கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: June 25, 2025
பார்வையிட்டோர்: 718 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கார்த்திகை மாதத்திற்கு எப்படித்தான் இப்படி ஓர் அழகு வந்து சேர்கிறதோ என்று நானும் பாலாவும் எண்ணி வியந்ததுண்டு. அடிவானச் சிவப்பு கலைந்து விடும் மாலையில் திடீரென்று பூச்சிதறலாய் மழை பெய்யும். செம்மண் பூமி மழை நீரை உறிஞ்சி வாசனையை வெளிவீசும். சரத், நெஞ்சு விலாப் புடைக்க மூச்சுக் காற்றை உள்வாங்கி மண் வாசனையைப் பிடிப்பான். 

அல்லிக்காட்டுக் கிராமத்திற்கே அழகு சேர்த்து நிற்கும் குளக்கரை. நாரைகள் மேற்கு வானிலிருந்து சடசடவென்று பறந்து வரும். மஞ்சளும் சிவப்பு மாக உடல் முழுக்க நிறம் பூசிக் கொண்டு, அகலக் கால் பரப்பி, கண்டல் மரத்தில் அமர்ந்து கேரத் தொடங்கும். குண்டு குண்டான உடலோடு கீரிக்கலர்ப் பறவை களும் கூட்டம் கூட்டமாக வந்து, குளத்தின் கிழக்குக் கரையில் நீச்சலடிக்கத் தொடங்கிவிடும். எல்லாம் வெளிநாட்டுப் பறவைகள். கூட்டம் கூட்டமாக வரும் இயல்பையும் காலந்தவறாமல் கார்த்திகை மாதத்தில் இடம் பெயர்ந்து வருவதை யும் இவைகளுக்கு யார்தான் கற்றுக் கொடுத்தது…? 

எப்போதாவது மூவரும் குளத்தில் இறங்கி, சொண்டு முழுக்க மஞ்சள் நிறம் காட்டி நிற்கும் நீர்ப் பறவைகளைப் பிடிக்க முயலுவோம். நான் முழங் காலளவு நீரிலேயே நின்று விடுவேன்.என் உடல் நோய் அப்படி. வீட்டில் அதற்கெல்லாம் விடமாட்டார்கள். பாலாவும் சரத்தும் இடுப்பளவு ஆழம் வரைச் சென்று பறவைக ளுக்கு விளையாட்டுக் காட்டி நிற்பார்கள். இவர்கள், அவைகளை நெருங்க பறவை கள் மேலெழும்பி, மழை மேகமாக் திரண்டு உயர்ந்து…பறந்து…கலையும். 

ஊரில் சட்டமே போட்டுவிட்டார்கள். குளத்தில் சீசனுக்குத் தங்கவரும் பறவைகளை யாரும் பிடிக்கக் கூடாதென்று. பறவைகள் கூட்டம் கூட்டமாகக் குளக்கரைத் திட்டுக்களிலும் கண்டல் மரங்களிலும் அமர்ந்து கதைகள் பேசும் போது, ஊரே திரண்டு நின்று வேடிக்கை பார்க்கும்…… முன்னரெல்லாம் அயல் கிராமங்களிலிருந்து வண்டில் கட்டிக் கொண்டு. தங்கல் போட்டு சனங்கள் வந்து போவதை பாலாவின் அப்பா கதை கதையாகச் சொல்லுவார். கார்த்திகை சீசனுக்கு பறவைகள் அல்லிக்காட்டுக் குளத்திற்கு வரும்போதெல்லாம் எங்கள் வீட்டாரும் பாலாவின் அப்பாவும் மோரும் கடலையும் கொடுத்து மகிழ்வதை, அவர் இருந்த போதெல்லாம் சொல்லிச் சிலிர்த்து நிற்பார். அப்படி ஒரு சீசனில்தான் சரத்தின் குடும்பமும் சினேகிதமானதாம். ஐந்துமைல் தள்ளி சரத்தின் கிராமம்…சனி, ஞாயிறெல்லாம் சரத் எங்களோடுதான்…

கண்டல் மரத்தில் பறவைகள் கூடு கட்டி, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் போதெல்லாம் ரகசியமாக பாலாவும் சரத்தும் ஏறி, குஞ்சுகளைத் தொட்டுக் கொஞ்சிவிட்டு வருவார்கள். நான் போவதில்லை….. எங்காவது தூரம் நடந்தால் எனக்கு இளைக்கும்…

கண்டல் மரத்திலிருந்து எப்போதாவது குஞ்சுகள் தவறிக் கீழே விழுவது முண்டு. அதனை அவர்கள் தாய்ப் பறவையின் பரிவோடு நெஞ்சோடு அணைத்து மீண்டும் கூடுகளில் விட்டுவிடுவதுமுண்டு…. அதற்குள் குஞ்சுகளைத் தடவிப் பார்க்க எனக்கு அவர்கள் நேரமளிப்பார்கள்…

இப்படித்தான் ஒரு நாள் சரத், கைகளைத் தாமரை மொட்டுப்போலக் குவித்து, அதற்குள் குஞ்சொன்றைப் பக்குவமாகக் கொண்டு வந்து வைத்தான். இம்முறை பறவைக் குஞ்சல்ல…அணில் குஞ்சு…

“அணில் குட்டி” – சரத் 

பாலா பளீரென்று சிரித்துவிட்டான். சரத் என்னைத் திரும்பிப் பார்த்தான் பாலாவின் சிரிப்பு விளங்காமல். 

“இது அணில் குஞ்சு. தேவையெண்டால் அணில்பிள்ளை என்று கூப்பிடு. அணில் குட்டி அல்ல” 

“அணில் குஞ்சு…அணில் பிள்ளை, அணில் குட்டி…போ. இது ஒன்று மல்ல…இது என் பிள்ளை…” அவன் ‘பிள்ளை’ என்று கூறுவதே வேடிக்கை யாக இருக்கும். 

கார்த்திகை மாத மழைத் துளியை உறிஞ்சி, மரங்களெல்லாம் துளிர்க்கத் தொடங்கிவிடும்…. மழை பெய்து அயலிலுள்ள குளங்களி லெல்லாம் நீர் பிடிக்க பறவைகளுக்குக் கொண்டாட்டமாகிவிடும். நீரில் நீந்துவதும் மீன் பிடிப்பதுமாக…

மார்கழி பூராக மழை கொட்டோ கொட்டென்று கொட்ட, எங்கும் வெள்ள மாகி, ஈரக் காற்றில் குளிரேறி சீதோஷ்ணம் மாறிவிடுகின்றபோது, பறவைகள் ஒவ்வொன்றாக பிரியத் தொடங்கிவிடும். எங்குதான் செல்கின்றனவோ தலைக்கு மேலாக ‘சடசட’வென்ற ஒலியொடு இரவிலோ மாலையிலோ அவை விடை பெற்றுக் கொள்ளும். குளத்தைச் சுற்றி அரை வட்டமாக அவை பறந்து பிரிந்து செல்லும்போது, பாலா கண் கலங்கி அழுவான்…நான் அழுவதில்லை. 

நான் அழக் கூடாதென்று வீட்டில் உத்தரவு. அழுது தீர்த்து விடுவதிலேயே ஒரு சுகம் இருக்கிறது…அந்த சுகம் எனக்குக் கிடைப்ப தில்லை. 

பாலாவின் அப்பா என்னையும் பாலாவைப் போலவே கவனிப்பார். தாவளத்திற்குச் சென்று மாடுகளைப் பார்த்து வரும்போதெல்லாம் பறி நிறைய ஈச்சங் குலைகளைக் கொண்டு வருவார். சிவப்பும் கறுப்புமாக பழுத்தும் பழுக்காத பழங்களை மடி நிறையப் பரப்பி, கனிந்த பழங்களாகப் பொறுக்கி எனது வாயில் புகட்டும் போது…. எனக்கு இப்போது நினைத்தாலும் கண்ணீர் வருகின்றது. கண்ணீரா ஐயோ….நான் அழக்கூடாது…

தாவளத்தில் மூன்று தலைமுறை மாடுகள் அவருக்கு. முந்நூறு தேறுமா? கூடவே பார்க்கலாம்… முதிர்ந்த காளைகளை ஒரு சீசனுக்கு விற்றாரென்றால், வீட்டில் செல்வம் தான். நல்ல சிவலைக் கன்றுகளாகப் பார்த்து எனது குறியையும் பாலாவின் குறியையும் இட்டு மகிழ்வார். சித்திரைப் பூவெயிலில் உஷ்ணம் கூடும் நாட்களில் நானும் பாலாவும் தாவளத்தற்கே சென்று விடுவோம். பாலாறு ஓடும் தீவுத்திடலில் சில்லுறுட்டி விளையாடும் போது, தேன் வதையை உமலில் ஏந்தி வருவார். தேனைச் சப்பிச் சாப்பிடும் புதுமை….நான் பாலாவின் வாயில் புகட்ட, பாலா என் வாயில் புகட்ட, பாலாவின் அப்பா தன் இரு கை இடுக்குகளில் எங்கள் இருவரையும் தூக்கி தட்டாமாலை சுற்ற ஓ என்ன இனிமையான நாட்கள்….. 

அந்தச் சந்தோஷம் நீடித்ததா..? 

பட்டிமாடுகளுக்குக் குரை நோய் கண்டது. வயிற்று வீக்கமும் குடல் அரிப்பும் ஏற்பட கொள்ளை நோய் என்றார்கள்.மாடுகள் ஒவ்வொன்றாக வீழ்ந்து இறக்கத் தொடங்கிவிட்டன. முன்னிருட்டுக் காலமொன்றில் தொடங்கின நோய், அடுத்த தலைப்பிறை தென்படுவதற்கிடையில் பட்டியையே துவம்சம் செய்து விட்டுப் போய்விட்டது. கோணல் தென்னை மரத்தில் ஒற்றைக் காலை ஊன்றி நின்று பாலா கேவத் தொடங்கினான். பாலாவின் அப்பா அழவில்லை. எந்த உணர்ச்சியையும் அவர் வெளிக்காட்டவில்லை…மெளனமாகிவிட்டார்…

எங்கள் தகப்பன் ஒரு முடிவுக்கு வந்தார். எங்களுக்கென்று இருந்த பலாமரத்தடி வீட்டை அப்படியே பாலாவின் பெயருக்கு எழுதிக் கொடுத்தார். கொஞ்சக் காலம் பொறுத்து தானே ஒரு பட்டி மாடு வாங்கித் தருவதாகவும், அதைப் பராமரிக்கும் படியாகவும், அதுவரை வேண்டிய எல்லா உதவிகளையும் தானே செய்வதாகவும் உறுதி தந்தார். 

பாலாவின் அப்பா எந்த வார்த்தைகளையும் பேசவில்லை. தனது சொத்து, சுகம் எல்லாம் அழிந்துவிட்ட சோகத்தில் அவர் பேச்சையே குறைத்துக் கொண்டு விட்டார். 

இப்போதெல்லாம் நான் பாலாவுடனேயே பலாமரத்து வீட்டில் – இனி அவர்களது வீடுதானே – தங்கிவிடுவேன். 

வீட்டைச் சுற்றியுள்ள பள்ளப் பகுதிகளில் சீனட்டி விதைத்தார்கள். மூவருமாகக் கதிரறுத்தோம். பத்து மாவக்கையில் ஐந்து கட்டு. மூவருமாக முற்றத்தில் கதிரைப் பரப்பி, கம்பால் அடித்துப் பொலியைப் பிரித்துக் கொண்டிருந் தோம். ஏதோ கவனமாக பாலா கம்பை வீச அது எனது கம்புடன் மோத, சிதறி விழுந்த நெல்மணியொன்று எனது இடது கண்ணில் நேராகத் தைத்துவிட, வலி பிராணன் போனது. பாலாவின் அப்பா பதறிப் போனார். 

இரவோடு இரவாக வண்டில் கட்டிக் கொண்டு டவுனுக்கு வந்து, ஐந்து மணி பஸ்ஸைப் பிடித்து கண்டிக்குச் சென்று ஆஸ்பத்திரியில் காட்டி ஒரு கிழமைப் போராட்டத்தில்… இடது கண் பழுதாகிவிட்டது….. பார்வை போய்விட்டது. 

பாலாவின் அப்பா அழுதழுது மாய்ந்து போனார். என்னை மடியில் கிடத்திக் கொண்டு சிறு குழந்தைபோல தேம்பித் தேம்பி அழ…… எனது தகப்பனும் அழ…பாலா மலங்க மலங்க என்னைப் பார்த்துக் கொண்டு விசும்ப…நான் பாலாவின் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டேன். 

மீண்டும் கார்த்திகை சீசன் வந்து விட்டது. 

நாரைக் கூட்டங்களும், அயல் கிராமத்து மக்களுமாக குளத்தங்கரை ஆரவாரப்பட்டுக் கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுதில் அந்தச் சோகம் நிகழ்ந்து தீர்ந்தது. 

குளத்தங்கரையில் – முழங்காலளவு நீரில் நின்று மயிலைக் காளை ஒன்றை வைக்கோல் பிரி கொண்டு உடல் தேய்த்துக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த பாலாவின் அப்பாவை செம்மூக்கன் அகல வாய் திறந்து கௌவிக் கொண்டது. இடுப்பில் முதலைப்பிடி. அருகிலிருந்த நாணல் பயிரை இறுகப் பற்றிக் கொண்டு போராடினார். முதலைப் பிடியின்போது, சரத்தின் 

அப்பா குளத்தில் பாய்ந்தார். கையில் கொண்டு சென்றிருந்த கரியால் தடியால் மாறி மாறிப் போட்டதில் செம்மூக்கன் பின்வாங்கிச் சென்றுவிட்டது. பாலாவின் அப்பா நினைவிழந்தார். இரு கைகளிலும் ஈரமும் இரத்தமும் சொட்டச் சொட்ட உடலை ஏந்தி வந்து கரையில் போட்ட சரத்தின் அப்பா, சும்மா இருக்க வில்லை. குளத்தங்கரையில் அவிழ்த்து வைத்திருந்த மாட்டு வண்டிலைப் பூட்டி, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுவிட்டார். கூடவே என் தகப்பனும் சென்றார். 

டவுன் ஆஸ்பத்திரியில் கைவிரித்து விட்டார்கள். 

“என்ன செய்யலாம்….?” 

“யோசிக்க நேரமில்ல குணதிலக்க…. கார் ஒன்டு பாருங்க.கண்டி ஆஸ்பத்திரிக்கே கொண்டு போயிடுவம்” 

நேரமும் பணமும் காற்றாய்ப் பறந்தது. நானும் பாலாவும் முன்னால் ஏறிக் கொள்ள, குணதிலக்க ஐயாவும் என் தகப்பனும் பாலாவின் அப்பாவை மடியில் கிடத்திக் கொள்ள, கண்டி நோக்கிக் கார் விரைந்தது. 

பாலா அழுது கொண்டே வந்தான். 

“அழாதே பாலா….வெறும் காயம்தான்…… கண்டியில் நல்லாக் கவனித்துக் கொள்வாங்க ரெண்டு கிழமையில சுகமாக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துடலாம்” 

பாலாவின் அப்பா முனகிக் கொண்டிருந்தார். முதலை பிடித்துத் தப்பிய வர்கள் குறைவு. அதிலும் செமமூக்கன்…அகோரமாகவே தாக்கி இருந்தது. தாவளத்துப்பட்டி அழிந்ததிலிருந்து விசனமாகிப் போன அவரது உடலும் ஏற்கனவே பலவீனமாகித்தான் இருந்தது. 

மூன்று நாள்தான் ஆஸ்பத்திரியில் இருந்தார். நாலாம் நாள் செத்துப் போனார். பாலா எனது தோளைக் கட்டிக் கொண்டு தேம்பி அழ…நானும் அழ. குணதிலக்க ஐயா, தகப்பனின் காதோடு ஏதோ குசுகுசுத்தார். 

தகப்பன் பாலாவோடு ஏதோ பேசுகிறார். பாலாவின் முகத்தில் சோகத்திலும் பளபளப்பு ஏறுகிறது. ஆதரவுடன் எனது கைகளை அழுத்தி முத்தமிடுகிறான். 

“தம்பி, குணத்திலக்கயிட்ட பாலாட அப்பா கடைசியாக ஓர் ஆசையைச் சொல்லி இருக்கார். தன்னுடைய கண்ணை உனக்குப் பொருத்திவிடுவ தென்று” 

பாலாவின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர்…இது எப்படிச் சாத்தியம்…? இந்த ஐடியா யார் அப்பாவுக்குச் சொன்னது….? மரணத் தருவாயிலும் அவர் என்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தாரா…? 

பாலாவுடைய அப்பாவின் மரணச் செய்தியின் சோகத்தை அகத்திலும், அவரது கண்ணை எனது முகத்திலும் பொருத்திக் கொண்டு நாங்கள் அல்லிக் காட்டுக்குத் திரும்பியபோது கார்த்திகை சீசன் முடிந்து விட்டிருந்தது. 

பாலாவுடைய அப்பாவின் கண்ணோடு நான்…அதனை வருடுவதும் கண் கலங்குவதுமாக நான்…எதற்கும் அழக்கூடாது என்று வீட்டில் எனக்குச் சொல்லி விட்டார்கள். நான் அதையே பாலாவுக்கும் சொன்னேன்…பாலா எங்களோடையே தங்கிவிட்டான். 

அப்புறம் வந்த கார்த்திகை சீசன் எங்களுக்கு எந்த சுகத்தையும் தரவில்லை. சரத்மட்டும் சனி, ஞாயிறுகளில் வந்துவிட்டுப் போவான். 

புன்னை மர நிழலில் இருந்து ஆளுக்கொரு திசையில் வெறித்துப் பார்த்துக் கொண்டு நேரம் கடத்துவோம். கீரி நிறப் பறவைகள் கூட்டமாகப் பதிந்து சோகம் பாடிவிட்டுச் சென்றன….. சரத்தின் கைகளுக்குள் மலங்க மலங்க விழித்துக் கொண்டு அணில் குஞ்சொன்று. 

“என்ன சரத்?” 

“அணில் குட்டி”

பாலா சோகம் பறந்து முதன் முதலாக முறுவலித்தான். 

எங்கள் வீட்டில் இரண்டு புதுச்சைக்கிள் வாங்கித் தந்தார்கள். எனக்கும் பாலாவுக்கும். நான் சைக்கிள் ஓடவில்லை. ஓடினால் இளைக்கும். வீட்டிலும் தெரியும். பின் ஏன் எனக்கும் ஒரு சைக்கிள் வாங்கினார்கள்…..? எனக்குத் தெரியவில்லை. பாலா என்னைத் தனது சைக்கிளில் எற்றிக் கொள்வான். செம்மண் படர்ந்த குளக்கட்டுக்களில் சவாரித்துக் கொண்டு செல்கையில் சீதளக் காற்று முகத்தில் பட்டே எனக்குச் சோர்வு வந்துவிடும். 

“போதும் பாலா நான் இறங்கிக் கொள்கின்றேன்” 

நான் இறங்கிக் கொண்டேன். குளக்கட்டுச் சரிவில் அமர்ந்து கொண்டோம். குறுணிக் கற்களைப் பொறுக்கி ‘சளக் சளக்’ என்று நீர்ப்பரப்பில விசிறி எறிகிறான். அரை வட்டமாக நீர் பிரிந்து வழிவிட்டு கதை சொல்லிற்று. 

நீர்ப்பாம்பொன்று தலை நீட்டிப் பார்த்துவிட்டு, அமிழ்ந்து மறைந்து போனது. 

“நான் இருப்பது உங்களுக்குப் பாரம் இல்லையா…?” 

“என்ன சொல்கிறாய் பாலா…? நீ எங்களுக்குப் பாரமா..? ஒரு பிடிச் சோறு தின்ன மாட்டாய்…தலைக்குப் பூச்சரம் பாரமா?” 

“நான் அதுக்குச் சொல்லல. நீ சைக்கிள் ஓட மாட்டாயென்று தெரியும். அப்ப ஏன் உங்க அப்பா ரெண்டு சைக்கிள் வாங்கினவர்? ஒன்டு போதாதா?” 

“அதுதான் பாலா எனக்கும் புதுமையாக் கிடக்கு” 

“உண்மையில் அவர் என்னைப் பெத்தவர் மாதிரிதான். எனக்காகத்தான் சைக்கிள் வாங்கி இருக்கார். யாரும் ஏதும் பேசிப் போடப் போறாங் என்டுதான் உனக்கும் ஒன்டு வாங்கி இருக்கார்” 

“அப்பா மாதிரி என்ன….? அப்பாதான். உன்ட அப்பாகூட இப்ப நம்மோடு தான் இருக்கார். இந்தா என்ட கண்ணெப்பார். இது யார்ட கண்? அப்பாடதான். அப்பா இப்பவும் நம்மோடதான் இருக்கார்” 

பாலா என்ட இடது கண்ணை வெறித்துப் பார்க்கிறான். நெஞ்சுக்குள் ஈரம் கசிகிறதா….? பாசம்….. 

“அது சரி…உன்னைப் பாரமான வேலை எதுவும் செய்ய வேண்டாம் என்கிறாங்க. உன்னாலயும் முடியல…. இளைக்குது என்ன கோளாறு உனக்கு?” 

நான் சொல்லவில்லை. பாலாவை மேலும் ஏன் கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைத்துத்தான் சொல்லவில்லை. இருக்கின்ற கஷ்டங்கள் போதாதா….? அது சரி…. அதிகம் வேலை செய்தால் எனக்கு ஏன் இளைக்கிறது…? எப்போதாவது இருந்துவிட்டு சிறிதளவு இரத்தம் சிறுநீருடன் வெளியேறுகிறது…… வீட்டில் எப்படியாவது சொல்லிவிட வேண்டும்…… எப்போதாவது……நாளைக்கு… நாளைக்கு…

கார்த்திகை சீசன் முடிந்து பள்ளிக்கூடமும் மூடி விட்டார்கள். அடை மழை முடிந்து பனி விழத் தொடங்கி இருந்தது. அல்லிக்காட்டில் சோளம் சீசன் ஆரம்பித்துவிட்டது. குணதிலக்க ஐயா, எங்களைத் தங்கள் கிராமத்துக்கு அழைத்துப் போனார். எங்கும் மாவும் செவ்விளநீர் மரமுமாக குளிர் மூடிக் கிடந்தது. 

சோள மாவில் பிட்டவித்து, செல்வன் மீன் குழம்பு செய்தார். முற்றத்தோடு குனிந்து குலை தள்ளியிருந்த சாம்பல் மொந்தன் காயிலிருந்து பொரியல் செய்தார். 

ஏகத்துக்குச் சாப்பிட்டு, நித்திரைக்குச் செல்கையில்கூட எனக்கும், பாலாவுக்கும் அப்படியொரு அனர்த்தம் நடக்கப் போவது தெரிந்திருக்கவில்லை. 

கந்தளாய்க் குளம் உடைப்பெடுத்து விட்டது. அண்டியிருந்த கிராமங்கள் எல்லாம் நீரில் அள்ளுண்டு போனது. வீடு வாசல் என்று எல்லாமே திசை தெரியாமல் நீரில் மிதந்து உருண்டு போனது. மனிதர்களில் சிலரும் இறந்து போனார்கள். கால் நடைகளும் இறந்து மடிந்து போயின. அறுவடைக்குத் தயாராக இருந்த வயல்களெல்லாம் நீர்த் தீயில் குளிர்கண்டு இறந்தன. பாய்ச்சலுக்கும் வடிச்சலுக்குமென வசதியாக திருத்தியிருந்த வயல்களெல்லாம் மேடும் பள்ள முமாக சிதறிப் போயின….. 

மூன்று நாட்களுக்குப் பிறகுதான் எங்கள் வீட்டிலிருந்து ஆட்கள் வந்து சேர்ந்தார்கள். சரத்தின் வீடும் அள்ளுண்டு போனது. வயலெல்லாம் சிதைந்து அழிந்து போயின. கருக்கலுக்கு முன்னே நாங்கள் சனத்தோடு சனமாகத் திடலில் உள்ள பாடசாலைக் கட்டிடத்தில் ஒதுங்கிக் கொண்டதால் உயிர் தப்பிக் கொண்டோம். 

குணதிலக்க ஐயா மனமொடிந்து போனார். 

எங்கள் வீட்டார் ஆறுதல் சொன்னார்கள். வீட்டைத் திருத்திக் கொள்ள பணமாகவும் பொருளாகவும் வழங்கியபோது, சரத்தின் அப்பா தயங்கிக் கொண்டே பெற்றுக் கொண்டார். அடுத்த சிறுபோகத்திற்கு நாங்களே முதலிட்டு அவருடைய பத்து ஏக்கரையும் மாடடித்து விதைப்பித்து, கங்களவு தண்ணீர் கட்டி, ஒரு பசளையும் எறிந்து குணதிலக்க ஐயாவின் கையில் கொடுத்திட்டு வந்தோம். “இது உதவியல்ல…. குணதிலக்க…. கடன்தான். நீங்க வசதிப் படும்போது திருப்பித் தந்தாப் போதும்”

ஆயினும் இரு மனதோடுதான் அதனைப் பெற்றுக் கொண்டார். 

அந்த முறையும் வயல் விட்டுப் போனது. 

குடலையாகி பூவில் பாலேறும்போது, அறக்கொட்டியான் அடிக்கத் தொடங்கியது. இரண்டு நாளில் வயல் கருகி அழிந்தது. 

சரத்தின் அப்பா உடைந்து போனார். யாரிடமும் சொல்லிக் கொள்ளா மலேயே குடும்பத்துடன் கிராமத்தைவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டார். அதற்குப்பிறகு சரத்தைச் சந்திக்கும் சந்தர்ப்பம் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஏதாவ தொரு கார்த்திகை சீசனுக்கு அவன் வருவான் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது…. 

ஆனால் சரத் வரவில்லை. 

அப்புறம்…? 

எத்தனையோ கார்த்திகை சீசன்கள் ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு வயதைக் கூட்டிக் கொண்டு காலம் உருண்டு சென்றது. 

காலம் மட்டுமா உருண்டது? வீட்டில் எனது நோயைக் கண்டு பிடித்து விட்டார்கள்…. நைப்பிரற்றிசு…. சிறுநீரகம் கெட்டுப் போய்விட்டது. நான் இளைத்துக் கொண்டே போனேன். உணவு செல்லவில்லை. பாலாவே என்னுடன் கூட இருந்தான்…அவனும் ஒரு நோயாளிபோல…

சிறுநீரகம் மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் இரத்தம் கெட்டுவிடும். 

“பாலா கார்த்திகை சீசனுக்கு இந்த முறை எந்தப் பறவையாவது வராமல் விட்டதா?” 

இல்லை இல்லை. எல்லாமே வந்தன. இன்னமும் சீசன் முடியவில்லை. நான் வேணுமென்றால் உன்னைத் தோளில் தூக்கிச் செல்லட்டுமா?” 

“பறவைகள் வராவிட்டால் அவை இறந்துவிட்டன என்றுதானே அர்த்தம்? மரணம் எப்படி இருக்கும் பாலா?” 

“இப்ப ஏன் உனக்கு இந்தக் கணிதமெல்லாம்…எல்லாம் சுகமாக்கலாம். அடுத்த கிழமை கண்டிக்குப் போவதற்கு ஏற்பாடெல்லாம் நடக்குது…. சின்னதாக ஒரு ஒப்பரேஷன் அவ்வளவுதான்…” 

“சிறுநீரகம் மாத்துறது சின்ன ஒப்பரேஷனா?…. ஏன் பாலா…. ? மரணம் எப்படி இருக்கும்….? நான் இல்லாவிட்டாலும் எங்கள் வீட்டை விட்டுப் போயிடாதே. எனக்கு ஒரு கவலை பாலா உங்க அப்பாட கண்ணைக் கொண்டு செல்லப் போகிறேனே என்று” 

“விசர்க் கதையெல்லாம் பேசாதே…இந்த நோய் குணமாகுதா இல்லையா என்டு பார். உன்ட புதுச் சைக்கிள் அப்படியே இருக்கு…. அதுல நீ என்னையும் ஏற்றிக் கொண்டு அல்லிக்காட்டை வலம் வரத்தான் போறே….” 

“சரத்தையும் ஏற்ற வேண்டாமா?” 

“சரத்தை மட்டுமல்ல. அவனது அணில் குட்டியையும் ஏற்றிக் கொண்டு….நீ இருந்து பாரேன் 

ஒரு விஷயம் தெரியுமா…? சரத்தும் கண்டி ஆஸ்பத்திரியிலதான் வேலை செய்கிறானாம்” 

“அங்கும் அணில் குஞ்சு கிடைக்குமா?” 

பாலா பளீரென்று சிரித்தான் – மகிழ்ச்சியின்றி. 

சிறுநீரகத்தை மாற்றியே தீரவேண்டும் என்று கூறிவிட்டார்கள். அதுவும் விரைவாக. குருதிப் பரிசோதனை, பிரஷர் கணிப்பு, குளுக்கோசு அளவீடு என்று ஏகப்பட்ட பரிசோதனைகள். சரத்தும் அங்கேதான் வேலை செய்தான் – சிற்றூழியராக. 

வீட்டிலிருந்து எல்லாருமே வந்துவிட்டார்கள். தனியாக வீடொன்றெடுத்து, அவர்கள் தங்கிக் கொள்ள, நான் மட்டும் ஆஸ்பத்திரியில் நாட்களை எண்ணிக் கொண்டு கார்த்திகை சீசனை மனதில் மீட்டிக் கொண்டு, பாலாவோடும், சரத்தோடும் பழைய கதைகளைப் பேசிக் கொண்டு… ஓ எவ்வளவு ரம்மியமான நாட்கள் அவை….? இங்கு என்னதான் நடக்கப் போகிறது….? உடல் தேறிவிடுவேனா….? அல்லது செத்துப் போய்விடுவேனா…? ஏன் பாலா, மரணம் எப்படி இருக்கும்……? 

இரு போகமும் செய்யக்கூடிய அல்லிக்காட்டு வயல் காணி பத்து ஏக்கரையும் விற்றுக் காசாகவே கொண்டுவந்து விட்டார்கள். வீட்டாருடன் சேர்ந்து பாலாவும் அலைந்தான்…. பொருத்தமான சிறுநீரகம் தேடி அலைந்து…. அலைந்து…களைத்து…

ஒரு நாள் சரத் தன்னையே உடற் பரிசோதனை செய்து கொண்டான். குருதி வகை, குளுக்கோசு மட்டம், இரத்த அழுத்தம் என்று எல்லாமே சரியாயிற்று. டாக்டர் ‘ஓகே’ சொல்லி விட்டார். பாலா புன்முறுவல் பூத்தான். சரத்தின் கைகளைப் பற்றிக் கொண்டு நான் தேம்ப, குணதிலக்க ஐயா கையை வருடிக் கொடுத்தார். 

பாலாவுடைய அப்பாவின் கண்ணோடும் சரத்தின் சிறுநீரகத்தோடும் தான் நான் இனி வாழப் போகிறேனா….? இந்தப் பரீட்சையில் நான் தேறிவிடுவேனா…? 

அல்லது மரணம் தீண்டப் போகிறதா…? 

இன்னும் எத்தனை கார்த்திகை சீசன் என்னை அல்லிக்காட்டில் சந்திக்கப் போகிறது….? அணில் குஞ்சைத் தடவிக் கொஞ்சும் சுகமும் எனக்குக் கிடைக்கப் போகிறதா? 

சரத்தின் பிரார்த்தனை பலித்துவிட்டது. 

அவனது சிறுநீரகத்தை எனது உடல் ஏற்றுக் கொண்டு விட்டது. 

ஆறு மாதங்களுக்கு என்னை வீட்டில் ஓய்வெடுக்கச் சொல்லி விட்டார்கள். சரத்திற்கும் ஓய்வு தேவைப்பட்டது. சரத்தை ஊரில் விட்டு விட்டு நாங்கள் அல்லிக் காட்டுக்குத் திரும்பியபோது அறுவடைக் காலம் தொடங்கி விட்டிருந்தது. இந்த முறை எங்கள் வீட்டில் புது நெல் மணக்கவில்லை. வயலும் காணிச் செல்வமும் என்னோடையே அழிந்து தீர்ந்தது…. 

பாலா என்னுடனேயே படுத்துக் கொண்டான். சோளகம் பெயரும்போது காற்று வீட்டுக்குள் வாரிக் கொண்டு போகும். தேய் பிறைத்துண்டு ஜன்னலுக் கூடாக ஒளி கசிந்து கொண்டிருக்க பாலா மெல்லமாகக் கேட்டான், 

“நான் டவுனுக்குப் போகலாம் என்றிருக்கிறன்” 

“ஏன் பாலா திடீரென்று” 

“திடீரென்றல்ல….அங்கு சின்னம்மாவின் வீடு இருக்கிறது. அங்கேயே வந்திருக்கும்படி சித்தி கூறுகின்றா” 

இதென்ன கூத்து? திடீரென்டு…இங்கு யாரும் ஏதும் சொன்னாங்களா?” 

“இல்ல, உன்னை விட்டுப் போவதுதான் எனக்கு மனசுக்குச் சுமையா இருக்கு. இன்னும் ரெண்டு கிழமையில எழுந்து நடந்து விடுவாய்தானே…?” 

நான் ஒன்றும் பேசவில்லை. 

“ஊரில் குழப்பம் முற்றும்போல தெரிகிறது. அவரவரக் காப்பாத்திக் கொள்றதே கஷ்டமாக இருக்கும் போது…. இதற்குள் நானும் ஒரு சுமையாக ஒட்டிக் கொண்டிருக்க ஒரு மாதிரியாக இருக்கு….” 

பாலா பேசி முடிக்கவில்லை… பளீரென்று கன்னத்தில் அறைந்து வீழ்த்தி னேன். “என்னையும் உன்னையும் பிரித்துப் பார்க்க எப்படி மனம் வந்தது?” 

எழும்பி நிமிர்ந்ததில் உடல் ஆசுவாசப்பட்டது. மூச்சு இரைக்கத் தொடங்கியது. பாலா தாங்கிக் கொண்டான். நெஞ்சில் சாய்ந்து தலையை வருடி விட்டான். 

தூரத்தில் இடி முழக்கமாக துப்பாக்கிப் பிரயோகம் கேட்கிறது. வீடுகள் விழித்துக் கொண்டன. பெரும் சமரொன்று நடப்பதற்கு அறிகுறியாக சரமாரியாக வெடிப்பொலிகள் கேட்கின்றன…. ஆனால் தூரத்தில்தான். 

என்னவாக இருக்கும்…? 

வீடுகளில் கதவுகள் திறக்கும் சத்தமும் ஊராரின் பேச்சொலிகளும் – பயம் கலந்த குரலில் கேட்கின்றன…. 

தீப்பிளம்பாக வீட்டுக் கூரைக்கப்பால் பறந்து சென்று வெடிக்கின்றது. 

“நான் பார்த்து வரவா?” 

“என்னை விட்டுப் போகாதே பாலா”

குமுறிக் கொண்டு வெடிப்பொலிகள் அங்குமிங்குமாகச் சிதறிக் கேட்கின்றன. குளக்கட்டுப் பக்கமாகவா அல்லது கமுகம் களத்திலிருந்தா? 

தீர்மானிக்க முடியவில்லை. 

சத்தங்கள் நெருங்கிவரத் தொடங்கிவிட்டன. 

சனங்கள் பயத்தில் அலறத் தொடங்கி விட்டார்கள். பயம் அதிகரித்தவர்கள் கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு ஓடத் தொடங்கிவிட்டார்கள். 

எனது வீட்டாரும் ஓடத் தயாராகிவிட்டார்கள். 

“என்ன செய்யலாம் பாலா?” 

“டவுனுக்குப் போய்விடுவதுதான் நல்லதென்டு நினைக்கிறன். நான் இவரைத் தூக்கிக் கொள்றன். நீங்க வீட்டைப் பூட்டிக் கொண்டு புறப்படுங்கோ” 

இரவுச் சமரில் தானும் கலந்து கொள்ள விரும்பாத தேய்பிறை, மேக மூட்டத்துள் தவழ்ந்து மறைந்தது…. 

டவுனில் அகதி முகாம் அமைத்திருந்தார்கள். எல்லாருக்குமே புது அனுபவம். அல்லிக்காட்டில் எல்லா இன மக்களும் கலந்து சீவித்திருந்தது போலவே, இங்கும் கலந்துதான் ஒதுங்கத் தொடங்கி இருந்தார்கள். 

பெரிய வளவுகளிலும் வீடுகளிலும் மாடுகளோடும், மாமரங்களோடும் புதுக் காற்றைச் சுவாசித்து வாழ்ந்த மக்களுக்கு, பாடசாலைக் கட்டிட மூலையில் ஒடுங்கிக் கிடப்பது என்னவோபோல இருந்தது. 

இன்றோடு இது நிற்கப் போகிறதா? அல்லது எப்பவுமே அகதி வாழ்வுதானா? 

நலன்புரி நிலையச் சேவையாளர்கள் கணக்கெடுக்கத் தொடங்கி விட்டார்கள் 

பாடசாலைக் கட்டிட மூலையில் பாலர் வாங்கு ஒன்றில் என்னைக் கிடத்தி காற்றுக்காக, காட்போட் மட்டையால் விசிறிக் கொண்டிருந்தான் பாலா. 

சேவையாளர்கள் என்னை நெருங்கினார்கள்.

“போ”

“….” 

“இனம்…” 

நான் விடை கூறவில்லை. அவசியமான கேள்விதானா? 

“இனம்?” – மறுபடியும் அழுத்தமான கேள்வி….

பாலா நிமிர்த்தி உட்கார்த்தினான். இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் கூறப் போகிறேன்…? 

“சொல்லுங்கள்….” 

“மனித இனம் என்று குறித்துக் கொள்ளுங்கள்” 

சேவையாளர் என்னை ஆச்சரியத்தோடு பார்க்கிறார். 

பாலா என்னை அர்த்தத்தோடு பார்க்கிறான். 

– நீதி நல்லிணக்க விவகார அமைச்சு நடத்தியதேசிய மட்டப் போட்டியில் பரிசு பெற்றது. சிங்களம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நூலுருவானது (1998) 

– வரால் மீன்கள் (பரிசு பெற்ற சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2013, வானவில் வெளியீட்டகம், திருக்கோணமலை.

அமானுல்லா பெயர்: எம்.எஸ்.அமானுல்லா பிறப்பிடம்: மூதூர் பிறப்பு: மே 27 1962 படைப்பாற்றல்: இந்திய முஸ்லிம் எழுத்தாளர், ஆளுர் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பிறப்பிடாகவும் சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஒரு கட்டுரையாளராவார். திறனாய்வு, நாட்டுப்புறவியல் முதலிய துறைகளில் அதிக ஆர்வமிக்க இவர் சென்னை புதுக்கல்லூரி நூலகராகவும், பல்வேறு அமைப்புகளின் வாழ்நாள் உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். படைப்புகள்: சிறுகதைகள்: வரால்மீன்கள்இருதுளிக் கண்ணீர்கருவேலங்காடுகள் தாண்டி – என்பனஇவரது குறிப்பிடத்தக்க சில சிறுகதைகள். சிறுகதைத் தொகுப்பு: வரால்மீன்கள் -…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *