புத்திசாலிப் பிள்ளையாண்டான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள் நாடகம்
கதைப்பதிவு: July 22, 2026
பார்வையிட்டோர்: 83 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாடக பாத்திரங்கள்:
ஒரு பெரிய மனிதன் – ஒரு சிறுபிள்ளை. 

முதற் காட்சி

இடம்:- ஒரு பெரிய சாலை. 

ஒரு பெரிய மனிதர் நின்றுக்கொண்டிருக்கிறார்.

பிள்ளையாண்டான் ஒரு சின்னக் குதிரையைப் பிடித்துக் கொண்டு வருகிறான். 

பி. இந்தாங்க உங்க குதிரெ. 

பெ. நிரம்ப சந்தோஷம்,பையா! ஓடிப்போன என் குதிரையை மிகவும் சாதுர்யமாகப் பிடித்துக்கொண்டு வந்தாய். நீ கஷ்டப்பட்டதற்காக உனக்கு நான் என்ன கொடுக்க வேண்டும்? 

பி. எனக்கு ஒண்ணும் வேணாம். 

பெ. ஒன்றும் வேண்டாமா? ஆனால் நீ அதிர்ஷ்டசாலிதான் – எத்தனைபேர் இவ்வுலகில் அம்மாதிரி சொல்ல முடியும்? வயலில் நீ என்ன செய்துக்கொண்டிருந்தாய் சற்றுமுன்?

பி. களெ பிடுங்கிக்குனு இருந்தேன்.- ஆடுங்களெயும் மேச்சிக்கினு இருந்தேன்.

பெ. இந்த வேலை உனக்கு இஷ்டமாயிருக்கிறதா? 

பி. ஆமாங்க, இந்த மாதிரி நல்லா சூரியன் காயும்போது, இந்த வேலை எனக்கு ரொம்ப இஷ்டமாயிருக்குது. 

பெ. ஆனால் உனக்கு மற்ற பிள்ளைகளைப்போல் விளையாட இஷ்டமில்லையா? 

பி. இது கஷ்டமான வேலை இல்லைங்க. இதுவும் எனக்கொரு வெளையாட்டா இருக்குது. 

பெ. இந்த வேலையைச் செய்யும்படி உன்னை யார் நியமித்தது? 

பி. எங்க நயினா. 

பெ. அவர் எங்கே வசிக்கிறார்? 

பி. அதோ அந்த மாந்தோப்புலே.

பெ. அவர் பெயர் என்ன? 

பி. தம்பியப்பா பிள்ளை. 

பெ. உன் பெயர் என்ன? 

பி. பினாகபாணி. 

பெ. உனக்கு என்ன வயதாகிறது? 

பி. தீபாவளி வந்தா எட்டாவும். 

பெ. இந்த வயலிலே எத்தனை நாழியாக வேலை பார்த்து வருகிறாய்? 

பி. காலமெ ஆறுமணியிலிருந்து. 

பெ. உனக்குப் பசிக்கவில்லையா இப்பொழுது? 

பி. நான் சாப்புட சீக்கிரம் போகப்போறேன் ஊட்டுக்கு.

பெ. இப்போது உன் கையில் அரை ரூபாய் கிடைத்தால் அதை என்ன செய்வாய் நீ? 

பி. எனக்குத் தெரியாது – அவ்வளவு பணம் எங் கையிலே எப்பவும் இருந்ததில்லே, 

பெ. விளையாட்டுச் சாமான் உன்னிடம் ஒன்று மில்லையா?

பி. வெளயாட்டுச்சாமான் இண்ணா? அது என்னாதுங்க?

பெ. பந்து, கோலி, பம்பரம், காற்றாடி. மர பொம்மை முதலியன். 

பி. இல்லைங்க. எங்க அண்ணாத்தெ, மழெகாலத்திலே நாங்கல்லாம் வெளெயாட தோலாலே பெரிய பந்துபண்ணிக் கொடுக்கறாரு. குருவிங்களெ யெல்லாம் புடிக்கிறோம் நாங்க. பாணா பழவ கோலிருக்குது; கால்லே கட்டிகினு ஓயரமா நடக்க பெரிய ரெண்டு கொம்புங்க வைச்சிருக்கேன். இன்னம் ஒரு இரும்பு வளையம் இருக்குது, உருட்டிகினு போவ. ஆனா அது ஓடஞ்சி போச்சி கொஞ்ச நாளுக்கு முன்னே. 

பெ. வேறொன்றும் உனக்கு வேண்டாமா விளையாட? 

பி. இதுங்களே வைச்சிக்கினு வெளையாடவே எனக்குப் போதில்லையே? எனக்குவேலெ சரியாயிருக்குது. நான் எங்க ஊட்டுச் சின்னக் குதிரெயெ இட்டிக்கினு சந்தைக்குப் போரேன். ஆடு மாடுங்களெ யெல்லாம் பாத்துக்க வேண்டியதாயிருக்குது; பட்டணம் போயி என்ன மானா சாமானும் வாங்கிக்கினு வர்ரேன், இதெல்லாம் எனக்கு பெரிய வெளையாட்டாதான் இருக்குது. 

பெ. ஆனாலும் உன் கையில் பணமிருந்தால் நீ மாம்பழம் வாங்கித் தின்னலாம், மசால் வடை வாங்கிச் சாப்பிடலாம், பட்டணம் போகும்போது. 

பி. ஹும்! எனக்கு ஊட்டுலே பெரிய மாம்பழம் கொடுக்க ராங்க. மசால்வடை எனக்கு இஷ்டமில்லை.எங்க ஊட்டுலே எள்ளுண்டை சுட்டுத் தர்ராங்க எங்கம்மா. அதுவே நண்ணாயிருக்குது. 

பெ. ஒரு சின்னக் கத்தி யிருந்தால் ஏதாவது சீவ உனக்கு உபயோகப்படாது? 

பி. எங்கிட்ட ஒண்ணு யிருக்குது. இதோ பாருங்க – எங்கண்ணன் – தாமு அண்ணென்- எனக்குக் கொடுத்தான். 

பெ. உன் செருப்பெல்லாம் கிழிந்து போயிருக்குதே! புதியதாக ஒரு ஜதை உனக்கு வேண்டாமா? 

பி. பட்டணம் போவும் போது போட்டுக்கினு போவ, நல்ல ஜதெ, ஒண்ணு எங்க ஊட்டுலே யிருக்குது. 

பெ. இதைப் போட்டுக்கொண்டு சேற்றில் நடந்தால்காலெல்லாம் சேராய்ப் போகாதா உனக்கு? 

பி. அது பரவாயில்லைங்க. ஊட்டுக்கும் போன ஓடனே கழுவி விட்டாபோவது. 

பெ. உன் குல்லாய் பழசாகி விட்டதே. 

எங்க ஊட்டிலே ஒரு புது குல்லா வைச்சிருக்கிரேன். இந்தக் குல்லாயே இல்லாதிருந்தா நல்லது. அத்தெப் போட்டுகிறத்துக்கு எனக்கு இஷ்டமே யில்லெ. எந்நேரம் போட்டுக்கினு இருந்தா தலெ நோவுது 

பெ. இல்லாமலிருந்தால், மழை பெய்தால் என்ன செய்வாய்.

பி. ரொம்ப மழை பேஞ்சா, அது நிக்கர வரைக்கும், ஒரு செடியிங் கீழே நிக்கிரேன். 

பெ. வீட்டுக்குப் போகிற வேளை வருவதற்குள் உனக்குப் பசியெடுத்தால் என்ன செய்வாய்? 

பி. வயலிலே இருக்கிற முள்ளங்கியெ பச்சையாத் திண்ணிடுவேன்.

பெ. முள்ளாங்கி அகப்படாவிட்டால்? 

பி. பட்டினியா யிருக்கிறது. வேலெ செய்துக்கினு இருந்தால் பசியெல்லாம் தெரியாதுங்க. 

பெ. இந்த வெயில் காலத்தில் உனக்கு தாக மெடுக்கிறதில்லையா? 

பி. எடுக்குது; சாப்பிட அந்த குளத்திலே நல்ல தண்ணி இருக்குதே. 

பெ.தம்பி, நீ நல்ல புத்திசாலி. 

பி. அப்படியின்னா? 

பெ.நீ புத்திசாலி என்று சொன்னேன். அந்த பதத்திற்கு உனக்கு இப்பொழுது அர்த்தம் தெரியாது? 

பி. அது ஒண்ணும் தப்பில்லைங்களே? 

பெ. [சிரித்துக்கொண்டே] தப்பு ஒன்றுமேயில்லை! – தம்பி,ஏதாவது வேண்டுமென்று உன் மனதில் இச்சையைக் காணோம். ஆகவே உனக்குப் பணத்தைக்கொடுத்து இச்சையை உண்டுபண்ண எனக்கிஷ்டமில்லை – உம் நீ பள்ளிக்கூடம் போகிறதில்லையா? 

பி. இல்லைங்க, இந்த தை மாசம் அறப்பு அறத்தவுடனே என்னெ பள்ளிக் கூடத்துக்கு அனுப்பரதாவ எங்க நாயின சொல்ராங்க. 

பெ. அப்பொழுது உனக்கு புஸ்தகங்கள் வேண்டாமா? 

பி . ஆமாம். பள்ளிக்கூடத்துக்குப்போர் பசங்கள்ளாம் அரிச்சுவடி வாய்ப்பாடு கணக்கு, அல்லாம் வைச்சிக்கினு இருக்கராங்க. 

பெ.. ஆனால் சரி.-நீ, “இருக்கிறதே போதும்,” என்று இருக்கும் நல்ல பையன்! அதற்காக அந்த இரண்டு புஸ்தகங்களையும் உனக்கு நான் வாங்கித் தருகிறேன் என்று சொன்னதாக உன் நாயனாவிடம் சொல் – போ தம்பி. உன் ஆடுகளை மேய்க்கப்போ. 

பி. நான் வர்ரேனுங்க. 

[புன்சிரிப்புடன் கும்பிடுகிறான்]

பெ. புத்திசாலி! போய் வா அப்பா.  (போகிறான்.) 

காட்சி முடிகிறது. 

நாடகம் முற்றியது.

ஒன்பது குட்டி நாடகங்கள், முதற்பதிப்பு: 1956, நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ. பி. எல் அவர்களால் இயற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *