பொங்கல் மகிழ்ச்சி
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2026
பார்வையிட்டோர்: 3,289
மார்கழி மாதத்தின் ஞாயிற்றுக் கிழமை. பிற்பகல் வேளை . பாழடைந்த மாளிகை ஒன்றின் மொட்டை மாடியில் ஆண் குரலும் பெண் குரலும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் உரையாடலில் இடையே புகுந்தது மற்றொரு ஆண் குரல்.
“வாழும் போதுதான் சண்டை போட்டுக்கறீங்க இப்ப ஆவியானப்புறமும் ஏன் இப்படி சண்டை போட்டுக்கறீங்க ரெண்டு பேரும்?“
“நல்லா கேளுங்க தம்பி நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி” என்றது பெண் குரல் .
“நாக்கு எங்கே இருக்கு பிடுங்கிக்க.. அதான் கேட்டேனேம்மா ஏன் ரெண்டு பேருக்கும் ஆவியடங்கி ஆவியானப்புறமும் எதை பத்தி வாக்குவாதம் உங்களுக்குள்ள…”
இடையில் புகுந்த ஆண் குரல் கேட்டது.…
பெண் குரலின் பதில் –
“பசங்களுக்கு எல்லா வீட்லேயும் அம்மா செல்லம் கொடுப்பாங்க… அப்பா கண்டிப்பா இருப்பாங்கன்னு சொல்வாங்க.. நான் கண்டிப்பா வளர்த்தேன் என் பசங்கள இவுரு செல்லம் கொடுத்து கெடுத்தாரு.. அதோ எதிர்க்க இருக்கற வீடுதான் எங்க மூணு பிள்ளைங்க வீடு…“
“அவங்களுக்கு என்ன அண்ணன் தம்பி மூணு பேரும் இந்த காலத்துல ஒரே வீட்ல ஒத்துமையா இல்ல இருக்காங்க அப்புறம் என்ன ?“
“நீங்க வேற தனித்தனியா குடித்தனம் போனா வாடகை கொடுக்கணும் இல்ல. அது நாங்க அவங்களுக்கு கொடுத்துட்டு வந்த வீடு மூணு பேரும் அவங்க அவங்க பெண்டாட்டி பிள்ளையோட அந்த வீட்ல இருக்காங்க … வேலைவெட்டி இல்லாம இருந்து மூணு பேருக்கும் தலையை சுத்தி கடன்… எங்க மருமகள்கள் தான் வேலைக்கு போய் குடும்பத்தை நடத்திக்கிட்டு இருக்காங்க… இப்படி பசங்க இருக்கறதுக்கு இவருதான் காரணம்னு சொல்லிகிட்டு இருக்கேன் மேஜிசியன்…”
“நான் மேஜிக் காரன்னு உனக்கு எப்படி தெரியும் அம்மா…”
“போன வருசம் எங்க ஊர்ல பொங்கல் திருவிழாவுல நீ தானே தம்பி மேஜிக் நிகழ்ச்சி நடத்தினே … நீ இப்ப மேல வந்துட்டே…”
“அல்ப ஆயுசுல கதை முடிஞ்சதால சுத்திகிட்டு இருக்கேன் … ஒங்க பிள்ளைங்க அவங்க வாழ்க்கைய பார்த்துக்கப் போறாங்க… ஒங்களுக்கு என்ன அமைதியா இருங்க…”
பெண் குரல் பேசியது –
“பட்டனத்துல இருக்கிற எங்க பொண்ணு அவளோட பையன அனுப்பி வெச்சு இருக்கா.. தம்பிகளோட பணப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க …. பாரு அங்க திண்ணையில உட்கார்ந்துக்கற இளைஞன் தான் எங்க மகள் வழிப் பேரன் சுபாசு…”
மேஜிசியன் சிரித்தான் –
“ஒங்க பேரன் என்ன பண மூட்டை கொண்டு வந்திருக்காரா…“
பெண் குரல் – “அவன் இந்த ஊர் தலைக்கட்டு கிட்ட பேசி கடனுக்காக நிலபுலன் எல்லாம் வீடு எல்லாம் கொடுங்கன்னு மாமாக்கள் கிட்ட கேட்காதீங்க.. தாத்தாவுக்கு வர வேண்டிய பணம் எல்லாம் பார்த்து வசூலிச்சு கொடுக்கறேன்னு சொல்லி கால அவகாசம் வாங்கிட்டு வந்திருக்கான்..“
இது வரை பேசாமல் இருந்த அவளுடைய கணவர் ஆவி பேசியது –
“தம்பி மேஜிக்..“
“என் பேரு சாந்தாராம்…”
“சரி சாந்தாராம் … நான் தபால் ஆபீஸ்ல போட்டு வெச்சிருக்கிற பணம் பத்தி உனக்கு தகவல் சொல்றேன்… ட்ரங்க் பெட்டில அந்த ரசீது இருக்கு எங்க பேரன் கிட்ட சொல்லிட்டு வர முடியுமா? தயவு பண்ணுங்க…“
“எதுக்கு ? அந்த பணத்தையும் ஒங்க அருமை பிள்ளைங்க வேட்டு விடறதுக்கா…”
பெண் குரல் கெஞ்சியது –
“தம்பி சாந்தா… கொஞ்சம் ஏதாவது செய் அப்பா”
“நானும் ஒங்கள மாதிரி ஆவிதானே… எனக்கு என்ன விசேச சக்தியா இருக்கு… சரி ஒங்களுக்காக முயற்சி செஞ்சு பார்க்கறேன்.“
***
அன்று மாலை நேரம். வாசலில் உள்ள திண்ணையில் அமர்ந்திருந்த இளைஞன் சுபாஷ் , கையில் வைத்திருந்த புத்தகத்தில் மனம் லயிக்காமல் தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் .
அந்த தெருவில் வசிக்கும் சேட்டு வீட்டுப் பெண்மணி ஒருவர் இந்திரா விகாஸ்… இந்திரா விகாஸ் எங்கே போனீங்க என்று உரத்த குரலில் கூறிக் கொண்டே சென்றார். சுபாஷின் மூளையில் ஏதோ பொறி தட்டியது. அப்போது வாசல் அருகே அவனுடைய பெரிய மாமா முத்துசாமியின் மனைவி ராதா வந்து நின்றார்.
“என்ன சுபாஷ் திடீர்ன்னு முகம் பிரகாசமாயிடுச்சு… ”
“இல்ல மாமி .. தாத்தாவோட ட்ரங்க் பெட்டிய பார்க்காம விட்டுட்டோமே … கொள்ளு தாத்தா சொத்து எல்லாம் வித்து கிடைச்ச பாக பணத்தை போஸ்ட் ஆபீஸ் ஸ்மால் சேவிங்ங்ஸ் ஸ்கீம்ல அதுவும் இந்திரா விகாஸ் பத்திரத்துல போட்டு வெச்சேன்னு தாத்தா, அம்மாவுக்கு ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னால லெட்டர் எழுதினாரு அம்மாவுக்கும் மறந்திடுச்சு.. இப்ப தான் எனக்கு நினைவு வந்துச்சு…”
“அதை மட்டும் லேசில எடுத்துட முடியமாப்பா… ஒங்க தாத்தா ஒண்ணும் எழுதி வெச்சுட்டு போகலேன்னு ஒன் தாய் மாமாக்கள் வாரிசு சர்டிபிகேட் கூட வாங்காம சுத்திகிட்டு இருக்காங்க…”
“அதுக்கு நாமினி ல்லாம் வேண்டாம் மாமி… அந்த ஐவிபி டெபாசிட் சர்ட்டிபிகேட் இருந்தா போதும் யார் கொண்டு கொடுத்தாலும் போஸ்ட் ஆபீஸ்ல அசல் வட்டி சேர்த்து பணம் கொடுத்துடுவாங்க.. தாத்தா ஒங்க கிட்ட சொல்லாம போயிட்டாரு போல தாத்தா பெட்டில அந்த சர்ட்டிபிகேட் இருக்கான்னு பார்ப்போம் வாங்க…”
மாடிப் படிகளிலிருந்து சுபாஷின் மூன்று மாமாக்களும் இறங்கி வந்தனர். மாமி ராதா, எதுவும் சொல்லாதே என்று சுபாஷுக்கு மட்டும் புரிவது போல் ஜாடை காட்டியதால், சுபாஷ் , தன்னுடைய பையிலிருந்து வேறொரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வாசல் திண்ணையை நோக்கிச் சென்றான்.
***
புளிய மரத்தின் உச்சியில் இருந்து அந்த முதிய ஜோடியின் ஆவிகள், தங்கள் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
“இந்த மேஜிக் என்ன பண்ணாருன்னு தெரியலையே”
பெண் குரல் அங்கலாய்த்தது.
“நான் இங்க தான் இருக்கேன்…” மேஜிக்கின் குரல் ஒலித்தது.
“யோவ்… எங்கேயா போனே.. இத்தனை நாளா..?“
“யோவ்வா…”
“அவரு கிடக்கிறாரு தம்பி என்ன ஆச்சு எங்க குடும்ப கதை அதை சொல்லு ..”
“நான் சேட்டு வீட்டு அம்மா மூலமா க்ளூ கொடுத்தேன் சுபாஷ் புரிஞ்சுகிட்டாரு… அவுரு , தாத்தா பெட்டிலேந்து அந்த முதலீட்டுப் பத்திரத்தை எடுத்துட்டாரு… பணமாக்கிட்டாரு. பெண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் அதை ஒங்க மூணு பிள்ளைங்களும் செய்யல… அதனால ஒங்க மூணு பிள்ளைங்களும் திருந்த மாட்டாங்கறதை தெரிஞ்சுகிட்டு ஒங்க மூத்த மருமகள் ராதாம்மா வழிகாட்டுதல்ல, ஒங்க பேரன் சுபாஷ், அந்த பெருந்தொகையான இருபது இலட்சத்துலேந்து நாலு இலட்சத்தை எடுத்து தாய் மாமாக்களுக்கு தலையை சுத்தி இருக்கிற கடனை எல்லாம் பைசா பாக்கி இல்லாம அடைச்சிட்டு மாமாக்கள்கிட்ட சென்னையிலிருந்து அப்பா கொடுத்து விட்ட பணம்ன்னு சொல்லிட்டாரு.. மீதி உள்ள பெருந்தொகையை சுபாஷ், ராதா கிட்டயே கொடுத்துட்டாரு… அவங்க மறுத்துட்டாங்க… ஏன் வேலைக்கு போற மெட்ராஸ்ல இந்த பணத்தை வெச்சு சுயமா பிசினஸ் ஆரம்பின்னு சொன்னாங்க… ஆனால் , சுபாஷ், நீங்க ஆறை நூறாக்கும் சாமர்த்தியம் உடையவங்க.. நீங்க இதை வெச்சு மூணு குடும்பத்தையும் வளமாக்கிடுங்கன்னு அவங்க கிட்டயே கொடுத்துட்டு கிளம்பிட்டாரு… ஒங்க பேரனுக்கு இந்த வயசுல எவ்வளவு பக்குவம் பாருங்க…. நாளைக்கு ஒங்க வீடல பொங்கல் மகிழ்ச்சியா கொண்டாடுவதற்கு ஒங்க பேரன் சுபாஷ்தான் காரணம்… பெண், மதிநுட்பம் உடையவள்ன்னு நிரூபிச்ச ஒங்க மூத்த மருமகளும் காரணம்”
“ரொம்ப நன்றிப்பா” என்று ஆண் குரலும் பெண் குரலும் ஒன்றாக ஒலித்தன. “எமனோட பாசக் கயித்துல மாட்டியும் பாசம் விட்டுப் போகலியே ஒங்களுக்கு” என்றான் சாந்தாராம்.
குறிப்பு –
விண்ணப்பம் , முதலீட்டாளரின் பெயர் எதுவும் இல்லாமல் இருக்க கூடிய முதலீட்டின் பேரில் பெறத்தக்க, அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் ஒன்றாக ‘ இந்திரா விகாஸ் பத்திரம் ‘ என்று ஒரு சிறுசேமிப்புத் திட்டம் இருந்தது. அந்த சான்றிதழ் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் , முதிர்வுக்குப் பின் அந்த பத்திரத்தை காட்டி அந்த முதலீட்டில் உள்ள தொகையை அஞ்சலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும். சிலபல காரணங்களால் தொண்ணூறுகளின் இறுதியில் இந்த ஐவிபி ரத்து செய்யப்பட்டு விட்டது.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |

