மனிதர்கள் பூமியில் வாழ வந்த கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 553 
 
 

(ஆஸ்திரேலிய நாட்டுப்புறக் கதை)

கனவுக் காலம் என்று அழைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் மனிதர்கள் பூமிக்கு அடியில்தான் வாழ்ந்துகொண்டிருந்தனர். அங்கே எப்போதுமே சூரியன் எரிந்துகொண்டிருக்கும். அது உதிப்பதோ மறைவதோ இல்லை. எனவே, அங்கு எப்போதும் வெளிச்சமும் வெப்பமும் இருந்துகொண்டிருக்கும்.

அந்தப் பாதாள உலகில் பாமாபமா என்னும் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் சற்று கிறுக்குத்தனமான ஆள். மனிதர்கள் செய்யும் காரியங்களுக்கு மாறுபட்ட காரியங்கள் எதையாவது செய்துகொண்டிருப்பான். மந்த புத்தி உடைய அவனை எல்லோரும் முட்டாள், மடையன், கிறுக்கன் என்றே அழைத்து வந்தனர்.

அவனுக்கு பூமியின் மேற்பரப்புக்குச் செல்ல வேண்டும் என்று வெகு நாளாக ஆசை. அதை மக்களிடம் சொல்லும்போது அது கிறுக்குத்தனமான எண்ணம் என்று அவர்கள் சொல்வார்கள்.

“பூமியின் மேற்பரப்பில் எப்போதும் இருட்டாக இருக்கும். கொடூரமான துர் ஆத்மாக்களும், மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய பல விதமான பேய் பிசாசுகளும், பூதங்களும், அரக்கர்களும்தான் அங்கே வசிக்கும். அங்கு செல்வது ஆபத்து” என அவர்கள் அவனை எச்சரிக்கவும் அச்சுறுத்தவும் செய்தனர்.

அவன் அதை நம்பாமல், தனது ஈட்டியோடு ஒரு நாள் பூமியின் மேற்பரப்புக்கு வேட்டையாடுவதற்காக வந்தான். இங்கே உள்ள மலை, நதி, காடு, புல்வெளி, மரங்கள், பல விதப் பறவைகள், விலங்குகளைக் கண்டு மகிழ்ந்தான். மக்கள் அச்சுறுத்தியது போன்ற துர் ஆத்மாக்கள், பேய் பிசாசுகள், பூதங்கள், அரக்கர்கள் எதுவும் காணப்படவில்லை. அனைத்தும் மகிழ்ச்சியும் இன்பமும் பயப்பதாகவே இருந்தன.

அப்போது ஒரு புதிய, பெரிய விலங்கு தென்பட்டது. அது ஒரு கங்காரு. அதை வேட்டையாடுவதற்காகத் துரத்தத் தொடங்கினான். அது வேகமாக ஓடியது. ஈட்டி எறியும் தூரத்திற்கு அவனால் அதை நெருங்க இயலவில்லை. அது சளைக்காமல் ஓடிக்கொண்டே இருந்தது. அவனும் அதைத் துரத்திக்கொண்டே இருந்தான்.

அது மேற்குத் திசையை நோக்கிக் குதித்துக் குதித்துச் சென்றுகொண்டே இருந்தது. அவன் பின் தொடர்ந்துகொண்டே இருந்தான். வானில் உச்சியிலிருந்து சூரியன் மேற்குத் திசையில் கீழே இறங்கி இறங்கிச் சென்றுகொண்டிருந்தது.

அந்தி நேரம் ஆனதும் சூரியன் அஸ்தமித்தது. கங்காருவும் களைப்புற்று ஓடுவதை நிறுத்தியது. பாமாபமா அதைப் பிடித்துக்கொண்டான்.

பொழுது இருட்டத் தொடங்கியது. அவன் அதற்கு முன் இரவைக் கண்டதே இல்லை. பாதாள உலகில் இரவு என்பதே கிடையாது. அங்கே எப்போதும் சூரிய வெளிச்சம் இருந்துகொண்டேயிருக்கும். இங்கே இரவாகி, கடும் இருட்டானதால் அவனுக்கு பயமாகியது.

பூமியின் மேற்பரப்பில் இருட்டாக இருக்கும் எனத் தன்னுடைய மக்கள் சொன்னபடி ஆகிவிட்டதே! அவர்கள் சொன்னது போல பேய் பிசாசுகள், பூதங்கள், ஜாம்பிகள், வேம்பயர்கள் ஆகியவையும் இந்த இருளுக்குள் வந்துவிடுமோ? பேய் பிசாசுகள் இருளில்தான் வரும் என்றும் கேள்விப்பட்டிருந்தான். அப்படி அவை வந்து தன்னைப் பிடித்து ரத்தம் குடித்துவிடுமோ என்றும், தின்று விடுமோ என்றும் அஞ்சி நடுங்கி அழுதான்.

மூத்தோர் சொல் கேளாமல் பாதாள உலகிலிருந்து வெளியே வந்தது தவறு என்றும் தோன்றியது.

‘என்னைக் கிறுக்கன் என்றும், முட்டாள் என்றும், மடையன் என்றும் மக்கள் சொல்வது சரிதான்! அறிவு கெட்ட தனமாக இந்த பூமிக்கு வந்து, தன்னந்தனியாக மாட்டிக்கொண்டேனே!’ என எண்ணி நொந்துகொண்டான்.

பிறகு தன்னைத்தானே தேற்றிக்கொண்டு, அருகில் உள்ள மரத்தில் ஏறி, மேலே வெளிச்சம் இருக்குமா என்பதைக் காண்பதற்காகச் சென்றான். ஆனால் அங்கேயும் இருட்டாகவே இருந்தது. எனவே, மரத்திலிருந்து கீழே இறங்கி வந்தான். கங்காருவை வெகு தூரம் துரத்தி வந்த களைப்பு மற்றும் பசியினால் மரத்தடியில் அயர்ந்து தூங்கிவிட்டான்.

மறுநாள் விடியற்காலையில் பறவைகளின் இன்னிசை கேட்டு விழித்தெழுந்தபோது, பாதாள உலகில் இருப்பதை விட புத்துணர்ச்சியாக இருந்தது. வானில் மீண்டும் சூரியன் வந்திருந்ததைக் கண்டு மகிழ்ந்தான். எங்கும் இதமான இள வெயில், கண் கூசாத வெளிச்சம். வெப்பமோ புழுக்கமோ இன்றி, காலைத் தென்றல் உடலை இதமாக வருடியது. அந்தப் புத்தனுபவத்தில் மிகுந்த உற்சாகம் அடைந்து குதூகலித்தான்.

இங்கே சூரியன் ஒளிரவும் மறையவும் செய்கிறது. பகலும் இரவும் மாறி மாறி வருகின்றன. நாமும் இரவில் தூங்கி மறு நாள் காலையில் விழிக்கும்போது மிகுந்த புத்துணர்ச்சி அடைகிறோம். எனவே, பாதாள உலகில் வாழ்வதை விட, பூமிக்கு மேல் வாழ்வது சிறந்தது எனக் கண்டுகொண்டான்.

மீண்டும் பாதாள உலகிற்குத் திரும்பிய அவன், அங்குள்ள மக்கள் அனைவரிடமும் பூமியின் மேற்பரப்பில் தான் கண்டதும் அனுபவித்ததுமான அற்புதமான விஷயங்கள் அனைத்தையும் தெரிவித்தான்.

“இங்கு இருப்பதைவிட பூமிக்கு மேல் அனைத்தும் மேன்மையாக இருக்கின்றன. நீங்கள் எல்லோரும் சொன்னது போல அங்கே ஆபத்தான பேய் பிசாசுகள் எதுவும் இல்லை. நாம் இங்கே வாழ்வதைவிட அங்கே வாழ்ந்தால் சிறப்பாக இருக்கும். நீங்களே வந்து பாருங்கள்!” என்று அவர்களை அழைத்தான்.

அந்த மக்களால் அதை நம்ப இயலாவிட்டாலும் ஒரு முறை சென்றுதான் பார்ப்போமே என்பதற்காக அவனோடு பூமியின் மேற்பரப்பிற்கு வந்தனர். அவன் சொன்னது போலவே இங்குள்ள காட்சிகளைக் கண்டு வியந்து மகிழ்ந்தனர்.

ஆனால் மாலை நேரமானதும் சூரியன் அஸ்தமித்து இரவு வந்ததும் அவர்களும் அவனைப் போலவே அச்சப்பட்டனர். முன்பு அவன் செய்தது போலவே மரத்தின் மேல் ஏறிக்கொண்டனர். அவர்களைக் கீழே இறங்குமாறு அழைத்தான்.

“அச்சப்படாதீர்கள்! அனைத்தும் சரியாகவே இருக்கின்றன. நான் சொன்னது போல மீண்டும் நாளை காலையில் சூரியன் உதித்துவிடும். இப்போது நாம் படுத்து உறங்கலாம்” என்று அவர்களை தைரியப்படுத்தினான்.

மறுநாள் விடியலில் சூரியன் உதித்தது. மக்கள் உறக்கத்திலிருந்து புத்துணர்வோடு விழித்தனர். சூரியன் மீண்டும் வந்துவிட்டதைக் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் உற்றனர்.

“கிறுக்கன் பாமாபமா சொன்னது உண்மைதான்! இந்த இடம் பாதாள உலகத்தை விட மிக அழகாகவும், சிறப்பாகவும், வாழ்வதற்குத் தக்கதாகவும் இருக்கிறது. நாம் உண்பதற்குக் காய் கனிகளும், வேட்டையாடுவதற்குப் பல வகை விலங்குகள், பிராணிகள், பறவைகளும் உள்ளன. விவசாயம் செய்யப் பரந்த நிலமும் உள்ளது. இனி நாம் இங்கேயே வாழலாம்!” என்றனர்.

அதிலிருந்துதான் மனிதர்கள் அனைவரும் பூமிக்கு மேலே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *