ப்ரொஸிஜர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2024
பார்வையிட்டோர்: 1,277
நெஞ்சைப்பிடித்தபடித் துடிதுடித்தார் பெரியவர். அப்படியொரு வலி. திருகித் திருகி வலித்தது. நெஞ்சின் மையத்தில் கட்டைவிரலையும் இடப்பக்க மார்பகப் பகுதியில் மற்ற விரல்களையும் வைத்து மசாஜ் செய்து கொண்டார்.
வலி நொடிக்கு நொடி உச்சத்தை நோக்கி நகர்ந்தது. குபீரென வியர்த்துக் கொட்டியது. கதர்ச் சட்டைத் தெப்பலாய் நனைந்தது.
கத்துவதற்கு முயற்சித்தார். குரல் வரலில்லை. இடது கையால் மெத்தையைத் தட்டினார். காலால் டீப்பாயில் இருந்த தண்ணீர் சொம்பை எத்தித் தள்ளினார். “ட..ட..ங்..” என்று ஒலியெழுப்பி உருண்டது தண்ணீர் சொம்பும் அதன் மேல் மூடப் பட்டத் தட்டும். மூச்சைப் பிடித்துக் கொண்டு சௌ…என ஒரு கத்து கத்தினார்.
சத்தம் கேட்டு, தன் அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த பேத்தி, சௌமியா “தாத்தா..” என்று பதறிக்கொண்டே ஓடி வந்தாள். என்ன செய்வது என்று தெரியவில்லை அவளுக்கு.. குழந்தைதானே.
படிப்பறிவு அவளுக்குச் சமாளிப்பைக் கற்றுத் தந்திருந்தது. தாத்தாவின் அறை ஜன்னலருகே நின்று கார்ஷெட்டைப் பார்த்தாள். ”டிரைவர் அங்க்கிள் உடனே ஓடி வாங்க..!” என்று கத்தினாள்.
தாத்தாவை டிரைவர் உதவியுடன் காரில் ஏற்றி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தாயிற்று
ஸ்ரெக்சரில் ஏற்றிவிட்டார்கள். ப்ரொசிஜர்கள் தொடர்ந்தன.
முதல் ப்ரொஸிஜர் மருத்துவமனைப் பதிவேட்டில் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. நிறையக் கேள்விகள் கேட்டார்கள். அப்பப்பா எத்தனையெத்தனைக் கேள்விகள்..! தெரிந்த வரை பதில் சொன்னார்கள் டிரைவரும், சௌமியாவும்.
சௌம்யா ‘மைனர்’ என்பதால், ப்ரொஸிஜர் படி மேஜர்தான் கையொப்பமிடவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். முதலுதவி மட்டும்மான் செய்வோம். மேல் சிகிச்சை தேவைப்பட்டால் மேஜரான ரத்த உறவினர்தான் வரவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிய பிறகு, எமர்ஜென்சி கேஸ் என்பதை மனதில் கொண்டு, டிரைவரிடம் கையொப்பம் பெற்று, ஐ சி யூ வுக்குள் எடுத்துச் சென்றார்கள்.
இவ்வாறாக, நோயாளியை அட்மிட் செய்யும் ப்ரொஸிஜர் முடியவே கிட்டத்தட்டட முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது.
பெற்றோருக்குச் செய்தியைத் தெரிவிக்கும் முயற்சியில் இறங்கினாள் சௌம்யா.
“தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்..”
“உங்கள் அழைப்பை ஏற்கவில்லை..”
“எண்ணை சரி பார்க்கவும்..”
“சிறிது நேரம் கழித்து டயல் செய்யவும்..”
என்று மாற்றி மாற்றி அறிவிப்பு மட்டும் வந்தது.
“ஒரு சின்னப் பொண்ணை மட்டும் வயசானவங்களோட விட்டுட்டு எப்படி இது போல வெளியூர் போக முடியுது? இர்ரெஸ்பான்ஸிபிள் பர்ஸன்ஸ்..”
“சின்னக் குழந்தையா இருந்தாலும் ஸ்மார்ட்டா செயல்பட்டு, கார் டிரைவரோட ஆஸ்பத்திரீல கொண்டாந்து சேத்துருச்சே.. அதைப் பாராட்டணும்.
“பாப்பா..எதுனா ஹெல்ப் வேணுமா..? என் செல்ஃபோன்லேர்ந்து டிரை பண்ணிப் பாரேன்.”
இப்படியாக அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் பச்சாதாபப்பட்டு சின்னச் சின்ன உதவிகள் செய்தார்கள்.
எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை.
‘எம்டி’ மற்றும் ‘எம்எஸ்’ கார்டியாலஜி போன்ற உயர் கல்வி பயிலும் பயிற்சி மருத்துவர்கள் ஐ சி யூ வார்டில், சுற்றிலும் நின்று விரிவுரையாளர் சொல்லும் ப்ரொசிஜர்களை கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் குறிப்பெழுதிக் கொண்டும் இருந்தார்கள்.
“வலி வந்த ஒரு மணி நேரத்திற்குள் முதலுதவி செய்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு மணிநேரமாக முதலுதவி செய்யப்படாத ‘யுனீக் பேஷண்ட் இவர்’ என்று பயிற்சி மருத்துவர்களுக்குப் பாடம் எடுத்தார் ப்ரொஃபஸர் ராஜமாணிக்கம்.
இதுபோன்று காலம் கடந்து வந்தால் அந்த நேரங்களில் செய்ய வேண்டிய ப்ரொஸிர்களையும் முறையாக விளக்கினார் . பயிற்சி மருத்துவர்களும் கவனமாகச் ‘ஸ்டடி’ செய்தார்கள்.
‘ப்ளாக்கேஜ்’க்கான முதலுதவிப் ‘ப்ரொஸிஜர்களை’ சொல்லியபடியே செய்தார் ப்ரொபசர். பயிற்சி மருத்துவர்கள் அதைக் கேட்டபடியும் பார்த்தபடியும் குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.
‘முதலுதவிக்குப் பிறகு, அடுத்த கட்டச் சிகிச்சை செய்யாமப் ஏன் காலம் கடத்தறீங்க டாக்டர்…? ‘பயிற்சி மருத்துவர்’ யதார்த்தமாய் கேட்டார்.
‘ரத்த உறவுள்ள அடல்ட் ‘ஷ்யூரிடி’ போடணும் சார். இல்லேன்னா சட்டச் சிக்கல் வந்துடும்..” இதுதான் ஃபாரன்ஸிக் மெடிசின்ஸ் சொல்ற ப்ரொஸிஜர்.” என்று விளக்கினார்.
“பேஷண்ட் ரொம்ப க்ரிடிக்கல் ஸ்டேஜ்ல இருக்காரே, அவர் பேத்திகிட்டே ஷ்யூரிட்டி வாங்கி ஆபரேஷனைச் செஞ்சிடக் கூடாதா..?” கேட்டார் இன்னொரு பயிற்சி மருத்துவர்.
செய்யலாம். ஆபரேஷன் சக்ஸஸ் ஆகலைன்னா, “நமக்கு அது வீக் ஆயிரும். சின்னக் குழந்தைப் பேச்சை கேட்டு கொன்னுட்டதாச் சொல்லி நஷ்ட ஈடு தரச் சொல்லி கோர்ட் உத்தரவு போடும்…”
“ட்ரீட்மெண்ட்டே தராம செத்துட்டா?”
“அதுக்கு நாம பொறுப்பு ஏற்க வேண்டியதில்லை. பேஷண்ட் வந்ததும், அட்மிட் பண்ணி, முதலுதவி செய்தாயிற்று. அடுத்தக் கட்ட சிகிச்சை என்ன செய்யணும், எங்கே செய்யணும்,னு வயது வந்த ரத்த உறவுகள்தான் தீர்மானம் செய்யணும்.”
இப்படி விளக்கங்களுடன் ப்ராக்டிக்கல் வகுப்பு நடக்கும்போதே, பேஷண்ட்க்கு இரண்டு மூன்று முறை அடைத்தது.
‘பேஷண்ட் ஈஸ் இன் ஹெவன் அன்ட் எர்த்.’ ஒவ்வொரு செகண்டும் கவனமா ஸ்டடி பண்ணுங்க..” என்றார் ப்ரொபசர் ராஜமாணிக்கம்.
சௌம்யாவின் தாத்தா இறந்து “யுனீக் ஸாம்ப்பிள்” ஆகிப்போனார்.
எப்படியோ லைன் கிடைத்துத் தகவல் அறிந்த பெரியவரின் மகனும், மருமகளும் புறப்பட்டு வந்து மருந்துவனையை அடைவதற்குக் கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
நடுநடுவே மருத்துவமனை ரிசப்ஷனுக்குப் பேசும்போதெல்லாம், ‘நேர்ல வாங்க பேசிக்கலாம்..” என்றே பதில் வந்தது.
வந்து இறங்கியதும், பேத்தியும் கார் டிரைவரும் வழிகாட்ட, ‘ஆஞ்சியோ’வுக்கு ஏற்பாடு செய்ய வரவேற்பில் ப்ரொஸிஜர் விசாரித்தார்கள் .
ப்ரொபசர் ராஜமாணிக்கம் சார் வந்துதான் ப்ரொஸிஜர் சொல்வார். அவர் இப்போ ஆட்டோப்ஸி வார்டுல இருக்கார். வெயிட் பண்ணுங்க என்றாள் ஒரு வரவேற்பு நங்கை.
பிரேத பரிசோதனை அறையில், சௌம்யாவின் தாத்தாவிற்கு, இறப்பு அறிக்கை எழுதுவதற்கான, ப்ரொஸிஜர்களை பயிற்சி மருத்துவர்களுக்கு, விளக்கிக் கொண்டிருந்தார் ப்ரொஃபஸர் ராஜமாணிக்கம்.
ரத்த உறவான மகன் தன் மனைவியோடு டாக்டர் ராஜமாணிக்கத்தின் வருகைக்காக வரவேற்பில் காத்திருந்தனர்.
– மக்கள் குரல், 27.05.2024.