பிற்பகல் விளைந்த தீர்ப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 6, 2026
பார்வையிட்டோர்: 219 
வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்

“எனக்குன்னு இருந்த ஒரே ஆதரவு ஐயா நீங்க ஒருத்தர்தானே, நீங்களும் போய்ட்டீங்களே, அய்யோ, இனிமே நான் என்ன செய்வேன்..என்னால தனியா சமாளிக்க முடியாதே சாமி..கடவுளே என்னையும் இப்பவே கொண்டு போய்டு.” என்று ராசாம்பாள் இறந்து கிடந்த தன் கணவன் கலியபெருமாள் உடல் மேல் புரண்டு அழுது அலறிக் கொண்டு இருந்தாள்.

அரளிக்கரை ஊரில் கலியபெருமாள்,ராசாம்பாள் தம்பதி வசித்து வருபவர்கள். கலியபெருமாளுக்கு சொந்தமாக கொஞ்சம் விவசாய நிலம் உள்ளது.அதைத்தவிர இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரும்பங்குடியில் இருக்கும் பண்ணைத் தோட்டம் மற்றும் பல ஏக்கர்கள் நன்செய், புன்செய் நிலங்களுக்கும் சொந்தக்காரர் ஆன மருதமுத்துவிடம் கண்காணிப்பாளராக வேலை செய்து வருபவர்.அதன் மூலம் வரும் வருவாயில் வாழ்க்கை நடத்தி வந்தனர்.

அதைத் தவிர வீட்டுத் தோட்டத்தில் ராசாம்பாளின் முயற்சிகளால் பலவிதமான காய்கறிகள் விளைவித்து அவைகளின் விற்பனை மூலம் வருமானம் ஈட்டி வந்தனர்.ராசாம்பாள் தாவரவியல் கல்வி கற்றவள்.அதனால் வெவ்வேறு வகை பூச்செடிகளையும் வளர்த்து வந்தாள்.பூச்செடிகளையும் விற்பனை செய்து வந்தாள்.

தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் அரளிக்கரை, காட்டுமேடு இந்த ஊர்களில் இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு இந்த தம்பதிகள் உணவளித்தல் மட்டுமின்றி நிறைய உதவிகளைச் செய்து வந்தனர்.அந்த சிறுவர்கள், சிறுமிகளும் அவர்களுடைய பெற்றோர்களும் கலியபெருமாள் இறப்புச் செய்தி கேட்டு இன்று இங்கே கூடிவிட்டனர்.எல்லோரும் , நிலைகுலைந்து போயிருக்கும் ராசாம்பாளுக்கு ஆறுதல் கூறி தேற்றுவதில் மும்முரமாக இருந்தார்கள்.

பெரிய பண்ணைக்காரர் மருதமுத்துவும் அவர் மனைவி கமலவாணியும் செய்தி அறிந்து உடனடியாக விரைந்து வந்து, பணியாளர்களை நியமித்தது அடுத்தடுத்து ஆகவேண்டிய செயல்களை செய்து கொண்டிருந்தார்கள். ‘தனியாக இருக்கும் ராசாம்பாளுக்கு இதையெல்லாம் செய்வது எங்கள் கடமை’ என்று ஊர் மக்களிடம் கூறி கவனித்துக் கொண்டார்கள்.

“ஆஹா, எவ்வளவு பெருந்தன்மை பண்ணையாருக்கு, யாருய்யா இந்த காலத்தில் இப்படி கிட்ட நின்னு காரியங்களை நடத்திக் கொடுக்கறாங்க? பாராட்ட வேண்டிய விஷயம்ப்பா!” என்று ஊர் மக்கள் மருதமுத்துவையும், கமலவாணியையும் புகழ்ந்த வண்ணம் இருந்தனர்.சிலர் அவரிடம் நேரிடையாகவே இதைக் கூறியபோது, மருதமுத்து “இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. எங்கள் சொத்துக்களை கண்காணிக்கற திலேயும், பாதுகாக்கறதிலேயும் அவரு காட்டின அக்கறைக்கு முன்னாடி இது வெறும் தூசிங்க. அவருக்கும் ராசாம்பாளுக்கும் நாங்க ரொம்ப கடமைப்பட்டிருக்கோம். இதைவிட வேறு வேலை எதுவும் எனக்கு முக்கியம் இல்லீங்க” என்று அவர்களிடம் சொன்னபோது ஊர் மக்கள் மனம் நெகிழ்ந்தனர்.

உண்மையில் மருதமுத்துவிடம் தற்போது இருக்கும் பாதிக்கும் மேலான நிலங்களுக்கு ஒரு காலத்தில் உரிமையாளராக இருந்தவர்தான் கலியபெருமாள். ஒரு சில கிராமத்து பொதுப்பணிகளை தன் தலைமையில் முன் நிறுத்தி செய்ததில் ஏற்பட்ட குழப்பங்களாலும், நிதிச்சிக்கலில் மாட்டி கடனாளியாகி விட்டார். அதைச் சரிக்கட்ட, நிலங்களை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அப்போது அதை இவரிடமிருந்து உடனடியாக நல்ல விலை கொடுத்து வாங்கிய மருதமுத்து, “ஐயா, உங்களை இந்த நிலைமையில் பார்க்க எனக்கு மனசு இடம் கொடுக்கலை. நீங்க கவலையே படவேண்டாம். என் கிட்ட சரியான படி ஒரு மணியக்காரர், கணக்காளர் இவங்கல்லாம் இல்லை. அதனால இன்னிலேர்ந்து நீங்களே இதையெல்லாத்தையும் மேனேஜ் பண்ற கண்காணிப்பாளரா இருந்துக்கோங்க. நீங்க என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீங்களோ அதைத் தந்துடறேன். தயவு செஞ்சு மறுக்காதீங்க. உங்க சகோதரனா நினைச்சு இதை கேட்கறேன்.” என்று பணிவான குரலில் வேண்டியதால் கலியபெருமாள் அதைச் செய்ய இசைந்தார்.இன்று கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஆகிவிட்டது. அறுபத்தைந்து வயதுவரை அவர் ஏற்ற பணியை ஒரு குறைபாடும் இல்லாமல் செய்தவர் இன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.

ராசாம்பாளுக்கு அறுபத்தி ஒன்று வயது. அவள் திருமணம் ஆகி கலியபெருமாள் வீட்டிற்கு வந்ததும், கலியபெருமாளுக்கு எல்லா பணிகளிலும் உதவியாக இருந்தாள். இருபது வருடங்களுக்கு முன்னர் கடன் தொல்லையால், நிலங்களை விற்கவேண்டும் என்று கலியபெருமாள் சொன்னபோதும், ‘ நீங்கள் எது நல்லதுன்னு நினைக்கறீங்களோ அதைச் செய்யுங்க.எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை ‘ என்று சொல்லி மிகவும் நொந்து போயிருந்த கலியபெருமாளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினாள். ‘ நீ என் மனைவியாக அமைந்தது நான் செய்த பாக்கியம்.’ என்று பின் நாட்களில் நிறைய முறை கலியபெருமாள் அவளிடம் கூறியுள்ளார்.

அதன் பின்னர் அவர்கள் சந்தோஷமாக இருந்து வந்த போதிலும், கலியபெருமாள் மட்டும் அடிக்கடி ஏதோ பெரிய யோசனைகளில் ஆழ்ந்து விடுவார். என்னதான் இருந்தாலும் தான் கடன் பட்டு சொத்துக்களை விற்றது அவருக்கு உள் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. அவரிடம் உதவியாளராக வேலை செய்த தங்கமணியை ‘ இனி நீ வேற ஏதாவது பாத்துக்க வேண்டியதுதான், என்னால உனக்கு சம்பளம் கொடுப்பது கஷ்டம்ப்பா’ என்று சொல்லி கட்டியணைத்து அவர் கையில் வேண்டாம் என்று சொன்னபோதும் ஐயாயிரம் ரூபாய் பணத்தை திணித்து விட்டு ‘ நீ எங்கே இருந்தாலும் நேரம் கிடைக்கும்போது நம்ப வீட்டுக்கு வந்துட்டு போ’ என்று கூறி அனுப்பினார். அது பல நேரங்களில் நினைவிற்கு வந்து அவர் கண்களை ஈரமாக்கும்.

கலியபெருமாள் சில முக்கிய விஷயங்களை டயரியிலோ, நோட்டுப் புத்தகத்திலோ எழுதி வரும் பழக்கம் உண்டு. ராசாம்பாள் ” பெரிய தலைவர்கள் எல்லாம் சுயசரிதை எழுதறது போல ஏதோ நீங்களும் எழுதுறீங்களோ? புத்தகம் போடப்போறீங்களா?” என்று கேட்டு கிண்டல் செய்வாள். கலியபெருமாள் சிரித்தபடி ” என் காலத்துக்கு அப்புறம் நீ படி இதையெல்லாத்தையும். உனக்கு உண்மையும் தெரியும்.இந்த உலகம் எப்படி இருக்குங்கறதும் தெரியும்.”என்பார்.

அதே போல் தான் எழுதிய நோட்டுப் புத்தகங்களை ஒரு பையில் போட்டு தங்கமணியிடம் கொடுத்து பத்திரமாக வைக்கச் சொல்வார். ” என்ன இவ்வளவு எழுதியிருக்கீங்க ஐயா? எனக்கு உங்க மனக்குமுறல் தெரியுங்க. அண்ணி கிட்ட பேசி கொஞ்சம் மனசை திடம் பண்ணிக்கங்க ஐயா” என்று தங்கமணி சொல்லும்போது,”‘இது என் மனசாட்சிப்படி செய்றேன். அதனால அதையெல்லாம் அவகிட்ட சொல்லி அவளைக் குழப்ப விரும்பலை. என் காலத்துக்கு அப்புறம் அவகிட்ட இதை நீ கொடு. அதுவரை உங்கிட்ட இருக்கட்டும். நீயும் திறந்து பார்க்காதே.” என்று சொல்வார்.

அன்று காலை தோட்டத்திற்கு சென்று விட்டு, காலை உணவை முடித்து பின்னர் அரும்பங்குடிக்கு கிளம்பிக் கொண்டிருந்த கலியபெருமாள் ‘ நெஞ்சு வலி போல் இருக்கிறது’ என்று கூறி உட்கார்ந்தவர் அப்படியே சாய்ந்து விட்டார். ராசாம்பாள் அலறியபடி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் துணையுடன் அருகில் இருந்த மருத்துவ மனையில் காண்பிக்கும்போது அவர் காலமாகி விட்டார் என்று மருத்துவர் சொன்னது ராசாம்பாளின் தலையில் இடியை இறக்கியது போல் இருந்தது. இப்போது வரை அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

கலியபெருமாள் பக்கத்து உறவினர்கள் சிலரும், ராசாம்பாளின் தூரத்து சொந்தம் இருவரும் அன்று மாலை வந்து சேர்ந்தனர். அன்றிரவு அரளிக்கரை ஊர் மக்களுக்கு மிகவும் சோகமான இரவாகச் சென்றது.

மருதமுத்து மறுநாள் காலையில் வருவதாகச் சொல்லி விட்டு, வேறு வேலைகள் தொடர்பாக தம் ஊருக்கு சென்று விட்டார். ஆனால் கமலவாணி மட்டும் ‘ நான் ராசாம்பாளுக்குத் துணையாக இருக்கிறேன்.’ என்று கூறி இங்கேயே தங்கி விட்டாள்.

மறுநாள் காலை கலியபெருமாளின் அந்திமச் சடங்கு நடைபெற்று எல்லா ஊர் மக்களும் சேர்ந்து அவருக்கு பிரியாவிடை தந்து அக்னி கடவுளிடம் அனுப்பி வைத்துத் திரும்பினார்கள்.

அடுத்த பதினெட்டு நாட்களில் எல்லாம் முடிந்து ராசாம்பாள் தனிமைக்குத் தள்ளப்பட்டாள். இரண்டாம் நாளில் செய்தி அறிந்து மிகவும் சோகத்தோடு வந்திருந்த தங்கமணி இன்றுவரை ராசாம்பாளுக்கு உதவியாக இருந்தது மட்டும் அல்லாமல் அவளுக்கு ஆறுதல் கூறி தேற்றியபடி இருந்தார். தங்கமணி தற்போது கவரிபுரம் விளையாட்டு அரங்கத்தின் நிர்வாக வேலையில் இருக்கிறார். கலியபெருமாள் தன்னுடைய செல்வாக்கின் மூலம் அவருக்கு தெரிந்தவர்கள் மூலம் தங்கமணிக்கு அந்த வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார் அந்நாளில்.இடையிடையே தங்கமணி நேரம் கிடைக்கும்போது இவர்களை வந்து பார்த்து ஓரிரு நாட்கள் தங்கி விட்டுப்போகும் வழக்கம் உண்டு.

அதையும் தவிர, ” அண்ணி, உங்களுக்கு சரின்னு பட்டுதுன்னா நான் அந்த வேலையை விட்டு வரேன். நம்ம வீட்டுக்கு உதவியா இருக்கேன் கடைசி வரை. ஐயா எனக்கு செஞ்சதுக்கு கைமாறுங்கற மன நிம்மதி கிடைக்கும். என்ன சொல்றீங்க அண்ணி?” என்று கேட்டார்.

“இருக்கட்டும்ப்பா, கொஞ்ச நாள் போகட்டும்.எனக்கு கொஞ்சம் டைம் கொடு.ஆனால் இன்னும் ரெண்டு மூணு வாரம் நீ இங்கே எனக்கு உதவியா இருந்தா சந்தோஷமா இருக்கும்” என்றாள் ராசாம்பாள்.

“நிச்சயமா இருக்கேன் அண்ணி. அது என் கடமை” என்று கூறி தங்கியிருந்தார் தங்கமணி.

இந்த சமயத்தில் மருதமுத்துவும், கமலவாணியும் ராசாம்பாளை தங்களுடன் அரும்பங்குடிக்கு வந்துவிடும்படியும், தங்கள் வீட்டிலேயே தங்கி இருக்கலாம் எனவும் கூறி கட்டாயப்படுத்தினர். அரளிக்குடி மக்கள் பலரும் “ராசாம்பாள் அம்மா, அது நல்ல யோசனை. அவங்க தங்கமா பாத்துக்குவாங்க

உங்களை.நல்ல மனுஷங்க. இங்கே தனியா இருந்தா இன்னும் கவலையும் மனக்கஷ்டமும் அதிகமாகும் உங்களுக்கு” என்று சொல்லிவிட்டு ” அப்படியே உங்களுக்கு இந்த ஊர் நினைப்பு வரும்போது வந்துட்டு போங்க. தங்கமணி ஐயா கிட்ட கொடுத்துட்டு போங்க. அவங்களைப் பத்திதான் உங்களுக்கு நல்லாவே தெரியும்.” என்று மாறி மாறி சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

மேலும் இரண்டு வாரங்கள் பறந்து விட்டது. ஒரு நாள் காலை தங்கமணி ராசாம்பாளிடம் ” அண்ணி இந்தாங்க இந்த பைகள். இதில் கலியபெருமாள் ஐயா எழுதிய நோட்டுகள், டயரிகள் எல்லாம் இருக்கு. அவர் காலம் முடிந்த பிறகு உங்களிடம் தரவேண்டும் அப்படீன்னு சொல்லி எங்கிட்ட கொடுத்து வச்சிருந்தாரு. நீங்க கொஞ்சம் சாந்தம் ஆன பிறகு உங்க கிட்ட தரலாம்னு நினைச்சு இன்னிக்கு எடுத்து வந்தேன்.” என்றார்.

ராசாம்பாள் அதை வாங்கிக் கொண்டு “இனிமேல் இதைப் படிச்சுட்டு என்ன செய்யப் போறேன்? படிக்க படிக்க அவர் ஞாபகம் வந்துட்டே இருக்கும்.ஆனாலும் இது ஒரு பொக்கிஷம்தான் எனக்கு. என்னிக்காவது நான் படிக்கணும்னு நினைக்கறப்போ படிப்பேன். இதைப் பத்திரமா வச்சிருந்ததுக்கு உனக்கு நன்றி” என்று சொன்னாள்.

அப்போது தங்கமணி “அண்ணி, நான் உங்களுக்கு ஒண்ணு சொல்றேன். என்னை நம்புங்க. இந்த பண்ணைக்காரர் மருதமுத்து, அவரு சம்சாரம் கமலவாணி இவங்களை நம்பவே நம்பாதீங்க. இந்த நயவஞ்சகர்களாலதான் நம்ம ஐயா சொத்தை இழந்தார்.அவரை அநாவசியமா சிக்கலில் மாட்டி விட்டாங்க. இவங்களும், மருதமுத்துவோட மாமா நமசிவாயமும்தான். எனக்கு தெரியும் இந்த விஷயம். ஆனால் ஐயா கிட்ட சத்தியம் செஞ்சு கொடுத்திருந்தேன் உங்க கிட்ட இதை சொல்ல மாட்டேன்னு. ஆனால் இப்ப சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு” என்றார்.

உடனே ராசாம்பாள் “என்னப்பா சொல்றே நீ? ஏற்கனவே நான் ரொம்ப குழம்பி போய் இருக்கேன். என்ன நடந்தது? இவருக்கு துரோகம் செய்யற அளவுக்கு கெட்ட எண்ணம் உள்ளவங்க இருப்பாங்களா? அதுவும் நல்ல நேரத்தில் நம்ப சொத்துக்களை நல்ல விலைக்கு வாங்கின மருதண்ணனா ஏதோ கெடுதல் செய்வாரு?” என்று கவலையுடன் கேட்டாள்.

“அது எப்படி ஆரம்பம் ஆச்சுதுன்னா” என்று விளக்கிச் சொல்லத் தொடங்கிய நேரத்தில் தங்கமணியின் கைபேசி ஒலித்தது. “ஒரு நிமிஷம் அண்ணி, பேசிட்டு வரேன்” என்று வெளியே சென்று பேச ஆரம்பித்தார்.

ஐந்து நிமிடங்களுக்கு பிறகு உள்ளே வந்த தங்கமணி “அண்ணி, நான் அர்ஜென்ட்டா கவரிபுரம் போகணும். ஏதோ பெரிய விளையாட்டு குழு ஆஃபீஸ் ஆளுங்க ஸ்டேடியம் புக்கிங் விஷயமா பேச கூப்பிடறாங்க. நாளை அல்லது நாளை மறுநாள் வந்துடுவேன். அதுவரை நீங்க ஜாக்கிரதையா இருங்க அண்ணி. கவலைப்படாதீங்க. நான் உங்களுக்கு என்னிக்கும் உதவியா இருப்பேன்” என்று கூறினார்.

“சரிப்பா, போய்ட்டு வா. அது முக்கியம். அதை முடிச்சுட்டு வா. நான் கவனமா இருப்பேன். நீ பதறாதே. போய்ட்டு சீக்கிரம் வா.” என்று கூறி தங்கமணியை அனுப்பி வைத்தாள் ராசாம்பாள்.

தங்கமணி புறப்பட்டுச் சென்ற பின்னர், அவர் கொடுத்த பையை தன் அறையில் உள்ள அலமாரியில் வைத்து விட்டு, தோட்டத்துப் பக்கம் சென்றாள். தோட்டத்தில் ஒரு பக்கம் அவரைக்கொடி பந்தலில் நன்கு படர்ந்திருந்தது.கலியபெருமாளும், அவளும் சேர்ந்து அமைத்த பந்தல் அது. இன்னொரு புறம் வெண்டைக்காய்கள் காய்த்து இருந்தன நிறைய அளவில். அதேபோல் கத்தரிச்செடிகள் அழகாக பிஞ்சுகள் விட்டிருந்தன. ஒரு ஓரத்தில் பாத்தியில் இருந்த முளைக்கீரை கொஞ்சம் பிடுங்கிக் கொண்டு, தனக்கு மட்டும் காய் செய்யும் அளவுக்கு வெண்டைக்காய் பறித்துக்கொண்டு சமையலறை சென்றாள் ராசாம்பாள்.

மதிய உணவுக்குப் பின், சற்று கண்ணயர்ந்து படுத்த ராசாம்பாள், திடீரென யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்தாள். கதவைத் திறந்தபோது அங்கே கமலவாணி நின்றிருந்ததைக் கண்டாள். ” அக்கா, வாங்க, சாப்டுட்டு அப்படியே அசந்துட்டேன்.கிட்டத்தட்ட இருபது நாள் ஆயிடுச்சு நான் நல்ல தூக்கம் தூங்கி. உள்ளே வாங்க அக்கா. என்ன விஷயம்? திடீர்னு ஃபோன் கூட பண்ணாம வந்திருக்கீங்க? ” என்று அவளை வரவேற்றாள் ராசாம்பாள்.

“ராசாம்பாள், நீ என்னை உண்மையாவே உன் அக்காங்கிற மரியாதை மனசுல வச்சிருந்தீன்னா இப்பவே என்னோட கிளம்பி எங்க வீட்டுக்கு வரே.அண்ணன் உன்னை கையோட கூட்டி வரச்சொல்லி என்னை அனுப்பிருக்காரு. சாக்கு ஏதும் சொல்லாம கிளம்பு. உனக்கு ஒரு மணிநேரம் டைம் தரேன்” என்று கமலவாணி படபடவென பேசி முடித்தாள்.

“அதெல்லாம் இல்லேக்கா.நான் உங்க பேச்சை தட்ட மாட்டேன். இன்னும் ஒரு வாரம் டைம் கொடுங்க. தங்கமணி வருவார். அவரு கிட்ட எல்லாத்தையும் ஒப்படைச்சுட்டு கிளம்பி வந்துடறேன். நீங்க என்னை நம்புங்க. எனக்குன்னு உங்களைத் தவிர வேற யாரு இருக்காங்க? அதனால நான் அங்கேதான் வருவேன் ” என்று ஆணித்தரமாக பதிலளித்தாள் ராசாம்பாள்.

கமலவாணி அரை மனதுடன் “சரி, ஒரு வாரம் டைம், இல்லேன்னா நாங்க ரெண்டு பேரும் வந்து உன்னை தூக்கிட்டு போய்டுவோம். நான் கிளம்பறேன் இப்போ” என்று புறப்படத் தயாரானவளை உட்காரச் சொல்லி விட்டு அரைமணி நேரத்தில் பக்கோடாவும், காஃபியும் தயார் செய்து கொடுத்தாள். “அருமையா இருக்கு” என்று சொல்லி ருசித்து சாப்பிட்டு விட்டு கிளம்பிச் சென்றாள்.

அன்றிரவு ராசாம்பாளுக்கு தூக்கம் வராமல் ஏதேதோ நினைவுகளால் புரண்டு புரண்டு படுத்தவள், எழுந்து உட்கார்ந்து தங்கமணி கொடுத்த பையிலிருந்து கலியபெருமாள் எழுதியிருந்த நோட்டுப் புத்தகங்களைப் பிரித்து படிக்க ஆரம்பித்தாள். ஒன்று, இரண்டு என்று ஐந்து நோட்டுப் புத்தகங்களை படித்து முடிக்கும் போது அவள் கண்களில் நீர் ஆறாகப் பெருகியது. ஆத்திரம், கோபம் போன்ற உணர்வுகளால் நடுங்கியது உடல். விடிவதற்கு சில மணிநேரம் முன்பு வரை படித்துவிட்டு எல்லாவற்றையும் மூடி வைத்து பைக்குள் இட்டு அவளுடைய பெட்டியில் வைத்து விட்டு வந்து படுத்தாள். படுக்கும் முன் கலியபெருமாள் புகைப்படத்தை பார்த்து வணங்கிவிட்டு தூங்கப் போனாள்.

எப்போதும் ஆறுமணிக்கு முன்பே எழுந்து விடும் ராசாம்பாள் அன்று ஏழரை மணிக்குத்தான் எழுந்தாள். எழுந்து முகம் கழுவி காஃபியை குடிக்கும்போது ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தாள்.மிகவும் தெளிவாக மாறினாள்.பிறகு சுறுசுறுப்பாக குளித்து முடித்துவிட்டு கலியபெருமாள் படத்தை வணங்கி ” என்னை ஆசீர்வதியுங்கள். என் முடிவை நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.” என்றாள். பிறகு கைபேசியில் ஒருவரிடம் பேசிவிட்டு சில விவரங்களைக் கூறினாள்.

மறுநாள் தங்கமணி வந்தார். ராசாம்பாள் அவரிடம் இரண்டு மணி நேரம் நிறைய விஷயங்கள் பேசிவிட்டு தான் படித்தவைகள் பற்றியும் கூறினாள்.

பிறகு மறுநாள் அவரை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளச் சொல்லி விட்டு மருதமுத்து, கமலவாணி தம்பதிகளுக்கு கைபேசி மூலம் தான் வருவதை தெரிவித்தாள். அவர்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் கார் அனுப்பி வைத்தனர். அவள் அந்த வீட்டை விட்டு மருதமுத்து வீட்டிற்குப் போவதை மிகவும் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் தங்கமணி. இருந்தாலும் ராசாம்பாள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அமைதியாக இருந்து வழியனுப்பி வைத்தார்.

மருதமுத்து, கமலவாணி தம்பதிகளுக்கு தர்மராஜ் என்று ஒரு மகன். வெளிநாட்டில் படித்து விட்டு, அங்கு ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருபவன்,கிட்டத்தட்ட அங்கேயே வசிக்கும் அளவிற்கு முடிவெடுத்து இருந்து வருகிறான். அவன் இப்போது ஒரு பதினைந்து நாட்கள் விடுமுறையில் பெற்றோர்களைப் பார்க்க அரும்பங்குடிக்கு வந்திருக்கிறான்.ராசாம்பாள் தன் பெட்டியுடன் வண்டியிலிருந்து இறங்கியதும் முதலில் ஓடி வந்து தர்மராஜ்தான் வரவேற்றான்.

“ஆண்ட்டி, வாங்க, வாங்க, உங்களைப் பார்த்து எத்தனை நாளாச்சு? அன்கிள் இறந்து போனது ரொம்ப வருத்தமா இருக்கு. நான் நேத்துதான் வந்தேன். நாளைக்கு அங்கே வந்து உங்களைப் பாக்கலாம்னு இருந்தேன். ஆனால் நீங்க இங்கே வரீங்கன்னு தெரிஞ்சது.அம்மா சொன்னாங்க. உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு வெளி வராந்தாவிலேயே உக்காந்திருந்தேன். பெட்டியை கொடுங்க, நான் எடுத்துட்டு வரேன்.” என்று கூறி ராசாம்பாளின் கைகளை பிடித்துக் கொண்டு கலகலப்பாக பேசினான்.

உள்ளே அழைத்துச் சென்று கடைசிப் பகுதியில் இருந்த ஒரு அறையை ராசாம்பாளுக்கு காட்டி “இதுதான் உங்களுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கற ரூம்.இதுல எல்லா வசதிகளும் இருக்கு. ஏதாவது வேணும்னா கேளுங்க.” என்று சொன்னான் தர்மராஜ்.

அதற்குள் மருதமுத்துவும்,கமலவாணியும் ராசாம்பாளை பார்க்க வந்தனர். “இன்னிக்கு நீ ரெஸ்ட் எடுத்துக்கோ, ராசாம்பா, நாளைலேர்ந்து நீதான் நிறைய விஷயங்களை பாத்துக்கணும். எனக்கு ஃபைனான்ஸ், இவரு கொஞ்ச வருஷம் முன்னாடி வாங்கின மில் நிர்வாக விஷயம், அக்கவுண்ட்ஸ் இது சம்பந்தமா எல்லாம் நிறைய வேலை இருக்கு. அதனால இந்த வீட்டு நிர்வாகம், சமையலறை விஷயங்கள், தோட்டம் இதெல்லாம் நீதான் பாத்துக்கும்படியா இருக்கும். நீதான் அதுல எல்லாம் தேர்ச்சி பெற்றவளாச்சே” என்றாள் கமலவாணி.

“கமலா, அவளே புருஷன் காலமான சோகத்தில நொந்து வேதனையா இருக்கா. அவளைப் போய் அதைச் செய், இதைச் செய்னு சொல்லிட்டிருக்கே. ராசாம்பா, நீ எதுவும் செய்யலேன்னாலும் சரி. நிம்மதியா இங்கே இரும்மா. அது போதும் எனக்கு.” என்றார் மருதமுத்து. “கரெக்ட் டாடி.” என்று அதை ஆமோதித்தான் தர்மராஜ்.

ராசாம்பாள் உடனே ” தர்மா, நீ என் பேர்ல வச்சிருக்கற பாசம், மருது அண்ணே உங்களோட அன்பு எல்லாம் எனக்கு நல்லா தெரியும். ஆனால் நான் கமலா அண்ணிக்கு என்னாலான உதவியை செஞ்சுட்டு இங்கே இருந்தாத்தான் என் மனசுக்கு நிம்மதி கிடைக்கும். சும்மா ரெஸ்ட் எடுத்து உக்காந்திருந்தேன்னா எங்க வீட்டுக்காரர் ஞாபகம் வந்து எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்டும். அதனால என்னை வேலை செய்ய விடுங்க.அதான் நல்லது.” என்று ஒரே மூச்சில் பேசினாள்.

கமலவாணி அவளைக் கட்டியணைத்து “நீ இங்கே வந்தது எனக்கு இன்னும் பலம் அதிகமாயிடுச்சு.பையை வச்சுட்டு வா. நம்ம தோட்டத்தை பாக்கலாம்.” என்றாள். மருதமுத்துவும், தர்மராஜும் புன்னகைத்தபடியே அங்கிருந்து நகர்ந்தனர்.

அன்றிலிருந்து ராசாம்பாள் அந்த வீட்டு நிர்வாகம், தோட்ட நிர்வாகம், சமையல் வேலைகள் அனைத்திலும் முழுவதும் ஈடுபட்டு அடுத்த பத்து நாட்களுக்கு அனைவரையும் பிரமிக்கச் செய்து விட்டாள். இதற்கிடையில் அவள் இங்கு வருவதற்கு முன்னர் பேசி வைத்திருந்தபடி சில அழகான பூச்செடிகள் வந்து இறங்கியவைகளை தோட்டத்திற்கு கொண்டு சென்று நேர்த்தியான முறையில் வைத்தாள். மருதமுத்து குடும்பத்தின் மூவருக்கும் ராசாம்பாளின் நடவடிக்கைகள் மிகவும் பிடித்துப் போனது.

இந்த பத்து நாட்களில் தர்மராஜ் ராசாம்பாளின் பணித்திறமைகளை பார்த்து அசந்து விட்டான். “ஆண்ட்டி நீங்க ஃபாரின்ல இருக்க வேண்டியவங்க. என்கூட வந்துடறீங்களா, விசா எடுத்துடறேன்” என்று கேட்டபோது ” நீ இளைய வயசுப்பா. உனக்கு உதவியா இருக்கறதை விட உன்னைப் பெத்தவங்களுக்கு இந்த சமயத்தில் நான் உதவியா இருக்கறதுதான் நல்லது இல்லையா கண்ணூ?” என்று சொன்னாள். கமலவாணிக்கு அவளுடைய மற்ற பணிகளைப் பார்க்க இப்போது நிறைய நேரம் கிடைத்தது.

ஒரு இரவில் ராசாம்பாள் வேலைகள் முடிந்த பிறகு வெளியே வராந்தாவில் காற்று வாங்க நின்று கொண்டிருந்தாள். உள்ளிருந்து மருதமுத்துவும், கமலவாணியும் மெதுவாக பேசிக் கொண்டிருந்தது அவள் காதில் விழுந்தது. அவர்கள் ராசாம்பாள் வராந்தா ஓரத்தில் நிற்பதை அறியவில்லை.

கமலவாணி கேட்டாள்.”ஏங்க, உங்க மாமாவை வச்சு எப்படியோ அந்த சொத்துக்கள் நம்ம கைக்கு வந்த விவரம் அவளுக்கு தெரிஞ்சிருக்காதே?”

மருதமுத்து சொன்னார். “நாம எல்லாரும் ரகசியமாதானே திட்டம் போட்டோம்! அந்த விவரம் இறந்து போனவருக்கே தெரியாது. அதனால அவளுக்கும் தெரிய வாய்ப்பே இல்லை. இன்னொண்ணு, இதையெல்லாம் நீ தர்மராஜுகிட்ட எந்த நாளிலயும் சொல்லிடாதே. நீ ஒண்ணும் கவலைப் படாமல் இரு. அப்போ நாம தப்பு செஞ்சிருந்தாலும் அதுக்கு பரிகாரமா கடைசி வரை ஆதரவு கொடுத்துட்டா எல்லாம் சரியாயிடும். எதையும் உணர்ச்சி வசப்பட்டு வெளிக் காட்டிடாதே நீ”. பிறகு அவர்கள் தூங்கப் போனார்கள்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராசாம்பாள் கண்கள் ஈரமாகின. ” கடவுளே, நீதான் எனக்கு துணையா இருக்கணும்” என்று வேண்டி விட்டு தன் அறைக்குள் சென்றாள்.சீக்கிரமே உறங்கிப் போனாள்.

மறுநாள், காலை உணவு உண்டு விட்டு “ராசாம்பாள், இன்னிக்கு மதியம் சாப்பாட்டுக்கு மாமா வர்றாரு. உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன், நமசிவாயம் மாமா. அதனால் அதுக்கு தகுந்த மாதிரி சமையல் செஞ்சுடுங்க.” என்றார் மருதமுத்து.

“ஆமாம் ராசாம்பா, அவரு ராத்திரி டின்னரும் முடிச்சுட்டுதான் போவாரு. அவருக்கு வெஜிடபிள் சூப்பு, பசலைக்கீரை கூட்டு, மாதுளை, திராட்சை ஜூஸ் இதெல்லாம் ரொம்ப பிடிக்கும். இதுல எது முடியுமோ தயார் பண்ணி வைங்க. அவரு ஒரு மணிக்குதான் வருவாரு. நாங்க அதுக்கு அரை மணிநேரம் முன்னாடியே வந்துடுவோம்.” என்று சொன்னாள் கமலவாணி.

“கவலைப்படாதீங்க, அசத்திடலாம்” என்று ராசாம்பாள் கூறியதைக் கேட்டு இருவரும் சிரித்தபடி கிளம்பினார்கள். அவர்கள் சென்றவுடன் அன்றைக்கு வேண்டிய மதிய உணவுப்பட்டியலை மனதில் எண்ணி அதற்கு தகுந்தாற்போல் சமைக்க ஆரம்பித்தாள். அடுத்த இரண்டரை மணிநேரத்தில் ஒரு அருமையான உணவு தயாராகிவிட்டது. ராசாம்பாள் மனதிற்குள் ஒரு திருப்தி நிலவியது.

சரியாக பனிரெண்டு நாற்பதுக்கு கமலவாணி, மருதமுத்து இருவரும் வந்தனர்.அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது நமசிவாயம் மாமா வந்தார்.

நமசிவாயம் மருதமுத்துவின் தாய் வழி ஒன்று விட்ட மாமா உறவு. ஒண்டிக்கட்டை. அரும்பங்குடியிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூவரசூர் என்ற ஊரில் வசிக்கிறார். நமசிவாயம் விவசாய நிலங்கள் விற்பனை, வணிகக் கட்டுமான நிலங்கள் விற்பனை இவைகளுக்கு இடைத்தரகராக வேலை செய்து பணம் ஈட்டுபவர். அதிகார இடங்களில் தனக்கென ஒரு செல்வாக்கை ஏற்படுத்திக் கொண்டவர். மூன்று நான்கு மாதத்திற்கு ஒரு முறை மருதமுத்து தம்பதியினரை பார்க்க வருவார். அதுபோலவே இன்றும் வந்துள்ளார்.

கமலவாணி ராசாம்பாளை நமசிவாயத்திற்கு அறிமுகம் செய்ய முற்படும்போது “எனக்கு தெரியும் ராசாம்பாளை.நான் கலியபெருமாள் வீட்டிற்கு ரெண்டு மூணு தடவை போனபோது பாத்திருக்கேன்.ஆனால் ரொம்ப வருஷம் ஆயிடுச்சு.” என்று சொல்லி விட்டு ராசாம்பாளைப் பார்த்து “கலியபெருமாள் இறப்பு ரொம்ப ஷாக் எங்களுக்கு. நான் நேரில் வந்து உன்னை பாக்க முடியலே. வெளியூர்ல ஒரு மாசமா இருந்தேன். மனசை தேத்திக்கோ. நாங்க எல்லாரும் இருக்கோம் உனக்கு” என்று ஆறுதல் கூறினார்.

ராசாம்பாள் “என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க ஐயா” என்று அவர் காலைத் தொட்டு வணங்கி விட்டு “வாங்க ஐயா, சாப்பிடலாம். எல்லாம் சூடா இருக்கு. அப்புறமா பேசிட்டு இருக்கலாம்” என்று அவரையும் மற்ற இருவரையும் அழைத்தாள். அவர்கள் தயாராகி வரும் முன் ராசாம்பாள் முதல் தளத்தில் உட்கார்ந்திருந்த தர்மராஜையும் விவரங்கள் கூறி சாப்பிட அழைத்து வந்தாள்.

அனைவரும் மதிய உணவு உண்ண அமர்ந்தனர். கமலவாணி “நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். அவங்க முன்னாடி சாப்டட்டும்” என்றாள்.

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் அண்ணி. நீங்க உக்காருங்க. எனக்கு இது பெரிய வேலையே இல்லை ” என்று கூறி ராசாம்பாள் அவளையும் உட்கார வைத்து விட்டு உணவு வகைகளை கொண்டு வந்து மேசையில் வைத்தாள். “ஐயா, உங்களுக்கு வெஜிடபிள் சூப் பிடிக்கும்னாங்க. பாலக் பிடிக்கும்னாங்க. எல்லாம் செஞ்சிருக்கேன். எனக்கு தெரிஞ்ச வரை செஞ்சிருக்கேன். சாப்டுட்டு சொல்லுங்க.” என்று சொல்லி நமசிவாயத்திற்கு சூப் கப்பில் கொடுத்தாள்.” மாமா,ராசாம்பாள் அருமையா சமைக்கிறாங்க. இன்னிக்கு அதிகமாவே சாப்டப்போறீங்க நீங்க” என்று கூறி மருதமுத்து சூப் சாப்பிட ஆரம்பித்தான். அதற்குள் சூடான சூப் பாதி கப் அளவிற்கு முடித்து விட்ட நமசிவாயம் “மிக அருமை.இத்தனை டேஸ்டியா சூப் ரொம்ப நாள் கழிச்சு சாப்டறேன். பாராட்டுக்கள் ராசாம்பாள்” என்று சொல்லி மற்ற உணவு வகைகளையும் ருசித்து சாப்பிட்டு ஒவ்வொரு தடவையும் பாராட்டிய வண்ணம் இருந்தார்.

ஒரு வழியாக எல்லோரும் சாப்பிட்டபின் ராசாம்பாளும் உண்டு பின்னர் வெளி வரவேற்பு அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். தர்மராஜிடம் தன்னுடைய செல்வாக்கின் பெருமை பற்றியும், கலியபெருமாளுக்கு பொதுநலச்செயல்களில் சிக்கல் ஏற்பட்ட போது அவரை எப்படி மருதமுத்துவின் உதவி மூலம் காப்பாற்றினார் என்றும் சிலாகித்து விவரித்தார். பிறகு சிறிது நேரத்தில் ” மருது, நான் ராத்திரி வரை இருக்கலாம்னுதான் வந்தேன். ஆனால் எனக்கு வயிறு சரியில்லை போல் தெரிகிறது. நானும் ஒரு மாசமா வெளியூர் சாப்பாடு சாப்பிட்டு இருக்கேன் இல்லையா, அதைத் தவிர இன்னிக்கு ராசாம்பா கைப்பக்குவம் ஒரு கவளம் அதிகமாவே சாப்பிட வச்சிடுச்சு. நான் உடனே கிளம்பறேன். ஏதாவது இருந்தாலும் எப்பவும் நான் காண்பிக்கற டாக்டர் அங்கே பக்கத்து தெரு தான். அதனால் அடுத்த மாசம் வரும் போது தங்கறேன். முக்கியமா தர்மாவைப் பாக்க வந்தேன். பாத்துட்டேன். ராசாம்பாள் போட்ட சாப்பாடு ஒரு போனஸ்” என்று கூறி விறுவிறுவென கிளம்பிப் போனார்.

அன்றிரவு பத்து மணிக்கு மருதமுத்துவின் கைபேசி ஒலித்தது. பேசி முடித்த மருதமுத்து அழ ஆரம்பித்தான். கமலவாணி, தர்மராஜ், ராசாம்பாள் ” என்ன ஆச்சு? ஏன் அழறீங்க ” என்று கேட்க, அவன் மிகவும் சோகமான குரலில் ” மாமா கொஞ்ச நேரம் முன்னாடி ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரு, கமலா. ” என்று அலறினான். எல்லோரும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர். கமலவாணி கையை அழுத்தி பிடித்து ஆறுதல் வார்த்தைகள் கூறினாள் ராசாம்பாள். “அந்த ஆத்மாவுக்கு சமைச்சு போட்டவங்கறதை நினைச்சு பெருமைப்படறதா, இல்லே, இன்னும் நிறைய தடவை அவருக்கு சமைச்சு தரமுடியலயேன்னு அழறதான்னு தெரியலே அண்ணி எனக்கு” என்று அழுதபடி கூறினாள்.

தர்மராஜ் மிகவும் வருத்தத்துடன் “சரி, கிளம்புங்க உடனே போய் காரியங்களை கிட்ட நின்னு முடிச்சுட்டு வரலாம். அவருக்கு ஒருத்தரும் இல்லை அங்கே.” என்றான்.

அடுத்த பதினெட்டு நாட்கள் மிகவும் சோகமாக நகர்ந்தன அவர்களுக்கு. நமசிவாயத்தின் இறுதிக் காரியங்களை முடித்து விட்டு ஒருநாள் வீட்டில் கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்த மருதமுத்துவிடம் ” நீங்க பேசாம ரெஸ்ட் எடுங்க இன்னிக்கு மில்லுக்கெல்லாம் வரவேண்டாம். இன்னொரு விஷயம், தர்மா லீவை இன்னும் ஒரு மாசத்துக்கு எக்ஸ்டெண்ட் பண்ணிட்டான். ஒர்க் ஃப்ரம் ஹோம் அட்ஜஸ்ட்மென்ட்ல பண்ணிருக்கான்.”என்று கூறி விட்டு கமலவாணி கிளம்பினாள்.

தர்மராஜ் அங்கே வந்து “அம்மா சொல்றது சரிதான். நீங்க ரெஸ்ட் எடுங்க. உங்களை பார்த்தாலே ரொம்ப டயர்டா இருக்கற மாதிரி தெரியுது.” என்று கூறி ராசாம்பாளின் பக்கம் திரும்பி” ஆண்ட்டி, ஏதாவது ஜூஸ் தயார் பண்ணுங்க.எல்லாரும் சாப்பிடலாம். அப்பாவுக்கு கொஞ்சம் எனர்ஜி கிடைக்கும்” என்றான்.

ராசாம்பாள் “சரி, தர்மா” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று அரைமணி நேரத்தில் பழச்சாறு தயார் செய்து வந்தாள். மருதமுத்துவிற்கு தனி தம்ளரில் எடுத்து வந்தவள், தர்மராஜை அழைத்தாள். தர்மராஜிடம் “தர்மா, அப்பாவுக்கு ஒரு டம்ளர்ல ஜூஸ் கொடுத்திருக்கேன். இந்த ஜக்ல மீதி இருக்கு. உனக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துகிட்டு பாக்கியை அப்படியே ஃபிரிட்ஜ்ல வச்சுடுப்பா. எனக்கு தோட்டத்தில் கொஞ்சம் வேலை இருக்கு.” என்று கூறிவிட்டு சென்றாள்.”ஓகே, ஆண்ட்டி ” என்றான்.

பிறகு சில பூச்செடிகளை மாற்றியும், சில வேண்டாத செடிகளை அகற்றியும் பணியாளர்கள் உதவியுடன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள்

ராசாம்பாள். ஒரு மணி நேரம் சென்று தர்மராஜ் தோட்டத்திற்கு பதட்டத்துடன் கத்தியபடி வந்து உள்ளே அழைத்துச் சென்று காட்டினான். அங்கே மருதமுத்து நெஞ்சைத் தொட்டபடி வாயில் ரத்தம் லேசாக வழிந்த நிலையில் கீழே விழுந்து கிடந்தார்.” என்னப்பா ஆச்சு, இப்பதானே நல்லா பேசிட்டிருந்தாரு. டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போக வேண்டாமா? இப்படி நின்னுட்டு இருக்கியே தர்மா? அண்ணிக்கு கூப்பிட்டு சேதி சொல்லு. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலே” என்று அழுதபடியே அவர் மேசையில் தாறுமாறாக வைத்திருந்த தம்ளர்களை எடுத்துக் கழுவினாள்

“ஆண்ட்டி, அவருக்கு மாஸ்ஸிவ் ஹார்ட் அட்டாக்னு நினைக்கிறேன். டாக்டருக்கு ஃபோன் பண்ணிட்டேன். ஜூஸ் சாப்டுட்டு நல்லாத்தான் பேசிட்டு இருந்தாரு. அவர் மாமா போனதிலேர்ந்து மன அழுத்தத்திலேயே இருந்தாரு.” என்று சொல்லும்போது மருத்துவர் வந்து விட்டார். தர்மராஜ் அழுகையை அடக்க முடியாமல் ராசாம்பாள் தோளில் சாய்ந்து கொண்டான்.

பரிசோதனை செய்தபின் மருத்துவர் அதையேதான் சொன்னார். “லாஸ்ட் மன்த் டெஸ்ட் பண்ணும்போது அவர் கிட்ட சொல்லியிருந்தேன். பிரஷர் அதிகமா இருக்கு. ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்துக்காதீங்க ன்னு. ஏதோ உணர்வு பூர்வமான மன அழுத்தம் இது. அதனாலதான் இந்த ஹார்ட் அட்டாக், வெரி சிவியர் , அதன் காரணமாகவே இவர் உயிரிழப்பு நடந்திருக்கிறது. அயாம் வெரி ஸாரி தர்மா” என்று கூறி விட்டு சென்றார்.

அலறிக்கொண்டே வந்து சேர்ந்த கமலவாணி இறந்து கிடந்த மருதமுத்து உடல் மீது விழுந்து புரண்டாள். ராசாம்பாள், தர்மராஜ் மற்ற பணியாளர்கள் எல்லோரும் தாங்க முடியாத துக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்த செய்தி கேட்டு அவ்வூர் மக்கள் அக்கம் பக்கத்து ஊர் மக்கள், மில் ஊழியர்கள் அனைவரும் வந்த வண்ணம் இருந்தனர். எல்லாரையும் ராசாம்பாள் பணியாளர் உதவியுடன் சமாளித்தாள்.மருதமுத்துவின் அந்திமக் காரியங்கள் பெரிய அளவில் நடந்தது. சிலர் அவரை மிகவும் பாராட்டியும் சிலர் அவர் சுயநலவாதி, பிறர் கஷ்டத்தை உணரமாட்டார் என்று கருத்துகள் கூறி வந்ததை ராசாம்பாள் கவனித்தாள்.

கமலவாணி அடுத்த மூன்று வாரங்களில் நடைப்பிணம் போல் ஆனாள். தினந்தோறும் ராசாம்பாளிடம் ‘நான் செஞ்சது தப்புதான். அதனாலதான் இந்த தண்டனை ‘ என்றும் ‘துரோகம் செஞ்சது சும்மா விடாது’ என்றும் மனநலம் பாதித்த பெண்மணி போல் புலம்பிக் கொண்டே இருந்தாள். தர்மராஜ் அவளை மருத்துவரிடம் அழைத்துப் போய் காண்பிக்கும்போது ” தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டிருக்காங்க. நல்ல தூக்கம், ரெஸ்ட் ஒரு வாரம் எடுத்துட்டாங்கன்னா சரியாகிடும்” என்றார் அவர்.மருத்துவர் எழுதித்தந்த

மருந்துகளை வாங்கி வந்து எதை எப்போது தரவேண்டும் என்று ராசாம்பாளிடம் விளக்கினான். கமலவாணியை அடுத்த ஒரு ஐந்து நாட்களுக்கு கண்கள் போல் கவனித்து வந்தாள் ராசாம்பாள். “ஆண்ட்டி நைட்ல சில சமயங்களில் தூங்காம இருந்திடுவாங்க. அதனால இந்த தூக்க மாத்திரையையும் சேர்த்துக் கொடுங்க” என்று சொல்லி விட்டு ” நம்ம வீட்டு எமர்ஜென்சி பத்தி சொல்லி இன்னும் மூணு வாரத்துக்கு லீவு எக்ஸ்டென்ஷன் வாங்கிட்டேன்” என்று சொன்னான். “ரொம்ப நல்ல காரியம் செஞ்சேப்பா தர்மா.கமலா அண்ணி எவ்வளவு தைரியமாவும், சுறுசுறுப்பாவும் இருந்தாங்களோ அதுக்கு நேர் மாறாக இப்போ சுருங்கி வெறும் பொம்மை மாதிரி இருக்கறதைப் பாத்து, பாத்து எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு தர்மா. நீயும் இங்கே இருந்தா எனக்கு தெம்பா இருக்கும்.” என்றாள் ராசாம்பாள்.

நான்கு நாட்கள் சென்ற பின்னர் ஒரு இரவில் கமலவாணி “ராசாம்பா, மத்யானம் சாப்ட்டது இன்னும் ஃபுல்லா இருக்கற மாதிரி தெரியுது. எனக்கு நைட்டு ஒண்ணும் வேண்டாம்” என்றாள். ராசாம்பாள் “வெறும் வயித்தோட படுக்காதீங்க அண்ணி. மாத்திரை எல்லாம் சாப்பிடணும். நான் நல்லா காய்ச்சி பசும்பால் ஒரு தம்ளர் தரேன். கொஞ்சம் ஜாதிக்காய் பொடி போட்டு தரேன். தூக்கம் நல்லா வரும். அதுக்கு முன்னாடி வயிறு உப்புசமா இருக்கறதுக்கு ஓமம் நுணுக்கி வெந்நீர்ல சாப்டுங்க.” என்றாள் “வேண்டாம், தனித்தனியா கொடுக்க வேண்டாம். எல்லாத்தையும் அந்த பாலிலேயே போட்டு கொடு. அதை குடிச்சிட்டு மாத்திரையும் சாப்டறேன் ” என்றாள் கமலவாணி. “சரி அண்ணி, அப்படியே செய்றேன்” என்று கூறிவிட்டு, தர்மராஜுக்கு இரவு உணவு பரிமாறினாள் ராசாம்பாள். “அம்மா சாப்டுட்டாங்களா?” அவன் கேட்டபோது விவரத்தை கூறினாள். “சரி, ஆண்ட்டி, நீங்க பாத்துக்கங்க” என்று கூறி உணவருந்தி விட்டு, கமலவாணியிடம் சொல்லி விட்டு அவன் அறைக்கு சென்றான்.

அதன் பின்னர் ராசாம்பாள் உணவருந்தி விட்டு கமலவாணிக்கு அவள் கேட்டபடி கொடுத்தாள். “நல்ல பால் ராசாம்பா, ஆனால் இந்த பொடியெல்லாம் கலந்ததால கொஞ்சம் கசப்பு. ஆனால் ஏலக்காய் எல்லாம் போட்டு காச்சிருக்கே. இதமா இருக்கு” என்று கூறி குடித்து விட்டு ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து ராசாம்பாள் தந்த மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டாள். அவளருகே உட்கார்ந்திருந்த ராசாம்பாள், அவள் உறங்கிய பின் தன் அறைக்குள் சென்றாள். தன் கணவர் படத்தை உற்று நோக்கி வணங்கிவிட்டு, வெளி வராந்தாவிற்கு சென்று தங்கமணியிடம் கைபேசியில் அழைத்துப் பேசினாள்.பின்னர் தூங்கச் சென்றாள்.

மறுநாள் காலை எழுந்து ராசாம்பாள் எப்போதும் போல் பணிகளைச் செய்து, கையில் காஃபியை எடுத்துக் கொண்டு கமலவாணி அறைக்குச் சென்றபோது, அவள் ஒரு பக்கமாக படுத்திருந்தாள். அவளை எழுப்புவதற்காக தட்டி, இவள் பக்கம் திருப்புகையில், அவள் உயிருடன் இல்லை என்று தெரிய வந்தது. வாயில் லேசாக ரத்தம் வழிந்திருந்தது. “அய்யோ, அய்யோ” என்று அலறிக்கொண்டே மேலே தர்மராஜ் அறைக்கதவை தடதடவென தட்டி அவன் மிரண்டு போய் எழுந்து வந்தான். அழுகைக் குரல்களுக்கிடையே ராசாம்பாள் விஷயத்தை சொல்ல அவனும் “அம்மா” என்று கத்திகொண்டே கமலவாணி இருந்த அறைக்குள் நுழைந்து தலையில் அடித்துக் கொண்டு அழுதான். ஊர் முழுவதும் விஷயம் பரவி விட்டது சற்று நேரத்தில். மருத்துவர்கள் மன அழுத்தம், ஹார்ட் அட்டாக் என்று உறுதி செய்தனர்.

ஊர் மக்கள் தர்மராஜிடம் ” யாரோ பில்லி, சூன்யம் வச்சிருக்காங்க தம்பி. மாந்திரிகம் தெரிஞ்சவங்களை கூப்பிட்டு பூஜை செஞ்சு பாருங்க. ” என்று அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

மனதில் தாங்க முடியாத பாரத்துடன் எல்லா காரியங்களையும் இறந்த அம்மாவுக்கு செய்து விட்டு வந்த தர்மராஜ் ராசாம்பாளிடம் “ஆண்ட்டி, அப்பா, அம்மா அஸ்தியை வடக்கு நதிகளில் கரைத்து விட நாளைக்கு போய் விட்டு இன்னும் ரெண்டு நாளில் வருவேன். எனக்கு இந்த ஊரில், நாட்டில் தங்க இனிமேல் இஷ்டமில்லை. மனசு ரொம்ப பாரமா இருக்கு. நான் வரும் வரை இங்கே இருங்க. எனக்காக இதைச் செய்யுங்க அம்மா. நீங்கதான் இனி எனக்கு அம்மா மாதிரி.” என்று கண்ணீருடன் சொன்னான். “சரி தர்மா, எனக்கும் மனசு நிம்மதி இல்லாமல் திரும்ப எங்க வீட்டுக்கு போய்டலாமான்னு முடிவு செய்றதா இருந்தேன். நான் வந்ததிலேர்ந்து ஏதாவது அபகாரியம் நடந்துட்டே இருக்கு. என் ராசி அப்படி போல இருக்கு.” என்று அழுதவாறு கூறினாள். ” இல்லை அம்மா, அப்படி எல்லாம் நினைக்காதீங்க. அவங்க விதி அப்படி இருந்தா நீங்க என்ன செய்ய முடியும் அதுக்கு? நான் போய்ட்டு வந்து சொல்றேன்” என்று மறுநாள் காலையில் தர்மராஜ் கிளம்பினான்.

மூன்று நாட்கள் ராசாம்பாள் தனியாக இருந்து எல்லாவற்றையும் பணியாளர்கள், சில நேரங்களில் தங்கமணி உதவிகளுடன் சமாளித்தாள். மூன்றாம் நாள் மதியம் தர்மராஜ் திரும்பி வந்தவன் ஒரு வழக்கறிஞரை வரவழைத்து சில ஆவண வேலைகள் செய்வதில் மும்முரமாக இருந்தான். அதனால் ராசாம்பாளுடன் பேச சிறிதளவே சந்தர்ப்பம் கிடைத்தது. நான்கைந்து நாட்கள் கழித்து தர்மராஜ், வழக்கறிஞர் இருவரும் ராசாம்பாளை அலுவலக அறைக்கு அழைத்து “ராசாம்பாள், தர்மராஜ் சட்டப்படி இந்த சொத்துக்களுக்கு வாரிசாக இருந்தாலும் அவர் இதை இனி நிர்வகிக்கப் போவதில்லை.எனவே அனைத்து சொத்துக்களுக்கும் நீங்கதான் கார்டியன் என்றும் அதை விற்க, மேலும் விரிவுபடுத்த அல்லது கையாள உங்களுக்கு முழு உரிமையை அளித்து ‘பவர் ஆஃப் அட்டர்னி’ கொடுத்து ஆவணம் தயார் செய்து விட்டார். நாளைக்கு ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். நீங்க வந்து கையெழுத்து போட்டு இதை ஏத்துக்கணும்.” என்று கூற “தர்மா, இதெல்லாம் என்னப்பா” என்று ஏதோ பேச ஆரம்பித்த ராசாம்பாளின் கையைப் பிடித்து, அவள் காலைத் தொட்டு வணங்கி ” இது எனக்கு நீங்க செய்யும் பேருதவி. மறுக்கவே கூடாது” என்று கெஞ்சினான்.

அடுத்த நாள் ராசாம்பாள், மருதமுத்து, கமலவாணி, தர்மராஜ் சொத்துக்கள் அனைத்திற்கும் ‘சொத்துப்பாதுகாவலர்’ மட்டும் அல்லாது அவளுக்கு வேண்டிய மாற்றங்களை செய்து கொள்ளும் அதிகாரம் உள்ளவளாகவும் ஆனாள்.

அதற்கடுத்த வாரம் தர்மராஜ் பகுதி சோகத்துடனும் அதே நேரத்தில் ஒரு வித மன நிம்மதியுடன் வெளிநாடு கிளம்பியவனை ஆசீர்வதித்து அனுப்பினாள் ராசாம்பாள்.


ஒரு மாதம் சென்றபின் அரளிக்கரைக்கு வந்த ராசாம்பாளை தங்கமணி புன்னகையுடன் வரவேற்றார். “எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது” என்ற ராசாம்பாளிடம்” எனக்கு நம்பிக்கை உங்க பேர்ல இருந்தது.” என்று கூறினார் தங்கமணி.

மறுநாள் காலையில் கலியபெருமாள் எழுதிய முக்கியமான பகுதிகளை மீண்டும் படித்தாள். ‘ அரளிக்கரை, அரும்பங்குடி குளங்களுக்கு கான்க்ரீட் சுற்றுச் சுவர்கள் கட்டி, படித்துறைகளை சீர் செய்யவும், ஊரில் உள்ள மலையாற்றின் மதகுகளை அகலப்படுத்தவும், இந்த ஊர்களில் உள்ள பள்ளிகளில் கழிப்பறைகள், சமையல் கூடம் கட்டுவதையும் நான் ஏற்றுக் கொண்டேன் நமசிவாயம் ஐயா மூலம். அதில் சம்மந்தப்பட்ட மற்ற நபர்கள் ஏற்கனவே இந்த காரணங்களைச் சொல்லி அரசாங்க நிதி பெற்று அதை சொந்த செலவினங்கள் செய்து விட்டது எனக்கு தெரியாது. நமசிவாயம் ஐயாவிடம் சொன்னபோது அவர் காண்ட்ராக்டர் கட்டித் தந்து விடுவார். நான் வேறு டெண்டர் மூலம் என் செல்வாக்கைப் பயன்படுத்தி நிதி வாங்கிவிடுவேன். அதில் அவருக்கு கொடுத்தது போக மீதி என்னை எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னார். அவர் சொன்னபடி நடக்கவில்லை. நமசிவாயம் வேறு டெண்டர் எடுக்கவில்லை. காண்ட்ராக்டர் கேஸ் போடப் போகிறேன் என்று என்னிடம் சொன்னபோது நான் நொந்து போனேன். நான் நமசிவாயம் உதவியை நாடியபோது, இவருக்கு நெருங்கிய அரசியல் தொடர்புகள் தற்போது அதிகாரம் இழந்து விட்டார்கள், காண்ட்ராக்டர் நண்பர் பெரிய பதவியில் இருப்பதால் கேஸ் போட்டால் அவர் வெற்றி பெற்று விடுவார் என்று சொல்லி, மருதமுத்துவிடம் பேசிப் பாக்குறேன்.உன் நிலத்தில் பாதிக்கும் மேலாக அவனை நல்ல விலைக்கு வாங்கிக்கொள்ளச் சொல்கிறேன்.அது தவிர நீயே அவனுக்கு உதவியாளராக நல்ல சம்பளத்துக்கு அமர்த்தவும் ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதி அளித்தார். என் குடும்ப மானத்தைக் காக்க அதற்கு உடன்பட்டேன். நான்கைந்து வருடங்களுக்கு பின்தான் எனக்கு தெரிந்த ஒரு சார்பதிவாளர் மூலம் அறிந்தேன். இவைகள் எல்லாம் மருதமுத்து, கமலவாணி, நமசிவாயம் அவருடைய அரசியல் நண்பர்கள் உதவியுடன் திட்டம் போட்டு என் நல்ல நிலங்களை மருதமுத்துவுக்கு விற்பதற்காக போட்ட சதிகள் என்று. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மன அழுத்தம் ஏறிக்கொண்டே இருந்தது. என் அன்பு மனைவி ராசிக்காக பாதுகாத்த சொத்துக்களை துரோகிகள் ஒரே வருடத்தில் பறித்து விட்டனர். என் அன்பானவளிடம் நான் இதைச் சொல்ல விரும்பவில்லை. சொல்வதற்கு துணிவும் இல்லை. நம்மையறியாமல் அவளது நிலைமையை இன்னும் குறைத்து விட்டோமே என்ற கவலை மனதை தினமும் ரணமாக்குகிறது. கடவுள் என்றாவது ஒருநாள் அந்த துரோகிகளை தண்டிப்பார் என்று நம்புகிறேன். ராசிக்கு இந்த விஷயங்கள் என் காலத்துக்கு பிறகு தெரியட்டும்.”

படித்து முடித்த ராசாம்பாள் கலியபெருமாள் படத்தைப் பார்த்து” என்னைப் பாருங்க அத்தான், இன்னிக்கு மகிழ்ச்சியாக இருக்கேன்.நீங்க சொன்னது போல அவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுத்துவிட்டார். ஒரு சின்ன திருத்தம்தான். அவர் என்னை யூஸ் பண்ணிகிட்டார். நான் படிச்ச தாவரவியல் எனக்கு உதவியா இருந்துச்சு அத்தான். நமசிவாயம் மாமாவுக்கு ஒரு ஆறு ஆமணக்கு விதைகளை கலந்த சூப் சாப்ட்டாரு. அப்புறம் சிவப்பு பசலைக்கீரை கடைஞ்சு அதுல ஒண்ணைக்கலந்தேன். இதையெல்லாம் எல்லாரும் சாப்பிடறப்ப தனித் தனியா கப்ல கொடுத்தேன்.அவருக்குன்னு ஸ்பெஷலா வச்சிருந்த கப்ல இருந்ததை ரசிச்சு சாப்ட்டாரு அத்தான்.

நாம ஒரு முறை காட்டுமேடுல நடந்த மலர் கண்காட்சி போனப்ப பார்த்தோமே ஒரு செடி, மாங்க்ஸ்ஹூட் தமிழ்ல அதிவிஷம், விஷங்களின் அரசி அப்படீன்னு ஊதா கலர் பூவோடு இருந்ததை வாங்கிருந்தேன்.பூச்சாறு, அதோட வேர் இரண்டையும் காயவச்சு அரைச்சு வச்சிருந்ததைதான் கலந்தேன். நான் எதிர்பார்த்தபடி நாலு மணிநேரத்தில் அவர் கதை முடிஞ்சுது அத்தான்.

அடுத்தது ஏற்கனவே மாமா இறந்த சோகத்தில் ரொம்ப வருத்தத்தோடு இருந்தாரு மருதமுத்து அண்ணன். தர்மா அவருக்கு ஜூஸ் கொடுக்கச் சொன்னபோது அவருக்கு பிடிச்ச மாதிரி ஆப்பிள், கருந்திராட்சை, கலந்து ஜூஸ் தயாரிச்சேன். வேற பாத்திரத்தில் எனக்கும் தர்மாவுக்கும் வச்சுட்டு அண்ணனுக்கு பெரிய கிளாஸ்ல கொடுத்தேன். கொஞ்சம் அதிக டோஸேஜ்தான். ஒரு மணி நேரத்திலேயே ஹார்ட் நின்னு போயிடுச்சு அத்தான்.

கொஞ்ச நாளுக்கப்புறம் நம்ப கமலவாணி அண்ணி. மதியம் அவங்களுக்கு சாப்பாட்டுல சோடாப்பு தூக்கலா போட்டு சாதம் தனியா வடிச்சு போட்டேனா, ராத்திரி ஒரே உப்புசமா ஆகிடுச்சு அவங்களுக்கு. பால் மட்டும் சாப்பிடுங்க ஓமம், ஜாதிக்காய் பொடி செஞ்சு கலந்து தரேன்னு சொல்லிட்டு, மாமாக்கு கொடுத்தது போக மீதி இருந்த ஆமணக்கு விதைப்பொடி,அதிவிஷச்செடியோட வேர் பொடி, தர்மா சொன்னபடி தூக்க மாத்திரை கலந்து கொடுத்துட்டேன்.அவங்கதான் புருஷன் போன கவலைல பொம்மை போல இருந்தாங்களே, மடமடன்னு குடிச்சுட்டாங்க அத்தான். காலைல பிரேதமாத்தான் எல்லோரும் பாத்தோம் அவங்களை.

தர்மராஜ் நல்ல பையன். எல்லா சொத்துக்கும் எனக்கு சட்ட பூர்வமா அதிகாரப் பத்திரம் கொடுத்துட்டான். அவன் இப்போதைக்கு இங்கே வரப்போவதில்லை அத்தான். நம் சொத்து, துரோகம் செய்தவன் சொத்து எல்லாம் இப்போ என் கையில் அத்தான். கடவுள் தண்டிச்சுட்டார் இல்லையா?”

வெளியே ஒரு மாணவன் படித்துக் கொண்டிருந்தான் ” பிறர்க்கின்னா முற்பகல் செய்யின், தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்.”

“ஆம், இது பிற்பகல் தந்த தீர்ப்பு” மனதில் சொல்லிக் கொண்டாள் ராசாம்பாள்.

ரா.நீலமேகம் பெயர்: நீலமேகம். வயது 71. பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம், கீழமணலி என்ற கிராமம். தந்தை: ராமஸ்வாமி அய்யங்கார். கிராமத்து கணக்கராக இருந்தவர். தாயார்: ஜானகி படிப்பு: பி.எஸ்சி (இயற்பியல்), திருச்சி தேசியக் கல்லூரி. வேலை தேடி மும்பைக்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் பல தனியார் கப்பல் துறை அலுவலகங்களில் பணிசெய்து கோயம்புத்தூர் இடமாற்றம். உலகின் முதல் பெரிய கப்பல் பணியகமான, 'மெர்ஸ்க் லைன்' (Maersk Line) கோவை அலுவலகத்தில் பொது மேலாளராக…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *