கதையாசிரியர்:
தின/வார இதழ்: கணையாழி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 13, 2025
பார்வையிட்டோர்: 2,863 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பின் ஸீட்டிலிருந்து இவன் இறங்கியதும் கார்த்திகேயனும் இறங்கி ஸ்கூட்டரை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தினான். இவன் விழிகள் அந்தத் திறந்தவெளி ஹோட்டலின் பூங்காவில் மேய்ந்தன. ஸந்தியா நேர ஊமை வெளிச்சத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்து நிற்கும் மங்கிய ஒளிஉமிழும் விளக்கக் கம்பங்கள் மேலும் இருள் படுத்திக்கொண்டிருந்தன. கையும் காலும் கீறி விட்ட கோஸ்டுகளாய் ஏழெட்டு பேர்கள் அங்கே நிற்பதும் தெரிந்தது., 

‘நீங்க கால்மணி நேரம் லேட்’ என்று விட்டு இவனையும்… அவனையும் கைகளைப் பிடித்துக் குலுக்கி அமர்க்களமாய் வரவேற்றவனைச் சட்டென்று இவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஓ இவன் ஜெயின் அண்ட் கோவின் லோக்கல் ரெப்ரஸன்டேட்டிவ் பொன்னுசாமி அல்லவா! 

‘எக்ஸ்க்யூஸ் மீ… மத்தவங்க எல்லோரும் வந்துட்டாங்களா…?’ 

‘வந்துட்டாங்க…’ 

கீழே பாதங்களை ஆதுரத்துடன் ஸ்வீகரிக்கும் அடர்த்தியான பச்சைப் புல், மேலே பின்னிப் பிணைந்து கிடக்கும் அடர்ந்த மரக் கிளைகள்… 

ஆதிதேயன் வர்மா இவர்களை முகமன் கூறி வரவேற்றான். ஏனைய நண்பர்களும் பங்கு சேர்ந்தார்கள். வர்மாவின் மாமா பாஸ்கரனும், பொன்னுசாமியும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். 

கசமுசாவென்று வார்த்தையாடியவாறு எல்லோரும் பிரம்பு நாற்காலிகளில் வந்து உட்கார்ந்தார்கள். நாற்காலி அளவு உயரமே இருந்த, செந்நிற ஸன்மைக்கா பதித்த நெடு நீளமேஜை மீது, கண்ணாடி ஜாடியிலிருந்த வெங்காய ஊறுகாய் நீரை ஸ்பூனில் எடுத்துச் சந்திரன் சுவைப்பதைக்கண்டு, ரவியும் நாகப்பனும் இன்டரீம் ரிலீப் என்று கூறி அதைப் பின்பற்றி நாக்கைச் சப்புக் கொட்டினார்கள். 

பாட்டில்கள், கண்ணாடி தம்ளர்கள், ஐஸ் பெட்டிகள் பரஸ்பரம் முட்டி மோதிக் கலகலத்து மேஜைமீது சஞ்சரிக்கத் தொடங்கிய போது, இவனைச் சுட்டிக்காட்டி ரவி எச்சரித்தான். ‘கேசவன் இனி பேசுவதை யாரும் கணக்கில் எடுக்க வேண்டாம்.’ 

அதைச் செவிமடுக்க யாருக்கும் நேரம் இருந்ததாய்த் தெரிய வில்லை. ஆனாலும் ரவியின் சரமாரியான பேச்சில் மற்றவர் களின் குரல்கள் அமுங்கிப்போய் விட்டிருப்பதாய்ப் பட்டது. இவன் வலப் பக்கத்திலிருந்த கார்த்தி திடீரென்று எழுந்துபோய் அவன் கையைப் பிடித்துக்கொண்டு மன்னிப்பு கோரி விட்டு வந்தது எதற்கென்று புரியவில்லை. இவன் இடப் பக்கமிருந்த பலவேசத்திடம் ரவி பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஹமீத் ஓடி வந்து, நீ நம்ம க்ரூப்பில் ஒவ்வொருத்தனையும் உன் கார்ட்டூனில் அட்டாக் பண்ணிக் கொண்டிருக்கிறே போலிருக்கே… அடுத்தது யாரைக் கண்ணி வச்சிருக்கே?’ என்று கேட்டான் எகத்தாளமாய். 

‘அடுத்தது சாட்சாத் நீதாண்டா! ஐ ஆம் கலெக்டிவ் சம் மோர் டிட்டயில்ஸ் எபவுட் யூ’ என்று ஒரே போடாய்ப் போட்டான் பலவேசம். 

ஹமீத் சட்டென்று தன் சட்டைக் காலரையும், தோள்வரை கிடந்த தலை மயிரையும் (நண்பர்கள் அவனை ராஜபார்ட் என்று கேலியாய் அழைப்பார்கள்) சரி பண்ணிவிட்டு, ‘சங்கதியெல்லாம் சரி, நான் ஹீரோவாய் இருக்கணும், வில்லனாக்கி விடாதே” என்று கௌரவமாய் சொல்லிவிட்டு தன் இருக்கைக்குப் போனான். 

பாஸ்கரனும், பொன்னுசாமியும் மேற்பார்வையிட வெண் உடை தரித்த ஹோட்டல் ஊழியர்களின் படை, மேஜைமீது பீங்கான் தட்டுக்களையும் தம்ளர்களையும் வைத்துக் கொண்டிருந்தார்கள். 

எல்லோரும் கர்மமே கண்ணாயினார்கள். 

‘சே, இதென்ன கிழட்டுக் கோழியா, வலுக்கு வலுக்குண்ணு ஒரே ஹார்டு…’ என்றவாறு கோழியுடன் பல்லால் மல்லிட்டுக் கொண்டிருந்தான் ராமய்யா. 

‘கொஞ்சம் பதமாய்க் கடி… கோழி வயிற்றுக்குள்ளேபோய், நடுச் சாமத்தில் பெண்டாட்டிகிட்டே வச்சுக் கூவப் போவுது’ என்றான், ஆத்மனாதன். 

‘சிக்கன் எனக்கு வேணாம்; மட்டன் கொண்டு வா’ என்றான் கார்த்தி. 

‘ஏண்டா?’ என்று இவன் கேட்டபோது. 

‘கோழி எங்க குல தெய்வம் முருகனின் அபிமான பட்சி. நான் தொட மாட்டேன். பாவம்’ என்று விட்டுத் தம்ளரில் முழுகியிருந் தான் அவன். 

இப்போது ரவியின் சத்தமே வெளியில் கேட்கவில்லை. இதுவரை மௌனியாக இருந்த கார்த்தியின் குரல் மற்ற குரல்களை எல்லாம் அமுக்கி ஒலித்துக்கொண்டிருந்தது. 

குளிரத் தொடங்கி விட்டிருந்தது. ஒன்பது மணி ஸைரன் ஒலித்ததும், நாலைந்து பேர்கள் விடை பெற்றுக்கொண்டு செல்லத் தொடங்கினார்கள். 

இந்த லாஸ்ட் பெர்ஃபாமன்ஸையும் பார்த்து விட்டுக் கையில் முழுப் புட்டியுடன் மேஜைமீது குதித்து ஏறினான் சந்திரன். கடை வாயில் வழிய, புட்டியை மடமடவென்று அப்படியே வாயில் கவிழ்க்கலானான். 

‘நேற்றைக்கு என் பிரிய பத்தினியின்…ல் அடித்துச் சத்தியம் செஞ்சு கொடுத்தேன். இந்த இழவைத் தொட மாட்டேண்ணு’ என்று நாக் குழற சொல்லியவாறு நிலத்தில் கால் உறைக்காமல் ஆத்மனாதனின் தோளில் கையைப் போட்டு நடந்து கொண்டிருந் தான் வத்சலன். 

‘நானும்தான் டாக்டர்கிட்டெ ப்ராமிஸ் செஞ்சிருக்கேன்… அவுங்க அறியப் போறாங்களா… நெவர் மைன்ட்’ என்று ஆசுவாசப்படுத்தியவாறு ஆத்மனாதனும் நகர்ந்து கொண்டிருந்தான். 

கார்கள், ஹெட்லைட்கள் மின்னி உறுமத் தொடங்கின. பைக், ஸ்கூட்டர்கள் ஸ்டார்ட் செய்யும் படபட… 

இப்போது மேஜையின் முன் இவனும், கார்த்தியும் மட்டுமல்ல… எதிரில் மீசையை அருமையாய் வருடிக் கொண்டிருக்கும் வர்மா. அவன் பின்னால் பாஸ்கரனும், பொன்னுசாமியும் கார்த்தியின் தம்ளரை நிரப்பி உபசரிப்பதில் மேலும் மேலும் உற்சாகம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள். 

‘உனக்கு ஸ்கூட்டர் விடவேண்டாமா, போதும்டா…’ என்று விட்டு தம்ளரை வாங்கித் தரையில் இவன் கொட்டியபோது, கார்த்தி சாடியெழுந்தான். 

‘கேசவா… என்ன வேலையடா இது! படுவா… பெரிய யோக்கியன்’ என்று இவன் சட்டையைப் பிடித்து உலுக்கினான் கார்த்தி. 

‘போகட்டும் கேசவனை விடு கார்த்தி… நானல்லவா இருக்கேன்… வேறெ ஊற்றித் தரேன்’ என்று அவனைச் சமாதானப்படுத்தி உட்கார வச்சு உபசரித்தான் வர்மா. 

மறுபடியும் தொடங்கியது. உள்ளுக்குள்ளிருந்து திகட்டி வந்து கொண்டிருந்த எங்கோ எப்போதோ கேட்ட பாட்டின் வரியில் லயித்து, சொறி பிடித்த வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் இவன். 

கார்த்தி ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தபோது, பின் ஸீட்டிலிருந்த இவனும் வர்மாவை நோக்கிக் கை வீசி விடைபெற்றான். 

ஸ்கூட்டர் வில்லில் இருந்த தெறித்த அம்பாகியது. 

பளிச்சென்ற சாலை விளக்கு வெண் வெளிச்சத்தில் மல்லாந்து நிர்வாணமாய் கிடக்கும் வீதி. முகத்தில் வந்து அறையும் குளிர்ந்த காற்றால் விழிகளிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. 

இவனுக்கு உள்ளுக்குள் பயமாயிருந்தது. அதைக் கார்த்தியிடம் சொல்லத் தெரியாமல் விழுங்கிக் கொண்டிருக்கும் போது, என்ன நடந்தது என்று அவதானிக்கும் முன், பயந்தது நடந்து விட்டிருந்தது. 

இந்தக் கணம் துவங்கி முடிந்தும் ரோட்டோரத்தில் தான் கிடப்பது இவனுக்குப் புலனாகியது. தெறித்து விழுந்த அதிர்ச்சி விலகி, ஓரிரு நிமிஷத்தில் தள்ளாடியவாறு எழுந்து நின்றபோது குப்புற மறிந்து கிடக்கும் ஸ்கூட்டர்… 

அருகில் கிடக்கும் கார்த்தி… 

மெல்ல அவன் அருகில் சென்றான். காயம் எதுவும் தென்பட வில்லை. ‘கார்த்தீ… கார்த்தீ…’ 

அவன் அசையவில்லை. ரோட்டில் யாரையும் தென்பட வில்லை. அவன் கிடப்பதைப் பார்த்தால் பயமாய் இருந்தது. 

இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை மூளை ஸ்தம்பித்துப்போய்விட்டதுபோல். ஒருவேளை செத்துப்போய் விட்டிருப்பானோ? மூக்கின் கீழ் புறங்கையை வைத்துப் பார்த்தபோது லேசாய் மூச்சு வந்துகொண்டிருப்பது தெரிகிறது. 

இப்போது வீதியில் ஒரு பைக் வரும் ஓசை… ஒற்றைக் கண்ணாய் அதன் ஹெட்லைட் உமிழும் ஒளி… பக்கத்தில் வந்ததும் அது நின்றது. ஓசை அடங்கியது. ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு ‘என்ன’ ஆக்ஸிடன்டா?’ என்று கேட்டவாறு பைக்வாலா ஓடி வந்தான். 

இவன் என்ன சொல்வதென்று தெரியாமல் திருதிருவென்று விழித்தான். ‘என்ன ஆக்ஸிடன்டா’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். 

வந்தவன் கார்த்தியைத் தூக்கி உட்கார வைத்தபோது, ‘ஏண்டா வெட்டினே… ஹும்… ஸுநிதா…’  என்றெல்லாம் நாக்குழறச்  சொல்லியவாறு மறுபடியும் குப்புறப் படுத்துக்கொண்டான். சுநிதா கார்த்தியின் மனைவியல்லவா என்று நினைவில் கொண்டு வர இவன் கடுமையாய் முயற்சித்துக் கொண்டிருந்தபோது, பைக் வாலா இவன் அருகில் வந்து இவனையும் பார்த்தான். 

‘அப்போ ரெண்டு பேரும் புல் லோடா, சரிதான்…’ என்றுவிட்டு, அவன் நிதானமாய்ச் சென்று ஸ்கூட்டரை நிமிர்த்தி உருட்டிக் கொண்டு வந்து ரோட்டோரத்தில் அவன் பைக்கின் முன்னால் நிறுத்தினான். 

‘நல்லவேளை…’ என்று தொடங்கி மேலே அவன் சொல்லிக் கொண்டிருந்தவை என்னவென்று சரியாக இவனுக்குக் கேட்கவில்லை. அவனிடம் எதையோ சொல்ல வேண்டுமென்று இவனுக்குத் துடிப்பாக இருந்தது. ஆனால், எதையும் தெளிவாய்ப் பேசவும் இயலவில்லை. இருந்தும் அவன் பக்கத்தில்போய், ‘கடவுளாகத்தான் உங்களை இப்போ இங்கே கொண்டு வந்தது; இந்தக் கோலத்தில் நாங்க ரெண்டு பேரும் இந்த இடத்தில் கிடந்தா எங்க வேலை போயிடும்; எங்க வாழ்க்கையே பாழ். எதுக்கும் ஒரு டாக்ஸி கொண்டு வர முடியுமா…’ என்று எப்படியோ சொல்லி முடித்தான். 

‘சரி… நீங்க பயப்படாதீங்க… அப்படி ஒதுக்குப்புறமா உக்காருங்க… இதோ வர்றேன்’ என்று விட்டு அவன் பைக்கை ஸ்டார்ட் செய்தான். 

சற்று நேரத்தில் ஒரு டாக்ஸி வந்தது. கார்த்தியைத் தோள் பட்டையில் பிடித்து அவன் தூக்க, இவன் கால் மாட்டில் பிடித்துக் கொள்ள எப்படியோ காருக்குள் தூக்கிப் போட்டார்கள். 

‘நீங்களும் ஏறிக்குங்க’ என்று இவனையும் உள்ளே தள்ளிக் கதவை அடைத்தபோது இவன், ‘இந்தக் கோலத்தில் நாங்க போனா ஒருத்தரும் ரூம் தர மாட்டாங்க; எங்ககூட கொஞ்சம் வர முடியுமா?’ என்று கேட்டான். 

‘சரி… உங்க வண்டியை இப்படி இங்கே போட்டுவிட்டு வந்தா எப்படி? என்று விட்டு, டாக்ஸி டிரைவரிடம், ‘லக்ஷ்மி லாட்ஜ் முன்னால் போய்க் காரை நிப்பாட்டு, பின்னால் நான் வாரேன்’ என்று சொல்லி விட்டு ஸ்கூட்டர் பக்கம் போனான். 

ஆள் அரவமில்லாத ஏதோ ஒரு காட்டுக்குள் சஞ்சரிப்பதுபோல் இவனுக்கு ஒரு பிரமை. வீட்டில் தன்னைக் காத்துக்கிட்டிருப் பவர்களை ஒரு கணம் மனம் நினைத்துப் பார்த்துக்கொண்டது. இவனை இங்கே இந்த நிலைமையில் விட்டு விட்டு எப்படிப் போவது… 

கார் நின்றது போலிருந்தது. கார்த்தியின் ஸ்கூட்டரில் வந்து இறங்கினான் அவன். இப்போது ஒருதடவைகூட அவனை உன்னிப்பாய் பார்த்தபோது… 

என்றோ எங்கோ பார்த்த முகம்… 

‘காரிலேயே இருங்கோ… நான் உள்ளேபோய் ரூம் எடுத்துக் கிட்டு வாறேன்’ என்று விட்டு அவன் உள்ளே போனான். 

சிறிது நேரத்தில் வெளியே வந்தான். இவனும் அவனும் கைத்தாங்கலாய்க் கார்த்தியைப் பிடித்து, மெல்ல நடத்தி உள்ளே கூட்டிக்கொண்டு சென்றார்கள். அறைக்குள் வந்து கட்டிலில் வைக்கும்போது அது ஒரு டபிள் அறை என்பதை இவன் கவனித் தான். இவனும் மெல்ல சுவரோரத்தில் கிடந்த இன்னொரு கட்டிலில் சாய்ந்தான். கொஞ்ச நேரத்தில் தான், தானல்லாமலாகி விட்டதைப் போன்ற ஒரு மயக்க நிலைமை. 

விழிகளைத் திறந்தபோது, மேலே சுழன்று கொண்டிருக்கும் விசிறி… எதிரில் அவன்: ‘சரி… அப்போ நான் போயிட்டு வரட்டுமா?’ 

இவன் எப்படியோ சமாளித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான். தலைக்குள் கனம். நடந்தவைகள் எல்லாம் புகை மூட்டமாய்…! 

திடீரென்று டாக்ஸிக்குத் தான் வாடகை கொடுக்கவில்லை என்பது இவனுக்கு ஞாபகம் வந்தது. இவன் பேண்ட் பாக்கட்டிலிருந்து பர்ஸை எடுத்து அவனிடம் நீட்டி, ‘கார் வாடகை’ என்று சொல்லத் தொடங்கும்போது, ‘எல்லாம் கொடுத்து அப்பவே அனுப்பியாச்சே… என்றான் அவன். 

இவன் உணர்ச்சி வசப்பட்டான். ‘நீ யாரப்பா… கடவுளாக நல்ல சமயத்தில் வந்து…’ 

மேலே இவனால் பேச முடியவில்லை, நா தழுதழுத்தது. 

‘சாரை எனக்குத் தெரியும். இப்போ அதெல்லாம் எதுக்கு… அந்த ஆள் கொஞ்ச நேரம்கூடத் தூங்கட்டும். எழுந்திருக்கும்போது மோரில் எலுமிச்சம் பழம் பிழிஞ்சு கொடுங்கோ; வாந்தி யெடுக்கும். அப்புறம் சரியாகி விடும்! என் பைக் அங்கே இருக்குது. நான் போறேன். உள்ளே தாழ் போட்டுக்கங்க…’ என்றுவிட்டு அவன் போய்விட்டான். 

இவன் நெஞ்சுக்குள்ளிருந்து அந்தத் தழுதழுப்பு. அப்படியே உட்கார்ந்திருக்கும்போது தலை சுற்றியது. வயிற்றுக்குள் என்னவோ புரட்டிக்கொண்டுவந்து, தொண்டைக் குழியை நெட்டித் தள்ளுவதுபோல்… 

வாஷ் பேஷின் பக்கம் ஓடினான். இவன் குமட்டிக் குமட்டி வாந்தியெடுத்துக் கொண்டிருக்கும்போது, ‘ஸுநிதா வஞ்சகி, வர்மா துரோகி…’ முதலிய பலகீனமான வார்த்தைகள் முனகல்களாய் கார்த்தியிடமிருந்து வெளிவரத் தொடங்கின. 

– 13.11.1975 – கணையாழி 7/1976. 

– நாகம்மாவா? (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2014, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *