பெரியோன்




பகலாயி வயதான கைம்பெண். கச்சலான உடம்பு. உழைப்பின் தளர்ச்சி தேகமெங்கும் ஆலவட்டம் போட்டது. கசதி நிறைந்த வாழ்க்கை. அவள் கணவனின் அகால மரணம் பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. ஏலச் சீட்டு நடத்தி எதிரிகளைச் சம்பாதித்தவனுக்கு இப்படியா நேர வேண்டும்..கல்லுளிமங்கன் ஒருவனுக்கு கசிர்த் தொகை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் கைகலப்பு. உதிரம் கொட்டியது. அனாதையாய் இறந்து கிடந்தான். கையறுநிலைக்குத் தள்ளப்பட்டாள் பகலாயி .

மழலைச் சத்தம் ஒலிக்காத சிறிய வீடும், புழைக்கடையில் உள்ள இத்துனூண்டு நிலமும் அவளைத் தக்கவைத்துக்கொண்டிருந்தது. தவசிக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை, புதினா, எலுமிச்சை, பப்பாளி என்று தழைத்துக் கிடக்கும் சின்னஞ் சிறு தோட்டத்தின் விளைச்சலை சேகரித்து அருகே இருக்கும் ரோட்டு சந்தையில் காசு பண்ணி காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தாள்.
‘தாயீ! நீ ஒண்ணும் விதவை இல்லை…நாங்கதான் உனக்குப் பிள்ளைகள்!’ என்று அவை சொல்வதுபோல் அவளுக்குள் ஓர் ஆத்மார்த்தமான உணர்வு .
விடியலும் நாட்களும் இயல்பாகத்தான் நகர்ந்து கொண்டிருந்தன .
ஒருநாள் –
அவள் வீட்டுக்கு அருகே சற்று நெருங்கியிருந்த ஆயில் மில் ஓனர் பச்சியப்பன் அவளை அழைத்தான்.
அவள் கணவன் அந்த மில்லில் பணியாற்றிய காலத்துக்குக் கிடைக்க வேண்டிய கருணைத்தொகைக்காகப் போராடித் தோற்றுப்போனதை நினைத்துப் பார்த்தாள்.
‘இப்ப அதுக்குன்னு நேரம் வந்திருச்சு போலிருக்கு…ஏதோ கொஞ்சம் பணம் கிடைக்கும்’
அப்படிப் போனவளுக்கு அவள் நினைப்பில் மண் விழுந்தது.மடியில் இடி இறங்கியது .
அந்தக் குரூர மனிதன் இப்படிப் பேசினான்:
‘இத பாரு பகலாயி! உனக்கு வயசாயிட்டே போகுது..உன்னைத்தான் நான் தெனமும் பாக்கறேனே..இந்த தோட்டம், வியாபாரம், புண்ணாக்கு இதெல்லாம் வேண்டாம்..வீடும் ரொம்பப் பழசாயிருச்சு..அதுக்கும் வயசாகுதுல்லே! வீட்டையும் இடத்தையும் நான் வாங்கிக்கறேன்..தொகையை பேங்க்லே போட்டிரலாம்..நீ என் வீட்டுக்கு வந்துரு..வீட்டு வேலையைப் பாத்திட்டு இரு..மாசா மாசம் சம்பளம் கொடுத்துடறேன..எனக்கு இங்கே ஒரு ஆயில் கிடங்கு கட்டணும்..உன்னோட இடம் தோதாப்படுது..நல்லா யோசிச்சு சொல்லு’
என்னே காழ்ப்பு! அழுதாள்; மருண்டாள் .
திடீரென்று அவன் இப்படிக் குருட்டடியாய்க் கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை.
‘வீடும் தோட்டமும் எனக்குப் பிள்ளைகள் மாதிரி. செத்தால் சுடுகாடு எனக்கு இந்த மண்ணுலேதான்!’
பகலாயி துணிந்தவள். அஞ்சாத நெஞ்சம் கொண்டவள். அவள் கடைக்குக் காய்கறி வாங்கவரும் ஒரு வக்கீலம்மாவைத் தெரியும்.
வீட்டுக்கே போய் வக்கீலம்மாவைப் பார்த்தாள். விபரம் சொன்னாள் .
‘கவலைப் படாதே பகலாயி! மறுபடியும் அவன் வந்தான்னா மூணு மாசம் அவகாசம் கேளு..அப்புறம் பார்த்துக்கலாம்’.
அடுத்த நாளே சிடுசிடுத்தவாறு வந்தான். வக்கீலம்மா சொன்னபடியே ‘கால அவகாசம் ‘ கேட்டு வைத்தாள் .
அடிக்கடி வக்கீலம்மாவைப் பார்ப்பதில் அதிக நேரம் செலவழித்தாள். எப்படியும் வீட்டையும், நிலத்தையும் அந்தப் பாவியிடமிருந்து காப்பாற்றியாக வேண்டும்…என்ன ஆனாலும் பரவாயில்லை.
ஏறக்குறைய ஒரு மாதம் கடந்து விட்டது.
என்னாயிற்று இந்த பச்சியப்பனுக்கு…அரசல்புரசலாக செய்தி வந்தது. வீட்டில், மனைவியுடன் பிரச்சனை.
இருவருக்கும் மத்தியில் பித்துப் பிடித்து நிற்கும் பத்து வயசு மகள் சிந்தாமணி. யாரோ ஒரு பெரியவர் பஞ்சாயத்துப் பண்ணிக்கொண்டிருப்பதாகக் கேள்வி .
என்ன நடந்தாலும் அவனை நம்ப முடியாது. ஒருநாள் பகலாயி ,வக்கீலம்மா வீட்டுக்குப் போனபோது —
“பகலாயி! ஜட்ஜ் கிட்டேப் பேசிட்டேன்..கொஞ்சம் பணம் செலவாகும் போல!”
“அம்மா! என்ன ஆனாலும் பரவாயில்லே..என்கிட்டே கொஞ்சம் பணம் இருக்கு..எனக்கு சட்டம் ,கோர்ட் எல்லாம் எதுவும் தெரியாது”.
“அட..நீ எங்கயும் வரவேண்டாம்..நான் பாத்துக்கறேன்..முதல் தவணையா ஒரு … ஐயாயிரம் தர முடியுமா”
“ஆகட்டுங்க வக்கீலம்மா..இந்த வாரக் கடைசில தரட்டுமா”
“சரி. கொஞ்சம் பேப்பர்லே கைநாட்டு வக்க வேண்டியிருக்கும்..அதைப் பத்தி அப்புறம் சொல்றேன்..முதல்லே பணம் இருந்தாத்தான் ஜட்ஜ் கிட்டப் பேசமுடியும்..!”
ஒரு மாலைநேரத்தில் சந்தை வணிகத்தை முடித்துக்கொண்டு, மடியில் கனத்துடன், பகலாயி வக்கீலம்மாவைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தாள். வழியில், ஒரு பெரியவர் அவளை வழிமறித்தார்.
வெண்தாடியுடன் பார்ப்பதற்கு கண்ணியமாகத் தெரிந்தார். கதர் வேட்டியும், சந்தன கலரில் சட்டையும் அணிந்தவராய் இருந்த அவரைப் பார்த்ததும், அவள் ஒதுங்கி நின்றாள். ஆபத்பாந்தவன்?
”ஏம்மா…நீ?”
“ஆயில் மில் பச்சியப்பன் சொன்ன பகலாயிதானே”
“ஆமாங்க அய்யா”
“எல்லாம் கேள்விப்பட்டேன்…இப்ப எங்க அவனைப் பாக்கறதுக்கா போயிட்டிருக்கே “
“இல்லீங்க..அவன் விஷயமாத்தான் வக்கீலம்மாவைப் பாக்கறதுக்குப் போய்ட்டிருக்கேன் ”
முழு விபரத்தையும் அவரிடம் ஒரு நிமிடத்தில் சொல்லி முடித்தாள் பகலாயி .
சுற்றும் முற்றும் கவனித்த அப்பெரியவர், “ஏம்மா…நீ என்ன இப்படி வெள்ளந்தியா இருக்கே..கொஞ்சம் விபரம் தெரிஞ்சவங்க கிட்டே கேட்டுக்க வேண்டாமா..அந்த வக்கீலம்மான்னு நீ சொல்றியே…அவ ஊரை ஏமாத்திட்டு, ஜட்ஜெ கைக்குள்ளே போட்டுட்டு, உம்மாதிரி ஏமாளிகளோட நிலத்தை ஆட்டையெப் போடற பொம்பளே அவ….கடைசிக்கு உன்னையே ஒரு நாளைக்கு ஈவு இரக்கம் பாக்காம நடுத்தெருவிலே கொண்டு வந்து நிறுத்திருவா!.பாத்து சூதானமா நடந்துக்க”.
அவள் திடுக்கிட்டுப் போய் , செய்வதறியாது விழித்தாள் .
“பச்சியப்பன் இனி உன்னோட விஷயத்திலே தலையிடமாட்டான்..நான் பாத்துக்கறேன்..நீ அந்த வக்கீலம்மா கண்ணுலே படாம இரு..நானே உன்னை கடைப்பக்கம் வந்து பாக்கறேன்..தைரியமா இரு”.
அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இந்த உலகத்தில் யாரைத்தான் நம்புவது?
அப்படி இப்படியென்று ஒரு மாதம் போனதே தெரியவில்லை. பகலாயிக்கு தினமும் தவிப்புதான்.
‘இந்தப் பெரிய மனுஷன் சொன்னது அப்படியே பலிச்சிருச்சு’. வக்கீலம்மா போலீசில் மாட்டிக்கொண்டாள் .
ஏதோ பட்டா வாங்கிக் கொடுக்கிற விஷயத்தில் சிக்கிக் கொண்டதாகப் பேசிக் கொண்டார்கள் .
பகலாயி ஒரு வாரமாக வியாபாரத்துக்குப் போகவில்லை. வைரல் ஃபீவர்.படுத்த படுக்கை. கஞ்சி காய்ச்சிக் குடித்தவாறு அல்லலுற்றாள்.
வாசலில் நிழலாடியது. அந்தப் பெரியவரும், பச்சியப்பனும், அவன் மகள் சிந்தாமணியும்.
பெரியவர்தான் பேசினார்:
“அம்மா பகலாயி! இப்ப நான் சொல்றதை கவனமா கேட்டுக்க.. இதோ நிக்கறானே பச்சியப்பன்..இவனையும் இந்தப் பொண்ணையும் விட்டுட்டு, இவன் பொண்டாட்டி வேறொருத்தனோட ஓடிட்டா..நானும் எவ்வளவோ பேசிப்பார்த்துட்டேன்..ஒண்ணும் கதைக்கு ஆகலே..உன்னோட வீடு, நிலத்து மேலே அந்த வக்கீலம்மாவுக்கு ஒரு கண்ணுங்கற விஷயம் உனக்குத் தெரியாது..அந்தப் பொம்பளை ஏவி விட்டுத்தான் இவனே உன்னைப் பாக்க வந்தது..கடைசிக்கு வேற ஒரு பிரச்சனைலே அவளைப் போலீஸ் பிடிச்சிட்டு போயிருச்சு..அது இருக்கட்டும். இந்தப் பச்சியப்பன் மில்லுலேதான் நானும் இருக்கேன்..ஏதோ என்னாலே ஆன உதவிய நாலு பேருக்குச் செய்துட்டு வர்றேன்னு வச்சுக்கோயேன்..இப்ப விஷயத்துக்கு வர்றேன்..இந்தப் பச்சியப்பன் வீட்டுக்கு நீ வந்துரு..இவன் உன் பையன் மாதிரி..இவ பாவம்..தாயி இல்லாத பொண்ணு..உனக்குப் பேத்தி மாதிரி..உன்னோட வீடும் நிலமும் அப்படியே இருக்கும்..பச்சியப்பனுக்கு அதுமேலயெல்லாம் ஆசை கிடையாது.. தானுண்டு மில்லுண்டுன்னுதான் இருப்பான்..உன்னாலேயும் தனியா இருக்க முடியாது..யோசிச்சு சொல்லு ”
அவள் சிறிது நேரம் மௌனம் காத்தாள்.
“பாட்டி! தோட்டத்தை நான் பாத்துக்கறேன்! பள்ளிக்கூடம் முடிஞ்சதும் எனக்கு அதுதான் வேலை!” என்ற பச்சியப்பன் மகள் சிந்தாமணியை, பகலாயி அணைத்துக் கொண்டாள்.
பெரியவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.