பெரியநாயகி உலா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 4, 2025
பார்வையிட்டோர்: 289 
 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நூறு வருஷமாகக் கால் சதங்கை ஊமையாகவே இருந்தது. சதங்கையை அணிந்த பெரியநாயகிக்கு நின்று நின்று கால்கள் கடுத்துவிட்டன. கருப்பையைப் போன்ற இருளும், கண்மூடா விளக்கொளியும் தவிர அவளுக்குத் துணை இல்லை. நூறு வருஷமாகத் தனித்து நின்ற அலுப்பு. வெளியே சென்று வந்தா லென்ன ? ஒரு சின்ன உலா ! 

எண்ணமே செயல்தானே ? எண்ணம் பிறந்ததும் கால்கள் நகர்ந்தன. கல், கல் என்று சதங்கைகள் ஒலித்தன. அர்த்த மண்டபத்து வாயிலண்டை உருவிய கத்தியும் கோரைப் பல்லும் மின்ன நின்றுகொண்டிருந்த ஜயையும் விஜயையும், ‘கோயிலுக்குள் யாருமே போக வில்லையே! சதங்கை ஒலி ஏது ?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். ‘பெரியநாயகி நின்றுகொண்டு தானே இருக்கிறாள்-நம்மைப் போல ? சதங்கை ஒலி எங்கிருந்து வந்தது?’ இந்தச் சந்தேகம் முளைத்ததும் கழுத்தைத் திருப்பி அர்த்த மண்டபத்தைப் பார்க்க முடிந்தது. எண்ணமே செயல் தானே ? 

என்ன ஆச்சரியம் ! பீடத்தை விட்டு இறங்கி, பெரியநாயகி வெளியே வந்துகொண்டிருந்தாள். வாயில் காப்பாளர்களுக்குப் பெரியநாயகி பின் செயல் புரியவில்லை. ஆனால் எஜமானியைக் கேட்க வேலைக் காரிகள் யார் ? கேட்க முடியவும் இல்லை. தேவதாரு மரத்துக்கு மேலே, காலைக் கதிரொளி பட்ட சிகரம்போல் பெரியநாயகியின் அழகும் அமலும் ஊமையாக்கும் வியப்பாய் எழுந்தன. வாயில் காப்பாளர்கள் வாய டைத்து நின்றார்கள். 

“அடீ ஜயை, விஜயை ! இப்படியே உலாச் சென்று வருவோம்.” 

“நீங்கள் உண்டாக்கிய உலகில் நீங்களே உலாச் சென்று பெறவேண்டிய பிராண சக்தி இருக்கிறதா ? நீங்களே இழுக்கவேண்டிய கடலமுதம் இருக்கிறதா?” என்றாள் ஜயை 

”நாம் பயிர் செய்த தோட்டத்தைத்தானே பார்க்க வேண்டும்? சிருஷ்டி செய்து எத்தனை யுகமாயிற்று ! எவ்வளவு மேதாவிகளாக வளர்ந்துவிட்டாலும் நான் தாங்கிய விதைதானே? உலாச் சென்று வந்தால் என்ன தவறு? வாருங்கள்.” 

வாயில் காப்பாளர்கள் வாளை உறையிலிட்டு, கோரைப் பற்களைச் சுருக்கிக்கொண்டு கூடவே புறப் பட்டனர். 

“ஆனால் உங்களுக்கு எல்லாம் தெரியுமா?” 

“ஓ!” 

“வாயில் காப்பாளருக்கு வெளியே செல்லவேண்டிய வேலை உண்டா ?” 

“கோயில் பள்ளியறைக்குப் பிறகு எங்களுக்கு ஓய்வு தானே?” 

“கண் மறைந்தால் விடுமுறையா? காவலாளிகளை நம்பினால் இப்படித்தானா? போகட்டும்.” 

கலீர் கலீர் என்று சதங்கை ஒலிக்கப் பெரியநாயகி நடக்கத் தொடங்கினாள். காப்பாளர்கள் மிடுக்குடனே முன்னே சென்றனர். கல்தூண்களில் இருந்து யானை கள் வியப்பினால் காதுகளை நெறித்தன; கண்களைச் சுழற்றின. திறந்த வாய்களை உடைய யாளிகள் பயத் தினால் வாயை மூடிக்கொண்டன. சிங்கங்கள் பிடரிமயிர் களைச் சிலுப்பிக்கொண்டு, முறுக்குக் கம்பி வால்களைப் பாவட்டாக்களைப் போல் ஆட்டின. பெரியநாயகி கையை அமர்த்திய பிறகுதான் அரவங்கள் அடங்கின. திருக்குளத்து நீரலைகள் மட்டும் படிக்கட்டின் ஓரங்களில் வந்து சதங்கை ஒலியை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தன. 

கோயிலின் கிழக்குக் கோபுர வாயிலை மெல்லத் தாண்டிப் பெரியநாயகி வீதியில் வந்து ஒரு நிமிஷம் நின்றுவிட்டாள். ஒரே திகைப்பு! கர்ப்பக்கிருக இரு ளையே பார்த்துப் பழகிய கண்களுக்குத் தெரு வெளிச் சம் கூசிற்று. 

ஒருவாறு அமைதி பெற்ற பிறகு வெகுதூரம் நடந்து செல்லவில்லை. அதற்குள் தெருத் திண்ணையில் உட்கார்ந்திருந்த பெண்களின் கூட்டம் ஒன்று பெரிய நாயகியைச் சுட்டிக் காட்டிக்கொண்டு தெருவில் இறங்கிவிட்டது. பெரிய நாயகியின் நடையில் தயக்கம் கண்டது, 

முதல் மாது: இது யார், புதிதாக இருக்கிறதே? இரண்டாவது மாது: அதுதான் தெரியவில்லை அம்பாள் பெரியநாயகியை அச்சில் வார்த்து வைத்தாற் போல் இருக்கிறதே! 

மூன்றாவது மாது: உன் பிதற்றல் உன் மண்டை யோடுதான் போகும்போலிருக்கிறது. உலகமே உனக் குப் பெரியநாயகிதான்! சுவாமி தரிசனம் செய்ய யாரோ கோயிலுக்கு வந்துவிட்டுப் போனால், அவள் உனக்குப் பெரியநாயகி ஆகி விடுகிறாள்! வருகிற போகிற பெண்பிள்ளைகள் யார் என்று விசாரிப்பது தானா நம்முடைய வேலை? அழகாய் இருக்கிறாள். நமக் கும் நாலு நகை இருந்துவிட்டால் நம்மைப் பற்றியும் காலுபேர் கேட்பார்கள். 

முதல் மாது: ஜோதிஷம் பார்ப்பானேன்? நானே கேட்டுவிட்டு வந்து விடுகிறேனே ! 

இப்படிச் சொல்லிக்கொண்டே அந்த மாது இவர் களை நோக்கி அவசரமாக வந்தாள். மெய்க்காப்பாளர் களில் ஒருவரைத் தொட்டு “யார் இது?” என்று கேட் டாள். “அம்மாதான் கனககிரி ஊமை ராணி’! என்று வாயைப் பொத்திக் காட்டிவிட்டு ஜயை நகர்ந்தாள். பெரியநாயகியும் மற்றொரு மெய்க்காப்பாளரும் பின் தொடர்ந்தனர். 

அந்தத் தெருதான் சந்நிதி வீதி. இருபுறத்திலும் சில வீடுகளே இருந்தன. இருந்தாலும் அழகிய புது வீடுகள். பாதிக்கு மேற்பட்டு வக்கீல் வீடுகள். வீட்டு வாசல்திண்ணையில் சின்னச் சாய்வு மேஜையும் வக்கீல் குமாஸ்தாவுமாகக் காட்சி அளிக்காமல் இல்லை. ஒரு வக்கீல் வீட்டுத் திண்ணையில் கும்பலாகக் கட்சிக்காரர் கள் உட்கார்ந்திருந்தனர். குமாஸ்தா மூக்குக் கண்ணா டியைக் கட்டி இருந்த கயிற்றை ஏதோ ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். 

விஜயைக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ, பெரியநாயகியின் கால் சதங்கைகளைக் கழற்றி மடியில் கட்டிக்கொண்டாள். 

“அடி ஜயை, இங்கென்ன இவ்வளவு பேர் உட கார்ந்திருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?” 

“இதற்குப் பெயர்தான் வக்கீல் வீடு.”

“அப்படி என்றால்?” 

“நான் சொன்னால் உங்களுக்குப் புரியாது.” 

“ஏன் புரியாது? புரியாவிட்டால் ஆலமரத்துப் பித்தைக் கேட்டுக் கொள்கிறேன்.” 

“சொத்து இருக்கிறதே-” 

“அப்படி என்றால்?” 

“அது பெரிய கதை. அதைப் பற்றிப் பிறகு சொல்லுகிறேன். இப்பொழுது இதைப்பற்றி மட்டும்… சொத்துக்காக இரண்டுபேர் சண்டை போட்டுக்கொண் டால் மண்டை உடையும். மண்டைக்கு நியாயம் செய்ய ஆஸ்பத்திரி இருப்பதுபோல், சண்டைக்கு நியா யம் சொல்லக் கச்சேரி என்று ஒன்று இருக்கிறது. அங்கே போய் இரண்டு பேரும் தாம் செய்ததுதான் நியாயம் என்று வழக்கிடுவார்கள். அவரவர்கள் கட்சியை எடுத்துச் சொல்வதற்காக, வக்கீல்களை அமர்த் துவார்கள். இவர்கள் ஒருமாதிரி மந்திரவாதிகள்; ஜால வித்தைக்காரர்கள்; அதற்காகவே படித்தவர்கள். இவர் கள் எடுத்துச் சொல்வதைக் கேட்டதும் நீதிபதிக்கு எது உண்மை எது பொய் என்று தெரியாமல் போய்விடும். கண்ணை மூடிக்கொண் டு-அதாவது ஆழ்ந்து யோசித்து விட்டுத் தீர்ப்புக் கூறிவிடுவார். அந்த மாதிரி வக்கீல் வீடு இது. தினசரி இந்த மாதிரி சண்டை இட்டுக் கொள்பவர்கள் எல்லாம் வக்கீல் வீட்டுக்குப் போய்ச் சேருவார்கள். அதுதான் கும்பல்.” 

“பிறருக்கு உதவி செய்வதுதான் இவர்கள் வேலை. இல்லையா ?” 

“பலாச்சுளையில் ஈ மொய்க்காமல் தெருக்கோடியில் கிழவி வாழையிலையாலே விசிறுகிறாளே, அந்தமாதிரி உதவி. கிழவிக்கும் லாபம்; பலாச்சுளைக்கும் சுகாதாரம். அதேமாதிரி வக்கீல்களுக்கும் லாபம். அந்த லாபத்தில் முளைத்த வீடுகள் இவை.” 

“சொத்திலிருந்து பிறந்த வம்பு என்கிறாய் ?” 

“சொத்து இல்லாமற்போனால்கூட இன்னும் பெரிய வம்பு தும்புகள் உண்டு. அதில்தான் இவர்களுக்குக் கொள்ளை லாபம். அதாவது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் ஆகிய இவ்வளவு அசுரசக்தி களும் எழுப்பிவிடும் நித்திய யுத்தங்களில் இவர்களுக்குப் பெரிய வேட்டை, இந்த நித்திய யுத்தங்களிலே மனிதர்கள் சாகக்கூடச் சாவார்கள். ஆனால்வக்கீலிடம் விஷயத்தை ஒப்படைத்து விட்டால் நீதிபதிக்குப் பிரமையே உண்டாகிவிடும். கொன்றவன் யார்? கொல்லப்பட்டது எது?’ என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வாதாடும்போது கொலை செய்தவனுக்குக்கூடத் தான் குற்றம் அற்றவன் என்று தோன்றிவிடும். இந்த உதவி செய்வதால், வக்கீல் வயிற்று வேள்வித் தீக்கு வேண்டிய அவ்வளவு பொருள்களும் தாமாகவே அவரை வந்தடைந்துவிடும். நிதி என்னும் யாக குண் உத்தருகில் இருக்கும் ரித்விக்குகளும், ஹோதா-” 

ஜயை பேச்சை முடிப்பதற்குள் மூக்குக் கண்ணாடி குமாஸ் தா இவர்கள் அருகில் வந்து விட்டார். 

“ஜீவனாம்ச வழக்குக் கட்சிக்காரர்கள் நீங்கள் தானே? ஐயா உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்றார். 

“நின்றால் பிடித்துக்கொண்டு விடுவார்கள் போலிருக்கிறதே!” என்று பெரியநாயகி சொல்லவும் எல்லோருமாக நகர்ந்து விட்டார்கள். மூக்குக் கண்ணாடி குமாஸ்தா வாயடைத்துப் போய்விட்டார். 

பெரியநாயகிக்கு ஏதோ சந்தேகம் வந்துவிட்டது. 

“அடி ஜயை, சொத்து என்று இருப்பதனால்தானே பாதி வம்பு வளருகிறது போலத் தெரிகிறது? ஆதியில் இந்த ஏற்பாட்டை நாங்கள் செய்யவில்லையே! காற்று, நெருப்பு, தண்ணீர், மண், மரம், லோகங்கள்—இப்படித் தானே உண்டாக்கிக் கொடுத்தோம்? இவர்களாகச் சொத்து என்ற ஒன்றைக் கற்டனை பண்ணிக்கொண்டு விட்டு, வீணே சிக்கறுக்க நியாயத்தைக் கூப்பிடுவானேன்?” 

“கூடு கட்டுகிற குருவி கூட ஒரே இடத்தை வருஷந் தோறும் நாடுகிறது. அப்படி இருக்கும்பொழுது-” 

வாக்கியம் முடியவில்லை. சந்நிதித் தெரு முனை திரும்பி விட்டார்கள். அதுதான் கடைத்தெரு. தெரு வுக்குள் நுழைந்ததும் மளிகைக் கடை நெடி, பாய்மரம் விரித்துக்கொண்டு வந்தது. பெரியநாயகி தும்மினாள்- ஒன்று, இரண்டு, மூன்று. ஜயையும் விஜயையும் மட்டும் தும்ம வில்லை. 

தும்மலின் வேதனை தீர்ந்ததும் பெரியநாயகி சுற்று முற்றும் பார்த்தாள். 

பெரிய செட்டியார் பெரிய மளிகைக் கடை, சின்னச் செட்டியார் பலசரக்குக் கடை, நடுச் செட்டியார் மருந் துக் கடை, நாயுடு அரிசி மண்டி, ரகீம் புகையிலைக் கிடங்கு, செபாஸ்டியன் சோடா நிலையம் முதலிய எல்லா முக்கியக் கடைகளும் அங்கேதான் இருந்தன. வியப்பு மிகுந்து பெரியநாயகி கடைகளைப் பார்த்தாள். பெரிய செட்டியார் கடையில் கூடை கூடையாக, சாக்குச் சாக் காக, மளிகைச் சாமான்கள் வைக்கப்பட்டிருந்தன. கல் லாப் பெட்டிக்கு அருகில் பெரிய செட்டியார் கறுப்பாக, வைரக் கடுக்கன் மின்ன உட்கார்ந்திருந்தார். 

“என்ன அம்மா, எப்பொழுது ஊரிலே இருந்து வந் தீங்க? ரொம்ப நாளாகக் காணோமே? ஐயா சொகமா?” என்றார் செட்டியார். 

பெரியநாயகிக்கு விஷயம் விளங்கவில்லை. 

“அடி ஜயை, இவர் என்னவோ சொல்லுகிறாரே!” என்று மெய்க்காப்பாளர் பக்கம் திரும்பினாள். 

“ஆள்மாறாட்டம் போலிருக்கிறதே!” என்று ஜயை பதில் சொன்னதும் செட்டியார் தலையை ஆட்டினார். “ஆள் மாறாட்டம் இல்லை அம்மா. சும்மா கேட்டேன். உங்களுக்கு வேண்டிய சாமான்களை இங்கேயே வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லத்தான் வந்தேன். எங்கே வாங்கினாலும் பணந்தானே? ரூபாய்க்கு ஒரு பைசாவுக்கு மேலே லாபம் வைக்கிறதே இல்லை. பணமா பெரிசு? சுத்தமான சரக்கு; சல்லிசான விலை” என்றார் செட்டியார். 

விஜயை சொல்லவந்த பதிலை யாரும் எதிர்பார்க்க வில்லை. 

“எங்கள் வீட்டுக் குண்டோதரன் இதோ வருவான். வந்ததும் பார்ப்போம்” என்றாள் விஜயை. 

பெரிய வியாபாரம் நடக்கும் என்று செட்டியாருக்கு நப்பாசை! 

“இப்படிப் பெஞ்சில் உட்காரலாமே!” 

ஜயை பெஞ்சில் உட்கார்ந்தாள். இவர்கள் இருவருக் கும் அது பெரும் வியப்பாக இருந்தது. அடுத்த நிமிஷம் ஜயை கால் கொலுசுத் திருகாணியை இறுக முறுக்க ஆரம்பித்த பிறகுதான் இவர்களுக்கு விஷயம் ஒருவாறு விளங்கிற்று. 

இதற்கிடையில், கடையில் இரண்டு மூன்று பேர் கூடி விட்டார்கள். ஆளுக்கு ஒரு சாமானின் பெயரைச் சொல்லிக் கேட்டார்கள். பெரியநாயகிக்கு நின்று பார்க்க வேண்டும் போல் இருந்தது. கடையில் நடப்பதைக் கவனித்தாள். சாமான்களைத் தராசில் எடைபோட்டு அவரவர்களுக்குக் கடைக்காரப் பையன் கொடுத்தான். கடைசியில் செட்டியாரிடம் ஒவ்வொருவரும் பணம் கொடுத்துவிட்டுச் சாமானை எடுத்துக்கொண்டு சென்றார்கள். 

வாடிக்கைக்காரர் கூட்டம் கிளம்பியதும் ஜயை பெஞ்சைவிட்டு எழுந்து புறப்பட்டு விட்டாள். எனவே பெரியநாயகியும் கடையைவிட்டு நகர்ந்தாள். தெருவில் உள்ள கடைகள் எல்லாம் அவள் கவனத்தை ஒருபுறம் ஈர்த்தன. மற்றொரு புறம் மனத்தில் ஒரு சந்தேகம். இரண்டு காரியத்தையும் பெரியநாயகி கவனிக்க முயன்றாள். 

“ஏண்டி ஜயை, இந்தச் சாமான்கள் எல்லாம் எப்படி இங்கே முளைக்கின் றன ? ஜலம் இல்லாமல், செடி இல்லாமல், கொடி இல்லாமல், மரம் இல்லாமல் – என்ன ஆச்சரியம்; இந்த வித்தை எங்களுக்குக் கூடத் தெரியாதே!” 

“நீங்கள் தான் இருட்டிலேயே இருக்கிறீர்களே ! பிறந்த பிள்ளையை வளாக்க வேண்டாமா? அப்படியே அநாதையாகத் தெருவில் போட்டுவிட்டால்? யாரோ எடுத்து வளர்த்தார். எப்படியோ வளர்ந்தது. இப்பொழுது எப்படி எப்படியோ இருக்கிறது! அந்த மாதிரி தான்.” 

“நாங்கள்தான் உலகத்தையும் ஆறறிவையும் படைத்துக் கொடுத்து விட்டோமே, வேறு என்ன செய்ய வேண்டும்?” 

“ஆறறிவைப் படைக்காமல் இருந்திருக்க வேண் டும். பெற்றோரைப் பழிக்கத்தான் ஆறறிவு உதவுகிறது. வியாபாரத்தை வளர்க்கவும் உதவுகிறது. நீங்கள் கேட்டீர்களே, இந்தச் சாமான் ஒன்றும் இந்த இடத்தில் விளைவதில்லை. செடி, கொடி, மரத்தில்தான் வருண பகவான் தயவால் எங்கெங்கோ உண்டாகின்றன. இந்தச் செட்டியார் போன்றவர்கள் அந்தச் சாமான்களை எல்லாம், வலைவீசி மீன் பிடித்துச் சுருட்டிக் கொண்டு வருவதுபோல், இங்கே கொண்டு வந்து குவிக்கிறார்கள். அங்கெல்லாம் பணம் கொடுத்து வாங்கி இங்கே மறுபடி பணத்திற்கு விற்கிறார்கள்.” 

“இதென்ன ஆச்சரியம்! பணத்திற்கு வாங்குவானேன் ? மறுபடியும் விற்பானேன்? அதிருக்கட்டும்; பணம் என்றால் என்ன? பணத்தை நாங்கள் சிருஷ்டி செய்ததாக ஞாபகம் இல்லையே!” 

“வந்திருக்கிற வினை எல்லாம் அதனால்தான்; நீங்கள் எதை எதை எல்லாம் செய்யவில்லையோ அதை எல்லாம் ஆறறிவு செய்துவிட்டது. நீங்கள் எதை ரகசி யமாக வைத்திருந்தீர்களோ அதை ஆறறிவு அம்பலத் தில் செய்து காட்ட முயலுகிறது. ஆறாவது அறிவு சிருஷ்டி செய்ததுதான் பணம். செட்டியார் வாங்கிப் பெட்டியில் போட்டுக் கொண்டாரே; அதுதான் பணம்.” 

“ரொம்பச் சுற்றலாக இருக்கிறதே! சாமான் வேண்டுமென்றால் செடி இருக்கும் இடத்திலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே? செட்டியாரும் பணமும் குறுக்கே முளைப்பானேன்?” 

“இவர்கள் ஆறறிவு சொல்லுகிறதைக் கேட்டால் உங்களுக்குக் கொஞ்சம் புரியலாம். பக்தன் உங்களை நினைக்க வேண்டுமென்றால் நேரே நினைத்துவிட்டுப் போக வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு அப் பாலில் இருப்பதை இப்பாலில், இருபாலில் வடித்துக் காட்டி, வணங்க வழிகாட்டுபவர்களை-சிவாசாரியர் களை – ஏற்பாடு செய்து, திரைபோட்டுத் திரை தள்ளும் தெய்வ நெறியைக் கூட்டி வைத்துவிடவில்லையா? அதேபோலத்தான் என்கிறார்கள். எல்லா பக்தர்களும் ஒரே காலத்தில் உங்களை நாடினால் யாருடைய மனத் தில் என்று நீங்கள் இறங்குவீர்கள்? ஒழுங்கில்லாமல் ஒரே குழப்பமாக இராதா? அதேபோல, செடியண்டை போய் எல்லாரும் சாமான் பறிக்க ஆரம்பித்தால் சண்டை தான் மிஞ்சும். அதற்காகச் சொத்து என்ற ஏற்பாட் டையும், பணம் என்ற விபூதியையும், அதாவது அளவு கோலையும், ஆறறிவு படைத்து வைத்தது.இப்படிச் செய்திருப்பதனால்தான் எல்லாருக்கும் பொதுவாய் நன்மை கிடைக்கிறதாம். இல்லாவிட்டால் சிலர் கைக் குள் சாமான்களும் நீங்களும் சிக்கி, பெருத்த சங்கடம் உண்டாகிவிடுமாம். 

“சொத்து, பணம் இரண்டையும் நாங்கள் உண் டாக்கவில்லை. இவற்றை உண்டாக்கத்தான் ஆறறிவு உபயோகப்பட்டது என்கிறாயா?” 

விஜயை பதில் சொல்வதற்குள் ஒரு பெரிய விபத்து நிகழப் பார்த்துவிட்டது. பெரியநாயகி நின்றுகொண் டிருந்த இடத்துக்கு மூன்று அங்குலம் தள்ளி, கிரீச் என்ற பெரும் சப்தத்துடன் ஒரு மோட்டார்க்கார் பிரேக் போட்டு நிறுத்தப் பட்டது. சத்தத்தைக் கேட்ட தும் இவர்களுக்கெல்லாம் வெலவெலத்துப் போய்விட்டது. 

தொப்பியும் நிஜாரும் பூட்சும் அணிந்த ஒரு கனவான் வண்டியை விட்டு இறங்கி வெகு கோபத்துடன் இவர்களை நோக்கி வந்தார். 

“நீ பெண் பிள்ளை தானா? நடு ரஸ்தாவிலே நிலாப் பேச்சில் முழுகி,செவிடாய், குருடாய், கல்லாய்-” 

புயலைப்போல அடித்த பேச்சைக் கேட்டுப் பெரிய நாயகி தலை நிமிர்ந்தாள். கனவான் பெரியநாயகியைப் பார்த்ததுதான் தாமதம், வர்த கோபமெல்லாம் பெட்டிப் பாம்பைப் போல் அடங்கிவிட்டது. தலையில் இருந்த தொப்பி தரையில் விழுந்துவிட்டது கையில் கட்டி யிருந்த கடிகாரம் கொக்கி கழன்று விழுந்தது. பயத்தி னால உடம்பு ஒட்டிப்போய்ச் சட்டை துணிமணி எல் லாம் தொளதொள வென்று தொய்ய ஆரம்பித்து விட்டன. பெரியநாயழகு, மின் தாக்கியது போல, அவரைக் கருக்கிவிட்டது. 

“மன்னிக்க வேண்டும். நடுத்தெருவில்-” 

பெரியநாயகி அவர் மன்னிப்பைப் பொருட்படுத்தவில்லை. 

“இதோ நிறுத்தி இருக்கிறாயே, இந்த மிருகத்திற்கு என்ன பெயர்? நாங்கள் சிருஷ்டித்ததாக ஞாபகமில்லையே!” 

இப்படிப் பெரியநாயகி கனவானைக் கேட்டதும் அவருக்குத் தூக்கி வாரிப்போட்டது. பைத்தியத்துக்குத்தானா இவ்வளவு அழகு! 

”ஏம்மா, பைத்தியத்தைத் தெருவில் அழைத்துக் கொண்டு வந்தால் உஷாராக இருக்கவேண்டாமா? என்னைப் பைத்தியக்காரன் ஆக்கப் பார்த்து விட்டீர்களே!” என்று மெய்க்காப்பாளர்களைக் கேட்டுவிட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு போய்விட்டார். 

“கடைத்தெரு உலாப் போதுமென்று நினைக்கிறேன்” என்றாள் பெரியநாயகி. 

ஜயையும் விஜயையும் பெரியநாயகியை அழைத்துக் கொண்டு பக்கத்துத் தெருவில் புகுந்தார்கள். ஒற்றைச் சாரி வீதி ; கூரையும், கொட்டகையும், மாட்டுப் பட்டி யும், வைக்கோல் போருமாக இருந்தன. “இது ஏழை கள் தெரு” என்றாள் ஜயை. 

“அதிருக்கட்டும். அந்தப் பிராணிக்குப் பெயர் என்ன? வெகு விநோதமாக இருக்கிறதே! அந்த மாதிரிப் பிராணியை நாங்கள் ஒன்றும் செய்ததாக இல்லையே!” 

“அந்த மாதிரி இன்னும் எவ்வளவோ விநோதமான பிராணிகள் இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் பெயர் விஞ்ஞானம். நல்ல வேளையாகப் போயிற்று; இல்லா விட்டால், நீங்கள் பீடத்திற்குத் திரும்பிப் போக முடியாமல் போயிருக்கும். ஆறறிவு புது எமன்களைச் சிருஷ்டித்து வருகிறது. அந்தப் பட்டாளத்தில் இது ஒரு சின்ன எமன்!” 

“மறுபடியும் அதே ஆறறிவுப் பெருமைதானா?’ 

பெரியநாயகியின் அலுப்புச் சொல்லத்தரம் அன்று.

”உலாப் புறப்பட்டீர்கள். அதற்குள்ளாகவே கசந்து விட்டதே! இன்னும் பார்க்க எவ்வளவோ இருக்கின்றனவே?” 

“போதும் என்று தோன்றுகிறது. என்மீது போடு கிற மாலை மாதிரி உலகம் இருக்கிறது- தழையும் நாருந்தான். ஆனால் ஒன்று; கொடுத்த பொருளைத் திரும் பப் பெற்றுக் கொள்ளும் சக்தி எங்களுக்கு இல்லை. ஆறறிவுக்கு அறிவு இருந்தால் ஆக்கட்டும் அல்லது அழிக்கட்டும். அத்துடன் தானும் அழியட்டும். பிறகு நாங்கள் புதிதாக மறுபடியும் ஆரம்பித்துவிடுகிறோம். இதுதானே சிருஷ்டி என்னும் லீலை? போதும், கோயிலுக்குப் போவோம்” என்றாள் பெரியநாயகி. 

“இந்தத் தோட்டத்து வழியாகப் போனால் சீக்கிரம் போய்விடலாம்.” 

தோட்டத்தில் நுழைந்ததும் பெரியநாயகிக்கு ஒரு நினைப்பு எழுந்தது. 

“அடி ஜயை, என் சதங்கையை இனிமேல் காலில் கட்டிவிடு. மறந்து போய்விடும்” என்றாள். 

ஜயை சதங்கையைக் காலில் பூட்டினாள். கலீர் கலீர் என்ற ஒலியலை தோட்டத்தில் பரவிற்று. அந்த இனிய ஒலியைக் கேட்டுத் தோட்டத்து மலர்கள் நாலு பக்கமும் திரும்பின மலரை நோக்கிச் சென்ற வண்டுகள் திசை தடுமாறின. மலர்களின் மணம் நடைபாவாடை விரித் துச் சென்றது. பாதை வழியே கொஞ்சதூரம் சென் றார்கள். நடுக் குளத்தங்கரை ஓரம் இருவர் உட்கார்ந் திருந்ததை இவர்கள் கவனிக்கவில்லை. அவர்களும் முதலில் இவர்களைக் கவனிக்கவில்லை. அருகில் சதங்கை ஒலி கேட்டதும் திடுக்கிட்டு எழுந்தார்கள். இவர்களை ஒரு நொடி பார்த்தார்கள். அதற்குப் பிறகு பார்த்ததெல்லாம் பெரியநாயகியைத்தான். பெரிய நாயகி திகைப்படைந்து நின்றுவிட்டாள். 

“கண்காணாச் சண்பகமே
மண்காணா மரகதமே!” 

என்று முணுமுணுத்துக்கொண்டே இருவரில் ஒருவர் நாயகி அருகில் வந்து வணங்கினார். 

“இந்த வழியே அதிசயமாகப் போகிறீர்களே, எந்த ஊர்?” என்றார். பெரியநாயகி பதில் பேசவில்லை. 

“மெய்யூர்” என்றாள் விஜயை. 

“அம்மா பேர்?”

“மாயாதேவி.” 

இந்தப் பதில்களைக் கேட்டதும் அவர் பூரித்துப் போய் விட்டார். 

“‘நித்திய சுந்தரி’ என்ற படம் எடுக்கிறோம். படத் தில் அம்பாள் ஐந்து நிமிஷத்திற்குக் கொலு இருக்க வெண்டும். சிலை வைத்துப் படம் எடுக்காமல் முடிக்க வேண்டும் என்று மூன்று மாதமாகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம் – பிரார்த்தனை பலித்துவிட்டது. ஐந்து நிமிஷத்திற்கு மேல் மாயா தேவிக்குப் படத்தில் வேலை இல்லை.” 

மெய்க்காப்பாளர் களுக்கு இந்த நிலைமையைப் போரிட்டுச் சமாளிக்க முடியாது என்ற எண்ணம் தோன்றிவிட்டது. அதனால்தான் விஜயை வேறு வழியைக் கைப்பிடித்தாள். 

“மாயா தேவி ஊமை ஆயிற்றே ?” 

“அப்படியா? அம்பாளே எங்கள் பிரார்த்தனைக்கு இரங்கி வந்துவிட்டாள் போலிருக்கிறது! எங்களுக்கு வேண்டியதும் வாயைத் திறக்காத அம்பாள் தான். கனககிரி பீடத்தில் அம்மாள் ஐந்து நிமிஷம் நின்றால் போதும். பணத்தைப்பற்றி யோசிக்க வேண்டாம்” என்றார். 

“கோயில் திருப்பணிக்குப் பணம் கொடுப்பீர்களா!”

“எப்படிச் செய்யச் சொன்னாலும் செய்கிறோம்.” 

இப்படிப் பேசிவிட்டு முடிவில் என்ன செய்வ தென்று விஜயை மனத்திற்குள் ஒரு திட்டமிட்டிருந்தாள். தோட்டத்தைத் தாண்டியதும் விருட்டென்று கோயில் சந்துக்குள் நுழைந்து போய்விடுவதென்று யோசனை செய்து வைத்திருந்தாள். 

போகலாமே என்று ஜயை கூறியதும் பெரிய நாயகியின் சதங்கைகள் விழிப்படைந்தன. தோட் டத்தைவிட்டுச் செல்லும் ரோஜாவைத் தேனீ தொடர் வதுபோலச் சினிமாக்காரர்கள் பின்னே சென்றனர். தோட்டத்து வாயிற்புறம் வந்தவுடன் சினிமாக்காரர் கள் முன்னே ஓடிப்போய் நின்றுவிட்டார்கள். 

கோயில் சந்துக்கெதிரில் ஒரு மோட்டார் கார் நின்றுகொண்டிருந்தது. இதைத் தாண்டிக் கோயிலுக் குள் எப்படிப் போகிறது என்று ஜயையும் விஜயையும் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, “ஏறுங்கள் வண்டியில் ” என்றார் அவர்களில் ஒருவர். மற்றொருவர் சந்தில் நுழைய முடியாதபடி அடைத்துக்கொண்டிருந்தார். 

விஜயை போட்ட ரகசியத் திட்டம் பகற்கனவாகி விட்டது. இனி என்ன செய்வது என்ற யோசனை. 

“ஏறுங்கள் வண்டியில்” என்று அவர் வற்புறுத்தினார். 

“எதற்காக?” என்று தடுமாறினாள் விஜயை.

“இத்தனை நேரமாகச் சொல்லி வந்தோமே! நீங்கள் கூடச் சரி என்றீர்களே?” 

“சொன்னேன். வாஸ்தவம். நாங்கள் வந்து நேரமாயிற்று. தவிர, வீட்டில் தெரிவிக்க வேண் டாமா? வந்த இடத்தில்” 

“ஏழே நிமிஷம்! வந்துபோனதே யாருக்கும் தெரிய வேண்டாம். அம்பாள் ஸ்தானத்தில் அமரும் பெருமை யைவிட மாந்தருக்கு என்ன பெருமை கிடைத்துவிடும்? அம்மாளால் எங்கள் படத்துக்கும் பெருமை; உங்கள் திருப்பணிக் கோரிக்கையும் நிறைவேறிவிடும். ஒன்றுக் கும் பயப்பட வேண்டாம். ஏறுங்கள்.” 

இவர்கள் தயங்கி நின்றதைப் பார்த்து, புறாவைக் கூட்டில் அடைக்கக் கையை விரிப்பார்களே, அந்த மாதிரி இவர் செய்துவிடுவாரோ என்ற அச்சம் விஜயைக்கு உண்டாகிவிட்ட.து. விஜயை திடீரென்று தானாக வண்டியில் ஏறினாள். ஜயையும் பெரியநாயகி யும் மட்டும் வேறு என்ன செய்துவிட முடியும்? அவர் களும் காரில் ஏறினார்கள். 

கண்மூடித் திறப்பதற்குள் கார் ஸ்டூடியோ வாச லண்டை போய் நின்றது. எவ்விதப் பேச்சும் இல்லாமல் இவர்களை நெடுந்தூரம் உள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். ‘இதென்ன, தெய்வலோகம் போலிருக் கிறதே!’ என்று பெரியநாயகி மனத்திற்குள் நினைத்துக் கொண்டே இருந்தாள். 

“நீங்கள் இருவரும் இப்படி உட்கார்ந்திருங்கள். அதோ மேடை தெரிகிறதே, அதுதான் கனககிரி பீடம். மாயாதேவி பீடத்தில் அப்படியே நின்றால் போதும், அம்மா இப்படி-” 

பெரியநாயகி சிந்தனையிலிருந்து விடுபட்டு எதிரே பார்த்தாள். 

“என்ன பயப்படுகிறீர்களே! குறுஞ்சிரிப்புச் சிரித் துக்கொண்டு ஐந்து நிமிஷம் நின்றால் போதும். வாயைத் திறக்கவே வேண்டாம்” என்றார் அழைத்துக் கொண்டு வந்தவர். 

பெரியநாயகி தெய்வலோகத்தில் நடப்பது போல் சென்று மேடைமீது ஏறினாள். ஆனால் முகத்தின் கடுகடுப்பு மட்டும் மாறவில்லை. 

அடுத்த நிமிஷம் வந்தவரில் மற்றொருவர் ஒரு குருக் களை அழைத்து வந்து ஒரு பெரிய நிலைமாலையைக் கழுத்தில் சாத்தினார். வலக்கையில் ஒரு தங்கக் கிளியைக் கொடுத்தார். இடக்கையை இடுப்பண்டை வரத ஹஸ்தமாக வைத்துக்கொள்ளச் சொன்னார். 

இந்த அலங்காரம் முடிந்ததும் பெரியநாயகிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘உருவம் மாறினாலும் தத்துவம் மாறாது போலிருக்கிறது; அந்தஸ்து அழியாது போலி ருக்கிறது’ என்று எண் ணிக்கொண் டிருந்தாள், 

“பேஷ்! பேஷ் ! அதே புன்சிரிப்புடன் ஆடாமல் அசையாமல் நில்லுங்கள்” என்று கூறிவிட்டு அந்த ஆண்கள் இரண்டுதரம் குறுக்கும் நெடுக்குமாக ஓடி இரண்டு மூக்குக் கண்ணாடிக்காரர்களை அழைத்து வந்தனர். வந்தவர்கள் பெரியநாயகிக்கு எதிரில் இருந்த காமிராவுக்குப் பின் கோணம் பார்த்து அமர்ந்துகொண்டார்கள். 

அடுத்த விநாடி ஜகத்ஜோதியாக மின்சார ஒளி பெரியநாயகி மீது விழுந்தது. கண்ணை விழித்திருக்க முடியாமல் அவள் கண்களை மூடிக்கொண்டாள். 

“கண்ணை மூடக் கூடாது” என்றது ஒரு குரல். இவ்வளவு வெளிச்சத்தில் கண்ணைத் திறந்து கொண்டிருப்பதா? பெரியநாயகியையும் அறியாமலே கோபம் பொங்கிவிட்டது. 

“அம்பாள் இருக்கிற இடம் இருட்டாகத்தானே இருக்கிறது? அதைப்போய்ப் பட்டப் பகலை விட மோச மாக்கினால்? கருப்பையில் இருந்தால் குழந்தை வளரும். ரஸ்தா ஓரத்தில் பதைபதைக்கிற வெயிலில் வைத்தால்?” என்றாள். 

“உங்களுக்கு என்ன தெரியும்? இருட்டைக்கூட வெளிச்சத்தால்தான் நிலைநாட்ட முடியும் கொஞ்சம். சும்மா இருங்கள். கோடி புண்ணியம்” என்று கெஞ்சியது பழைய குரல். 

பெரியநாயகியின் சிரிப்பு அலையாடிற்று. வெகு பிரயாசையுடன் கண்ணைத் திறந்து கொண்டாள். அதற்குப் பிறகு என்ன நடந்ததென்று பெரியநாயகிக்குத் தெரியவில்லை. ‘உஷார்!’ ‘ஓ. கே.’ என்ற இரண்டு வார்த்தைகள் தாம் ஜயை விஜயை காதில் விழுந்தன. 

“அவ்வளவுதான். ரொம்ப நன்றி.” 

“இந்த மாதிரி அதிருஷ்டம் பட உலகில் யாருக்கும் அடிக்கவில்லை” என்று கூறிக்கொண்டே பெரியநாயகி யிடம் ஒரு பொட்டலத்தை நீட்டினார் சினிமாக்காரர். பெரியநாயகி பொட்டலத்தை வாங்கி, விஜயையிடம் கொடுத்துவிட்டுக் கோயிலுக்குப் புறப்பட்டு விட் டாள். எங்கிருந்தாலுந்தான் கோயில் கோபுரம் தெரிகிறதே! 

கோபுர வாசல் வந்துவிட்டது. ஜயையும் விஜயையும் உறையில் இட்ட கத்தியை வெளியே இழுத்தார்கள். சுருக்கிய கோரைப் பற்களை நீட்டிக் கொண்டார்கள். 

“பொட்டலத்தைப் பிரித்துப் பார்க்க வில்லையே!” என்றாள் ஜயை. 

“காட்டு” என்றாள் பெரியநாயகி. 

பொட்டலத்தைப் பிரித்தால் நோட்டுகளாக இருந்தன! 

“எதற்கு இந்தக் கடுதாசுகள்?” 

“இதற்குப் பெயர்தான் நோட். இதுதான் வியா பாரியின் கடையிலே கண்ட பணம். வக்கீல் வீடாகி இருக்கிற பணம். உங்கள் திருப்பணி சம்பாத்தியம். இன்னும்-” 

“இது இல்லாவிட்டால்?” 

“உலகம் நடக்காது. இதை உங்களுக்குச் சிருஷ்டிக் கத் தெரியாததனால்தான் ஆறறிவு உங்கள் ஸ்தானத்தைப் பிடித்துக் கொண்டுவிட்டது.” 

“அப்படியா செய்தி! அடுத்த சிருஷ்டியில் தப்பைத் திருத்திக்கொண்டு விடுகிறோம்” என்று சிரித்துவிட்டுக் கோயிலுக்குள் நுழைந்தாள் பெரியநாயகி. 

கால் சதங்கைகள் கலீரென ஒலித்தன. பத்தி உலா மண்டபத்துச் சிங்கங்களும் யாளிகளும் காதை நெறித் தன. பெரியநாயகி பழைய பீடத்தில் அமர்ந்தாள். சதங்கைகள் ஊமையாயின. கருப்பை இருளும் நெய் தரும் குளிர் சுடரும் இனிமையாய்ச் சூழ்ந்தன.

– பிச்சமூர்த்தியின் கதைகள்‌, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1960, ஸ்டார்‌ பிரசுரம்‌, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *