பெண்புத்தி கூர்மை
கதையாசிரியர்: பம்மல் சம்பந்த முதலியார்
கதைத்தொகுப்பு:
குடும்பம் நாடகம்
கதைப்பதிவு: July 22, 2026
பார்வையிட்டோர்: 85
(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாடக பாத்திரங்கள்:
சிவராம முதலியார். பாலாம்பாள், பாலகிருஷ்ணன் ஞானாம்பாள்.
முதல் அங்கம்
முதற் காட்சி
இடம் – பெங்களூரில் லால்பாக்கை அடுத்த ஒரு பங்களாவில் ஓர் அறை.
சிவராம முதலியாரும், பாலாம்பாளும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்.
சி. என்ன பாலு, உன் யுக்தி எப்படி முடியுமோ வென்று எனக்குச் சந்தேகமாயிருக்கிறது.
பாலா. எனக்கென்னமோ சந்தேகமே யில்லை!
சி. பார்க்கலாம் – எனக்கு பயமாகத்தானிருக்கிறது. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தால்! – அவர்களிருவரும் சந்தித்தால் உன் ரகசியம் வெளியானால் சச்சரவுதான் இட்டுக் கொள்வார்களென்று தோன்றுகிறது.
பாலா. முதலில் சச்சரவிட்டுக் கொண்டாலும் – பிறகு – சமாதானமாய்ப் போய் விடுவார்கள்.
சி. அப்புறம் கலியாணம் செய்து கொள்வார்களோ?
பாலா. அப்படித்தான் நடக்குமென்று பிரார்த்திக்கிறேன் – நம்புகிறேன் – என்ன பந்தயம்?
சி. அப்படி நடந்தால் உனக்கு என்ன வேண்டுமென்றாலும் தருகிறேன்.
பாலா.ஆ! நான் சொன்னபடி நேரிட்டால் – காலை புடைவைக்காரன் கொண்டு வந்தானே, அந்த நூறுரூபாய் புடைவை எனக்கு வாங்கித் தரவேண்டும் – நான் அந்த கலியாணத்திற்குக் கட்டிக் கொள்ள.
சி. அப்படி மாத்திரம் நேரிட்டால், நூறு ரூபாயல்ல இரு நூறு ரூபாய் புடைவை வாங்கித் தருகிறேன். எப்படி யாவது பரமேஸ்வரன் அருளால், அவள் தகப்பனாருக்கு நான் வாக்களித்தபடி இவர்களுக்கு கலியாணம் செய்து வைத்தால் போதும் – என்ன நாலுமணியாயும் பால் கிருஷ்ணன் வரவில்லை – சரியாக மணிப்பிரகாரம் வந்து விடுவான் என்றாயே!
பாலா. இன்னும் நாலு அடிக்கவில்லையே!
சி. இதோ அடிக்கிறது!
[கடியாரம் நான்கு அடிக்கிறது]
[வெளியில் பைசிகல் சத்தம்]
பாலா. இதோ வருகிறான்!
(பாலகிருஷ்ணன் வருகிறான்.)
சி. உட்கார் பாலகிருஷ்ணா – கோலாரில் எல்லோரும் க்ஷேமம் தானே.
பா. க்ஷேமம்தான்.
பாலா. ஏனப்பா – காகிதம் போட்டால் பதில் போட கூட உனக்கு சவகாசமில்லையோ?
பா. அக்காள், அந்த காகிதத்திற்கு என்ன பதில் போடுகிறது? நான்தான் உனக்கு பலதரம் சொல்லி யிருக்கிறேனே, அந்த மைசூர் காலேஜில் படிக்கும் ஞானாம்பாளைக் கலியாணம் பண்ணிக் கொள்ளுகிற விஷயத்தைத் தவிர மற்ற எந்த சமாசாரமென்றாலும் கேள், பதில் சொல்லுகிறேன்.
பாலா. அந்த பெண் விஷயத்தைப் பற்றியா நான் கடைசி கடி தத்தில் எழுதியிருந்தேன்? – அவள் சமாசாரம் தான் அப்பொழுதே முடிவாகி விட்டதே. இப்பொழுது நீ அவளைக் கலியாணம் பண்ணிக்கொள்ள விரும்பினாலும் அது முடியாது.
பா. அப்பா- ஏன் அப்படி?
பாலா. அவள் சீமைக்குப் புறப்பட்டு விட்டாளாம். இன்னும் அங்கே போய் வயித்தியப் பரீட்சைக்குப் படிக்க வேண்டு மென்று.
பா. சரிதான்! – நான் நினைத்தபடியே ஆச்சுது; பெண்களுக்கு எவ்வளவு கற்பிக்க வேண்டுமோ, அதற்கு அதிகமாகக் கற்பிப்பதின் பலன் இதுதான்! பீ.ஏ.பாஸ் பண்ண வைத்தால், அதற்குமேல் போக விரும்புவார்கள். அன்றியும் இப்பொழுது டெனிஸ், ஹாக்கி எல்லாம் ஆடுகிறாள். அங்கே போய் கிரிகட் கற்றுக் கொள்வாள் – ஆ! போன மாதம், மைசூர் பிசிகல் கல்ட்சர் (Physical Culture) பத்திரிகையில், அவளுக்கு நீஞ்சல் அடிப்பதில் பரிசு கிடைத்ததாகப் படித்தேன் – பெண்கள் நீந்தக் கற்றுக் கொள்வதாவது! – அதிருக்கட்டும், அவள் சீமைக்குப் போய் விட்டதாக யார் சொன்னது?
பாலா. அவள் பக்கத்து வீட்டுப்பெண் – மைசூரிலிருந்து ஒருத்தி வந்திருக்கிறாள் நம்முடைய வீட்டிற்கு – தன்தேக செளக்கியத்திற்காக – ஏதோ உன் அத்தானை கன்சல்ட் (Consult) பண்ண – அவள் சொன்னாள்.
பா. சந்தோஷம் ஞானாம்பாள் அப்படியே சீமையிலிருந்து இங்கு திரும்பி வராமல் – அங்கேயே யாரையாவது கலியாணம் பண்ணிக்கொள்ளச் சொல்.
[வெளியில் மோட்டார் சப்தம்.]
அத்தான் – உங்கள் கார் சப்தம் அல்லவா அது?
சி. ஆம், அந்த மைசூர்- பெண்ணை- அதில் டிரைவுக்கு – லால்பாக்குக்கு – அனுப்பினேன்.
லோகாம்பாள் வருகிறாள்.
பாலா. வா அம்மா – உட்கார் – ஏன் நிற்கிறாய்? – இவர் வேறு யாருமில்லை உன் சிநேகிதி – ஞானாம்பாள் – உறவுதான்.
லோ. நமஸ்காரம்.
பா. உட்காருங்கள்
பா. உடம்பு சௌக்கியம் தானே? இவர்களுக்கு உடம்பு என்னவென்று சொன்னீர்கள் அத்தான்?
சி. உம் – ஒன்றுமில்லை அங்கத்தி – வைத்தியர். என்னமோ கொஞ்சம் – இரும்பலைக்கண்டு பயந்து, பெங்களூருக்கு என் இன்ஸ்டிட்யூட்டு (Institute) க்கு அனுப்பி விட்டார் – இரண்டு நாளில் இந்த இருமல் நின்றுவிடும்.
பா. மிகவும் சந்தோஷம் – குழந்தை ஏதாவது படித்திருக்கிறதா?
லோ. எஸ்-எல்-சி- சி. பாஸ் பண்ணியிருக்கிறேன்.
பா. நிரம்ப சந்தோஷம் – அவ்வளவு போதும் – இன்னும் எதற்கு படிப்பு? அதுவும் உடம்பு அசெளக்கியமா யிருக்கும்போது?
லோ. இனிமேல் படிப்பை – நிறுத்திவிட்டேன்.
பா. நிரம்ப புத்திசாலியம்மா நீ – அந்த ஞானாம்பாளைப் போல் இல்லாமல் – உன் சிநேகிதி சீமைக்குப் போயிருக்கிறாளாமே! – ஐ.சி.எஸ் பாஸ் பண்ணுவதற்கும், கிரிக்கெட் ஆடக் கற்றுக்கொள்வதற்கும்! [எல்லோரும் நகைக்கின்றனர்.] நீ ஏதாவது ஆடக் கற்றுக்கொண்டாயா அம்மா?
லோ. நான் பாட்மின்டன் – ஆடக் கற்றுக்கொண்டேன்.
பா. அதுதான் சரி – அதுதான் பெண்கள் ஆடவேண்டிய ஆட்டம். நீ நிரம்ப புத்திசாலியம்மா – ஸ்திரீகள் கிரிக்கெட் புட்பால் (Foot-ball) முதலிய ஆட்டங்கள் எல்லாம் ஆடக்கூடாது என்று நான் பெங்களூர் பத்திரிகையில் எழுதியதை நீ படித்திருக்கிறாயா?
லோ. படித்திருக்கிறேன் – ஞானாம்பாள் எனக்கு காண்பித்தாள் – தான் அதற்குப் பதில் எழுதியதையும் காண்பித்தாள்.
பா. செய்திருப்பாள் – அந்த அதனப்பிரசங்கி?- உன் சிநேகிதியை தூஷிக்கிறேன் என்று நீ கோபித்துக் கொள்ளாதே – அதிருக்கட்டும் – நாங்கள் இருவர்களும் எழுதியதில், யார் எழுதியது சரியென்று உனக்கு – தோணுகிறது.
லோ. சில விஷயங்களில் நீங்கள் எழுதியது சரியென்று தோணுகிறது.
பா. மிகவும் சந்தோஷம்.
லோ. சில விஷயங்களில் – அவள் எழுதியதும் சரியென்று தோணுகிறது.
பா. அது என்ன அது? – அவை என்னவென்று சொல் பார்ப்போம்; அதற்கெல்லாம் நான் சமாதானம் சொல்லுகிறேன்.
பாலா. சரி சரி! நீங்கள் இந்த வாக்குவாதம் ஆரம்பித்தால் இன்றைக்கெல்லாம் முடியாது. நான் சொல்கிறதைக் கேளுங்கள். முன்பு டீ (Tea) சாப்பிட வாருங்கள் – அப்புறம் – உங்கள் வாக்குவாதங்களை ஆரம்பிக்கலாம்.
காட்சி முடிகிறது.
[எல்லோரும் போகிறார்கள்.]
இரண்டாம் காட்சி
இடம் – தோட்டத்தில் நடைவாபி.
நடைவாபியின் சுவற்றின்மீது பாலகிருஷ்ணனும் லோகரம்பாளும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்.
கீழே பாலாம்பாளும், சிவராம முதலியாரும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்.
பா. நீ என்னதான் சொல், தேகபலம், தைரியம், வீரம் முதலிய குணங்களில் எத்தனை யுகங்கள் கழிந்தாலும் பெண்கள் ஆடவர்களுக்குச் சமான மாகமாட்டார்கள்.
லோ. யுகங்கள் கழிவானேன்? இதற்கு பல வருடங்களுக்கு முன்பே நமது நாட்டிலேயே ரஜபுத்ர ஸ்திரீகள், கவசம் பூண்டு சண்டைக்குச் சென்றதை மறந்து பேசுகிறீர்களே! சாந்த்பீபி முதலிய மகம்மதிய ஸ்திரீகள்கூட அப்படிச் செய்யவில்லையா? – தற்காலமும் துர்க்கி ஸ்திரீகளும் ஜப்பானிய ஸ்திரீகளும் யுத்தப் பயிற்சி பெற்று வருவதை நீர் கேட்டதில்லையா? நம்முடைய தேசத்து ஸ்திரீகளுக்கும், ஆடவர்களுக்குக் கொடுப்பது போல் அப்பயிற்சிகள் கொடுக்கட்டும், அவர்களுக்கும் தைரியம், வீரம் எல்லாம் எப்படி இல்லாமற் போகிறதோ பார்ப்போம்.
பா. அப்படியானால் ஆண்மக்கள் என்றும் பெண்டிர் என்றும் இருவகையாக ஏன் ஸ்வாமி சிருஷ்டித்தார்?
பாலா. உங்களைப்போல் என் நேரமும் சச்சரவிட்டுக் கொண்டிருக்கும் பொருட்டு! [எல்லோரும் நகைக்கின்றனர்.]
பா. நகைப்பு ஒருபுறம் இருக்கட்டும் – அக்காள். நீதான் சொல். என் மதம் என்னவென்றால், ஆண்பெண் என்று இரண்டு பிரிவாக பரமேஸ்வரன் சிருஷ்டித்தபடியால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் இன்னின்ன வேலையென்று பிரித்திருக்கிறது, என்பது.
லோ. என் அபிப்பிராயம் என்னவென்றால், சிருஷ்டியில் இரண்டு பிரிவாக்கப்பட்டிருந்தாலும் குணாதிசயங்களில் வித்தியாசமில்லை என்பது.
பாலா. இந்த உங்கள் சண்டையை யார் தீர்ப்பது?
பா. ஏன்? நீங்களும் அத்தானும் – எங்கள் வாக்குவாதத்தை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தீர்களே, நீங்கள் தான் தீர்மானம் சொல்லுங்கள்.
பாலா. நீங்கள் இரண்டு பெயரும் கூறுவது சரியென்று தோன்றுகிறது எனக்கு.
[நகைக்கிறார்கள்.]
சி. எனக்கு என்ன தோன்றுகிற தென்றால் – லோகாம்பாள் பேசும்பொழுது அது சொல்வதுதான் சரியென்று தோணுகிறது; நீ பேசும்பொழுது நீ சொல்வது சரி யென்று தோன்றுகிறது.
பா. இது என்ன அத்தான் கோமுட்டி தீர்மானமாயிருக்கிறது!
[அனைவரும் நகைக்கின்றனர்]
பாலா. எங்களால் உங்கள் சண்டையைத் தீர்க்க முடியாதம்மா – நாங்கள் காப்பி சாப்பிடப்போகிறோம் – நீங்கள் வருகிறீர்களா இல்லையா? சீக்கிரம் வராவிட்டால், காலை லோகாம்பாள் செய்த மைசூர்பாக்கை யெல்லாம் தீர்த்துவிடுவோம்.
பா. ஏ ஏ! இதொ நாங்களும் வந்து விட்டோம். எங்களுக்கும் கொஞ்சம் வைத்துவையுங்கள்.
பாலா. ஆனால் சீக்கிரம் உங்கள் சண்டையை முடித்துக் கொண்டு வாருங்கள்.
சி. இன்னும் சண்டை போட வேண்டுமென்றால், அந்த சுவற்றை விட்டிறங்கி சண்டை போடுங்கள். இல்லா விட்டால், கிணற்றுக்குள்தான் விழுவீர்கள்.
பா. நாங்கள் விழமாட்டோம்.
லோ. விழுந்தாலும் தப்பித்துக் கொள்வோம்!
[சிவராய முதலியாரும் பாலாம்பாளும் போகிறார்கள்.]
பா. லோகாம்பாள்! காலையில் நாம் சாப்பிட்ட மைசூர்பாக் நீ செய்ததா? மிகவும் நன்றாய் இருந்ததே, உனக்கு இது யார் கற்பித்தது?
லோ. யாரா? எங்கள் பள்ளிக்கூடத்தில் எல்லாம் கற்பிக்கிறார்கள். சமயல்வேலை, தையல்வேலை, சங்கீதம், கோலம் போடுதல், எல்லாம் கற்றுக் கொடுக்கிறார்கள்.
பா. மிகவும் சந்தோஷம்! ஆனால் எதோ ஒரு பாட்டு பாடு கேட்போம். [லோகாம்பாள் பாடுகிறாள்.] பேஷ்! பேஷ்!
[கை தட்டும் பொழுது நழுவி கீழே கிணற்றில் விழுந்து விடுகிறான்.]
ஹா! ஹா! லோகாம்பாள்! லோகாம்பாள்! எனக்கு நீந்தத் தெரியாது! தெரியாது –
லோ. பயப்படாதீர்! இதோ காப்பாற்றுகிறேன்!
[கிணற்றில் குதித்து கரையேற்றுகிறாள்.]
ஐயோ! தலையில் காயம் பட்டிருக்கிறது. இந்த ரத்தத்தை கட்டுகிறேன்.
[தன் முன்தானையின் ஒரு துண்டை கிழித்துக் கட்டுகிறாள்.]
சிவராம முதலியாரும். பாலாம்பாளும் ஓடி வருகிறார்கள்.
சி. நினைத்தேன்! நினைத்தேன்!- நினைத்தபடி ஆயிற்று! லோகாம்பாள், அம்மட்டும் ரத்தம் வழியாதபடி காயத்தைக் கட்டினாயே சரியாக! – நீ போய் உன் இரத்தத் துணியை, மாற்றிக் கொள். பாலு, இட்டுக்கொண்டு போ லோகாம்பாளை உடனே வீட்டுக்குள் – நீஞ்சத் தெரியாத இந்த ஆண்பிள்ளையை நான் அழைத்துக் கொண்டு வருகிறேன். வாடா அப்பா, ஈரத்துணியுடன் இராதே, அப்புறம் நிமோனியா (Pneumonia) வரப் போகிறது.
[அழைத்துக்கொண்டு போகிறார்.]
காட்சி முடிகிறது.
மூன்றாம் காட்சி
இடம்:- டாக்டர் சிவராம முதலியார் வீட்டில் ஓர் அறை.
காலம் – காலை.
பாலகிருஷ்ணன் படுக்கையில் படுத்தவண்ணம் இருக்கிறான்.
சிவராம முதலியார் அவன் பக்கலில் நிற்கிறார்.
பாலாம்பாள் அருகில் நிற்கிறாள்.
சி. பாலகிருஷ்ணா, இனி ஒன்றும் பயமில்லை. இனிமேலாவது ஜாக்கிரதையாயிரு, கிணற்றின் ஆழம் பார்க்காதே! நீ தப்பிப் பிழைத்தது தெய்வாதீனம்? அம்மட்டும் அந்தப் பெண் – லோகாம்பாள் – உடனே கிணற்றில் குதித்து உன்னைக் காப்பாற்றியிராவிட்டால் – இன்றைக்கு ஒரு வருக்கு சஞ்சயனம் நடத்தியிருக்க வேண்டி வந்திருக்கும். அன்றியும் தலையில் பட்ட காயத்தை உடனே பர்ஸ்டு எய்ட் (first aid) கொடுத்து கட்டியிராவிட்டால், உன் உயிருக்கே அபாயம் நேர்ந்திருக்கும். உன் உயிரை அவள் தான் காப்பாற்றினாள் இருவிதத்திலும். ஆகவே அவளுக்கு நீ மிகவும் நன்றியறிதல் பாராட்ட வேண்டும்.
பா. ஆமாம் அத்தான்- நான் போய் வந்தனம் சொல்லி விட்டு வருகிறேன்.
சி. அடடெ! எழுந்திருக்காதே! முட்டாள், நிரம்ப படித்தவன்தான்! – இது கூடவா தெரியாது? இந்த ரணம் ஆறி இக்கட்டை நான் அவிழ்க்கிறவரையில் படுக்கையை விட்டு நீ எழுந்திருக்ககூடாது – பாலு, நான் உத்திரவு கொடுக்கும் வரையில் இவனைப் படுக்கையை விட்டு எழுந்திருக்கவிடாதே – நான் வருகிறேன். [போகிறார்.]
பா. அக்காள், அப்பெண்ணுக்கு – லோகாம்பாளுக்கு – என் உயிரைக் காப்பாற்றியதற்காக நான் வந்தனம் செலுத்த வேண்டுமே!-
பாலா. அதை நான், நீ சொன்னதாகச் சொல்லிவிடுகிறேன்.
பா. நீ – அவளை – இங்கு கொஞ்சம், அழைத்துவாயேன் – நான் என் வாயால் – சொன்னால் – எனக்கு திர்ப்தியா – யிருக்கும்.
பாலா, நான் சொன்னால் உதவாதோ? – நீ நேராகச் சொல்ல வேண்டுமோ? அவள் மைசூருக்குத் திரும்பிப் போக வேண்டுமென்று சாமான்களையெல்லாம் கட்டிக்கொண்டிருக்கிறாள்.
பா. இன்றைக்கேயா? – அக்காள், நீங்கள் சொல்லி இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்து போகச் சொல்லுங்களேன்;
பாலா. ஏன்? ஏன் அப்படி அவகாசம்?
பா. அக்காள் – உன்னிடம் சொல்ல எனக்கு வெட்க மென்ன – நான் – கலியாணம் செய்துகொள்ள விரும்புகிறேன்.
பாலா. யாரை?
பா. லோகாம்பாளை.
பாலா. அப்புறம் உன் தகப்பனார் வாக்கு என்னமாய்ப் போகிறது?
பா. அக்காள், நீ என்ன சொன்னாலும் சொல் – நான் கல்யாணம் பண்ணிக் கொள்வதானால் அப்பெண்ணைத்தான் கலியாணம் பண்ணிக்கொள்வேன்; இல்லாவிட்டால் இப்படியே பிரம்மசாரியாயிருந்து விடப்போகிறேன்.
பாலா. அதையெல்லாம் அப்புறம் யோசிக்கலாம் – நீ அவளைக் கலியாணம் பண்ணிக்கொள்ள இஷ்டப்பட்டால், அவள் அதற்கு சம்மதிக்க வேண்டுமே?
பா. நீ மெல்ல அவள் மனதை ரகசியமாக – அறிந்து பாரேன்.
பாலா, நல்ல வேலைதான் எனக்கு! அதெல்லாம் முடியாது. நீ வேண்டுமென்றால் நேராகக் கேட்டுக்கொள் – போகுமுன் உன்னிடம் சொல்லிவிட்டுப் போக வேண்டுமென்றாள்- அதற்காக உன்னிடம் அனுப்புகிறேன். அப்புறம் – உன் அதிர்ஷ்டம்.
[போகிறாள்]
பா. மல்லேஸ்வரர் விட்ட கதியாகிறது! – தன் உயிரையும் பாராமல் என் உயிரைக் காப்பாற்றினாள். உடனே கிணற்றில் குதித்து!- ஆகவே என்மீது – ஏதாவது கொஞ்சம் – அன்பிருக்கும் – இரக்கமாவது இருக்கும்!
ஞானாம்பாளை அழைத்துக்கொண்டு பாலாம்பாள் வருகிறாள்,
பாலா. பாலகிருஷ்ணா, இதோ லோகாம்பாள் – வந்திருக்கிறாள் – இன்றைக்கு மைசூருக்குப் போக வேண்டுமாம். உன்னிடம் சொல்லிவிட்டுப் போக வந்திருக்கிறாள் – இதோ நான் வந்துவிட்டேன்; உங்கள் அத்தான் அந்த மருந்தை வாங்கி வைக்கச் சொன்னார் தான் திரும்பி வருமுன்.
[போகிறாள்.]
பா. லோகாம்பாள் – உட்கார் – இன்றைக்கே மைசூருக்குப் போக வேணுமா? இன்னும் இரண்டு மூன்று நாட்கள் பொறுத்துப் போகலாகாதா?
ஞா. உங்கள் அத்தான், டாக்டரைக் கேட்டேன், இனி ஒரு அபாயமுமில்லை என்று சொன்னார் – ஆகவே இன்றைக்கு புறப்பட உத்தரவு கொடுங்கள்.
பா. நான் மாட்டேன் – என் உயிரை இரண்டு விதத்தில் காப்பாற்றினாய் அதற்காக – நான் உனக்கு கைம்மாறு செய்ய வேண்டாமா? – தக்கபடி.
ஞா. என் கடமையைச் செய்தேன், அதற்கு கைம்மாறு என்னத்திற்கு?
பா. லோகாம்பாள் – என் உயிரை இன்னொரு விதத்திலும் காப்பாற்றும்படியாக வேண்டுகிறேன். என் உயிர் உன் கையில் இருக்கிறது! – அதை நீ எப்படியாவது காப்பாற்ற வேண்டும் – அதற்கு மேல் நான் சொல்வதற்கில்லை உன் இஷ்டம்.
ஞா. என்னிஷ்டமா? – என் இஷ்டப்படி செய்கிறீரா?
பா. சொல், அப்படியே செய்கிறேன் – எதுவாயிருந்தபோதிலும்.
ஞா. சத்தியமாக?-
பா. ஆம் சத்தியமாக.
ஞா. ஆனால் – உங்கள் மாமா மகள் – ஞானாம்பாளைக் கலியாணம் செய்துகொள்வதாக வாக்களியும்.
பா. நான் மாட்டேன்!
ஞா. இது நியாயமா? நான் சொல்லுகிறபடி செய்வதாகச் சத்தியம் செய்துவிட்டுத் தவறலாமா? – ஞானாம்பாள் எழுதியது வாஸ்தவம் தான் – ஆடவரை எப்பொழுதும் நம்பலாகாதென்று.
பா. பெண்களை மாத்திரம் நம்பலாமோ? நான் உன்னைக் கலியாணம் பண்ணிக்கொள்ள விரும்பினால், நீ மற்றொருத்தியைக் கலியாணம் செய்து கொள்ளும்படி என்னைக் கேட்கிறாயே!
ஞா.மற்றவர்களை நம்பலாமோ என்னமோ எனக்குத் தெரியாது, நீங்கள் – என்னை நம்பலாம். நீங்கள் மாத்திரம் ஞானாம்பாளைக் கலியாணம் செய்து கொள்ளுங்கள். நான் உடனே உம்மைக் கலியாணம் செய்து கொள்ளுகிறேன்.
பா. சத்தியமாகவா?
ஞா. ஆம் சத்தியமாக.
பா. எப்படியாவது நீ எனக்குக் கிடைத்தால் போதும்! – அப்படியே ஆகட்டும்.
ஞா. ஆனால் கொஞ்சம் பொறுங்கள் – அவளை இங்கே அனுப்புகிறேன்?
பா. எங்கே இருக்கிறாள் – அந்த ஞானாம்பாள்?
ஞா. பக்கத்து வீட்டில்தான் தங்கியிருக்கிறாள் – என்னுடன் நான் வரும்போது என்னுடன் வந்தாள் – அவள் உம் மீது மிகவும் காதல் கொண்டிருக்கிறாள். உம்மையே கலியாணம் செய்துகொள்ள வேண்டு மென்றிருக்கிறாள் அவள் உம்முடைய மனதை மெல்ல அறியும்படி சொன்னாள் – என்னிடம் இதோ நான் உங்கள் அக்காளுடன் அவளை அனுப்புகிறேன்.
(போகிறாள்)
பா. இதென்னடா கஷ்டமாய் முடிந்தது! கலியாணமே வேண்டாமென்றிருந்ததற்கு, ஒரு தாரத்திற்கு இரண்டு தாரமா? – அப்புறம் என் பிரம்மச்சாரி சபதம் எப்படிப் போவது!
பாலாம்பாள் ஞானாம்பாளுடன் வருகிறாள்.
பாலா. பாலகிருஷ்ணா – ஏன் முகத்தைத் திருப்பிக் கொண்டாய்? இப்படித் தான் கொஞ்சம் திரும்பி பாரேன் – ஞானாம்பாளை!
ஞா. ஞானாம்பாள் மீது அவருக்கு நிரம்ப கோபம்; திரும்பி அவள் முகத்தைக் கூடப் பார்க்க இஷ்டமில்லை.
பா. யாரது? [திரும்பி] எதோ ஞானாம்பாள்?
பாலா. முண்டம்! – இன்னும் தெரியவில்லையா? – நீ கலியாணம் பண்ணிக் கொள்ள விரும்பும் லோகாம்பாள் தான். நீ கண்ணெடுத்து பாரேனென்று கூறிய ஞானாம்பாள்!
பா. ஆ!-அப்படியா!- ஞானாம்பாள்!-
(திரை விழுகிறது)
நாடகம் முற்றியது.
– ஒன்பது குட்டி நாடகங்கள், முதற்பதிப்பு: 1956, நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ. பி. எல் அவர்களால் இயற்றப்பட்டது.
தொடர்புள்ள சிறுகதைகள்
முள்
ஜே.எம்.சாலி
August 1, 2026
கடவுள் போட்ட முடிச்சு!
கல்பனா ராஜகோபால்
August 1, 2026
பூசைக்குள் வரும் பூக்கள்
காரை ஆடலரசன்
August 1, 2026