புதிதாய்ப் பிறந்தவர்





(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கும்பலும் கூச்சலும் அந்தத் தெருவைத் தாண்டி மூலை திரும்பிவிட்டதை தேய்ந்து மெலிந்து வந்த ஒலிகள் உணர்த்தின. என்றாலும் பால்வண்ணம் பிள்ளை கல்லுப்பிள்ளையார் மாதிரி தன் வீட்டு திண்ணையில் குறுகுறு என்று உட்கார்ந்தார். அவர் மனசே இடிந்து போய்விட்டது போலிருந்தது.
சற்று நேரத்திற்கு முன்பு அந்த வீட்டின் முன்னே நடத்தப்பட்டிருந்த கூத்து அவரை அதிரடித்துவிட்டது. அவ்வூர்க்காரர்களிடமிருந்து அப்படி ஒரு தாக்குதலை அவர் ஒரு நாளும் எதிர்பார்த்ததில்லை.
தன்னைப் பற்றிப் பலரும் கேலி பேசுவதும், கேவலமாகக் கருதுவதும் குறை கூறித் திரிவதும் பால்வண்ணம் பிள்ளைக்கு வெகுகாலமாகவே தெரிந்துதான் இருந்தது. ஆயினும் இப்படி நடக்கக் கூடும் – தனது ஊர்க்காரர்களே இவ்விதம் நடந்துகொள்வார்கள் – என்று அவர் கனவிலும் எண்ணியவரல்லர்.
அந்த ஊரில் மழை பெய்யவில்லை. ரொம்ப நாட்களாகவே பெய்யவில்லை. மழை உரிய காலத்தில் வந்துவிடும் என்று நம்பி, எதிர்பார்த்து ஊரர்கள் விவசாய அலுவல்களை ஒழுங்காகச் செய்து முடித்திருந்தார்கள்.
பயிர்த் தொழிலை நம்பி வாழும் மக்கள் நிறைந்த ஊர்களில் அதுவும் ஒன்று. ஊரைச் சுற்றிலும் வயல்கள் நெடுகிலும் நெல் பயிர் பசுமைக் காடாக வளர்ந்து நின்றது. ஆனால் தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. குளத்திலும் கால்வாய்களிலும் நீர் இல்லை, மழைபெய்வதாக இல்லை. மக்கள் வறண்டு கிடந்த வானத்தைப் பார்த்து பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தார்கள்.
மழை கட்டாயம் வேண்டும். மழை பெய்யாவிடில், பச்சைக் கடலாய் காற்றோட்டத்துக்கு ஏற்ப அலை மோதிக் கொண்டு குளுகுளு இனிமையாய் பரந்து காட்சி தரும் பயிர் பூராவும் கருகிவிடும். இப்போதுகூட வயல்களில் மண் நன்கு காய்ந்து, வெடிப்புகள் விழுந்து தோன்றின. வறட்சி வேரைத் தீய்த்து பயிரைச் சுருக்கிவிடும்.
அந்நிலையை நினைக்கவே ஊர் மக்களின் மனம் பதை பதைத்தது. சென்ற வருடமும் இதே நிலைமைதான் ஏற்பட்டிருந்தது. ‘தீ சாவி’ அறுக்க வேண்டிய அவசியம் உண்டாயிற்று. பாடுபட்டு, விதையைக் கொட்டி, பணத்தை முடக்கி, பயிரிட்டுப் பலனை எதிர்பார்த்திருந்தவர்களின் நெஞ்சும் வயிறும் கொதிக்காமல் என்ன செய்யும்?
இந்த வருஷமும் அதே கதிதானா? அட கடவுளே, உனக்கு ஈவு இரக்கம் கிடையாதா?
பாடுபட்டவர்கள் உள்ளம் குமைந்தார்கள்.
-ஊரிலே பாவிகள் பெருத்துப் போனார்கள். பாவம் பெருகிப் போச்சு அப்படி இருக்கையிலே மழை எப்படிப் பெய்யும்?
சுற்றிலும் அங்கும் இங்குமாக மழை பெய்தது. தேவை இல்லாத கட்டாந் தரைகளிலும், முள் மரங்கள் மண்டிய இடங்களிலும் பெய்தது. தூரத்து ஊர்களில் பெய்தது. பக்கத்து கிராமங்களிலும் பெய்தது. நீருக்கு ஏங்கி வான்முகம் நோக்கி நிற்கும் பசும் பயிர்கள் நிறைந்த வயல்கள் சூழ்ந்துள்ள அந்த ஊரில் மழை பெய்வேனா என்று அடம் சாதித்தது!
அதுதான் சொல்லுகிறேனே! அக்கிரமக்காரர்கள் பெருத்த ஊரு இது. அநியாக்காரப் பாவிகள் கவலையற்று சீவித்துக் கொண்டிருக்கின்ற ஊரு இது. மனிதர்கள் செய்கிற அட்டூழியங்கள் மானத்துக்கே பொறுக்கல்லே? அதனாலேதான் மழை கீழே விழுறதுக்கு அஞ்சி நடுங்குது…
வாய் உள்ளவர்கள் வல்லதும் பேசினார்கள் அந்த ஊரிலே. அவர்கள் குறை கூறிக் குறிப்பிட்டவர்களில் பால் வண்ணம் பிள்ளை பேரும் இருந்தது.
சந்தியிலும், பிள்ளையார் கோயிலிலும் குளத்தங்கரை அரசமரத்தடியிலும் பேசப் பெற்ற பேச்சுகளில் சில அவ்வப் போது “ஊசு ஆசு” என்று பால்வண்ணம் பிள்ளை காதுகளிலும் விழுந்து கொண்டுதான் இருந்தது.
அப்போதெல்லாம் அவர் மனம் குலைந்ததில்லை. “வீணப் பயலுவ. இந்த ஊர்க்காரனுகளுக்கு வேறே பொழைப்பு கிடையாது. யாரையாவது பற்றி வம்பு பேசுவது தான் இவங்க வேலை” என்று அவர் அலட்சியப்படுத்தி விட்டார்.
ஆனால் இப்போதோ?
மழை பெய்ய வேண்டும் என்று ஏங்கியவர்கள் ”கொடும் பாவி” கட்டி இழுக்க முற்பட்டார்கள். கொடும்பாவி உருவம் செய்து, தெருத்தெருவாக இழுத்து வந்து நெடுகிலும் ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுது புலம்பி, முடிவில் ஊருக்கு வெளியே ஓரிடத்தில் அதற்குக் குடம் உடைத்து, கொள்ளி வைத்து அதைத் தீயிட்டுப் பொசுக்கினால் மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை.
அதைச் செய்வதில் உற்சாகமாகப் பலரும் ஈடுபட்டார்கள்.
”கொடும்பாவி” கட்டி இழுப்பதனால் மழை பெய்யுமோ பெய்யாதோ, தங்களுக்கு வேண்டாதவர்களை—தாங்கள் வெறுக்கிறவர்களை வசை பாடவும் ஏசி ஒப்பாரி வைக்கவும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வது மக்களில் சிலரது வழக்கமாக வளர்ந்துள்ளது.
அந்த ஊர்க்காரர்களும் அவ்வாறே செய்தார்கள். அவர் கள் ‘கொடும்பாவிகள்’ எனக் கருதிய அநியாயக்காரர்கள் வீட்டின் முன்னே கொடும்பாவி உருவைக் கிடத்தி, ஏச வேண்டியதை எல்லாம் ஏசிப் பாடியும் ஒப்பாரியாகப் புலம்பியும், மார் அடித்தும் தங்கள் மனப்புகைச்சலைத் தணித்துக் கொண்டார்கள். ஒரு படி அரிசிக்கு மூன்று ரூபாய், மூன்றே கால் ரூபாய் என்று விலை கூறி விற்ற சில பொம்பளைகள் வீடுகளின் முன்னே – கொள்ளை வட்டி கூறிப் பணம் கடன் கொடுத்து சுலபத்தில் பணக்காரர்கள் ஆகிவிட்ட சிலர் வீட்டின் முன்னால் – தன்னை நம்பிய சிலரை வஞ்சித்து அவர்கள் சொத்தைத் தம் சொத்தாக ஆக்கிக்கொண்ட ஒன்றிரண்டு பெரிய தனக்காரர்கள் வீட்டு முன்புறம் எல்லாம் இந்தத் தெருக் கூத்தை ரொம்பவும் உற்சாகத்தோடு ஆடிக் களித்தார்கள் அவர்கள்.
பால்வண்ணம் பிள்ளையும் அத்தகைய ‘விசேஷ மரியாதை’க்கு இலக்கானார்.
அவருடைய கஞ்சத்தனமும், இரக்கமற்ற தன்மையும், பிறருக்கு உதவ மனமில்லாத சுபாவமும், அநியாய வட்டிக்குக் கடன் கொடுத்து பணம் திரட்டும் போக்கும், உறவுக்கார மைனர்ப் பையன் ஒருவன் “தலையைத் தடவி” தனது சொத்துக்களைப் பெருக்கிக் கொண்ட லீலையும் பிறவும் வசைபாடப்பட்டன. பலரும் மாரடித்து, ஒப்பாரி வைத்து சங்கு ஊதி ஆரவாரித்தார்கள். சிலர் காறித் துப்பினர். பழம் பானைகளை அவர் வீட்டு வாசலில் போட்டு உடைத்தார்கள். செங்கல் கட்டிகளை “வெடலை”யாக வீசி, வாசலைப் பாழ் படுத்தினார்கள்.
“சண்டாளப் பாவி, கொடும்பாவி! நீ இருக்கிற ஊரிலே மழை எப்படிப் பெய்யும்?” என்று கூவிவிட்டு நகர்ந்தார்கள்.
இத்தனை அமர்க்களமும் பால்வண்ணம் பிள்ளை கண் முன்னாலேயே நடைபெற்று முடிந்தது. அவர் என்ன செய்ய முடியும்? திண்ணையில் ஓய்வாகப் படுத்திருந்தார். திமுதிமுவென்று அநேகர் வாசலுக்கு வருவதைக் கண்டு எழுந்து உட்கார்ந்தார்.
அவர்கள் வந்தார்கள். ஆடித் தீர்த்தார்கள், இவ்வளவு அவமானப்படுத்தியது போதாதென்று ‘படி அரிசி போடுங்க! கொடும்பாவி கொளுத்துறோம், பணம் கொடுங்க!’ என்று அவரிடமே கேட்டார்கள்.
அவருக்கு வாயும் வழங்கவில்லை; கையும் ஓடவில்லை. செயலற்று, திக்பிரமை பிடித்தவராய் அமர்ந்திருந்தார்.
“அரிசிக்கும் பணத்துக்கும், போயும் போயும் நல்ல ஆளைப் பார்த்துக் கேட்டீரே! எச்சிற் கையால் காக்கா விரட்டாத கர்ண மகாபிரபு ஆச்சே இவரு. பிச்சைக்காரனைத் தூரத்திலே கண்டாலே, ஏசி விரட்டுகிற புண்ணியவான் இல்லையா; இவரு!” என்று ஒருவன் அடுக்கினான்.
மற்றவர்கள் எல்லோரும் ‘லோ லோ லோ” என்று கேலியாக வாயினால் குலவையிட்டார்கள். சங்கு வைத்திருந்தவன் உற்சாகமாக ஊதி முழங்கினான்.
கும்பல் அங்கிருந்து நகர்ந்து சென்றது. பால்வண்ணம் பிள்ளை அதே இடத்தில் அமர்ந்தவர்தான். ஆடவில்லை. அசையவில்லை.
அது நிகழ்ந்தது பிற்பகல் மூன்று மணி, அவருக்கு கால உணர்வும் இல்லை, காரிய உணர்வும் இல்லை.
பால்வண்ணம் பிள்ளைக்கு பிள்ளை குட்டி கிடையாது. அவர் மனைவி இறந்து பல வருஷங்கள் ஆகியிருந்தன. அவர் தனி நபராகத்தான் வாழ்க்கை நடத்தினார். வயசும் ஐம்பதைத் தாண்டிவிட்டது. எனினும் “கல்லுப்போல்” இருந்தார்.
அவர் சிறு வயதில் ரொம்பவும் கஷ்டப்பட்டவர். வறுமை அவரை வாட்டி வதைத்தது. அந்நாட்களில் அவருக்குக் காலணாவைக் காண்பதே பெரும் பாடாக இருந்தது. எத்தனையோ நாட்கள் பட்டினி கிடக்க நேரிட் டதுண்டு. இதனால் எல்லாம் காசாசை பூதமாய் வளர்ந்தது. ஏதேதோ வேலைகள் பார்த்து சிறிதுசிறிதாகப் பணம் சேர்த்து சொந்தமாக ஒரு கடை வைத்து சம்பாதிக்கத் தொடங்கினார்; சம்பாதிக்க வேண்டும். நிறைய நிறையப் பணம் பண்ண வேணும். சொத்து சேர்க்கணும் இதுவே அவருடைய இதயத் துடிப்பாய், மூச்சுக் காற்றாய், வாழ்க்கை லட்சியமாய் அவரை இயக்கியது. பணத்தை வட்டிக்குவிட்டு வசூலித்து மேலும் கடன்கொடுத்து வாங்குவதன் மூலம் எளிதில் பணம் சேர்த்து விடலாம் என்ற வித்தையைக் அவர் கற்றுக் கொண்டார். ஒரு ஆவேசத்துடன் அதில் ஈடுபட்டார்.
அவருக்குக் கல்யாணம் ஆயிற்று. மனைவி கொஞ்சம் பணம் கொண்டு வந்தாள். அதையும் வட்டிக்குக் கொடுத்தும் பெருக்குவதில் அவர் ஆர்வம் கொண்டார்.
பணம் சேரச் சேர, வீடு தோட்டம் வயல் என்று வாங் கிச் சேர்த்தார். பணத்தாசை வலியதாகி அவரை ஊக்கிக் கொண்டே இருந்தது. செலவு செய்ய அவருக்கு மனம் வராது. வீட்டில்கூட நல்ல சாப்பாடு, நல்ல துணிமணி, பண்டபாத்திரங்கள் என்று செலவிடத் துணிந்ததில்லை அவர். பணம் – பணத்துக்கு மேல் பணம்- சொத்து சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை வெறியாக வளர்ந்து அவரைப் படாதபாடு படுத்தியது. அதனால் அவர் மனைவியைக் கொடுமைப்படுத்தினார்.
அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. அதுவும் நல்லதுக்கு என்று அவர் நினைத்தார்.
அண்டை அயலாருக்கு அவர் உதவ விரும்பியதில்லை. உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு “மொய்” என்றும் “அன்பளிப்பு’ என்றும் செலவு செய்ய மனம் கொண்டதில்லை. ஊர்ப் பொதுக் காரியங்கள், கோவில் விழாக்கள் முதலியவைகளில் பங்கு பற்றிப் பணம் தர முன் வந்ததில்லை. ஏழை எளியவர், கஷ்டப்படுகிறவர், நெருக்கடி சமயம் உதவுங்கள் என்று வருகிறவர்கள் யாருக்குமே அவர் பண உதவி செய்ததில்லை.
பணம் சேர்க்க வேண்டும் என்ற ஒரே ஆசைதான் அவருக்கு இருந்தது. எப்படி எப்படியோ பணமும் சொத்தும் சேர்த்தார்.
மனைவி செத்தாள். கடையை அவர் லாபத்திற்கு விற் றார். வீட்டோடு இருந்து வட்டிக்கு விட்டும் நிலத்தை எல்லாம் கட்டுக் குத்தகைக்கு விட்டும் பணம் சேர்த்துக் கொண்டுதான் இருந்தார்.
அதில் அவருக்கு தனி திருப்தி இருப்பதாகத்தான் தோன்றியது.
அந்த அடிப்படையைக் கொடும்பாவி நிகழ்ச்சி தகர்த் தெறிந்தது. அவர் நிலை குலைந்து போனார்.
எதுக்காக வாழ்வது? ஏன் இப்படி பணம் சேர்க்க வேண் டும்? நான் யாருக்காக இவ்வளவு பணத்தையும். சேர்க்கிறேன்… இன்னும் சேர்க்க ஆசைப்படுகிறேன்?
இவ்வாறு எண்ணப்புரி சுழன்று சுழன்று நெளிந்தது அவருள்.
எல்லோருடைய வெறுப்புக்கும் பாத்திரமாகி… நல்லவன் என்று சொல்வதற்கு ஒருவரும் இல்லை. தன்னிடம் அன்பு காட்டுவதற்கு, யாருமே இல்லை…
இப்படி எண்ணி எண்ணிக் கசந்தது மனம். அங்கு புழுக்கம் ஏற்பட்டது. இக்கழிவிரக்கம் அவர் கண்களில் நீர் பொங்க வைத்தது.
கண்ணீர் வடித்தபடி அவர் உட்கார்ந்திருந்தார். எவ்வளவு நேரம் போயிருக்கும் என்றே அவருக்குத் தெரியாது, என்ன செய்வது எனப் புரியாதவராய்- செய்வதற்கு எதுவுமே இல்லை என்றொரு வெறுமை உணர்வு கொண்டவராய் – அந்த ஏலாத் தன்மையும் தனிமையுமே விரக்திச் சுமையாய், வேதனைப் பளுவாய் அழுத்த, அவர் உட்கார்ந்திருந்தார்.
“என்ன அண்ணாச்சி இதெல்லாம்? ஏன் இப்படி குறு குறுன்னு உட்கார்ந்திட்டீக?” என்ற குரல் அவரை உலுக்கியது.
மூடிக் கொண்டிருந்த கண்களைத் திறந்து பார்த்தார் பிள்ளை. பிறவிப் பெருமாள் நின்று கொண்டிருந்தார்.
பால்வண்ணம் பிள்ளை “வாருமையா” என்று வரவேற்க வேண்டும்; “உட்காருமேன்” என உபசரிக்க வேணும் என்றெல்லாம் அவர் எதிர்பார்க்கவில்லை. தானாகவே பிள்ளையின் அருகில் அமர்ந்தார். நடந்திருந்த விஷயம் அவருக்கும் தெரியும். யாருக்குத் தெரியாது அந்த ஊரில்?
பிறவிப் பெருமாள் ஒரு அபூர்வமான மனிதர். அவருக்கு சொத்து, குடும்பம், பண வரவு என்று எதுவும் கிடையாது. ஆனால் எப்போதும் சந்தோஷமாகத்தான் தென்பட்டார். கலகலப்பாகப் பேசிப் பழகுவார்.
அவருடைய வாழ்க்கையைப் பற்றி விசாரிக்கிறவர்களிடம், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பார். ”சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்பார். ‘சந்தோஷங்களை அறு வடை பண்ணலாம்!” “அன்பை கொட்டினால் எங்கும் அன்பே மலரும்” என்ற தன்மையில் ஏதாவது சொல்லி வைப்பார்.
எனவே, “ஆள் ஒரு மாதிரி” “வேதாந்தப் பைத்தியம்” “லூஸ்” என்று அவரவர் இயல்புப்படி அவரை எடைபோடுவது மற்றவர் வழக்கம். அவரால் யாருக்கும் துன்பம் இல்லை. பிறருக்குத் தன்னால் இயன்ற உதவிகளை செய்யத் தயங்காதவர் அவர்.
“வே, பொன்னைக் கொடுக்க வேண்டாம்: பொருளை அள்ளிக் கொடுக்க வேண்டாம். மனுஷன் அன்பைத்தந்தால் போதும். அன்பு காட்டுவதிலே கஞ்சத்தனம் பண்ணுவதனாலேதான் மனிதர்களிடையே பகையும், பொறாமையும் போட்டியும் தலைதூக்கி வளருது. அன்பு அன்பையே விளைவிக்கும். அன்பு மலரும் உள்ளங்கள் எல்லோரும் இன்புற்று இருக்கவே விரும்பும். இருண்ட மனங்கள்தான் சுயநலத்தை பெரிது பண்ணும்” என்ற ரீதியில் பேசிக் கொண்டிருப்பார்.
பால்வண்ணம் பிள்ளைக்கு இப்போது அனுதாபமும் அன்பும் தேவை என்று உணர்ந்த பிறவிப்பெருமாள் தனது இயல்புப்படி பேசினார். பிள்ளையின் வேதனையைத் தன் பேச்சால் தணித்தார். அவருடைய மனசின் நிலைமை அறிந்து பக்குவமாய்ப் பேசினார்.
இருள் மண்டிய குகையாய்க் கிடந்த பால்வண்ணம் பிள்ளையின் உள்ளத்தில் பிறவிப் பெருமாளின் பேச்சு, ஒளி உதயம் புகுத்தியது. அவர் உணர்வுகளைத் தொட்டு புதிய சிலிர்ப்புகளை உண்டாக்கியது. ஊராரின் வெறுப்பைக்கூட அன்பான செயல்கள் மூலம் வென்றுவிட முடியும் என்ற தன்னம்பிக்கை அவருள் சுரக்கும்படி செய்தது.
ஊர் மக்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று அவர் மனசுக்குப்பட்டது. கோயில் திருவிழா அன்று எல்லோருக்கும் சாப்பாடு வழங்கலாம் என நினைத்தார். தன் எண்ணத்தை சொன்னார்.
“தம்பியா பிள்ளே. நீரும் உடனிருந்து ஆக வேண்டிய காரியங்களைக் கவனிக்கணும்” என்று கேட்டுக் கொண்டார் பெரிய பிள்ளை.
“நீங்களே ஊர் பூராவுக்கும் கடவுள் தரிசனம் பண்ணி வைப்பது எனத் துணிகிறபோது, நான் என்னாலான உதவி செய்யாமல் இருப்பேனா!” என்று சிரித்தார் பிறவிப் பெருமாள்.
பால்வண்ணம் பிள்ளை திகைப்புற்றார். “என்ன ஐயா கேலி பண்ணுகிறீர்! நானாவது கடவுளைக் காட்டுகிறதாவது!” என்றார்
“ஏழைகள், பசியோடு இருப்பவர்கள் முன்னே ஆண்டவன் சாதம் வடிவத்தில்தான் காட்சி அளிக்கிறான் என்று ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார். அதைச் சொன்னேன்” என்று மற்றவர் தெளிவுபடுத்தினார்.
பெரிய பிள்ளையும் ரசித்துச் சிரித்தார்.
மழை பெய்ய வேண்டும் என்று நேர்ந்து அம்மன் கோயிலில் திருமாலைப் பூசைக்கு ஏற்பாடாகியிருந்தது. ஊரில் வரி வசூலித்து, சிலர் முன்னின்று நடத்தினார்கள்.
அன்று ஊரார் அனைவருக்கும் பால்வண்ணம் பிள்ளை வயிறாறச் சோறு போடப் போகிறார் என்ற பேச்சு பிறந்து, வேகமாகப் பரவியது.
அதைக் கேட்டவர்கள் நம்பத் தயங்கினார்கள். உண்மை தான் என்று அறிந்ததும் ஆச்சரியப்பட்டார்கள்.
பூசை நாள் அன்று, மத்தியான வேலையில் வசதியான இடத்தில் இலை போட்டு சாதம் பரிமாறப்பட்டது. சிறியவர், பெரியவர் என்ற வித்தியாசமின்றி, தெரிந்தவர், தெரியாத வர் என்று பேதம் பாராமல், பசி என்று சாப்பிட வந்த அனை வருக்கும் அருமையான விருந்து படைக்கப்பட்டது. பால் வண்ணம் பிள்ளையே முன்னின்று, குறை எதுவும் நேராத வாறு கவனித்தார். “போதும், போதும்” என்று நிறைவுடன் கொடுத்தாலும் போதும் என்கிற திருப்தி மறுக்கிற வரை எல்லாம் திரும்பத் திரும்பப் பரிமாறப்பட்டன.
அனைவரும் வயிறு நிறைந்த திருப்தியோடு, முகமலர்ச்சி யோடு, பிள்ளை அவர்களை வணங்கிக் கும்பிட்டு விட்டுப் போனார்கள்,
“பார்த்தீர்களா? மனுஷனுக்கு எதைக் கொடுத்தாலும் போதும் என்கிற திருப்தியே ஏற்படாது. சாப்பாடு ஒண்ணிலே தான், போதும் போதும் இன்னமே வேண்டாம் என்று சொல்கிற மனநிலை ஏற்படுது. பசி தீர்கிற அந்த வேளைக்காவது ஏற்படுது பாருங்க. அதுதான் முக்கியம்” என்று பிறவிப் பெருமாள் சொன்னார்.
“நீங்க சொல்றது உண்மை தம்பி” என்றார் பெரியவர்.
ஊர் மக்கள் வெறுப்பைக் கொட்டியதனால் இடிந்து குமைந்து போயிருந்த வேளையில் – அன்பு வறுமை அவரை தீய்த்துப் பொசுக்கிய தருணத்தில் – பிறவிப் பெருமாள் அவர் உள்ளத்தில் தெளித்த அன்பும் அனுதாபமும் பால்வண்ணம் பிள்ளையை ஒரு புது மனிதராக ஆக்கிவிட்டது என்றே தோன் றியது. அவருடைய பழைய சிறுமைகள் எல்லாம், அதிசயிக் கத்தக்க விதத்தில், அன்று அவர் உளம் குமைந்து பெருக்கிய கண்ணீரால் கரைத்து ஒழிக்கப்பட்டு விட்டன போலும்.
அவர் அந்த ஊரில் “குரு பூஜை” என்று நிகழும் ஒரு விசேஷத்தின் போதும் ஊர் முழுவதற்கும் சாப்பாட்டு விருந்து படைத்தார். பிறகும், கோயில்களில் – சிவன் கோயில், பிள்ளை யார் கோயில், அம்மன் கோயில் என்று எந்தக் கோயிலிலும் – என்ன திருநாள் வந்தாலும் ஊர் மக்களுக்கு வகைக் கறியும் சோறும் ஆக்கிப் போட ஏற்பாடு செய்தார். இதற்கெல்லாம் பிறவிப் பெருமாளும் அவருக்குப் பக்க பலமாக இருந்தார்.
“அண்ணாச்சி, சேர்த்து வைப்பதிலே ஒரு இன்பம் கிடைக்குது. அதில் சந்தோஷம் கிடையாது. அதே மாதிரி, செலவு செய்வதிலும் ஒரு இன்பம் கிட்டுகிறது. இதிலிருந்தெல்லாம் மாறுபட்ட ஒரு இன்பமும் இருக்கு. மற்றவர்களுக்கு அன்போடு வழங்குகிறபோது நமக்கு உண்டாகிற இன்பம் இது. அதைப் பெறுகிறவர்களுக் கும் இன்பம் ஏற்படுது. அந்த இன்பம் அவர்களிடம் உண் டாக்குகிற சந்தோஷத்தைக் காண்கிறபோது நமக்கு ஏற்படக் கூடிய மகிழ்ச்சிகரமான இன்பம் இருக்கிறதே. ஆகா,ஆகா, அது தனிச் சிறப்பு உடையது அண்ணாச்சி!”
இப்படி பிறவிப் பெருமாள் பேசினார்.
ஈந்து உவக்கும் இன்பத்தை அனுபவத்தின் மூலம் கண்டு கொண்ட பால்வண்ணம் பிள்ளை ஆனந்தமாகத் தலையாட்டினார்.
பசி என்று வந்தவர்களுக்கு வயிறாறச் சோறு போட்டு அனுப்பும் அடையா நெடுங்கதவு உடைய அன்பகம் ஆக மறு மலர்ச்சி பெற்று விட்டது அவர் வீடு.
– சுதேசமித்திரன் தீபாவளி மலர், 1973.
– 1960 முதல் 1991 முடிய, வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, வெவ்வேறு பத்திரிகைகளில் பிரசுரம் பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
– வல்லிக்கண்ணன் கதைகள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.