புலம்பல்!






எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த காந்தன், அங்கு தென்பட்ட காட்சியைக்
கண்டு அப்படியே மறைந்து நின்று கவனித்தான். உரையாடலும் சுவையாக இருக்க
காது கொடுத்து கேட்டான்.
“நண்பா…”
“என்ன நண்பா?”
“எதிரில் ஒருத்தன் புதுசா வந்திருக்கான் பாரு கவனச்சியா?”
“ம்..ம்.. கவனிச்சேன். என்ன விஷயம்?”
“அவன்கிட்ட சாகவாசம் வெச்சுக்காதே..”
“ஏன் தோஸ்த்?”
“அவனை கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாகக் கேள்வி!. அவனோடு பழகினால் நம்மையும் தொற்றிக் கொள்ளும்..அதனால நாம அவனோடு பழகாமல் தள்ளி ஜாக்கிரதையா இருக்கறதுதான் நல்லது!”
“சே..இந்தக் கொரோனாவால உலகமே தத்தளிக்குறது. பாவம் ஜனங்கள்! லாக்
டவுன்னால வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்குறாங்க. வாழ்க்கையே போராட்டமா
இருக்கு!…ஹூம்…என்னிக்குதான் விடிவு காலம் பொறக்குமோ?”
“விடிவு காலம் வரணும்னா எச்சரிக்கையா இருக்கணும். மோசமான வைரஸ்…அது இருக்குறவன் கிட்ட வந்தாலே ஆபத்துதான். அதனாலதான் சொல்றேன் . அவன் கிட்ட நட்பு வெச்சுக்காதே…”
“அவன் ஏன் இங்க வந்து தொலைஞ்சான். வேற இடமா கிடைக்கல்லே ?”
“வந்துட்டான். என்ன செய்யறது?”
“சரி, சரி. நீயும் அவன்கிட்ட பழகாதே. நானும் கொஞ்ச தூரம் தள்ளியே இருக்கேன்.”
இதையெல்லாம் கேட்ட புதியவனுக்கு கோபம் கோபமாக வந்தது. அருகில் சென்று
அவர்கள் இருவரையும் ‘பளார், பளாரெ’ன கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் என்று
ஆத்திரமும் வந்தது. ஆனாலும் பொறுமையைக் கடைபிடிப்பது தவிர வேறு வழியில்லை எனப் பட்டது.
‘சே! கொரோனாவில் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி, அங்கு அனுபவிக்குற கொடுமை தாளாமல் செத்து கல்லறைக்கு வந்து சேர்ந்தால், இங்கேயும்
இந்த ஆ(பா)விகளோட ரவுசு தாங்க முடியல்லையே!’ மனதுக்குள் புலம்பியது
புதுசா வந்த ஆவி.
திடுக்கிட்டு கண் விழித்தான் காந்தன். கண்ட கனவால் அவன் உடல் வேர்த்திருந்தது!