மயிரே மாத்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 28, 2024
பார்வையிட்டோர்: 838 
 
 

கேரளத்தில் வரிசை தாண்டுவது என்பதோ, வெளிப்படையாகக் கைக்கூலி கொடுப்பது என்பதோ சாத்தியமில்லை. தமிழ்நாடு என்றால் எல்லமே வெளிப்படை. “ஒம்மாண அம்மாச்சா நிர்வாணம்” என்று சொல்லிவிடலாம். நாளிதழ்களுக்கு அறிக்கை கொடுக்கலாம், “நிரூபிக்க முடியுமா?” என்று பலரும் காண, அலுவலக மேசை மீதே பணக்கட்டுகளை வைக்கலாம். எவன் கேட்க இருக்கிறான்? எவன் எந்த ரோமத்தைப் பிடுங்கிவிட இயலும்?…நாஞ்சில் நாடன்


திருவனந்தபுரம் மாநகரின் வடக்கே, கேசவதாசபுரத்தில் சாலை இரண்டாகப் பிரியும். இடப்பக்கம் போனால் கொல்லம். வலப்பக்கம் கொட்டாரக்காரா என்று சொல்லி அனுப்பினார்கள். உண்மையில், கேசவதாசபுரம் சந்திப்பு, அவர்கள் கோயம்புத்தூரில் இருந்து வந்த வழிதான்.

இரவு உணவுக்குப் பிறகே புறப்பட்டார்கள். அலுவலகத்தின் அம்பாசடர் கார் அன்று இந்தியச் சாலைகளில் பல்வகை வெளிநாட்டு சொகுசுக் கார்கள் பறந்திருக்கவில்லை. அம்பாசடர், ஃபியட் பிரிமியர், ஸ்டான்டர்ட் என்ற சில வகைதான். நூறு நாட்கள் ஓடும் சினிமாப் படங்களில் நடிப்பவர் மட்டுமே ப்யூக், பாண்டியாக், செவர்லட், பிளிமத் போன்ற வண்டிகள் வைத்திருந்தனர். இன்று மேலது கீழாய்ப் புரண்டு கிடக்கிறது எங்கணும். தாலுகா அலுவலக எழுத்தராக இருந்து கறங்கி அடித்த காற்றில் சுயேச்சை எம்.எல்.ஏ ஆகி, ஐந்து வருடம் சட்டமன்றம் போனவன் எல்லாம் முன்னூறு கோடியும் இரண்டு பங்களாவும் மூன்று வெளிநாட்டுக்கார்களுமாய் உலாப்போகிறார்கள். தோற்றுப்போன ஆளுங்கட்சி வேட்பாளர்கூட, வாரியத் தலைவராகி வளமாக இருக்கிறார்அவர்கள் அக வாழ்க்கை பற்றி அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவம் அது. எங்கோ வாசித்த நினைவு; முக்கிய கட்சித் தலைவரின் வாரிசு ஒருவர் 27 வெளிநாட்டுக் கார்கள் வைத்திருக்கிறாராம்.

அந்த அம்பாசடர் பதினைந்து ஆண்டு காலமாக அலுவலக சேவையில் இருந்தது. பெட்ரோல் மாடல் தான். டிரைவர், பாலக்காடு மாவட்டத்தின் நெம்மாற ஊரைச் சேர்ந்த கோபாலன். கால் நூற்றாண்டு கம்பனி சேவை.

அலுவலக மேலாளர் சுகுமாரனின் கேபின் மேசையில் இரண்டு தொலைபேசிகள் உண்டு. ஒன்று நேரடி லைன். மன்றொன்று ரிசப்சனிஸ்ட் மூலமாக அழைப்பு அனுப்பப்படும் எக்ஸ்டென்சன். பம்பாய்த் தலைமை அலுவலகத்தில் இருந்து தலைமைப் பொது மேலாளர் – CGM – காலை பதினொரு மணி வாக்கில் தொலைபேசியில் அழைத்தார்.

விற்பனையும் சர்வீசும் மட்டும் பார்க்கும் சிறிய கிளை அலுவலகம் அது. மார்வாடி நிறுவனம். மேலாளர், துணை மேலாளர், இரண்டு விற்பனைப் பொறியாளர்கள், அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஒருத்தி, அவருக்கு இரண்டு உதவியாளர்கள், இரண்டு ஸ்டெனோ டைப்பிஸ்ட் பெண்கள், இரண்டு எரக்டர்ஸ், ரிசப்சனிஸ்ட், இரண்டு கடை நிலை ஊழியர்கள், ஸ்டோர் கீப்பர், ஃபிட்டர், ஸ்டோர்ஸ் உதவியாளர், வாட்ச்மேன், டிரைவர், ஆணும் பெண்ணுமாய்ப் பத்தொன்பது.

வாடகைக் கட்டடம் தான். மார்வாடி முதலாளிகளுக்கு அதுபோதும். தலைமைப் பொதுமேலாளர் பாலக்காட்டுக்காரர். துல்லியமாகச் சொன்னால் நூரணி பத்மநாபன் மாதவன். NPM என்பார்கள் அலுவலகத்தில் மலையாளமும் தமிழுமாகப் பேசுவார் ஒரு விதத்தில் அந்த அலுவலகமே அப்படித்தான் பேசியது. இன்று. மார்க்கெட்டிங் உத்திகளைக் கையாளும் நவீனர்களுடன் ஒப்பிட்டால், சிஜிஎம் ‘ஆயிரம் ராமன் நின் கேள் ஆவரோ தெரியின் அம்மா’ என்று வியத்தலுக்கு உரியவர்.

திங்கட் கிழமை, மாதத்தின் முதல் வாரம். ஒரு தனியார் நிறுவனம் இயங்கும் காலைச் சுறுசுறுப்பைக் குறுக்கு வெட்டி தொலைபேசியின் டைரக்ட் லைன் மணியடித்தது. அந்த லைனில் பெரும்பாலும் தலைமை அலுவலகம், பிற கிளை அலுவலகங்கள், முக்கியமான வாடிக்கையாளர்கள், முத்த அதிகாரிகள், முதலாளிகள், சொந்த குடும்பத்தினர், உற்ற நண்பர்கள் மட்டுமே அழைப்பார்கள். அன்றெல்லாம் STD கால்கள் வரும்போது அழைப்பு மணி நீண்டு ஒலிக்கும்.

பெரும்பாலும் இந்த நேரத்தில், அந்த வாரத்தில் தலைமை அலுவலகத்துக்கு எத்தனை நிதி அனுப்ப இருக்கிறோம் என்று கேட்டு ஃபோன் வரும். ‘ஹலோ’ சொன்னவுடன், லைனில் வந்த குரல் சி.ஜி.எம்.

“சுகுமாரா! எப்பிடி டா இருக்கே?”

“சார்! நமஸ்காரம்! மூட்டு வலி கொணம் உண்டா?”

“தேவலை டா. அடுத்தமுறை வரும்போள் வைத்யரைப் பார்ப்போம். லேகியம் தீராறாச்சு. ஒரு டப்பா கூட வாங்கி அனுப்பறையா?”

“அதுக்கென்ன? தீர்ச்சையாவிட்டும். இந்த ஆழ்ச்ச ட்வெல்வ் லாக்ஸ் அனுப்புவேன் சார்..”

“என்னடா? கனிக்கிறாயா? அதெல்லாம் காணாது கேட்டயா மெட்ராஸ்காரன் ராவ் கைய மலத்தீட்டான்..இருபதா அனுப்பப் பாருடா!”

“இருபது சாத்தியமில்லே சார்! பதினஞ்சு பாக்கிறேன்”

“சரி! பதிளஞ்சு மார்க் பண்ணிக்கிறேன். கடேசியிலே கொதவளைய அறுத்திராத… பின்னே ஒரு காரியம். பார்த்துக்கோ! திருவந்தரத்திலே தலமுடி வளர்றதுக்கு யாரோ எண்ணெ காச்சி விக்கிறாளாமே கேட்டுட்டுண்டா?”

“ஆமா… பத்திரத்திலே எல்லாம் பெரிக பெரிசா படம்போட்டு விளம்பரம் போடுறாளே!”

“அதாண்டா.. ரெண்டு பெண் கொச்சு பிருஷ்டம் காட்டித் திரும்பி நிக்கிறாப்பிலே பாதம் வரைக்கும் தலமுடி தாந்து கெடக்காப்பிலே போட்டோ போட்டுருப்பா “

“அதுக்கு இப்போ நான் என்ன வேணும் சாரே?” “எனக்கு ரெண்டு குப்பி எண்ண வேணும்!”

“சாருக்கு இப்ப மொட்டத் தாலையிலே முடி மொளச்சு என்ன ஆகப்போறது? ரெண்டாந்தரமாட்டு பொண்ணு கெட்டதுக்கா?”

“சீ! போடா அசத்தே! நான் பொண்ணு கெட்டுனா நிதான் காரியம் பாக்கணும் கேட்டயா? மூதேவி! பேசறான் பாரு..”

“பின்ன எத்தினாணு சாரே!”

“எனக்கில்லடா பிராந்தா- நம்ம எம்டிசாருக்கு ரெண்டு குப்பி வேணுமாம்”

“அவுருக்கு என்னத்துக்கு?”

‘அதை நீயே கேட்டுக்கோ… டைரக்ட் நம்பர் இருக்கோல்லியோ.. தற்குத்தறம் பறையாத சொன்னதைக் கேளு. காரை எடுத்துக்கிட்டு திருவந்திரம் போ. ராத்திரி பொறப்பட்டா பலபலா விடியப் போயிரலாம். ரெண்டு குப்பி வாங்கீட்டுத் திரும்பீரு-பிற்றத்நா வந்து செரிக்கு பிளைவுட் பேக்கிங் செய்து அங்காடியா சர்வீஸ்லே குடுத்து விட்டிடு என்ன!”

“சரி சார்.”

“வேற ஒண்ணு.. திருவந்திரத்துக்கு ISRO விசிட்ணு போட்டு செலவு எல்லத்தையும் அதுல போட்டுக்கோட தனியா கவர்லே போட்டு என் “சாங்சனுக்கு அனுப்பு என்னா!”

“சரி சார். அப்ப ராத்திரி கெளம்புறேன். திரிச்சு வந்து விளிக்காம்”

“சரி டா. பைசா அனுப்பப்பட்ட காரியம் மெத்தனமா இருந்திராத -நீ திருவத்திரம் போறதுனால ஒரு காரியம் கூடச் செய்யி பழவங்காடி பிள்ளையாருக்கு பதினோரு தேங்கா வாங்கி என் பேரச்சொல்லி வெடல் போட்டு என்னா? காரியம் பின்னப் பறயாம். அதன்ற காசு எங்கிட்டே தனியா வேண்டிக் கிடணும். சாமி காரியம்”

டிரைவர் கோபாலனைக் கூப்பிட்டான் சுகுமாரன்.

“கோபாலா! நாம ராத்திரி சாப்பாட்டுக்குப் பொறவு திருவந்திரம் போறோம்… காரியம் என்னாண்ணு போசுச்சிலே சொல்லுகேன். வேலை முடிஞ்சதுண்ணா நாளை உச்சைக்குப்பொற திரும்பிரலாம்..”

கோயம்புத்தூர் – திருவனந்தபுரம் உத்தேசமாக 425 கி.மீட்டர். பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, கொச்சி. ஆலப்புழா, கொல்லம் வழி. அன்று தங்க நாற்கரச்சாலைகள் அமைந்திருக்கவில்லை. இரவுப் பயணம் என்பதால் ஒன்பது மணி நேரத்தில் போாய்விடலாம். இடையில் கோபாலேட்ட தோதுப்போல சாயா குடிக்க நிறுத்துவார். கேசவதாசபுரம் சந்திப்பு கோபாலனுக்குத் தெரியும் என்றாலும் முறி எடுத்துக் குளிக்க தம்பானூர் ரயில்வே சந்திப்பு பக்கம் போகவேண்டும்.

கோபாலன் எப்போதும் வண்டியை விரட்ட மாட்டார். இன்று தமிழ்நாட்டுச் சாலைகளில தெற்கு நோக்கி வேகமெடுத்துப் பாயும் வெளிநாட்டுக் கார்களைக் கவனிக்கும்போது. ஏழாண்டுகள் முன்பு முள்ளி வாய்க்காவில் கொத்துக் குண்டுகளால், கெமிகல் குண்டுகளால் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் திக்கற்ற, நாதியற்று இந்தியாவால் காட்டிக் கொடுக்கப்பட்ட, கைவிடப்பட்ட அப்பாவி ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேகமாகப் போகிறார்களோ என்று தோன்றும்.

காலை ஐந்து மணிக்கே தம்பானூர் வந்து விட்டனர். விடுதியில் அறை எடுத்து, சற்று நேரம் கை கால் நீட்டிப் படுத்து, எழுந்து, கடன்கள் செய்து, செய்து, தம்மைப் புதுப்பித்துக்கொண்டு, ஓவர்பிரிட்ஜ் பக்கம் இருந்த பழைய ரெட்டியார் ஓட்டலில் காலை உணவு கொண்டு, அங்கேயே விசாரித்தனர்.

பாளையம், மாதவராவ் திவான் சிலை, பட்டம், கேசவதாசபுரம் வலப்பக்கம் திரும்பியதும், வலதுபுறம் குன்றின்மேல் மகாத்மா காந்தி கல்லூரி, அடுத்த சந்திப்பு பருத்திப் பாறை, சற்றுத் தாண்டி இடது பக்கம் குன்றின் மேல் மார் இவானியஸ் கல்லூரி. முதலில் சொன்ன கல்லூரியில் இக்கதாசிரியன் இரண்டாண்டுகள் பட்டமேற்படிப்பு வாசித்தான் என்பதுவும் பின் சொன்ன கல்லூரியில் நகுலன் ஆங்கிலத்துறை பேராசிரியராக இருந்தார் என்பதுவும் சொல்ல ஆசைதான். ஆனால் சிறுகதை இலக்கண வரம்பொழிந்துவிடும் என்பார்கள்.

மேலும் சற்றுத் தூரம் கடந்தபின், தேவி க்ஷேத்திரம் தாண்டி வலப்பக்கம் தலை குத்தறக் கீழிறங்கியது ஒரு சாலை. அதன் மூன்றாவது திருப்பத்தின் இடதுபக்கச் சந்தினுள் இருக்கிறது எண்ணெய் காய்ச்சி விற்கும் வீடு என்றார்கள். முடுக்குக்குள் கார் போகாது. வளைந்து வளைந்து பாதாளம் நோக்கிப் பாய்ந்த சாலையும் ஒடுங்கியது. காரை நிப்பாட்டி வைத்தால் எந்த வண்டியும் தாண்டிப்போக சங்கடப்படும்.

கோபாலன் சொன்னார், “மெயின் ரோட்ல நிப்பாட்டாம் கேட்டோ சங்ஙதி மேடிச்சிற்று முகள்ளோட்டு வந்தா மதி” என்று வண்டியை முக்கி முனகித் திருப்பி, டாப் கியர் போட்டு, மேலேற்றி, பிரதான சாலையில் கொல்லாமா மரத்து நிழல் பார்த்து நிறுத்தினார். ஒரு சாயா குடிக்கலாமா அல்லது காரினுள் அமர்ந்து மலையாள மனோரமா வாசிக்கலாமா என்று யோசித்தார்.

இந்தக் கதை எந்த மொழியில் சொல்லப்படுகிறது என்று நீங்கள் யோசிக்கலாம். கதை தொடங்கிய கோயம்புத்தூர், கேரளத்து எல்லையில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் கதை நடக்கும் திருவனந்தபுரம் தமிழ்நாட்டு எல்லையில் இருந்து 40 கி.மீ. கணிசமாய் மலையாளிகள் வசிக்கும் கோயம்புத்தூரில் இருக்கும் அலுவலகம் துவங்கப்பட்ட நாளில் இருந்தே மேலாளராக இருந்தவர்கள் மலையாளிகள். ஊழியர்களில் ப்யூன்கள், வாட்ச்மேன், ஒரு ஸ்டெனோ, ஒரு சேல்ஸ் இன்ஜினியர் தவிர்த்து எல்லோருமே மலையாளிகள். கதை நடந்து மேலாளரின் தாய்மொழி என்ன, இனம் என்ன என்பது ஒரு எம்ஃபில் ஆய்வுக்குரியது. இதில் கதாசிரியன் என்ன செய்ய இயலும்?

சுகுமாரன் முடுக்குக்குள் நுழைந்த போதே ஆள் நடமாட்டம் தெரிந்தது. தமிழ் நாட்டு சினிமாத் தியேட்டர் வாசல் போல அன்றி, நூறு அல்லது நூற்றிருபது பேர் ஒழுங்காக வரிசை காத்து நின்றனர். சாணி நிற அட்டையில், சாக்குக் கட்டியால் எழுதப்பட்டிருந்த ஆங்கிலச் சொற்றொடர் ēNO SMOKINGí அதன் கீழே மலையாளத்தில எழுதப்பட்டிருந்த வாசகம், ‘புக வலி பாடில்லா’ என்பதாக இருக்கலாம். புகையும் சிகரெட் ஒன்று வரையப் பெற்று, அதன் மேல் பெருக்கல் குறியும் இடப்பட்டிருந்தது. அது எழுத வாசிக்கத் தெரியாதவர் புரிதலுக்கு. இந்தி மட்டுமே தெரிந்தவர் வந்தால்? அது மைய அரசின் இலாக்கா!

ஓட்டுப்புரை வீடுதான். வீட்டு முற்றத்து அருவுகளில் மா, பலா, வாழை, தெங்கு. தெற்றிப் பூ என மலையாளிகளும் இட்டிலிப் பூ என்று தமிழனும் வெட்சி என்று சங்க இலக்கியமும் பேசும் இரத்தச் சிவப்பு நிற கொண்டையுடன் பூங்கொத்துகள். துளசி மாடம் இருந்தது. இன்னொரு மூலையில் ஜாம்பக்காய் எனப்படும் புளிச்சிக்காய் காய்த்துத் தொங்கியது அடையடையாக. வீட்டு முற்றம் சுத்தமாகப் பெருக்கப்பட்டு பசுவதி கோயில் பறம்பு போலக் கிடந்தது.

இலை உதிருகிறது, கூட்டித் தள்ளி மாளவில்லை என்று பெண்டாட்டி புலம்பலில் வாசலில் நின்ற வேப்ப மரங்களை வெட்டிச்சாய்த்த பக்கத்து பங்களாக்காரன் நினைவுக்கு வந்தான் சுகுமாரனுக்கு, தலைமுடி உதிருகிறது என்று தலையை வெட்டுவான் போலும்! தைலம் காய்ச்சும் வீட்டு முகப்பின் இரு பக்கமும் முழுப் பனையில் பணி செய்த தூண்கள் தாங்கிய ஓட்டுச் சாய்ச்சிறக்கியின் கீழே நெடிய படிப்புரைகள். படிப்புரையின் இடது ஓரத்தில் பிரிவணைமேல் வைத்திருந்த புதுமண்பானை. பானையின் வாயை மூடிய மண் தட்டின் மேல் கனகம் போலத் துலங்கிய பித்தளைத் தம்ளர்.

நூறுக்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்றிருந்தாலும் சின்னப் பேச்சரவம் அன்றி, பெரிய டாஸ்மாக் கூக்குரல்கள் இல்லை. சுகுமாரனின் மார்க்கெட்டிங் புத்தி வேலை செய்தது. வரிசையில், கிடைக்குமா கிடைக்காதா என்ற சம்சயத்துடன் நிற்பதா, அல்லது வேறு குறுக்கு வழிகள் தேடுவதா? உலகுக்கே விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்யக் கற்றுத்தந்தவன் தமிழன் என்றொரு விசாரணைக் கமிஷன் தீர்ப்புவரி நெஞ்சில் ஆடியது.

வீட்டின் பின்பக்கம், வெண்கல உருளிகள் மூன்றில் புத்துருக்குத் தேங்காய் எண்ணெயும் பிற மூலிகைப் பொடிகளும் சேர்ந்து கொதிக்கும் ஆவியின் மணம் சுற்று வட்டாரத்தில் அளாவியது. சற்று நேரத்தில், வீட்டுப் படிப்புரையில் பதினான்கும் பன்னிரண்டும் சொல்லத் தக்க இரண்டு பெண் கிடாவுகள் வந்து நின்றனர். நாட்டியப் பேரொளிகள் லலிதா, பத்மினி போல செழிப்பான உடல்வாகு. வட்ட வசீகர முக வெட்டு. பாவாடையும் அதன்மேல் இடுப்புச் சதை தெரியாத வண்ணம் நீண்ட மேற்சட்டையும். தலைமுடி மிக ஆச்சரியப்படும்படி, பாதங்கள் வரை நீண்டு தழைந்திருந்தன. அளகபாரம் என்பார்கள் தமிழின் வரலாற்று நாவலாசிரியர்கள். ‘தாள் தொடு தடக்கை’ என்று கம்பன் கைகளின் நீளத்தைச் சொன்னது அறிவோம். இதுதான் தொடும் கருங்கூந்தல்.

குளித்துத் தலைசீவிப் பொட்டும் தொட்டு, சந்தனக் கீற்று வரைந்து, கண்களுக்கு மை எழுதி, தலை முடியைப் பின்னாமல், காதோரம் இருந்து எடுத்த மயிரிழைகளால் குறுக்கே முடிந்து, கருநிற அருவி போலும்… கரு மயில் தோகை போலும்… கார்முகில் பொழிவு போலும்.

வரிசையில் காத்து நின்ற கூட்டம் சிலாகிப்பில் வாய் பிளந்தது. அரையில் சரிகை முண்டும் தோளில் சரிகை நேரியதும் அணிந்த தறவாட்டு அம்மூம்மை ஒருத்தி சொன்னாள்.

“அகத்தோட்டு போயின் மக்களே! கண்பேறு படும்… அம்மையிடத்துச் செந்து, திருடி சுற்றிப் போடான் பறயின்.” என்று. மெய்தான். எந்தக் கண் என்னவென்று யாரறிவார்? நாய்க் கண்ணு, நரிக் கண்ணு, பேய்க் கண்ணு, பிசாசுக் கண்ணு, முண்டக் கண்ணு, கொள்ளிக் கண்ணு…

வரிசையில் நிற்காமல், வரிசையில் நிற்போருக்குத் துணையாக வந்திருந்த சிலர், ஆண்களும் பெண்களுமாய் பலா மர நிழலில் நின்றிருந்தனர்.

“திவசம் முந்நூறு குப்பியே காய்ச்சான் சாதிக்கும். இந் தீர்ந்நால் பின்னே நாளத் தன்னே! சிலப்போ ரெண்டு குப்பி, சிலப்போ ஒற்றக் குப்பியே கிட்டத் தொள்நு” என்றான் ஒரு மூத்த அம்மச்சி. அது வேறா எனத் தோன்றியது சுகுமாரனுக்கு வரிசையை ஒழுங்குபடுத்த ஒரு போலீஸ்காரர் நின்றிருந்தார். கையில் லாத்தியை ஆட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு வீட்டினுள் இருந்து ஒரு கிளாஸ் சாயா வந்தது.

மாமரத்து மூட்டில் ஒதுங்கிக் கிடந்த கசேரியில் அமர்ந்து போலீஸ் அங்ஙத்தை சாயா குடித்தார். மெதுவாக நகர்ந்து சுகுமாரன் அவர் அருகில் போனான். தெரிந்த மலையாளத்தில் சம்சாரிக்கத் தொடங்கினான்.

“சேட்டா! க்ஷமிக்கணும்.. கோயம்புத்தூர்லேந்து ராவில் வந்நதாணு… ஓடன்தன்னே திரிச்சும் போணும்… திறுதியுண்டு…. எங்ஙனயாயிலும் ரெண்டு குப்பி சங்கடிப்பிச்சுத் தரணும்…”

போலீஸ்காரன் சற்றுக் கூட்டத்தைப் பார்த்தார். “எந்தாடா பறஞ்ஞு பெலயாடி மோனே” என்று தெறி விளிச்சு, அடிக்கக் கையோங்கவில்லை. அஃதோர் நல்ல சகுனம் என்றது சேல்ஸ்மேன் அனுபவம். கேரளத்தில் வரிசை தாண்டுவது என்பதோ, வெளிப்படையாகக் கைக்கூலி கொடுப்பது என்பதோ சாத்தியமில்லை. தமிழ்நாடு என்றால் எல்லாமே வெளிப்படை ‘ஒம்மாண அம்மாச்சா நிர்வாணம்’ என்று சொல்லிவிடலாம். நாளிதழ்களுக்கு அறிக்கை கொடுக்கலாம், ‘நிரூபிக்க முடியுமா?’ என்று பலரும் காண, அலுவலக மேசை மீதே பணக்கட்டுக்களை வைக்கலாம். எவன் கேட்க இருக்கிறான்? எவன் எந்த ரோமத்தைப் பிடுங்கிவிட இயலும்?

எதிர்பாராத கணத்தில், சற்று உரத்த குரலில், எல்லோரும் கேட்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, போலீஸ் சேட்டன் உரைக்கலானார்.

“பத்திரக்காரராணோ? அது மும்பே பறஞ்சாப்போரே? நிங்கட்கு இப்போ எண்ண காய்ச்சுந்நவரைக் கண்டு சம்சாரிக்கணும். அத்தறயல்லே ஒள்நு! வரீன்..” என்று சுகுமாரனைக் கைபற்றி, வீட்டின் சுற்றுச்சுவர் ஓரமாகப் பின்புறம் அழைத்துப் போனார். தைலம் காய்ச்சும் வீட்டு உடைமைக்காரரிடம் சொன்னார்.

“சேட்டா..இவுரு கோயமுத்தூரில் நின்னும் பிளஷர் கார் பிடிச்சு வந்நவரா…லைனில் கெடக்கான் புத்தி முட்டுண்டு. காயி மேடிச்சிட்டு ரெண்டு குப்பி கொடுக்கீன்.” என்றார்.

நூற்றைம்பது ரூபாய் வாங்கிக்கொண்டு, மாத்ரு பூமி மலையாள தினசரியில் சுற்றி, இரண்டு குப்பி எண்ணெய் எடுத்துக் கொடுத்தார். ஒரு பாவனைக்காக நேரம் கடத்தினார் போலீஸ்காரர். வீட்டின் பின்புறத்துப் பூவரச மரத்தடியில் நின்றாலும் வெண்கல உருளிகளின் வெக்கை உறைத்தது.

சுகுமாரனுக்கும் ஒரு கிளாஸ் சாயா வந்தது. ஊதியூதிச் குடித்து முடிந்ததும் போலீஸ்காரர் தலையசைத்தார். வந்த வழியே முடிக்கில் மெல்ல நடந்தளர், முன்னால் நடந்த போலீஸ்காரர், பாதிவழியில் திரும்பி நின்று, “நூறு ருப்பியாக தா” என்றார். சத்தமின்றி எடுத்துக் கொடுத்தான். “வளர நந்நி ” சொல்லி, அவர் மரத்து மூட்டுக்கு அவன் சந்துக்கும் நடந்தனர். இரு கைகளிலும் எண்ணெய்க் குப்பிகளுடன் பிரதான சாலைக்கு ஏறி, காரையும் கோபாலனையும் தேடினான்.

மறுபடியும் தம்பானூர். ஓட்டல் ரூமைக் காலி செய்து, ஒரு பீரும் குடித்து, காரைக் கிளப்பும்போது உச்சிக்காலப் பூசைக்கு ஏதோ ஒரு கோயிலில் மணி அடித்தது.

“உச்சைக்கு ஊணு?” என்றான் கோபாலனிடம் சுகுமாரன்.

“கொல்லம் சின்னக்டைத் தெருவுக்குப் போயிரலாம்… நல்ல செவப்புச் சம்பா அரிசிச் சோறு… மத்தி மீன் கொளம்பு- கரிமீன் பொள்ளிச்சது. சம்மதிச்சோ?” என்றார் கோபாலேட்டன்.

“நல்ல தென்னங்கள்ளும் கிட்டியாக் கொள்ளாம்” என்றான்.

அலுவலக வேலைகள் வழக்கம்போல் நாட்களைக் கவர்ந்து சென்றன. இரண்டு கிழமைகள் சென்றிருக்கும். ஒருநாள் பிற்பகல் நான்குமணிக்கு CGM போன் வந்தது. சற்று உற்சாகமான மனநிலையில் இருந்தார். வேடிக்கைக்காகக் கேட்டான் – “சார்! எம்டி சந்தோஷமானே?”.

“எதுக்குடா கேக்குறாய்?”

“மற்ற முடி வளரப்பட்ட எண்ணெ பெரட்டி நல்ல குணமுண்டோ சாரே?”

அவர் கூவிச் சொன்னார். “டேய்.. ஒனக்கொரு காரியம் தெரியுமா? அது எம்டி சம்சாரத்துக்கு இல்ல பாத்துக்கோ!”

“பின்னே?” என்றான் திகைத்து. மனதோ, ‘வல்ல செக்ரட்டரிப் பெண்ணுனாயிட்டு இரிக்கும்’ என்றது.

“அவுனுக்குத் தான் டா!” என்றார் சிஜிஎம்.

“சார், என்ன சொல்லுகியோ? அவரு தலையிலே ஊருப்பட்ட மயிரு இருக்கயில்லா செய்யி?” என்றான்.

“அங்க இல்லடா!”

“சாரே!” என்று கத்தினான் சுகுமாரன், திகைத்துப் போய்.

“பொறு டா. பொறு- வெப்ராளப் படாதே! நெஞ்சிலே தடவதுக்குத் தான்… இல்லாம நீ நெனைக்கப்பட்ட எடத்திலே தேய்க்கதுக்கு இல்லை… நெஞ்சிலே தான் அவனுக்கு ரோமமே இல்லியாம்..”

சந்தித்து உறவாடும் பெண்கள் பள்ளியறையில், தோள்மேல் சாய்ந்து விரல்விட்டு அளைய நெஞ்சிலும் கொஞ்சம் முடி வேண்டும்தான் என்று தோன்றியது சுகுமாரனுக்கு.

நன்றி: உயிர் எழுத்து – https://nanjilnadan.com/2017/11/19/மயிரேமாத்திரம்/

நாஞ்சில்நாடன் நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *