மன உறுதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2024
பார்வையிட்டோர்: 2,401 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிரதிபாவுக்கு மனதிற்குள் இன்னும் கேள்வி எழுந்து கொண்டேயிருந்தது. பிரசன்னா தன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று கூற காரணமென்ன? கண்டிப்பாக காதல் சலனப் பட நானோ இல்லை அவரும் இன்று இளமை ஊஞ்சலாடிக் கொண்டிருக்கவில்லை. இது நிச்சயமாக அவருக்கும் புரிந்திருக்கும்.

கம்ப்யூட்டரில் புரோக்ராம் தவறாக வந்தது. “ச்சே! இந்த மனம் வேறு எங்கேயோ அலைந்து கொண்டிருக்கிறதே. பிரசன்னாவுக்கு நான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து கூட வாங்கியவள் என்று தெரியும்.

மேலும் அவர் சொந்த விசயமானாலும் எதையும் அலுவலகத்தில் மனம் விட்டுப் பேசுபவர் இன்று மத்தியானம் சாப்பிட்டு விட்டு கேன்டீனுக்கு வா, கொஞ்சம் தனியாக பேச வேண்டும் என்கிறரே… கண்டிப்பாக அலுவலகப் பிரச்சனையாக இருப்பதாக தெரியவில்லை. அவரிடம் அப்போதே கேட்டிருக்க வேண்டும். மனம் ஓரிடத்தில் நிற்க மறுத்துவிட கம்ப்யூட்டரை ஆஃப் பண்ணிவிட்டு எழுந்து சென்று தண்ணீர் குடித்தாள்.

இங்கிருந்து பார்க்க பிரசன்னா தன் ஸ்டெனோவிடம் ஏதோ லெட்டர் டிக்டேட் பண்ணிக் கொண்டிருந்தது அவர் கண்ணாடி கேபினுக்கு வெளியே தெரிந்தது.

நேரம் இன்னும் பனிரெண்டு மணி தாண்ட வில்லை. இன்னும் சாப்பாட்டிற்கு ஒரு மணி நேரமிருந்தது.

சாப்பாடு உள்ளே இறங்க மறுத்தது. வேகமாக சாப்பிட்டுவிட்டு கேன்டீனுக்கு வந்தபோது ஆங்காங்கே ஆபீஸ் ஸ்டாஃபுகள் வம்படித்துக் கொண்டிருந்தார்கள்.

ஓரமாக ஒரு நாற்காலியில் பிரசன்னா சிகரெட் குடித்துக்கொண்டிருந்தார். எதிரே போய் அமர்ந்ததும் “பிரதிபா ஏதாவது சாப்பிடுகிறாயா?” என்று கேட்டார். “வேண்டாம்”

அவள் பதிலை அசட்டை செய்யாமலே, “டேய் பையா ரெண்டு கப் ஐஸ்கிரீம் கொண்டு வா” என்றார்.

ஐஸ்கிரீம் வந்து இருவரும் அமைதியாக சாப்பிட்டும் பிரசன்னா பேச ஆரம்பிக்காததால் “என்ன சார், தொண்டையிலே மீன் முள் சிக்கிக் கொண்ட மாதிரி விழுங்கவும் முடியாமல், கக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றாள் பிரதிபா..

அவளைப் பார்த்து முத்தாய்ப்பாக சிரித்துவிட்டு திரும்பவும் சிகரெட் குடிக்க ஆரம்பித்தார்.

“என்ன சார் ரொம்ப டென்ஷனா இருக்கிற மாதிரி தெரிகிறீர்கள்?”

“ம்… ஒன்றுமில்லை”

“ஏதாவது தப்பு பண்ணி விட்டீர்களா?”

“இல்லை”

“என்ன பேச விரும்புகிறீர்கள்? ஆபீஸ் விசயமாகவா…இல்லை சொந்த விசயமா?”

“ம்… பிரதிபா என் கனவிலே திடீரென்று ஒரு தேவதை வர ஆரம்பித்திருக்கிறாள்” என்று பிரசன்னா சொன்னதும் பிரதிபா விழுந்து விழுந்து சிரித்தாள்.

“ஏன் சிரிக்கிறாய்?”

“இன்னும் பதினாறு வயசுப் பையன் மாதிரி பேசுகிறீர்கள் நீங்கள்?”

“ஏன்? எனக்கென்ன வயதாகி விட்டது?… நான் நாற்பதுகளில் தானே இருக்கிறேன். மனதளவில் நான் இன்னும் பதினாறு தாண்டாமல் தானிருக்கிறேன்”

“அதனாலே…”

“அதனால் தானோ என்னமோ என் மனைவி என்னை விட்டு ஓடிவிட்டாள்” என்று சொன்னவர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

திடீரென்று சீரியஸாகப் பேசத் துவங்க, “ஸாரி சார். இவ்வளவு விசயங்கள் உங்களைப் பற்றி எனக்குத் தெரியாமல் போனது” என்றாள் பிரதிபா.

“ஸாரி பிரதிபா, நான் இதை உனக்கு சொன்னதன் காரணத்தை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் என் அந்தரங்கத்தை உன்னோடு பகிர்ந்து கொள்ள கூப்பிட்டேன். ஸாரி உன்னை துக்கப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடு”

“அதெல்லாமில்லை. சொல்லுங்கள் சார்”

“நான் கொஞ்சம் பெர்சனலாக கேட்கலாமா பிரதிபா?”

“தாராளமாக”.

“நீ எப்போது டைவர்ஸ் பண்ணிக் கொண்டாய்?”

“மூன்று நான்கு வருடங்களிருக்கும் ஸார்?”

“திரும்ப திரும்ப கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்று நினைத்தா?”

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ஸார்”

“இப்போது எங்கே தங்கியிருக்கிறாய்?”

“லேடீஸ் ஹாஸ்டலில்”

“வாழ்க்கையில் ஏதாவது பிடிப்பு வேண்டாமா பிரதிபா. நான் உன்னை பூ மாதிரி தாங்குகிறேன், என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா?” என்று அவர் கேட்டதும் பிரதிபாவின் முகமே மாறிப்போனது.

“ஸாரி சார்” என்றாள காட்டமாக.

“இல்லை பிரதிபா, கொஞ்சம் யோசித்து சொல். டேக் யுவர் ஓன் டைம்”

“ஸாரி சார். நீங்கள் என்னை ஒரு வருடம் யோசிக்கச் சொன்னாலும் என் பதில் “நோ”தான். ஒரு முறை கிடைத்த அனுபவம் தாராளம் போதும். தயவு செய்து இனி இந்த நோக்கத்தில் எப்போதும் பேச வேண்டாம்” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றாள் பிரதிபா.

– தமிழ் டைம்ஸ், 1999

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *