பொறுத்தது போதாது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 2, 2025
பார்வையிட்டோர்: 160 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தென் திசை தாழாமல் தடுத்தாட் கொள்ள, சிவபெருமானால் அன்று அனுப்பப்பட்ட மாமுனி அகத்தியர், இன்று, தன் திசையாம் தமிழ்த் திசை, தன்னையும் மீறி தாழ்ந்துபோன தாளாமையில், பொதிகையில் இருந்து எழுந்து, கடலுக்குள் கால் வைத்தார். 

ஒரு அலையின் உயரம் கூட இல்லாத, ‘கடல் குடித்த இக்குடமுனி கண்டு, ஆழ்கடல் பயந்து, அலைகளை அவரது காலடியில் மட்டும் விழச் செய்தது. பின்னர், அந்த மாமுனியின் யோகச் சிமிட்டலான கண்சிமிட்டலின் பொருள் புரிந்து, அந்த அலைகளே தோணியாகி, அப்புறம் நீர் மூழ்கி கலமாகி, அம் மாமுனியை அடிவாரத்திற்கு கொண்டு வந்தன. 

ஏழு கடல்களும், எட்டுக் கோணங்களும், நான்கு திசைக ளும், ஐந்து பூதங்களும், முக்குணங்களும், பதினோரு இந்திரி யங்களும் சங்கமித்து ஒருமிக்கும், ஆன்மிகப் பாட்டையில் நடைபோட்டார் அகத்தியர்; ஆயிரம் கோடி சூரியப் பிரகாச சுதர்சன சக்கர ஒளியில், இரவென்றே இல்லாத அந்த வைகுண்ட திருத்தலத்தில் அவர் நுழைந்தார். அங்கே- 

அலைகளே சுவரான ஆயிரமாயிர அண்டச் சுழற்சி மண்டபங்கள்; யுகச் சிப்பிகளால் உருவான கோடி கோடியே ஊழிமண்டபங்கள்… அந்தச் சிப்பிகளில் இருந்து வெளிப்பட்டு, மும்மலம் அற்று முழுமையாய் ஒளி சிந்தும் ஆன்ம முத்துக்கள்… இவற்றிற்குள் நரை, திரை, மூப்பில்லாத, காலத்தின் முழுத் தோற்றமாக, நீரில் மிதக்கும் ஆயிரம் தலைகொண்ட ஆதிசேஷன்… ஒவ்வொரு தலையிலும் ஒரு கோடி சூரிய நகைகள்… பச்சைக் கடலுள் வெள்ளிமலைத் தோற்றம்… காலத்தை இயக்கும் கண்சிமிட்டல்கள். பிரணவப் பேரொளி சிந்தும் அக்கினி அண்டங்களான கண்கள்… பிரபஞ்சமே சங்காக, பிரணவமே சக்கரமாக காட்சி காட்டும் நெற்றிகள்… முத்தொழில் ஆணையைச் செயல்படுத்தும் கற்பக்கோடி பற்கள்… இந்த ஆதிசேச அற்புதத்தின் மேல்- 

ஆயிரந்தலைகளின் நிழற்குடைக்குக் கீழே, அதன் ஆத்ம தேகத்தில் பரமாத்மாவான ஆதிநாராயணன்…அவர் நெற்றியில், படைப்புக் கடவுளான பிரமன்… தோள்களில் திசைக் காவலர்களான இந்திரன், வருணன், குபேரன், எமன்… வாய்க்குள் பன்னிரண்டு ஆதித்தர்கள். மார்பில் பதினோரு சூத்திரர்கள்… பூலோகம், தேவலோகம்,பாதாள லோகம் எனப்படும் முப்பெரு லோகங்களையும், அவற்றில் நடமாடும் முப்பத்து முக்கோடி தேவர்களையும், நாற்பது நாற்கோடி ரிஷிகளையும் கொண்ட உடல்வாகு… பிரபஞ்சத்தை பிரகாசிக்கச் செய்யும் புன்னகை… நரசிம்மத்தின் கோபப் புன்னகையும், வாமனத்தின் சாந்தப் புன்னகையும், கிருஷ்ணரின் மாயப் புன்னகையும் கலந்த பிரணவப் புன்னகை… ஆயிரமாயிரம் கரங்கள்… அவற்றில் கௌமோடகி எனப்படும் கதாயுதம்… நந்தனா எனப்படும் ஊழிப் பெருவாள்… பஞ்சாட்சணையான சங்கு… சுதர்சனச் சக்கரம்… இவற்றை உள்வாங்கி, ஒளியாக்கும் தாயார் காலடியில் இருக்கிறாள். 

எல்லையற்ற பிரபஞ்ச ரூபங்களைக் காட்டும் அந்த நாராயணியத்தில், அண்ட கோடியாய் நீண்ட ஒரு கரத்தில் விரல்நுனியில், கோடானுகோடி ரிஷிகளில் ஒருவராய், அகத்தியர் தன்னையும் பார்க்கிறார். கடல்துளியாய் ஆனாலும் தனித்துளியாய் தன்னைக் காண்கிறார். வாமன உயரத்தில், வரிந்து கட்டிய மரவுரியும், நிமிர்ந்து நிற்கும் ஜடாமுடியும், தும்பிக்கைத் தாடியும், காவேரியைக் கவிழ்த்த கமண்டலமுமாய் நிற்கும் தமிழ்முனியான அகத்தியர், சுயத்திற்கு வந்து, சொந்த வேலையை மறந்து, பந்தமற்றுப் பேசினார். 

”அளப்பறியாக் காலமே! புலன்களில் புத்தியே… உயிர்களில் உள்ளொளியே… எழுத்துக்களில் அகரமே… ஆதித்தர்களில் விஷ்ணுவே… யோகங்களில் சமாதியே… யட்சர்களில் குபேரனே … யானைகளில் ஐராவதமே… பருவங்களில் வசந்தமே… ஏமாற்றில் பகடையே. பிரபஞ்சம் சுருங்கி, பிரும்மானந்த முட்டையாகும்போது, அந்த முட்டைக்குள் இருக்கும் புருசோத்தமே… நாபிக் கமலத்தில் பிரும்மத்தை தோற்றுவிக்கும் பரப் பிரும்மமே… நீயே… பிரபஞ்சக்கண்ணாடி-தப்பாய் சொன்னேன் பிரபோ… தப்புத்தப்பு… உனக்கு பிரபஞ்சமே கண்ணாடி… உன்னை கடல்களாய், மலைகளாய், கடல்மலை கொண்ட கிரகங்களாய், கிரகங்கள் வட்டமிடும் நட்சத்திரங்களாய், நட்சத்திரங்கள் நடனமிடும் அண்டாதி அண்டங்களாய் காட்டும் கண்ணாடி… பிரபஞ்ச வெளிப்பாடுகள், அசலான உனது நகல்கள்… 

உடனே ஆதிநாராயணன், அனந்தங்கோடி சந்திரப் புன்னகையோடு கேட்டார். 

“முதுபெரும் சிவபக்தா… சைவப் பெருமுனியே… நீ.. ஈஸ்வர எல்லையைத் தாண்டி வர, என்னிடம் என்ன இருக் கிறது? ஒரு வேளை சோதிக்க வந்தாயோ… அதற்கு என்றே நாரதன் இருக்கிறானே…” 

‘விளங்கிய அறிவின் முனைவன்’ என்று தொல்காப் பியரால் பயபக்தியுடன் பாடப் பெற்ற, தமிழிற்கு முதல் நூல் தந்த அகத்தியர், இப்போது சிறிது சூடாகவே கேட்டார். 

‘சோதிக்க வரவில்லை பிரபு… சாதிக்க வந்தேன்…என் தமிழ் இனத்தை மீட்க வந்தேன்… ஆனாலும் இது உங்களுக்கு ஆகாது அனந்தனே… என் மக்கள் மீது உங்களுக்கு ஏன் இத்தனை வெறுப்பு… ஏன் இத்தனைக் கோபம்…” 

ஆதிகேசவன், ஒரு பாசாங்குப் புருவச் சுழிப்போடு பதிலளித்தார். 

”உன் தமிழ் இனத்தின் மீது கோபமாஃ வெறுப்பா… எனக்கா… எப்படி இருக்க முடியும் முனிபுங்கவா… நாவலந் தீவிலேயே நல்ல இனமான உன் தமிழ் இனத்தில் ஒரு பகுதியினர், என் ராமாவதாரத்தை காலணியால் அர்ச்சித் தவர்கள்; இப்போது கூட, என்னை வசை பாடுகிறவர்கள்… வம்புக்கு இழுக்கிறவர்கள், என்னை ஈனப்படுத்தும் இந்த ‘இனமான தளபதிகளைக் கூட வசதியாகத் தானே வைத்திருக் கிறேன். இவர்கள் மீது பகை கொள்ளப் போன அரசின் மனப்போக்கை மாற்றி… அந்த அரசு மூலமே விருது கொடுக்கச் செய்தேன். பெட்டி கொடுக்கச் செய்தேன். இப்படிப்பட்ட எனக்கு உன் இனத்தின் மீது கோபம் என்கிறாயே… நன்று அகத்தியா நன்று…” 

“நீங்கள் தான்… எம் மக்களை நிசமான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பி விடுகிறீர்கள் என்பதற்கு, உங்கள் பதிலே ஒரு சாட்சி பிரபோ… ஆட்சியின் கேடயமாய் விளங்கும் இந்த ‘அற்புத’ சிந்தனையாளர்களுக்கு உதவி வருவதாக தாங்கள் தம்பட்டம் அடிப்பது நியாயமில்லை, பெருமாளே… நிந்தாதுதி… என்பதும் ஒருவித பக்திதானே… மூலத்துடன் வேகவேகமாய் நெருங்குவதற்கான ஒரு யோக முறைதானே.. இப்போது இதுவல்ல விவகாரம்… அது என்னவென்றால், எங்கள் தமிழ் இனத்தை, தாங்கள் ஒரேயடியாய் உழுதுவிட்டீர்கள் என்பதே… உங்களின் சித்து விளையாட்டிற்கு என் மக்கள்தானா கிடைத்தார்கள்? உலக நாதா? இவ்வளவுக்கும், நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் உள்ள ஆழ்வார்களின் பாடல்களை நீங்கள் அறியாதவரா… இந்த ஆழ்வார் பெருமக்களைக் கருதியாவது என் மக்களை மாக்களாக்காது சும்மா இருந்திருக்கலாமே தாமோதரா.. இப்படி வேடிக்கைக் காட்டலாமா விண்ணளந்த பெருமாளே…'” 

ஆதிநாராயணனை, தாயார், ‘எங்கே பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்பதுபோல், வித்யாலட்சுமியாய் பார்த்தாள். உடனே, பாற்கடல் வாசன், பால் குடிக்கத் தெரியாத பூனைபோல் பார்த்து, புனுகாய் கேட்டார். 

“பழி சுமத்தாதே பைந்தமிழ் காவலா… உன் மக்களுக்கு எப்படி வேடிக்கை காட்டுகிறேன் என்று எங்கே விரல்விட்டுச் சொல் பார்க்கலாம்…” 

“விரல் மடக்கிச் சொல்ல… உங்களின் கோடி கோடி கரங்களே போதாது புண்ணியனே… ஆனாலும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறேன்- எம் மக்கள், நல்லதைப் பேசி…. அல்லதைக் கண்டிக்கும் பிசிராந்தையர்களாய் இருந்தவர்கள்… ‘மன்னவனும் நீயோ’ என்ற கம்பர்களாய் இருந்தார்கள். ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்ற நாவுக்கரசர்களாய் திகழ்ந்தார்கள். இவர்களை ஏன் இருகால் முயல்களாய் ஆக்கினீர்கள்…” 

“முயல் முன்னோக்கிச் செல்லும் பிராணி…அப்படி ஆக்கப்பட்டால், அதற்காக நீ… எனக்கு நன்றியல்லவா சொல்லவேண்டும்.” 

“இதை, ஆமையிடம் சொல்லுங்கள் – என்னிடம் வேண்டாம் பிரபோ… முயலின் குணம் பற்றி அறியாதவரா தாங்கள்… ஒரு முயலை எப்படி இம்சித்தாலும், அது கத்தாது… எதிர்ப்புக் காட்டாது… கத்தியால், கழுத்து அறுக்கப்படும்போது கூட, அழத் தெரியாத அப்பாவிப் பிராணி… எத்தனையோ… அக்கிரமங்கள் கண்ணெதிரே நடந்தாலும், கத்தக் கூட வேண்டாம். ஈனமுனங்கலாய் முனங்கக் கூட முடியாமல் மூளை மழுங்கிப் போனதே தமிழ் இனம்… சொந்த வீட்டையே… யாராவது பட்டா போட்டு… பட்டாக் கத்தியை நீட்டினால், அவர்களது காலில் விழுந்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்களே எம் மக்கள்… ஒரு காலத்தில் கப்பலோட்டிய தமிழர்கள், இப்போது ஆட்டோக்களை கண்டதும், அலறியடித்து ஓடுகிறார்கள்…” 

அகத்தியர் ஆவேசப்பட்டு பேச்சைத் தொடர்ந்தார். 

“வேல் பாய்ந்தபோதும், விழியாடாமல் இருப்பதே வீரம் என்ற மூதாதையர் சொல் மறந்து, கை இருப்பது கும்பிட, கால் இருப்பது தரையில் படுக்க, தலை இருப்பது காலில் விழ, வாய் இருப்பது சோறு தின்ன மட்டுமே என்று ஆகிப் போனார்களே… அவர்களை இப்படி ஆக்கிவிட்டீர்களே அனந்த பெருமாளே’ 

“அகத்தியா… நான் நிரபராதியாக்கும்.” 

காலடியில் அமர்ந்திருந்த தாயார் எழுந்து, பேசினார். 

”இவரை நம்பாதே அகத்தியா… சொந்த குலமான நந்தகுலத்தினர்… ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்லும்படி செய்தவர் இவர்… சொந்த மகனான சம்பாவின் வயிற்றில், ரிஷிகள் சாபத்தால் உதித்த உலக்கை, கடலில் துகள்களாய் போடப்பட்டு பின்னர் கடற்புற்களாய் முளைத்தபோது, அவற்றை எடுத்து, யாதவர்களிடையே வீசி, ஆயுதங்களாய் ஆக்கிக் கொடுத்தவர்… தான் அவதரித்த குலத்தையே, ‘தீர்த்த சங்கோத்ரா’ என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களை கேளிக்கையில் ஆழ்த்தி கெடுமதி கொடுத்தவர்… ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்ல வைத்தவர்…” 

”நானும், என்னை உலக்கையின் எஞ்சிய இரும்புக் கம்பியால் கொன்று கொண்டேனே” என்று சொல்லப்போன சொல் விளங்கும் பெருமாளை பேச விடாது, அகத்தியர் இடைமறித்துப் பேசினார். 

“நீங்கள் குறிப்பிட்டதுபோல், தங்கள் நாயகருக்கு இப்போது தமிழ்க் குலம் கிடைத்துவிட்டது தாயே… எம் மக்களையும் கேளிக்கையில் ஆழ்த்தி, நிழல்களை நிஜங்களாகவும், நிஜங்களை நிழல்களாகவும் ஆக்கி விட்டார் அன்னையே… ஒருவனை வீரனாக்க, முப்பது பேரை பேடியாக்கும் திரையுலகில், என் மக்கள் கதாநாயகனிடம் ஒன்றிப் போய்விட்டார்கள் உத்தமியே… இப்போது, இவர்கள் சொல்வதே இவர்களுக்கு பகவத் கீதையாகப் போய்விட்டது. மாதாவே… ஒரு தாய், மகளாய் நினைத்து நட்ட புன்னை மரத்தை, தமக்கையாய் நினைத்து, அந்த மரத்தடியில் தலைவனைத் தீண்டத் துணியாத அந்தக் காலத் தலைவியின் இந்தக் கால கொள்ளுப் பேரன்களும், பேத்திகளும், ஆபாச திரைப்பட தொலைக்காட்சிகளைப் பார்த்து ‘ஜொள்ளு’ விடுகிறார்களே தாயாரே…” 

“அப்படி என்றால்…” 

“அதை என் வாயால் சொல்ல மாட்டேன் வைகுண்ட நாயகியே… கலை என்ற தேனை மேலோட்டமாக சுவைக்க வேண்டி எம் மக்கள், தேனுக்குள் விழுந்து சிறகிழக்கும் ஈக்கள் போல் பகுத்தறிவை இழந்துவிட்டார்களே பரந்தாமன் தேவியே…” 

தாயார் தன் கணிப்பைத் தெரிவித்தார். 

“உன் மக்கள் கலைத்தேனில் விழவில்லை… விஷத் தேனில் விழுந்து கிடக்கிறார்கள்… பிரபோ!… அகத்தியன் சார்பில் அடியாள் சொல்லும் விபரத்தையும் கேளுங்கள். தொலைக்காட்சிக்காரர்கள், தமிழர்களை பிச்சைக்காரர்களாய் ஆக்கிவிட்டார்கள். போட்டிகள் என்ற பேரில், பரிசு பரிசு என்று பார்ப்பவர்களை, கண்ணேந்து வதற்குப் பதிலாய் கையேந்த வைத்துவிட்டார்கள். அதுவும் டப்பாப் பரிசுகளைக் கொடுத்து, வாங்கியவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று அழைத்து, அதிர்ஷ்ட லட்சுமியான என்னைக் கொச்சைப் படுத்துகிறார்கள்… ஒரு பக்கம் இந்த நிலை… மறுபக்கமோ, சில ‘ஆஸ்பத்திரிவாசிகள்’ என்னை சூட் கேஸ்களில் சிறைசெய்து, வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார் கள்… எந்த மக்களிடம் நான் இருக்க வேண்டுமோ, அந்த மக்கள் பிச்சைக்காரர்களாய் ஆக, நானோ ஆட்சியாளர்களிட மும், ரௌடியார்களிடமும் சிறைபட்டுக் கிடக்கி றேன். எப்படியாவது என்னை மீட்க வேண்டும் பிரபுவே…” 

நாரணன், தன் நாயகியை அனுதாபமாய் பார்த்தபோது, நீரடியில் ஒரு சலசலப்பு. ஆதிகேசன், ஆயிரம் தலை களையும் திருப்பியபோது, நீராரும் கடலுடுத்து, நில மடந்தைக்கு எழிலான ஒரு சீரிளம் பெண் தோன்றினாள்… கரங் கூப்பி தலை தாழ்த்தினாள். அகத்திய, தொல்காப்பிய இலக்கிய கண்களாள்… பக்தி இலக்கிய படர் முகத்தாள்… ஐம்பெருங் காப்பியக் கழுத்தாள்…. அவள் இடுப்பிலே, சிற்றிலக்கிய ஒட்டியாணம்… விரல்களில், பத்துப் பாட்டு-எட்டுத் தொகை மோதிரங்கள், கால்களில், பாரதி, பாரதி தாச சலங்கைகள்… கால்களில், புதுக் கவிதைக் காலணிகள்… சங்க கால பார்வை… இந்தக் கால அலங் கோலம்… எந்தக் கேள்வியும் இல்லாமலே, இவள் விடை யளித்தாள். எல்லோருமாய் தனக்குப் போட்ட, பலவந்தமான சினிமா முக்காட்டை தூக்கிப் போட்டுவிட்டு, துயரோடு கேவிக் கேவி விளக்கம் சொன்னாள். 

“நான்… தமிழன்னை அல்லவாம், தாத்தாவே… எங்களுக்கு ஒரு, அசல் தமிழன்னைக் கிடைத்துவிட்டாள்… நீ போ… என்று என்னை, என் மக்களே கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்டார்கள்… அதுவும் முக்காபலா, டேக் இட் ஈஸி, மஸ்தானா… போன்ற கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி அனுப்பி விட்டார்கள் திருப்பதி நாயகா…” 

நாராயணருக்குப் பிரதியாய்,லட்சுமி, பேத்தியிடம் கேட்டாள். 

“புகுந்த இடம் விட்டு, பிறந்த இடம் வந்தது தப்பும்மா… நீயே… உன் மக்களை மீட்டி இருக்கலாமே… நீதான் கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய குடியைப் பெற்றவளாயிற்றே…” 

“நையாண்டி பேச… இது வேளையில்லை… பாட்டியே… அறியாமையில், கயிறை பாம்பு என்று நினைக்கும் இனத்தை மீட்கலாம்… ஆனால், அகங்காரத்தில் பாம்பையே கயிறாய் நினைக்கும் கயவாளிப் பிள்ளைகளை எப்படி மீட்க முடியும். தாத்தாவிடம் இருந்து சரியான பதில் கிடைக்குமுன்னர், நானோ… என் மகன் அகத்தியனோ… இந்த இடத்தைவிட்டு அகலப்போவதில்லை…” 

அப்போதும், ஆதிசேசன்தான் அசைந்து கொடுத்ததே தவிர, அந்த வாகனாதிபதி அல்ல… சிரித்தார்… ஒரே சிரிப்பாகச் சிரித்தார்… பெருஞ்சிரிப்பாய் சிரித்தவர் பின்னர் வாயடக்கிப் பார்த்தார். கண்ணெதிரே, அவருடைய மருமகன் திருமுருகன்… கண்களில், சூரபத்மனை வதம் செய்யப் போனபோது கூட இல்லாத நெருப்புக் கோளங்கள்… தோளுக்கு மேல் போன வேல்… 

தமிழ்க் கடவுளான முருகன், தாய்மாமனும், மாமனாருமான கேசவனைப் பார்க்காததுபோல் பார்த்து, மாப்பிள்ளை முறுக்கோடு’ பேசினான். பேசவில்லை… சூளுரைத்தான்… 

‘எல்லா இனத்தையும், வாழ்வாங்கு வாழவிட்டு, என் இனத்தை மட்டும் தளர விட்டவரை விடமாட்டேன்… எல்லா இனத்தையும் பரிணாமப்படி வளர்வதற்கு விதியமைத்து… கன்னடனை நளினமாக்கி, மலையாளியை அறிவாளியாக்கி, சினிமாத் தெலுங்கனையும் மீட்டு, மராட்டியனை மலரச் செய்து, யாதவர்களை எழுச்சியுறச் செய்து, என் தமிழனின் தலைவிதியை மட்டும் மட்டமாக எழுதிய பிருமனை, மீண்டும் சிறையில் அடைக்கப் போகிறேன். என் தமிழ் மக்களின் இந்த நிலைமைக்கு காரணமான அந்த பிரும்மனை நான் சிறையெடுப்பதை, யாராலும் தடுக்க முடியாது…” 

எல்லாம் வல்ல முருகனின் சூளுரை கேட்டு, நாராயணன் தவிர, அனைவரும் திடுக்கிட்டனர். ஆனால் ஆதி மூலமோ.. எகத் தாளமாய், யாருக்கோ சொல்வது போல் விளக்கினார். 

“பிரமனைக் குற்றம் சொல்வது நன்றன்று. தமிழ் இனத்தின் மேல் ஒரு சாபம் உள்ளது. கனக விசயர் சாபம்.. இந்த இரு வடபுலத்து மன்னர்களும் தமிழைப் பழித்தார்கள் என்பதற்காக, சேரன் செங்குட்டுவன், அவர்கள் தலைகளில் கற்களை ஏற்றிக் கொண்டு வந்தான். தற்குறிகளான கனக விசயருக்கு, தமிழை ஊட்டாமல், அவர்களைக் கேவலப்படுத்தி, அவன் இன மக்களை அசிங்கப்படுத்தி, கண்ணகி கோட்டம் அமைத்தான். அதுவும்,இவர்களை நாவலந் தீவின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு முனைக்கு, கொடூரமாக நடத்திக் கொண்டு வந்திருக்கிறான்… ஆக, கனகவிசயர் தலை சுமந்த கற்களில் ஒன்று, தமிழ் னத்தின் மீதும் விழுந்தது. வீரத்தைக்காட்ட மனிதாபி மானத்தை பலியிட்ட தமிழினம், இதனால் பேடிகளாய் போய்விட்டது… இதில் நான் செய்வதற்கு ஏதுமில்லை…” 

நாராயணன் கைவிரித்தபோது, அகத்தியர் இயலாமை யால் கைநெரித்தார். ஆனாலும் வாதாடினார். 

“சும்மா இருப்பதே சுகம் என்று இருந்தால், தங்களுக்கும் சுகக் கேடு ஏற்படும் பிரபோ… தமிழகத்தில் பிறரின் சொத்துக்களை ஆக்கிரமிக்கும் ஒரு பயங்கரக் கும்பல், இங்கேயும் வரும்… நீங்கள், ஆதிசேசனை விட்டு ஒரு அடி நகர்ந்தால் போதும்… உடனே அந்த அதிரடிக் கும்பல்… பிரும்மனையும் மிரட்டி, பட்டா வாங்கி, இந்த ஆதிசேச அற்புதத்தை உரிமையாக்கிக் கொள்ளும்… இது இன்றைய தமிழக யதார்த்தம் பிரபுவே…” 

தாயாரான லட்சுமி தேவி, திடுக்கிட்டு ‘எங்கேயும் செல்லாதீர்கள்’ என்பதுபோல், தனது நாயகனின் திருப் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்… லட்சுமணனாகவும், பலராமனாகவும் அவதாரம் மேற் கொண்ட ஆதிசேசன், கோபத்தால் கண் சிவந்து, தனது அண்ட கோடி வாலை எடுத்து, பூலோகத்திற்கு குறிவைத்து கடலில் அடித்தது. அவ்வளவுதான்… பூமியில் பேய் மழை பெய்தது… அணுகுண்டு மேற்பரப்பில் வெடித்தது. பூகம்பங்கள் தோன்றின… அப்போதும், தமிழ் இனம், தொலைக்காட்சிப் பெட்டிகள் முன்னால், முத்தம் கொடுத்தது போல் பேசும் இளம் பெண்களின் அசைவுகளில் லயித்துக் கொண்டும், மேடைகளில் தலைவர்களின் கால்களில் தன் தலைகளைப் போட்டுக் கொண்டும், கிடந்தது… இதை தொலை நோக்காய் பார்த்து, அத்தனை பேரும் முகம் சுழித்தபோது, அகத்தியர் மீண்டும் விடாப்பிடியாய் கேட்டார். 

‘நற்பிறவி எடுத்து இழிபிறவியாய் போன என் இனத்தை மீட்டுக் கொடுங்கள் மேய்ப்பரே…” 

”சரி பிள்ளாய்… காலம் கனியட்டும்… விரைவில் மீண்டும் தமிழகத்தில் எனது அவதாரம் எடுத்து… உன் மக்களை மீட்கிறேன்…” உலகத்திற்கெல்லாம் ஒவ்வொரு அவதாரமாக எடுத்த யாம் தமிழகத்திற்காக மட்டும், தனி அவதாரம் எடுக்கவேண்டும்.” 

“நன்றி பிரபோ… நன்றி … நான் தன்யனானேன். ஆனாலும், அதிகப் பிரசங்கித்தனமாய், நான் சொல்வதாய் நினைக்காதீர்கள் அலங்காரப் பிரியரே… ஒங்கள் அவதாரம், தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும்… அது சாகச நாய கனாய்… காதல் மன்னனாய்… பலரைக் கொல்லும் நாயகனாய்… மலைவிட்டு மலைகுதிக்கும் மாவீரனாய் நடிக்க வேண்டும். இல்லையானால், கோவிந்தனான நீங்களே கோவிந்தா ஆவீர்கள்… இன்னும் ஒரே ஒரு கேள்வி கேட்க அனுமதி வேண்டும் பிரபோ… காலம் கனிவதை… நாங்கள் எப்படிக் கண்டுபிடிப்பது… கலியுக வரதா…?” 

“தேவ ரகசியத்தை சொல்லக் கூடாது… ஆனாலும் சொல்கிறேன்… தமிழகத்தில், இன்னும் இரண்டு தலைமுறைகள் கடந்து, மூன்றாவது தலைமுறையில் கலி முற்றும்… வீடு கட்டி பலனில்லை என்று பெரும்பாலான மக்கள், வீதியில் கிடப்பார்கள்… மருத்துவமனைகளில் பட்டு மெத்தைகளும், குளிர் சாதனப் பெட்டிகளும் தொலைத் தொடர்பு சாதனங்களும் வைக்கப்படும்… ஆனாலும் மக்கள் அங்கே செல்வதற்கு தடை விதிக்கப்படும்.” 

வைத்தீஸ்வரன் பிள்ளை பொருள்படப் பார்த்தான். நாரணர் தொடர்ந்தார். 

“அதோடு, தமிழ்க் கலாச்சாரம் பொங்கி பூரிக்கும். கல்யாண மண்டபங்களில், புதுமணத்தம்பதி அம்மணமாய் ஆடிக் காட்டினால்தான், சமுதாயம் அவர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும். புதுக் கணவன், பத்துபேரை காசு கொடுத்தாவது தன்னால் அடிபட்டதுபோல் நடிக்க வைத்தால்தான், அந்த ‘வீரக்’ கணவனின் இச்சைக்கு இளம் மனைவி உடன்படுவாள்… வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு வரவேற்பு வளையம் வைத்தால்தான் அது வெளிப்படும். ‘நன்றி தாயே நன்றி’ என்று பிறந்த குழந்தை, போஸ்டர் போட்டால்தான், பெற்ற தாயே பிள்ளைக்குப் பால் கொடுப்பாள்…” 

நாரணர், மருமகனை ஒரு நமுட்டுச் சிரிப்பாய் பார்த்துவிட்டு, தாள லயத்தோடு தொடர்ந்தார். 

”எல்லாவற்றிற்கும் மேலாக… தமிழக மக்களின் ஒட்டுமொத்தமான பயபக்தியோடு, திரைப்படங்களில் நிசமான ஓநாய்கள்… பன்றிகள்… கழுதைகள்… காக்காக்கள் நடிக்கும்…இவைகளுக்கு தமிழக மக்கள் பயபக்தியோடு ரசிகர் மன்றங்களைத் தோற்றுவிப்பார்கள்… காலப்போக்கில் இந்த நடிப்புப் பிராணிகளில் ஒன்று குறிப்பாக ஒரு பன்றி முதலமைச்சராகும். எஞ்சியவை அமைச்சர்களாகவும், சர்வகட்சித் தலைவர்களாகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும் பதவி ஏற்கும். இப்படிப்பட்ட காலத் தோற்றத்தில், நான் கண்டிப்பாய் அவதாரம் எடுப்பேன். நல்லது… சென்று வா அகத்தியா… நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையோடு போய் வாபேத்தியே…” 

நாரணர், இனிப் பேசுவதற்கு எதுவும் இல்லை என்பதுபோல் யோக நித்திரையில் ஆழ்ந்தார்… 

பயங்கரமான புலி ஒன்று மாட்டு மந்தைக்குள் சென்று ஒரே ஒரு மாட்டை மட்டும் தனிப்படுத்தி, அதைத் தாக்குவதுபோல், ஊழ்வினை என்னும் புலி மனித இனங்களுக்குள் பாய்ந்து தமிழினத்தை மட்டும் தனிப்படுத்தி அதைத் தாக்குவது கண்டு, பிரமனை சிறை செய்து, அவன் ஏவி விட்ட அந்தப் புலியையும் வீழ்த்த நினைத்த முருகன் இப்போது வேலாலேயே தன் தலையில் அடித்துக் கொண்டான்… இன்றைய தமிழ் இனம் இதை விட மோசமான இழிநிலைக்கு போகப் போகிறதே என்று பொருமினான்… பிறகு, தான் தமிழ் கடவுள் அல்ல என்று பிரகடனம் செய்யலாமா என்று யோசித்துக் கொண்டான். தமழன்னை அங்கிருந்து போக மறுக்கிறாள்… அகத்தியர் மீண்டும் வடபுலத்திற்கு போகலாமா என்பது போல் யோசிக்கிறாள். 

– வாசுகி பொங்கல் மலர், 1996.

– ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும், முதற் பதிப்பு: மே 1996, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

சு.சமுத்திரம் சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *