புதிய அலை
(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன், அவள் வீட்டுக்கதவைப் படீரென்று அடித்துச் சாத்தியபடி வெளியேறினான். அவன் முகம் ‘ஜிவு ஜிவு’ என்று சிவந்திருந்தது. ஆத்திரத்தில் அவன் பற்களை நற நற வென்று கடிக்கிறான். அவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டால் கையில் இருக்கும், அல்லது கண்ணில் தட்டுப்படும் எந்தப் பொருளென்றாலும் அது எவ்வளவு விலையுயர்ந்ததென்றாலும் தூக்கி எறிந்து உடைத்துத் தள்ளிவிடுவான் அவனுடைய சுபாவம்! இன்று அவனுக்கு வந்த ஆத்திரத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள், அவனுடைய ஆருயிர்க் காதலி, உயிருக்கு உயிரானவள் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது. சொல்லிவிட்டாள். அதுவும் எவ்வளவு அழுத்தந்திருத்தமாகக் கூறிவிட்டாள். ஆழ்ந்த சிந்தனையின் பின்னர் எடுக்கப்பட்டுள்ள தீர்க்கமான முடிவு, அவளது பதிலில் தொனித்தது. அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. அப்படி அவள் என்னதான் கூறிவிட்டாள். அடிக்கடி கூறுவது போல் வேடிக்கையும் வினோதமுமாகவா கூறிவிட்டாள். அல்ல அல்ல! அவள் முகத்தில் தொணித்த உறுதியைக்கண்டு அவன் அசந்தே விட்டான். அவள் குழந்தையல்ல! பொழுது போக்காய் வாழ்ந்து கொண்டிருக்கும் உல்லாசச் சிட்டல்ல! என்பது அவளது பதிலிலிருந்து தெரிந்தது.
“இங்கே! இங்கே!” என்று அழைத்துக்கொண்டிருந்தவள் அவனைப் பெயர் சொல்லியே அழைத்துவிட்டாளே! அது ஒரு வேதனைதான் அவனுக்கு. ஆனால் அவன் அதைப்பற்றிக் கவலைப்படவேயில்லை, அப்படி அவள் என்னதான் கூறி விட்டாள். “மிஸ்டர் ஜலீல்! என்னை நீங்கள் கல்யாணம் செய்வதாயிருந்தால்… தவறு தவறு! நான் உங்களைக் கல்யாணம் செய்வதாயிருந்தால் ஒரு சல்லிக் காசுகூட சீதனமாய் தரமாட்டேன்! இது என்னுடைய இலட்சியம்! விருப்பமென்றால் ஏற்றுக்கொள்ளலாம். அல்லது என்னைவிட்டு விலகிச் செல்வதைப்பற்றி எனக்கு எந்தவித கவலையுமில்லை! நீங்கள் இதையிட்டு வேதனைப்படாமலிருந்தால் போதும்” சே! என்னமாதிரி முகத்தில் அறைந்துவிட்டாள். வார்த்தையால்! அதைவிடச் செருப்பால் அறைந்திருக்கலாமே, ஏன் அதைச் செய்யவில்லை.
அவனும் அவளும் ஒன்றாகத்தான் படித்தார்கள். மன்னாரிலுள்ள ஒரு பிரபலமான முஸ்லீம் கல்லூரியில், அவன் மேல் வகுப்பு. அவள் கீழ் வகுப்பு. எவ்வாறோ அவர்களது அன்பு மலர்ந்தது. அவன் அவ்வளவு அழகனல்கள் சுமாரானவன்! ஆனால் அவளோ… பனித்துளியில் கும்மென்று மலர்ந்து மணம் பரப்பும் மல்லிகை! பெயர்கூட மல்லிகா தான். அன்பு காதலாகப் பரிணமித்தது. அது பிரிக்கமுடியாத இறுக்கமான பிணைப்பாக மாறிவிட்டது.
படிப்பு முடிந்தது, வழமைபோல நட்பு முறிந்துவிட வில்லை. கல்லூரியுடன் அது ஒரு தொடர்கதையாய் ராகங்கள் மீட்டின. அவனுக்கு உத்தியோகம் தேடிவந்தது. அப்போதும் அவள் படித்துக்கொண்டிருந்தாள். அவளும் எஸ்.எஸ். சி. சித்தியெய்தியதும் ஆசிரியை வேலை அவளை அணைத்துக் கொண்டது. இனியென்ன இருமனம் ஒருமனமாகிவிட்டதே திருமணம்தான்! ஆனால் ஜலீலின் தாய் தந்தையர் ஜலீலுக்குப் பெண் தேடத் தலைப்பட்டனர். அது ஊரின் வழமையும் கூட, பையன் நல்ல உத்தியோகம், புகழ்பூத்த குடும்பமும்கூட. தேடிவரும் திரவியத்திற்குக் குறைவா இருக்கப் போகிறது.
குறைந்தது பத்தாயிரம் ரூபா சீதனம், பெண்ணுக்குப் பத்துப் பவுணில் நகை, தனி வீடு… இப்படிப் பல பல பலாபலன்களை விரும்பினர் ஜலீலின் பெற்றோர். இதைக் கொடுக்கவும் எத்தனையோ பேர் கியூவில் நின்றார்கள். ஜலீலின் பெற்றோர்களுக்கென்ன ஊர் உலகிற்கே தெரியும், ஜலீலும் மல்லிகாவும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராய் நேசிப்பதை. இருந்தாலும் வலியவரும் சீதேவியை உதைத்துத் தள்ளிவிட்டு ஒழுங்கான வீடுவாசல்கூட இல்லாத ஏழைக்குடும்பத்தில் பெண் எடுப்பதா. மேலும் அந்தக் குடும்பத்தில் குமருகளும்கூட.
“அவள் டீச்சரல்லவா'”
டீச்சரா இருந்தால் என்ன! குடும்பம் தரித்திரம் தரித்திரத் தானே! எனவே ஜலீலின் வீட்டில் பலத்த எதிர்ப்புப் புயல் வீசத்தொடங்கியது. ஆனால் ஜலீல் மிகவும் உறுதியாக நின்றான்! மணந்தால் மல்லிகாவையே மணப்பேன். அல்லது பிரமச்சாரியாகவே இருப்பேன் என அழுத்தந்திருத்தமாக அறிவித்து விட்டான்.
பெற்றோருக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. ஜீலீலின் உறுதியை உடைத்தெறிவது என்பது நடக்கக்கூடிய காரியமாகத் தெரியவில்லை! “நாங்கள் என்னப்பா அந்த டீச்சரைக் கல்யாணம் செய்யவேண்டாமென்றா சொல்கிறோம். இப்பவே நாங்க கேட்ட சீதனம் ஆதனத்தை தந்திட்டு இந்த வீட்டுக்கு மருமகளா வரட்டுமே!” என்று ஜலீலுடைய தந்தை கூறினார்.
சீதனம் கூடிவிட்டது என்று ஜலீல் வாதிட்டான்.
“என்னப்பா நீ! ஒனக்காக லட்சம் லட்சமாகக் கொட்டியிருக்கிறோம். அப்படியே அள்ளி அவங்கிட்டக் குடுத்திட முடியுமாப்பா. அவட வாப்பாவை, என்ன வந்து பார்க்கச் சொல்லு”.
மறுநாள் அவளது வாப்பாவும் வந்தார். பலத்த விவாதங்களின் பின்னர் சீதனத் தொகை குறைக்கப்பட்டது. அவர்கள்… பெண்வீட்டார் 5000 ரூபாய் தருவார்களாம். நகையும் ஏழு எட்டு பவுணில் போடுவார்களாம். ஏதோ சிறிய வீடொன்றைக் கட்டித்தருவார்களாம். அவள் டீச்சராக இருப்பதனால் மாதா மாதம் ஏதோ உழைப்பதனால்தான் இந்தச் சலுகை.
அவனுடைய வாப்பா உம்மா சம்மதித்ததே பெரிய கைங்கரியம்!
மகிழ்ச்சிகரமான இதை அவர்களிடம் கூறுவதற்காக மல்லிகா வீட்டுக்குச் செல்லுகிறான் அவன்!
சிரித்த முகத்துடன் மகிழ்ச்சிகரமாக வரவேற்கிறாள் அவள். அவளுடைய அகன்ற பெரிய ஆழமான கண்களையும் சிரிக்கும்போது பளிச்சிடும் வெண்பற்களையும், இற்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாமே. “இனி இவள் சட்டப்படி என் சொத்தாகிவிடுவாள்”.
முழுச் சம்பவங்களையும் கூறுகிறான். அவள் அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்கிறாள். எந்தப்பதிலும் சொல்லவில்லை. அவளுடைய முகம் தொய்ந்து வாடி இருக்கிறது. ஜலீல் துணுக்குறுகிறான். “மல்லிகா மல்லிகா! ஏன் இப்படி இருக்கிறீங்க. இது உங்களுக்குச் சந்தோஷமா இல்லையா… இன்னும் கொறைக்கோணுமா ‘ரேட்’டை”. அவன் உயிரற்ற சிரிப்பொன்றை உதிர்க்கிறாள். அவன் சொன்ன அந்த ‘ரேட்’ என்ற சொல்தான் சிரிப்புக்குக் காரணமாகும்.
என் ஆருயிரக்காதலன், பல வருடங்களாக என்னை உயிருக்குயிராக நேசித்தவருக்கு நான் ‘ரேட்’ கொடுத்து வாங்கவேண்டும். 10000/- 5000/- அதையும் குறைக்கத் தயார்?
மீண்டும் சிரிக்கிறாள், அவனுக்கு எரிச்சல் எரிச்சலாய் வருசிறது. “மல்லிகா என்ன இது” என்று அலுத்துக் கொள்கிறான்.
“உங்களைச் சில கேள்விகள் கேட்கட்டுமா”
அவன் அவளை வியப்போடு பார்க்கிறான்.
“தாராளமாய்க் கேளுங்கள்”
அவள் முகத்தில் உறுதி தொணிக்கிறது. “நீங்களும் நானும் எத்தின வருடங்களாகக் காதலிக்கிறோம்”
அவன் பலத்த யோசனையுடன் பதில் “ஏன்! பாடசாலையில் படிக்கும் கரிலத்திலிருந்தே.”
“அதுதான் எத்தனை வருடம் இருக்கும்”
“ஏழெட்டு வருடம்”
“உண்மையான காதல்தானே”
“இதென்ன விசர் கேள்வி”
“இல்லை என்னையா அல்லது என் பணப் பெட்டியையா என்று யோசித்தேன்…”
“மல்லிகா” அவன் சீறினான். ”என்னை அவ்வளவு கேவலமாக நினைத்துக் கொண்டாய்! இவ்வளவு வருடங்கள் பழகியும் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லையா”.
“அதுதான் நானும் ஆச்சரியப்படுகிறேன். இவ்வளவு வருடங்கள் பழகியும் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லையே உங்களால்'”
“நீங்கள் ஒரு முற்போக்குவாதி தானே!”
“அதிலென்ன சந்தேகம்”
”அப்படியென்றால் சீதனம். ஆதனம்”
“அதெல்லாம் ஊர் வழமைக்கு”
“என் பிடிவாதம் உங்களுக்குத் தெரியும்தானே”
“யோசித்தார்கள், உங்க வாப்பவே சம்மதிச்சுட்டாங்க.”
“எங்கட்ட பணம் இல்லை”
”நான் கொஞ்சம் பணம் குடுக்கிறேன்?”
“உங்கட பணத்திலை உங்களை வெலைக்கு வாங்கவா?”
“பைத்தியம் பைத்தியம். இதெல்லாம் ஒரு போலி சம்பிரதாயம்தானே”
“போலியைத் தூக்கி எறிந்தால் என்ன?”
ஒரு நிமிடம் மெளனம் மீண்டும் அவளே பதில் தருகிறாள்.
“நீங்கள் என்னைக் கல்யாணம் செய்வதாயிருந்தால்…நான் ஒரு செம்புக் காசுகூடத் தரமாட்டேன்”
“என்ன!”
“என் பிடிவாதம் உங்களுக்குத் தெரியும் தானே”
“என்ன சொல்லுறீங்க!”
“உண்மையாகத்தான் சொல்றேன், நான் காசுகொடுத்து உங்களை வாங்கவே மாட்டேன்”
“உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கு”
“இனிமே பிடிக்காம இருந்தாச்சரி – இதுதான் என் இறுதி முடிவு. என் பிடிவாதம் தெரியும் தானே. நீங்கள் போகலாம்”
“நான் உனக்குப் பின்னாலே பூனைக் குட்டியைப் போல சுற்றிச்சுற்றி வாறேனே என்றுதானே இப்படிச்செய்கிறாய்”
“அதெல்லாம் இல்லை! என் இலட்சியம்”
“அப்ப நம்ம கல்யாணம் வெறும் கதைதான்”
“அதைப்பற்றிக் கவலையில்லை”
“நீ வேற யாரையோ விரும்புறா”
அவள் விரக்தியுடன் சிரிக்கிறாள்….
அவளை தொடர்கிறான்,
“பெறகென்ன உங்க வாப்பா சம்மதிச்சிட்டாரு. நான் கூட பண உதவி செய்றேன்னு சொல்றேன்; அதற்குமேலே” அவள் முகத்தில் உறுதி தொணிக்கிறது
“ஒரு சதமும் கொடுக்காமல்தான் நான் கல்யாணம் செய்து கொள்வேன்.”
“அப்படிப்பட்டவன் உலகத்தில்…”
“இல்லாமலா போய்விடுவான் ”
“யாரது! யாரது! உனக்கொரு கள்ளக் காதலன்”
“சட்அப்”
அவள் சரியான சரியான பிடிவாதக்காரி, அவள் சொன்னால் சொன்னதுதான்.
“நீங்கள் போகலாம். சீதனம் வேண்டாம் எண்டால் வரலாம்! ம்!”
விறிட்டென எழுந்து அறைக்குள் நுழைகிறாள். குமுறிக் குமுறி அழுகிறாள்.
ஜலீல் ஆத்திரத்துடன் வெளியேறுகிறான்! சற்று நேரத்தில் அழுகை நிற்கிறது! உறுதியுடன் எழுதுகிறாள்! இலட்சியத்துடன் வாழ்ந்து காட்டுவதற்காக…
– 1979
– ஒரு வெள்ளி ரூபாய் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: செப்டம்பர் 1982, மன்னார் வாசகர் வட்டம் வெளியீடு, இலங்கை.