மனிதர்களும் மனிதர்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 3, 2025
பார்வையிட்டோர்: 4,636 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த அமைதியான அழகிய கிராமத்தின் மக்கள் இப்படி இருப்பார்கள் என்று நினைக்கமுடிந்ததில்லை. ஆறும் தெருவும் ரெயில்வே லைனும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாக அந்தக் கிராமம் முழுவதையுமே ஊடறுத்துப் போகின்றன. ஆற்றைத் தாண்டிப் போன கையோடு, தெரு தானும் செங் கோணமாய்த் திரும்பித் தண்டவாளத்தைக் கடக்கிற இடத்தில், இரண்டிற்கும் நடுவில் பாரிய அரசமர மொன்றின் கீழே இருக்கிற புத்தகோவில். அந்தப் பசுமைப் பின்னணியில் சரியாய்ப் பொருந்துகிற சின்ன வெள்ளைக் கோவில். அந்தக் கிராமத்தை நினைக்கிறபோதெல்லாம் நினைவு வருகிற கோவில். ரயிலில் போகிற போதிலும் பார்க்க பஸ்ஸில் போகிறபோதுதான் ஊரின் அழகு தெரிகிறது. அங்கேயே இருந்துவிட முடியுமானால் நல்லது என்று ஒவ்வொருதரமும் அந்த ஊரைக் கடக்கும் போது மனதில் பட்டிருக்கிறது. 

கள வயலின் நடுவில், ரோட்டிலிருந்து கமுகமரவரிசை களுக்கிடையில் ஓடுகிற பாதைகள் தொடுக்கிற இடங்களில் ஊரின் அமைதியில் தோய்ந்து போய் இருக்கிறவையும்; தெருவளைவுகளில் பெயர்தெரியா மலர்ச்செடிகளின் பற்றை களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கிறவையும்; தென்னஞ் சோலை வளவுகளில் எங்கோ ஓரிடத்தில் சிவப்பாய்க் கூரையைக் காட்டிக் கொண்டிருக்கிறவையுமான வீடுகளில் குடியிருக்கிற அந்த ஊர் மக்களில் எப்போது தான் பொறாமை வராமலிருந்திருக்கிறது? 

என்றாலும், இந்த மனிதர்கள் தாம் அதைச் செய்தார்கள். 

ஒரு நல்ல முழுநிலவு நாளில் இந்த ஊரும் ஆறும் வயல்களும் கோவிலும் எப்படி மிளிரும் என்கிற எண்ணம் எப்போதும் – ஒவ்வொரு போதும் – மனதில் தோன்றியிருக் கிறது. ஆனால் இப்போது, அந்த ஒரு காலைப்போ தின் இளம் வெளிச்சத்தில்-சிவப்புக் கொடி காட்டி யாழ்ப்பாணம் போன ரயிலை இடையில் நிறுத்தி இவர்கள் ஆட்டம் போட்டபோது எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்க முடியா மலிருக்கிறது. 

வண்டியிலிருந்த பெண்களெல்லோரும் குழறி அழத் தொடங்கி விட்டதாகப் பரம் சொன்னார்! 

“அழுகை வராம என்ன செய்யும்? அவங்கள் கத்தியும் பொல்லுமாய் வந்து ரயிலை அடிக்கேக்கை?” 

ரயில், எப்படியோ தப்பி, திரும்பிக் கொழும்பிற்கே வந்து விட்டது! பிற்பகல் மூன்று நாலு மணிக்கு அது திரும்பி வந்து சேர்ந்தபின், ஸ்ரேஷனில் தேடுவாரில்லாமல் நாலைந்து சூட்கேஸ்கள் அநாதையாய்க் கிடந்ததாகப் பேசிக் கொண்டார்கள். 

2 

‘இன்றைக்கும் அந்த வழியாகத்தான் ரயில் போகப் போகிறது. அந்த ரயிலில் தான் போகப்போகிறோம்!’ – மனம் சிலிர்த்தது. 

அது, அன்றைக்கு – கலம்பகம் தொடங்கிய நாட் களில். இன்று எல்லாம் முற்றி உச்சத்திலிருக்கும் போது-ஊரடங்குச் சட்டமும் கொலை கொள்ளைகளுமாகச் சேதிகள் காதில் விழுந்து கொண்டிருக்கும்போது – என்ன நடக்குமோ- 

ஆனால், வேறு வழியில்லை. 

ஏதோ ஒரு விதத்தில் ‘றிஸ்க்’ எடுத்துத்தானாக வேண்டியிருக்கிறது. 

மெல்ல எழுந்து, எலாம் மணிக்கூட்டுக்கு ரோச்சை அடித்துப் பார்த்தான். மூன்று ஐம்பது. இனி எழும்பலாம். நாலுமணிக்கு வைத்திருந்த எலாமை அழுத்தித் தவிர்த்தான். பன்னிரண்டு மணிக்குப் படுத்த நேரத்திலிருந்து, மொத் தமாக ஒரு மணித்தியாலமாவது நித்திரை வந்திருக்குமா என்பது ஐமிச்சம் இன்றுமட்டு மில்லை-இந்த ஒரு கிழமையாக, இரவெல்லாம் டமுமாய். 

இப்படித்தான் கழிகிறது-பயமும் பதட் 

எங்காவது ஆர்ப்பாட்டக் கூச்சல் கேட்கிறதா, வெடிச் சத்தம் கேட்கிறதா என்று காது விழித்துக் கொண்டி க்கிறது. ஊரடங்கு நேரத்தில் அடிக்கொருதரம் – கணநேரத்துக்கு மட்டும் காதில் விழக் கூடியதாய் உறுமிவிட்டு- தெருவில் பறக்கிற ஆயுதப் படையினரின் வாகனங்கள் ஏதாவது தெருத் தொங்கலில் றிவேஸ் செய்யும் சப்தமோ, அல்லது நிறுத்தும்-காவலுக்கு நிற்கிற வீரர்களருகில் நிறுத்துகிறார் களாயிருக்கும் – சப்தமோ, இதயத்தைப் படபடக்க வைக் கிறது! – கலகக் கும்பல்தான் வந்து இறங்கிறதேர் என்று. 

இரவில் பெட்றூம் பல்ப்பைக் கூடப் போட முடிகிற தில்லை. கண்ணாடி ஐன்னல் மூலமாய்க் கசிகிற ஒளி வருகிற குண்டர்களுக்கு உள்ளே ஆட்களிருப்பதைக்காட்டிக் கொடுத்துவிடும். முற்றத்திலிருந்து மேலே வருகிற படிக் கட்டில் நாய் ஏறுகிற ஒலி கூட எழுந்து உட்காரச் செய்கிறது. வீட்டுச் சொந்தக்காரரின் பகுதிக்கும் இவர்களின் அனெக் ஸுக்கும் இடையில் நிரந்தரமாய்ப் பூட்டப்பட்டிருந்த கதவு, இப்போது-பரஸ்பர உதவிக்காகவும், தைரியத்திற்காகவும் திறந்து சாத்திவைக்கப்பட்டிருந்தது. முக்கியமானதும் பெறு மதியானதுமான சாமான்களை- சேட்டிஃபிக்கற்றுகள், பத்தி ரங்கள், நகைகள், ரேப்-றெக்கோடர், நல்ல துணிமணிகள் எல்லாம் பத்திரமாய்ப் பார்சல் செய்து பழைய பார்சல் செய்து பழைய காட்போட் பெட்டியொன்றில் திணித்துக் கட்டி, அடுப்படியில் ஒரு. மூலையில் தட்டு முட்டுச் சாமான்களுக்கிடையில் வைத்திருந் தார்கள். படுக்கையறையிலிருந்த சூட்கேஸ்களில் பாவித்த பழைய உடுப்புகளையும், புத்தகங்களையும் அழகாக அடுக்கி மூடினார்கள். 

எந்த நேரமும் தாக்குதல் நடக்கலாம். எந்த நேரமும் கொள்ளையர் – குண்டர்களை எதிர்பார்க்கலாம்…. 

-இந்த அவதிஎந்த நேரமும் ஆபத்தை எதிர்நோக்கி யிருக்கிற இந்த அவதி-அந்தப் பதட்டமும் பயமும் உணர்வு- தாங்காமல்; அவனும் சாம்பசிவமுமாக நேற்றுப் பின்னேரம் தீர்மானம் பண்ணிணார்கள்: மனைவிமாரையும் அழைத்துக் கொண்டு இன்றைய ரயிலில் எப்படியும் யாழ்ப்பாணம் போய் விடுவதென்று. 

“வாறது வரட்டும்…”…என்றான் சாம்பன், முடிவாக. ‘அதுசரி. எப்பிடியும் ஏதோ ஒரு விதத்திலை ‘றிஸ்க்’ எடுக்கத்தான் வேணும். இங்க இருக்கிறதும் றிஸ்க்…. ரயிலிலை போற்றிஸ்க்கை எடுப்பம். தப்பிப் போய்ச் சேர்ந்திட்டா. நாளைப் பின்னேரத்தோட இந்த அந்தரம் இராது” என்றான், இவனும். 

தேவையான சாமான்களைப் பார்சல்கட்டி வைத் திருந்தது இப்போ நன்மையாகப் போயிற்று…. இப்படியே தூக்கிக் கொண்டு போய் விடலாம். அதிர்ஷ்டமிருந்தால் கொண்டு போய்ச் சேர்க்கவும் சேர்க்கலாம்…. 

நேரமாகிறது. எழுந்திருந்து. பக்கத்தில் அயர்ந்து போய்க்கிடந்த மனைவியை மெல்லத் தட்டினான். வேணி, திடுக்கிட்டு விழித்தாள். 

3 

பாத்ரூமுக்குப் போகும்போது, இந்த நேரத்திலுங்கூட வீட்டுக்காரரும் அவர் மனைவியும் பேசிக்கொள்கிற சப்தம் லேசாகக் கேட்டது. நித்திரை கொள்ளாமல் இரவு முழுவதும் இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. எப்படி நித்திரை வரும்? இது அவர்களுக்குச் சொந்த வீடு. இவர்களைப் போல உதறிவிட்டு ஊருக்கு ஓடிவிட முடியாது! அவனுக்குப்- பாவமாயிருந்தது. ஆனாலுங் கூடவே, ‘ஐம்பத் தெட்டாம் ஆண்டுக்குப்பிறகும் தெற்கில் இப்படி வீடுகள் வாங்கின கட்டின எங்கள் ஆட்களுக்கு மூளையில்லை” என்ற எண்ணமும் வந்தது. 

நேற்று மாலை ஊருக்குப் போகிற முடிவை எடுத்ததும், முதல்காரியமாக வீட்டுச் சொந்தக்காரரிடம் வந்து சொண் னான்.” 

“நாளைக்காலைமையா? பிளேனிலையா?” – முகத்தில் வியப்புடன் அவர் கேட்டார். 

“இல்லை’ ரயிலிலை….” 

“ரயிலா?….” அவர் மனைவி வெளியே வந்தா. 

“…அவளயுைங் கூட்டிக் கொண்டு ரயிலிலையா போறீங் கள்?…. நீங்கள் தனிய எண்டாலும் பரவாயில்லை” உண்மையான கவலையுடன் சொன்னா. 

“இல்லைப் பாருங்கோ, பிளேன் ரிக்கற் இப்போதைக் குக்கிடையா! நான் இப்ப இரண்டு நாளாத் தெண்டிச்சுப் பாத்திட்டன். இன்னும் மூண்டு நாளைக்கு புக்கிங்ஸ்ஃபுல். அதுவும் இப்ப அகதிமுகாமிலை இருக்கிற ஆக்களுக்குத்தான் முதலிலை இடம் குடுக்கினம் – அது நியாயந்தானே….” 

வீட்டுக்காரர் குறுக்கிட்டார். 

“ஒ, இப்ப நேற்றும் முந்தநாளும் இங்கயிருந்து வெளிக்கிட்டரயிலுகள் இரண்டும் பத்திரமாய்ப் போய்ச் சேர்ந்திருக்குத்தானே! காவல் போட்டுத்தானே ரயிலும் போகுது!” 

“காவல் போட்டு என்ன செய்கிறது? தண்டவாளத்தை யாராவது வழியில் கழட்டி விட்டிருந்தா என்ன செய்யேலும்?”- 

“இந்த ரயிலுக்கு அரைமணித்தியாலத்துக்கு முதல் பைலற் ட்றெயின் ஒண்டு போகுதாம்….” கூட நின்ற சாம்பன் சொன்னான், 

“சரி, தீர்மானிச்சிட்டிங்கள். பத்திரமாய்ப் போய்ட்டு வாங்கோ….” – வீட்டுக்காரர் ஆசீர்வதிப்பது போலச் சொன்னார். 

அவன் சற்றுத் தயங்கினான். அவர் புரிந்து கொண்ட வராக மேலே தொடர்ந்தார். 

“….எங்களைப் பற்றி யோசியாதையுங்கோ. என்ன நடந்தாலும் இங்கயிருந்து ஏற்றுக் கொள்ளுறதெண்டு தீர்மானிச்சிட்டம்…”

அந்த உறுதி அவனுக்கு வியப்பை அளித்தது. 

“…தம்பி, முந்தி உமக்குச் சொன்னது போலை, எனக்கு வேறை வழியில்லை… இது, என்ர சொந்த சம்பாத்தி ய்த்திலை – நான் உழைச்சு உழைச்சு மாதச் சம்பளகாரன் நான் – வாங்கின் வீடு. இதை விட்டிட்டுப் போக என்னாலை முடியாது. இனி விட்டிட்டுப் போயுந்தான் அங்க என்ன செய்யு எலும்? இந்த உத்தியோகமில்லையெண்டா. எங்களை நாயம் மதியாது கொத்தித் தின்னுறதுக்கு ஊரிலை நிலபுலம் இருந்தாலும் பரவாயில்லை….” 

அவர் சொன்னதிலுள்ள நியாயத்தை உணர்ந்து தன் சமூகத்திற்காக இரக்கப்பட்டவனாயும், அவர் உறுதியை மாற்ற முடியாதென்பதை அறிந்தவனாயும் அவன் சொன்னான். 

“என்னதானிருந்தாலும் இந்த நிலைமையிலை உங்களை விட்டிட்டுப்போக எங்களுக்கு ஒரு மாதிரியாய்த் தானிருக்கு….”

“அதை யோசியாதையும், எங்களைப்போல இல்லை, நீங்கள்,… எங்களுக்கு எது நடந்தாலும் யோசிக்க ஒருத்தரும் இல்லை. எங்கட குடும்பத்திலை நாலுபேர். நாலுபேரும் இங்கேயே இருக்கிறம் எது விதிவந்தாலும் எங்களுக்கு ண்டாத்தான் வரும். ஆனா உங்களுக்கு ஊரிலை அப்பா அம்மா நாளும் பொழுதும் இதே கவலையாய்த் தானிருப் யினம்…. அவயளின்ர நிம்மதிக்காக ஆவது நீங்கள் போகத் தான் வேணும்….” 

அந்த மனிதரில் பாசம் மிக்கவனாய் திரும்பும்போது. அவன் சொன்னான்; 

“எதுக்கும் உங்கட தீர்மானத்தை இன்னொரு தரம் திரும்ப யோசிச்சுப் பாருங்கோ. உங்கட மனதைக் குழப்புறதாகத் தயவு செய்து நினைக்க வேண்டாம்……..” 

4 

குளியலறையிலிருந்து வந்தபோது நாலேகால் ஆகியிருந்தது. சாம்பன் ஐந்தரைக்கு வருவதாகச் சொல்லியிருந்தான். 

“நீர் பாத்ரூமுக்குப் போயிட்டு வாரும் என்று வேணியிடம் சொல்லிவிட்டு, மளமளவென்று மீதமிருந்த சாமான்களை ஒதுக்கும் வேலையில் ஈடுபட்டான். 

வழக்கமான ஐந்தேமுக்கால் ‘யாழ்தேவி’ கொஞ்ச நாட்கள் ஓடாமல் நின்றுவிட்டு இப்போது இரண்டு நாட் களாகத்தான் ஆறேமுக்காலுக்கு ஓடத் தொடங்கியிருக் கிறது. ஆறுமணிக்கு கோட்டை ஸ்ரேஷனில் நிற்க வேண்டு மென்றால் இங்கிருந்து ஐந்தரைக்காவது வெளிக்கிட்டாக வேண்டும். ஊரடங்குச் சட்டம் ஐந்து மணிவரைதான் என்பதால் ஐந்தரைக்கு வருவதில் சாம்பனுக்குக் கரைச்சல் இராது. வீடு பக்கத்தில்தான். 

சாம்பன் இருக்கிற வீட்டுக்காரரும் இங்கேயே நின்று+ பார்க்கப் போவதாகத்தான் சொல்லிக் கொண்டிருந்தார் அவருக்கும் சொந்த வீடு. இனி என்ன யோசிக்கிறாரோ? குஞ்சு குருமனாக நாலைந்து பிள்ளைகள்…. அவனுக்குப் பாவ மாயிருந்தது.. 

‘ஆருக்கு ஆர் அநுதாடப்பட முடியும்? பட்டுத்தான் என்ன செய்ய முடியும்?’ என்று மனதை ஆற்றப்பார்த்தான். 

வேணி திரும்பி வந்தபோது உடுப்புப் போட ஆயத். தமாயிருந்தான். அவள் ஃப்ளாஸ்கில் தேநீரை ஊற்றி வைத்துவிட்டு, நேற்று வாங்கி வைத்திருந்த பாணை வெட்டத் தொடங்கினாள். அவளருகே மெல்லப் போய் நின்று, 

“இண்டைக்கு இப்பிடி இந்த ரயிலிலை போறது உமக்குப் பயமில்லையே?…. பயமாயிருந்தா, இப்ப எண்டாலும் சொல்லும் – இந்த யோசனையை விட்டிட்டு அகதி முகாமிலை போய் நிண்டு, பிளேனுக்குத் தெண்டிக்கப் பாப்பம்…” என்றான். 

“‘இப்பிடி நெடுக யோசிச்சு மனங்குழம்பாமல், எடுத்த முடிவுப்படி வெளிக்கிடுவம், எது நடந்தாலும் இரண்டு பேருக் கும் ஒண்டாய்த்தானே நடக்கும்?” 

அவள் குரலில் தொனித்த உறுதி அவனுக்குத் திருப்தி யாயிருந்தது. 

5

வெளிக்கிட்டு முடிந்ததும், யன்னல்களைப் பூட்டிவிட்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சுற்றிப் பார்த்தான். வெளியே வந்தபோதுதான் விறாந்தையிலிருந்த மீன் தொட் டியும் பூச்சட்டிகளுங் கண்ணிற்பட்டன. 

காசித்தும்பைச் செடிகளிரண்டிலும் இப்போதுதான் மொட்டுக் கட்டியிருக்கிறது. சட்டியில் வைத்து, தண்ணீரும் உரமுமாய் ஊட்டிக் காத்ததற்கு, இந்த மொட்டுதான்- கணுக் களிள் திரண்டு, குருத்தல்ல என்று அடையாளம் காட்டுகிற மொட்டுக்கள்தான் வரவு. இது றோஸ் நிறக் காசித்தும்பை, அடுக்கு இதழ், றோசாப்பூமாதிரி இருக்குமென்று சொன்னார் கள். வேணி, வலு ஆவலாக இது பூக்கப்போகும் நாளைப் பார்த்திருந்தாள். இப்போது பூக்கும் நேரத்தில் அதை விட்டுப்போக வேண்டி வந்துவிட்டது, திரும்பி வரும்போது- வந்தால் – கருகித்தான் போயிருக்கும் – அதோடு இந்தப் பெயர் தெரியாத செடியும். 

பாதி முறிந்து, வெய்யிலில் வாடிப்போய்த் தெருக் கரையில் கிடந்த இதன் முளையை, கந்தோரால் வரும்போது ஒரு நாள் கண்டெடுத்து வந்தான். வெள்ளையும் பச்சை மான பெரிய இலைகள். நட்டதுதான் தாமதம், கிழமைக்கு ஒரு இலையாய் எறிந்து எழும்பிவிட்டது. 

மீன்தொட்டி கூட வற்றித்தான் விடும். ஒரு கப்பீஸ் குட்டியும் நாலு பிளேட்டீஸுமாக ஐந்து மீன்கள். கடந்த ஐந்து மாதமாகச் சேர்ந்து வாழ்ந்து வருகிற மீன்கள். இந்த கப்பீஸ் குட்டி இங்கேயே இந்த வீட்டில்தான் – பிறந்தது. இதன் தாய், ஒரு நாள் – ஒரே நாளில் – மளமளவென்று போட்ட பதினெட்டுக் குட்டிகளில் மிஞ்சி வாழ்கிற குட்டி அது. இந்த ஐந்து மாதமும் தாண்டிவிட்டது. இனி, தப்புகிற இருவம். வால், வர்ணங்களாக மினுங்கத் தொடங்கிவிட்டது. கப்பீஸில் வால்தான் அழகு – அதிலும் ஆண்மீன் – மயில் தோகையாய் மின்னுகிற வால். 

பிளேட்டீஸ் அப்படியில்லை. முருக்கம் பூ நிறத்தில் யாதிவிரல் நீளத்தில் பளபளக்கும். பத்து ஆக இருந்தவை, போனமுறை ஊருக்குப்போய் இரண்டு கிழமை நின்றுவிட்டு வந்தபோது நாலாகிவிட்டிருந்தன. 

திரும்பி வருகிறபோது – வந்தால் தொட்டியின் தண் ணீரெல்லாம் வற்றி இதுகளெல்லாம் செத்துக் கருவாடாகி உண்மையான கருவாடாகவே – ஆகியிருக்கும். 

இந்த நேரத்தில் மீனும் பூஞ்செடியும் சாகப்போகிறா துக்காகக் கவலைப்பட முடியாது என்று நன்றாக உணர முடிகிறது, மனிதர்களே ஒன்றும் பத்துமாய் அங்குமிங்கும் அநியாயமாய் வெட்டியும் சுட்டும் கொல்லப்படுவதாகச் சேதிகள் காதில் விழும்போது! 

பூச்சட்டிகள் மூன்றையும் மழை பெய்கிறபோது பிடிக்கக்கூடிய டமாக வெய்யில் கருக்காதபடி – பல் கணியில் தோதான இடம் பார்த்து வைத்தான். பெய்கிற போது நனைந்து கொள்ளட்டும். மீன் தொட்டியை; ஸிங்க்கில் குழாய்க்குக் கீழேவைத்து, தண்ணீர் சொட்டுச் சொட்டாக விழும்படி குழாயை மெல்ல இளக்கி விட்டான். 

இந்த அவதியில், இவற்றுடன் இவ்வளவு நேரம் மினைக்கெட்டதே பெரிது. கதவுகளிரண்டையும் அவசர மாகப் பூட்டித்தள்ளிப் பார்த்துக் கொண்டார்கள். வெளியே எடுத்து வைத்திருந்த அந்தக் காட்போட் பெட்டியையும் சூட்கேஸையும் தூக்கிக் கொண்டு கீழே இறங்கினார்கள்.. வானம் வெளிறத் தொடங்கியிருந்தது. 

6 

சாம்பன் வந்து, கீழே, வீட்டுக்காரருடன் பேசிக் கொண்டு நின்றான். 

முதலில் இறங்கிய வேணியைக் கண்டதும், வீட்டுக் காரரின் மனைவி வெளியே வந்தா.

“நீர் இதிலை நில்லும்….” என்று வேணியிடம் சொல்லி விட்டு, சாம்பனைப் பார்த்து, 

“….போவமா?” என்றான். 

“ரக்ஸிதானே?” என்றார் வீட்டுக்காரர். 

“அது சரியான ஆபத்தெல்லா? ரக்ஸிக்காரனை எப்பிடி நம்புகிறது?” என்றார், அவர் மனைவி. 

“பஸ்ஸிலை போறது இன்னும் ஆபத்து. நாங்கள் இரண்டுபேர் ஆம்பிளையள் இருக்கிறந்தானே….” சாம்பன் சொன்னான், 

இவர்கள் வீடிருந்த ஒழுங்கையிலிருந்து தெருவுக்கு வந்தபோது இன்னும் தெரு விளக்குகள் எரிந்து கொண் டிருந்தன. முடக்கில் இரண்டு ஆமிக்காரர்கள் துவக்கு களுடன் நின்றார்கள். இவர்களைக் கூர்ந்து பார்த்தரிர்கள். அப்பாவித் தமிழர்கள் என்பது பட்டிருக்கும். நெருங்கித் தாண்டியபோது, உயரமாய் முறுக்கு மீசையுடன் நின்றவன் இவனைப் பார்த்து மெல்லப் புன்னகை செய்தான் நேற்றுப் பகல் இதே இடத்தில் நின்ற ஸென்ட்ரி. இரண்டு மூன்று தடவை ஆளை ஆள் பார்த்திருந்தார்கள். பதிலுக்குப் புன்னகைத்தான். 

‘இந்த ஆளும் சிங்கள ஆள்தானே!’ என்ற எண்ண வந்தபோது, 

“என்ன, கூட்டாளியா….” என்று சாம்பன் சிரித்தான்.

ஐம்பது யார் தள்ளி, தபாற் கந்தோரடியில் இன்னும் இரண்டு ஆமிக்காரர்கள் இதேபோல நின்றார்கள். இந்த இடத்தில் தமிழர் வீடுகள் அதிகம். 

வழக்கமாக ரக்ஸிகள் நிற்கும் இடத்தில் ஒன்றையும் காணவில்லை. 

“தியேட்டருக்கு முன்னாலை பாப்பம்…” என்றான். 

பேப்பர் கடையிலிருந்தும், பால் வாங்கிக்கொண்டும் போன ஒன்றிரண்டு பேர், இவர்களை உற்றுப்பார்த்துக் கொண்டு போனார்கள். 

“இவங்கள், எங்களைப் பார்க்கிற மாதிரியைப் பாரடா…?” என்றான் சாம்பன். 

“இப்ப கொஞ்ச நாளா இப்பிடித்தான் பாக்கிறாங்கள். வேடிக்கை பாக்கிறவை, நக்கலாப் பாக்கிறவை, அநுதாபத் தோட பாக்கிறவை, துணிஞ்சு தெருவிலை போறாங்களே எண்டு ஆச்சரியத்தோட பாக்கிறவை – எல்லாரும் இருக் கினம்…” 

தியேட்டருக்கு முன்னால் ஒரு ரக்ஸிதான் நின்றது. தூரத்திலிருந்து நோட்டம் விட்டபோதே, ட்ரைவர் திருப்தி யனிப்பவனாக இவர்கள் விரும்பியதுபோல் வயதானவனாக, அதிையானவனாகத் தெரியவில்லை. 

‘முறடன்’ போலத்தான் இருந்தான். 

“வேற வழியில்லை….” அவனிடம் போனார்கள். 

7

காலி வீதியில் ரக்ஸி ஏறியபோது – மற்ற எல்லாத் தமிழ்க் கடைகளையும் போலவே – எதிரே ‘வேல்முருகன் கஃபே பூட்டிக் கிடத்தது. 

போன செவ்வாய்க் கிழமை, இந்த இடத்தில் தான்’ இந்தக் கலம்பகச் சேதி முதலில் காதில் விழுந்தது. 

நிச்சிந்தையாய் புத்தகக் கடைக்குப் போய் விட்டுத் திரும்பியபோது பிரேம ராஜன் எதிர்ப்பட்டான். ஆளைச் சந்தித்து இரண்டு வருடமாவது இருக்கும். ‘வேல் முருகன் கஃபே’ முன்னால் யாருடனோ பேசிக்கொண்டு நின்றவன் இவனைக் கண்டதும் ஓடிவந்து, ஸீரியஸான மெல்லிய குரலில்; “யாழ்ப்பாணமெல்லாம் பெரிய கலாட்டாவாம் ஐஸே…. பொலீஸ்காரருக்கும் ‘சனங்களுக்கும் சண்டை யாம்….” என்றான். 

திடுக்கிட்டுப்போய், “ஏன்? எப்ப? உண்மையா?….” என்றவன், அதே வேகத்தில் தொடர்ந்து, “….அப்பிடி யெண்டா, இனி அது ஒரு கொம்யூனல்ரேன் எடுக்காமலிருக்க வேணுமே!” என்றான். 

“மரக்கற்றையும் எரிச்சு, இரண்டு மூண்டு பேரைச் சுட்டும் போட்டாங்களாம்….9’ 

“இது எப்ப நடந்தது?” 

“நேற்றும் இண்டுமாம்….! நான் இப்ப பின்னேரம் ஒரு ‘ட்றங்க்கோல்’ எடுத்தனான் – ஒரு விஷயமாய், அப்ப தான் இது தெரிஞ்சுது!” 

“உம்மட குடும்பம் எங்கை?” 

“யாழ்ப்பாணத்திலைதான்…. உம்மடை?” 

“….இங்கதான்! அதுதான் யோசிக்க வேண்டிவயிருக்கு….” என்றவன் தொடர்ந்து, 

”ஆ! பயந்து என்ன செய்கிறது! எத்தினை ஆயிரம் குழந்தை குட்டியள், வயது போனதுகள், சுகமில்லாததுகள் எல்லாம் இஞ்ச இருக்கு! நாங்களேன் பயப்படுவான்?’ என் று தன்னைத்தானே சமாதானப்படுத்துவது போலக் கூறினான். 

இப்படித்தான் அவளும் போனமாதம் சொன்னாள்.

தேர்தல் அமளிகளுடனேயே ஒரு குழப்பத்தைப் பலபேர் எதிர்பார்த்துப் பயந்திருந்தார்கள். 

“வாரும், உம்மையாவது யாழ்ப்பாணத்திலை கொண்டு போய் விட்டிட்டு நான் திரும்பி வந்து நிற்கிறன்….” என்ற போது, வேணி மறுத்து விட்டாள், 

“உப்பிடிப் பயந்து என்ன செய்யிறது! கொழும்பிலை எத்தினை ஆயிரந் தமிழர் இருக்கினம்…. எல்லாருக்கும் வாற் விதிதானே எங்களுக்கும்!” 

அந்தக் குழப்பம் இப்போது ஒரு மாதம் பிந்தித் தொடங் கியிருக்கிறது போலத் தெரிகிறது. கொழும்பிலை இருக்கிற, எத்தினை ஆயிரந் தமிழருக்கு மட்டுமன்றி இலங்கையிலே இருக்கிற எல்லாத் தமிழர்களுக்குமே அமைதி போய் விடலாம்…. 

இந்த நேரம் பார்த்து-கையில் அரும் பொட்டாகக் கிடந்த காசில் – பதினைந்து ரூபாய்க்குப் புத்தகம் வாங் கியிருக்கக் கூடாது என்று பட்டது. 

“பாத்தீரா? பீற்றேஸ் கொலிஜ் அகதிமுகாம்…. -சாம்பன், தன் மனைவிக்குக் காட்டினான். 

அது தாண்டுவதற்குள் கதிரேசன் கோவில் முகாம் வந்துவிட்டது. 

“இப்ப எல்லாமாக எத்தனை முகாம்கள் இருக்கு?” வேணி கேட்டாள். 

“நாலு….” என்றான் இவன். 

“…முதல் தொடங்கியது உறின்டுக் கொலிஜ். பிறகு, கதிரேசன் கோயில் பிறகு கதிரேசன் மண்டபம். கடைசியா பீற்றேஸ் கொலிஜ்”

“எல்லாத்திலையுமா சேர்த்து ஐயாயிரத்துக்கு மேலை அகதியள் இருக்கினமாம்.” என்றான் சாம்பன். 

கோயிலைத் தாண்டும்போது, வேணியும் சாம்பனின் மனைவியும் குனிந்து கும்பிட்டார்கள். 

கதைப் பராக்கில், ட்றைவரைக் கவனிப்பதை விட்டு விடக்கூடாது என்று தனக்குள் ஞாபகப்படுத்திக் கொண்டான். 

“இத்தனைபேரையும் கப்பலிலைதானே யாழ்ப்பாணம் அனுப்பப் போகினம்?….”  என்று சாம்பனின் மனைவி கேட்டாள். 

“பிளேனிலையும் போயினம்….’ 

இன்னும் ஆக்கள் வந்தபடிதான் இருக்கு…. பீற்றேஸ் கொலிஜ் நிரம்பினா, அடுத்த முகாம் திறக்க ஆயத்தமாயிருக். கினம்…. 

பெண்களின் பதட்டம் குறைந்திருப்பது போலப் பட்டது. சாம்பனின் மனைவியும் வேணியும் பேசிக் கொள்ள ஆரம்பித்திருந்தார்கள். 

“நீங்கள் ஏன் அகதி முகாமுக்குப் போகவேணும்?’ என்று அன்றைக்குக் கேட்டவன், அந்த நாயக்க, ஒரு சிரிப்பு: டன் கேட்டான். 

திங்கட்கிழமை பகல் கந்தோருக்குப் போனபோதே அந்த வித்தியாசம் – மனதிற்பட்டது. பிரதமரின் பேச்சை வெள்ளி இரவு றேடியோவில் கேட்டபோது ஏற்பட்ட பய உணர்வு இப்போதும் வந்ததுபோல – கோபாலின் மேசையை சுற்றி எட்டுப்பத்துப்பேர், மதநுவரவின் மேசையைச் சுற்றி மீதிப்பேர் என்று நின்றார்கள்; இவனை ஒருவரும் ஒன்றுங் கேட்கவில்லை. சிங்கள நண்பர்கள் எல்லாரும் தலையைக். கண்டது ம் ஓடிவந்து விசாரிப்பார்கள் என யோசித்திருந்தான் ஆனால், அவர்கள் எல்லோரும் மதநுவரவின் மேசையைச் சுற்றி நின்றபடி பேசிக் கொண்டிருந்தார்கள். கண்டபிறகும் கூட வெகு சாதாரணமாய்க் கதையைத் தொடர்ந்தார்கள், அப்போதுதான் அது-அந்த ஏமாற்றம், வெறுமை; பயம் மனதில் உறைத்தது. 

மணிபத்தாகியிருந்தாலும்கூட ரெஜிஸ்ரர் மூடப் வடாமல் இருந்தது. எட்டு மணிபோட்டுக் கையெழுத்து வைத் தான். வீட்டிலிருந்து வெளிக்கிட்டபோதே ஓன்பதரை- வழக்கமான நேரத்திலும் இரண்டு மணித்தியாலம் பிந்தி. தொடர்ச்சியாய் முப்பத்தாறு மணி நேரம் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்து முடிந்து மூன்று மணித்தியாலங்கூட ஆவதற்குள் வெளியே புறப்படுவது முட்டாள்தனம்- அதிலும் தமிழர்கள் ஆபத்தை எதிர்நோக்குகையில்;  வேண்டு மென்றே பிந்திப் புறப்பட்டான். 

கோபாலின் மேசையடிக்குப் போன போது, ‘கப்பல் போகுதாம்!…. போகேல்லையே?” என்றான். சிவஞானம். ”பகிடி விடாதையுங்கோ…. உண்மையாகக் கப்பலிலைதான் போகப்போறம் எல்லாரும்-” 

“பகிடி இல்லை, உண்மையாத்தான்” என்றான் கந்த சாமி. அது செய்தியாகத் தானிருந்தது. 

“மூண்டு கப்பல் ஒழுங்கு படுத்தியிருக்காம்….” 

“உறிண்டுக் கொலிஜ், மிஷன் ஹோல்- இரண்டிடத் திலையும் முகாம் திறந்து ஆயிரம் பேருக்கு மேலை வந்திருக்கினமாம்….” 

சேதிகள் தொடர்ந்தன. 

இவ்வளவும் எப்போ நடந்தன? இவர்கள் எப்படி அறிந்தார்கள்? உலகம் தன்னைத் தனியே விட்டு முன்னே போய்விட்டதைப் போல உணர்ந்தான்…. 

முழு விபரமுங் கேட்டறியப் பதினைந்து நிமிஷமானது. 

நுகேகொடை, கிரிலப்பனை, இரத்மலானை போன்ற இடங்களிலிருந்து நேற்றைக்கே ஆமிக்காரர் ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்து காம்ப்பில் விட்டுவிட்டார்களாம். 

“இன்னும் சனம் வந்தபடி இருக்கு….” என்றான் சிவஞானம். 

“அடுத்தது வெள்ளவத்தைதான்….” என்று சொல்லிச் சீரித்தான் சாம்பன். கலவரம் கலந்த சிரிப்பு. 

மதநுவரவின் மேசையைக் காட்டி இவன் கேட்டான். 

“இவர்களொருதரும் வந்து உங்களை ஒண்டுங் கேக்கேல்லையே?” 

“ம்ஹும்!” 

“ஒருத்தரையும்?” 

“இல்லை….” 

“இருக்கிறீங்களா – செத்தீங்களா? ஆராவது அடிக்க வந்தாங்களா? வீட்டுக்குக் கல்லெறிஞ்சாங்களா? பயப் படுறீங்களா எண்டு கூட?”

ரக்ஸி திடீரென் று வேகங் குறைவது போலிருந்தது. திடுக்கிட்டு உஷாரானான். 

பம்பலப்பிட்டி சந்தி வந்துகொண்டிருந்தது. சாம்பனைப் பார்த்தான். அவன் நேரே பார்த்துக்கொண்டிராமல், அரை வாசி திரும்பி,ட்றைவரும் பின் ஸீற்றில் உள்ளவர்களும் தன் பார்வையில் விழக்கூடிய விதமாக ஒரு கோணத்தில் உட் கார்ந்திருந்தான், சாம்பன் கவனமாகத்தானிருக்கிறான். 

ரக்ஸியில் தான் ஸ்ரேசனுக்குப் போவது என்று தீர்மானித்தபோதே, ஒரு ஆள் ட்றைவருக்குப் பக்கத்திலும் மற்றவன் நேரே பின்னாலும் எச்சரிக்கையாய் இருந்து கொள்ள வேண்டுமென்று யோசித்திருந்தார்கள். ரக்ஸியில் ஏறி. முதலில் சாம்பன் வீட்டுக்குப் போய் அவன் மனைவியை யும் பிறகு வந்து. வேணியையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட போது அது சரியாயிருந்தது. 

‘என்ன?” என்பதாகப் புருவத்தை நெறித்தான். ஒன்றுமில்லை என்று சாம்பன் சமிக்ஞை காட்டினான். பெண்களிருவரும் எத்ருவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தெரு அமைதியாய்க் கிடந்தது. அசாதாரணமான அமைதி. சந்தியில் சிக்னல் விளக்குகள் எரியாமல் நின்றன. 

இந்த இடத்தில் நின்று இடித்துத் தள்ளிக் கொண்டு -ஏறிய கூட்டந்தான் அன்று ஒஃபீஸுக்குப் போனபோது பதட்டத்தைத் தந்தது. கொழும்பில் வாழ்ந்த இந்தப் பத்து வருடத்திலும் இப்படி ஒரு கூட்டத்தை இந்த இடத்தில் அந்த நரத்தில் பார்த்தது அதுதான் முதல் தடவை. ஆனால் அது கந்தோருக்குப் போகிற சனந்தான். பஸ்கள் வெகுவாகக் குறைந்திருந்தன; 

அந்த நெரிசலில் நிற்கவே பயமாயிருந்தது. தப்பித். தவறியாருடனாவது மோதிக் கொண்டால், மிதித்துக் கொண் டால், இதுதான் சாட்டென்று பஸ்ஸுக் குள்ளேயே வைத்து மொங்கிவிடக்கூடும். என்று பட்டது. மூச்சைப்பிடித்துக் கொண்டு பத்திரமாக நின்றான். தமிழ் முகங்களாக அல்லது தெரிந்த முகங்களகத் தன்னும் ஒன்றையும் காணவில்லை. 

பஸ் தும்முல்லை சந்தியில் பென்னாம் பெரிய வெள்ளைப் புத்தர் சிலையைத் தாண்டியபோது சிலபேர் பயபக்தியாக எழும்பி விட்டுக் குந்தினார்கள். 

அன்றைக்குக் கந்தோரும் வழமைக்கு மாறாகத்தா னிருந்தது. பதினோரு மணிக்குப் பிறகு கோபாலின் மேசையைச் சுற்றி நின்ற எல்லோரும் வீட்டுக்குப் போக வெளிக்கிட்டபோது, நாளைக்கு என்ன மாதிரி?” என்று கேட்டான் சத்தியசீலன் 

“நிலைமையைப் பொறுத்து வருவம்….” 

“இருக்கிறமோ, சாகிறமோ….?” 

அப்போதுதான் அந்தநாயக்க வந்தான். “என்ன யோசிக்கிறீர்கள்?” 

“இந்தக் கேள்வியே சரியில்லை.”

“எப்படி, உங்கள் பக்கம்?”- சாம்பன் அந்தநாயக்காவைக் கேட்டான்: 

“எங்கள் பக்கம் ஒன்றுமில்லை. நாங்கள் தமிழர்களைப் யத்திரமாகக் காப்பாற்றுவோம். ஒருதருக்கும் ஒரு அடி கூட விழாது! ஆனால் எல்லோரும் பயந்து போய்விட்டார்கள்….” அந்தநாயக்க சிரித்தான். 

அவனிடம். அந்தக் கேள்வியைக் கேட்டதற்காகச் சாம்பன் வருந்துவதுபோலத் தெரிந்தது. 

அந்தநாயக்க, இவனிடந் திரும்பிக் கேட்டான்.

“என்ன கிருஷ்ணன்? பேசாமலிருக்கிறாய்….” 

“ஒன்றுமில்லை….” 

“இன்றுதான் சவ அடக்கம்….” அந்த நாயக்க சொன்னான்…?  

“யாருடையது?” 

“யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட சிங்கள ஆளுடைது. அங்கே, யாழ்ப்பாணத்தில் சிங்களவர். ஒருவரும் கொல்லப்படவில்லை. தமிழர்தான் செத்தார்களாம்” 

“பொய் சொல்லவேணாம்….” அந்தநாயக்க அனர குறைத் தமிழில் உறுக்கிச் சொல்லிவிட்டு, பிறகு பழையபடி இங்லீஷில் சொன்னான். 

“….எங்களுக்கு எல்லாந் தெரியும். ஆனால் நாங்கள் அப்படிச் செய்யமாட்டோம். உங்களைப் பாதுகாப்போம்.” 

“வீண் வதந்திகளைத் தயவு செய்து நம்பவேண்டாம்” 

“நீங்கள் ஏன் தனிநாடு கேட்கிறீர்கள்?”

“…அது வேறுகதை…. தனிநாடு கேட்டதற்கும் இந்தக் கலவரங்களுக்கும் சம்பந்தமில்லை. யாழ்ப்பாணத்தில் பொலிசுக்கும் பொதுமக்களுக்குமிடையில் ஏற்பட்ட இனக்கலவரமாகி இந்தளவுக்கு வந்திருக்கிறது…. முன்பு பேரதெனியாவிலோ, புத்தளத்திலோ நடந்த கலவரங்களைப் போலத்தான் இதுவும்….” 

10 

‘ரக்ஸி’ சட்டென்று நின்றது: கிருஷ்ணன் திடுக்கிட்டான். இதயம் படபடத்தது. வயிற்றுக்குள் புகைந்து முன்சீற்றில் கையை வைத்து உஷாரானான், 

“என்னது?” 

சாம்பன் முற்றாக ட்றைவர் பக்கந் திரும்பினான்.

“டிக்கி மூடி கழன்றுவிட்டது, மாத்தயா….” ட்றைவர் இறங்கினான்,சாம்பனுங் கதவைத் திறந்தான். 

“நீ இறங்காமல் இருந்து கொள்….” 

தலையைத் திருப்பிக் கண்ணாடிக் குள்ளாய் பார்த் “உண்மையாய்த் தான் டிக்கி கழண்டிருக்கு, பயம் படாதை யுங்கோ….” என்றான் கிருஷ்ணன். பெண்கள் பெருமூச்சு விட்டார்கள். 

சாம்பன் கதவருகில் வந்து, “டிக்கிதான்….” என்ற. போதே டக்கு டக் கென்று திருப்பித் திருப்பி டிக்கிக் கதவை அடிக்குஞ் சப்தங் கேட்டது. 

பிறகு ட்றைவர் வந்தான். 

”இப்ப சரி” 

பெரிதாகப் பெருமூச்சு வந்தது. 

கொஞ்சத் தூரம் போனதும், 

“இந்த ஆள் ஐயா என்டதைக், கவனிச்சியா?” – என்று கிருஷ்ணன் கேட்டான் 

“எப்ப?” சாம்பனுக்குப் புரியவில்லை. 

“டிக்கி மூடி கழண்டு போச்சு, ஐயா! எண்டானே….”

“நான் கவனிக்கேல்லை….’” 

“இந்த நேரத்திலும் இப்பிடிச் சொன்னது, எனக்குப் பெரிய ஆச்சரியமாயிருக்கு…. வாய்ப்பழக்கமாயிருக்கும்….” சாம்பனும் பெண்களும் மெல்லச் சிரித்தார்கள். 

சேமிப்பு வங்கி, பிரிட்டிஷ் கௌன்ஸில், ஒபரோய் – என்று ஒவ்வொன்றாகப் பின் னால் ஓடின….அந்த வங்கியில் கிருஷ்ணனுக்குக் கணக்கு இருந்தது. பிரிட்டிஷ் கௌன்ஸில் லைப்ரரியில் அவன் மெம்பர் – நல்ல காலமாக இப்போது புத்தகம் ஒன்றும் இரவல் வாங்கியிருக்கவில்லை. வெளிநாட் டிலிருந்து நண்பரொருவர் வந்து நின்ற போதுதான், ஒபரோய்க்குள் முதன் முதலில் போகச் சந்தர்ப்பங்கிட்டிற்று. அன்பிற்குரிய அந்த நண்பரின் நினைவும், அந்த மாளிகையின் நினைவும் ஒன்றாகிவிட்டிருந்தன அவரை நினைத்தால் அதுவும், அதை நினைத்தால் அவரும் நினைவுக்கு வருகிற மாதிரி. 

கோல்ஃபேஸின் குளிர் காற்று முகத்திலடித்தது. துறைமுகப் பக்கமாக நாலைந்து கப்பல்கள் தெரிந்தன. கடல் அமைதியாய் விரிந்து கிடந்தது. “உந்தக் கப்பல்களிலை தான் எங்கட ஆக்களை அனுப்புவினமோ?” என்றான் சாம்பன். 

‘“இருக்கும்…”

‘சிலிங்கோ’ உச்சி, ஆகாசக்கடை, பாராளுமன்றக் கட்டிடம், செக்ரடேரியட்…. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொடர்பிருந்தது – ஒவ்வொரு நினைவிருந்தது…. 

இனிமேல் வாழ்க்கையில் இவற்றைக் காணுகிற சந்தர்ப்பமே இல்லாமற் போகலாம்…….. 

11 

ரக்ஸியிலிருந்து இறங்கியபோது, ஒரு கண்டத்திலிருந்து தப்பிய உணர்வு உண்டாயிற்று – நல்ல காலமாக ரக்ஸிக்காரன் எங்கும் கடத்திக் கொண்டு போய் விடவில்லை. 

இறங்கி, பின்புறமாகச் சுற்றிக்கொண்டு மற்றப்பக்கம் வந்த போதுதான், சூட்கேஸை மடியில் வைத்துக் கொண்டு வேணி இறங்க முடியாமல் தத்தளிப்பதைக் கண்டான். சாம்பனின் மனைவி இறங்கி விட்டிருந்தாள். கையையூன்றி உள்ளே குனிந்து சூட்கேஸை எடுத்தபோது, “ஐயோ….” என்று குழறினான். 

முன் கதவைச் சாம்பன் சாத்தியிருக்க வேண்டும். இடதுகைச் சின்னி விரல் அறுந்து விழுந்தது போல வலித் தது. கதவைத் திறந்து கையை எடுத்த போது, விரல் நுனி சப்பளிந்து போய் இரத்தம் வடிந்தது.. 

“ஐயோ……” என்றான் சாம்பனும், பதறிப் போய்.

“….ஸொறி, ஸொறி…. நான் கவனிக்கேல்லை.” 

“விரலைச் சூப்புங்கோ….” என்றாள், சாம்பனின் மனைவி. 

வேணி ஓடிவந்து கையைத் தூக்கி விரலை வருடினாள். தெறிப்பது போல வலித்தது. டிக்கி மூடியோடு போராடிக் கொண்டிருந்த ட்றைவரும் ஓடி வந்தான். 

“என்ன மாத்தயா?….” என்றவன், “….அணே” என்றான். 

தனது ஷேட் பொக்கற்றுக்குள்ளிருந்த லேஞ்சியை எடுத்து இரண்டாகக் கிழித்துக் கொண்டு, மூன்றுநிரை தெருக் களையுந் தாண்டி, முன்னால் தெரிந்த கடைகளை நோக்கி ஓடினான். 

சூப்பச் சூப்ப இரத்தம் வாய்புளித்தது, கிருஷ்ணனுக்கு. அவன் பொக்கற்றுக்குள்ளிருந்த கைக்குட்டையை இழுத்து, காயத்தின் மேல் பொத்தினாள் வேணி. 

ட்றைவர் திரும்பி வந்த போது, கிழித்த பாதி லேஞ்சி தண்ணீரில் நனைத்திருந்தது. கையைப் பிடித்திழுத்து, கைக் குட்டையை எடுத்து விட்டு, அந்த ஈரத் துணியை இறுகச் சுற்றினான். குளிர்ச்சியில் வலி குறைந்தது. 

“இனி இரத்தம் நிண்டிடும்….” என்றான் ட்றைவர், சுற்றி முடித்ததும். 

“….பயப்படாதையுங்க மாத்தயா, சின்னக் காயந்தான்.”- அவன் புன்னகைத்தான். 

இருபது ரூபாய் கேட்டான். ஆளுக்குப் பத்தாய் அவனும் சாம்பனும் கொடுத்தார்கள்.ஏதோ நினைத்தவனாய் உடனேயே பொக்கற்றுக்குள் கையை விட்டு, இன்னொரு ஐந்து ரூபாயையும் எடுத்தான் கிருஷ்ணன். ‘வேண்டாம் மாத்தயா, கூடுதலாக வாங்கிறது சரியில்லை….’.அந்த மனிதன் கதவைத் திறந்து தன் ஸீற்றில் குந்தினான். “நான் போறன்…. பத்திரமாய்ப் போய் வாங்கோ….” 

“வாருமன்….” என்று வேணி கூப்பிடும் வரையில், அந்த ரக்ஸி போன திசையைப் பார்த்தவாறு நின்றான் கிருஷ்ணன். “ஒரு உண்மையான மனுசன்!” என்றான் சாம்பன் நெகிழ்ந்து பேர்ய். 

போய் ரிக்கற் கியூவில் நின்றார்கள். 

12 

திரும்பிப் போய் அகதிமுகாமில் நின்று, கப்பலில் அல்லது பிளேனில் போகலாமா என்ற எண்ணம் திரும்பவும் ஒரு கணம் வந்தது. வேணியைப் பார்த்தான். அவள் எல்லாவற்றையும் இவன் கையில் ஒப்படைத்து விட்ட நிம்மதியோடு – எது நடந்தாலும் இருவருக்குந்தானே என்ற சாம்பனின் மனைவி சொன்ன நிதானமாயிருக்கலாம் – எதையோ கேட்டுக் கொண்டிருந்தாள். என்றாலும் முகம் மாறித்தானிருந்தது – உள்ளுறைந்த பயத்தின் வெளிப்பாடான வெளிறல் – சாம்பனின் முகமும் அவன் மனைவியின் முகமுங்கூட அப்படித் தானிருந்தன. தன் முகமும் அப்படித் தானிருக்கும் என நினைத்துக் கொண்டான். 

அரைவாசியில் மனதைக் குழப்பி, முன்வைத்த காலைப் பின் வைக்கக்கூடாது என்று பட்டது. வருவது வரட்டும் என்று வந்தாயிற்று – இரண்டு மூன்று நாட்களாக யோசித்து யோசித்து எடுத்த முடிவு, இனிக் குழப்ப வேண்டாம். 

இருந்திருந்துவிட்டு நினைக்கும்போது இதெல்லாம்- இந்த ஐந்தாறு நாட்களாக நடப்பதெல்லாம் – ஏதோ திடீரென வந்து கவிந்த இருள் போல உணர முடிகிறது. தார்ஸி வித்தாச்சியின், ‘எமர்ஜென்ஸி-58’ என்ற புத்த கத்தைப் படித்தபோது, கற்பனை பண்ணிப் பார்க்கக்கூடப் 

விஷயங்களெல்லாம் இப்போது பயமாயிருந்த விஷயங்களெல்லாம் இப்போது தன்னைச் சுற்றி உண்மையாகவே, மீண்டும் – இடையில் ஒரு இருபது வருடம் – நடக்கின்றது என்பதை நம்பமுடியாமலிருந்தது. 

கிருஷ்ணன் மணிக்கூட்டைப் பார்த்தர்ன். ஆறேகால். ரயில் இன்னமும் மேடைக்கு வரவில்லை. ஸ்ரேசன் வழமை போல இருப்பதாகத்தான் பட்டது – அதிகரிக்கப்பட்டிருந்த காவலைத்தவிர. 

ரிக்கற்றுகளை வாங்கிக் கொண்டு உள்ளே போன போது யாழ்ப்பாண ரயிலுக்கு எதிர் பார்த்ததிலும் அதிக மான கும்பல் நிற்பதை உணர முடிந்தது. வழக்கமான ஒரு பயணத்தின் போது எரிச்சலையும் பயத்தையும் தந்திருக்கக் கூடிய இந்த நெரிசல் இன்றைக்கு ஒரு ஆறுதலாயிருந்தது.

“இவ்வளவு கிறவுட் இருக்குமெண்டு நான் நினைக்கேல்லை….” என்று சாம்பன் வியப்புடன் சொன்னான். 

“ஹலோ….. கிருஷ்ணன்….” யாரோ முதுகில் தட்டினார்கள். திரும்பிப் பார்த்தான். ஜெயதேவன். 

“ஹலோ….” என்றான், பதிலுக்கு. “….என்ன பயணமா?….”

“ம்!….” என்று சொல்லி ஜெயதேவன் சிரித்தான். 

“…..கப்பலிலை சந்திப்பம் எண்டு அண்டைக்குச் சொல்லிப் போட்டுப் போனன்… இண்டைக்கு ரயிலிலை சந்திக்கிறம்….” கிருஷ்ணனும் சிரித்தான் கசந்து. 

“ஃபமிலி?” 

“அந்தா, அதிலை நிக்கினம்…. நான் உங்களைக் கண்டிட்டுத்தான் வந்தனான். போய், அவயளை இதிலை கூட்டிக் கொண்டு வரட்டா….எல்லாரும் ஒண்டாயிருந்து ஆளுக்காள் துணையாய்ப் போயிடலாம்….” 

“ஓமோம், அதுதான் நல்லது….” 

“இவர், உன்ர ஃபிரண்டா?”

ஜெயதேவன் திரும்பியதும் சாம்பன் கேட்டான். 

“கிளாஸ்மேற்… கனகாலம் – ஒண்டாய்ப்படிச்சவர். இப்ப, இங்கதான் வேலை செய்யிறார்….” 

13 

ஜெயதேவனை முந்தநாளும்-செவ்வாய்க்கிழமை, கலம் பகந் தொடங்கிய பிறகு கந்தோருக்குப் போன இரண்டா வது நாள் – சந்தித்திருந்தான், பஸ்ஹோல்ற்றுக்கு வந்த போது வழமையான கியூவில் கால்வாசிகூட இல்லை. 

இவையள் பாவம் – பயந்து பொட்டுக்கூட வைக் காமல் போகினம்….’- வெறு நெற்றியும் பயக்களை படர்ந்த முகமுமாய் முன்னால் நின்ற இரு பெண்களையும் காட்டிச் சொன்னான் ஜெயதேவன். தமிழ்ப் பெண்கள். 

“இண்டைக்கு வேலைக்குப் போகாமல் நிண்டா என்ன குறைஞ்சு போகும்?” என்று கிருஷ்ணன் தொடர்ந்து, “பாவம். என்ன நிர்ப்பந்தமோ?” என்றான். 

“அங்கை பார்த்தீரா?….” எதிர்ச்சாரியில் ஒரு கடையின் கதவெல்லாம் எரிந்து கிடந்தது. 

சனிக்கிழமை மத்தியானம் – ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டவுடன் அலை மோதிய சனத்திரளில் முண்டி யடித்து அவனும் அக்கடையில் சாமான் வாங்கியிருந்தான். 

“எப்ப நடந்தது?”

“முந்தநாளாம்!” 

“முந்தநாளா?…. ஊரடங்குச் சட்டம்?-‘” ஜெயதேவன் சிரித்தான் – ஆற்றாமையுடன் பயமும் அதில் கலந்திருந்தது.

நேற்றையிலும் பார்க்க இன்று கொஞ்சம் உசாரா யிருந்தது. இனி எல்லாங்குறைந்து விடுமென்பது போல ஒரு உணர்ச்சி. ஜெயதேவனிடம் சொன்னான். 

“உதெல்லாம் சொல்லேலாது-” என்றான், அவன். 

கந்தோருக்குப் போனதும் முதல் வேலையாக அத்த நாயக்காவைத் தேடிப்போனான்.வழமையான சிரிப்புடன் வர வேற்றான்,அவன். அதைப்பொருட்படுத்தாமல் கிருஷ்ணன் கேட்டான். 

“நேற்றிரவு ரேடியோ கேட்டாயா?” 

“ஏன்?”

“யாழ்ப்பாணத்துப் பிக்கு என்ன சொன்னார்?”

அத்தநாயக்கா பிறகும் சிரித்தான்…. 

“ஏன் சிரிக்கிறாய் மச்சான்?” கிருஷ்ணனுக்கு எரிச்சல் வந்தது. 

அத்தநாயக்கா சிரிக்கும்போது விமல் பெரேரா வந்தான்.  

“ஏன் சிரிக்கிறாய்?” என்று அவனுங் கேட்டான். “நேற்று இராத்திரி ரேடியோப் பேச்சைக் கேட்க வில்லையோ’ என்று கிருஷ்ணன் கேட்கிறான்….” 

நேற்றிரவு அந்த ரேடியோப் பேச்சை – யாழ்ப்பாணத் தில் எந்த ஒரு சிங்கள மகனுக்கும் எந்தவிதமான சிறு பாதிப் புங்கூட ஏற்படவில்லை என்று ஒரு பௌத்தகுரு சிங்கள மக் களுக்கு உறுதியாய்க் கூறி வதந்திகளை நம்பித் தமிழருக்கு ஹிம்சை செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அந்தப் பேச்சைக் கேட்டதிலிருந்து அவன் நிம்மதி கொண்டிருந் தான்; வதந்திகள் ஒழிந்து உண்மை வெளிக்குமென,ஆனால் இப்போது? “அதை நம்பச் சொல்கிறாயா?” 

அப்படி ஒரு நிம்மதி இருந்துவிட முடியாது என்பது போல் இவர்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்…. 

14 

ஆறரையாகப் போகுது…. இன்னுங் கோபால் ஆக் களைக் காணல்லை?….” என்றான் சாம்பன். 

“வந்திருப்பாங்கள்…. இந்தச் சனத்துக்கை எப்பிடிக் கண்டுபிடிக்கிறது….” 

“நான் போய் ஒருக்கா தேடிக்கொண்டு வரட்டா?….”

“நீ நில்…. நான் போயிட்டு வாறன்.” கிருஷ்ணன் வேணியிடமும் சொல்லி விட்டுப் புறப்பட்டான். 

தண்டவாளங்களுக்கு மேலால் மேடைகளைத் தொடுக் கிற பாலத்தில் ஏறினான். பழக்கமான படிகள். கோட்டை அலுவலகத்தில் வேலைசெய்த அந்த மூன்றாண்டு காலமும் – அநேகமாகத் தினசரி சந்தித்து வந்த பாலம். ஒவ்வொரு மாலையும் ரயிலைப் பார்த்திருக்கையில் ஏறி நிற்பது இந்தப் பாலத்தில்தான். முழு ஸ்ரேஷனுமே பார்வையில் படும் கூட்டமாய் நெளிகிற மனிதர்கள். உலகத்தின் ஒரு முழுமை யான சிறு பின்னம் கீழே இயங்குவதைப் பார்த்திருப்பதில், காத்திருக்கிற அலுப்பே தெரியாது. 

நாலாம் மேடைக்கு மேலே, பாலம் இறங்கத் தொடங் குகிற இடம். இரண்டு பக்கங்களிலும் படிகள். வலப்பக்க மூலையில் போய் நின்றான். கிராதி விளிம்பில் கைகளைப் பொறுக்க வைத்து, ஒற்றைக் காலைத் தூக்கிக் கம்பியில் ஊன்றி நின்று பார்த்தபோது, இப்போதும் அந்தக் காலந் திரும்பி விட்டாற்போலிருந்தது. இடையில் இத்தனை இடை வெளியா? ஐந்து வருடம் ஓடிவிட்டது என்பதை நம்பமுடிய வில்லை. 

வழுவழுத்த கைப்பிடிப் பலகையில் வெளிப்பக்க மூலையில் அப்போது ஒரு சிறு ஆணி இருந்தது. பார்க்க முடியாது. ஆனால் கைகளுக்குத் தட்டுப்படும். இப்போதும் – இன்னமும் – அது இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கிற நண்பனை விசாரிப்பதுபோல அதனை வருடிப் பார்த்தான். அதைக் கடைசித் தடவையாக ஸ்பரிசித்த நாளுக்கும் இன்றைக்குமிடையில் எத்தனை காரியங்கள் நடந்துவிட்டன – கனவுபோல! இந்த ஆணி மட்டும், இந்த அசைகிற உலகில் – அதுவும் வினாடிக்குக் கோடி அசைவுகள் நடக்கிற இந்த ரயில்வே ஸ்ரேசனில் – அந்தப்படியே ஐந்து வருஷம் இருந்திருக்கிறது…. 

நேரே முன்னால் – கொஞ்சம் பதிவாக – தொங்கிய ஒலிபரப்பி கரகரக்கவும் அவனுக்குக் கோபாலின் ஞாபகம் வந்தது. 

இறங்கிக், கூட்டத்தைப் பிளந்து நடந்தபோது எதிரே ஓரிடத்தில் ஸோமாஸ் நின்று கொண்டிருந்தார். கூட, பெண் சாதி பிள்ளைகள். கண்டதும், ‘என்ன கிருஷ்ணன், பயணமா?” என்றார். 

தலையாட்டியபடியே, “நீங்களுமா?….” என்று கேட்டான்.  

அவசரத்தில் சுருக்கமாகப் பேச்சை முடித்துவிட்டு நகர்ந்த போதுதான், நீங்களுமா?” என்று கேட்டிருக்கக் கூடாது என்றுபட்டது. ஸோமாஸ், கொஞ்சம் அசாதாரண மான மனிதர், அரசியல் சமூகப் பிரக்ஞைகள் உள்ள மனிதர், தேசிய ஒருமைப்பாடு, ஒற்றுமை என்று பாடுபட்டுக் கொண் டிருந்தவர்….. 

15 

திடீரென்று கூட்டத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.

“ரயில் வருகுது….” என்றான் கோபால். 

“நாங்கள் முதல் ஏறி இடம் பிடிக்கிறம், நீங்கள் பிறகு ஆறுதலாக ஏறலாம்….” என்று கிருஷ்ணன் வேணியிடம் சொன்னான். 

“தள்ளி நில் பிள்ளை…. சனம் உன்னைக் குழந்தையோட இடிச்சு விழுத்திப் போடும்….” ஜெயதேவனின் தாய் பேரப் பிள்ளையைத் தூக்கிவைத்திருந்த மருமகளைக் கையில் பிடித் துக் கொண்டாள். 

ரயில் நிற்குமுன்பே தொப்புத் தொப்பென்று ஆட்கள் பாய்ந்தார்கள். இடித்துத் தள்ளிக்கொண்டு நுழைந்தார்கள். கிருஷ்ணனுக்கு முன்னால் இரண்டு ஸீற்றுகள் காலியாகக் கிடந்தன. எதில் குந்தலாம் என்று யோசிப்பதற்கிடையில் ஒரு ஆள் பாய்ந்து முன் ஸீற்றில் இருந்தான். மற்றத்தில் இருக்கப்போன கிருஷ்ணனிடம் அவன் கத்தினான். 

“இவ்வளவும் எங்களுக்கு!” கைகள் இரண்டு ஸீற்றுகளையும் மறைத்துப் பரந்திருந்தன. 

இரண்டு ஸீற்றுகள். ஆறு பேர் இருக்கலாம். கிருஷ் ணனுக்கு ஆத்திரம் பொங்கியது. 

‘‘ஆருக்கு?” 

“எங்களுக்கு!….அங்க வருகினம் ஆக்கள் – என்ர ஃபிரன்ட்ஸ்.” கிருஷ்ணன் ஆளைப் பார்த்தான். இளைஞன். கறுவல். முரட்டுத்தனமாய்த் தெரிந்தான். 

கிருஷ்ணன் கோபாலிடம் சொன்னான். 

“நீ இதிலை இரு…. நான் போய்ப் பொம்பிளையளைக் கூட்டிக்கொண்டு வாறன்….” 

“வேண்டாம்….” அந்த இளைஞன் கோபாலுவைத் தடுத்தான். 

“இவ்வளவும் எங்களுக்கு!….” 

வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு கிருஷ்ணன் நிதானமாகச் சொன்னான். 

“ஐஸே வழக்கமான நாள் எண்டாலும் பரவாயில்லை. இண்டைக்கு இந்த ரிசர்வேஷன் விளையாட்டு வேண்டாம். அடி வாங்கி ஓடுகிற நாங்கள் எங்களுக்குள்ளை சண்டை பிடியாமல் ஒற்றுமையாகப் போவம்….” 

“ஒரு ஸீற்றை எடுத்துக் கொண்டு மற்றதை விடுமன்….?” கோபால் கேட்டான். 

“ஏலாது…. நாங்களெல்லாரும் ஒண்டாயிருந்து போக இவ்வளவும் வேணும்….” இருக்கப் போன கோபாலை அவன் தடுத்தான். 

கிருஷ்ணனுக்குக் கண்மண் தெரியாமல் வந்தது. அவன் மேல் பாய்ந்தான் – மறித்த கைகளைத் தட்டிவிட்டு. “தள்ளி இர்றா!” நசிந்த விரல் தட்டுப்பட்டு லேசாக நொந்தது. 

“கிருஷ்ணன், பொறு பொறு….” என்றான் கோபால். அதைக் கவனியாமல் கிருஷ்ணன் சொன்னான். 

“கோபால்,நீ போய் அவயளைக் கூட்டிக் கொண்டா….” 

இரண்டு வரிசை தள்ளியிருந்த இடத்திலிருந்து ஒரு நடுத்தர வயது மனிதர் ஓடிவந்தார். கிருஷ்ணனைப் பார்த்துக் கையைக் கூப்பிக்கொண்டே, 

“தம்பி! சண்டை பிடியாதையுங்கோ ராசா…. நாங்கள் நல்லா அனுபவிச்சுப் போட்டு வாறம்…. இனியாவது ஒற்றுமையா, நிம்மதியாப் போவம்….” என்றார். 

கிருஷ்ணன் கரைந்து போனான். அவர் எங்கோ இன்னும் தெற்கிலிருந்து வந்தவர் போலப்பட்டார். 

“மன்னிச்சுக் கொள்ளுங்கோ ஐயா, இனிச் சன்டை பிடிக்கேல்லை… ” 

16 

ஏழே முக்காலுக்கு மணி அடித்தது. “ஒரு படியா வெளிக்கிடப்போகுது….” என்றார்கள் யாரோ…. 

“கதிரமலையானே, பத்திரமாக் கொண்டு போய்ச் சேர்த்துவிடு, அப்பு….” ஜெயதேவனின் தாய் கைகளை விரித்தாள். 

“கதிரமலையானும் இங்காலதானே இருக்கிறார்…. இனி நல்லூரானே சன்னதியானே எண்டு கும்பிடுங்கோ….” கோபால் மெல்லச் சொன்னான். ரயில் கூவியது. 

‘இனித்தான் இருக்குது, பயணம்….” 

-மீண்டும் அந்த அறிந்திராப் புதுக்குரல். 

இவ்வளவு அவதிப்பட்டு வெளிக்கிட்டிருக்கத் தேவையில்லை என்றும் கிருஷ்ணனுக்குப்பட்டது. 

– சமர், செப்டம்பர் 1981.

– முளைகள் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: பிப்ரவரி 1982, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *