புது நண்பர்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 21, 2025
பார்வையிட்டோர்: 4,152 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. கட்டுக் கதைகளும் அல்ல. – சுதாராஜ்)

அல்போன்சோவின் அறிமுகம் தற்செயலாகத்தான் எனக்குக் கிடைத்தது. அவன் எங்கள் கம்பனியில் வேலை செய்யும் ஆள் அல்ல. 

இத்தாலியில் நாப்போலி எனும் இடத்தில் எங்களது கம்பனி புதிதாக ஒரு புறஜெக்டை ஆரம்பித்தது. இங்கு என்னை மாற்றப்பட்டபோது எனது பதவியும் தொழிற்தல முகாமையாளர் தரத்துக்கு உயர்ந்திருந்தது. 

புதிய இடமாதலால் வேலை நேரத்தின் பின் ஒரு சில நண்பர்களுடன் சேர்ந்து அண்மையிலுள்ள வீதிகள் முடக்குகள் எல்லாம் நடந்து திரிவேன். புதிய இடத்தின் பழக்க வழக்கங்களையும் புதிய முகங்களையும் அறிந்து கொள்ளும் ஆர்வம்தான் காரணம். 

ஒரு மாலை நேரம். 

இலங்கையைச் சேர்ந்த நண்பரொருவருடன் வீதியில் நடந்து கொண்டிருந்தேன். குறுக்கும் நெடுக்கும் நடக்கும் மனிதர்கள்… பாதையோர வியாபாரங்கள்… பளிங்கு போன்ற கட்டடங்கள்… வீதியிலோடும் புத்தம் புதிய மோட்டார் வாகனங்கள்… மஞ்சள் நிறத்தில் நவீனப்படுத்தப்பட்ட டிராம் வண்டிகள்… போன்ற எல்லாமே மனதைக் கவர்ந்தன. மேலே பொருத்தப்பட்டுள்ள மின் வயர்களில் கையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, அதன் விசையில் தார் ரோட்டுக்களில் பொருத்தப்பட்டுள்ள தண்டவாளங்களில் ஓடும் டிராம் வண்டிகள் நல்ல மனித சேவை இயந்திரங்கள். நகரத்தின் சன நெருக்கடியைக் குறைக்கும் பணியை சத்தமின்றி, புகையுமின்றிச் செய்கின்றன. அமைதியாக ஊர்ந்து வந்து, மெல்லக் கதவைத் திறந்து சனங்களை ஏற்றிச் செல்லும் காட்சிகள் நின்று பார்க்க வைத்தன. 

அந்த மாலை நேரம்தான். 

சூரிய ஒளி அவளது முகத்திற் பட்டுத் தெறித்துப் பிரகாசமூட்டியது. ஒரு கடை வாசலில் நின்று தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்களிற் தென்பட்ட மாத்திரத்திலேயே அவளது அழகும், நின்று பார்க்க வைத்தது. சில காட்சிகளும் சிலரது தோற்றங்களும் இப்படித்தான். அன்றாடம் எத்தனையோ பேரைக் காண்கிறோம். சிலர் இப்படி நின்று பார்க்க வைத்து விடுகிறார்கள். தோள்களிற் தவழும் கரும் கருமையான கூந்தலுடன் அந்த வெள்ளை அழகி ஒரு தேவதை போலத் தோன்றினாள். (இந்த வயசுக்கு எந்தப் பொம்பிளையைப் பார்த்தாலும் இப்பிடித்தான் தெரியும் என என்னுடன் வந்த நண்பர் கிண்டலடித்தார். அவருக்கு வயது சற்று அதிகம்தான். அல்லது உள்ளூர ரசித்தாரோ என்பது தெரியாது. ஏனெனில் என்னோடு அவரும் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்) 

“ஹலோ…!” என்றாள். (எங்களைப் பார்த்துத்தான்) நண்பர் திடுக்கிட்டுப் போனார். 

“ஹலோ…!” என்றேன். 

“என்ன பார்க்கிறீர்கள்?” 

நண்பர் தடுமாற்றம் அடைந்தார். திரும்ப ஓடவும் ஆயத்தம். நான் உஷாரடைந்தேன். அவள் நின்ற கடை வாசலில் ‘சலூன்’ என பெரிய எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. 

“முடிவெட்ட வேண்டும்…” தலைமுடியைக் கோதினேன். (எனக்கு முடி வளர்ந்து விட்டதாம்… அந்த நோக்கத்திற்தான் பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறேனாம்…) 

“அப்படியானால் உள்ளே வரலாமே…? ஏன் வெளியே நிற்கிறீர்கள்…?” 

அவளது மழலை ஆங்கிலம் இனிய மொழியாயிருந்தது. ஆச்சரியமும் தந்தது. பொதுவாக இங்கு யாரும் ஆங்கிலம் பேசுவதில்லை. ஆங்கிலத்தை விசேடமாகக் கற்றுக்கொண்டவர்களைத் தவிர, ஏனையோருக்கு அது என்ன சாமான் என்று விளங்கிக் கொள்ளவே விருப்பம் இல்லை போலிருந்தது. உலக யுத்தகாலங்களில் ஏற்பட்ட மோதல்களும் இதற்குக் காரணமாயிருக்கலாம். இதைவிட, அவர்கள் தங்கள் பாஷையை மிக விரும்பினார்கள் என்று சொல்லவேண்டும். 

அவளுக்குக் கிட்ட நடந்தோம். 

“நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்..?” 

சொன்னோம். 

“நீங்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று பார்த்ததுமே தெரிந்துவிட்டது. அதனாற்தான் உங்களுடன் பேச விருப்பப்பட்டேன். எனக்கு ஆங்கிலத்தில் பேச விருப்பம்.” 

அதைக் கேட்டதும் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம்! ஒன்று – அவளுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கிறது. மற்றது – மனம் விட்டுப் பேசவும் விரும்புகிறாளாம்! 

வேறு வேறு நாடுகளுக்குச் செல்லும் போது பாஷைப் பிரச்சனை தலைமுடிவெட்டும் விடயத்தில் தலையிடி கொடுத்திருக்கிறது. பாஷை தெரியாதவர்களிடம் தலையைக் கொடுத்துவிட்டு அமர்ந்தால், அவர் தன் கை போன போக்கில் வெட்டித் தள்ளிவிடுவார். “நோ… ஷோர்ட் கட்… நோ… ஷோர்ட் கட்…!” என்று கத்தினாலும், அவர் “யேஸ்… யேஸ்…” எனத் தலையை ஆட்டிக் கொண்டே எனது தலையிலிருந்து இறங்கமாட்டார். அதனால் முடி திருத்துவதற்கு ஆங்கிலம் தெரிந்த யாராவது கிடைக்கமாட்டார்களா எனத் தேடுவதுண்டு. இங்கு தேடாமலே கிடைத்திருக்கிறாள். 

மற்றது – அந்த அழகியின் கை பட்டு முடி வெட்டப் போகும் வாய்ப்பு. என்னுடன் வந்திருந்த (வயதான) நண்பர் பொறாமையுடன் என்னைப் பார்த்தார். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவர் முடி வெட்டியிருந்தார். அதுபற்றிய சோகத்தை அவரது முகத்திற் காணக்கூடியதாயிருந்தது. 

அவள் உள்ளே எங்களை அழைத்துச் சென்றாள். 

“அல்போன்சோ.. இவர்கள் சிறீலங்காவைச் சேர்ந்தவர்கள்… முடி வெட்ட வேண்டுமாம்.” 

யாருக்கோ முடி வெட்டிக் கொண்டிருந்த அல்போன்சோ திரும்பிப் பார்த்தான். “அமருங்கள்…!” 

பின்னர் தனது வேலையை முடித்துக் கொண்டு வந்தான். 

தானும் வலன்ரீனோவும் (அடி, அதுதானா உன் பெயர்? – ‘அடி நீதானா அந்தக் குயில்?’ எனும் ஸ்டைலில்) எகிப்து நாட்டுக்குச் சென்று முடிதிருத்தும் கலையில் டிப்ளோமா பட்டம் பெற்று வந்திருப்பதாகக் கூறினான். இருவருமாகச் சேர்ந்து இந்த சலூனை ஆரம்பித்திருந்தார்களாம். விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் அதற்காகத்தான் இருவருமாகச் சேர்ந்து கடுமையாக உழைப்பதாகவும் கூறினான். 

“நீங்கள் எங்களுடைய திருமணத்துக்கு வரவேண்டும்…” வலன்ரீனோ அப்போதே அழைப்பு விடுத்தாள். 

“ஆங்கிலத்திற் பேசி எங்களது ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள ஆசை… ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் இங்கு குறைவு. நீங்கள் வெளிநாட்டுக்காரர்களாயிருக்கிறீர்கள்… அடிக்கடி இங்கு வந்து போங்கள்…” 

அவர்களது ஆங்கிலப் பரிச்சயம் எனக்கும் இத்தாலியப் பாஷையைப் படித்துக்கொள்ள உதவியது. அவர்களது குடும்ப நண்பனாகியதற்கு அது மட்டும் காரணமல்ல. வலன்ரீனோவின் அழகும்தான். 

அதை ஒரு நாள் அல்போன்சோவிடம் கூறினேன். 

“அல்போன்சோ… நீ அதிஷ்டக்காரன். இவ்வளவு அழகியை உனது மனைவியாகப் பெறப்போகிறாய். உண்மையைச் சொல்வதானால் அவளது அழகுதான் என்னை இங்கு இழுத்து வந்தது”. 

“உண்மையாகவா…!” அல்போன்சோ மகிழ்ச்சியடைந்தான். 

“எனக்கென்றால் அப்படித் தெரியவில்லை…” என வலன்ரீனோவைச் சீண்டினான். “அவள் ஒரு சிறந்த பெண். அதைத்தான் நான் விரும்புகிறேன்…” என் கண் முன்னாலேயே வல்ன்ரீனோவை அணைத்துக் கொண்டான். 

அவர்கள் ஒருவருக்கொருவர் மிகப் புரிந்துணர்வுடன் பழகும் பண்பு எங்களை இன்னும் நெருக்கமான நண்பர்களாக்கியது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் போய் வருவேன். அவர்களும் எனது இருப்பிடத்திற்கு வந்து போவார்கள். எனது அறைக்கு வந்திருந்தபோது ஒருநாள் வலன்ரீனோவின் இயல்பான தோற்றத்தைக் கமராவில் பிடித்துக்கொண்டேன். அந்த போட்டோ அழகாக வந்திருந்தது. அடுத்த முறை போனபோது அதை அல்போன்சோவிடம் கொடுத்தேன். 

“இதை எங்கு பிடித்தாய்…? எப்போது பிடித்தாய்…?” 

அல்போன்சோவின் கண்கள் பிரகாசித்தன. “உண்மையாகவே வலன்ரீனோ நல்ல அழகிதான். இந்த போட்டோவைப் பார்த்த பின்புதான் தெரிகிறது. எப்போதுமே வலன்ரீனோவைச் சீண்டுவது அவனது விளையாட்டாய் இருந்தது. பெண்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாயினும், அவர்களது அழகைப் பற்றிக் கூறியதும் நாணம் வந்து விடுகிறது. அதை வலன்ரீனோவின் கண்களும் காட்டின. 

இனித்தான் இந்தக் கதையின் உச்சக்கட்டம் வருகிறது. 

அப்போது அங்கு நான் முடி திருத்தப் போயிருந்தேன். எனது முறை வரும்வரை அல்போன்சோ பேசிக்கொண்டே தனது வேலையில் ஈடுபட்டிருந்தான். எங்கள் பேச்சுக்களில் இரண்டு நாடுகளைப் பற்றிய விஷயங்களும் வரும். இத்தாலிய பாசையில் தெரியாத சொற்களையும் நான் கேட்டறிந்து கொள்வேன். அவர்களது பழக்கவழக்கங்களையும் அறிந்துகொள்ளக் கூடியதாயிருக்கும். 

எனக்கு முடிவெட்டிக் கொண்டே இப்படியான பேச்சுக்களில் நாங்கள் லயித்திருக்கும்போது, வெளியே கார் ஹோர்ன் சத்தங்கள் கேட்டன. நேரம் போகப் போக பல வாகனங்கள் சேர்ந்து ஹோர்ன் அடிக்கும் சத்தங்கள் கேட்டன. பலர் சத்தமிட்டுப் பேசுவதும் கேட்டுக் கொண்டிருந்தது. வெளியே போயிருந்த வலன்ரீனோவும் இன்னும் வரவில்லை. அல்போன்சோ இடையிடையே வெளியே எட்டிப் பார்த்தான். வாகனங்கள் தொடர்ச்சியாக ஹோர்ன் அடிக்கும் சத்தங்களும், மனிதர்களின் ஏச்சுப் பேச்சுக்களும் உச்சஸ்தாயியை அடைந்திருந்தது. அல்போன்சோவிடம் கேட்டேன். 

“என்ன விஷயம்?” 

“யாரோ ஒரு மடையன் ரோட் ஓரத்தில் காரை பார்க் பண்ணிவிட்டுப் போய்விட்டான். அது டிராம் வண்டி ஓடும் பாதை. பல வாகனங்கள் வந்து முன்னேயும் போக முடியாமல் பின்னேயும் போக முடியாமல் நிற்கின்றன. வாகனங்களில் இருப்பவர்களும் சத்தம் போடுகிறார்கள்.” 

வெளியே எட்டிப் பார்க்க வேண்டும் போலிருந்தது எனக்கு. எனினும் முடி வெட்டும்வரை பொறுமையாய் இருந்தேன். 

“பாருங்கள் ஒரு முட்டாள் செய்திருக்கும் வேலையை? காரை எங்கே பார்க் பண்ணுவது என்று தெரியாதா…? இதனால் எத்தனை பேருக்கு இடைஞ்சலாய் இருக்கிறது!” சத்தம் போட்டுக் கொண்டே வலன்ரீனோ உள் நுழைந்தாள். வாகன நெருக்கடிகளூடாக மிகத் தூரத்திலிருந்தே அவள் நடந்து வந்திருப்பதை வியர்வைத் துளிகள் காட்டின. (அவள் வந்து சேர்ந்து விட்டது எனக்கு ஒருவித ஆறுதலாயும் இருந்தது. அவளைப் பார்க்காமலே போய்விடுவேனோ என்ற கவலை தீர்ந்து விட்டது.) 

முடி திருத்தும் வேலை முடிந்ததும் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தேன். வாசலில் நின்று ஒரு நோட்டம் விட்டேன். நீண்ட வரிசையில் பல டிராம் வண்டிகள். அதற்கு முன்னே எனது கார். அதைச் சூழப் பல மனிதர்கள். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமான நெருக்கடி வாகனங்கள். அவற்றின் சத்தங்கள். 

(எங்கள் கம்பனியில் அலுவல்களுக்குப் பல வாகனங்கள் இருந்தன. அவை எனது பொறுப்பில் இருந்தன. மாலையில் சகல வாகனங்களின் சாவிகளும் என்னிடம் வந்து விடும். எனது விருப்பப்படி ஏதாவது ஒரு காரை எடுத்துப் போவதுண்டு. இந்த ரெனோல்ட் கார் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வாங்கப்பட்டிருந்தது. அதை ஓட்டும் ஆசையில் கொண்டு வந்திருந்தேன். புதிய கார் என்பதால், அது எனது கார் என அல்போன்சோவுக்கும் தெரிந்திருக்கவில்லை.) 

இப்போது எனது வாகனத்தை அண்மிக்கவே பயமாக இருந்தது. எல்லோரும் சேர்ந்து ஒரே போடாகப் போட்டுவிடுவார்களோ…? எனினும் ஓர் அசாத்தியத் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு காரை நோக்கி நடந்தேன். 

அண்மித்துக் கதவைத் திறந்தேன். கூடி இருந்தவர்கள் தாறுமாறாக ஏசத் தொடங்கினார்கள். எனக்குத்தான் இத்தாலியப் பாஷை சரியாகத் தெரியாதே! அதனால் அவர்களைத் துச்சமாக எண்ணிக் கொண்டு காரை ஸ்டார்ட் செய்தேன். சிலர் எனக்குக் கிட்டவாக வந்தார்கள். கார் கண்ணாடியூடு பின் பக்கம் பார்த்தேன். டிராம் வண்டி ஓட்டுனர் இறங்கி (கோபாவேசமாக) வருவதும் தெரிந்தது. 

அவன் கிட்ட வந்து கதவைத் திறக்குமுன் நான் முந்திக் கொண்டேன். சட்டெனக் கதவைத் திறந்தேன். நான் வெளிப்பட்ட வேகம் அவனைப் பின்வாங்கி நிறுத்தியது. பெரிதாகச் சத்தம் போட்டான். இன்னும் சிலர் சேர்ந்து கொண்டனர். அவனது கை உயர்ந்தது. அடிக்கப் போகிறானோ? ‘தொலைந்தோம்’ என்று தோன்றியது. எனது கையையும் உயர்த்தினேன். அடிப்பதற்கல்ல. தடுப்பதற்கு! 

ஒரு கணம் அல்போன்சாவின் பக்கம் எனது பார்வை சென்றது. வலன்ரீனோ பதற்றத்துடன் இந்தப்பக்கம் கை காட்டினாள். கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்ட அல்போன்சோ எய்த அம்பு போல வந்தான். பின்னே வலன்ரீனோவும் ஒரு குருவியைப் போலப் பறந்து வந்தாள். டிராம் ஓட்டுனரின் கையைப் பிடித்து உரத்து வாக்குவாதிட்டான். (“அவர் எங்களது நாட்டவரல்ல. எங்களது பாஷையும் அவருக்குத் தெரியாது.”) 

டிராம் ட்றைவரின் முகம் மாறியது. கோபம் தணிந்தது போலிருந்தது. பார்வை கனிந்தது. “ஃபிரண்ட்…” எனும் சொல்லைப் பாவித்து எனது கையைப் பிடித்தான். 

“போய் வாருங்கள்…!” 

அல்போன்சோவின் செயலும், டிராம் ட்றைவர் சட்டெனத் தணிந்து கை கொடுத்த பண்பும் மனதைத் தொட்டது. கூடி நின்றவர்கள் சிரிப்பலைகளுடன் கையசைக்க எனது காரை அவ்விடத்திலிருந்து எடுத்துச் சென்றேன்.

– மல்லிகை, 2002.

– மனித தரிசனங்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

சுதாராஜ் விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *