மந்திரத் தொப்பி
(பெல்ஜியம் நாட்டுப்புறக் கதை)

ஜேன் எனப்படும் அந்த நாட்டுப்புறத்தானுக்கு, பிறந்தபோது இருந்ததைத் தவிர கூடுதலான அறிவு எதுவும் இல்லை என்று அந்த ஊரார் சொல்வார்கள். சிறார்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட அவரை விட புத்தி அதிகமாக இருக்கும்.
ஒரு நாள் ஜேனின் மனைவி அவரிடம் கன்றுக்குட்டியைக் கொடுத்து, “100 யூரோவுக்குக் குறையாமல் இந்தக் கன்றுக்குட்டியை சந்தையில் விற்று வா!” என்று அனுப்பினாள்.
அந்த இளவேனில் காலைப் பொழுது அவருக்கு மகிழ்ச்சி தரவே, ஒரு பாடலை முணுமுணுத்தபடி உற்சாகமான மனநிலையோடு கன்றுக்குட்டியின் கயிறைப் பிடித்து சென்றுகொண்டிருந்தார். அப்போது ஓர் உணவகத்தில் அமர்ந்திருந்த மூன்று மாணவர்கள் அவரைக் கண்டதும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து ஜாடை காட்டிக்கொண்டனர்.
அவரை முட்டாள் ஆக்கி விளையாட விரும்பிய அவர்கள், “உங்களுடைய ஆட்டுக்கு என்ன விலை சொல்கிறீர்கள்?” என்று கேட்டனர்.
அந்த அப்புராணி நாட்டுப்புற விவசாயி வியப்படைந்தார். “படிக்கிற பிள்ளைகளுக்கு ஆடு எது, கன்றுக்குட்டி எது என்றே தெரியவில்லை! உங்களுக்கெல்லாம் பள்ளிக்கூடத்தில் என்னதான் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்களோ! நீங்களும் எதைத்தான் படிக்கிறீர்களோ! இது ஆடல்ல தம்பிகளா! கன்றுக்குட்டி!”
மாணவர்கள் அமைதியாக, “யார் உங்களிடம் அப்படிச் சொன்னது?”
“என்னுடைய மனைவிதான்! அவள்தான் இந்தக் கன்றுக்குட்டியை சந்தைக்குக் கொண்டு சென்று விற்று வருமாறு சொன்னாள்.”
“அவர் உங்களிடம் விளையாடியிருக்கிறார். பார்க்கிற அனைவருக்குமே தெரியும், இது ஒரு ஆடு என்று. நீங்கள் எங்களை நம்பாவிட்டால் அடுத்து நீங்கள் சாலையில் சந்திக்கக் கூடிய மனிதர்களிடம் கேட்டுப் பாருங்கள்!”
சந்தேகத்துடன் தலையைச் சொரிந்தபடி நகர்ந்தார். மாணவர்கள் அவருக்குப் பின்னால் சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டனர்.
ஜேன் தொடர்ந்து நடந்தார். அவரது சிறிய மூளைக்குள் சிறிய தொந்தரவு ஏற்பட்டிருந்தது.
அப்போது எதிரே மீண்டும் ஒரு மாணவன். அவனை நிறுத்தி, “இந்த விலங்கு என்ன என்று பார்த்துச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.
“ஏன் முடியாது? இது ஓர் ஆடு!”
“இல்லை, நீ சொல்வது தவறு. இது கன்றுக்குட்டி. என் மனைவி அப்படித்தான் சொன்னாள். அவள் தவறு செய்யமாட்டாள்.”
“அப்படிச் சொல்லி சந்தையில் விற்பதற்கு முயற்சிக்காதீர்கள்! உங்களைப் பைத்தியம் என்று சொல்லிவிடுவார்கள்!”
ஜேன் முணுமுணுத்தபடி தன் வழியில் சென்றுகொண்டிருந்தார். கன்றுக்குட்டி அமைதியாக அவர் பின்னே வந்துகொண்டிருந்தது.
அப்போது அவருக்காக சாலையின் எதிர்ப்புறத்தில் காத்திருந்த ஒரு மாணவன் அவரை அழைத்து, “உங்களுடைய ஆட்டுக்கு என்ன விலை சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டான்.
“சொல்லி வைத்த மாதிரி எல்லா மாணவர்களும் ஒரே போலத்தான் இருக்கிறீர்கள்! இது ஆடல்ல; கன்றுக்குட்டி!”
“நீங்கள் அதை சிங்கக் குட்டி என்று வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், ஆடு – ஆடாகத்தானே இருக்கும்!”
“இது ஆடு என்பது உண்மையானால் ஒரு பென்னி போலும் வாங்காமல் இலவசமாகவே உங்களுக்குத் தருவேன்!” எரிச்சலோடு சொல்லிவிட்டு சந்தைக்குச் செல்லாமல் வீடு திரும்பினார்.
நடந்த சம்பவத்தை அறிந்த மனைவி ஆத்திரம் அடைந்து, “நீ ஒரு முட்டாள் என்பது சரியாகத்தான் இருக்கிறது. அந்தச் சிறுவர்கள் சொன்னதைக் கேட்டு சந்தைக்குச் செல்லாமல் திரும்பி வந்திருக்கிறாயே!” என்று வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லித் திட்டினாள். அவர் அவமானத்தால் தனது முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டார்.
அவளது கோபம் அதிக நேரம் நீடிக்கவில்லை. வாஸ்தவத்தில் அவள் நல்ல பெண்மணி. தனது கணவரின் புத்திக் குறைவு அவரது தவறல்ல, பிறவிக் குறைபாடு என்பது அவளுக்குத் தெரியும். அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவருக்கும் சேர்ந்து, போதுமான அளவுக்கு அவளுக்கு புத்திக் கூர்மை இருந்தது. எனவே, கணவரைத் திட்டுவதில் நேரத்தை விரயமாக்காமல் அவரை முட்டாளாக்கிப் பிழைப்பைக் கெடுத்து, மன உளைச்சலையும் கொடுத்த அந்த மாணவர்களுக்கு எப்படிப் பாடம் புகட்டலாம் என்பது பற்றி சிந்தித்தாள்.
திட்டமிட அதிக நேரம் பிடிக்கவில்லை. அவள் தனது கணவரிடம் அதை மிகத் தெளிவாக கூறி, அவர் என்னென்ன செய்ய வேண்டும், எப்படியெப்படிப் பேச வேண்டும் என்பதைத் துல்லியமாக விளக்கிச் சொன்னாள்.
சுய புத்தி இல்லாவிட்டாலும் சொல் புத்தி உடைய ஜேன் அதை ஒரு முறைக்கு இரு முறை நன்றாகக் கேட்டு மனதில் பதிய வைத்துக்கொண்டார்.
அடுத்த சந்தை நாளில் அதே சாலை வழியே நடந்து சென்றார். அவரைக் கண்டதும் மூன்று மாணவர்களும் குஷியாகி, ஒருவருக்கொருவர் புன்னகைத்துக் கொண்டனர். அவர்களில் ஒருவன் அவரைப் பார்த்து, “இன்று நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களிடம் ஆட்டைக் காணோமே!” என்று கேட்டான்.
“கடந்த வாரம் நீங்கள் என்னிடம் நல்ல வேடிக்கை செய்துவிட்டீர்கள்! பரவாயில்லை! சிறு வயதில் மாணவர்கள் இப்படியெல்லாம் வேடிக்கை செய்வது வழக்கம்தான். அதை நான் பொருட்படுத்தவில்லை” என்ற அவர், “இன்று நான் சந்தைக்கு செல்லவில்லை. எனக்கு ஓய்வு நாள்தான். ஒயின் அருந்தச் சென்றுகொண்டிருக்கிறேன். போதுமான அளவுக்கு என்னிடம் பணம் இருக்கிறது. நீங்களும் வருவதாக இருந்தால் வாருங்களேன்! நான் உங்களுக்கு ட்ரீட் கொடுக்கிறேன்!” என்றார்.
உற்சாகமடைந்த மாணவர்கள் அவரோடு சென்றனர்.
குடிச் சாலை. நால்வருக்கும் ஒயின் ஆர்டர் செய்யப்பட்டது. மாணவர்கள் குடித்துக் குதூகலித்தார்கள்.
பணத்தைச் செலுத்த வேண்டிய சமயத்தில் ஜேன் பரிசாரகப் பெண்மணியை அழைத்தார். அவள் வந்து நின்றதும் தனது தலையில் இருந்து தொப்பியைக் கழற்றி எடுத்து ஆட்காட்டி விரல் நுனியில் மூன்று முறை சுழற்றிவிட்டு, “நாங்கள் சாப்பிட்ட அனைத்திற்கும் பணம் கொடுத்தாகிவிட்டது அல்லவா?” என்று கேட்டார்.
“ஆமாம் அய்யா! கொடுத்தாகிவிட்டது!”
மூன்று மாணவர்களுக்கும் பெரு வியப்பு. ஆனால் ஜேன் அது ஒரு சாதாரண நிகழ்ச்சி என்பது போல நடந்துகொண்டார்.
“நண்பர்களே! வெறும் வயிற்றில் குடிப்பது தவறு என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். எனவே, நாம் நல்ல உணவகத்திற்குச் சென்று உணவு சாப்பிடலாமா?”
“தாராளமாக!”
அவர் முன்னே செல்ல, மாணவர்கள் பின்தொடர்ந்தனர்.
உணவகத்தில் சிறந்த உணவு வகைகள் ஆர்டர் செய்யப்பட்டன. சாப்பிட்டு முடித்த பிறகு ஜேன் பரிசாரகப் பெண்மணியை அழைத்தார். அவள் அருகே வந்ததும் தனது தொப்பியை எடுத்து விரல் நுனியில் மூன்று முறை சுற்றிவிட்டு, “நாங்கள் சாப்பிட்ட அனைத்திற்கும் பணம் கொடுத்தாகிவிட்டது அல்லவா?” என்று கேட்டார்.
“கொடுத்தாகிவிட்டது ஐயா! தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!”
மூன்று மாணவர்களும் முன்னை விடவும் அதிகமாகத் தமது கண்களை அகல விரித்தனர். அவர்களின் ஆச்சரியத்தைப் பற்றி ஜேன் சற்றும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மாணவர்களுக்கு அது பற்றி அவரிடம் தெரிந்தாக வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக ஏற்பட்டது.
“குடிச் சாலையிலும் உணவகத்திலும் பணம் செலுத்தாமலேயே பணம் செலுத்திவிட்டதாக அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி எப்படிச் செய்தீர்கள்? உங்களது தொப்பியைச் சுழற்றுவதன் மூலம் இதை எப்படிச் செய்ய முடிகிறது?”
“அது எளிமையாக விளக்கக் கூடியதுதான்! என்னுடைய இந்தத் தொப்பி ஒரு மந்திரத் தொப்பி. இது எனது கொள்ளுப் பாட்டி விட்டுச் சென்றது. நான் அவரைப் பார்த்ததில்லை. அவர் ஒரு சூனியக்காரியாக இருந்தார் என்று குடும்பத்தார் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தத் தொப்பியை விரல் நுனியில் வைத்து மூன்று முறை சுழற்றியபடி, ‘அனைத்திற்கும் பணம் கொடுத்தாகிவிட்டது அல்லவா?’ என்று கேட்டால் அனைத்திற்கும் பணம் கொடுக்கப்பட்டுவிடும்.”
“அற்புதமான தொப்பி! இதை நீங்கள் விற்பீர்களா?” மாணவர்கள் ஆவலோடு கேட்டனர்.
“எவ்வளவு பணம் கொடுப்பீர்கள்?”
“200 ஃப்ராங்க்!’
“விளையாடுகிறீர்களா? 200-க்கு இதை விற்றுவிட்டுச் சென்றால் என் மனைவியிடம் வாங்கிக் கட்ட வேண்டியிருக்கும்!”
“அப்படியானால் 300 ஃப்ராங்க்!”
“கட்டாது! என் மனைவி இது பெரும் செல்வத்திற்கு ஈடானது என்று சொல்லி இருக்கிறாள்.”
“400 ஃப்ராங்க்!’
சந்தேகத்திற்குரிய வகையில் தலையை ஆட்டினார்.
அவரது தயக்கத்தைக் கண்ட மாணவர்கள் பேரம் படிவதாக உற்சாகமாகி, “சரி நாங்கள் 500 ஃப்ராங்க் தருகிறோம். அதற்கு மேல் ஒரு பென்னி கூட தர முடியாது. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டவராவீர்கள்!”
“என் மனைவி இதற்கு என்ன சொல்வாள் என்று தெரியவில்லை!”
“நன்றாகப் பேரம் பேசி விற்றதற்காக உங்களைப் பாராட்டுவார்!”
“அப்படியானால் சரி, பணத்தைக் கொடுங்கள்!”
மாணவர்கள் தங்களிடமிருந்து காசுகளை எல்லாம் ஒன்று திரட்டி அவரிடம் 500 ஃப்ராங்க் கொடுத்துவிட்டு தொப்பியை வாங்கிக்கொண்டனர்.
“வேகமாக உங்கள் வீட்டுக்குச் சென்று இந்த நல்ல செய்தியை உங்கள் மனைவியிடம் தெரிவியுங்கள்!” அவரிடம் சொல்லிவிட்டு மூவரும் சிரித்தனர்.
அந்த ஏமாளி நாட்டுப்புறத்தானிடம் குறைந்த விலைக்கு மந்திரத் தொப்பியை வாங்கிவிட்ட உற்சாகத்தோடு சென்றனர்.
அன்று மதியமே அந்த மாணவர்களுக்கு மந்திரத் தொப்பியைப் பயன்படுத்தி நல்ல பலனை அனுபவிக்க ஆசை உண்டாயிற்று. ஐம்பதுக்கு மேற்பட்ட நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து, நகரத்தில் உள்ள சிறந்த உணவகத்தில் பெருவிருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உயர்தர உணவுகளை உண்டும், பானங்களைப் பருகியும் ருசித்து மகிழ்ந்தனர்.
விருந்து முடிந்ததும் தொப்பியை வைத்திருந்த மாணவன் பணம் செலுத்தும் இடத்துக்குச் சென்று, விரல் நுனியில் இடம் வலமாக தொப்பியைச் சுழற்றியபடி, ‘நாங்கள் சாப்பிட்ட அனைத்திற்கும் பணம் கொடுத்தாகிவிட்டதல்லவா?” என்று கேட்டான்.
கல்லாவில் இருந்த உணவக உரிமையாளர், “பணம் கொடுக்கப்பட்டதா? என்ன சொல்கிறீர்கள்? உங்கள் பணம் என்ன நிறம் என்று கூட இதுவரை எனக்குத் தெரியாது!’ என்றார்.
மாணவனின் முகம் மங்கியது.
அருகில் இருந்த தோழன் தொப்பியை அவனிடமிருந்து வாங்கி, “முட்டாள்! தொப்பியை நீ தவறான முறையில் சுழற்றியிருக்கிறாய்! நான் அந்த விவசாயி செய்வதை நன்கு கவனித்தேன். அவர், வலம் இடமாகத்தான் சுழற்றினார்” என்று சொல்லிவிட்டு, வலம் இடமாகச் சுழற்றி, “இப்போது பணம் அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்டது என்று நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என்றான், உரிமையாளரிடம்.
அவருக்கு முகம் கடுத்தது. “நீங்கள் என்னிடம் எதற்காக இப்படி விளையாடுகிறீர்கள், என்ன முயற்சிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால், உங்களுடைய விளையாட்டு இங்கே செய்யக்கூடியது அல்ல. நான் போலீசை அழைப்பதற்கு முன் நீங்கள் பணத்தைச் செலுத்திவிடுவது நல்லது.”
“நான் முயற்சித்துப் பார்க்கிறேன்” என்றபடி மூன்றாவது மாணவன் தொப்பியை வாங்கிச் சுழற்றியபடியே, உணவக உரிமையாளர் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தபடி மேற்கண்ட அதே கேள்வியைக் கேட்டான்.
உரிமையாளர் பொறுமை இழந்து பணியாளர்களை அழைத்தார். மூன்று மாணவர்களிடமும் பணம் இல்லை. விருந்துக்கு வந்த நண்பர்களிடமும் அவ்வளவு பணம் கிடையாது. ஐம்பது பேர் சாப்பிட்ட உயர் ரக உணவு மற்றும் பானங்களின் மொத்தத் தொகை பெருந்தொகை. உணவகத்தார் அதைப் போகட்டும் என்று விட்டுவிட இயலாது.
விருந்து கொடுத்த மாணவர்கள் மூவரும் பணியாளர்களால் பின்புறமாகக் கைகள் கட்டப்பட்டு, உணவகத்துக்கு வெளியே பலரும் காண அழைத்துச் செல்லப்பட்டனர். மக்கள் கூட்டம் வேடிக்கை பார்க்க, போலீஸ் ஜீப்பும் வந்தது.
சில மைல் தூரத்திற்கு அப்பால் தங்களின் சிறிய வீட்டில் ஜேனும் அவரது மனைவியும் அமர்ந்து 500 ஃப்ராங்க் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தனர்.
“அந்தத் தொப்பி என் கொள்ளுப்பாட்டியுடையதும் அல்ல; அவள் சூனியக்காரியும் அல்ல என்பதை அந்த மாணவர்கள் இந்நேரம் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்றார் ஜேன்.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |