புள்ளிகள்
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஹோ என்ற இரைச்சலுடன், மீண்டும் ஓரலை வந்து கரை தழுவி மீண்டது. சின்னச் சின்ன வெள்ளிப் பூக்களாய் நுரைக்கோலமிட்ட அவை பின்வாங்கிப் போனபின்பும், தீர்வு காணப்படாது நீளும் வடகிழக்குப் பிரச்சினையாய் நுரைக் குமிழிகளில் கொஞ்சம் கரையிலே இன்னும் மிச்சமிருந்தது. சற்றுத்தொலைவிலே, சின்னஞ்சிறுசுகள் பந்தடித்தும், பட்டம் விட்டும், மணல்வீடு கட்டியும் அவரவர் உலகத்தில் ஆனந்தமாய் ஆழ்ந்துபோயிருந்தனர். அவரவர்களின் இயல்புக்கேற்ப காதலை… குடும்பக் கவலைகளை… அலுவலகச் சங்கடங்களைச் சுமந்து கொண்டு பலப்பல ரகங்களில் மனிதயந்திரங்கள்…
சுற்றுச் சூழலினால் சற்றும் பாதிப்புறாதவன் போல் கடலையும் பேரிரைச்சலோடு எழுந்து வீசும் அலைகளையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான், சஞ்சீவன். மனம் வெறுமையாகி, பந்து போன்ற ஏதோ வந்து நெஞ்சுக்குழிக்குள் சிக்கிக் கொண்டதான வேதனையை உணர்ந்தான். விழிகள் மெல்லப் பனித்தன. அவ்விழிகளுக்குள்… இறந்து போய்விட்ட வயோதிபத் தாயும், புதிதாய்த் திருமணமான அக்காவும் பள்ளி செல்லும் தம்பிமாரும் தங்கையும் மங்கலாக வந்துபோயினர். இதயம் பிளந்துகொண்டதான ஒரு பெருமூச்சு நாசியிலிருந்து சூடாக வெளியேறிக் காற்றோடு கலந்தது.
சிந்தனை கலைந்து சுற்று முற்றும் பார்த்தான். எங்கும் இருள் கப்பியிருந்தது. நிலவொளியில் ஓரிருவரைத் தவிர அனேகமானவர்கள் சென்றுவிட்டிருப்பதைக் கண்டு கொண்டான். உடையில் ஒட்டியிருந்த மணலைத் தட்டியபடி எழுந்து கடலைப் பார்த்தான். ‘ஹோ!’ – அவனது உள்ளத்தைப் போலவே அதுவும் ஓலமிட்டது. அதற்கு முன் ஒருபோதும் நடந்தே இராதவன் போல… அல்ல, வாழ்க்கை முழுவதையும் வெறும் நடைப்- பயணத்திலேயே கழித்துவிட விரும்புபவன்போல அவன் மிகவும் மெதுவாக ஒவ்வோர் அடியையும் எடுத்து வைத்தான்.
ஹோட்டலை அவன் அடையும்போது மணி ஒன்பதாகி விட்டது. ஒரு கப் பால் மட்டும் அருந்திவிட்டுத் தன்னறைக்குள் நுழைந்தான். அறை இருட்டாக இருந்தது. பக்கவாட்டு ஜன்னலின் வழியே இலேசான ஒளிக்கீற்றுக்கள் அந்த அறையின் அமைப்பை வரிவடிவமாக்கிக் காட்டின. மின் விசிறியை இயக்கிவிட்டு கட்டிலில் சரிந்தான். நினைவு பின்னோக்கி ஓடியது.
சஞ்சீவனுக்கு அப்போது எட்டு வயதிருக்கும். தனது கூட்டாளிகளுடன் கடலுக்கு மீன்பிடிக்கப்போன அவனின் அப்பா மரியதாஸ் இரு வாரங்களாகியும் கரைதிரும்பவில்லை. அவர்களின் குடிசையும் அக்கம் பக்கமிருந்த ஓரிரு குடிசைகளும் அல்லோலகல்லோலப்பட்டன. ஆளாளுக்கு ஒவ்வொன்று கூறிக்கொண்டனர். வள்ளங்கள் ஆழ்கடலில் ஆழ்ந்திருக்கலாமென்றும், புயலில் சிக்கி வழிமாறியிருக்க- லாமென்றும், இனந்தெரியாமல் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பலவாறு கதைத்தனர். நாள்தோறும் அவர்கள் கரையோரத்தில் நின்று, கடலையே பார்த்துப் பார்த்துச் சோர்ந்து போனார்கள்; சென்றவர்களில் எவருமே கரை திரும்பவில்லை.
வருடங்கள் மூன்று கடந்துசென்றன. சஞ்சீவன் குடும்பத்தில் இரண்டாவது மகன். மூத்த அக்கா ஒட்டுப்போட்ட பாவாடை, கிழிசல் தாவணியுடன் கல்யாண வயதைக் கடந்து கொண்டிருந்தாள். தம்பிமார் இருவர், தங்கையொருத்தி என்று பெரிய குடும்பம் அது. ஆஸ்துமா நோயுடன் போராடிக்கொண்டு கயிறுதிரித்தும் கூலிவேலை செய்துமாகத் தன் குடுத்பத்தைப் படாதபாடுபட்டுக் காப்பாற்றி வந்தாள் சிசிலி.
சஞ்சீவனும் தாயும் சுறுசுறுப்பாகக் கயிறு திரித்துக் கொண்டிருந்தனர். அக்கா அவற்றை ஒழுங்காகச் சுற்றிவைப்பதில் மும்முரமாக இருந்தாள். ஒரு நாளுமில்லாத திருநாளாய் அவர்களின் தூரத்து உறவினரான அல்விஸ்மாமா, ஒரு நடுத்தரவயது மனிதருடன் தம்வீடுநோக்கி வருவதைக் கண்டு அவர்களுக்கு அதிசயமாகவிருந்தது. வந்தவர்கள் அமர்வதற்காகக் கயிற்றுக் கட்டிலைத் திண்ணையில் அவசர அவசரமாக விரித்தாள் சிசிலி. அல்விஸ் மாமா. கோட்சூட் அணிந்திருந்த அந்தப் புதிய மனிதரை அறிமுகப்படுத்தினார்.
“புள்ள சிசிலி, இவர் ஹிக்கடுவையிலுள்ள ஒரு பெரிய ஹோட்டலில் மனேஜரா இருக்கார்”
“வணக்கம் ஐயா” -புதியவர் தாமும் கைகளைக் கூப்பினார்.
“புள்ள, இவர நான் எதிர்பாராம பஸ்ஸில சந்திச்சேன். பேச்சு வாக்குல இவர்ட ஹோட்டல்ல கெஷியர் வேலைக்கு ஒரு நம்பிக்கையான பொடியன் வேணுமெண்டு சொன்னார். எனக்கு ‘டக்’ குன்னு நம்ம சஞ்சிப் பயல நெனப்புல பட்டிச்சி. உங்க குடும்ப நெலமையைப் பத்தி நான் சொன்னதைக்கேட்டு ஐயாவோட மனசு உருகிப்போயிட்டுது. கொடுத்தா அந்த வேலைய நம்ம பொடியனுக்குத்தான் கொடுப்பேன்னு சொல்லு- றாரு. நீ என்ன சொல்லுறே?”
என்று கேட்டபடி அக்கா கொண்டுவந்த சாயா கோப்பையையும் கருப்பட்டித் துண்டையும் கவனமாக எடுத்துக் கொண்டார். புதிய மனிதர் அக்காவைப் பார்த்த பார்வை ஏனோ சஞ்சீவனுக்குப் பிடிக்கவேயில்லை.
“மாமா சஞ்சி இன்னும் சின்னப் பொடியன்…”
“என்ன புள்ள வெவரம் தெரியாமப் பேசுறே? அவனுக்கு பதினொண்ணு முடியப்போகுது. பார்வைக்கு பதினைஞ்சு, பதினாறு வயசுப்பொடியன் மாதிரி நல்ல வளர்த்தியா இருக்கான், அவன் தகப்பனப் போல…”
திடீரென்று கணவனின் ஞாபகத்தில் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்ட சிசிலியைப் பார்த்து அல்விஸ் தொடர்ந்தார்.
“இதோ பாரு. ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. இனி நடக்க வேண்டியதைப் பாரு புள்ள. உங்க கஷ்டம் எனக்குத் தெரியும். இதெண்டா நல்ல வேலை. மாசாமாசம் சொளையா ரெண்டாயிரம் ரூபா தர்றதா சொல்றாரு. நீ என்னடான்னா…”
“அம்மா, இந்தக் கஷ்டத்துல நான் படிக்கிறதவிட, வேலைக்கு போனா, தம்பி தங்கச்சியாவது நல்லா படிக்கமுடியும் தானே? அத்தோட, அக்காவுக்கும் கல்யாணம்…”
“சபாஷ்! இது புத்தியான பேச்சு! பொடியன் பிழைச்சிக்குவான். இன்னுமென்ன, பயணத்துக்குத் தேவையான உடுப்புகள் தயார்பண்ணு சிசிலி. நான் ஐயாவோட இன்னும் ஒருமணி நேரத்துல இங்க வாரன்.”
சிசிலிக்கு இன்னும் தயக்கம் தீரவில்லை. எனினும், குடும்ப நிலைமை, மகனின் உறுதியான பேச்சு என்பவற்றால் வேறுவழியின்றி மகனுக்குத் தேவையானவற்றை ஆயத்த- மாக்கினாள்.
“அண்ணா, எங்கள விட்டுட்டுப் போகப்போறியாண்ணா?”
தன்னைச் சூழ்ந்துகொண்டு கண்கலங்கி நின்ற இளைய சகோதரர்களைப் பார்த்தபோது கவலையாக இருந்தது. அக்கா கனிவோடு தலையைக் கோதி விட்டாள். அம்மா அக்காவின் கால்களில் விழுந்து கும்பிட்டபோது, அவனை வாரித்தூக்கி அணைத்தபடி விசும்பியவர்களைத் தைரியமாக இருக்கும்படி கூறிவிட்டு குடிசைக்கு வெளியே வந்தான். அல்விஸ் மாமாவும் அந்த மனிதரும் வந்து கொண்டிருப்பது கண்ணில்பட்டது. நடையில் தள்ளாட்டமும் பேச்சில் சற்றுக் குழறலும் அல்விஸ் மாமாவிடம் ஏற்பட்டிருப்பதையிட்டு அவன் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சம்பள முற்பணம் என்று அந்த மனிதர் நீட்டிய ஐநூறு ரூபா நோட்டை அம்மா பவ்வியமாகப் பெற்றுக்கொள்ள, அம்மனிதருடன் புறப்பட்டுப் போனான் சஞ்சீவன்.
நீண்ட பஸ் பிரயாணத்தின் பின் குறித்த ஹோட்டலை வந்தடைந்த பின்புதான், தான் அழைத்துவரப்பட்டிருப்பது ‘ரூம்போயாக’ என்ற உண்மை – சஞ்சீவனுக்குத் தெரிந்தது. அதுபற்றி அவன் கேட்கமுற்படும் போதெல்லாம் மனேஜர் அவனிடம் பேச்சுக்கொடுக்க விரும்பாதவராய் நழுவினார். பதினைந்து வயதும் நிரம்பாத ஒரு சிறுவனுக்கு அவ்வளவு பெரிய ஹோட்டலில் காசாளர் வேலை கிடைக்குமென்று நம்பியது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்பதைச் சஞ்சீவன் மெல்ல உணர்ந்து கொண்டான்.
சம்பளமாய் ஆயிரத்தி இருநூறு ரூபாய்களே கிடைத்தன. ஆயிரம் ரூபாவை வீட்டுக்கு அனுப்பிவைத்தான். எனினும், அந்த ஹோட்டலில் பெரும்பாலும் வெளிநாட்டுக்- காரர்களே தங்குவதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் ஏற்படாமலில்லை. வசீகரமும் சூடிகையும் கபடமற்ற தோற்றமும் கொண்ட சஞ்சீவனை அனேகருக்குப் பிடித்துப்போனதால், அடிக்கடி ஏதேனும் பரிசு கிடைத்துக் கொண்டேயிருந்தது. அவற்றையெல்லாம் தன் பெட்டியில் பத்திரமாய்ப் போட்டு- வைப்பான். பிறகு தன்னைவிட இரண்டு வயது மூத்தவனான சோமசிறியின் ஆலோசனையைக் கேட்டு அவனுதவியோடு வெளியில் அவற்றை விற்றுப் பணமாகச் சேர்த்தான். ஒரு வருடம் வேகமாக உருண்டோடியது. புது வருடம் தன் வாழ்வினைத் திசை திருப்பப் போவதை அப்போது அவன் அறிந்திருக்க- வில்லை.
அன்று அமெரிக்காவிலிருந்து வந்திருந்த அந்தப் பணக்காரரின் அறையைச் சுத்தமாக்கும் பணி சஞ்சீவனுக்கு. அறையில் நுழைந்த வேளையில் இருந்து அந்த மனிதன் தன்னையே வைத்த கண் வாங்காது ஏன் பார்க்கிறான் என்று சஞ்சீவனுக்கு ஒரே ஆச்சரியம். “நீஅழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறாய்” என்றான் அவன் திடீரென்று. இவனுக்குக் கூச்சமாக இருந்தது. சங்கோஜத்துடன் நன்றி சொன்னான்.
மீண்டும், “உன் கண்கள் மிகவும் அழகானவை. அதில் ஒருவித வசீகரம் இருக்கிறது” என்ற அவனின் வார்த்தைகளில் இவனுக்குப் பாதிக்குமேல் புரியவில்லை… அறையை விட்டு சஞ்சீவன் வெளியேறுகையில் மறுப்பைப் பொருட்படுத்தாமல் ஆயிரம் ரூபாய்த் தாளை ‘டிப்ஸ்’ என்ற பெயரில் கையில் திணித்தான் புதியவன்.
இரண்டு நாட்கள் சென்றன. மூன்றாம் நாளிரவு அந்த அமெரிக்கனுக்கு ஒரு ‘சிக்கன் ப்ளேட்’ தேவையென்று அழைப்பு வர, பொறுப்பாளர் அந்த அறைக்கு சஞ்சீவனையே அனுப்பிவைத்தார். இவன் போனபோது, அந்த வெள்ளைக்- காரன் விஸ்கியில் சோடா கலந்து கொண்டிருந்தான். போத்தலில் பாதி ஏலவே காலியாகியிருந்தது. பணிவுடன் தான் கொண்டுசென்ற ‘சிக்கன் பிளேட்டை’ வைத்துவிட்டு வெளியேற முயன்றான். கதவு வெளிப்புறமாக மூடப்பட்டிருப்பதை உணர்ந்து அவன் பதற்றத்தோடு திரும்ப, தனக்கு மிக அருகில் அந்த வெள்ளைக்காரன் நின்றுகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தான்.
அதன்பின், நடந்தவற்றை நினைத்து நினைத்து அன்றிரவு முழுவதும் அழுதான் அவன். மறுநாள் மனேஜரைச் சந்தித்து அவன் வாய் திறக்குமுன்பே அவர் முந்திக் கொண்டார்.
“இதோ பாருப்பா, இது மாதிரி ஹோட்டல்கள்ல, இப்படி நடக்கிறது சர்வ சகஜம். உன்னை துரைக்கு புடிச்சுப் போனதால அப்படி நடந்துக்கிட்டார். இதையெல்லாம் பெரிதுபடுத்தாம புத்தியா நடந்துகிட்டா, ஆயிரக்கணக்குல சம்பாதிக்கலாம். அத வெச்சி உன் குடும்பத்த ரொம்ப நல்லாக் கவனிக்கலாம்.” அவரின் ஆசை வார்த்தைகள் அவனுக்கு வெறுப்பைத் தந்தன. பதிலெதுவும் பேசாமல் தன்னறைக்குத் திரும்பிவிட்டான்.
இப்போதெல்லாம் சஞ்சீவனுக்கு வெளியில் செல்ல முடியவில்லை. தினம் தினம் அவன் வெறுக்கும் அந்தச் சித்திரவதை மட்டும் நின்றபாடில்லை. தனது துர்ப்பாக்கிய நிலையை எண்ணி இரவிரவாய் அழுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. தலையணையைத் தன் தாய்மடியென நினைத்துக்கொண்டு கண்ணீர் உகுத்தான். சோமசிறி மட்டுமே அவனுக்கிருந்த ஒரே ஆறுதல்.
நாளடைவில் ‘அந்த நிகழ்வு’ அவனுக்குப் பழகிப்போனது. முன்பு போல் அடிக்கடி என்றில்லாவிட்டாலும் எப்போதேனும். அந்த அமெரிக்கனுக்குப் பின் எத்தனையோ பேர் வந்து போயினர். சஞ்சீவனை அவனது நிர்வாகத்துக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது போலும்! படிப்படியாகப் பதவியும் சம்பளமும் உயரத்தொடங்கின. சீக்கிரமாய் அக்காவின் திருமணத்தை நடத்தி முடித்தான். குடிசை, கல்வீடானது. தம்பிமார், தங்கையின் வங்கிக் கணக்கில் கணிசமான தொகை சேர்ந்தது. பிள்ளைகள் நன்றாக வாழ்வதைப் பார்த்த நிறைவில் சிசிலி கண் மூடினாள்.
காலம் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. தனக்குப் பல வகையிலும் பக்கபலமாக இருந்த சோமசிறி விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையிலிருப்பதாகத் தகவல் வரவே ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்தான். இரத்தம் அதிகமாகத் தேவைப்பட்டதால், தானும் கொடுக்க முன்வந்தான். உடல் முழுவதும் கட்டுக்களுடன் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த நண்பனைக் காணக் காண வேதனையாக இருந்தது. தன்னை டொக்டர் அழைக்கவே, உள்ளே சென்று திரும்பியவனுக்குத் தன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைக்கவும் தோன்றவில்லை. நண்பனைக் கண்ணீர் பெருகும் விழிகளால் பார்த்துவிட்டு, நேரே கடற்கரைக்குப் போய் விட்டான்.
பழைய நினைவிலிருந்து மீண்டான், சஞ்சீவன். கன்னங்களினூடு வழிந்த கண்ணீர் தலையணையைத் தெப்பலாக நனைத்திருந்தது. அதை ஒருபுறம் வீசியெறிந்தான். ஏனோ திடீரென்று தன் பக்கத்துவீட்டு கமலம் அக்கா முற்றத்திலிடும் கோலம் நினைவுக்கு வந்தது. “வீட்டுக்கு முன்னால் இடப்படும் மாக்கோலத்துக்குப் புள்ளிகள்தாம் அடிப்படை. அதே புள்ளிகள் ஒரு வாக்கியத்தின் முற்றுப் புள்ளியாக இடப்படும்போது, அந்த வாக்கியம் அழகாகிறது. ஆனால், அதுவே வாழ்வுக்கு இடப்படுமானால்… இது வெளிப்படையாகத் தெரிந்தும் விடுமானால் அதனை ஜீரணிக்க முடிவதில்லையே!” நினைக்க நினைக்கச் சஞ்சீவனால் தாளவே முடியவில்லை. வெறி கொண்டவன் போல எழுந்து ஜன்னல் திரைகளை இழுத்து மூடினான். சீ.டி.யை இயக்க ஆங்கில இசையால் அறை அதிர்ந்து. உடல் களைத்துச் சோரும்வரை ஆடினான். வியர்வை ஆறாக வழிந்தது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கக் கட்டிலில் தொப்பென்று விழுந்தான்.
எங்கோ ஒரு மூலையில் அரைவயிற்றுக் கஞ்சியேனும் குடித்துக் கொண்டு நிம்மதியாய் வாழ்ந்த தன்னைப்போன்ற… சோமசிறியைப் போன்ற ஏழைச் சிறுவர்களை ஒரு போத்தல் சாராயத்துக்காகவும் சில ஆயிரம் ரூபாய்களுக்காகவும் தெரிந்தே படுகுழியில் தள்ளும் தரகுக்கார அல்விஸ் மாமாவின் பேராசைக்கு எத்தனை அப்பாவிகள் பலியாகின்றார்கள்! பற்களை நறநறவென்று கடித்தான். “என்றைக்காவது அந்த அல்விஸ் என் கையில் அகப்படட்டுமே!” என்று கறுவிக் கொண்டான். யோசனையோடு பக்கவாட்டு மேசை இழுப்பறை- யைத் திறந்தான். ஊரில் அவனுக்கு ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்திருப்பதாக அக்கா எழுதியிருந்த கடிதம் அவனைப் பார்த்துச் சிரித்தது. அதையெடுத்துச் சுக்கலாகக் கிழித்து வீசியெறிய, மின்விசிறிக் காற்றுக்கு அத்துண்டுகள் அறையெங்கும் பறந்து சிதறின.
வறுமைபோட்ட கோலத்தில் இருபதும் நிரம்பாத அவனின் வாழ்வு புள்ளியாகத் தேய்ந்துபோய்க் கொண்டி- ருக்கிறது. ஒரு புறம் யுத்தம்! இன்னொருபுறம் வறுமையின் கொடுமையால் இருட்டுக்குள் இவனைப்போன்ற இளம் அரும்புகள் மலருமுன்பே ‘எயிட்ஸ்’ எனும் தீப்பிழம்பில் கருகிக் கொண்டிருக்கின்றன. இவர்களின் இரவுகள் விடியுமுன்பே முடிந்துவிடுகின்றன.
கடிகாரம் ஐந்துமுறை ஒலிக்கிறது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து தன் வழமையான பணிக்குச் செல்ல ஆயத்தமாகின்றான், சஞ்சீவன்.
– 2001
– எருமை மாடும் துளசிச் செடியும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மார்ச் 2003, தமிழ் மன்றம், கண்டி.