மனப்பித்து





(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கைலாசத்தின் உடம்பில் ஒரு சிலிர்ப்பு. அவன் கண்கள் தெடுகிலும் புரண்டு, எதிர் மூலையில் பார்வை பதிந்து நின்றன.
அப்போது அவன் ரயிலில் போய்க் கொண்டிருந்தான். வண்டியின் ஒரு மூலையில், சன்னலோரத்தில் வசதியாக இடம் கிடைத்திருந்தது.
மழைக்கால மாலைப்பொழுது. இரவு இறங்கி வரும் சமயம். மழை இல்லை. கருங்கும் என இருள் பரவியிருக்க. வில்லை. எனினும் ஒளி அதிகம் இல்லை.
அச்சம் எழுப்பக்கூடிய சூழ்நிலைதான். மலைகளும் காடு களும் மண்டிய இடம். பாம்பு மாதிரி, இருப்புப் பாதை நெளிந்து வளைந்து செல்கிறது. அங்கே ஒரு சிறு ஸ்டேஷன். அதிலும் ஆட்கள் காத்திருந்து ரயிலில் ஏறத்தான் செய்தார்கள். அந்த வட்டாரத்தில் பலரகமான உழைப்பிலும் ஈடுபடுகிறவர்கள்.
அந்த வண்டியிலும் சிலர் ஏறினார்கள். பெண்கள். உடலிலோ உடையிலோ நாகரிகத்தின் சின்னங்கள் படியாதவர்கள். உழைப்பாளிகள். இளம் வயசு.
அவர்கள் அவசரம் அவசரமாக ஏறினார்கள். உட்கார டமில்லை. ஆகவே, அங்கேயே கதவருகில் நின்றார்கள்.
மூலையில் வசதியாக அமர்ந்திருந்த கைலாசத்தின் பார்வை அவர்களைத் தொட்டது. கதவோரத்தில் நின்ற ஒருத்தி மீது தேங்கியது.
தேக்கங்கட்டையில் செதுக்கி உருவாக்கி கடைசல் பிடித்து மினுமினுப்பு ஏற்றப்பட்ட சிலை மாதிரி இருந்தாள். சலவை கண்டிராத-அழுக்கு முட்டிப் போன – உளுத்தங்களி நிறச் சீலை. பச்சை ரவிக்கை. உருண்டு திரண்டிருந்த உடலின் எடுப்பைக் கவர்ச்சிகரமாக மூடிக் காட்டிய திரை அது. அலட்சியமாகத் தலைமுடி அள்ளிச் செருகப்பட்டிருந்தது.
அவள் நின்று அப்படியும் இப்படியும் பார்த்தாள். வண்டிக்குள்ளே. வெளியே. கதவின் சன்னலில் சாய்ந்து, உடம்பை வளைத்து, தலையை வெளியே நீட்டி நோக்கினாள். அப்போது அவள் உடல் பகுதிகள் அருமையான காட்சிகள் ஆயின. நிமிர்ந்து நின்று பார்க்கையில் அவள் முகமும் வசீகரமாகத்தான் இருந்தது.
அவள் கண்களில் ஒரு தனிக் கவர்ச்சி. அகன்ற, பெரிய மதமதர்த்த விழிகள். குறுகுறுக்கும் பார்வை, வலைவீசும் மாயா விழிகள். கவ்விப் பற்றும் உணர்ச்சிக் கண்கள். வெற்றிலை சுவைத்திருந்த உதடுகள் ரத்தச் செந்நிறம் காட்டின களையான முகத்தில் இவை எடுப்பாக விளங்கின.
இருட்டு கவியாத, எனினும் ஒளி அதிகம் பெற்றிராத, அந்த அந்தி வேளையில், அந்தச் சூழலில், அம்முகம் மோகினித் தன்மை பெற்றதாய் – மனித வடிவுக்கு அப்பாற்பட்ட ஒரு வனப்பு ஏற்ற மாயத் தோற்றமாய் – இலங்கியது.
அவளையே பார்க்க வேண்டும் என்ற உள்ளத் துடிப்பு அவனுக்கு. அவன் அப்படிப் பார்த்ததைப் பார்த்த அவள் முறுவல் விளையாடும் முகத்தோடு, ஜீவதாபம் ஊறும் கண் களால் அவனை உற்று நோக்கினாள்.
அப்போதுதான் அவன் உடல் சிலிர்த்தது. உள்ளத்தில் ஒரு உதைப்பு. இவள் பெண் அல்ல; அமானுஷ்யக் கதைகளில் படித்திருப்பது போல் – பாட்டிமார்கள் சொன்ன நாட்டுப்புறக் கதைகளில் வருவது போல – ஒரு பேயாக, பெண் வடிவத்தில் நடமாடும் கொடிய சக்தியாக இருக்கும் என்றொரு நினைப்பு அவனுள் கிளர்ந்தது.
இருளும் ஒளியும் முயங்கும்போது, குறுகுறு பார்வையோடு உற்று நோக்கிய அவள் விழிகளில் ஒரு அமானுஷ்ய மினுமினுப்பு சுடரிடுவதாக அவனுக்குப்பட்டது. அந்த எண்ணம் மன அரிப்பு உண்டாக்கியது. அவன் உடலில் அச்சம் ஊர்ந்தது. அவன் உள்ளத்தில் இருண்ட நிழல்கள் ஆடின. நிச்சயமான எதிர்காலச் சாயைகள்.
ரயில் ஓடி ஓடி,பெரிய ஜங்ஷனை அடைகிறது. அவன் இறங்கி நடக்கிறான். அவன் பின்னால் அவளும் தொடர்கிறாள். அவ்வப்போது பொல்லாத பார்வை பார்த்துக் கொண்டு, கிளுக்குச் சிரிப்பு சிந்தியவாறு.
அந்த ரஸ்தாவில் இருள் மண்டிய பகுதிகள், காரிருள் கப்பிய பெருமரத்து அடிகள், நிறைய உண்டு. அது போன்ற ஒரு இருட்டுப் பந்தலில், அவள் தன் சக்தியை காட்டுகிறாள். அவன் ரத்தம் கக்கிச் செத்து விழுகிறான்…
கைலாசம் இவற்றை எல்லாம் தெளிவாகக் காண்கிறான். மூக்கிலும் ரத்தம் வழிய, விழிகள் பயத்தினால் பிதுங்கி நிற்க, அவன் கோரப் பிணமாய் கோணிக் கிடப்பதை அவனே நன்றாகப் பார்க்கிறான். அவன் உடலில் ஒரு விதிர் விதிர்ப்பு. வேர்வை பொடித்து நிற்கிறது. பயம் அவனை ஆட் கொள்கிறது. தத்ரூபமான அந்த தரிசனத்தினால் உலுக்கப் பெற்று அலறிவிடக் கூடியவன்தான். நல்ல வேளை. அப்படி நடக்க வில்லை!
வண்டியில் விளக்குகள் மங்கல் ஒலி காட்டி சிரிக்கலாயின. வண்டித்தொடர் இடைவழி ஸ்டேஷன் ஒன்றில் நின்றது. அவளும் அவளைச் சேர்ந்தவர்களும் இறங்கிப் போய்விட்டாகள்.
என்றாலும், கைலாசத்தின் மனம் ஜங்ஷன் ஸ்டேஷனுக் கும் நாகரிக நகரத்துக்கும் இடைப்பட்ட இருள் செறிந்த சாலையில் மோகினிப் பேயால் ‘அடிக்கப்பட்டு ரத்தம் கக்கிச் செத்துக் கிடந்த அவனைப் படம் பிடித்துக் காட்டி பதைத்தது வெகு நேரம் வரை.
‘சீ, என்ன கோளாறு இது’ என்று அவன் அலுத்துக் கொண்டான். நிமிர்ந்து உட்கார்ந்து, வெளியே பார்வை வீசினான்.
எங்கும் இருட்டு இப்போது கறுப்பைக் கொட்டி வைத்திருந்தது. வானத்தில் நட்சத்திரங்களே இல்லை. மலைப் பகுதிகள் எப்பவோ போய்விட்டன. அச்சமூட்டும் சூழ்நிலையில் ரயில்வண்டி ஓடிக் கொண்டிருக்கவில்லை என்பது அவனுக்குத் தெரியும். என்றாலும் அவன் மனஅரிப்பு நீங்கிவிட வில்லை.
கைலாசம் ‘பயந்தாங்குளி’யாக வளர்ந்தவன் இல்லை. இரவு நேரங்களில் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் சுற்றித் திரிந்திருக்கிறான். ஒரு சமயம் ராத்திரி வேளையில் சுடு காட்டுப் பக்கம் போய் ஒரு மணி நேரம் தங்கி விட்டு வந்தவன் தான். பந்தயத்தில் வெற்றி பெறுவதற்காக. அது நிகழ்ந்தது அவனது இருபதாவது வயதில்.
பதினெட்டாவது வயசில் ஒரு பந்தயத்தில் ஈடுபட்டு வென்றவன்தான் அவன். அவனிருந்த ஊருக்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் ‘மூலைக்கரை இசக்கி அம்மன்’ கோவில் இருந்தது, மூர்க்கமான தெய்வம் என்று அந்த வட்டாரத்தில் பிரசித்தம். ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு குளத்தங்கரை மூலையில் அது இருந்தது. முன்னே நன்கு ஓங்கி அடர்ந்து பரந்து வளர்ந்த பெரிய ஆலமரங்கள் இரண்டு நின்றன. பந்தல் அமைத்தது போல் கவிந்து நிற்கும் அம்மரங்களின் கீழே பகல் நேரத்தில்கூட நிழல் இருண்டு கிடக்கும். இரவின் இருட்டில் அங்கு கருங்கும் என்றிருக்கும். பயங்கரமான தனிமை. சாதாரண ஜனங்கள் இரவு வேளையில் அந்த இடத்துக்குப் போக மாட்டார்கள். பயம்தான் காரணம்- அங்கே போய், ஒரு ஆலமரத்தில் ஆணி அறைந்து வைத்து விட்டு வரவேண்டும்; ஆடி அமாவாசை இரவில் என்று ஒரு பந்தயம். ஐந்து ரூபாய் தரப்படும் என்று அறிவிப்பு. கைலாசம் துணிந்து செயல் புரிந்தான். ஆடி அமாவாசை நேரத்துக் கன்னங் கனிந்த கருக்கிருட்டும் ஓவ்ஓவ் என்று பெருங்கூச்சலிட்டவாறு சுழன்று வீசிய காற்றும், தனிமையும் அவனைக் கலவரப்படுத்தவில்லை, பயங்கரக் கதைகள் பல வற்றின் பிறப்பிடமாக வீற்றிருந்த மூலைக்கரை இசக்கியின் முன்னே நிதானமாக நின்று – ஒரு மரத்தில் மட்டுமல்ல – இரண்டு மரங்களிலும் ஆணி அடித்துவிட்டு, அஹஹ்ஹா என்று கனத்த குரல் எழுப்பி அட்டகாசமாய் சிரித்தான் அவன். பேய் அலறியது என்றும், நள்ளிருளில் இசக்கி கோரக் குரல் எழுப்பினாள் என்றும் பயந்து வெலவெலத்துப் போயிருப்பார்கள், யாராவது அதைச் செவிமடுத்திருந்தால்!
இப்படி அவன் வாழ்க்கையில் எத்தனையோ வீரப்பிர தாபங்கள்! ‘ஓடுகிற பாம்பையும் மிதிக்கிற வயசு’ என்று இளமை குறித்துச் சொல்லப்படுவது அவனுக்கு மிகுதியும் பொருத்தமாகவே இருந்தது. வேணுமென்றே பாம்பைப் பிடித்து ஓடவிட்டு காலால் ஓங்கி மிதித்துக் களிக்கும் இயல்பு பெற்றிருந்தான் அவன்.
ஆனால், அவை எல்லாம் ‘முன்னொரு காலத்தில்’ என்று மதிப்பிடப்பட வேண்டிய விஷயங்கள் ஆக அல்லவா போய்விட்டன.
இப்போது அவனுக்கு வயசு ஒன்றும் அதிகம் ஆகிவிட் வில்லை. இருபத்தாறோ என்னவோதான். உடல் முறுக்காகத் தானிருந்தது. எனினும் அவன் உள்ளத்தில்தான் பெரும் மாறுதல். பயம் எனும் உணர்வு அங்கே ஒரு மூலையில் குடிபுகுந்து விட்டது. இருட்டு அவனைக் கலக்கமுற வைக்கும் பகை ஆயிற்று. இரவு நேரங்களில் அவனைப் பாடாய்ப்படுத்தி அலைக்கழியச் செய்யும் போதுகள் ஆகி விட்டன.
இதற்கு ஒரு ராத்திரியில் நிகழ்ந்த ஒரு சம்பவமே காரணமாகும். தற்செயலான ஒரு விபத்து அது.
கைலாசம் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தான் வீட்டின் மத்தி அறையில் பழங்காலத்து வீடு அது, உள்ளூறப் பழுதுபட்டிருக்க வேண்டும். அதை யாரும் கவனிக்கவில்லை, நடு ராத்திரியில் திடும் என்றொரு ஓசை எழுந்தது. அந்த வீட்டில் அவனும் அவன் தாயும் மட்டுமே. அம்மா உடல் பதறி எழுந்தாள். அடுத்த வீட்டிலிருந்தும் இரண்டொருவர் பதைபதைப்புடன் வந்து கதவைத் தட்டினார்கள். விளக் கேற்றப்பட்டது. எலெக்ட்ரிக் லைட் அல்ல. சாதாரண மண்எண்ணெய் விளக்குதான்.
கைலாசம் எழுந்து உட்கார்ந்தான். அவன் உடல் பதறித் துடித்துக் கொண்டிருந்தது. அவன் நெற்றியில் வேர்வை. உடம்பிலும் வேர்வை பெருக்கெடுத்தோடியது. அவள் படுத்துக் கிடந்த இடத்தருகே- அவனது தலைக்கு ஒரு அடி தள்ளி பெரிய கட்டியான செங்கல்லும் சுண் ணாம்பும் உயரே இருந்து பெயர்ந்து விழுந்து கிடந்தது. அதிலிருந்து சிதறிய துண்டு துகள்கள் நெடுகத் தெறித்துக் கிடந்தன. அவன்மேலும் ஒரு சிறு துண்டுபட்டிருக்கக் கூடும். ஆழ்துயிலின்போது பயங்கர ஓசையுடன் தலை மாட்டின் மிக அருகே இருட்டில் பெரும் கட்டி விழுந்ததனால் தூக்கம் கெட்ட அதிர்ச்சி; மேலே படீரென ஒரு சிறு கட்டி பட்டுத்தெறித்தது; பிறகு அந்த விபத்தின் பயங்கரத்தை வெளிச்சத்தில் பார்த்தது; பார்த்தவர்களின் பேச்சு எல்லா மாய் சேர்ந்து அவன் மனசை அதிரடித்து விட்டன.
‘அம்மா, என் பிள்ளை ஒரு ஆசை பிழைச்சசுது! அந்தக் கட்டி கொஞ்சம் விலகி அவன் தலைக்கு நேரே விழுந்திருந் தால் அவன் கதி என்னாகியிருக்கும்?’ என்று துடித்து அவன் தாய் அவனைக் கட்டிப் பிடித்துக் கதறினாள். உடம்பில் எங்காவது அடிபடவில்லையே என்று அன்புடன் தடவிக் கொடுத்தாள்.
“என்னமா வேர்த்துக் கொட்டுது!” என்று சீலை முந்தியால் துடைத்து விட்டாள். மற்றவர்களும் அதையே தான் சொன்னார்கள். அவன் உள்ளத்திலும் அந்த எண்ணம் சிலிர்த்தது. அதனால் அவன் உடல் நடுங்கிக் கொடுத்தது.
அன்று முதல் இருட்டும் இரவும் அவனை வெகுவாக பாதித்தன.
தூங்கிக் கொண்டிருப்பான். திடீரென்று ஊமை அலறலாக அலறிக் கொண்டு விழித்தெழுவான். அவன் உடல் நடுங்கியவாறிருக்கும். அவன் பார்வை வெறும் வெளியில் குத்திட்டு நிற்கும். அம்மா பதறி எழுந்து, அவன் அருகில் வந்து, “என்ன, என்னடா கண்ணா? என்று பரிவுடன் விசாரிப்பாள். நெற்றியில் கைவைத்துப் பார்ப்பாள். முதுகைத் தடவுவாள். ‘ஒண்ணுமில்லே.. ஒண்ணுமில்லையம்மா. நீ படுத்துக்கோ’ என்பான். அவனுக்குத் தெளிவாகப் புரியாது, நாம் ஏன் இப்படி அலறியபடி திடுக்கிட்டு எழுந்தோம் என்று. உள்மனம் ஏதோ பய அரிப்பை ஊர்ந்து புரளும்படி செய்திருக்கும். அச்சத்தின் கரங்கள் கனவு அலைகளாக அவனைப் பற்றி உலுக்கியிருக்கும், ஏதாவது பிரக்ஞையில் நின்றால் அல்லவோ பிறருக்கு எடுத்துரைக்க இயலும்?
வீட்டின் மேல் பகுதி இடிந்து விழுவதாக உள்ளுணர்வு குறுகுறுத்திருக்கும். சுவர் சரிந்து சாய்வதாக ஒரு கனவு வந்திருக்கும். தேக நடுக்கத்துடன் எழுந்து உட்கார்ந்து கவனிக்கிற போது எல்லாம் பைத்தியக்கார நினைப்பு என்று படும்.
அந்த வீட்டை அவர்கள் காலி செய்து விட்டார்கள். மற்றொரு வீடு. பழசுதான். இரவுகளில் அவனுக்கு தூக்கம் விரைவில் வராது. அல்லது நடுத் தூக்கத்தில் விழிப்பு வந்து விடும். அப்போது, விதம் விதமான ஓசைகள் கட்டிடத்தினுள் எழும். உத்திரம் இற்று விழுகிறது; தன்னை நசுக்கிவிடும் என்று அவன் மனம் பதறும். பழங்காலத்துக் கட்டிடங்களில் சுவர்களும் கட்டைகளும் மூச்சுவிடும்; அதனால் இரவில் விசித்திர ஒலிகள் எழுவது உண்டு என்று ஒரு பெரியவர் ஒரு சமயம் விளக்கம் கூறினார். ஆயினும் அவன் மனம் அமைதி அடையவில்லை.
அறையினுள் படுப்பது அச்சம் தருவதாகி விட்டது அவனுக்கு. எனவே, திண்ணையில், முற்றத்தில் திறந்த வெளியில் படுத்துறங்க முயன்றான்.
எங்கு படுத்தாலும் அவனை நிம்மதியாகத் தூங்கும். படி அவன் மனம் விட்டு வைப்பதில்லை. தூக்கம் கண்ணைச் சொருகும். அவ்வேளையில், அது என்ன? அதோ அந்த மூலையில்? மினுமினுவென்று சுருண்டு சுருண்டு … பாம்பு தானோ? பாம்பேதான்… அவன் தேகம் நடுங்கும். அது ஊர்ந்து வருகிறது. அவனைக் கடிக்கிறது. அவன் வாயால் நுரை கக்கி, அவஸ்தைப்பட்டுச் சாகிறான்! இப்படி ஏதேதோ சித்திரங்களைத் தீட்டி அவன் மனமே அவனை வதை செய்யும்.
பூத பிரேத பைசாசங்கள் சம்பந்தமான கதைகளைப் படிப் பதில் முன்பெல்லாம் அவனுக்கு ஆர்வம் அதிகமிருந்தது. வீடு மாற்றிய பிறகு அவனுக்கு ஒரு புத்தகம் கிடைத்தது ‘டிரேகுலா’ பிணம் எழுந்து நடமாடித் திரிவது. ரத்தக் காட் டேரி விஷயம். விறுவிறுப்பாக, அதீதமான, அபூதமான விஷயங்கள் எல்லாம் கலந்து, திறமையாக எழுதப்பட்டுள்ள கதை.
கைலாசம் அதை ஆர்வத்தோடு படித்தான். சாயங் காலம் வெளியே போகாமல்,புத்தகத்தைப் படித்து முடிக்க வேண்டும் என்ற வேகத்தோடு படித்தான். இருட்டிவிட்டது. அன்று அவன் அம்மாவும் இல்லை. உறவினர் வீடு சென் றிருந்தாள். மறுநாள்தான் வருவாள். அதை முடித்துவிட் டுத்தான் ஓட்டலுக்குப் போவது என்றிருந்தவன், முடிவில் கடியாரத்தைப் பார்க்கையில் மணி எட்டரை என்றறிந்தான். வெளியே வந்தான்.
இருட்டு கருப்பு வெல்வெட் படுதாவாய் எங்கும் தொங் கியது. அந்த வட்டாரத்தில் நல்ல ஓட்டல் கிடையாது. சுமார் ஒரு மைல் தூரம் போயாக வேண்டும். கிளம்பினான். ரஸ்தாவில் ஏதோ கோளாறினால் மின்சார விளக்குகள் எரிய வில்லை. அவன் நடந்தான். போகப் போக அவனுள் அர்த்த மற்ற, அவசியமுமற்ற, ஒரு குழப்பம் எழுந்தது. இனம் தெரியாத அக்கலவரம் வளர்ந்து கனத்து வலுத்தது. தன்னை எதுவோ ஒன்று தொடர்வது போன்ற பிரமை. தோள் மீது ஈரம் போல் சில்லிடும் ஒரு கரம் படிவதாக ஒரு உணர்வு. கன்னத்தில் குளிர்ச்சியான சுவாசம் பட்டதுபோல் கழுத்தில் கூரிய இரு நகங்கள் – அல்லது, பழந்தின்னி வௌ வாலின் கூரிய பற்கள்தானோ?- குத்துவது போல் ஒரு சுரீர் சுற்றிலும் இருளைத் தவிர எதுவும் இல்லை. அவன் உடல் நடுக்கம் கண்டது. உள்ளத்தில் பதைபதைப்பு. தனியே அவ் வளவு தூரம் ஓட்டலைத் தேடி நடந்து உணவு உண்டு விட் டுத் திரும்பி வருவது சாத்தியமல்ல – மிகுதியும் அச்சம் புகுத் தக் கூடிய அனுபவமாக அது அமையும்-என்று உள்ளு ணர்வு அவனை எச்சரித்தது. வேகமாய் வீடு திரும்பினான். ஓடாத குறைதான். அத்தனை வேகம். பின்னால் தன் கால டியிலேயே எதுவோ தன்னைத் தொடர்வது போல… சர்ர்… சரக்… அதோ, விட்டுவிட்டு… சரட்சர்ர்… அவன் மனம் அரித்துக்கொண்டேயிருந்தது. வேர்வை பொங்கி வழிந்தது. எப்படியோ வீடு வந்து சேர்ந்தான்.
அறைக்குள்ளேயே படுத்தான். மனக்குறுகுறுப்பு. பசி வேறு. தூக்கம் வரவேயில்லை தீக்கங்குகள் போல் ஜொலிக் கும் விழிகள் அவனையே உறுத்துப் பார்க்கின்றன. ரத்தக் காட்டேறி வௌவால் மாதிரி ஜன்னல் வழியே வந்து சிற கடித்துச் சுற்றுகிறது. அதன் குளிர்ந்த காற்று அவன் மூஞ்சியில் படுகிறதே!.. கிறக்கம் கண்களை அயரச் செய்யும். அவ்வேளையில் ஒரு பிணம் கோரமாய்ப் பல்லைக் காட்டிக் கொண்டு அவனைத் தொடுகிறது. அவன் உடல் திருகி முறுகிக் கோணலாகிறது. வாயிலிருந்து ரத்தம். அவனும் பிணமாகிவிடுகிறான்… இப்படி தத்ரூபமாய் கண்டு அவன் பதறி எழுகிறான். ஒன்றும் செய்ய ஓடாதவனாய் உட் கார்ந்து விடுகிறான்.
இதுவே அவனுக்கு ஒரு வியாதி ஆகிவிட்டது. மன நோய்.
பகல் நேரங்களில் இயல்பாக நடந்து கொள்வான்? இருட்டு வேளையில்தான் அவன் மனம் பித்துற்று அவனை வதை செய்யும்.
-ரஸ்தாவில் நடக்கையில், வேகமாக வரும் கார் அல் லது பஸ் அவன் மேலே ஏறி, அவனை நசுக்கி ஓடும். அவன் மண்டை சிதைந்து, ரத்தம் திட்டு திட்டாகச் சிதறிக் கிடக்க… அம்மா, என்ன கோரக் காட்சி!
பஸ் வரவு நோக்கி, நடைமேடை மீது அவன் நிற் கிறான், எமன் மாதிரி ஒரு லாரி வருகிறது. கண், மண் தெரியாமல் ஓட்டப்படுகிற அது பாதையிலிருந்து விலகி, ஓரத்து மேடை மீதேறி, இரண்டு மூன்று பேரை ‘சட்னி’ ஆக்குகிறது. அவனையும் கீழே தள்ளி துவையலாக்கி விடுகிறது. தாறுமாறாக நசுங்கிக் கிடக்கும் அவன்… சே, எவ்வளவு பயங்கரம்!
இப்படி விபரீதமான எண்ண வலை பரப்பி, அதில் தானே சிக்கி, இடறி விழுந்து, திணறித் தவிக்கும் அவன் மனம். அதன் போக்கை அவனால் தடுக்க இயலவில்லை. மாற்றி அமைத்துப் பழைய தெம்பைப் பெறவும் முடிய வில்லை.
இப்போது ரயிலில், சௌகரியமான மூலையில் அமர்ந்து சுகமாகப் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் கைலாசம் வேக ஓட்டம் வண்டியின் அசைவுகளினால் தாலாட்டப் பெற்று, கண்களை மூடியிருந்தான். தூக்கக் கிறக்கம். வண்டி ஓடுகிற கடகட சத்தம் இசைத்துக் கொண்டேயிருந்தது.
ஒரே சீராக எழுந்த ஒலிகள் திடுமென பேதப்பட்டு கோர ஓசைகளாய் அலறுகின்றன. மென்மையான வண்டி அசைவுகள் உலுக்கலாகவும் மோதலாகவும் மாறின. பெஞ்சு, களில் அமர்ந்து தூக்கத்தினால் ‘சாமி ஆடிக்கொண்டிருந்த ஆட்கள் குலுக்கித் தள்ளப்படுகிறார்கள். ஒருவர் மீது ஒரு வர் மோதி இடித்துக் கொண்டு, ஒருவரை மற்றவர் நசுக்கி, என்ன ஏது என்று புரியாவிடினும் ஏதோ ஆபத்து என உணர்ந்தவர்களாய், தப்பிப் பிழைக்க வேண்டும்- தானே முந்தித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேணும் – எனும் உயிராசை உந்தித் தள்ள, வெறித்தனமாய்ப் போராடிச் சமட்டிக் கொண்டு, அப்படியும் முடியாதவர்களாய் மொத்த மாய் அடித்துப் புரண்டு விழுகிறார்கள். வண்டி விழுகிறது. வண்டித் தொடரின் இரண்டு மூன்று பெட்டிகள் விழுந்து, தொறுங்கி… பயங்கர ஓசைகள். மனித ஓலங்கள். விபத்துக் கால வேதனைக் கூச்சல்கள்… கைலாசமும் பெஞ்சிலிருந்து விழுந்து பிறரால் மிதித்துத் துவைக்கப்பட்டு, மேலே பாரமான பெட்டியோ எதுவோ விழுந்து நசுக்க பரிதாபகரமாகச் சாகி றான். ரத்தம் கக்கியவாறு, கூச்சல் போட முடியாமல் செத்துப் போகிறான்…
கைலாசம் பதறியடித்து விழித்து, தன் இடத்தில் நிமிர்ந்து உட்காருகிறான். வேர்வை அவன் உடல் பூராவும் பெருகி ஆறாக ஓடுகிறது. திருதிரு என்று விழித்தபடி அங்குமிங்கும் பார்க்கிறான். தன்னை மீறிக் கதறி இருப்பானோ? எதிரிலும் அருகிலும் உள்ளவர்கள் அவனை ஒரு மாதிரிப் பார்பானேன்? அவர்கள் கேள்வி கேட்டுத் தொண தொணப்பார்களே! சனியன்!
வண்டி பெரிய ஸ்டேஷனை அணுகிக் கொண்டிருந்தத. னால், தண்டவாளம் விட்டுத் தண்டவாளம் மாறியதால், தட தடா கடகடா என்று பேரோசைகள் விதம் விதமாக எழுந்து கொண்டிருந்தன. ‘ஜங்ஷன் வருது. எழுந்திரு இங்கே இறங்கணும்’ என்று, முடிவை நெருங்கிவிட்ட பயணிகள் பரபரப்புக் காட்டிக்கொண்டிருந்தார்கள்.
கைலாசம் இறங்க வேண்டிய இடமும் அதுதான்.
அவன் மனம் இன்னும் அமைதி அடையவில்லை. அவனது உடல் படபடப்பும் தணியவில்லை. சன்னல் வழியாகப் பளிச்சிட்ட ஸ்டேஷனின் வெளிச்சமயமான சுற்றுப்புறத்தை வெறித்து நோக்கியபடியே உட்கார்ந்திருந்தான் அவன்.
– தீபம், ஏப்ரல் 1971.
– 1960 முதல் 1991 முடிய, வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, வெவ்வேறு பத்திரிகைகளில் பிரசுரம் பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
– வல்லிக்கண்ணன் கதைகள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.