புத்துணர்ச்சி





(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கால மாற்றம் அந்த வீதியை வலுவாகக் கற்பழித்திருந்தது. இவனையுந் தான். நகருக்கு வந்த புதிதில் ஒவ்வொரு மணியும் புதிதாக ஏதாவது ஒன்றைத் தேடிய இவன் இன்று தன் நோக்கிழந்து, போக்கு மாறி ‘வீடியோக் கிளப்பினைத்’ தேடி வருமளவிற்கு, இளமை, முறுக்கு இவனை முற்றாகவே ஆதிக்கப்படுத்தி விட்டது.

‘தியேட்டர்’ யுகம் சிதறி ‘வீடியோ’ யுகம் உதயமான கடந்த ஐந்தாறு வருடங்களுள், ஆரம்ப காலம் இவனை அதிகம் பாதிக்கவில்லை. ஆலயம் அமைந்த வழிகளில் சில வீடுகளின் முன்னால் சுவரெழுப்பியிருக்கும் சுவரொட்டிகள், காலப்போக்கில் அவ்வீதியின் ஒவ்வொரு வீடுகளிலும் தொற்றிக் கொண்ட வேளைகளில் தான் விசுவாமித்திர முனிவனாக இவனது மனமும் தடுமாறத் தொடங்கியது.
ஆலயத்தைத் தாண்டி வேகமாக நடந்து சந்திக்கு வந்தவன் மேலும் முண்டியடித்துக்கொண்டு முன்னேறிச் செல்கிறான். வீதியில் நிறைந்து நின்ற சனக்கூட்டம் அன்றைய விடுமுறைத் தினத்தைப் படம் பிடித்துக் காட்டியது. அந்த மாலைக் காட்சி பாலுமகேந்திராவின் கைவண்ணத்திற்கு உயிர்க்களை கொடுத்தது.
தேநீர்க் கடைப் பக்கமாக அமைந்திருந்த பெட்டிக்கடைக்கு அருகிலிருந்த போஸ்டரில் பார்வையைச் செலுத்துகிறான். தமிழகத்து இன்றைய ‘சுப்பர் ஸ்டார்’ ஒருவரின் அண்மைக் காலத்துப் படம். கண்கவர் கவர்ச்சி நடனங்களுடன் பிரமாண்டமான தயாரிப்பாக வெளியாகியிருந்தது. இவனது மனம் அதில் லயிக்கவில்லை.
தனது நீண்ட கால்களை முன் வைத்துச் செல்கிறான். அடுத்தடுத்து விளம்பரமாகியிருந்தவை யாவும் இன்றைய முன்னணி நாயகர்களது படங்களாகவே இருந்தன. ஒரு மாற்றத்திற்காக பழைய காலத்து சிவாஜி கணேசனது படங்கள் எதுவும் காட்சி தருகிறதா என ஒரு கணம் நோட்டம் விட்டான். இவனது எதிர்பார்ப்பிற்கு ஏற்றனவாக எதுவும் இருக்கவில்லை.
சென்ற பாதை வழியாக மீண்டும் வலம் வருகிறான். “சேர் வாங்க டிஸ்கோ சாந்தியின்ரை ‘டான்ஸ்’ இருக்கு நல்ல சண்டைப் படம் சேர் வாங்க. வழியில், நடுத்தெருவில் நின்றவாறே ஒரு பையன் இவனைப் பார்த்து அடிக்குரலில் கூறுகிறான். யாவற்றையும் விலத்தி மீண்டும் சந்திக்கு வந்தான்.
சந்தியில் ஓர் கணம் நின்றவன், ஏதோ ஒரு உந்தலால் வலது பக்கமாகப் பாதை மாறிச் செல்கிறான். ஒரு பக்கம் உடைந்த ஓட்டுக் குவியல்கள், மறுபக்கம் குப்பை கூழங்கள் அடங்கிய கறுப்பு நிற ‘பொலிதீன்’ மூடைகள். குப்பைக் குவியலில் இருந்து வந்த சிறுநீர் நாற்றம் இவனது மூக்கைக் குடையவே தன் வழமையான நடையை மீறி அவ்வழியே மிக வேகமாக முன்னேறிச் செல்கிறான்.
எத்தனையோ படங்கள் கண்களில் திரையிட்டிருந்தும், எதிலுமே மனது லயிக்காது, இவனை வழிநடாத்திச் செல்லும் இவனது அடிமனத்து ஆசை? இவனின் மனதில் அழுக்காகத் தொங்கிக் கொண்டிருக்கும் அந்த விருப்பு? ‘இன்று ஒரு புளுபிலிம் பார்த்தால் என்ன?’
‘புளுபிலிம் போஸ்டர்கள்’ எப்படியாகக் காட்சிக்குத் தொங்கும் என்று நண்பர்கள் வாயிலாக நன்றாகவே இவன் கேள்விப்பட்டிருக்கிறான். அதனால் அந்த இடங்களை இனங் காண்பதில் இவனுக்கு சிரத்தை ஏதும் இருக்கவில்லை. வேகமாக வந்தவனது கண்களில் அப்படியான ஒரு ‘போஸ்டர்’ தென்படவே, வீதியின் முன்னும், பின்னும் ஓர் தடவை பார்த்துக் கொண்டான். முற்புறமாகத் தெரிந்த முகங்கள் ஏதும் தென்படவில்லை. சற்று முன் சென்று திரும்பி வந்தான். மறுபக்கமும் இவனை அடையாளம் காணும் முகங்கள் இல்லாது போகவே, திடீரென அந்தப் ‘போஸ்டர்’ தொங்கிய வீட்டினுள் நுழைந்து கொண்டான்.
வாசலில் நின்ற பையன் வழி மறித்துக் கையை நீட்ட ‘பொக்கெட்டிற்குள்’ தயாராக இருந்த ஐந்து ரூபாக் குற்றியை எடுத்துக் கொடுக்கிறான். “சேர் இது செக்ஸ் படம். பத்து ரூபா” என்று சிறுவன் கூறவே, ஆபாசப் படங்களுக்கு இரு மடங்கு காசு என நண்பர்கள் சொன்னது நினைவுக்கு வரவே, இருந்த இன்னொரு நாணயத்தையும் நீட்டிவிட்டு உள்ளே செல்கிறான்.
வேறொரு பையன் மாப்பிள்ளை போல் இவனை அழைத்து மாடிக்குக் கூட்டிச் செல்கிறான். பலகைப் படிகளால் பக்குவமாக ஏறி, உள்ளே நுழைகிறான். ஒரே புகைமண்டலமாக அந்த அறை காட்சி கொடுத்தது. சற்று நின்றவன் கண்மணிகளுக்கு இருளில் பார்க்கும் சக்தி வந்ததும், ஒரு வாங்கினில் சென்று அமர்ந்து கொள்கிறான்.
‘வீடியோ’வில் ஓர் ஆங்கிலப் படம் போய்க்கொண்டிருக்கிறது. அருகிலிருந்தவரை மெல்லிய குரலில் வினவுகிறான், ‘கமிங்’ காட்டுகிறார்களாம், அந்தப் படம் இன்னும் ஆரம்பமாகவில்லையாம். கையை உயர்த்தி அந்த வீடியோ வெளிச்சத்தில் நேரத்தைப் பார்க்கிறான். மணி ஆறு ஐம்பது.
அந்த அறையை நோட்டம் விடுகிறான். ‘வீடியோ’வுக்கு மேலே சுவரில் புத்தர், ஜேசு, பிள்ளையார் படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. ஒரு சிறிய மின் குமிழ் படங்களுக்கு முன்பாக விட்டு விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தது. பக்கச் சுவர்களில் இன்றைய முன்னணி நடிகைகளின் கவர்ச்சி அபிநயங்கள், படு ஆபாசமான கோணங்களில் ஒட்டப்பட்டிருந்தன. படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களை முன்னிருந்து பின்வரை நோட்டம் விடுகிறான். ஏறத்தாழ சகலருமே வயதில் குறைந்தவர்கள். சரியாக மீசைகூட இன்னமும் அரும்பாதவர்கள். நரைத்த தலைக்காரர் சிலரும் இவனது கண்களில் அகப்படாமல் இல்லை. குறைந்தது ஒன்றை விட்டு ஒருவரது வாய்களிலும் சிகரட்டுகள், பீடிகள் என்று ஏதோ ஒளிர்ந்து கொண்டிருந்தன. மூலையில் ஒரு சிலர் கசிப்பு அடித்தவரைப் போன்ற மயக்கத்தில் ஏதேதோ பினாத்திக் கொண்டிருந்தார்கள். இவனுக்கு வந்த இடம் இசைவானதாக இருக்கவில்லை. தனது ஆளுமைக்கே இது இழுக்கு என்ற நினைப்பு வேறு வந்து தொலைத்தது.
வீடியோவில் போய்க்கொண்டிருக்கும் படத்தில் சற்று மனதை லயிக்க முற்படுகிறான். அது ஒரு வீராங்கனையின் வரலாறு கூறும் படம். தனியாக களத்தில் நின்று பெரிய பெரிய ஆணழகர் எல்லோரையுமே அவள் பந்தாடிக் கொண்டிருந்தாள். இடையிடையே அவள் பட்ட கஷ்டங்களையும், ஒரு கொள்ளைக் கூட்டம் அவளது குடும்பத்தைக் கொன்று குவித்த நிகழ்ச்சிகளையும் ‘விளாஷ் பாக்’கில் காட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லாத் துறையைப் போலவும் வீரத்திலும் பெண்கள் முன்னுக்கு வந்திருப்பதை அப் படம் சித்தரிக்க முனைந்திருக்கிறது.
“ஒய், படத்தைப் போடுங்க. மணி ஏழேகால் ஆச்சு.” பல் குரல்கள் ஒருமித்து ஒலித்தன. விசில் சத்தம் காதைப் பிளந்தது.
கீழிருந்து கையில் ஒரு ‘கசற்’றுடன் ஒரு பையன் ஓடிவருகிறான். மின் குமிழ்கள் ஒளிர விடப்படுகின்றன. எல்லாரது முகமும் வெளிச்சத்துக்கு வருகிறது.ஒரே வியர்வையில் மூழ்கிய முகங்கள். நல்ல வேளை இவனை இனங்காணும் கண்கள் எதுவுமே இல்லாதது இவனுக்கு நிம்மதியைத் தந்தது,
ஏதோ ஒரு கருத்தைச் சொல்ல முற்பட்டு கலைநயத்துடன், நல்ல அம்சங்களுக்கு உட்பட்டு நிற்கும் இப்பேர்ப்பட்ட படைப்புகளை எங்கே இவர்களால் ரசிக்க முடிகிறது? மீண்டும் இருள் அறையை ஆக்கிரமிக்க அந்தப் படம் ஆரம்பமாகிறது.
நான்கு சுவர்களுக்கு மத்தியில் நடைபெறும் அந்தரங்கமான உறவு அநாகரிகமாக, படு ஆபாசமாக அரங்கேறிக் கொண்டிருந்தது. இவனுக்கு இந்த 25 வயதிலும் இவைகள் எல்லாம் புதுமையாகவே இருந்தன. அந்த அம்மண உருவங்கள், உச்சக்கட்ட சிலிர்ப்புகள், காட்சிகள் யாவும் கண்களை உரசிக் கொண்டிருந்தன. உடலில் வெப்ப அலை பரவிக்கொண்டிருந்தது.
பலகைப் படிகளில் ‘தடார் தடார்’ என்ற ஓசைகள். பலர் ஓடிவருவதைப் போன்ற ஒரு பிரமை. ஆபாசப் படங்கள் பார்த்த பலர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, அவர்கள் பெயர்கள் எல்லாம் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த செய்தி ஒன்று ஞாபகத்திற்கு வரவே, இவனது இதயம் மிகவும் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. கதவு தட்டப்படும் சத்தம் வேறு பயமூட்டியது. சகலருமே கலவரம் நிறைந்து காணப்படுபவர்களைப் போல இவனுக்குத் தென்பட்டார்கள். படம் போட்ட பையன் சென்று கதவைத் திறக்கிறான். யாரோ சிலர் படம் பார்க்கத்தான் வந்து கொண்டிருந்தார்கள். ‘அப்பாடா.’ இவன் அமைதியடைந்தான். மீண்டும் ‘வீடியோ’வைச் சகல கண்களும் மொய்க்கின்றன.
ஆனால், இப்போ இவனது மனம் படத்தில் லயிக்கவில்லை. ஏனோ ரசிக்க முடியவில்லை. ஏதோ ஒரு குற்ற உணர்வு நெஞ்சை உறுத்திக்கொண்டிருக்கிறது. ‘நான் செய்வது தவறா?’-தன்னை ஓர் தடவை கேட்டுக் கொண்டான்.
சட்ட விரோதமாகக் கருதப்படும் எந்தச் செயலை மீறுபவர்களும் தவறிழைப்பவர்கள் தான். அப்படியானால், ஆபாசப் படம் பார்ப்பது? ‘புளூபிலிம்’ பார்ப்பது தவறானது அல்ல. ஏதோ ஒரு நாட்டில் ஓரிரு வருடங்களுக்கு முன்னதாக யாரோ ஒரு நீதவான் தீர்ப்பளித்திருந்ததையும் இவன் அறியாதவனல்ல. மேனாட்டைப் பொறுத்தவரை, அவர்களது பண்பாடு, பாரம்பரியங்களைப் பொறுத்தமட்டில், அவ்விடத்து கலை கலாச்சாரங்களின் அடிப்படையில் இது தவறற்றதாக இருக்கலாம். ஆனால், புராணங்களையும் இதிகாசங்களையும் இன்னமும் உசாத்துணை காட்டும் ‘இந்த மண்ணின்’ பாரம்பரியங்களைப் பொறுத்தவரை, இது தவறான வழி நடத்தல் தான்.
படம் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால், இவனது மனம் அதில் நாட்டங் கொள்ளவில்லை. பக்கத்துக் கோவிலின் மணியோசை கூரையைப் பியத்துக் கொண்டு இவன் காதுகளில் வந்து ஒலிக்கிறது. கோவிலில் பாடப்படும் சிவபுராணம் இவனுக்கும் கேட்கிறது. மனித அவதாரத்தின் முன்னதாக புழுவாகவும் அவன் வடிவெடுத்திருக்கிறான் என்கிறது புராணம். ஆனால், இங்கோ மனிதனாகப் பிறந்தவனே, அநாகரிகமாக, அசிங்கமாக உருவெடுத்துப் புழுவாக நெளிகிறான். கூர்ப்பால் ஆறறிவு பெற்று உயர்ந்தவன் இன்று அலங்கோலமாக அறிவிழந்து, மோகத்தில் மூழ்கி, தனது பெயரைத் தொலைய விட்டு நிற்கும் இந்தச் சிதறிவிட்ட பண்பாடு எமது சமுதாயத்தையுந் தொற்றிக்கொண்டால்?
குடிப்பழக்கம், புகைப் பழக்கம், போதைவஸ்து பாவனை போல இந்தப்பண்பு கெட்ட பழக்கமும் நம்மவரைப் பாதித்து விளைவாக மேகநோய், ‘எயிட்ஸ்’ போன்ற கொல்லும் வியாதிகள் எமது நாட்டையும் பற்றிக் கொண்டால்? இந்தப் பழக்கமும், அதன் விளைவுகளும் எமது இளைய சந்ததிகளையும், எதிர்காலப் பிரஜைகளையும் அடிமையாக்கிக் கொண்டால் முடிவு எந்தளவு பாரதூரமாக அமையும்? இவனுக்கு உலகமே, வாழும் வாழ்க்கையே அந்நியமாகி விட்டதைப் போன்ற ஒரு பிரமை.
இதனை ஒழிக்க சட்டமும் எவ்வளவோ திட்டங்கள் போடுகிறது. ஆனாலும் இது ஓய்ந்தபாடில்லை. ஒழிந்தபாடில்லை. பக்கத்து ‘வீடியோக்கிளப்’பில் ஒலிக்கும் அந்தப் பட்டுக்கோட்டையாரின் பாடல் இவன் செவிப்பறையை அதிர வைக்கிறது. ‘திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது! திருடாதே… பாப்பா திருடாதே!’
மனதில் பயமும் ஓர் பக்தியும் இல்லாது போகும் போது தான் ஒரு மனிதன் கெட்டுப்போக ஆரம்பமாகிறான். கெட்டுப் போன தனிமனிதன் ஒவ்வொருதனும் தானே உணர்ந்து திருந்தும் போது தான் சமூகத்தில் ஒரு புதுக் களை ஏற்படுகிறது.
கையை உயர்த்தி நேரத்தைப் பார்க்கிறான். மணி எட்டை அண்மிக்கிறது. மேலும் இவனால் இருப்புக்கொள்ள முடியவில்லை. பொறுப்பாக நிற்கும் பையனை அழைத்து கதவைத் திறந்துவிடும் படி கேட்கிறான். “நல்ல படம் சேர். இனித்தான் நல்ல ‘சீன்’ இருக்கு.” நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டே பையன் கூறுகிறான். கெஞ்சும் பாவனையில் இவன் வெளியேற விரும்புவதாகச் சொன்ன போது ஆச்சரியத்துடன் இவனது ஆறடி உயரத்தையும் மேலிருந்து கீழ் அளந்தவாறே பையன் கதவைத் திறந்து விடுகிறான். அப்போதும் சிலர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைகின்றார்கள்.
படிகளால் இறங்கித் தெருவுக்கு வருகிறான். குப்பைக் குவியலடியில் ஒரு பெரிய பொலிஸ் வாகனம் இவனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. வேகமாக இவன் முன்னேறிச் செல்கிறான். வாகனம் இவனை விட்டு விலத்திச் செல்கிறது. வீறுநடை போட்டு இவன் முன்னேறுகிறான்.
சந்தியால் திரும்பும் போது இவனது கண்கள் வந்த பாதையை நோக்குகின்றன. சென்று கொண்டிருந்த வாகனத்தின் பின்புறம் சிகப்பாக ஒளிர்ந்தது.
கோவில் மணியோசை தெளிவாகவே இப்போ இவனுக்குக் கேட்கிறது. முன்னே தோரண வீதி நீண்டு தெரிகிறது.
– மல்லிகை
– புதிய பயணம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: வைகாசி 1996, பதிப்புரிமை: திருமதி இ.சாந்த குமாரி, கொழும்பு.