வெறுப்பும் விருப்பும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள் நாடகம்
கதைப்பதிவு: July 22, 2026
பார்வையிட்டோர்: 82 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாடக பாத்திரங்கள்:
ராமபத்திரன் – பாலபரதன் 

முதற் காட்சி

இடம் – ஓர் நாட்டுப்புரத்து வீதி. காலம் – மாலை 

ராமபத்திரனும் பாலபரதனும் வருகிறார்கள். 

பா. இந்த மிட்டா யார் வசத்தில் இருக்கிறது இப்பொழுது? 

ரா. குணாலயர் என்பவர் வசம். 

பா. உங்கள் மிட்டாவுக்குப் பக்கத்து மிட்டாவல்லவா அது? நீங்கள் இருவரும் சமாதானமாய் வாழ்கிறீர்களா? 

ரா. அதுதான் கிடையாது. இங்கு எங்கள் நடுவில் வந்து எங்கள் எல்லோரையும் கெடுப்பதைவிட்டு, நூறு மைலுக்கு அப்பால் அவர் வாழ்ந்து கொண்டிருந்தால் நலமாயிருக்கும். 

பா. அதைக் கேட்க எனக்கு வருத்தமாயிருக்கிறது – என்ன அவர் மீது குறை கூறுகிறீர்? 

ரா. ஒரு விஷயத்திலல்ல, எல்லா விஷயத்திலும் தான்! எல்லா விஷயத்திலும் எங்களிருவருக்கும் சச்சரவுதான். தேசீய விஷயத்தில் அவர் ஒரு கட்சியைச் சார்ந்தவர், நான் ஒரு கட்சியைச் சார்ந்தவன். இது ஒன்றே போதும் நாங்கள் இருவரும் ஒற்றுமையாயிராமல் எப்பொழுதும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பதற்கு. 

பா. அப்படி உறுதியாய் நான் எண்ணுவதற்கில்லை – இன்னு மென்ன? 

ரா. இந்த பக்ஷி மிருகங்கள் முதலியவைகளைப் பாதுகாக்க நாங்கள் ஒரு சங்கம் ஏற்படுத்தினால், அதில் அவர் சேர மாட்டேன் என்றார். இந்த ஊரிலுள்ள எந்தச் சபையிலும் அவர் அங்கத்தினராகவில்லை. 

பா. அவரைக் கேட்டீர்களோ சேரும்படி? 

ரா. நேராக யாராவது கேட்டார்களோ என்னவோ தெரியாது. அவராக சேர்ந்திருக்கக் கூடாதா என்ன- மனமிருந்தால்? அவர் குணமே ஒரு மாதிரி என்று நினைக்கிறேன், தனக்குத் தானாக இருக்கிறார்; நான்கு பெயருடன் பேசுவதில்லை. அன்றியும் பரமலோபி யென்று நினைக்கி றேன். 

பா. அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது? 

ரா. பணம் அதிகமாயிருந்தும் அதற்குத் தக்கபடி வாழ்வைக் காணோம். அநேக விஷயங்களில் மிகவும் சிக்கனமாயிருக்கிறார் கேள்விப்பட்டேன். 

பா. ஒரு வேளை தன் பணத்தை எல்லாம் தர்மம் செய்கிறாரோ என்னவோ? 

ரா. அவராவது, தர்மம் செய்வதாவது! அதொன்றுமில்லை என்று கட்டாயமாய்ச் சொல்வேன். போன வாரம் ஒரு குடியானவன் வீடு தீப்பற்றி,அவன் சொத்தெல்லாம் அழிந்தபோது, அவன் எங்களிடமெல்லாம் ஏதோ தர்மம் வாங்கிக்கொண்டு, அந்த ஜாப்தாவை அவரிடம் கொண்டு போய்க் காட்டினான். அவர் அவனுக்குக் கொடுத்ததெல்லாம் “இதைப்பற்றி யோசிக்கிறேன்” என்ற பதில் தான். 

பா. அப்புறம் யோசித்தாவது ஏதாவது கொடுத்தாரா? 

ரா. அது எனக்குத் தெரியாது. ஏதோ இந்த சாக்கைச் சொல்லி அவனை அனுப்பிவிட்டார் என்பது என் அபிப்பிராயம். அப்புறம், இவருக்கு முன் இருந்த மிட்டாதார் தன் தோட்டத்தில் அநேக புஷ்பச் செடிகளை வைத்திருந்தார். யாராவது பூஜைக்கு புஷ்பம் வேண்டுமென்றால் சும்மா கொடுப்பார். இவர் வந்த பிறகு அவைகளை யெல்லாம் எடுத்துவிட்டு மருந்துச் செடிகளை வைத்திருக்கிறார். 

பா. அது அவ்வளவாகத் தப்பாகத் தோன்றவில்லை எனக்கு. ஒரு வேளை அந்த மூலிகைகளை எல்லாம் வியாதிக்காரர்கள் வேண்டினால் கொடுத்து வருகிறாரோ என்னவோ? அதில் என்ன தவறு? 

ரா. அவர் தோட்டத்தை எப்படியாவது வைத்துக்கொள்ளட்டும், ஆயினும் ஜனங்களெல்லாம் அவரை மதிக்கச் செய்வதற்கு இது வழியல்ல. என்வரைக்கும் அவர் என் மீது துவேஷம் வைத்திருக்கிறார் என்று எண்ண வேண்டியவனாய் இருக்கிறேன். 

பா. அப்படியிருந்தால் அது மிகவும் தவறுதான் – நீர் இவ்வுலகில் ஒருவருக்கும் கெடுதி நினைப்பவர் அல்லவே; அப்படி யிருக்கும்போது உம்மீது அவர் துவேஷம் பாராட்டுவானேன்? – ஆயினும் உம்மீது அவர் துவேஷித்திருப்பதை எப்படி அறிந்தீர்கள்? 

ரா. பல விஷயங்களில் அவருடைய குதிரைகளில் ஒன்றை விற்பதாகத் தெரிந்தது; அதை நான் அறிந்து, அதற்கு ஒரு விலை கொடுத்து வாங்குவதாகக் கோரினவுடன் அதை வேறு நாட்டிற்கு அனுப்பிவிட்டார். என் பெண்சாதிக்கு புஷ்பச் செடிகளை வளர்ப்பதில் மிகவும் பிரியம். அவள் ஒரு முறை அவர் தோட்டத்தின் புறமாகவண்டியில் சென்ற போது, ஏதோ ஒரு புதுமாதிரியான புஷ்பச் செடியை அவர் தோட்டத்தில் கண்டு, அதில் ஓர் கிளையை வாங்கிப் பதிபோட விரும்பினாள். இந்த விருப்பத்தை என் தோட்டக்காரன் அந்த குணாலயர் வீட்டுத் தோட்டக்காரனுக்குத் தெரிவிக்க – இதைத் தெரிவித்தது எனக்கு இஷ்டமே இல்லை – அவர் தோட்டக்காரன் தன் எஜமானனுக்கு இதைச் சொன்னானாம். இந்தப் பெரிய மனிதர் ஒரு சிறிய கிளையைக் கொடுக்க இஷ்ட மில்லாமல், அந்தச் செடியை தொடவும் கூடாதென்று கட்டளையிட்டாராம்! சுருக்கிச் சொல்லுமிடத்து, அந்தஸ்துடைய மனிதர்களுக்கு இருக்க வேண்டிய குணம் அவரிடம் ஒன்றுமில்லை. அவர் எப்படியாவது இவ்விடம் விட்டுப்போனால் போதும் எனக்கு! 

பா. வாஸ்தவமாய் நமக்கு அயலிலுள்ள மனிதன் கெட்டவனா யிருப்பதைப்போல் அவ்வளவு சங்கடமான சந்தர்ப்பம் வேறொன்றும் கிடையாது. உங்களுக்கு அக்கதி வாய்த்ததே என்று எனக்கு வருத்தமாயிருக்கிறது இதோ யாரோ ஒரு மனிதன் உங்களுடன் பேச வருகிறான் போலிருக்கிறது. 

ஒரு குடியானவன் வருகிறான். 

ரா. ஓ! அவன் தான் வீடுபற்றி எரிந்த மனிதன்! வாடாப்பா, ரங்கா, எப்படி யிருக்கிறாய்? அந்த தர்ம ஜாப்தாவில் என்ன கிடைத்தது? 

ர. எல்லாம் உங்க தயவு – என் நஷ்டமெல்லாம் சரியாப் போச்சுதுங்க. 

ரா. மிகவும் சந்தோசம். நான் கடைசியில் அந்த ஜாப்தாவைப் பார்த்தபோது உனக்கு வேண்டிய பணத்தில் பாதிகூடச் சேரவில்லையே. 

ர. ஆமாங்க! அப்போ நீங்க மிட்டாதார் கொணாலயர் என்னா கொடுத்தாரிண்ணு கேட்டது ஞாபகம் இருக்குதுங்களா? நானும், அப்பறம் யோசனெ பண்ணிச் சொல்றேண்ணு சொன்னாரிண்ணு சொன்னேனா. அப்பாலே, மறுநாளு எங்க சேரிக்கு வந்து, என்னைப் பத்தியும் எனக்கு வந்த நஷ்டத்தைப் பத்தியும் விசாரணெ பண்ணுதாவ சொன்னாருங்க! கொஞ்ச நாள் பொறுத்து நான் அவரெ பாக்கப் போனப்போ, “நான் விசாரணெ பண்ணத்திலே நீ யோக்கியனிண்ணு தெரியுது, அக்கம் பக்கத்திலே இருந்தவங்களெல்லாம் ஒனக்காவ சிபார்சு பண்ணாங்க அத்தொட்டு இன்னும் மத்தவங்க கிட்ட நீ கேட்க வேண்டியதில்லே.” இண்ணு சொல்லி 50 ரூபாய் கொடுத்தாருங்க உடனே புண்ணியவான்! சாமி அவரை ரச்சிகணும்! 

ரா. ஐம்பது ரூபாயா! 

ர. ஆமாங்க! என் குடிசையெல்லாம் மறுபடியும் சரியா கட்டிக்கினே. இப்போ ஒரு வண்டிமாடு வாங்கப் போறேன். 

ரா. நல்ல தர்மம்! இப்படிச் செய்வாரென்று நினைக்கவில்லை, ரங்கா, உனக்கு நல்லகாலம் வந்ததைப் பார்க்க எனக்கு சந்தோஷம்! உனக்கு செய்த உதவிக்காக அவருக்கு நீ மிகவும் நன்றி பாராட்டவேண்டும். 

ர. ஆமாங்க, அவருக்கும் எனக்கு உதவி செய்த எல்லாருக்கும்கூட! சாமி உங்களையெல்லாம் காப்பாத்தணும், நான் வர்ரேனுங்க. [போகிறான்] 

பா. மற்ற எந்தக் கெட்டகுணம் இருந்தாலும் அவரிடம் லோபத்துவம் இல்லை. 

ரா. இல்லை, இதைப்பற்றி நான் எண்ணியது தவறுதான். அதற்காக நான் வருத்தப்படுகிறேன். ஆயினும் இப்படிப்பட்ட தயாள குணமுடைய பெரிய மனிதர்கள் பெரிய விஷயங்களில் உதவுவதுபோல், அற்ப விஷயங்களிலும் தயாள குணமுடையவராக இருந்து, மற்றவர்களிடம் ஹிதமான நடவடிக்கை உடையவர்களாக இராதது, வருத்தப் படத்தக்க விஷயம். 

பா. உண்மை வாஸ்தவமாய் அப்படி யிருந்தால் வருத்தப் படவேண்டிய விஷயம்தான். 

ரா. ஒரு குதிரைக்காகவோ அற்பச் செடிக்காகவோ கொஞ்சம் மரியாதை காட்டினால் என்னக் கெட்டுப்போகிறது? 

பா. இதோ பூச்செடிகளைப்பற்றிப் பேசும்போது உம்முடைய தோட்டக்காரன் பெரிய பூஞ்செடியை ஒரு தொட்டியில் கொண்டு வருகிறான். 

தோட்டக்காரன் வருகிறான். 

ரா. அடே, சாமி! என்னடாது தொட்டியில்? 

சா. பூஞ்செடிங்க, மிட்டாதாரு குணாலயர் கொடுத்தாரு, அம்மா கிட்டக் கொடுக்கச் சொல்லி. 

ரா. உனக்கு எப்படிக் கிடைத்தது? 

சா. அவர் தோட்டக்காரன் இத்தெக் கொடுக்கிறத்துக்காவ தங்கிட்ட என்னே வரச் சொன்னான். முன்னேயே இதெ நமக்குக் கொடுத்திருப்பாங்களாம். கொஞ்சநாள் பொறுத்துதான், பூமியிலேயிருந்து பேத்துக் கொடுக்ணும்ணு சொல்லி கொஞ்சம் நாளாச்சாம். 

ரா. இன்னும் இந்த மாதிரி செடிகள் அநேகம் அவரிடம் இருக்கிறதல்லவா? 

சா. இல்லைங்க, ஒரு சின்ன நாத்துத் தான் இருந்துச்சி அவரு கிட்ட, அம்மா, இந்த செடி வோணும்ணு இஷ்டப்பட்டாங்கண்ணு தெரிஞ்சி, அவுங்களுக்கு இப்படிக் கொடுக்கணுமிண்ணு தீர்மானிச்சாங்களாம். நல்ல செடிங்க இது. இத்தெப்போலே வேறே ஆப்படறது கஷ்டம். 

ரா. நல்லது நீ போ. 

[தோட்டக்காரன் போகிறான்]

பா. அவரிடம் மரியாதை மட்டாகக் காணோமே. 

ரா. மிகவும் மரியாதை பாராட்டியிருக்கிறார். இதை நான் மறுக்க முடியாது; இதற்காக வந்தனம் செலுத்தவேண்டும். ஒருவேளை குதிரையை எனக்கு விற்கமாட்டே னென்பதற்காக இதையாவது செய்யவேண்டுமென்று தோன்றினாற்போல் இருக்கிறது 

பா. இருக்கலாம் – ஆகையால் ஏதோ நல்ல சுபாவமுடையவராய்த் தான் தோன்றுகிறது. 

ரா. ஆமாம் – ஆ! இதோ அவர் குதிரைக்காரன் வருகிறான். சந்தைக்குப் போய் திரும்பி வருகிறான் போலிருக்கிறது. அவனிடம் பேசிப் பார்க்கிறேன். 

குதிரைக்காரன் வருகிறான். 

தாமா, சந்தையிலே ஏதாவது குதிரை விற்கப்போயிருந்தாயா? 

தா. ஆமாங்க. 

ரா. நான் கேட்ட குதிரையை விற்றுவிட்டாயா என்ன? 

தா. ஆமாங்க சாமி. 

ரா. நான் கேட்டதற்கு மேலே எவ்வளவு கிடைத்தது? அதை எனக்கு விற்றிருக்கக்கூடாதா? அந்த விலையை நான் கொடுத்திருக்க மாட்டேனா? 

தா. இல்லிங்க, அந்த குதிரெ நீங்க சவாரி பண்ண லாயக்கில்லிங்க. இந்த சமாசாரம் எங்க ஐயாவுக்கு நல்லா தெரியும், அது ஒரு பெரிய சனிபிடிச்ச களுதைங்க! அத்தெ தேய்ச்சிக்கினு இருந்த மாலிஸை ரெண்டு தரம் கொல்லப் பாத்துதுங்க, அத்தொட்டு பாரம் ஏதாவது இழுக்க யாருக்காவது வந்த வெலைக்கி வித்துப்பூடிண்ணு எஜமான் சொன்னாருங்க. 

ரா. இதற்காகத் தானா குதிரையை எனக்கு விற்க மாட்டேனென்றார் உங்க எஜமான்? 

தா. ஆமாங்க. 

ரா. இந்த நன்றிக்காக நான் அவரை மிகவும் பாராட்டுகிறேன். 

[தாமன் போகிறான்.]

அந்தமட்டும் எனக்கு நல்ல உதவி செய்தார். 

பா. உதவி மாத்திரமல்ல, உங்கள் உயிரையும் காப்பாற்றினார்.

ரா.ஆய், இனிமேல் அவசரப்பட்டு மற்றவர்கள் குணத்தைப் பற்றி தீர்மானம் செய்யலாகாது என்னும் புத்திமதியைக் கற்றேன், இங்கே பாருங்கள், நம்முடைய நாட்டிலே இந்தக் கட்சிபேதம் என்பது ஒன்றுவந்து நல்ல சுபாவமுடைய மனிதர்களை அதன் வலைக்குட் சிக்கச் செய்தது; அதனின்றும் விடுவித்துக் கொள்வது கஷ்டமாயிருக்கிறது. நாம் ஒருவருக்கொருவர் பாராட்டவேண்டிய பக்ஷத்தையும் பாழாக்குகிறது. அதோ, இந்தக் கெட்ட குணத்தினால் கஷ்டதிசை அடைந்த ஒருவர் வருகிறார் பாருங்கள். 

பா. யாரவர்? 

ரா. பக்கத்து ஊர் சந்தையண்டை ஓர் பள்ளிக்கூடம் வைத்து வாழ்ந்து கொண்டிருந்த எளிய உபாத்தியாயர். சென்ற கிராமத் தேர்தலில் எங்கள் பக்கம் உழைத்ததால் அவரது பள்ளிக்கூடப் பிள்ளைகளை யெல்லாம் இழந்தார். அவருக்கு ஏதாவது உதவிபுரிய வேண்டு மென்று எனக்கு மிகவும் ஆவலா யிருக்கிறது; நிரம்ப யோக்கியர். கொஞ்சம் வாய்மாத்திரம் நிகளம். 

உபாத்தியாயர் வருகிறார். 

வாரும், வாரும், க்ஷேமந்தானா? 

உ. நமஸ்காரம், நிரம்பக் கஷ்டம் அனுபவித்தேன். ஆயினும் அவைகளெல்லாம் சீக்கிரம் தொலையும் காலம் வந்தது. 

ரா. சந்தோஷம் – அதெப்படி? 

உ. தோகையூர் பள்ளிக்கூட உபாத்தியாயர் வேலை காலியா யிருக்கிறதாம். அது எனக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன். 

ரா. அப்படியா! அப்பள்ளிக்கூடம் நமது எதிர் கட்சியைச் சேர்ந்ததல்லவா? 

உ. அப்படித்தான் ஐயா! இருந்தாலும் குணாலயர் அந்த வேலைக்கு என்னைச் சிபார்சு செய்திருக்கிறார். அதனால் அந்த வேலை எனக்குக் கிடைக்குமென்று நினைக்கிறேன். 

ரா. குணாலயரா? என்ன ஆச்சரியம்! 

உ. எனக்கும் ஆச்சர்யந்தான்! அவர் ஒருநாள் என்னைத் தானாக வரவழைத்தார். ஏதோ பேதமான அபிப்பிராயம் கொண்டதற்காக ஒருவன் ஜீவனத்தை இழப்பது மிகவும் தவறென்றும், அதற்காகத்தான் வருத்தப்படுவதாயும், வேறு ஒரு இடத்தில் எனக்கு ஏதாவது வேலை பார்த்துக் கொடுப்பதாகவும் சொன்னார். பிறகு தோகையூரில் உபாத்தியாயர் வேலை காலியாயிருப்பதாகக் கூறி, என்னை அந்த ஊர் தர்ம பரிபாலன சபையாருக்கும் சிபார்சு செய்வதாகச் சொன்னார். 

ரா. உம்முடன் சாதாரணமாகப் பேசினாரா அவர்? 

உ. மிகவும் அன்யோன்யமாகப் பேசினார். நம்முடைய நாட்டின் கட்சி பேதங்களைப்பற்றி நெடுநாழி பேசினோம். இந்தக் கட்சி பேதத்தால் நல்ல உத்தமர்கள் பிரிக்கப் பட்டிருக்கிறார்களே என்று வருத்தப்பட்டார். அச்சமயம் உங்கள் பெயரை எடுத்துப் பேசினேன். அவர் உங்களை நேரில் பரிசியம் இல்லை என்றும், ஆயினும் உங்கள் நற்குணத்திற்காக மிகவும் கௌரவம் பாராட்டுவதாகவும், ஏதாவது சமயம் பார்த்தால் உங்களுடன் அறிமுகம் ஆகி சிநேகிதராக வேண்டுமென்று விரும்புவதாகவும் கூறினார். 

ரா. சரி – நீங்கள் போய் வாருங்கள். 

[உபாத்தியாயர் போகிறார்.] 

ரா. (கொஞ்சம் மௌனமாயிருந்து) வாருங்களய்யா, நாம் போவோம். 

பா. எங்கே? 

ரா. உங்களுக்கு இதைப்பற்றிச் சந்தேகமா? – நேராக குணாலயர் வீட்டுக்கு! இவ்வளவு தூரம் கேட்டறிந்த பின், நான் இதுவரை அவர்மீது தவறாக அபிப்பிராயப்பட்டதற்காக அவர் மன்னிப்பைக் கேட்காமல் இருக்கலாமா?

[இருவரும் போகிறார்கள்.] 

காட்சி முடிகிறது. 

நாடகம் முற்றிற்று.

– ஒன்பது குட்டி நாடகங்கள், முதற்பதிப்பு: 1956, நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ. பி. எல் அவர்களால் இயற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *