மகிழ்ச்சியான நினைவுகளை மறப்பது எப்படி?





“டேய், ரகுபதி. நீ எங்கடா இங்க?”
கோப்பையில் தளும்பிக் கொண்டிருந்த பியரை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த ரகுபதி திரும்பினான். அவனுடைய பழைய நண்பன் பாஸ்கர் முகத்தில் புன்னகை நிரம்ப நின்று கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னே பர்த்டே பார்ட்டிக்கு வந்த கும்பலின் இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது.

“அட, பாஸ்கர். எத்தனை நாளாச்சுடா உன்னைப் பார்த்து!” பாஸ்கர் கையை அழுத்தமாக குலுக்கிய ரகுபதி, “நீ இன்னும் அப்படியே இருக்கடா. உடம்பு போடலே. முடி நரைக்கலே. எப்படிடா இது சாத்தியம்?” என்றான்.
பாஸ்கர் சிரித்தான். “என்னைத் தான் தெரியுமே உனக்கு. புதுசு புதுசா பயோ-ஹாக்ஸ் (Biohacks) விஷயமெல்லாம் முயற்சி செய்து பார்க்கிறவன் தானே நான்.”
“தெரியுமே. விட்டு விட்டு விரதம் இருப்பியே, அதெல்லாம் இன்னும் செய்கிறாயா?”
“அதெல்லாம் பழைய கதைடா. இப்போ நான் சில புதிய விஷயங்களை ட்ரை பண்ணிக் கொண்டிருக்கிறேன். TME போன்ற விஷயங்கள்.”
“அது என்ன TME? இன்னொரு பயோ ஹாக்கா?”
“Targeted Memory Erasure. அது ஒரு பிரெயின் ஹாக்,” என்ற பாஸ்கர் குரலை தாழ்த்திக் கொண்டான். “குறிப்பிட்ட சில நினைவுகளை நம் மூளையிலிருந்து நிரந்தரமாக அழிக்கும் ஒரு ப்ரொசிஜர் தான் TME என்பது. ஒரு கம்ப்யூட்டர் ஹார்ட் டிரைவ்வில் இருக்கும் சில ஃபைல்களை மட்டும் தேர்ந்தெடுத்து டெலீட் செய்கிறோம் அல்லவா, அது போல் தான் இதுவும்.”
“அடப்பாவி! இதெல்லாம் ஆபத்தான ப்ரொசிஜர் இல்லையா?”
பாஸ்கர் கையை அசட்டையாக அசைத்தான். “இல்லவே இல்லை, இது ஒரு சாதாரணமான ப்ரொசிஜர் தான். நம் மூளையில் இருக்கும் ஹிப்போகாம்பஸ் பகுதியில் அந்த குறிப்பிட்ட நினைவுகள் எங்கு இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்தவுடன் ஒரு லேசர் கதிர் மூலமாக அந்த நினைவுகளை பத்திரமாக எரித்து விடுவார்கள். இதையெல்லாம் இப்போது ஒரு ரோபோவே செய்கிறது என்றால் பார்த்துக் கொள்.”
“வாவ்! நீ சொல்வது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு… இந்த ப்ரொசிஜர் மூலமாக எந்த மாதிரியான நினைவுகளை அழிக்கலாம்?”
“எந்த மாதிரியான நினைவுகளையும் அழிக்கலாம். மகிழ்ச்சியான நினைவுகள், துன்பமான நினைவுகள், பயனற்ற சாதாரண நினைவுகள் கூட.”
“ஹும்… துன்பமான நினைவுகளை அழிப்பது புரிகிறது. ஆனால் ஏன் மகிழ்ச்சியான நினைவுகளை அழிக்க வேண்டும்? என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை ஏன் மறக்க வேண்டும்?”
பாஸ்கர் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தான். சில வினாடிகளுக்குப் பிறகு, “ரகுபதி, உனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை திரைப்படம் எது? நீ திரும்ப திரும்ப பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் படம்?” என்று கேட்டான்.
“அவ்வை ஷண்முகி தான்டா, சந்தேகமே இல்லை. ஞாபகம் இருக்கா, நீயும் நானும் க்ளாஸ் கட் அடித்து விட்டு போனோமே அந்தப் படத்திற்கு?”
“ஓ, ஆமாம். இனிமையான பழைய நாட்கள். இது வரை எத்தனை முறை பார்த்திருப்பாய் அந்தப் படத்தை?”
“ஒரு பத்து முறை இருக்கும். ஆனா இனிமேல் பார்க்க முடியாது. அதில் வரும் எல்லா டயலாக்கும் மனப்பாடமாயிடுச்சு!”
பாஸ்கர் மீண்டும் புன்னகைத்தான். பின்னர் மெதுவாக கேட்டான், “அந்தப் படத்தை சுத்தமாக மறந்து போனால் இன்னும் ஒரு பத்து முறை பார்த்து ரசிக்கலாம் இல்லையா?”