புலித்தோல் போர்த்திய மாடுகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 2, 2025
பார்வையிட்டோர்: 801 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘வணக்கம் அண்ணே,வணக்கம் அக்கா… 

ஊனுருகிப் பேசியதுபோல், வாசலுக்கு வெளியே உடல் குழைத்து நின்ற அந்த இளைஞனைப் பார்த்ததும், வெளியே பால்கனியில் நின்ற அந்த அம்மா, அவன் வணக்கத்தை ஒரு சின்னச் சிரிப்போடு ஏற்றுக் கொண்டு உள்ளே வந்தாள். நாற்காலியில் காயப்போட்ட துண்டு, துக்கடாக்களை எடுத்துக் கொண்டே படுக்கையறையில் எதையோ படித்துக் கொண்டிருந்த கணவனை உசுப்பினாள்… எதுவும் பேசாமல் வாசல்பக்கமாக அவள் மோவாயை நீட்டியபோது, மயில்நாதன் வெளியே வந்தார்… அந்த இளைஞனை அடையாளம் காண்பதுபோல் விழி உயர்த்திப் பார்த்தார்… அதற்குள் அந்த இளைஞன். பாசமழை பொழிந்தான். 

“நான் வந்து அண்ணே…” 

“முதல்ல உள்ளே வந்து உட்காரப்பா…” 

பெல்பாட்டமும், தொளதொளப்பான பேண்ட்டும் அகலமாகக் காட்டினாலும், அதற்குள் நோஞ்சானாய் ஒட்டிக் கிடந்த அந்த இளைஞனை அடையாளம் காண்பதுபோல், மயில்நாதன் நோட்டமிட்டார். இலக்கிய ரசிகனோ, அல்லது சிபாரிசுக்கு வந்த உறவுக்காரனோ… 

இவரைப் போலவே, அந்த இளைஞனும், அவர் தன்னைப் பார்க்காதபோது பார்த்தான்… எழுத்தாளர்களுக்கு இருப்பதாகக் கூறப்படும் வீட்டுக் கூரையை மேயும் கண்களோ, மோவாயை தடவும் கைகளோ இல்லாமல், இயல்பான கண்களோடு, இயற்கையான கையசைப்போடு, வல்லிக்கண்ணனைப் போல சர்வ சாதாரணமாக இருந்த அவரை, பார்த்ததும் அவன் மனம் குதிபோட்டது. இயக்குநர், அரூபசொருபனிடம், ‘நீ கில்லேடிடா’, என்று நல்ல பெயர் வாங்கிடலாம்… அவர், இவருக்குக் கொடுக்கத் தயாராய் இருக்கும் பத்தாயிரம் ரூபாய் அட்வான்சை ஐயாயிரமாகக் குறைத்து ஆசாமியை கோழியை அமுக்குவது மாதிரி அமுக்கி விடலாம்… 

“நான் வந்துண்ணே.” 

“முதல்ல. காபி குடிங்க,சூடு ஆறிடும்…” 

தாய்மைக் குரலோடு தட்டில் உள்ள, காபி டம்பளர்களை, கணவனும், அவனும் எடுத்துக் கொள்வதற்கு வசதியாக, இருவர் பக்கமும் லேசாய் குனிந்து, நகர்ந்த, அந்த அம்மாவைப் பார்த்ததும், காபி டம்பளரில் அவன் கண்ணீர்த் துளி விழப் போவதுபோல் இருந்தது… எத்தனையோ சினிமாக்காரர்கள் வீட்டு வாசற்படிகளில் கால்சீட் பிச்சைக்காக மணிக்கணக்கில் காத்துக் கிடந்தவன். அப்போதெல்லாம் இவனை வரவேற்பு அறைக்குள் வரவழைத்து, இவன் முன்னாலேயே சிக்கன் 65 துண்டுகளை கடித்த வாயோடு, இவனிடம் நிமிடக் கணக்கில் பேசி, எச்சில் பொங்க அனுப்பப்பட்டவன். ஆனால் இந்த வீட்டிலோ… 

அந்த இளைஞன் தன் திட்டத்தை மாற்றிக் கொண்டான். பத்தாயிரம் ரூபாய் முன் பணத்தை, இயக்குநரிடம் வாதாடி, பதினையாயிரமாய் கூட்டிக் கொடுக்க வேண்டும். 

“தம்பி, என்ன விசயமா…” 

“என் பெயர் கலிங்கன். நீங்க எழுதுன நாவல் இருக்குதே ‘பங்க மனிதன்’, அதை எங்க இயக்குனர் அரூபசொருபன் படமாக்குவது என்று தீர்மானிச்சுட்டார். ஹோட்டல் வாஞ்சியில் ரூம் போட்டு உங்களுக்காகவே காத்திருக்கார்… புறப்படுங்கண்ணே… ‘பங்க மனிதன்’, நாவலையும் கொண்டு வாங்கண்ணே…” 

“தம்பி… நீ தப்பா நினைச்சாலும், நான் சொல்லித்தான் ஆகணும்… ‘மொதல்ல… ஒரு எழுத்தாளன் கிட்ட வரும்போது… நாவலைப் படிக்காட்டாலும், அதோட பெயரையாவது ஞாபகம் வச்சுக்கணும்… நான் எழுதியது ‘மனித பங்கம்’…” 

“கோபப் படாதீங்கண்ணே. ஏகப்பட்ட நாவல் படிக்கோமா… மேடையிலும், டி.வி.யிலயும் பலப்பல நாடகத்த பாக்கோமா… அதனால் சில சமயம் ஒரு கதை இன்னொரு டைட்டிலுக்கு போயிடுது…” 

”சினிமாக்காரங்க… அதிகமா படிக்க மாட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்…” 

“தப்புண்ணேதப்பு… நாங்க பாக்காத நாடகங்கள் இல்ல படிக்காத நாவல்கள் இல்ல…ஆனா உண்மையை ஒத்துக்கிறேன்… பொழுது போக்கிற்காக நாடகம் பாக்கல… ரசனைக்காக நாவல் படிக்கல… எல்லாம் உல்டாவுக்கும், சொருகுறதுக்குந்தான்…”

“அப்படீன்னா…’ 

“அய்யோ… அண்ணே… நீங்க ரொம்பத் துழாவுறிங்க… இருந்தாலும் சொல்றேன்… ஒரு நாவலைப் படிக்கோம்… அதுல ஒரு ‘வித்தியாசமான மாமனார் கேரக்டர் வருதுன்னு வச்சுக்கோங்க… அத சினிமாவிலே மாமியார் கேரக்டரா ஆக்கிடுவோம்… நீங்க எழுதுன உரையாடல்களை லேசா மாற்றி வசனங்களா ஆக்கிடுவோம்… இதுக்குப் பேரு உல்டா…இதே மாதிரி நாடகத்திலேயோ, இல்லன்னா வார பத்திரிகையிலோ வருகிற ஜோக்குகள, படத்துல அங்கங்க காட்சியா காட்டிடுவோம்… இதுக்குப் பேரு சொருகிறது. உல்டாவுக்கும், சொருகிறதுக்கும் பலரை வேலையில் வச்சிருக்கோம்… உங்களால எங்கள ஒண்ணும் செய்ய முடியாது…” 

அந்த இளைஞன் கண்ணைச் சிமிட்டினான். மறை முகமாக எச்சரிக்கை விடுகிறானோ… என்னவோ… 

மயில்நாதனுக்கு, கோபம் புரையேறியது… அவனைக் கூட ஒரு எதிரியைப் பார்ப்பதுபோல் பார்த்தார்… துடித்த உதடுகளை துண்டை வைத்து மூடிக் கொண்டே மனதை திறந்து பார்த்தார். ஒரு சில திரைப்படங்களை பார்த்திருக் கிறார். அவை தமது நாவல்களின் சாயலில் இருப்பதைக் கண்டிருக்கிறார். அவற்றின் வசனங்கள் கூட தனது நாவல் உரையாடல்கள் உயிர்ப்பிலிருப்பதை கேட்டிருக்கிறார்… அப்போதெல்லாம், ‘கலையும் கற்பனையும் காற்று மாதிரி, எல்லோருக்கும் பொதுவானது தானே’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார்… ஆனால் இப்போதுதான் புரியுது… இவனுவ கலைஞர்கள் இல்ல… கொலைஞர்கள்… கயவாளிகள்… சிறையில் திணிக்க முடியாத கொள்ளைக்காரர்கள்… 

மயில்நாதன் சினிமாக்காரர்களை முணுமுணுத்து திட்டியபோது, அவன் அவசரப்படுத்தினான். 

“புறப்படுங்கண்ணே.. ‘இயக்குநர் செம்மல்’ அரூபசொருபன்,பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் பணத்தோடு காத்திருக்கார்” 

“முதல்ல உங்க இயக்குநர் எடுத்த படங்களோட பெயர்களைச் சொல்லு பாக்கலாம்…” 

“என்ன அண்ணே… நீங்க? அவரு நாடறிந்த பேர்வழியாச்சே… ‘வாடாவாத்தியாரே’, ‘போடாபோக்கிரி’, ‘ராத்திரி வேளை பூஜை’, ‘சவாலடா சவால்’… இப்படி எல்லாமே நூறு நாள் தாண்டுன படங்கள் எடுத்தவரு.. இதனாலயே ‘கலைமாமணி’ பட்டம் வாங்குனார். உங்க நாவலைப் படமாக்கி ‘பத்மஸ்ரீ’ பட்டம் வாங்கப் போறார்… புறப்படுங்கண்ணே…” 

“ஒங்களுக்கும், எனக்கும் சரிப்படாதுப்பா. நீ புறப்படலாம்…” 

“நீங்க நினைக்கிற மாதிரி ஒங்க நாவலை எடுக்க மாட்டாரண்ணே… கலைப்படமா எடுக்கப் போறார்… நேசனல் அவார்டுக்கு குறி வைச்சிருக்கார்” 

“ஒரு வாரம் டைம் குடு… யோசிச்சு சொல்றேன்” 

“கொஞ்சம் வர்றீங்களா…” 

அந்த இளைஞன், நாற்காலியில் இடித்துவைத்த புளியாய் இன்னமும் இருந்தபோது, மயில்நாதன் சமையலறைக்குள் போனார்… 

அந்தம்மா கைகளை உதறினார்… குக்கர் சூட்டில் கைபட் டது நிசந்தான்… ஆனால் அதற்காக மட்டும் இப்படி உதறி இருக்க மாட்டாள்… அவரைப் பார்த்ததும், எந்த உள்நோக்கமும் இல்லாமல் தன்பாட்டுக்கு சொல்வதுபோல் சொன்னாள்… 

“ஒங்க தங்கைக்கு இது தலை தீபாவளி… நாம்தான் அவளுக்கு அப்பாம்மா…’பிளஸ்-டூ படிச்சது போதுமுன்னு நிறுத்திட்டீங்களே – நம்ம வீட்டு எரும மாடு-அவள் குதியாய் குதிக்கிறாள் -கம்யூட்டர் கோர்ஸ்லயாவது சேர்க்கணுமாம்… இந்த வீட்டு நிலைமையத்தான் சொல்றேன்… ஒங்க தீபாவளி மலர் கதைகளுக்கு வரப்போற அன்பளிப்புப் பணம், இந்தச் செலவுல இருபதுல ஒரு பங்குக்கு கூட தேறாது… கதை எழுதுற சமயத்தில எட்டாயிரம் ரூபா பணத்த புரட்டுங்கன்னுதான் சொல்ல வாறேன்… இல்லாட்டால், நாத்தனார் கொடுமைன்னுதான் என்னைச் சொல்லுவாங்க… நான் பேசுறதக் கேட்க வேண்டியது ஒங்க உரிமையா இல்லாட்டாலும், சொல்ல வேண்டியது என் கடமை…” 

அந்தம்மா, ஒரு ஈயப் பாத்திரத்தை, எவர்சில்வர் அகப்பையால் இடித்தபோது, மயில்நாதன் மோவாயைத் தடவியபடியே வெளியே வந்தார்… சமையலைறைக்குள் தன்னை சிறுமைப்படுத்துவதாக நினைத்துப் பொங்கிய கோபம், அவள் மீது அனுதாபமாகவும், அங்கே ஏற்பட்ட சுய-இரக்கம் இப்போது சுய கோபமாகவும் மாறின. ஒரு நல்ல நாவலாசிரியர் என்ற முறையில், அந்தம்மாவை அவளுடைய தளத்திலேயே நிறுத்திப் பார்த்தார். அவள் சொன்னது நியாயமாகவே பட்டது. அவள் இறுதியாகச் சொன்ன வார்த்தைகளில் மிளிர்ந்த இலக்கிய நயம் அவர் உதடுகளில் ஒரு வெள்ளைக் கோட்டைப் போட்டது… 

கலிங்கன் தன்னைப் பார்த்து சிநேகிதமாய்ச் சிரித்த எழுத்தாளர் மயில்நாதனை புரிந்து கொண்டான். அவர் கையைப் பிடித்துக் கொண்டு ஆனந்தமாகக் கூவினான். 

“எக்கா…போயிட்டு வாறோம்… புறப்படுங்கண்ணே…” 

அந்த நட்சத்திர ஹோட்டலில், மூன்றாவது மாடிக்குப் போய், ஆறாவது அறையில் நுழைந்தார்கள். அந்த எண்தான் ராசியான எண்ணாம்… ஆறும் மூன்றும் ஒன்பது…வெற்றி… வெற்றி… கலிங்கன்தான் இப்படி அவர் காதைக் கடித்தான். ஆனால் மயில்நாதனோ பல்லைக் கடித்தார். அழகை, அசிங்கமாக்க முடியும் என்பதற்கு அந்த அறையே ஒரு அத்தாட்சி…அங்குமிங்குமாய் பாட்டில்கள் குப்புறவும், நெடுஞ்சாண் கிடையாகவும் கிடந்தன. எச்சில் பொருட்கள் எங்கும் நிரம்பி, அந்த அறையே ஒரு குப்பைத் தொட்டிபோல் தோன்றியது… ஒரு வாலிபன் நாற்காலியில் உட்கார்ந்து காகிதம், காகிதமாய் எழுதுவதும், எழுதியதைக் கிழிப்பதுமாக இருந்தான்… இவரது வருகையை அங்கீகரித்து ஏறிட்டுக் கூட பார்க்கவில்லை. வால்டேர், ரூசோ கூட இப்படி வேகவேகமாய் எழுதியிருக்க மாட்டார்கள். உலகையே தலைகீழாக மாற்றப் போகிற வேகம்… கலிங்க னிடம் விசாரித்தால் அவன், ‘இரட்டை அர்த்த வசனங்களை எழுதிக் கொண்டிருக்கிறானாம். கவுண்டமணியிடம் இருந்த ‘பசக்காமெடி’ஸ்டாக் தீர்ந்து விட்டதாம்… இன்னொருத்தன், ரெட்டை கட்டிலின் இடைவெளிக்கிடையே இருபக்கமும் கால், கைகளைப் பரப்பி குப்புறக் கிடந்தான். சிவப்பு லுங்கி கட்டியிருக்கானோ… இல்லை… இல்லை… பிட்டத்தில் ஒரு துண்டு… மற்றபடி அம்மணம்… ஒரு கட்டில் பெட்டில் சின்னச் சின்ன வளையல் துண்டுகள்… 

மயில்நாதன், இப்போது மனைவியை மனதிற்குள் திட்டிக் கொண்டே, அவளைக் கலிங்கன் வடிவில் பார்த்து கிட்டத்தட்ட கத்தினார். 

“இவர்தான் ஓங்க டைரக்டரா… இந்த ரூம்லதான் டிஸ்கஸனா…” 

வெளியில் போகப் போனவரை சுண்டிப்பிடித்தபடியே கலிங்கன் மன்றாடினான். 

“இல்லண்ணே இல்ல… இவரு அசோசியட் டைரக்டர்… அன்பு வேந்தன்… நைட்ல ஒரே ஒர்க்கு… அதனால் தூங்குறார்… ஏண்டா எழுதிக் கிழிச்சான்… டைரக்டர் ரூம்ல இருக்காராடா…” 

“என்னை டிஸ்டர்ப் பண்ணாத…” 

“எழுத்தாளர் மயில்நாதன் வந்திருக்கார்…” 

“அதுக்கென்ன இப்போ… மூடக்கெடுக்காத… இயக்குநர் அரூபசொருப அண்ணன் எப்ப வேணுமுனாலும், எந்த நேரத்துலயும் வருவார்… இதுக்கு மேல் தொண, தொணக்காதே…” 

மயில்நாதனுக்குப் பற்றி எரிந்தது… எழுத்தாளனாக மதிக்காட்டியும், ஒரு மனிதனாகக் கூட அங்கீகரிக்காத அந்தப் ‘பசக் காமெடி’ எழுத்தாளனை பார்க்கவே பிடிக்காமல் வெளியேறப் போனார். அதற்குள் ஒரு டெலிபோன்… தூங்குவது போல் குப்புறக் கிடந்தவன், பாம்பு மாதிரி தலையைத் தூக்கிக் கொண்டே டெலிபோனை எடுத்தான்… பிறகு அலறியடித்து முகத்தைக் கழுவாமல் ஒரு டம்பளரிலிருந்த தண்ணீரையோ, அல்லது விஸ்கியையோ கைகளில் அப்பி, கண்களைத் துடைத்துக் கொண்டு, பீரோவில் தொங்கிய பேண்ட்டை போட்டுக் கொண்டே கலிங்கனிடம் பேசினான். மயில்நாதன் என்ற ஒருவர் அங்கு இருப்பது அவன் கவனத்தைக் கவரவில்லை. 

“நடிப்புப் புயல்’ சந்திர பிம்மன்…” கீழே காட்டேஜ்ல தங்கியிருக்காராம்… 

“அடடே, இங்க எதுக்கு வந்தார்…” 

”நான் கேள்விப்பட்டது சரியாத்தான் இருக்கு… நேற்று ரசிகைகள் படையெடுப்பால அவருக்கும், அவர் பெண்டாட்டிக்கும் அடிதடியாம்…சரி, இந்தக் கதை நமக்கெதுக்கு… நம்ம இயக்குநர் அங்கே இருக்கார்… நாம இவர… ஒங்க பெயர் என்னங்க… என்னப்பா இவரு ஊமையா… இவரக் கூட்டிக்கிட்டு அங்கே போகணுமாம்; அங்கேதான் ஸ்டோரி டிஸ்கசன்…” 

“சந்திரபிம்மனுக்கு மூடு சரியில்லாத டைம்ல எதுக்கு டிஸ்கசன்…?” 

”ஒனக்கு அறிவிருக்காடா கலிங்கா… இத்தன நாளு சினிமா உலகத்துல குப்பைகொட்டி என்னடா பிரயோசனம்… நம்ம நடிகர்களுக்கு பெண்டாட்டிகளோடு இல்லாத போதுதான்டா மூடே வரும்… நடிகைகளுக்கும் அடுத்தவள்கள் புருசங்க மேலதான ஆசையே வரும்… முட்டாள்…சரியான முட்டாள்… சரி சரி… புறப்படு… எழுத்தாளரே புறப்படுங்க…” 

மயில்நாதன் பல்லைக் கடித்து பொறுமையைக் கடித்தார்…அந்த அசோசியேட் டைரக்டரின் டோன் தன்னை கிண்டலடிப்பது போலிருந்தது. என்ன செய்வது… பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரத்துலதான் ஏறணுமாம்… அதோட இவன வைத்து இயக்குநர் அரூபசொருபனை எடை போடக் கூடாதுதான்… 

மயில்நாதன், தன்னைப் பற்றி கவலைப்படாமல் போய்க் கொண்டிருந்தவர்கள் பின்னால், எக்கி எக்கி நடந்தார். அவர்களோடு லிப்டில் ஏறி ‘கீழ் நோக்கி’, இறங்கி அந்த நட்சத்திர ஹோட்டலின் பின்பக்கம் தலைமறைவாய் உள்ள காட்டேஜ் வந்தார். வாசலிலேயே ஒரு துவார பாலகன்… கலிங்கனும், அன்பு வேந்தனும் அவனிடம் மன்றாட வேண்டியது ஏற்பட்டது… அப்போதுகூட அவர்களோடு இவர் நுழையப் போனபோது கதவை மூடப் போனான். கலிங்கன்தான் இவர் கையை பிடித்து உள்ளே கடத்திக் கொண்டு போனான். 

‘பூலோக சொர்க்கம்’ என்பார்களே அப்படிப்பட்ட வரவேற்பு அறை… கால்களை உள்வாங்கும் தரைக் கம்பளம்… கண்களை வெளிவாங்கும் சுவர் ஓவியங்கள்… வெல்வெட் சோபாசெட் இருக்கைகள்… செயற்கை பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டது போன்ற சூரியல்பு கூடவே நட்சத்திர மினி பல்புகள்… எரிந்தனவோ இல்லையோ எரிவதுபோல் தோற்றம் காட்டின. 

என்றாலும், உள்ளறைக் கதவு அவர்களை வழி மறிப்பதுபோல் சாற்றிக் கிடந்தது. கலிங்கனுக்கோ, அன்பு வேந்தனுக்கோ உள்ளே போகப் பயம்… பல தடவை வசமாக வாங்கிக் கட்டியவர்கள்… போதாகுறைக்கு இவர்கள் போக முடியாத அளவில் ஒரு பெண்ணின் சிணுங்கல் சிரிப்பு… பி.எஸ்.வீரப்பா பாணியில் சிரிப்புகள்… அப்புறம் அழுவது போன்ற உருக்கமான குரல்கள்… ரகசியம் பேசுவது போன்ற முணுமுணுப்பு… இதை அடுத்து அடாதடியான மேஜை தட்டல்கள்…அப்புறம் வசவுகள்… பிறகு வாழ்த்துக்கள்… இதற்கும் பிறகு ஒரே மயான அமைதி… மீண்டும் அந்த அமைதியைக் கிழிக்கும் பூகம்ப சிரிப்புகள்… 

மயில்நாதன், மற்றவர்கள் நின்றபோது, ஒரு சோபா துண்டில் உட்கார்ந்தார். கதவு திறக்கப்படும்… திறக்கப்படும் என்று காத்திருந்தார். நிமிடக் கணக்கில் நினைப்பு போனதால், மணிகள் சுவடு தெரியாமல் போயின. ஆனாலும் தன்னை சமாதானப்படுத்தி குப்புற விழப்போன சுயமரியாதையை தூக்கிப் பிடித்துக் கொண்டார். ஒரு வேளை இவர்கள் வந்திருப்பது அவர்களுக்கு தெரியுமோ… என்னமோ… மயில்நாதன், கலிங்கனின் காதைக் கடித்தார்… அவனை, அந்தக் கதவுப் பக்கமாகத்தள்ளிவிட்டார். அவனோ கதவைத் திறக்க போவதும், அன்பு வேந்தன் முறைத்த முறைப்பில் திறக்கப்போன கைகளை இழுத்துக் கொள்வதுமாக இருந்தான். ஒரு தடவை கதவை திறந்துவிட்டு அங்கே என்ன கண்டானோ… உடனடியாய் மூடிவிட்டான். என்ன செய்யலாம் என்பதுபோல் அன்புவேந்தனின் அருகே போனான். அவனோ இவன் காதில், ‘போயும் போயும் இந்த மெண்டல்தானடா உனக்குக் கிடைத்தான்’ என்று மயில்நாதனைப் பார்த்து முணு முணுப்பதுபோல் இருந்தது. மயில்நாதனுக்கும் இது புரிந்திருக்க வேண்டும். அதற்குமேல் அங்கிருக்க அவருக்கு பிடிக்கவில்லை. இதற்குமேல் இருப்பது தன்னையே அடமானம் வைப்பதுபோல… அவர் எழுந்து அறையில் குறுக்கும், நெடுக்குமாய் நடந்து, ஒரு முடிவுக்கு வந்தவராய் வெளிக் கதவை திறந்து, வெளியேறப் போன போது- 

திடீரென்று தாமரைப் பூ வடிவமைப்புகள் பதிக்கப்பட்ட தேக்கு கதவு திறந்தது. ‘நடிப்புப் புயல்’ சந்திரபிம்மனும், இயக்குநர் செம்மல்’ அரூபசொருபனும் வெளிப்பட்டதும் கதவு மீண்டும் பூட்டிக் கொண்டது.நடிப்புப் புயலுக்கு முப்பத்தைந்து வயதிருக்கும். கைத்துப்பாக்கி போட்ட டிசைன் சட்டை போட்டிருந்தார். ஒப்புக்கு சட்டையின் நடுப்பக்கம் மட்டும் பட்டன் மாட்டப்பட்டிருந்தது. மற்றபடி நிர்வாணமான Lпiч… சினிமாவில் தெரியும் உருண்டையான மார்பு, இங்கே தட்டையாகத் தெரிந்தது. ஆனாலும் இருபத்தேழு பவுன் டாலர் சங்கிலி டாலடித்தது. களையான முகம்… அசட்டையான பார்வை அவர் பக்கத்தில் டைட் பேண்ட் போட்டு, அதற்குள் பனியன் சட்டையை இன் செய்து பூனைக்குட்டி மாதிரி நின்ற அரூபசொருபன், எழுத்தாளர் மயில்நாதனை தனக்குத் தெரியும் என்பதுபோல் லேசாய் சிரித்தார். 

எல்லோரும் உட்கார்ந்தார்கள்-கலிங்கனையும் அன்பு வேந்தனையும் தவிர… அரூபசொருபன், துருத்திக் கொண்டி ருந்த பேண்ட் பையை மெலிதாக்கி, ஒரு கத்தை நோட்டை எடுத்தார். பிறகு நடிப்புப் புயலிடம் பயபக்தியோடு நீட்டி, ‘ஒங்க கையால இதை எழுத்தாளர்கிட்ட கொடுங்கண்ணே” என்றார். நடிப்புப்புயல் அதை வாங்கி, மயில்நாதனைப் பார்த்து ஒரு சினிமா சிரிப்பு சிந்திவிட்டு, அதை நீட்டினார். மயில்நாதனும் அதை மரியாதையாக எழுந்து வாங்கிக் கொண்டார்.வாங்கிய வேகத்திலேயே வீட்டு லோகத்தில் மூழ்கினார். இந்தப் பணம், மனைவியை, அவரை முத்தமிட வைக்கும்… மகளை நன்றியோடு பார்க்க வைக்கவில்லை யானாலும், அவளை சமரசமாக நோக்க வைக்கும் தங்கையை அவரது கரங்களில் அவள் கண்களை ஒற்ற வைக்கும்… மாப்பிள்ளையை, இவரை சம அந்தஸ்த்தில் பார்க்க வைக்கும்… அய்யய்யோ… நான் ரொம்ப, ரொம்ப சுயநலக்காரனாய் போயிட்டேனே… வாச்சாத்தி வழக்கு நிதிக்கு பாதிப் பணத்தை கொடுத்திடணும்.. 

இயக்குநர் அரூபசொருபன், மயில்நாதனை அவரது வீட்டு லோகத்திலிருந்து, தனது சினிமா லோகத்திற்கு கொண்டு வந்தார். 

“நம்ம தலைவர் நடிப்புப்புயல், ஒங்க கிட்ட கதை கேட்கணுமுன்னே இன்றைக்கு கொடுத்த கால்சீட்டைக் கேன்சல் பண்ணிட்டார் அவர்கிட்ட கதையைச் சொல்லுங்க” 

மயில்நாதனுக்கு, சங்கடமாக இருந்தது… அலுவலகத் தில்கூட மேலதிகாரிகளிடம் தனது நூல்களை கொடுத்தது கிடையாது. அப்படி கொடுப்பது, தானே தனது படைப்பை கொச்சைப்படுத்துவதாகும் என்று நினைப்பவர்… இருந்தாலும் இப்போது வேறு வழியின்றி கதையைச் சொல்லத் துவங்கினார்… 

மயில்நாதன் கதை சொல்லப் போனபோது, அவருக்கு மாரடைத்தது. வார்த்தைகள் வரவில்லை. இதற்குள் நடிப்புப்புயல் பாசம் பொங்க கேட்டார். 

‘கிளைமாக்ஸ்சை மட்டும் சொல்லுங்க போதும்…” மயிலுக்கு சூடு வந்தது. 

”நான் கதையைச் சொல்றேன்… நீங்களே எது கிளைமாக்ஸ் என்பதை தீர்மானியுங்க… ஏன்னா எனக்கு அதைப் பத்தியெல்லாம் தெரியாது…” ஆனாலும் இந்த ‘மனித பங்கம்’ என்கிற நாவல் ஒரு கற்பனைக் கதையல்ல… பெரியார் மாவட்டத்தில் வாச்சாத்தி என்ற மலைக் கிராமத்தில் நடந்த அட்டூழியங்களை… 

“நடிப்புப்புயல்’, தனது தங்கச் சங்கிலி டாலரை தூக்கித் தூக்கி போட்டு பிடித்தபடியே இடைமறித்தார்… 

“இந்தாப்பா… அரூபா! வாச்சாத்தி… அருமையான பெயர். நம்ம புதுமுக கதாநாயகிக்கு இந்தப் பெயரையே வச்சுடு… எழுத்தாளரே நீங்க கண்ட்டினியூ பண்ணுங்க…” 

மயில்நாதன், எரிச்சலோடு தொடர்ந்தார். 

“பொதுவாக மலைக்கிராம மக்கள் என்றாலே எல்லோருக்கும் இளக்காரம். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை முதலாளிகள் வளைத்துப் போட்டிருக்கும்போது இந்த அப்பாவி மக்களுக்கு சாகும்போதுதான் நாலடி சொந்தம். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல இவர்கள் உயிர் வாழ்வது வரைக்கும் சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள். இப்படித்தான் பெரியார் மாவட்டத்தில் வாச்சாத்தி என்ற மலைக்கிராமத்தின் மீது ஒரு கொடுமை, கொடூரமாக படையெடுத்தது. பெரிய, பெரிய முதலாளிகள் வனத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சந்தன மரங்களையும், தேக்கு மரங்களையும் கண்டதுண்டமாக வெட்டும்போது, அந்த துண்டுகளை தலைகளில் ஏற்றி இறக்கும் எடுபிடிகளாக தாங்கள் இருக்கப் போவதில்லை என்று இந்த மலைக்கிராம மக்கள் பிரகடனப்படுத்தி விட்டார்கள். அவ்வளவுதான்… கள்ளச்சாராயம் காய்ச்சு கிறவன் அதை நிறுத்தினால் அவனுக்கு என்ன கிடைக்குமோ அதைவிட அதிகமாகவே இவர்களுக்கு கிடைத்தது… ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றிரண்டாம் ஆண்டு ஜூன் மாதம், கொள்ளைக்கார முதலாளிகளின் தூண்டுத லோடு வனத்துறைக் காவலர்கள் ஆயுதபாணியாக படையெடுத்து, இந்த அப்பாவி வாச்சாத்தி கிராமத்திற்குள் நுழைந்தார்கள். மூன்று நாள் முகாமிட்டு கிராமத்து ஆடவர்களை துரத்தியடித்தார்கள். எந்தக் குற்றத்திற்கு இந்த மக்கள் உள்ளாக விரும்பவில்லையோ… அந்தக் குற்றத்தையே சுமத்தி-அதாவது இந்த மலைக்கிராம மக்கள் சந்தனக் கட்டைகளை வெட்டி, கடத்தி மண்ணுக்குள் பதுக்கி வைத்திருப்பதாக, குற்றம்சாட்டி, இவர்களை மண்ணாக் கினார்கள்…இந்தக் கிராமத்தில் பதினெட்டு பெண்களை கற்பழித்தார்கள்.” 

மயில்நாதன் அந்தக் காட்சியை காண விரும்பாதவர்போல் கண்களை மூடினார். பேச்சுக்கு வாய் தடங்கலாகியது. இவரையே குணச்சித்திர பாத்திரமாகப் போட்டு விடலாமா என்று அரூபசொருபன் நடிப்புப் புயலிடம் கிசுகிசுத்தான். இதற்குள் மயில்நாதன் தன்னை சுதாரித்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார். 

“இந்த அப்பாவி மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளியே சொன்னால் மேலும் விபரீதம் நடக்கலாமென்று அஞ்சி, ஒடுங்கி அலைக்கழிந்தபோது, மார்க்சிஸ்ட் செயலாளர் தோழர் நல்லசிவன் இந்தக் கொடுமையை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். பயனில்லாமல் போகவே, மனம் தளராமல் உச்ச நீதிமன்றம் போனார். இந்தக் கொடுமையை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று ஒரு தீர்ப்பை வென்றெடுத்தார்… இந்த தீர்ப்பின் செயலாக்கம் இன்னும் தள்ளி போடப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆனாலும் நெருப்பை மூடி வைக்க முடியாது… ஏழைகள் தீக்குச்சி மாதிரி… எந்த பெட்டிக்குள் அடைக்கலமாக இருக்கின்றனவோ அந்த தீக்குச்சுகள் ஒரு நாள் அந்தப் பெட்டியிலேயே உரசும் கட்டம் வரும்… இந்த எதிர்கால கட்டத்தைப் பற்றியும், எலிகளாய் பதுங்கிய இந்த மண் மக்களான இந்த மலைமக்கள் எப்படி புலிகளாக உருமாறுகிறார்கள் என்பதையும் என் நாவலில்…” 

‘நடிப்புப் புயல்’, மயில்நாதனின் கதைப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி போடாமல், ஒரு கமாபோட்டதுபோல் இடை மறித்தார். 

“இந்தாடாகலிங்கா… என் வீட்ல போய், அவளோட மூடு எப்படி இருக்குன்னு பாத்துட்டு வா… நான் எங்கே இருக்கேன்னு அது கிட்டயே கேளு… அப்படியே நடிகை வேதியாவுக்கு போன் போட்டு இங்க வரச் சொல்லு… “சாரி எழுத்தாளரே, கன்ட்டினு பண்ணுங்க… அப்போ… ஒங்க கிளைமாக்ஸ்தான் என்ன…” 

“இது ஒரே ஒரு ஊர்ல, ஒரே ஒரு ராஜா கதை இல்லங்க… இந்த மக்களோட பழக்க வழக்கங்கள், ஆட்டுக்குட்டியான அவர்களை எப்படி அரசாங்க ஓநாய்கள் வழி மறிக்கின்றன. எப்படி இவர்களது பெண்டுகள் பங்கப்படுத்தப் படுகிறார்கள்… எப்படி சமூகப் பிரக்ஞை உள்ளவர்களின் உதவியோடு இந்த மக்கள் போராடத் தயாராகிறார்கள் என்று படிப்படியாய் காட்டியிருக்கேன்… இந்த மக்களை இவர்களுக்கே அடையாளம் காட்டும் ஐந்தாறு தோழர்களில் ஒருவராக நீங்க நடிக்கிறதுக்கு நல்ல வாய்ப்பு இருக்கு… இப்பகூட பாருங்க. கற்பழிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதற்கு வசதியா இவர்கள் கண் முன்னால் வனத்துறை காவலர்களை அணிவகுப்பாய் காட்ட வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், நாலுமுறை திட்டமிட்டாலும் அணிவகுப்பு நடக்கவில்லை. அணிவகுப்பு நீதிபதியின் உயிருக்கே ஆபத்து வந்திருக்கு… கற்பழிக்கப்பட்ட பெண்கள் மிரட்டப்படுகிறார்கள். இந்த கிராமத்தை ஆட்சி செய்யும் வட்டாட்சி அலுவலகத்தில் நான் யூ.டி.சி.யாக இருந்தேன். மலை மக்களோடு நான் உறவு கொண்டிருக்கிற ஒ ரே காரணத்திற்காக என்னை சென்னைக்கு மாத்தியிருக்காங்க. என் கண் முன்னால நடந்த அட்டூழியங்களைத்தான் எந்தப் பாசாங்கும் இல்லாமல், எழுதியிருக்கேன். இது நாவலா… கட்டுரையா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை… இந்த மாதிரி அக்கிரமங்களுக்கு முடிவு கட்ட நம்மோட திரைப்படம் ஒரு துவக்கமாய் இருக்க வேண்டும்” 

நடிப்புப்புயல், எழுத்தாளரைப் பார்க்காமல், நாற்காலியின் பின்பக்கம் தலையை தொங்கப் போட்டார். பிறகு ரெண்டு கைகளையும் சேர்த்து சேர்த்து தட்டினார்… உதடுகளைப் பிதுக்கினார். ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தபடியே, இயக்குநர் அரூபசொருபனை ‘ஒரு மாதிரி’ பார்த்தார். அதைப் புரிந்து கொண்ட கலைமாமணி அரூப சொருபன், அவரை ஆற்றுப்படுத்தினார். 

”இதுல கதை இல்லியேன்னு நினைக்காதீங்க தலைவரே… கற்பழிக்கப்பட்ட பதினெட்டு பொண்ணு களையும் எப்படி கதாநாயகியா காட்ட முடியும்னு… நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது தலைவரே… எப்படின்னு கேட்கிறீங்களா… இதுக்கு பேர்தான் வேவ் லென்த் என்கிறது. ஆனால்… திரைக் கதை அமைக்க போறது ஒங்களோட அடிமை சொருபன். திரைக் கதையைச் சொல்றேன் கேளுங்க…” 

“இந்த மலைமக்களுக்கு சேவை செய்றதுக்காக ஒரு அறிவு ஜீவிப் பொண்ணு, அந்தக் கிராமத்துக்குப் போறாள். டில்லியிலிருந்து போறாள். கட் பண்றோம்…அப்புறம் அவளுக்கும் எஸ்டேட் முதலாளியான ஒங்களுக்கும் மோதல் உருவாகி, அதுவே காதலாகுது… டூயட் பாடுறிங்க… துள்ளிக் குதிக்கிறீங்க… அள்ளி அணைக்கிறீங்க… கட்…கட்…” 

“ஒரு நாள், ஒங்க காதலி தலைவிரி கோலமாய் கன்னத்துல ரத்தக் கீறலோட ஒங்ககிட்ட வர்றாள்… விக்குறாள்… விம்முறாள்… படபடக்கிறாள் அழுகிறாள்… ஒங்க மேல அப்படியே சாய்கிறாள்… நீங்க படபடத்து, துடிதுடித்து காரணம் கேக்கிறீங்க… கட் பண்றோம்… அப்புறம் ‘ப்ளாஷ் பேக்’ அண்டை மாநில முரடர்கள் இந்த கிராமத்துக்கு வந்து அப்பாவி பெண்களை கற்பழிக்கிறாங்க… அவர்களோடு அவர்களாய் ஓங்க காதலியும் கற்பழிக்கப்படுகிறாள்… கட்… நீங்க கோப ஆவேசம் கொள்ளுறீங்க… அந்தக் கிராமத்துக்கு போறீங்க… அந்த அப்பாவி மக்கள் பட்டபாட்டை சொன்னவுடன் ஆவேசி ஆகிறீங்க… கட்…கற்பழிக்கப் பட்ட… பெண்களில் ஒருத்தியையும், ஒங்க அறிவு ஜீவி காதலியையும் கூட்டிக்கிட்டு, அடுத்த மாநில காட்டுக்கு போறீங்க…கற்பழித்த கயவர்களை கண்டுபிடித்து ஒவ்வொருத்தன் தலையையா வெட்டுறீங்க..வெட்டின தலைகளை கழுத்தில மாலையாப் போடுறீங்க.. கட் பண்றோம்.. கிராமத்துக்கு வாரீங்க..இந்த மாலைத் தலைகளோட ஊழி நடனமாடுறீங்க.. உடனே கிராமத்து மக்கள் ஒங்க காலுல விழுறாங்க. ‘எப்படிண்ணே கதை” 

நடிப்புப் புயல், கன்னங்களை உப்பி யோசித்த போது, அசோசியேட் டைரக்டரான அன்பு வேந்தன் முந்திரிக் கொட்டையானான். இந்த இயக்குநருக்கு, இந்த திரைக்கதையை சொன்னவனே இவன்.. இருக்காதா கோபம்.. இவனும் பேசினான்.. 

“இதுல கதை முழுதும் ஒரு செண்டிமென்ட வச்சிருக்கோம் தலைவரே.. காதலியோடும், கற்பழிக்கப் பட்ட பெண்ணோடும், நீங்க காட்டுக்குப் போறீங்களா.. அங்கே கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கும் ஒங்க மீது காதல் வந்துடுது.. இதனால் அவளுக்கும் ஒங்க காதலிக்கும் கூட மோதல் வருது… நீங்க காதலியை வழக்கப்படி அணைக்காமல் விலகிப் போறிங்க.. இதுக்கு கற்பழிக்கப் பட்ட அந்தப் பெண்தான் காரணமுன்னு காதலி நினைக் கிறாள். படம் பாக்கிறவங்களும் நினைக்கிறாங்க.. ஆனால் விசயம் என்னடான்னா, மரணப் படுக்கையில் கிடந்த ஒங்க தாய்க்கு நீங்க ஒரு சத்தியவாக்கு கொடுத் திடுறீங்க.. அதாவது கன்னிமை கழியாத ஒரு பெண்ணுக்குத்தான் தாலி கட்டப் போறதா சத்தியம் செய்றீங்க.. ஆனால் ஒங்க காதலியோ கற்பழிக்கப்பட்டவள். இதனால் நீங்க காதலுக்கும், சத்தியத்துக்குமிடையே அல்லாடுறீங்க..கடைசியில காதலிகிட்டேயும் விசயத்தை சொல்லிடுறீங்க..உடனே அந்த அறிவு ஜீவி காதலி அட்டகாசமாய் சிரிக்கிறாள்.ஒங்கள உசுப்பி விடுவதற்காகவே தான் கற்பழிக்கப்பட்டதாய் பொய் சொன்னதாய் சொல்றாள். இதுக்கு அத்தாட்சியாய் கற்பழிக்கப்பட்ட நாளுல, அவள்டில்லிக்கு ரெயிலுல போன டிக்கெட்டை காட்டுறாள். நீங்க அப்படியே அவளை அலாக்கா தூக்கி தலையில வச்சு கூத்தாடுறீங்க.. கட் இதுதான் கிளைமாக்ஸ்… எப்படிண்ணே…” 

“தூள் பரப்பிட்ட கண்ணா தூள் பரப்பிட்டே… தலையும் வாலும் புரியாத ஒரு கதையை அழகா மாத்திட்டே…”

‘நடிப்புப் புயலின்’, தீர்ப்பு மயில்நாதனைப் போல, அரூபசொருபனுக்கும் ஆத்திரத்தைக் கொடுத்தது… கடைசியில் இந்த அன்பு வேந்தன் பயல் அவன் புத்தியைக் காட்டிட்டான்..தட்டணும். தலையைத் தட்டணும்.. தலையெடுக்காதபடி தட்டணும்… அதற்குள் முந்தியடிச்சு பேசனும்… 

“யோசிக்காதீங்க தலைவரே, இந்தப் படத்தை வெள்ளி விழாவுக்கு கொண்டு போக வேண்டியது ஒங்களோட ஆசீர்வாதத்தில் என்னோட பொறுப்பு… இதுல கற்பழிப்பு இருக்கிறதனால, அதுலயும் பதினெட்டு பேர் கற்பழிக்கப்படுறதால, ஏ.பி.சி. கிளாஸ் மூணுக்கும் ஒரு ரசனை கிடைக்கும்… அந்தப் பெண்கள் கதறும்போது தாய்க்குலம் கண்ணீர் வடிக்கும். ‘அறிவு ஜீவி’ காதலி பேசுற தத்துவங்களை கேட்டுட்டு ‘ஏ’ கிளாஸ் ஆடியன்கள் சொக்கிப் போவாங்க… ஒங்க காதலி கற்பழிக்கப்பட்டாள் என்பது தெரிஞ்சதும் ‘பி கிளாஸ்’ ரசிகர்கள் தீக்குளிக்கக் கூடப் போயிடுவாங்க… அதோட புதுமையாய் ஒரு சண்டைக் காட்சி செய்யப் போறேன்… வழுக்கலான பாறையில நீங்க செங்குத்தா நிக்குறீங்க… முடியாதுதான்… ஆனாலும் ஒங்களுடைய யோகப் பயிற்சி’, ஒங்களை அப்படி நிற்க வைக்குது… அங்கிருந்தபடியே எதிரிகளை கால்களைப் பின்பக்கமாதூக்கி அவங்க தலைகள்ல கொக்கி போடுறீங்க.. இது அபாயகரமான சண்டை.. வழக்கமா புக் செய்யுற மாதிரி நம்ம பொன்னனையே சண்டைக் காட்சியில் டூப்பா போட்டுடலாம்… இந்த சண்டை காட்சிகளை பாத்துட்டு ‘சி’ கிளாஸ் ஆடியன்ஸான ஒங்க தொண்டர்கள் கட் அவுட் வைப்பாங்க… கற்பூரம் கொளுத்துவாங்க…அப்புறம் என்ன… அடுத்த முதலமைச்சர் நீங்கதான்…”

‘இயக்குநர் செம்மல் அரூபசொருபன், அன்பு வேந்தனை இறுமாப்பாய் முறைத்தபடியே மூச்சுவிட்டபோது, நடிப்புப்புயல், அப்போதே முதலமைச்சர் ஆகிவிட்டதுபோல், தலைகள் விழுவதற்கு வசதியாக நிமிர்ந்து உட்கார்ந்து கால்களை நீட்டினார். 

எழுத்தாளர் மயில்நாதன் எழமுடியாமல் எழுந்தார். கால்கள் தலையை கீழே இழுத்தன… தலை, கால்களை மேலே இழுத்தது… கண்கள் எரிந்தது. காதுகளில் இரைச்சல் கேட்டது… கால்மேல் கால்போட்டு நடந்தார்… ‘தூ’வென்று வந்த ஒத்த வார்த்தையை எச்சிலோடு உள்ளடக்கிக் கொண்டார்…சட்டைப் பைக்குள் வைத்த பத்தாயிரம் ரூபாய் நோட்டு கத்தையை, கைகளை கட்டிக் கொண்டு நின்ற அரூபசொருபனின் கை விளிம்பிற்குள் திணித்துவிட்டு கோபத்தை மௌனமாக்கி வெளியேறினார். திரும்பிப் பார்த்தால், கண்களுக்கு தீட்டுப்பட்டு விடும் என்பதுபோல் கண்கள், கால்களைப் பார்க்க, கால்கள் உடம்பை நகர்த்த அவர் உஷ்ணத்தோடு வெளியேறினார். அந்த உஷ்ணமே நெஞ்சச் சுரப்பை ஆவியாக்கி கண்ணீராய் கொட்டப் போனது. 

வாச்சாத்தி மக்களுக்காக மனதிற்குள் அழுதவர், இப்போது தமிழகமே ஒரு வாச்சாத்தி ஆகிவிட்டது என்ற எண்ணத்தில் வெளிப்படையாகவே அழுதார்… 

– தினமணி கதிர், 15-10-1995.

– ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும், முதற் பதிப்பு: மே 1996, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

சு.சமுத்திரம் சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *