருக்கு. பூச்சி மருந்து விலை கூடியிருக்கு. எல்லாப் பொருளும் ஏறுது. சம்சாரிகளைச் சக்கையாகப் பிழியப் போகிற இந்தப் பட்ஜெட்டை கண்டிச்சு, மறியல் போராட்டம் நடத்தப் போறோம்” 

“சரி…. கட்சிக்காரங்க போராடுறீங்க. சம்சாரிக மறியலுக்கு வாராங்களா?” 

“வர்ற மாதிரித் தெரியலே. ஞாயமா பாத்தா நம்ம ஊரு சம்சாரிக எல்லோரும் வரத்தான் செய்யனும். வரலியே. அந்த அளவுக்கு சுரணையிருக்குற சம்சாரி, யாரு இருக்காக?” 

”ஏய்…இந்தா, சகட்டுமேனிக்கு பிடிச்சு விளாசக் கூடாது. எல்லாருமா சொரணையத்துப் போனாக? நா சம்சாரிதானப்பா? நா வாரேன், மறியலுக்கு,” 

”நெசமாவா சொல்றீக?” 

”சம்சாரி பிரச்சனைக்கு சம்சாரி வரலைன்னா எப்படி? நா வரேன்” 

“ரொம்ப சந்தோசம்” 

“ஆனா ஒன்னு, மறியல் போராட்டம்னா, மாசக் கணக்குலே ஜெயில்லே போட்டுட்டா…என்ன செய்றது? இங்கே வேலை ஜோலிக கிடக்குதே. ஆளில்லாம நாறிப் போகுமே.” 

“அதெல்லாம் அடைக்கமாட்டாங்க. நாங்களும் ஏழெட்டு தடவை மறியலுக்குப் போயிருக்கோம். காலை யிலே பிடிச்சு சாயங்காலம் ரிலீஸ் பண்ணிருவாக.” 

“சரி, இந்தத் தடவை அடச்சிட்டா?” 

“செய்ய மாட்டாங்க. தமிழ்நாடு பூரா லட்சக்கணக்குல அரெஸ்ட்ஆவாங்க. அத்தனைபேருக்கும் பானைஞ்சு நாளைக்கு சோறுபோட்டுப் பராமரிக்க… எம்புட்டு செல வாகும்? வீணா செலவழிக்க சர்க்காருக்குக் கிறுக்கா புடிச்சிருக்கு?” 

“அப்ப நா…வரேனப்பா. நா உங்க கட்சி கிடை யாது. சம்சாரிங்கிற முறையிலே வாரேன்” 

நல்லசிவத்துக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. ஒரு குழந்தையப் போல கபடமில்லாமல் கும்மாளமிட் டான். குதூகலித்தான். எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி பூரித்தான். 

மாரியமமாள் எம்புட்டோ தடுத்துப் பார்த்தரள். 

“உங்களுக்கென்ன கிறுக்குப் பிடிச்சுப் போச்சா? தலையிலே சனியன் ஏறிக்கிட்டானா? ஜெயிலுக்குப் போனா கேவலமில்லே? ஊர்ல கைகொட்டி சிரிக்க மாட்டாகளா?” 

சம்முகம் ரொம்பத் தைர்யமாக அவளை மறுத்தான். 

“நீ சும்மா கிட. ஒனக்கு என்ன தெரியும்? கொலை பண்ணி, களவு செய்ஞ்சு ஜெயிலுக்குப் போனாத்தான் கேவலம். இதுல என்ன கேவலம் இருக்கு?” 

“அப்புறம், மாலை போட்டு மரியாதை பண்ணப் போறாகளாக்கும்? பேசாம…. காட்லே உண்டான வேலை யைப் பாருங்க. கூறுகெட்டுப் போய்த் திரியாதீக.” 

“இந்தப் பேப்பர் சம்முகமா, கூறுகெட்டுத் திரியப் போறான்? நல்ல கூத்துதான். நல்லசிவம் சொல்லி யிருக்கான். காலையிலே போய்ட்டு சாயங்காலம் வந்துரலாம்” 

இப்படி வந்து மறியலில் கலந்தவன்தான் சம்முகம். அரெஸ்ட் ஆகி காவல் நிலையத்துக்கு வந்தாயிற்று, இப்போது என்னடா என்றால் நிலைமை ஏடா கூடமாகிறது. 

கீற்றுக்கொட்டகையில் பெயர் பதிகிற மும்முரம். 

“நெக்ஸ்ட்” 

“ம்” 

“சீரியல் நம்பர்?” 

“தேர்ட்டிஎய்ட்” 

எழுதிக்கொண்டிருந்த போலீஸ்காரர் அயற்சியுடன் நிமிர்ந்தார். கழுத்தை அங்கிட்டும் இங்கிட்டுமாய் சுழற்றி சொடுக்கெடுத்தார். விரல்களில் சொடுக்குப் போட்டுக்கொண்டார். 

“நம்ம நைனாவைக் கூப்பிடுங்க, அவர் கொஞ்சம் எழுதட்டும்.” 

“எந்த நைனா?” 

“அவருதான். டென் எய்ட்டி தங்கராசு” 

“இன்ஸ்பெக்டரய்யா சத்தம் போடுவாரு” 

“அடக்கூப்பிடுமய்யா. இங்க மனுசனுக்கு உசுர் போகுது, கையெல்லாம் வலிக்குது.” 

ஆள்மாற்றிக்கொண்டு பதிகிறார்கள். வலுவான அஸ்திவாரம்தான், சந்தேகம் இல்லை, ஜெயில்க்கஞ்சி குடிக்கத்தான் விதியோ…. 

இன்ஸ்பெக்டரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வரு கிற நல்லசிவம் முகத்தில் களையில்லை. உயிரில்லாமல் வந்த அவன் கண்ணில் ஒரு குற்ற உணர்ச்சி, அவன் முகத்தில் வருத்த நிழல் வெட்டப்பட்ட செடியாக வாடிக் கிடந்தான். 

பார்க்கவே பாவமாக இருக்கிறது. 

“என்ன நல்லசிவம், ஒருமாதிரியிருக்கே?” 

“ஒண்ணுமில்லே, நிலைமை தலைகீழாத்தெரியுது” 

“என்ன தெரியுது?”

சாயங்காலம் கோர்ட்டுக்கு கொண்டு போற ஏற்பாடு இருக்கு. ரிமாண்ட் பண்ணுகிற மாதிரி ஒரு சூழ்நிலை தெரியுது. அதுதான் கவலையாயிருக்கு’ 

சம்முகத்துக்குள் ‘பகீர்’ என்றது. எதிர்பார்த்துப் பயந்து கொண்டிருந்த இடி, வந்து விழுந்தே விட்டது. வெறுமனே அவனைப் பார்த்தான். 

“எங்களைப் பத்திக்கவலையில்லே. ஏற்கனவே மூனு தடவை ஜெயிலுக்குப் போய்ட்டு வந்திருக்கேன். ஆனா, உங்களை நெனைச்சாத்தான் வருத்தமாயிருக்கு, ஜெயில் உங்களுக்குப்புதுசு. அதுலேயும், காடு கரைன்னு பொழுதுக்கும் பாடுபடுகிற மனுசர் நீங்க” 

வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது. இனி, சாண் என்ன, முழம் என்ன ! இந்தப்பொடியன் நல்ல சிவத்துக்கு நாம் என்ன குறைச்சல்? கோழையா? அவன் என்ன பதினோரு மாசமா? நாம் என்ன ஒம்பது மாசமா? 

“எதுக்கு நீ வருத்தப்படணும்? உனக்கு உள்ளது எனக்கும். மிஞ்சிப்போனா… பதினைஞ்சு நா உள்ளே போடுவாகளா? போடட்டுமே. நம்ம வீட்லே ஒரு ‘நல்லது பொல்லது’ன்னா வேலை ஜோலிகளைப் போட்டுட்டு பத்து நாளைக்கு அலையுறதில்லே? அப்படி நெனைச்சுக் கிடுவோமே.” 

சம்முகம் தைரியம் சொல்லி, தைரியம் பெற…. அதையும் நல்லசிவம் உணர்ந்து கொண்டான். ரொம்பக் கவலைப்பட்டான். அவனது மனதில் வேறுவேறு அச்சம். 

‘சும்மா ஒரு தோரணையிலே இப்பப் பேசுறாரு. நெசமாவே ஜெயில் வாழ்க்கையைத் தாங்கிருவாரா? பயந்து போயிருவாரா? மன்னிப்பு எழுதிக்கொடுத்துரு வாரோ நம்ம மொத்த இயக்கமே கேவலப்பட்டுப் போகுமோ’ 

நல்லசிவம் சஞ்சலப்பட்டான். உள்ளுக்குள் மருகித் தவித்தான். ஆழ்ந்த நெடுமூச்சு விட்டான். 

4

அந்த வெள்ளை வேன், எழுபத்தேழு இதயங்களின் தவிப்புகளை சுமந்து கொண்டு பிசாசாய் விரைந்தது. திருமங்கலத்தைத் தாண்டிக் கொண்டிருந்தது. 

எஸ்க்கார்டாக வந்திருந்த போலீஸ்காரர்கள் ரொம்ப ரிலாக்ஸா உட்கார்ந்திருந்தனர். தொப்பியைக் கழற்றி விட்டனர், சட்டைப்பட்டனைக்கழற்றி விட்டிருந்தனர். 

அதில் ஒரு போலீஸ்காரர், நல்லசிவத்திடம் ஆர்வ மாய்க் கதை சொல்லிக் கொண்டு வந்தார். போலீஸ் போராட்டம் நடந்த காலத்தில்… போராட்டத்தில் கலந்து கொண்ட பிறர், மனம் கலங்கித் தவித்ததை காட்சிகாட்சியாகக் கூறினார். தொப்பியைப் பிடுங்கிக் கொண்டு தெருவில் துப்பிவிடுவார்களோ என்று பயந்து பயந்து செத்ததை விலாவாரியாகச் சொல்லிக் கொண் டிருந்தார். 

சம்முகம் நல்லசிவம் பக்கத்தில்தான் உட்கார்ந்திருந் தான். அதைக் கேட்டும் கேளாமல் இருந்தான். பாதி மனசு வீட்டுக்குப் போய்விட்டது. 

மாரியம்மாளை நினைத்தான். மகள் காமாட்சியை நினைத்தான். பத்து வயசிருக்கும் ளையமகன் கதிர்வேலைப் போலில்லை, அவள். 

காமாட்சி, அய்யா பிள்ளை. படுக்கும் போது அய்யா கட்டிக்கொண்டு படுத்தால்தான் அவளுக்கு உறக்கம் வரும். 

ஏதாகிலும் வேலையாய் வெளியூர் போயிருந்தால், சாமக்காட்டில்தான் வீடு திரும்புவான் சம்முகம். வந்த வுடன் மாரியம்மாள் காமாட்சி பற்றிய புகார்களைத்தான் கொட்டுவாள். 

அய்யா இல்லாமல் அவள் உறங்க மறுத்து சிணுங்கிச் செய்த சேட்டைகளை ஒருமூச்சு சொல்லித் தீர்ப்பாள். எரிச்சலோடு வார்த்தைகளை எறிவாள். 

“புள்ளையா, அது? கொரங்கு. என் உசுரைப் புடுங்க வந்துருக்கிற யமன். அப்பனைக் கட்டிக்கிட்டே ஒறங்கணுமாம். இப்படியும் ஒரு புள்ளையா? கூத்துத் தான்” 

அது, இவனுக்குத் தேனாமிர்தமாய் இனிக்கும். சந்தோஷத்தில் மனசு கிடந்து உருகிக்கசியும். விரலைச் சூப்பிக்கொண்டு தூங்குகிற மகளை பெருமிதமாய்ப் பார்ப்பான். 

இவன் சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவான். விடியற் காலம் முழித்துப் பார்த்தால்… கழுத்தைக்கட்டிக் கொண்டு பக்கத்தில் கிடப்பாள், காமாட்சி. அவளது பிஞ்சுக்கால் இவனது வயிற்றில் குறுக்காகக் கிடக்கும் அவள் வடிக்கிற எச்சில் இவனது தோள்பட்டையில் பிசுபிசுத்துக் கிடக்கும். 

மனசு நிறைந்து ததும்பும், சம்முகத்துக்கு. 

காமாட்சி முழுக்க இவனது அம்மாவின் அச்சு. கண், மூக்கு, முக அமைப்பு, சுபாவம் எல்லாமே அம்மாதான். அம்மாவே மறுபிறப்பாக வந்து பிறந்து விட்ட மாதிரி ஒரு பிரமை. சம்முகத்துக்குள் ஆழத்தில் இனம் புரியாத ஒரு பரவசம் பற்றிப்படரும். 

இப்போது காமாட்சி என்ன செய்கிறாளோ? எப்படி அழுது ஏங்கித் தவிக்கிறளோ… 

“அய்யாவை எங்கேம்மா? அய்யாவை எங்கேம்மா?” என்று ஓயாமல் மாரியம்மாளிடம் நச்சரிப்பாள். புருஷன் மீதுள்ள கோபத்தில் குமைந்து கிடக்கிற மாரியம்மாள், இந்த நச்சரிப்பு தாங்காமல் அவளைப் போட்டு அடிப்பாள். 

பாவம்…. அந்தப்பூ! 

சட்டென்று வேனுக்குள் ஒரு தடபுடல். ஒரே கூட்டுக்கோஷங்கள். 

“உரவிலையை உயர்த்தாதே!” 

‘“உலகவங்கிக்குப் பணியாதே!” 

“சுதந்திரத்தை அடகு வைக்காதே!” 

”விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே!” 

“மறியல் போராட்டம் வெல்க!” 

இப்படிக் கோஷங்கள். தொண்டை கிழிய கோஷங் கள். நரம்புகள் விம்மித் தெறிக்க கோஷங்கள். 

ஒரு ஊரைத் தாண்டுகிற போதெல்லாம்-தெருவில் மக்கள் தட்டுப்பட்டு விட்டால் போதும்-கோஷங்கள் தூள்பறக்கும். வேன் கலகலக்கும். வீதியில் போகிற மக்கள், விரைந்தோடுகிற வேனை ஒரு ஆச்சர்யமாய்ப் பார்ப்பார்கள். 

பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற நல்லசிவத்திடம் முகத்தைக் காட்டக்கூடாது. முகத்தில் மனசைக்காட்டி விடக்கூடாது. தைரியமாக இருப்பது போல சுமுகமாகத் தோற்றமளிக்க வேண்டும். 

பாவம், அவன் வேறு கலவரப்படுவான். 

நல்லசிவம் சோதனைக்காகவாவது அடிக்கடி சம்முகத்தையே பார்ப்பான். கண்களுக்குள் 

கண்களுக்குள் ஊடுருவிப் பார்ப்பான், மனசை எட்டிப் பார்க்கிற மாதிரி…அப்படி யோர் பார்வை. 

பயல் இளவட்டமாக இருந்தாலும், விவரமான பையன்தான், துடியாகவும் இருக்கிறான். பெரிய மனிதத் தோரணையாகவும் இருக்கிறான். உணர்வறிந்து நடந்து கொள்கிறான். 

பார்த்தால் பசுபோல இருக்கிறான், கொதித்து விடாமல் என்னமாய் கர்ஜிக்கிறான். இளங்கன்று பயம் அறியாது என்பார்களே, அது நிஜம் தான். 

மதியம் வரைக்கும் இன்ஸ்பெக்டரோடு அத்தனை சுமுகமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவன், சாயங் காலம் என்னமாய் சண்டைக்குப் போய் விட்டான். பயமில்லாமல், காட்டுக்கத்தலாய் கத்திவிட்டானே! 

”காலையிலேதான் இனி கோர்ட். எல்லாரும் லாக்கப்லே தங்குங்க” என்றார் இன்ஸ்பெக்டர், அவ்வளவுதான். 

நல்லசிவம் முகமெல்லாம் சினக்க, ‘பிலு பிலு’ வென்று மல்லுக்குப் போய்விட்டான். 

“ஒன்று எங்களை சென்ட்ரல் ஜெயிலுக்குக் கொண்டு போங்க, இல்லேன்னா…. ரிலீஸ் பண்ணுங்க.” 

“அதெப்படி முடியும் மிஸ்டர் நல்லசிவம்? கோர்ட் டயம் முடிஞ்சு போச்சு.” 

‘‘அது எங்களுக்குத்தெரியாது. இந்த நாத்தமெடுத்த லாக்கப்லே நாங்க எழுபத்தேழு பேரும் எப்படித் தங்க முடியும்? நாங்க என்ன சாக்கடைப் பன்னிகளா? அரசியல் கைதிகள்.” 

“அதுக்கு என்ன? நாங்க என்ன பண்ண முடியும்? இப்ப ஒண்ணும் செய்ய முடியாதே. இம்பாஸிபிள்”. 

“அதையும் பாத்துருவோம். இந்த நிமிஷத்தில் இருந்து உண்ணாவிரதம்.” 

“மிஸ்டர் யோசிச்சு முடிவு செய்யுங்க. அப்புறம் சங்கடப்படுவீக.” 

“அதைப்பத்திக் கவலையில்லே, சார். ஜனங்களுக் காகப் போராடி ஜெயிலுக்குப் போறதுக்கு துணிஞ்ச எங்களை…சும்மா மிரட்டிப்பாக்காதீங்க, சார்.” 

“போங்க, லாக்கப்புக்கு.” 

“முடியாது. உண்ணாவிரதம்தான்.” 

நல்லசிவத்துக்குள் இப்படியோர் ருத்ரசிவமா? அனல் பறக்க கோஷமிட்டான். எல்லோரும் அதையே எதிரொலித்தனர். 

ஸ்டேஷனுக்கு வெளியே கூட்டம் கூடிவிட்டது. 

சம்முகம் பதறிப்போனான். உள்ளுக்குள் நடுக்கம். 

மதியத்தில் ‘தலைவரே’ என்ற இன்ஸ்பெக்டர், இப்போது ‘மிஸ்டர்’ என்று சீறுகிறாரே! 

நிலைமை எக்கச்சக்கமாகி விட்டது. ஸ்டேஷன் முழுக்க கோபவெக்கை. லத்தி சார்ஜ் துவங்கிடுமோ…. கைகால் முறியுமோ…. 

விறைப்பாக அணிவகுத்துவிட்ட போலீஸ்காரர்களை மிரட்சியுடன் பார்த்தான் சண்முகம். 

வெளியே கூடிய கூட்டத்தை கடுப்புடன் பார்த்தார் இன்ஸ்பெக்டர். அவர் முகத்தில் அனல் பறந்தது. நல்லசிவத்தை எரிப்பதுபோல பார்த்தார். 

எரிச்சலோடு ஃபோனை எடுத்தார். விருட் விருட் டென்று இழுத்தார். யார்யாருடனோ பேசினார். கத்தினார். கெஞ்சினார். 

அப்புறம் – 

“சரி… கோர்ட்டுக்குக் கிளம்புங்க.” 

விசேஷச் சூழ்நிலையில் நேரம் கெட்ட நேரத்தில் கோர்ட் உயிர் பெற்றது. ஐந்தரை மணிக்கு மாஜீஸ்ட்- ரேட் சிறப்பு வருகை செய்தார். குட்டையான கனத்த ஆள். 

ஒரு வரியில் வேலை முடிந்தது! “பதினைந்து நாள் ரிமாண்ட்.” 

அப்புறம், ரிக்கார்டு வேலைகள், பதிவு வேலைகள், எஸ்கார்ட், படிக்காசு என்று சர்ச்சைகள். 

கோர்ட்டுக்கு வெளியே கூடிய கட்சிக்காரர்கள், மறியல் வீரர்களுக்கு வடை, டீ எல்லாம் சப்ளை செய் தார்கள். பீடி, சிகரெட், வெற்றிலை, பாக்கு எல்லாம் தாராளமாய்ப் புழங்கியது. 

உற்சாகமாக வார்த்தைகள் சொன்னார்கள். வாழ்த்து கோஷம் முழக்கினார்கள். 

சம்முகம் உள்ளுக்குள் நொறுங்கி நைந்து போனான். நனைந்த காகிதமாகிவிட்டான். 

வம்பில் வந்து மாட்டிக் கொண்டோமோ என்று தோன்றியது. வழியில் போய்க்கொண்டிருந்த சனியனை தோளில் ஏற்றிக் கொண்டோமோ…. என்ற நமைச்சல், மனசுக்குள் நெருஞ்சிமுள், முட்கள், உறுத்தின, குத்தின. 

எதையும் கவனிக்க இயலவில்லை. மனசு எதிலும் ஒட்ட முடியாமல்… சூறைக்காற்றுத் துரும்பாய் அலைந்தது. 

ஆனால்…. வெளியே கூடி நின்று வாழ்த்தியவர்களில் பேங்கில் வேலை செய்கிறவர்கள், பேராசிரியர்கள், டாக்டர்கள் இவர்களெல்லாம் இருந்தது.சம்முகத்துக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

நல்லசிவம் கட்சிக்கும் இப்படி செல்வாக்கு இருக் கிறதோ என்று ஒரு பிரமிப்பு!. 

ஏழு மணிக்கு மத்திய ஜெயில், அங்கும் வரிசையில் உட்கார்ந்து, பெயர் பதிவு, மச்சம் பார்த்தல் எல்லாச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் முடிந்து உள்ளே நுழைய மணி எட்டாகி விட்டது. 

ஆளுக்கொரு மம்பட்டியான் ஜமுக்காளம், அலுமினி யத்தட்டு, அலுமினியக்குவளை வழங்கப்பட்டது. 

உள்ளே போனால் 

ஜெயில். அது ஒரு தனி உலகம். 

ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மறியல் வீரர்கள் அத்தனை பேரும் இந்த ஜெயிலில் தான். இரண்டாயி ரத்துக்கும் மேல் ஆட்கள். ‘ஜே, ஜே’ என்று கூட்டம். 

உள்ளே வந்து பார்த்தால், ஜெயில் மாதிரித் தோன்றவில்லை. ஏதோ மாநாட்டுப் பந்தலுக்குள் நுழைந்த மாதிரியிருந்தது. 

ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவருக்கொரு வர் அறிமுகமானவர்கள். வரவேற்பும் உபசரிப்புமாக கலகலத்தது. கேலியும் கிண்டலும் தோழமைச் சிரிப்பு மாய்… பெரீய்ய கல்யாண வீடு போல இருந்தது. 

மாமரத்துக் குவாரைண்டனும், புளியமரத்துக் குவா ரைண்டனும் போதவில்லை. இரண்டுக்கும் இடையில் உள்ள கதவைத் திறந்து விட்டார்கள். 

கிரிமினல் குற்றவாளிகளை அடைத்துப் பூட்டுவ தற்கு ஒரு பெரிய அறையை மட்டும் ஒதுக்கி விட்டு, மீதியெல்லாம் இவர்களுக்குத்தான். 

ராத்திரிச் சாப்பாடு வந்தது. ஒரு சதுரமான கனத்த இரும்புத்தகடு. அதன் முன்னும் பின்னுமாய் நீட்டிக் கொண்டிருந்த நான்கு கம்பிகள். 

அந்தத் தகட்டில் மலையடுக்குகள் போல சோற் றுக் கட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன. அதை இரண்டு தண்டனைக் கைதிகள் வேர்க்க விறுவிறுக்க சுமந்து வந்தனர். சுமக்க முடியாமல் அவர்கள் திணறிய திணறல், அவர்கள் விட்ட ஆயாசப் பெருமூச்சில் இரைந்தது. 

குத்தண்டா மாதிரி உயர்ந்த இரும்புச் சட்டி. இதில் இரண்டு கைப்பிடி வளையம். அதற்குள் கனத்த மூங்கி லைக் கொடுத்து, தோளில் போட்டு சுமக்க முடியாமல் சுமந்து வந்தனர். அவர்களும் தண்டனைக் கைதிகள் தான். 

அந்தச் சட்டியின் இடுப்பில் ‘மாமரம்’ என்று சாக் பீஸால் எழுதியிருந்தது. அது நிறைய சாம்பார். தண் டுக் கீரையும் முள்ளங்கியும் மிதந்தன. 

பரிமாறப்பட்டது. எல்லோரும் வரிசையில் வந்து வாங்க வேண்டும். மேற்பார்வைக்கு கன்விக்ட் வார்டர் கள் வந்து நின்றனர். 

பயங்கரக் குற்றவாளிகள், பெரிய தண்டனைகள் அடைந்து, நாளாவட்டத்தில் நன்னடத்தை காரணமாக வார்டர்கள் ஆனவர்கள். 

வெள்ளை வெளேர் என்று யூனிபார்ம். விசில். தொப்பி. கையில் ஒரு உருட்டுத் தடி. 

சம்முகமும் வரிசையில் வந்தான். அவன் வட்டிலில் ஒரு சோற்றுக் கட்டி. ஒரு அகப்பை சாம்பார். ஒரு கடலை உருண்டை. 

”ம்…. அம்புட்டுத்தான்” என்று உறுமினான். 

அந்தப்பயங்கர முகத்தை மிரட்சியோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தான் சம்முகம். 

மாமரத்துக்கு அடியில் போய் உட்கார்ந்தான். சாப்பாடு முழுக்க கல், ‘நெறு, நெறு’ என்கிற பொடிக் கற்கள். சாம்பாரும் என்னவோ மாதிரியிருந்தது. வாய்க்கே விளங்கவில்லை. 

‘அச்சடிச்ச களியும் 
அவுன்ஸ் கிளாஸ் சாம்பாரும் 
வெண்ணெய் எடுக்காத மோரும் 
வேப்பமரத்து நிழலும்,’ என்று ஜெயில் சோறு பற்றிப் பெருமையாகப் பாட்டுப்பாடுவார்களே, இது என்ன இப்படி இருக்கிறது? ருசியில்லாமல் – சுத்தமில்லாமல், சே! 

இதை மனுசன் தின்ன முடியுமா? 

சம்முகத்துக்குக் குமட்டிக்கொண்டுவந்தது.வட்டிலை வெறித்துப் பார்த்தான். அப்படியே கீழே கொட்டி விடலாமா? என்று ஒரு கணம் யோசித்தான். 

நிதானித்தான். இன்னும் பதினைந்து நாட்கள், சனியன் பிடித்த இந்த நரகத்தில் கிடந்தாக வேண்டும். வயிற்றைக் காயப் போட முடியாது. நிரந்தரமாக பட்டினி கிடக்க முடியாது. 

பல்லைக்கடித்துக் கொண்டு சகித்துக் கொண்டான். சாப்பிட முயன்றான். 

சாப்பிடுகிற அழகைப் பார்ப்பதுபோல ஒரு எதிர் பார்ப்போடு உட்கார்ந்திருக்கிற மாரியம்மாள் இல்லை. சாப்பிட்டுக் கொண்டே கொஞ்சலும் கெஞ்சலுமாய் சள சளக்கிற மகள் காமாட்சி இல்லை அம்மாவிடம் அக்காவைப் பற்றிப் புகார் சொல்லிக்கொண்டே போகிற கதிர்வேலு இல்லை. 

சம்முகம் கண்ணுக்குள் உறுத்தல். முட்டிக்கொண்டு வருகிற ஏக்கம். மனசுக்குள் கசாமுசா. அழ வேண்டும் போலிருந்தது. 

சுற்றிலும் ஆட்கள். தட்டும் குவளையும், ஜமுக் காளமுமாய் லாந்துகிற ஆட்கள். சம்முகத்துக்குள் வெறுமை. சூன்யத்திற்குள் விடப்பட்ட மாதிரி ஒரு பிரமை. 

விழிக்கடையிலிருந்து ஒரு துளி உதிர்ந்து, வட்டி லில் விழுந்தது. சோறு தொண்டைக்குள் இறங்க மறுக்கிறது. 

ராத்திரியே கூட்டம் கூடியது. இரண்டாயிரத்துக் கும் மேற்பட்ட மறியல் வீரர்கள் சகலரும் மாமரத்து மைதானத்தில் கூடினர். பலவித மனிதக் குரல்கள். சந்தை இரைச்சல். 

சாப்பாடு பற்றிய புகார்க்கூச்சல். கக்கூஸ் பற்றிய குற்றச்சாட்டுகள். தண்ணீர்த் தட்டுப்பாடு பற்றிய கூப் பாடுகள். ஏகமாய்ச்சளசளப்பு. பலவித கோபக்குரல்கள் முடிவில்லாத குமுறல்கள். 

கடைசியில், ஒரு தலைவர் திண்ணையின் மேல்ஏறி நின்று கோஷம் கொடுத்தார். எதிர்பார்ப்பு நிறைந்த கனத்த அமைதி. 

அவர்களுக்குள் அமைக்கப்பட்டிருக்கிற கம்யூன் பற்றி-அமைச்சரவையைப் பற்றிக் கூறினார். நல்லசிவம், கலாச்சாரத்துறை அமைச்சர். 

மந்திரிகளின் கடமைகள் பற்றி விளக்கினார். 

சிறை நிர்வாகம்-சீர்கேடுகள் – கைதிகளுக்குரிய சலுகைகள், ‘வசதிகள் மறுக்கப்படுகிற அநீதி பற்றி யெல்லாம் பேசிய அவர், இந்தச் சீர்கேடுகள் நீங்கும் வரை, ‘உண்ணாவிரதப் போராட்டம்’ என்று உற்சாகமாக பிரகடனம் செய்தார். 

சம்முகம் திடுக்கிட்டான். ‘இங்கும் போராட்டமா?’ 

சிறைச்சாலைக்குள் நடத்துகிற போராட்டம்,  வெளியே யாருக்குத் தெரியும்? உள்ளே வைத்து எல்லாரையும் அடித்து நொறுக்கினால், என்ன செய்வது? யார் வந்து தடுக்க முடியும்? 

இதென்ன… புதுவம்பாக முளைக்கிறது? 

கூட்டம் முழுக்க அலை அலையாகக் கரைபுரளுகிற உற்சாகம். ‘ஓங்குக, ஓங்குக’ என்கிற காட்டுக்கத்தல். 

சம்முகத்துக்கு அடிவயிற்றை கலக்கியது. 

அடிபட்டு முறிந்த காலோடு ஆஸ்பத்திரியில் கிடக்கிற சம்முகம். வலி பொறுக்காமல் கதறுகிறான். இந்தக் கொடுமையும் உண்டுமா?” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுகிற மாரியம்மா. “அய்யா, அய்யா” என்று கதறிக் கரைகிற காமாட்சி… 

மனசுக்குள் தெரிந்த கற்பனைக் காட்சி. அவனுக்குள் நடுக்கம். திசையறியாமல் வந்து சிக்கிக்கொண்ட பயம். விதம் விதமான மனக்காட்சிகள்… கிலி, திகில். 

உறக்கம் கண்ணில் ஒட்டவே இல்லை. 

நொய்யிடுகிற கொசுக்கள். இந்த ஆடிமாசத்திலும் கொசுவா ! அடேயப்பா, ‘எந்தத் தண்டியாக’ இருக்கிறது! ஒரு ஈயைப்போல. 

மாமர அடர்த்திக்குள் பறவைகளின் ராத்திரி ரகசிய மொழிகள். சின்னச் சின்னச் சண்டைகள். 

நள்ளிரவிலேயே மந்திரிசபை கூடியது. ஜெயில் சூப்பிரண்டெண்ட் அழைத்தால்…. பேச்சு வார்த்தைக்கு யார் யார் போவது? எப்படிப் பேசுவது? எதை எதைக் கோருவது? எது ஏதற்கு ஓப்புக்கொள்வது? 

நல்லசிவம் வந்து விபரம் எல்லாம் சொன்னான். சம்முகம் ‘உம்’ கொட்டினான். ஒன்றும் பேசவில்லை. எதைப்பேச? அரண்டு போய்க் கிடந்தான், 

‘விடிஞ்சா…. என்ன நடக்கப் போவுதோ’ என்கி ற திகில், கிலி பிடித்த மனசில் உறக்கம் வந்து ஒண்ட முடியுமா? 

6 

சம்முகம் வெறுமனே புரண்டு கொண்டிருந்தான். மகள் காமாட்சி ஞாபகம், புண்ணில் வந்து மொய்க்கிற ஈக்களாக, மீண்டும் மீண்டும். 

இன்னும் விடியவில்லை. சாரல் மேகத்திற்குள் தேய்பிறை நிலா, ஒளி செத்துக் கிடந்தது. கூதலடிக் கிறது. 

நாலரை மணி இருக்கும். ஜெயிலின் சகல ஜீவ ராசிகளும் கதிகலங்கிப்போகிற மாதிரி, ஒரு சைரன் இரைச்சல். காது ஜவ்வுகளைக் கிழிக்கிற இரைச்சல். 

அடுத்த ஐந்தாவது நிமிடம், வார்டர்கள் பேரேடு களோடு வந்து விட்டனர். 

“ஃபைல் … ஃபைல் ஃபைலுக்கு நேரமாச்சு எல்லாரும் எந்திருச்சு வாங்க. ஃபைல்.” 

சம்முகத்துக்கு ஒன்றும் புரியவில்லை. வைகறை மயக்கத்தில் லயித்துக் கிடந்தவர்கள், கெட்ட கனாக் கண்டவர்களைப் போல திடுக்கிட்டு முழித்தனர். ஒன்றும் புரியவில்லை. 

நல்லசிவம் எல்லாரையும் எழுப்பிவிட்டான். 

”ஃபைலுக்கு நேரமாச்சும் வாங்க, வாங்க.” 

நாலு நாலு பேராக, வரிசையாக உட்காரவைக்கப் பட்டனர் உறங்கியவர்கள், கக்கூஸ் போனவர்கள் எல்லாரும் வந்து சேர…. வரிசை அமைய தாமதமாயிற்று. 

வார்டர்கள் பொறுமையிழந்து முணங்கினர். 

மாமரப்பறவைகள் சப்த அதிர்வில் மிரண்டுபோய் கீச்சிட்டன. 

தூக்கச்சடவு நீங்காத முகங்களை முழங்கால்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு, கோழித்தூக்கம் போடடனர். 

இரண்டு வார்டர்களும் மாறி மாறி வரிசையை எண்ணினர். பேரேடுகளிலுள்ள கணக்குடன் ஒப்பிட்டனர். மாமரத்தில் எத்தனை’ ‘புளிய மரத்தில் எத்தனை ‘டோட்டல் எவ்வளவு’ ‘சரியாப் போச்சா?’ ‘செக்கப் பண்ணுங்க’ ‘ஓகே.’ 

ஒரு வார்டர் பலமாகக் கத்தினார் “ரைஸ்!” 

எல்லோரும் மொளோரென்று எழுந்தனர். கக்கூஸ் பக்கம் ஓடியவர்கள் சிலர். விட்ட இடத்திலிருந்து தூக்கத்தைப் பிடிக்கப் போனவர்கள் பலர். 

சம்முகம் மாமரத்தடியில் வந்து சாய்ந்து கொண்டான். பசிக்கிற வயிற்றைத் தடவிக் கொண்டான். 

பறவைகளின் உலகமும் விழித்துக் கொண்டது. காகங்கள் கரைந்தன. மைனாக்கள் ‘கிச்சட்டி, கிச்சட்டி’ என்று கொஞ்சிக் கொண்டன. 

சம்முகம் மனசுக்குள் ஊர் வந்தது. உழுது கொண்டு இருக்கிற புஞ்சையில் ஈரமண்ணில் மைனாக்களும். கரிச்சான்களும் வந்து குதித்துக் குதித்து புழுக்களைப் பொறுக்கும் காட்சி, ஞாபகத்தில் உரசியது. 

ஆடி மாசம். தேடிக்கிடைக்காத ஆடிப்பட்டம். கிராமத்து சம்சாரிகள் தூசியும் துப்பட்டையுமாய் அலை வார்கள். ராத்திரியிலும் வேலைகள்தான். 

கம்மங்கதிர்களை அறுக்கணும். களம் சேர்க்கணும். 

காவல் காத்து, காய வைத்து, அடித்து, தூற்றி, மூடையாக்கி வீடு கொண்டு வந்து சேர்க்கணும். 

அறுத்துக் காயப் போட்ட கம்பந்தட்டைகளைக் கட்டணும். வண்டியில் பாரம் ஏற்றணும். கொண்டு வந்து சேர்த்து படப்பாக அடுக்கணும். 

நிலத்தை உழணும். குப்பையடிக்கணும். மண்ணடிக்கணும். மிளகாய் நாற்றங்கால் போடணும். 

சமையலுக்கு அமைகிற பக்குவத்தைப்போல, சம் சாரிக்குப் பருவம். அமைகிற பருவத்தில் உரியதைத் தவறாமல் செய்யணும். தவறவிட்டுவிட்டால் … வருஷ வெள்ளாமையே தவறிப்போகும். 

முதல்கோணல் முழுக்கோணல் ஆகிவிடும். வெள்ளாமையைத் தவறவிட்டு விட்டால்…. வாங்கிய கடன் காரனுக்கு எப்படி நல்ல பிள்ளையாவது? எதை வைத்துக் கடன் அடைப்பது? கஞ்சிக்கு எங்கே போக? சத்திரம் சாவடிக்கா? திருவோடு எடுத்துக்கொண்டா? 

உழுகிற காலத்தில் ஊர் சுற்றுகிறவன், அறுக்கிற காலத்தில் அரிவாள் தேடவேண்டாம் என்று சொலவடை சொல்வார்கள். நியாயந்தானே! 

ஜெயிலில் இருந்து விட்டு ஊர் போனால், வெள் ளாமை வீடு வந்தா சேரும்? 

மாரியம்மா படித்துப் படித்துச் சொன்னாளே…. 

‘உண்டான ஜோலியைப் பாருங்க’ என்றாளே…. 

வீராப்பாகப் பேசிவிட்டு வந்து, என்ன ஆயிற்று? ஒன்று நினைக்க, வேறொன்றாக முடிந்து விட்டதே. ‘சாயங்காலம் திரும்பி விடலாம்’ என்ற நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்கள் பாவிகள்! 

காடு அங்கே. மாலைக்கு ஏங்கும் கன்னிப் பெண்ணைப் போல, வியர்வைக்கு ஏங்கும் புஞ்சை. வாழா வெட்டியைப் போல கண்ணீர் சிந்துகிற தோட்டம். 

ச்சே! நான் வந்திருக்கக்கூடாது. ஒதுங்கியிருந்திருக்கணும். நான் வந்ததினால்…. இங்கு என்ன கிழிந்து விட்டது? 

இங்க நடத்துகிற போராட்டமும், போடுகிற கோஷமும் டெல்லிக்கா கேட்டு விடப்போகிறது? பயந்து போய் உர விலையெல்லாம் ‘மளமள’ வென்று சரிந்தா போய்விடும்? 

எல்லாம் வெற்று வேலை. விரையம். கூறு கெட்ட மனப்பிரமை. வந்தது தப்பு. 

மாரியம்மா தவிப்பு, காடுகரை சேதாரம். இந்த வருஷ வெள்ளாமையே நாசம். காமாட்சி… 

ஊகும்…. நாம வந்தது முட்டாத்தனம். ஒதுங்கி யிருந்திருக்கணும். நல்லசிவம் கூப்பிடவா செய்தான்? 

நானாக அல்லவா முந்திரிக்கொட்டை மாதிரி ‘நா வாரேன்’ என்று உளறித் தொலைத்தேன்? 

நாக்கில் சனி. நாவில் உட்கார்ந்திருந்த சனி, வழியில் போன சனியனை வா’ வென்று கூப்பிட்டுக் கொண்டது. ரெண்டு சனியன்களும் சேர்ந்து கொண்டு, புத்தியைச் சீரழித்துப் பிழைப்பைக் கெடுத்துவிட்டது. 

வருஷம் பூராவும் மாரியம்மா பிய்த்துப் பிடுங்குவாள். முள்ளாய்க் குத்துவாள். இப்படி கூறு கெட்ட மனுச ரும் ஒலகத்துலே இருப்பாகளா? ஊரைக் காப்பாத்த ஜெயிலுக்குப் போய்… வீட்டை நாசம் பண்ணுகிற ஆம்பளையை எங்காச்சும் பாக்க முடியுமா?” 

குத்திக் குத்தி வாங்குவாள். கொத்திக் கொத்திப் பிடுங்குவாள். கேட்டுத்தான் ஆக வேண்டும். சகித்துத் தான் ஆகவேண்டும். செய்த தப்புக்குத் தண்டனை அனுபவித்துத்தானே ஆகவேண்டும்? வேறுவழி? 

போதாக்குறைக்கு-

இங்கு வேண்டாத வம்புதும்புகள். உண்ணாவிரதப் போராட்டமாம்! நல்ல கூத்து! 

திமிர் ஏறிப்போய்க் குற்றம் செய்கிறவர்களை ஒடுக்கு வதற்காக கொண்டு வந்து அடைக்கிற இடம், ஜெயில். இங்கேயும் போராட்டமா? விடுவார்களா? 

இன்றைக்கு சகலரையும் அடி பின்னியெடுத்து விடு வார்கள். கால் போச்சு, கை போச்சு என்று ரத்தக் காயத்தோடு புலம்ப வேண்டியதுதான். 

அதுதான் நடக்கப் போகிறது…. 

காலை உணவு வந்து சேர்ந்தது. சோளத்தில் செய்த உப்புமா. கோழிகூட திங்காது. 

இரண்டு குவா ரைண்டினிலும் வந்த உப்புமா, சீந்துவாரில்லாமல் வெயிலில் காய்ந்தது. ஈக்கள் மட்டும் தான் மொய்த்தன. 

மதியச்சாப்பாடும் வந்தது. அரிசிச் சோற்றுக்கட்டி, கோதுமைக்களி, மோர்… 

யாரும் போய் வாங்கவில்லை. சம்முகத்துக்குள் ‘திக், திக்’கென்று பயம். அடிக்கொரு தரம் சிறை வாசலையே பார்த்தான். 

எந்த நிமிஷத்திலும் திமுதிமு வென்று போலீஸ் பட்டாளம் வெள்ளமாய் வரலாம். தடிகளோடு பாயலாம். நரவேட்டை நடக்கலாம். 

12-30க்குப் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு வந்தது. நல்லசிவம் போயிருந்தான். 

டோய்விட்டு வந்தவர்களை அனைவரும் மொய்த் தனர். ஆவல் பரபரப்பு, கூச்சல், சந்தைக்கடை இரைச்சல். 

நல்லசிவம் மகிழ்ச்சிக் கூவலாகக் கூறினான். 

“வெற்றி! வெற்றி! மக்கள் சக்திக்கு மகத்தான வெற்றி!” 

சம்முகத்துக்கு ஒரு இழவும் புரியவில்லை. அவன் பயத்தோடு எதிர்பார்த்தது ஒன்று. இங்கு வேறு  ‘என்னவோ’ நடக்கிறது…. 

‘என்னடாயிது…. எல்லாம் ஏறுக்கு மாறா இருக்கு’ 

தலைவர் மரத்தடித் திண்ணையில் ஏறி நின்றார். பேசினார். கூட்டம் முழுக்க மகிழ்ச்சிக் கோஷங்கள். ஒவ்வொரு முகங்களிலும் சிரிப்பு வெளிச்சம்…. 

அவர் பேசியது பொய்யில்லை. மறுநாள் உணவு சுத்தமாக இருந்தது. உணவு அமைச்சர் கண்காணிப்பில் தயாரிக்கப்பட்ட உணவு. ராத்திரியிலேயே தடிகளும் தென்னங்கிடுகுக் கட்டுகளும் வந்து குவிந்தன. தற் காலிகக் கக்கூஸ் உதயமாயிற்று. குளிப்பதற்கும், குடிப் பதற்கும் தனித்தனியாக நகராட்சி லாரிகளில் தண்ணீர் வந்தது. 

மறுநாள் இரவு, நல்லசிவம் ஏற்பாட்டில் பட்டி மண்டபம். 

‘உழுகிறவன் அழுவதற்கு பெரிதும் காரணம், அரசின் கையாலாகாமையா- உழவனின் அறியாமையா’ 

ஏகக்கலகலப்பு. ஒரே நகைச்சுவை மயம். சிரித்து மாளவில்லை. முழுக்க நையாண்டிகள். நாகரீகம் குன்றாத கேலிகள். வார்டர்கள் நன்றாக ரசித்தார்கள். 

அரசாங்கமும், அதிகாரிகளும் கிழிக்கப்பட்டார்கள். உழவனையும் சும்மா வைக்கவில்லை. சகுனம் பார்க்கிற சம்சாரி-பொழிச்சண்டையில் நிலத்தையே தொலைக்கிற சம்சாரி- -சாதிச்சண்டையில் சாகிற சம்சாரி-நல்ல தலைவர் களை இனம் காணத்தெரியாத சம்சாரி….என்று சம்சாரி களும் விமர்சிக்கப்பட்டார்கள். 

சம்முகம் ரொம்ப ரசித்தான். அவன் அடிமனதில் உறைந்து கிடந்த அபிப்ராயங்களே அங்கே பேசப்பட்ட மாதிரியிருந்தது. மனம் விட்டுச் சிரித்தான். அடிக்கொரு தடவை கைதட்டினான். 

அன்றைக்குத்தான்- 

அவன் நன்றாக உறங்கினான். 

சாயங்காலம் ‘ஃபைல்’ முடிந்தவுடன், மைதானம் முழுக்க ஆட்கள். சடுகுடு விளையாடுகிற கோஷ்டிகள்- தத்துவ சர்ச்சை நடத்துகிற குழுக்கள்-நாடக ஒத்திகை கள் நடத்துகிற கூட்டம்-புதிய பாட்டுகள் கட்டுகிற வேலை – என்று ஆங்காங்கே வேலைகள் மும்முரமாய்… 

சம்முகம் சலிப்பும், வேதனையுமாய் வராண்டாச் சுவரில் சாய்ந்து சரிந்து கிடந்தான். 

நேற்றுப்போல இருக்கிறது, பன்னிரண்டு நாட்கள் மாயமாய் மறைந்து விட்டன. இத்தனை நாளும் மாரி யம்மா எப்படி கலங்கிப்போய் கிடக்கிறாளோ.. என்ன என்னவெல்லாம் நினைத்துப் பதறுகிறாளோ… 

கழுத்தைக் கட்டிக்கொண்டு செல்லப்பேச்சு பேசுகிற காமாட்சியை நினைத்தால். மனசு வெந்து போகிறது. 

காடுகரைகளில் எல்லாம் போட்டது போட்டபடியே கிடக்கும். எத்தனை வேலைகள் காத்துக் கிடக்குமோ … 

ஊரிலுள்ள சம்சாரிகள் எல்லாரும் ஓடிஓடிப் டாடு பட்டு, உரிய பருவத்தில் உருப்படியாகக் காரியம் பண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இவன் இங்கே விரையமாய்-சோம்பிச் சும்மா கிடக்கிறான். 

சொல்லிச் சொல்லி சிரிப்பார்கள். உப்புக்கல்லுக்குக் கூடப் பெறாத ஒரு கிறுக்குப் பயல்கூட இவனைக் கேலி பண்ணுவான். கிண்டல் அடிப்பான். நமுட்டுச் சிரிப்பு சிரிப்பான். 

நினைத்தால்…. ரொம்பக் கேவலமாக இருக்கிறது. மனசை அறுக்கிற அவமானச்சோகம். 

இல்லை…. நான் வந்திருக்கக்கூடாது. ஒதுங்கி யிருந்திருக்கணும். நண்டு கொழுத்தால் பொந்தில் இருக்காது. நானும் அந்த நண்டு மாதிரித்தான். முட்டாள்தனமாய் வந்து, கேவலப் பொருளாயிட்டேன். 

ச்சே! 

சம்சாரி மண்ணை நினைக்கணும். மழையை நினைக் கணும். பருவம் பார்க்கணும், வஞ்சகமில்லாமல் பாடு படணும். 

அரசியல் எல்லாம் சம்சாரிக்கு எதற்கு? அரசியலுக்கு எல்லாம் சம்சாரி வந்தால், அவன் வாழ்க்கை தரிசாகப் போய்விடும். 

உரவிலை, உப்பு விலை கூடினால் சம்சாரிக்கு நஷ்டம் தான். போராடி ஜெயிலுக்கு வந்ததனால் மட்டும், விலை குறைந்தா போய்விடப் போகிறது? 

ம்…. வந்தது வந்தாகிவிட்டது. இனிப்புலம்பி என்ன ஆகப்போகிறது? பல்லைக்கடித்துக் கொண்டு, மிச்ச  நாட்களையும் சகித்துக் கொள்ள வேண்டியதுதான். இதை ஒரு ஜென்மப் பாடமாய் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். 

“இந்தாங்க …” 

நினைவுச் சரட்டை அறுத்தகுரல், நல்லசிவம்தான். 

“என்னப்பா?” 

“உங்க பீடிரேசன்” 

“ம், இன்னிக்குஎத்தினி?” 

‘‘எட்டு’” 

“அது மட்டுமில்லே. கொடைக்கானல் சம்சாரிக நன்கொடையா குடுத்த பேரிக்காய் நாளை வருது. எம்புட்டுத் தெரியுமா? ஒரு லாரி லோடு.” 

சம்முகம் வியப்போடு பார்த்தான். நல்லசிவத்தின் கண்களில் உற்று நோக்கினான். 

“என்னப்பா நல்லசிவம்…” 

”சொல்லுங்க’ 

”ஜெயில்லே வந்து சிரமப்படுற மாதிரியே தெரி யலியே, இங்கேயும் வந்து…. நீங்க ஒரு ராஜாங்கமே நடத்துறீங்களே! அதுவும் ரொம்பத் தெளிவா நடத்துறீங்களே….” 

நல்லசிவம் மென்மையாகச் சிரித்தான். 

“அதான்… இந்த இயக்கத்தோட ஆன்ம பலம், ஒழுங்கு, கட்டுப்பாடு, தோழமை, வீர்யமான செயல் பாடு.” 

“ம்” 

“சரி இருங்க. நைட்டிலே எல்லா நிகழ்ச்சிகளும் முடிஞ்ச பிறகு, ராசையாவைப் பார்த்துப்பேசப்போறேன். நீங்க வாரீங்களா?” 

”ம்…சரி வாரேன்” 

நல்லசிவம் அடுத்த பணிக்கு ஓடுகிறவனைப்போல, ஒரு பறவையாகப் பறந்து விட்டான். சம்முகம் அவனது சுறுசுறுப்பையே பார்த்தவன்….மனசுக்குள் திருப்தியாக முணுமுணுத்துக்கொண்டான், ‘நல்ல ஆளுகதான்… நல்ல கட்சிதான்’ 

இந்தப் பன்னிரண்டு நாட்களும் போனமாதிரியே தெரியவில்லை. மாயமாய் மறைந்து விட்டது. அந்த மாதிரி இங்கு ஒரு வாழ்க்கை ஒழுங்கை-அழகை ஏற் படுத்தி விட்டார்களே…. 

காலை உணவு முடிந்தவுடன் சகலரும் மாமரத்து மைதானத்தில் வந்து கூடி விடுவார்கள். பெரிய மாநாடு தான். 

“ஏறுதே விலைகள் இங்கு விஷமாக 
போரிட வாருங்கள் வீதியிலே” 

என்று ஒருவர் பாட்டு பாடுவார். அப்புறம் செய்தி வாசிப்பு. செய்தி விமர்சனம். அப்புறம் கருத்தரங்கம். 

“உரமான்ய ரத்தும் உலக வங்கியும்” 

“உழவனைப் பிளக்கும் வகுப்புவாதம்” 

“உழவனும், ஜாதீய பேதங்களும்” 

“வினை பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய மறுப்பதன் மர்மம்?” 

இப்படிப் பல விஷயங்கள். தினசரி ஒரு தலைப்பு. 

சம்முகத்துக்குப் புதுப்புது ஜன்னல்கள் திறந்து கொண்டமாதிரி இருக்கும். உள்ளுக்குள் பலப்பல ஒளிக் கற்றைகள். 

தினசரி இவன் பேப்பர்களில் படித்த செய்திகள் தான். ஆனால் அவற்றுக்குள் ஊடுசரடாக ஓடுகிற இணைப்பை எடுத்துக் காட்டுகிற போதுதான்…. விஷயத் தின் முழுசே விளங்குகிறது. 

மதியச் சாப்பாடு. பிறகு விளையாட்டு. விருப்பம் போல செயல்பாடுகள். இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு, மீண்டும் கூட்டம், முழுக்க கலை இலக்கிய நிகழ்ச்சிகள். 

கவிதைகள், பாட்டுகள், நாடகங்கள்… ஆட்டங்கள்…. 

வார்டர்களும் வந்து ஆர்வமாய் ரசிப்பார்கள். 

பார்வையாளர் நேரத்தில்… வெளியேயிருந்து பார்க்க வருவார்கள். பழம், பீடி, சிகரெட், எண்ணெய், சோப்பு என்று ஏராளமாய் பொருட்கள் வரும். வருகிற பொருள் யாவும் கம்யூனில் ஒப்படைக்கப்படும். 

அங்கிருந்து எல்லோருக்கும் சரிசமமாக பங்கிட்டு அன்றாட ரேசனாக விநியோகிக்கப்படும். 

அப்படி வந்ததுதான் இன்று வந்த பீடிகள். 

ராசையா பற்றி நல்லசிவம் சொன்னது நினைவில் உரசியது. 

திருட்டு, சந்தேகக்கேஸ்களில் வந்த தண்டனைக் கைதிகள்தான், இந்த அரசியல் கைதிகளுக்குச் சேவகர் கள். மைதானம் மற்றும் சகல இடங்களையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டியவர்கள். 

அந்தக்கைதிகள், முரட்டுக்கச்சையில் தைத்த பழுப்பு நிற டவுசரும், பனியனும் போட்டிருப்பார்கள். எல்லா- ரும் இயல்பாகவே இருப்பார்கள், கைதேர்ந்த சிறைப் பறவைகள்தான். 

அதில் ஒருவன்தான், இந்த ராசையா. சின்ன வயசு தான். முப்பதுக்குள் இருக்கும். எந்நேரமும் மௌன மாய் இருப்பான். ஒரு வார்த்தைகூட சிந்த மாட்டான். முகத்தில் ஒரு இறுக்கம், வருத்தம், கண்களில் ஒரு அவலம். 

கவனிக்கத்தூண்டுகிற அளவுக்கு சோகபிம்பம். 

பாவம், அவனுக்குள் என்ன கதையோ என்ன அவலமோ…. 

8

சாதிச் சங்கங்கள் வளர்ந்து, முறுக்கேறி, சண்டையாகி இரண்டு கிராமங்களே மோதிக்கொள்ள- அந்த மோதலில் தகப்பனை இழந்து, தாய் இறந்து, மகள் கற்பழிக்கப் பட்டு ஒரு குடும்பமே சிதைந்து சீரழிய…. அப்புறம் உழவர் சங்கம் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தி, சகலரையும் அண்ணன் தம்பிகளாக மாற்று வதாக… ஒரு நாடகம். 

ஜெயிலுக்குள் கிடைத்த வசதிகளை வைத்துக் கொண்டு, மேக்கப்போட்டு நடந்த நாடகம். சகலரை யும் அசத்தி விட்டது. சம்முகம் மனம் ஒன்றிப் போய் விட்டான். 

கற்பழிக்கப்பட்ட மகள், செத்துக்கிடக்கிற தகப்பன் மேல் விழுந்து கதறுகிற காட்சியில், இவனும் உடைந்து விட்டான். காமாட்சியே அப்படிக் கதறுகிறமாதிரி ஒரு நினைப்பு.மனசெல்லாம் கலங்கி கண்ணீர் கசிந்து விட்டது. 

நாடகத்தில் மனசு முழுக்க இழந்து விட்டு, அதையே அசைபோட்ட பிரமிப்போடு படுக்கப்போன சம்முகத்தை நல்லசிவத்தின் குரல் வெட்டியது. “போவமா?” 

அப்போதுதான், ராசையா ஞாபகம் வந்தது. 

மனசுமுழுக்க நாடகம். எதுவும் பேசமுடியாத மன நிலை. “ம்” என்றான். ஜமுக்காளத்தை மடித்து தோளில் போட்டுக்கொண்டான், புறப்பட்டான். 

புளியமரக் குவாரைன்டைனுக்குள் அந்த லாக்கப் ரூம். அதில்தான் ராசையா அடைக்கப்பட்டிருந்தான். உயர்ந்த கம்பிக்கதவு பூட்டப்பட்டிருந்தது. அதற்கு வெளியே நல்லசிவம் உட்கார்ந்தான். உள்ளே – 

நிறைய திண்ணைகள் திண்ணைகளிலும் கீழேயுமாக நிறையக் கைதிகள், குறட்டை விட்டனர். அழுக்குச் சுவர்களில் அடர்த்தியாய் மூட்டைப்பூச்சிகளின் மரண அடையாளங்கள். 

இரும்புக்கதவில் முதுகு பதிய ராசையா உட்கார்ந் திருந்தான். கட்டை குட்டையாக வெட்டப்பட்டமுடி. தூக்கம் பார்க்காமல் சிவந்த கண்கள், முகமும் பார்த் திருக்கவில்லை. 

நல்லசிவம் பேச்சு கொடுத்துப்பார்த்தான். ராசையா திரும்பி உட்கார்ந்தான். இவனைப்பார்த்தான். இடை யில் சிறைக்கதவு, மெளனத்தை அடைகாத்தான், வெறுமனே பார்த்தான். இறுக்கம் உடைய மறுத்தது. 

கண்களில் விரத்தி. ‘சொல்லி என்ன ஆகப்போகிறது’ என்கிற அவநம்பிக்கை. 

நல்லசிவம் விடவில்லை. பண்ணிப் பண்ணிப் பேசினான். துருவித் துருவி கேட்டான். அன்பாக- பாசமாக- பங்கு கொள்கிற அக்கரையாக கேள்விகளைப் போட… கொஞ்சமாய் நம்பிக்கை வர…. ராசையா மனக் கதவைத் திறந்தான். 

அவன் முகமே மாறியது. நினைவுக்கு வந்த அவல உணர்ச்சி அவன் கண்களின் நீராக மின்னியது. 

“எங்க ஊரு சோழவந்தான் பக்கம். சின்ன ஊரு சுத்தி நல்ல செழிப்பு. வயக்காடு, நெல்லும், கரும்பும் விளையக்கூடிய நல்ல மண்ணு, நீர்ப்பிடிப்பு. 

எங்க ஊர்லே எல்லாரும்… அசட்டு ராமையான்னு தான் என்னைக் கூப்பிடுவாக. எந்த வம்புதும்புக்கும் போகமாட்டேன். நா உண்டு, என் பாடுண்டுன்னு ஒதுங்கி யிருப்பேன். ஊர்த்திருவிழாவுலே கூட நிற்கமாட்டேன். நாலுபேரு கூடுகிற எந்தக் கூட்டத்துலேயும் உட்கார மாட்டேன். ஒன்னுகிடக்க ஒன்னாகிப் போகுமோன்னு பயம். 

எங்க ஊருக்குத் தெற்கே ஒரு பெரிய தென்னந் தோப்பு. பன்னெண்டு குறுக்கம். முழுக்க தென்னை தான். பெரிய கிணறு. பம்ப்செட் வற்றாத தண்ணி. 

அந்தத்தோப்புக்கு முதலாளி, மதுரையில் பெரிய பணக்காரரு. பெரிய பங்களா, வசதியான குடும்பம். உண்ட கையிலே ஒட்டுன படுக்கையை உதறுனமாதிரித் தான் இந்தத் தோப்பு, அந்த முதலாளிக்கு. 

அந்தத் தோப்புக்கு நான்தா காவல், பராமரிப்பு நாய் போல விசுவாசமாக கிடப்பேன். ஒரு மட்டையைக் கூட யாரும் தொட்டுர முடியாது. ஒரு ஈ காக்கை கூட தோப்புக்குள்ளே நுழைஞ்சிர முடியாது. அம்புட்டு கண்காணிப்பு. 

ஒரு நேரம்கூட சும்மாயிருக்க மாட்டேன், மாடாய் உழைப்பேன். தென்னம்பிள்ளை யெல்லாம் என் சொந்தப் புள்ளைக மாதிரி நெனைச்சு, கண்ணும் கருத்துமா பாடுபட்டேன். 

அப்பப்போ மதுரையிலிருந்து டக்கர்லே குப்பை வரும். உரஉப்புவரும். அந்த டக்கர்லேயே தேங்காய் களை ஏத்தியனுப்பிருவேன். 

எப்பவாவது முதலாளி காருலே வருவாரு. சுத்திப் பாப்பாரு. சம்பளம் தருவாரு. செலவுக்கும் பணம் தருவாரு. 

நல்லா பாத்துக்க’ன்னு சொல்லிட்டுப் போயிருவாரு.  

தூரத்துலே அந்தக்காரு மறையுற வரைக்கும் நின்னு பாத்துக்கிட்டிருப்பேன். நெசமாவே, அவரை எங்ககுல தெய்வம் மாதிரித்தான் நெனைச்சுக் கும்புட்டு வந்தேன். 

அவருதானே குடிசைதந்து, வேலையும் தந்து, கஞ்சியும் ஊத்துறாரு? அவருதானே எங்க குலதெய்வம்? 

எங்கம்மாவுக்கு கண்ணு தெரியாது. வயசாச்சு, நோய், படுத்த படுக்கையாயிருச்சு. அப்பதான் எனக்கு கல்யாணம் ஏற்பாடாச்சு. 

முதலாளிகிட்டே விபரம் சொன்னேன். ரெம்பச் சந்தோஷப்பட்டு ஆசீர்வாதம் பண்ணி, ஆயிரம் ரூபாய் இனாமும் தந்தாரு. 

”கல்யாணத்துக்கு வரமுடியாதுடா, வருத்தப்படா தேன்னாரு.” 

எனக்கு வாய்ச்ச மகராசி இருக்காளே புண்ணியவதி அவள் எங்குடிசைக்கு வரக்கூடியவள் இல்லே.பெரிய பணக்கார மகராசமார் வீட்டுக்குப் போக வேண்டியவ. அம்புட்டு அழகு. 

9

சம்பகம் ஒரு தேவதை மாதிரி. சாயங்காலச் சூரியன் மாதிரி ஒரு நிறம். கண்ணும் மூக்கும், முக லட்சணமும் அப்ப்…….ப்படி இருப்பாள். 

கொணமும் அப்படியேவா அமையணும்? குளுந்த தண்ணியிலே அமர்ந்த புஷ்பம் மாதிரி, அழகும் குணமும். ஒன்னுக்கொன்னு பொருத்தமாய்…. அதுவே ஒரு லட்சணமாய்…. 

எங்க குருட்டுத்தாயாரோட நானும், அவளும் தோப்பிலே இருந்த குடிசையிலேதான் இருந்தோம். வாழ்ந்தோம். ஜென்ம மோட்சம் மாதிரியான வாழ்க்கை. அன்பா -பாசமா ஒருத்தரிலே ஒருத்தராக் கலந்து- உயிருலே உயிரா கரைஞ்சு-மனசு ஒண்ணாகி – அதுவும் நெறைஞ்சு ததும்பி…. 

அம்புட்டு அருமையா வாழ்ந்தோம். 

அடுத்த மாசம் வந்த முதலாளி தோட்டத்தைச் சுத்திப் பாத்தாரு. சம்பளம் குடுத்தாரு. செலவுக்கும் பணம் குடுத்தாரு. 

“ஏண்டா…. ஒம் பொண்டாட்டியை ஏங்கண்ணுலே காட்டமாட்டீயர்”ன்னு ஒரு தகப்பனோட உரிமையோட கேட்டாரு. நானும் செம்பகத்தைக் கூப்புட்டேன். 

வெளியே வந்தர்ள். அந்தச் சாயங்காலச்சூரியன் மேலே தென்னங்கீத்துகளை மீறிக் கசிஞ்ச மஞ்ச வெயில். ஒரு ஓவியம் போல வந்து நின்னரள். 

முதலாளிக்கு கண்ணு கூசலை. திறந்த கண்ணு மூடாம பாத்தாரு. 

“நல்லாயிரும்மா” என்று ஆசீர்வாதம் பண்ணினாரு. கையெடுத்துக் கும்பிட்ட அவள் உள்ளங்கையிலே நூறு ரூவாயைத் திணிச்சாரு. 

எனக்குப் பெருமை தாங்கலே. முதலாளி போன பிறகு, செம்பகத்தைப் பாத்து கண்ணடிச்சேன். 

“பாத்தீயா எங்க முதலாளியை?” 

அவ முகத்துலே அந்தப் பூரிப்பு இல்லே. சந்தோச மில்லே. என்னை இளக்காரமா பாத்தா. இப்படியும் ஒரு அப்புராணி இருப்பானா’ங்கிற மாதிரி பார்த்தா. 

இந்த அசட்டுப்பயலுக்கு அது ஒண்ணும் விளங்கலை. வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்பிக் கிடந்த கிறுக்குப் பய நானு. 

அப்புறம்- 

அடிக்கொரு தடவை முதலாளி வந்தாரு. பத்து நாளைக்கொரு தடவை காரு வந்துரும். 

“வெத்தலை வாங்கிட்டுவா” 

”கலர் வாங்கிட்டு வா”ன்னு என்னை ஊருக்குள்ளே அனுப்பிச்சுருவாரு. வாங்கிட்டு வந்து பாத்தா…. முதலாளி கள்ள முழியா முழிப்பாரு. செம்பகம் என்னைக் கோபம் கோபமா பாத்து எரிப்பாள். இந்த அசட்டுக் கழுதைக்கு ஒரு இழவும் புரியலை. 

செம்பகம் ஜாதிமான்கன்னு. ஒரு வார்த்தைகூட ஏங்கிட்ட வாய்திறந்து பேசலை. லேசா … ஜாடைமாடையாக்கூட கோடு கிழிச்சுக்காட்டலை. 

எல்லா அக்கிரமத்தையும் பூமிமாதா போல அவளே முழுங்கிட்டா. பொறுத்துக்கிட்டா, பாதகத்தி! 

ஒரு நாளு…. 

பம்புஷெட் மோட்டார்லே ரிப்பேர். ஒரு சாமான் வாங்க நான் டவுனுக்குப் போயிட்டேன். 

அந்த நேரம் பாத்து முதலாளி வந்துருக்காரு. செம்பகம் மட்டும் இருந்துருக்கா. தோப்பு, குருட்டுத் தாயாரு. என்ன செய்வா? பாவம். 

செம்பகத்தை – தேவதையை அந்த மிருகம் நாசம் பண்ண முயற்சி பண்ணியிருக்கு. ஓடிஓடிப்பார்த்திருக்கா, அலறியிக்கா, கதறிக்கதறி கையெடுத்துக்கும்பிட்டிருக்கா 

பாவி, விடலே. வெறிபுடிச்ச மிருகத்துக்கு பூவோட அருமை தெரியுமா? வாசம் தெரியுமா? 

முரட்டுத்தனமா-பலாத்காரம் பண்ணியிருக்கான். 

கெஞ்சிக்கூத்தாடிப் பாத்துருக்கா. மல்லுக்கட்டிப் பாத்துருக்கா. தப்பிக்க வழியில்லே. எளநீ சீவுறதுக் காகப் போட்டிருந்த அருவாளைத் தூக்கிட்டா. ஒரே போடு. 

கையிலே வெட்டு. ரத்தத்தை வடிச்சிக்கிட்டு வெறி நாய் ஒடிப்போயிருச்சு. 

டவுன்லேயிருந்து வந்த ஏங்கிட்டே சொல்லியழுதா செம்பகம். ஆதியோடந்தமா சொன்னா. எனக்கு ரத்தம் கொதிச்சது. 

நாங்க ஏழைதா. நாயா கிடப்போம். மாடா ஒழைப் போம். பசியிலே இருப்போம். எங்ககிட்டே மிஞ்சு நிக்குறது மானம் ஒண்ணுதானே! இதையும் உதுத்துட்டு எதுக்கு நாங்க உசுர் வாழணும்? 

அருவாளோட புறப்பட்டேன். தோப்புக்கு வெளியே போலீஸ் வேன் நிக்குது. ரெண்டு போலீஸ்காரங்க ஏங்கிட்டே வந்தாக. 

“ஐயா கூப்பிடுறாக, வா’ன்னாக. ஸ்டேசன்லே ஏதேதோ பேப்பர்லே கைநாட்டு வாங்குனாக. 

என்ன எதுக்குன்னு கேட்டேன். 

“நாயே, எதுத்தா கேள்வி கேக்கே?'”ன்னு நாயை அடிச்சமாதிரி அடிச்சு லாக்கப்லே போட்டுட்டாக. 

எனக்கு ஒண்ணும் புரியலை. 

கோர்ட்லே கொண்ணாந்து நிறுத்துனாக, வழக்கை சொன்னாக. எனக்குத் தீயை அள்ளிப்போட்ட மாதிரி எரிஞ்சது. உடம்பு மனசு எல்லாமே திகுதிகுன்னு எரிஞ்சது. 

நாந்தேங்காய்களை கள்ளத்தனமா வித்தேனாம். தட்டிக்கேட்ட முதலாளிகிட்டே பொண்டாட்டியக் காட்டி மயக்கினேனாம். அதையும் மீறி அவரு கேள்வி கேட்ட துக்குத்தான், அருவாளுட்டு அவரை வெட்டுனேனாம்! 

பாத்தீகளா அக்குரமத்தை? பாவம் செய்றது யாரு? கேஸ் யாருமேலே? அதுவும் எப்புட்டு அசிங்கமா? 

இந்தக் கொடுமைக்கு சாட்சி சொல்ல நாலு நாய்க. 

ஒரு நாய் குலைக்குது “ஏங்கிட்டேதா இவன் தேங்காய்களை வித்தான்.” 

இன்னொரு நாய் குலைக்குது “நாந்தான் தேங் காய்களுக்கு ரேட்டு பேசிவிட்டு தரகு வாங்குனேன்.’ 

மீதி ரெண்டு நாய்களும், முதலாளியை வெட்டுனதை வேடிக்கை பார்த்ததுகளாம். 

இந்த ஏழைக்கு வக்கீல் வைச்சு வாதாட, வக்கு ஏது? வசதி ஏது? 

வக்கீல் கிடைச்சாலும், சாட்சிகள் கிடைக்காதே. என்ன செய்றது? இப்ப நான் ஜெயில்லே, குத்தவாளியா. 

குத்தவாளி வெளியே வெறிநாயா சுத்திக்கிட்டிருக்கான். 

சாகக்கிடக்கிற குருட்டுத்தாய் -காவல் காக்க நாதி இல்லாம செம்பகம். எச்சிலை வடிச்சுக்கிட்டு ஓநாயா திரியுற அந்த அயோக்கியன். 

பாருங்கய்யா.. பாருங்க. நா என்ன தப்பு செய்ஞ் சேன்? என்ன குத்தம் செய்ஞ்சேன்? எந்த வம்புதும்புக் காச்சும் போனேனா? ஒதுங்கிக் கிடந்த இந்த அசட்டுப் பயலை… இப்படிக் கிழிச்சு வேடிக்கை பார்க்கணுமா? இது ஞாயமாய்யா? நேர்மையாய்யா? சொல்லுங்கய்யா … சொல்லுங்க…. 

எஞ்செம்பகம் என்னானாளோ…. எங்கம்மா என்ன கதியானாளோ…. 

10 

சொல்லி முடிக்கிறபோது… 

ராசையா ஆங்காரமாய் கைகளை வீசினான். முகம் உணர்ச்சிமயமாகி கறுத்துக்கிடந்தது. கண்கள் தெறித்து விடுவதைப்போல மிரட்டின. வெடித்துவிடுவதைப்போல நெஞ்சுக்கூடு விம்மி விம்மித் தணிந்தது. 

சம்முகம் அப்படியே உறைந்து போனான். மனசின் சகல அணுக்களும் கலைந்து போனதைப்போல தளர்ந்து கிடந்தான். 

இப்படியும் கொடுமைகளா? நடக்குமா? நடக்குதா? 

நம்பமுடியாமல், ஜீரணிக்க முடியாமல் திணறிப் டோய் நின்ற சம்முகத்தின் எதிரே, உண்மையாய் – சத்தியத்தின் சொரூபமாய்-ராசையா. 

நல்லசிவம் கண்கலங்கிப் போயிருந்தான். ராசையா வுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொன்னான். 

விடுதலையாகி வெளியே போனதும் முதல் வேலை ராசையாவை ஜாமீனில் எடுப்பது. வழக்கை அப்பீல் செய்வது. அதற்கான ஏற்பாடுகளை கட்சியின் மூலம் செய்வதாக உறுதி சொன்னான். 

இருவரும் புறப்பட்டனர். 

மாமர குவாரண்டைன் முழுவதும் தூக்கத்தில் கிடந் தது, மௌனமாகவந்தனர். இருவருக்கும் மனசுகனத்தது மௌனமே ஒரு பாஷையாக உயிர் பெற்றுப் பேசிக் கொண்டிருந்தது. 

அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறு சிறு பல்புகள் மங்கலான சந்தன நிற வெளிச்சம். மாமரம் அடர்த்தியான ராட்சஸனாக நின்றது. சின்னக்காற்று, சன்னமாய் சலசலக்கச் செய்தது. 

நல்லசிவத்தால் இந்த மவுனத்தைச் சுமக்கமுடிய வில்லை. வெடித்துவிட்டான். 

”பார்த்தீகளா, இதுதா நம்ம சமூகம். நல்லதுகளை யெல்லாம் கெடுத்து நாசம் பண்ற சமுதாயம். மனுசனை மனுசத்தன்மைகளோட வாழவிடாத சமுதாயம். காந்திய சுட்டுட்டு சிரிச்ச சமுதாயம். நல்லவங்களையெல்லாம் தோற்கடிச்சு இழிவுபடுத்தி – அற்பத்தனங்களையெல்லாம் தலையிலே வைச்சுக் கொண்டாடுற சமுதாயம். இதுலே யிருந்து ஒதுங்கிப்போய் ஒருத்தன் உருப்படியா வாழ்ந்துர முடியுமா? ஒதுங்கி ஒதுங்கிப் போனாலும், எட்டிப்பிடிச்சு உடம்பை கிழிக்கிற குரூரமான சமுதாயம். நம்ம முன் னாடி ரெண்டே வழிதான் இருக்கு. ஒண்ணு, போராடி இந்தச் சமுதாயத்தை மாத்துறது. இன்னொன்னு, பணிஞ்சு போய் இந்தச் சமுதாயம் மாதிரியே மிருக மாயிடறது.” 

வெடித்துச் சிதறுபவனைப் போல கட்டுப்பாடு இழந்து பேசுகிற நல்லசிவத்தைப் பார்த்தான் சம்முகம். 

மொத்தப் பூமியையே குலுங்க வைக்கிற ருத்ர தாண்டவமாக அவன் மனசு சீறுகிறது. 

”இந்த ரெண்டுலேயிருந்தும் தப்பிச்சு ஒரு மனுசன் சும்மாயிருந்துர முடியுமா? நிச்சயமா முடியாது. மரம் சும்மாயிருந்தாலும், காத்து இருக்கவிடாது. ஆட்டும், ஆடவைக்கும். 

நல்லசிவம் படுக்கப் போய்விட்டான். சம்முகம் தான் படுக்கிற இடத்துக்கு வந்தான். நீட்டி நிமிர்ந்துபடுத்த சம்முகத்துக்குள்- 

ஜெயில் வந்தது. ராசையா வந்தான். முகம் தெரியாத செம்பகம் வந்தாள். நல்லசிவத்தின் ஆவேசப் பேச்சு வந்தது…. 

கழுத்தைக்கட்டிக் கொண்டு கொஞ்சுகிற மகள் காமாட்சி வந்தாள். மாரியம்மா வந்தாள். உழவுக்கு ஏங்குகிற புஞ்சை வந்தது. ஊர் முழுக்க வந்தது. 

பெருமூச்சு விட்டான். மன்சின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட பெருமூச்சு. 

ஆனாலும்- 

ஜெயிலுக்கு வந்தது தப்பு, முட்டாள்தனம் என்ற நினைப்பு மட்டும் வரவேயில்லை, இப்போது.

(முற்றும்)

– மரம், சிட்டு பதிப்பகம் மதுரை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *