போலிப்புலவனும் வள்ளலும்
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 9
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரிலே போலிப்புலவன் ஒருவன் இருந்தான். அவனுடைய பெயர் திருமேனியழகன். திருமேனி யழகன் தன்னுடைய பெயருக்கேற்பப் பார்வைக்கு அழகாய் வெளிப்பகட்டாய் இருந்தானே யொழிய அவனுக்குக் கல்வியறிவு போதிய அளவு இல்லை. ஏதோ சில நூல்களை மேலெழுந்தபடி தானாகப் படித்ததுதான். இந்த அள விலேயே அவன் தன்னைப் பெரும்புலவனாக எண்ணித் தருக்கித் திரிந்தான். மனம் போனபடி செய்யுட்களை இயற்றவுந் தொடங்கி னான். கல்வியறிவற்ற செல்வர்கள்மீது கன்னாப்பின்னா என்று பாட்டுகள் எழுதிப் பொருள் பெற்று வாழ் வதே அவனுடைய வாழ்க்கையாக முடிந்தது. இவ னுடைய பாட்டைக் கேட்டவர்களெல்லோரும் அறி வற்றவர்களாதலினால் ஏதேனும் சிறிது பொருள் கொடுத்து அனுப்புவார்கள்.
திருமேனியழகன் ஒருநாள் ஒரு பெருஞ் செல்வன் மீது சில செய்யுள்கள் இயற்றிக்கொண்டு போனான். அச் செல்வன் மற்றைச் செல்வர்களைப்போல் பண மூட்டையாகமட்டும் இருக்கவில்லை. அறிவு மூட்டை யாகவும் இருந்தான். பல நூல்களைப் படித்து உணர்ந் திருந்தான். பாடல்கட்குத் தானே பொருள் கண் டுணர்ந்து கொள்வான். தப்புத் தவறுகள் இருக்கு மானால் அதையுங் கண்டுபிடித்து விடுவான்.
திருமேனியழகன் தன்னுடைய பாட்டை அச் செல்வனிடங் கொண்டுபோய்ப் படித்தான். உடனே அச் செல்வனுக்கு மிகுந்த சினம் உண்டாகிவிட்டது. “நன்றாகப் படிக்காத நீ ஏன் பாட்டியற்றத் தொடங் கினாய்? சொல்ல வேண்டிய செய்திகளை உரைநடை யாகச் சொல்லித் தொலைக்கக் கூடாதா? தப்புக் தவறுமாகப் பாடுவதைவிடப் பாடாமல் இருப்பது நல்லது. உயர்குலத்தில் பிறத்தலைவிடத் தாழ் குலத்தில் பிறந்து நல்லொழுக்கம் உடையவனாக. இருப்பது நல்லது; ஆண்மையற்றவனாக இருப்பதை- விட நோயாளியாக இருப்பது நல்லது,” என்று இப்படிப் பலவாறு அறிவுரை கூறித் திருமேனியழக னுக்குப் பாடஞ் சொல்லத் தொடங்கிவிட்டான். திரு. மேனியழகன் செல்வனிடமிருந்து பரிசைக்கூட எதிர் பார்க்கவில்லை. ஆளைவிட்டாற் போதுமென்று ஓடி விட்டான்.
“இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று -வழுக்குடைய
வீரததின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.”
(உரை ) இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று – இலச் கண வழுக்களையுடைய செய்யுளினும் அஃதில்லாத பேச்சு நல்லது, உயர்குலத்தின் சாலும் ஒழுக்கம் நன்று – உயர்ந்த. குலத்தில் பிறத்தலைப் பார்க்கினும் ஒழுக்கம் உடையவனாக இருத்தல் நல்லது, வழுக்கு உடைய வீரத்தின் விடா நோய் நன்று – தவறுதலையுடைய வீரத்தினும் தீராத நோய் நல்லது பழிக்கு அஞ்சாத் தாரத்தின் தனி நன்று – பழிச்சொல்லுக்கு அஞ்சாத மனை வியோடு கூடி வாழ்தலைப் பார்க்கினும் தனியே இருத்தல் நல்லது.
(கருத்து.) ஒவ்வொரு பொருளும் தக்கவாறு அமையா விட்டால் எத்தகைய பயனும் உண்டாகமாட்டாது.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026