புடலங்காய்
கதையாசிரியர்: மெய்யன் நடராஜ்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 16, 2026
பார்வையிட்டோர்: 2,141
பார்வதிக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. இன்றைக்காவது கொண்டுவருவாள் என்று எதிர்பார்த்தால் ‘இல்லைங்கம்மா.. நானும் எனக்கு காய்கறி தார எல்லாத்துக்கிட்டேயும் கேட்டுப் பார்த்துட்டேன். கிடைக்கலிங்க கல்கட்டாவிலே இருந்தெல்லாம் காய்கறி இங்கே வருவது கிடையாதுங்கலாம் நம்ம ஊர் மரக்கறி மட்டும்தான் இங்கே விற்கிறதா எல்லா வியாபாரிகளும் சொல்றாங்கம்மா” என்று கையை விரித்துவிட்ட காய்கறிகாரிமேல் கடுங்கோபமாக,
“என்னம்மா இது. சந்தையிலே விற்காமலா பக்கத்து வீட்டு மாலா வாங்கி சமைச்சா?. நல்லா தேடிப்பார்த்து வாங்காம இனிமேல் இந்தப் பக்கம் வரவேண்டாம்” என்று கட்டளை இட்டாள்.
பயந்துபோன காய்கறிகாரி “என்னம்மா இந்த சின்ன விஷயத்துக்காக பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க. உங்களை மாதிரி உள்ளவங்களை நம்பித்தான் என் பொழைப்பே இருக்கு. நான் அந்த அம்மாக்கிட்ட அவுங்க எங்கே வாங்கினாங்கன்னு கேட்டு அந்தக் கடையத் தேடி பிடித்து வாங்கிட்டு வாரேம்மா” என்றாள் பணிவோடு.
அவளின் வார்த்தைக் கேட்டுப் பதறியவளாக “நீ கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை அவகிட்டப்போய் கேட்டிடாதே.. போய் தேடிப்பார் கிடைக்கும்” என்று அவளை அனுப்பிவிட்ட பார்வதி வீட்டிற்குள் நுழைந்தாள்.
சமீபத்தில் கல்யாணமாகி நகருக்கு வந்திருக்கும் கிராமத்துத் தேவதை மாலா பார்வதியின் கணவரின் தம்பி மனைவி. கல்யாணம் ஆன கையோடு தனிக்குடித்தனம் ஆகிவிட்டாள். ஆகிவிட்டாள் என்பதைவிட ஆகுவதுதான் நல்லது என்ற பெரியவர்களின் தீர்மானத்தால் ஆக்கப்பட்டாள் என்பதுதான் உண்மை. சைவம் சமைப்பதில் கில்லாடி. நகரத்தில் இருந்து அசைவத்திற்கு நாக்கை பழக்கியிருந்த பார்வதிக்கு மாலாவின் சமையல் மிகவும் பிடிக்கும். பிடிக்கும் என்றாலும் காட்டிக்கொள்ளாமல் எதோ சுமார் என்பதுபோலத்தான் காட்டிக்கொள்வாள்.
கடந்தவாரம் கணவரோடு எதோ அலுவலாக வெளியில் போய்வந்த பார்வதிக்கு சமைக்க நேரம் இல்லாமல் இருந்ததால் வாங்கி வந்திருக்கும் சப்பாத்திக்கு மாலாவிடம் குழம்பு ஏதும் இருக்குமா என்று கேட்க மாலா தன்னிடம் இருந்த புடலங்காய் குழம்பை ஊத்திக் கொடுத்தாள். வாங்கிக் கொண்டுப்போன பார்வதி கணவரோடு சேர்ந்து சாப்பிட்டாள். மாலாவின் கைராசியோ என்னவோ புடலங்காய்க் குழம்பு அவ்வளவு பிரமாதமாக இருந்தது, எதை சமைத்துக் கொடுத்தாலும் சாப்பிட்டுவிட்டு எதுவும் கூறாமல் செல்லும் கணவர் மாலாவின் சமையலை மிகவும் புகழ்ந்தது பார்வதிக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அவளைவிட சுவையாக சமைத்து கணவரை அசத்தவேண்டும் என்று தீர்மானித்தவள், அடுத்தநாள் மெதுவாக மாலாவிடம் கதைகொடுத்தாள்.
“என்ன மாலா குழம்பிலே புடலங்காய் பெருசு பெருசா கிடந்துச்சே சின்னதா அரியத் தெரியாதா?” சம்மந்தம் இல்லாமல் கேட்டாள் “அது கல்கட்டா புடலங்காய் அது அப்படித்தான் கொஞ்சம் மொத்தமா இருக்கும்’’
“கல்கட்டா புடலங்காயா..எங்கே வாங்கினீங்க?” ஆச்சரியமாய் கேட்டாள்.
“எங்கேயோ சந்தையிலே வாங்கிட்டு வந்தாரு.” செய்தியைத் தெரிந்து கொண்ட பெருமிதத்தில் “சரி சரி” என்று மேலும் ஏதேதோ சம்பந்தமில்லாமல் பேசிவிட்டு போன பார்வதி தனக்கு வழமையாய் காய்கறி கொண்டுவருபளிடம் சொல்லிவைத்தாள்.
இரண்டு மூன்று நாளாய் கல்கட்டா புடலங்காய் கொண்டுவருவாள் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த எதோ சுமாராய் சமைத்தாலும் சாப்பிட்டுவிட்டுப் போகும் கணவர் எதிர்வரும் நாட்களில் மாலாவின் சமையலோடு தனது சமையலை ஒப்பிட்டு விடாமல் இருப்பதற்கு அவள் சமைத்ததை விட சுவையாய் புடலங்காய் சமைக்க என்ன செய்யலாம் என்ற ஆலோசனையோடு தொலைகாட்சி முன் அமர்ந்தாள்.
பார்வதி அமர்ந்த நேரம் தொலைக்காட்சியில் சமையல் சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்று ஒலி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது..
“இன்றைய சமையல் நேரத்தில் புடலங்காய் குழம்பு வைப்பது எப்படி என்று நாம் அடுத்தபடியாய் பார்க்கப் போகிறோம்” ஒளிபரப்பாளரின் குரல் பாலைவனத்தில் நீரோடை பாய்ந்து வந்ததுபோல் இருக்க தொலைக்காட்சியின் சத்தத்தை சற்று அதிகப்படுத்திவிட்டு காதைக் கூர்மையாக்கினாள்.
தேவையான பொருட்களையும் அளவையும் கூறிவிட்டு “புடலங்காய் வாங்கும்போது கல்கட்டா புடலங்காயை வாங்காமல் கல் கட்டி நன்கு நீளமாக வளரவிடப்பட்ட காயாய் பார்த்து வாங்கிக் கொள்ளவேண்டும்” என்ற போது பார்வதியின் மூளையில் மின்னல் வெட்டியது.
அப்படியானால் மாலா சமைத்த கல்கட்டா புடலங்காய் என்பது கல்கட்டாமல் குள்ளமாய் விளைந்த நம்மூர் புடலங்காய்… சிரித்துக் கொண்டவள் நல்ல வேளை வேறு யாரிடமும் கேட்டு அவமானப் படவில்லை என்று தன் அறியாமையை வெளியே காட்டாமல் மறைத்துக் கொண்டாள்.
![]() |
என்னுரை - காதலியின் கல்யாணம், 2022. சற்றே இடைவெளி விட்டு எனது இரண்டாவது தொகுப்பு சிறுகதைத் தொகுதியாக வெளிவருவதில் மனக்கிளை மகிழ்ச்சிப் பறவையை உட்கார வைக்கிறது. பொதுவாக ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையே சற்று இடைவெளி விடவேண்டும் என்பார்கள். இங்கே எனது இரண்டாவது குழந்தைக்கு சற்று பெரிய இடைவெளி விடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. “காதலியின் கல்யாணம்” . இது வெறும் காதலை மட்டும் கருவாகக் கொண்டு உருவானதல்ல.…மேலும் படிக்க... |
