பூச்சியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 8, 2026
பார்வையிட்டோர்: 3,707 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நீங்கள் நல்ல மனநிலையில் இருக்கின்றீர்கள் – கோபிக்க வேண்டாம் – அல்லது முற்றுமாக குழம்பிய நிலையில் இருக்க வில்லை. இருந்திருந்தால் இப்படியொரு கதையை வாசிக்க எத்தனித்திருக்கமாட் டீர்கள் – அதனால் இது மோசமான கதை என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். ஓரளவுக்கேனும் நீங்கள் சமநிலை மனநிலை யுடன் தான் இருக்கின்றீர்கள் என்பதை நான் உணர்கின்றேன். ஆனால் நான் இதை எழுதும் போது அப்படியானதொரு நிலையில் இருந் தேனா என்பதை நீங்கள் தான் கண்டு பிடிக்க வேண்டும். 

நான் இதைச் சொல்லிவிடுவதால் சில அசௌகரியங்களை தவிர்த்துவிட முடியும் என நினைக்கின்றேன். நீங்கள் இதைக் கதை யென்று இறங்கிவிட்டீர்கள் ஆனால் இது வொரு புதிர். இங்கு புதிர் நிறைந்த நிறையப் பாதைகள் பிரிந்து சென்று கொண்டே இருக்கும். ஆனாலும் எப்படியாவது உங்களால் மீண்டு சென்று விடக்கூடிய தைரியமும், நம்பிக்கையும் இருப்பதாய் எனக்குப்படுகிறது. அந்த உணர்வு தானகவே என்னுள் எழுந்து விட்டது. 

உணர்வுகள் தான் எப்போதும் புரிந்து கொள்ளத்தூண்டும். அதுவே பின்னர் புரிந்து ணர்வாக மாறியதை எல்லோரும் அறிவோம். 

எந்தவித காரணம் கொண்டும் நீங்கள் நடுநிலையை தவறவிடக்கூடாது. ஏனென் றால் நீங்கள் சென்று கொண்டிருக்கும் பாதை யின் ஓரங்களில் காயப்படுத்திவிடக்கூடிய என்னனென்ன இருக்கின்றதென்பதனை நீங்கள் அறிந்து வைத்திருக்கப் போவதில்லை – அறிந்திருக்கவும் முடியாது. 

அதன் உண்மை என்னவென்றால் உங்களை அழைத்துச் செல்லும் எனக்குக் கூட அதன் அமைப்பை சரியாக தீர்மானிக்க முடியவில்லை. நீங்கள் இதை நம்பித்தான் ஆகவேண்டும். இந்தக் கதையென்ற புதிர்ப் பாதையில் இரண்டு பேருமே சமாந்தர மாகத்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் நீ/நீங்கள் எனைவிடவும் பல மடங்கு நிதானமாகவும், சுயாதீனமாகவும் இருக்கின்றீர்கள். நான் அவற்றை இழந்து சரியாக எத்தனை வருடங்கள் எனக்கூற முடியாவிட்டாலும் இழந்து போனேன். – அதை விடவும் இழக்கடிக்கப்பட்டேன் என்பது உண்மையென தோன்றினாலும், நான் பிடிவாதமாய் இழந்தேன் என்பது தான் அதிகமான வார்த்தை இதைப்படித்த பின் முடிவு சொல்ல வேண்டிய இன்னொரு பொறுப்பு உங்களுக்கு அளிக்கப்படுகின்றது. 

இப்படியொரு கதையை அல்லது இவருடைய கதையை அல்லது இதில் வந்தி ருக்கும் கதையை வாசித்துவிட வேண்டும் என நீங்கள் பக்கங்களை புரட்டிக் கொண்ட போதே நீங்கள் எனை அண்மித்த உணர்வு – எங்கோ எப்படியோ இருந்த எனை ஆக்கிர மித்துக் கொண்டது. நீங்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்ளப்போகின்றீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. ஒன்றை மட்டும் என்னால் தெரிவித்துக் கொள்ள முடியும். இதையெல்லாம் தாங்கிக் கொண்டு தைரியத்துடன் வெளியேறும் உங்களால் இந்த உலகைப் புரிந்து கொள்வதுடன் வெற்றி கொண்டு செயற்பட முடியும். உங்களை நெருங்கி தாக்கிவிட முனையும் அத்தனை காரணிகளையும் தாங்கிக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் கூடிய மன தைரியத் தையும் இங்கே அனுபவிப்பீர்கள். நான் உங்களை அழைத்துச் செல்வது இயற்கை அழிவுகளால் செதுக்கப்பட்டு மனித துரோ கங்களால் செப்பனிடப்பட்ட பாதையில் என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப் பில்லாவிட்டாலும் – அறியக் கூடிய சந்தர்ப் பத்தை நான் உங்களுக்குத் தந்திருக்கின்றேன். 

பொதுவாகவே தனிமையை நீங்கள் எப்படி உணர்கின்றீர்கள் என்பதை நான் விளங்கிக் கொள்ளவோ – தெரிந்து கொள் ளவோ முடியாவிட்டாலும் தனிமை எப்போ துமே எனக்குப் பிடித்தது. தனிமையில் பிறக்கும் எல்லாமுமே பரிசுத்தமானவை – ஆழ் மனதின் வெளிப்பாடுகள். புதைந்து கிடப் பவை தோண்டி எடுக்கப்படும் பொழுதுகள். அப்போது தான் தங்கம், வைரம் என எல்லாமும் கிடைக்கும். சிலருக்கு குப்பையைக் கிண்டிய நாற்றமும் எடுக்கும். எப்படி யானாலும் – தனிமை – சுயத்தைக் காட்டி நிற்கும் கண்ணாடி என்பதை உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. கொஞ்சமாவது அதன் இனிமை உங்கள் நாக்கைச் சுவையூட்டி இருக்கும். அதன் சுவை ஒவ்வொருத்தருக்கும் வேறுபட்டாலும் – அவரவருக்கு அது பிடித்துத்தான் இருக்கும். 

ஆனால் வெறுத்து ஒதுக்கப்பட்டதன் தனிமையின் கொடுமையை உணர்ந்திருந்தால் மேற்கூறியவை உங்களுக்குப் பொருந்தாது. அதன் மன அழுத்தமும் – போராட்டமும் இன்னும் பிறவும் யாராலும் புரிந்துகொள்ள முடியாது. அத் தனிமையின் கண்ணீரின் உப்புச் செறிவை உங்களைத் தவிர யாராலும் அறிய முடியாது – அத்தனை செறிவுடன் கொஞ்சம் கொஞ்சமாய் கன்னங்களில் இறங்கிப் படியும் உப்புப்பருக்கைகள் அதி காலையைக் கூட ரணமாக்கும் என்பது எனக்குத் தெரியும். தீராத கோபத்துடனோ கண்கள் மூழ்கும் கண்ணீருடனோ நீங்கள் இருக்கின்றீர்கள் என நான் கருதவில்லை. கதைகளை வாசித்து முடிக்கும் போதும் – வாசிக்கும் போதும் உங்களுக்கு கொஞ்ச மேனும் சிரிப்பைத் தெளித்து சிந்திக்கச் செய்ய வேண்டுமென்றே முனைகிறேன். ஆனாலும் அதை நிகழ்த்த விடாமல் கண் ணீரை அளித்து யோசனையுள் ஆழ்த்தி விடத்தான் என்னால் முடிகிறது. என்னுள் பீறிட்டெழும் ஆற்ற முடியா கொடுமையை தாங்கிக் கொள்ள இயலாமல் திணறிக் கொண்டிருந்த வேளையில் தான் எனைத் தாங்கிக் கொள்ள நீங்கள் கிடைத்தீர்கள். நான் எப்போதுமே யாரையும் முழுமையாக நம்பி எனக்கானவளாக/வனாக ஏற்றுக்கொள்ளுவேன். 

இப்போது உங்களையும் கூட: 

அதனால்தான் கதையென்ற இந்தப் புதிரை உங்களுக்குச் சொல்லத் தயாரானேன். இதன்போது பல ஆலோசனைகளை வழங்க வேண்டிய அவசியமும் உங்களுக்கு அளிக்கப் படுகின்றது. ஏனென்றால் அதை முன்ன மேயே கூறிவிட்டேன். நான் சுயமும் சுயாதீனமும் இழந்து விட்டதை மன்னிக்க இழக்கடிக்கப்பட்டதை. 

இந்த எழுத்துக்களினூடு உங்கள் கண்களைப் பார்க்கும் போது – உங்கள் கண்கள் எனையே தான் உற்றுப்பார்த்துக் கொண்டி ருக்கின்றன – கண்களில் தூக்கக் கலக்கம் தெரியவில்லை. இதிலிருந்து நீங்கள் நன்றாக தூங்கி இருக்கின்றீர்கள் அல்லது ஒரளவுக் கேனும் தூக்கம் உங்களை அணைத்திருக் கின்றது என்ற முடிவுக்கு நான் வருகின்றேன். ஆனால் தூக்கமற்று புரண்டு, கண்கள் கொதிக்க, முகம் சிவக்க இரவின் இழைகளுள் புகுந்தெழுந்த நாட்களை என்னால் கணக் கிட்டுக் கூறிவிடமுடியாது. அத்தனை இரவு களையும் வென்று இன்னமும் இருக்கின்றேன் – தூக்கமின்றி – அதனால் நிறையவே ஞாபக சக்தியை இழந்தேன் என்பது மட்டும் உண்மை. 

நீங்கள் நிறையவே ஞாபக சக்தியுடன் இருக்கின்றீர்கள் என்பதற்காகத் தான் இந்த புதிர் நிறைந்த பாதையில் உங்களை துணைக் கழைத்துக்கொண்டு செல்கின்றேன். 

உங்களுள் நிறையவே ஞாபகங்கள் அடுக்கப்பட்டு இருக்குமென நினைக்கிறேன். எல்லோரையும் போல ஞாபகங்களாலான ஒரு கோட்டையை நானும் கட்டி வைத்திருக்கி றேன். அதற்கு என் ஆசைகளால் கலக்கப்பட்ட அழகிய வர்ணம் பூசி மெருகூட்டி வைத்துக் கொண்டே இருந்தேன். நான் சுயமிழந்து திரிந்தபோது அது தொலைந்து போய்விட் டதை உணர்ந்தேன். வலுக்கட்டாயமாக நினைவுகளை கோர்க்க முனைந்தும் கூட மறைந்து போனதை இனங்கண்டு கொள்ள முடியவில்லை – முடிந்ததே இல்லை. சில வேளை உங்கள் கண்களுள் எங்கேனும் தட்டுப்படலாம் என்பதற்காகவே இதை உங்களுக்குச் சொல்லி வைத்தேன். 

இந்தக் கதையை நீங்கள் படிக்க முடிவெடுத்துக் கொண்டபோது உங்களைப் பற்றி நான் தெரிந்து கொண்டது அதிகம். சிறிய வயதின் சின்னச் சின்ன அனுபவங்கள், பள்ளிக்கூட குறும்புகள், வாசிப்பில் கிடைத்த ஆளுமைகள் தொடர்புகள் குறித்தெல்லாம் நரம்புகளுள் ஓடிக்கொண்டிருக்கும் ஞாபக இசையை மீட்டி அதில் திளைத்துப் போக உங்களால் முடியும். ஞாபகங்கள் என்பதே ஒருவகை இசைதான் என்பது நான் உங்க ளுக்குச் சொல்லிப் புரிய வேண்டும் என்ப தில்லை. அதனுள் மயங்கி உங்களை மறந்து பல பொழுதுகளைக் கடந்து குறிப்பாக கனவுகளை நெய்து கொண்டிருந்ததை மறக்க முடியாது. 

இதை வாசித்துக் கொண்டிருக்கும் போதுகூட உங்களை அறியாமல் ஏதோ வொரு ஞாபகத்துள் ஊடுருவிச் சென்றுவிட்டு வரக்கூடிய சாத்தியக் கூறுகள் நிறைய இருக்கின்றன. என் கோட்டை தொலைந்து போனதன் பின்பு எங்கும் நான் செல்வதில்லை. நிகழ்காலத்துள் மட்டும் சுருண்டு கொள் கின்றேன். பெயர்ந்து போன என் கோட் டையை தேடி அலைந்த போது மண் பருக்கை களால் மூடுண்டு கிடந்த சில அதிசயங்களை பொறுக்க முடிந்தது. அவற்றை அரும் பொருளாக சேகரித்து அவற்றை உங்களுக்கு தந்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இந்த கதையென்று நீங்கள் நினைத்த புதிர் தொடங்கப்பட்டது. 

மெய்யாலுமே எனக்கு நிகழ்ந்தது யாருக்கும் நிகழக்கூடாது. உலகில் சபிக்கப் பட்ட முதல் பிறப்பு நான் தான் என எல்லோரும் நினைத்தாலும் அந்த உண்மை யின் முதல் வடிவம் நானாய்த்தான் இருப் பேன். இதைக் கூட கதை முடியும் போது நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும். நீங்கள் முற்றாக என்னுடன் இறங்கிய பின் பல பொறுப்புக்கள் உங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவற்றில் எதிலிருந்தும் நீங்கள் நழுவிவிட நினைக்க வேண்டாம். உங்களிடம் கொண்ட அதீத நம்பிக்கையினால் தான் இத்தனை யையும் கூறிக்கொண்டிருக்கின்றேன். உங்களி னுடைய சுக – துக்கங்களை பகிர்ந்து கொள்ள குறைந்தது ஒருவரேனும் இருக்கலாம். ஒருவரும் இல்லாவிட்டால் நான் இருக்கிறேன் என நம்புங்கள். எல்லோருமே எனை ஒதுக்கி தனிமைப்படுத்தியதன் பின் உங்களை நம்பித் தானே நானே இருக்கின்றேன். இனியேனும் உங்களுக்காய் நானும், எனக்காய் நீங்களும் இருப்பதாய் எண்ணிக் கொண்டு எல்லாவற் றையும் பகிர்ந்து கொள்வோம். 

ஒன்றை மறந்துவிட்டேன். என்னி டம் ஒரு நாய் இருக்கின்றது.அதனிடம் நான் எல்லாமும் சொல்வேன். குறிப்பாக போதை யில் இருக்கும் போது எதையும் விட்டுவைக் காமல் சொல்வேன் – அளவுக்கதிகமாக பாசங்காட்டுவேன். அது கூட நான் வெளியே சென்று வரும் பொழுதுகளில் யன்னலில் தலையை வைத்து பாதையில் வாசத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும். என் வருகையை உணர்ந்து நாவினால் பாசத்தை ஈரப்படுத்தி நான் தலையை கோதிய பின்பே அது தன் இயல்பு நிலைக்கு வரும். எனக்கருகில் காலில் தலையை வைத்துக் கொண்டு தூங்கும் அது. என் மூச்சுக் காற்றை நக்கிச் சுவைப்பதில் அலாதியான பிரியம் அதற்கு. உண்மையில் அது விசித்திரமான நாய் தான். நான் குறித்தும் என் எண்ணங்கள் குறித்தும் அது என்ன எண்ணித் தொலைத்திருக்கிறது எனத் தெரியவில்லை. எல்லோரைப் போலவும் எலும்புக்கும், தீனிக்கும் மட்டுமாக எனைப் பயன்படுத்துகிறதா என்பதை என்னால் கணக்கிட்டுவிட முடியவில்லை. எப்படியோ எனக்காக காத்திருப்பதும், எனை நக்கிக் கொண்டு என்னுடன் படுத்திருப்பதும் எனக் குப் பிடித்துத்தான் இருக்கின்றது. அதுதான் கொஞ்சமாவது ஆறுதலை எனக்கு தந்து கொண்டிருக்கிறது என்பதை இப்போது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டிய தேவை இருக்காது என நினைக்கின்றேன். 

உங்களுக்கு மாற்ற முடியாத நோய் கள் ஏதும் இருக்கிறதாவென எனக்குத் தெரியவில்லை. அப்படி ஏதும் வந்துவிடக் கூடாது. நீங்கள் நல்ல சுக தேகியாக இருக்க வேண்டும். எனக்குக்கூட அப்படி ஏதும் இல்லை. ஆனாலும் எனைச் சுற்றி இருப்ப வர்களுக்கு நிறையவே இருக்கின்றது. அத னால் தான் அல்லது அவர்களால் தான் எனக்குரிய வைத்தியச் சான்றிதழ் அளிக்கப் பட்டு மாற்ற முடியாத நோய்க்குரியவனாக நான் ஆக்கப்பட்டேன். எனைப் பீடித்திருக்கும் நோய் பற்றி கொஞ்சமும் அறிந்திராத நான் வேளைக்கு வேளை வழங்கப்பட்டிருக்கும் மருந்துகளை மட்டும் உட்கொண்டு வருகி றேன். இதனால் என்னுள் நிறையவே மாற்றங் களை உணர முடிகின்றது. என்னிலிருந்து நான் விலகி விடுவதையும் எனது சிந்தனைகள் கரைந்து விடுவதையும் உணர்கின்றேன். இப்போதெல்லாம் அதை உட்கொள்வதில் பெரும் ஆர்வமுடன் இருக்கின்றேன். இதனால் போதை தலைக்கேறி சந்தோ ஷத்தை தருவதாகப்படுகின்றது. பின்னே நான் கூறப்போகும் கதையை வைத்துக் கொண்டு எனக்கொரு நல்ல காவலாக, எனை வழிநடத்திச் செல்பவராக இருக்க வேண்டிய மற்றுமொரு பொறுப்பையும் உங்களிடம் தான் ஒப்படைக்கப் போகின்றேன். 

நீங்கள் நிறையவே வாசிக்கின்றீர்கள். அதனூடு தெளிவான மொழிவளம் உங்களுள் தானகவே ஒட்டிக் கொண்டிருக்கும். நிராத ரவாக நிற்கும் எனக்காக ஆறுதலாக சொல்லி விடக் கூடிய வார்த்தைகளைப் பொறுக்கி எனக்குத் தந்துவிடுவதனால் உங்களுக்கு நிறையவே சந்தோஷங்கள் வந்து சேரும். இருட்டு நிறைந்து கிடக்கின்ற அறைக்குள் ஒளி இழைகளைப் பின்னி வெளிச்சமூட்டும் முயற்சியை நீங்கள் மேற்கொள்வதனால் அறைக்குள் கிடக்கின்ற உயிரிகளுக்கெல்லாம் வழிகாட்டிய பெருமை உங்களை அண்டிக் கொள்ளும். அப்படியொரு தேவை உங்க ளுக்கு இருக்கின்றதா? அதைச் செய்யத்தான் வேண்டுமா? என்ற கேள்விகள் உங்களுள் எழுந்தாலும் இந்தக் கதை முடியும் போது ஒரு தீர்க்கமான முடிவை உங்களால் எடுத்துக் கொள்ள முடியும். அதற்குத் தேவையான ஆதாரங்கள் அடங்கிய அனுபவம் உங்களுக்குக் கிடைத்துவிடும். 

நீங்கள் மற்றவர்களில் இருந்து தோற்றத்தில் வித்தியாசப்பட்டுத்தான் இருப்பீர்கள் – குணங்களும் கூட. ஆனால் உங்கள் செயற் பாடுகள் எல்லாம் அழகும் – அறிவும் நிறைந்த வித்தியாசமாக இருக்குமா? என்பதை நான் அறியேன். ஆனால் என்னுடைய முதன்மை யான இயல்பே அது தான். நிறையவே பாதைகள் பலரால் இனங்காணப்பட்டிருந் தாலும், அதன் வழியே ஆயிரமாயிரம் பேர் சென்று கொண்டிருந்தாலும் என் அனுபவங் களிலிருந்து எனக்கானவொரு பாதையை வடிவமைத்துக் கொண்டு நடந்து கொண்டி ருக்கிறேன். விரிக்கப்படாத என் பாதையை நானே விரித்து நீண்டு கிடக்கும் நெடு வெளியுள் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் இப்போது அழகான பாதையை விரித்துக் கொண்டு அதற்கு என்ன வடிவத்தில் என்னென்ன நிறங்களைப் பூசி அழகுபடுத்தலாம் என்பது பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு உங்களின் உதவி தேவைப்படுவதையும் உணர்கிறேன். உங்களின் ஞாபகத் துள் உங்களுக்கென நம்பிக்கையுடன் ஒப்ப டைக்கப்பட்ட பொறுப்புக்கள் இருக்குமென கருதுகின்றேன். அதை மறுதலித்துவிடாமல் இந்தப் புதிர் பாதைக்குள் நீங்கள் நுழைய தயாராக இருந்தால், ஒரு போராட்டத்திற்கு துணை நின்ற பெருமை, நடு நிலையுடன் பிரச்சினைக்கு தீர்வு கண்ட நேர்மையின் மிடுக்கு, சிக்கிக் கிடந்த நூலினை எடுத்து ஒழுங்குபடுத்திய பொறுமை, கரடுமுரடான வழியை செப்பனிட்டதும், அழகுணர்வுடன் மிளிரப்பண்ணியது என உங்களுள் சந்தோஷம் பொங்கிக்கொண்டே இருக்கும். அல்லது நாசமாய்ப் போய்விடக்கூடிய நிலையில் இருந்த யாரையோ காத்துக் கொண்டதோ, துன்பத்துள் உழன்று கொண்டிருந்தவரை, நோய்மை சுவைத்துக் கொண்டிருந்தவரை விடுவித்துக் கொண்டு வந்து சேர்த்த புண்ணியம் உங்களை வந்தடையும். 

உங்களுக்கு எதைக் கொண்டு வந் தோம், எதையெதை கொண்டு செல்லப் போகின்றோம் என சரியான தெளிவோ – முடிவோ இருக்காது – எனக்கும் கூட. வாழ்வு நகர்த்தும் கட்டங்களில் ஒவ்வொன்றிலும் இது தான் சுவாரஷியம் நிறைந்தது. அது தான் என் பிறப்பிற்கு கிடைத்த அருமையான விடயம் என நினைத்திருப்போம். இதுவே காலத்தின் மாற்றத்தினால் பொருளும் ஆளும் மாறி பயணம் தொடர்ந்து கொண்டு இருக்குமே தவிர நினைப்பு மாறி இருக்காது. இப்போது உங்கள் எண்ணங்கள் எங்கோ பறந்து போக நினைக்கும். கண்களில் பலரும் – பலதும் காட்சிப்படிமங்களய் தோன்றி மறையும். கொஞ்சம் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் எண்ணங்களின் பின் போய்க்கொண்டே இருந்தால் அந்தரத்தில் நின்று கொண்டு தொடக்கமும் – முடிவும் தெரியாமல் திணறிப்போய் விடுவோம். இப்போதுகூடப் பாருங்கள்: கதையென்று தொடங்கி அதைப் புதிராக்கி எங்கோ தொடங்கி நான் சொல்ல வந்த கதையை எங்கிருந்து தொடங்குவது என்பதை மறந்துபோனேன். – அதைவிடவும் அதைப் புதிரான பாதை என்று ஏன் சொன்னேன் என்பதை நீங்கள் மன்னிக்கத்தான் வேண்டும். முன்னமே நான் நிறையவே குழம்பி இருக்கின்றேன் என்பதையும் சிதைவுற்றுத் தான் கிடக்கின்றேன் என்பதையும் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் என நினைக் கின்றேன் – சரி சொன்னேன் தானே; 

ஐயோ, அது கூட ஞாபகத்துள் இல்லை. 

கொஞ்சமேனும் நிதானத்துடன் உங்களைச் சந்திக்க முனைகின்றேன் 

குறிப்பாக – நீங்கள் விரும்பினால்…

– ஜூலை – செப்ரெம்பர் 2012, கலைமுகம்.

எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது 'ஏவிவிடப்பட்ட கொலையாளி' (2008) மற்றும் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை. பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *