புரியாத புதிர்
“ஒரு கம்பெனியின் எம்.டி க்கு ஏன் இந்த மாதிரி புத்தி போகுது? எம்ப்ளாய்ஸ¤க்கு எவ்வளவு நல்லது செய்யறாரு? தொழிலாளர்கள் மத்தியில எவ்வளவு நல்ல பேரு.. ஆனாலும் தான் ஒரு கம்பெனியின் எம்.டி என்பதை மறந்து இப்படி அல்பத்தனமா நடந்து கொள்கிறாரே?”
“இது ஒரு விதமான வியாதி குணா.. இதுக்கு ஆங்கிலத்துல கிளப்டோமேனியான்னு சொல்லுவாங்க…எதையாவது பார்த்தா, தனக்கு பிடிச்சிருந்தா,அது விலை குறைந்ததாக இருந்தாலும், அத எடுத்து வச்சுகணும்னு தோணும்… நம்ம எம்.டிக்கு அந்த வியாதி இப்ப முத்தி போச்சு..” குருமூர்த்தி விளக்கமளித்தார்.
சீனிவாசனும், ஜெயராமனும் அந்த விளக்கத்திற்கு பெரிதாக சிரித்தார்கள்.
குணசேகர், குருமூர்த்தி, சீனிவாசன், ஜெயராமன் நால்வரும் எம்.டி தீனதயாளனுக்கு கீழ் வேலை செய்யும் கோகுல் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் ஜெனரல் மானேஜர்கள்.
கோகுல் இண்டஸ்ட்ரீஸின் எம்.டி தீனதயாளன் மிகவும் வித்தியாசமானவர். தன் தொழிற்சாலையில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களின் பெயர்களையும் நினைவில் வைத்துக் கொண்டு அவர்களின் பெயர் சொல்லி அழைப்பவர். சென்னையில் உள்ள மற்ற தொழிற்சாலைகளைவிட கோகுல் இண்டஸ்ட்ரீஸின் தொழிலாளர்கள் அதிக சம்பளமும், சலுகைகளும் தொடர்ந்து பெற வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர்.
தொழிலாளர்களின் பிறந்த நாளின் போது காலையிலேயே அவர்களின் வீட்டிற்கு நிறைய இனிப்புகளும், மலர் கொத்துகளுடன் தான் கையெழுத்திட்ட ஒரு பிறந்த நாள் வாழ்த்து அட்டையையும் அனுப்பி வைப்பவர். அன்றைய தினம் தான் ஊரில் இருந்தால் நேரிலும் வாழ்த்துகள் சொல்பவர்.
தொழிலாளர்களின் வீட்டு விசேஷங்களில் முடிந்தால் தன் மனைவியுடன் தவறாது கலந்து கொள்பவர். தவிர, தன் தாயார் பெயரில் நடத்தும் டிரஸ்ட் மூலமாக தொழிலாளர் குழந்தைகளின் கல்விச் செலவை முழுவதுமாக ஏற்றுக் கொள்பவர். தொழிலாளர்கள் குடும்பத்தின் உடல் நலனுக்காக பிரத்தியேக காப்பீட்டுத் திட்டத்தையும், நலனையும் அறிமுகப் படுத்தியவர்.
தொழிலாளர் சம்பந்தப் பட்ட நல்ல விஷயங்களில் ஏதேனும் தவறுகளோ அல்லது மறதியோ ஏற்பட்டுவிட்டால் தனது மனிதவள மேம்பாட்டின் ஜெனரல் மானேஜரை உலுக்கி விடுவார் உலுக்கி. இவ்வளவு தூரம் தொழிலாளர்களின் நலனில் எம்.டியே நேரடியாக அக்கறை செலுத்துவதால், இதுவரை கோகுல் இண்டஸ்ட்ரீஸில் அமைதியின்மையோ, வேலை நிறுத்தமோ ஏற்பட்டதில்லை. இருக்கும் ஒரு யூனியனும் மானேஜ்மெண்ட் விரும்பியபடிதான்
செயல்படும்.
தீனதயாளன் அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு தன் கம்பெனி இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றை தானும் கடைபிடித்து அதை தன் தொழிலாளைகளிடமும் எதிர்பார்ப்பவர்.
இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட தீனதயாளன், அலுவலக விஷயமாக வெளியூர் பயணம் செய்ய நேர்கையில், தான் தங்கும் ஹோட்டல்களிலிருந்து, அங்கு பாத்ரூமில் வைக்கப் பட்டிருக்கும் சோப்பு, சீப்பு, ஷாம்பு பாக்கெட்டுகள், ஷேவிங் செட்டுகள், வாசனைத் திரவியங்கள் போன்றவைகளை தன்னுடன் எடுத்துக் கொண்டு வந்து விடுவார்.
தினமும் இரவு படுக்கும் முன் தன் பெட்டியில் மறக்காது அவைகளை எடுத்து வைத்துக் கொள்வார். மறு நாளும் ஹோட்டலில் தங்க நேர்ந்தால் திரும்பவும் ஹவுஸ் கீப்பிங்கினால் வைக்கப்படும் அவைகளை மறுபடியும் எடுத்து வைத்துக் கொள்வார். இதில் அவருக்கு கூச்சமோ அல்லது வெட்கமோ கிடையாது.
பெரும்பாலான சமயங்களில் அவருடன் பயணம் செய்யும் அவரின் கீழே வேலை பார்க்கும் ஜெனரல் மானேஜர்களுக்கு அவரின் இந்தச் செய்கை மிகவும் அநாகா£கமாகவும், அசிங்கமாகவும் பட்டது. தமக்குள் எம்.டி யைப் பற்றி கேவலமாகப் பேசிக் கொண்டு, ஜோக் அடித்தார்களே தவிர ஒருவருக்கும் அவரிடம் இதை நிறுத்தச் சொல்லி நேரில் சொல்ல தைரியமில்லை.
மற்ற விஷயங்களில் நேர்மையை கடைப்பிடிக்கும் தீனதயாளன், இதில் மட்டும் சோடை போனது அனைவருக்கும் ஒரு புரியாத புதிராக இருந்தது.
மாதங்கள் ஓடின…
அன்று தீனதயாளனின் தாயார் பெயரில் நடத்தப் படும் டிரஸ்டின் பத்தாவது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடத்துவதற்காக கம்பெனி விழாக் கோலம் பூண்டிருந்தது. ஏகப்பட்ட அலங்கார வளைவுகளும், தோரணங்களும் அந்த ஏரியாவையே கலக்கியது.
மாலை ஆறு மணி. அலங்கரிக்கப்பட்ட மேடையின் முன்பு, அனைத்து தொழிலாளர்களும் தனது குடும்பத்துடன் அமர்ந்திருந்தனர். அது தவிர, அருகிலுள்ள அநாதைஆசிரமத்திலிருந்து கிட்டத்தட்ட நானூறு குழந்தைகளும் வந்து அமர்ந்திருந்தனர். மேடையின் மீது தீனதயாளன் தன் மனைவியுடன் வர, அவரைத் தொடர்ந்து ஆசிரமத்திலிருந்து வந்திருந்த பாதிரியார் ஆரோக்கியசாமியும் வந்தார். தங்களுக்காக போடப் பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். உடனே அங்கு அமைதி நிலவ, ஆண்டு விழா கடவுள் வாழ்த்துடன் தொடங்கியது.
முதலில் தீனதயாளன் கம்பெனியின் அசுர வளர்ச்சி பற்றியும் அதன் எதிர் காலத் திட்டங்களைப் பற்றியும் எடுத்துரைத்தார். சிறந்த தொழிலாளர்களுக்கு மேடையிலேயே பரிசுகள் வழங்கினார். கம்பெனியின் வளர்ச்சிக்கு அனைத்து தொழிலாளர்களின் கடின உழைப்பும், கூட்டு முயற்ச்சியும் மட்டுமே காரணம் என்பதை விளக்கினார்.
அடுத்து பேசிய அவரது மனைவி அங்கு வந்திருந்த ஆசிரமக் குழந்தைகளின் கல்விக்காகவும், உடல் ஆரோக்கியத்துகாகவும் கோகுல் இண்டஸ்ட்ரீஸ் செய்துவரும் உதவிகளை வரிசையாக விவரித்தார். பின்பு டிரஸ்டின் பத்தாவது ஆண்டைக் குறிக்கும் விதமாக பத்து லட்ச ரூபாய்க்கான காசோலையை உதவித் தொகையாக ஆசிரமத்துக்கு வழங்குவதாக அறிவித்த போது, அங்கு கூடியிருந்த ஆசிரமக் குழந்தைகளும், தொழிலாளர்களின் குடும்பங்களும் கரகோஷம் எழுப்பினர். ஆசிரமத்தின் தலைவர் பாதிரியார் ஆரோக்கியசாமி எழுந்து நின்று பத்து லட்சத்திற்கான காசோலையை பெற்றுக் கொண்டார்.
இறுதியாக பாதிரியார் நன்றியுரையாற்றினார்.
“திரு தீனதயாளன் எங்களது ஆசிரமத்துக் குழந்தைகளை கல்வி, ஆரோக்கியம், உடல் நலம் என பல வகைகளில் போஷித்து வருகிறார்.
அவரின் பெரும்பாலான பெரிய உதவிகளும், சிறிய கவனித்தல்களும் வெளியே தெரியாமல் மிக அமைதியாக நடந்து வருகின்றன. ஆனால் இன்று அவரது தாயார் பெயரில் நடத்தப் படும் டிரஸ்டின் பத்தாவது ஆண்டு விழா என்பதால், அவர் அளித்த பத்து லட்ச ரூபாய் உதவித் தொகை உங்கள் அனைவருக்கும் தெரிய நேர்ந்தது.
உங்களில் பெரும் பாலோருக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்க நியாயமில்லை. திரு.தீனதயாளன் தான் வெளியூர் பயணம் செய்யும்போது, தான் தங்க நேரும் ஹோட்டல்களிலிருந்து, தங்குபவர்களின் உபயோகத்திற்காக வைக்கப் பட்டிருக்கும் ஷாம்பு பாக்கெட்டுகள், சோப்பு, சீப்பு, வாசனைத் திரவியங்கள் போன்றவைகளை எடுத்து வைத்துக் கொண்டு, அவைகளை தன் டிரைவர் மூலமாக ஆசிரமத்துக்கு அவ்வப்போது அனுப்பி வைத்து விடுவார்.
அவைகளை நம் ஆசிரமத்துக் குழந்தைகள் சந்தோஷமாக அனுபவித்து உபயோகிப்பார்கள். தரமான பெரிய ஹோட்டல்களில் தங்கும் வாடிக்கையாளர்களுக்கு பாத்ரூமில் தினசரி உபயோகத்திற்காக வைக்கப்படும் இவைகளுக்கும் சேர்த்துதான் தினப்படி வாடகை வசூல் செய்கிறார்கள். நாம் அனைவரும் அவைகளை பெரும்பாலான நேரங்களில் உபயோகப் படுத்தாமல் அங்கேயே விட்டு விடுகிறோம். ஆனால் அதன் உபயோகத்திற்கான பணத்தை மட்டும் வாடகையுடன் சேர்த்து கொடுத்து விடுகிறோம். திரு.தீனதயாளன் நம் ஆசிரமக் குழந்தைகளுக்கு அவைகளை கொண்டு வந்து கொடுப்பது ஒரு வித்தியாசமான நல்ல சிந்தனை. இது எத்தனை பேருக்குத் தோன்றும்? வளப்பமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு வேண்டாதவைகள், ஏழைகளுக்கும் அநாதை ஆசிரமங்களுக்கும் மிகவும் தேவைப்படும் பொருட்களாக இருக்கும். இதை நாம் உணர்ந்து கொண்டால் பொருட்கள் வீணாவது மிகவும் குறையும், ஏழைகளுக்கும் மிகவும் உதவியாக அமையும்….”
பாதிரியார் பேசும்போது நான்கு ஜெனரல் மானேஜரிகளும் ஒருவரையொருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு அப்போதுதான் தங்களுடைய புரியாத புதிருக்கான விடை கிடைத்தது. தாங்களும் இந்த நல்ல காரியத்தில், எம்.டி தீனதயாளனைப் பின்பற்றுவது என முடிவு செய்தனர்.