பிறவி
கதையாசிரியர்: ஸ்ரீசரவணன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: June 9, 2026
பார்வையிட்டோர்: 203

வெண்மை மங்கிக்கொண்டிருந்த வான்வெளியில், அந்த மாளிகை மொட்டை மாடியில் மர்மச் சிந்தனையால் இறுகி இருந்த முகத்தைக் காற்று தழுவிக்கொண்டிருக்க, கரைக்கும் நதிக்கும் இடையில் அமைந்த பலகைப்பாதையில் அந்தச் சேதமும் விரிசலும் கண்ணில் தென்பட்டன.
அது, அந்த நாளின் விபத்து, இத்தீவு கண்ட முதல் மனித அனர்த்தம். அந்த நாளில் இந்தத் தீவில் யாரோ உள்நுழைந்திருந்தார்கள்.
இந்த வீரன் என்ன செய்திருப்பான்? அந்த இடம்! அங்குதான் ஆயுதம் இருக்கிறது! எவ்வளவு காலம் கடந்து விட்டது! புற்கள் மண்டி அந்த இடத்தை ஒளித்து வைத்திருந்தன. கைகள் இயந்திரம் போல் மண்ணை பறித்தன. அக்கணம் கண்ணீர் சிந்தும் துளிகள், நதி நீரை துளைத்து அவனை அதனுள் மூழ்கடித்து உருமாற்றியது, வீர தீன்ய பாண்டியப்படை வீரனாக.
மண்ணிலிருந்து அந்த வாளை உருவி எடுத்தான். உடல் நரம்புகள் முறுக்கேறி, கண்கள் கூர்மையாக, வெறிகொண்ட வீரன் போல் மாறினான். சத்தம் வந்த பாதைப்பக்கம் புலியைப்போல் மெதுவாக அடி எடுத்துச் சென்றான். மரங்களும் ஆள் உயரச் செடிகளும் எதிரே பயமுறுத்தின. காலடிச் சத்தம் கேட்க… எங்கே! சந்தேகம் உணர்ந்த வீரன் வாளைச் சீறிக்கொண்டு பின்னே திரும்பினான். வாள்வீச்சைத் தன் கேடயத்தில் மறைத்துக்கொண்டு அந்த எதிராளி உருவெடுத்தான். இவன் ஆற்றலுக்கு முன் அவன் கேடயம் சிதற, சில நொடிகள் வீரனின் கை அவன் முகத்திலும், உடலிலும் அடிதடியாக விளையாடியது. எதிராளியின் பலம் உடைந்து கீழே விழ, சிறுகத்தியை அவன் கழுத்தில் வைத்துக்கொண்டு…
“வாய் திற… இல்லையென்றால் உன் உடம்பில் உயிர் மட்டும் இருக்கும்”
நதிநீர் பிம்பம் நினைவைக்கலைக்க, காலத்தின் கட்டாயத்தில் அந்த எதிரி அவன் அருகில் இருந்தார், இரட்சகராக. அவர்களின் முதல் சந்திப்பை அந்த சூழல் நினைவுப்படுத்திக்கொண்டிருந்தது அவ்வீரனுக்கு.
“மறந்துவிட்டேன்”
சுயநினைவுக்கு திரும்பினான்.
“அடிக்கடி! இதே வசனம் வீரரே!”
ரட்சகர் வார்த்தையை வேகமாக வாங்கிக்கொண்டு கீழே சென்றான்.
நீர் சூழ்ந்த, என்றும் மனிதப் பார்வைகள் காணாத இயற்கை எழில் கொஞ்சும் தீவில் நவீன அழகையும் பிரம்மாண்டத்தையும் அளிக்கும் கச்சிதமான மாளிகை அது. அதன் பின் திகில் ஊட்டும் அடர்காடு உருவெடுத்திருந்தது. பறவைகள்தான் அந்தத் தீவின் தினந்தோறும் இசை. தூரமாய்க் கேட்கும் கடல் அலை அவ்வப்போது ஓசையை அதிகாரமாய் எழுப்பிச் செல்லும். சூரியனை விழுங்கித் தங்க நிற ஒளிகளில் தகதகவென்று மின்னிக்கொண்டிருந்தது கடல்.
ராட்சத மாடிப்படி, அவனைக் காற்றைத் தவிர ஏதும் இல்லா உள் மண்டபத்திற்கு இறக்கிக்கொண்டிருந்தது. எப்போதும் புதிய பார்வை உணர்வைத் தந்தது அந்தத் தலையில்லாத கருஞ்சிலை. அது மட்டும் அங்கு பொருள் என்பதாலா! மேலே பார்த்து “முருகா” என்றான். குரலில் சோர்வு.
கண்ணாடி போன்ற பளிங்குத்தரையில் ஈரக்கால்கள் தாளம் போட, அவன் உருவம் சமையலறைக்குள் நுழைந்தது.
நிலை அழிந்து சிந்தனையில் மூழ்கிய அவனை, மரவள்ளிக்கிழங்குகளை அவித்துக்கொண்டிருக்கும் தண்ணீர், வெப்ப உச்சத்தில் பொங்கிச் சத்தமிட்டது. மின்சார அடுப்பு நவீன நெடியில் இருக்க, அருகில் விறகு அடுப்பு உருவெடுத்துச் சமைத்துக்கொண்டு இருந்தது.
“இந்த ஈட்டியை உருவாக்குவதற்கு பதில், தொலைநோக்கியை உருவாக்கியிருக்கலாம்” ஈட்டியைச்சுழற்றிக்கொண்டு மாளிகை மண்டபத்தில் நின்றுகொண்டிருந்தார் ரட்சகர்.
“பொருட்கள் கிடைக்கவில்லை.”
“எது!” முகத்தில் ஆச்சர்யம் ஏறியது.
கிழங்குகளை தட்டில் தாங்கிக்கொண்டு வந்து, அவரிடம் நீட்டி,
“போர் வீரனுக்கு ஆயுதம் தான் முக்கியம்.”
“இங்கு ஆறு வருடம் போர் வீரனாக இருந்திருந்தால் மட்டும் பிழைக்க முடியாது, உமது மீன்பிடி தொழில் நேரம் தானே இது.”
“ஆமா! ஆனால் மறக்கவில்லை” என்று ஆயத்த வகைக்கு மாறினான்.
“உணவுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்,
தெப்பம் தான் நமக்கு தேவை, ஆயுதமும்.”
அந்த வார்த்தை ஆறு வருடத்தின் முதல் நாட்களை ஞாபகப்படுத்த முயன்று தோற்றது.
விரிசல் பாலம். புதிய பலகை ஒன்று பொருத்தி, சேதமடைந்ததை நதிநீரில் எறிந்தான்: தாங்கிக்கொண்டது, முடிவில்லாமல் சென்று கடலுடன் கலந்துகொண்டிருந்தது. சுற்றிலும் செடி, கொடிகள், காடு. தென்னை மரங்கள் சில அவனைப் பார்த்துக்கொண்டிருந்தன. தெப்பம் உருவாக்க அமைத்த மரக்கிளைகளை அலைகள் தொட்டுச் சென்று ஈரமாக்கியிருந்தன. இத்தனை மரக்கிளைகள் சேர்ந்து உருவான தெப்பம்! பாதி வேலை உள்ளது. உடைந்த தேக்கு மரங்கள் சிலவற்றை கோடாரியால் பிளந்தான். பட்ட மரக்கிளைகளை விறகுக்காக அவன் அருகில் அடுக்கிவிட்டுச் சென்றார் ரட்சகர்.
தூண்டிலில் சில பொறியியல் வேலைகளை நுணுக்கமாகவும் ஒழுக்கமாகவும் ஆற்றியபடியே கால்கள் வழமை விதி சட்டம் போல் நடந்து, இயற்கைச்சூழலை பிரதிபலித்து கொண்டிருந்த அமைதிக்குளத்தில், தூண்டில் வீச்சு உடைத்து உள்ளே சென்றது. அமைதியோடு சில சிந்தனைகள் ஓடியதை அவன் முகம் சொல்லிக்கொண்டிருந்தது. மற்றொரு கரையில் அதோ! ரட்சகர் நதியுடன் தூண்டிலால் மீனுக்காக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார். குளத்தின் கலைந்த நீரும் தன்னை சரி செய்துகொண்டு அமைதியாகியது. பொறுமையின் செல்வமாக தூண்டிலில் சிக்கியது பருமனான மீன் ஒன்று.
“தாங்களுக்கு எது தான் தெரியாது” தூண்டிலை சுற்றிக்கொண்டு அருகே நெருங்கினார்.
“கற்றுக்கொண்டேன். இல்லை…”
“கற்றுக்கொடுத்தது?”
அதேதான் என்ற சைகை அவருக்கு. கரைக்கு அருகே செல்ல துடித்துக்கொண்டிருந்த மீனை, தடியினால் தள்ளிவிட்டான்.
“இயற்கை காதலன் நீ, இந்த மீனை கொல்வது பாவமில்லையா?”
“என்னைப்போல்.
உணவு இல்லை என்றால் நாம் இறந்தே விடுவோம். மீன், ஊட்டச்சத்து வேண்டும் அல்லவா! இதுவும் இயற்கை செயல்தான். நான் தங்கள் போல் அல்ல. யுத்தம் தான் என் வாழ்க்கை, இத்தனை வருடத்தில், நான் எல்லாம் இழந்துவிட்டேன். ம்… உயிர்களைக்கொல்வது எனக்குப்புதிதல்ல, உங்கள் ஒற்றன் விசுவாசி, இன்று இரவாவது வந்து விடுவாரா?”
“சந்தேகம் தான்.”
வீரன் முகத்தில் வலுவிழந்த ஆச்சர்யம் ஏறிக்கொண்டது.
இடையில் செருகியிருக்கும் கத்தியை கையில் எடுத்துக்கொண்டார் ரட்சகர்.
“இந்த போர்க்கத்தியை எப்படி உருவாக்க முடிந்தது.”
“என்னிடம் எதை மறைக்கிறீர்? ஆறு வருடம் தனிமையும், சிறையும், போதாத தண்டனை போதவில்லையா?”
“இந்த கேள்விக்கு இரட்சகரிடம் பதில் இல்லை, ஒற்றனுக்குத்தெரிந்திருக்கலாம்.”
வீரனின் முகம் கோபம் அடங்கி சோர்வில் புதைந்தது.
இறந்து கிடந்த மீனைத் தோளில் சுமந்துகொண்டு “உள்ளே வரும் போது, மீன் தயாராகி இருக்கும்” என்று மாளிகை வீட்டில் நுழைந்து மறைந்தார்.
இயற்கைச்செல்வம், வருட அனுபவத்தில் அவனை மாற்றி, தனக்குத்தானே இட்ட கடமைகளை முடித்துவிட்டு, மாளிகை உள்ளே நுழையும் போது, பளிங்குத்தரையில் சோடா பானத்தை அருகில் வைத்துக்கொண்டு, மீன் உணவைச்சுவைத்துக்கொண்டிருந்தார்.
“இயற்கை மைந்தர் வாரும்.”
“கழிப்பறை சுத்திகரிப்பை அருந்துகிறீரா?”
“ஆ! இதா!, தாங்களுக்கு தானே. எனக்கும் மேல் நாட்டு மக்களுக்கும் அல்ல, என்ன செய்வது, விதி!”
தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தார். தன் இடையில் செருகிய கத்தி தரையில் விழுந்து இரும்புச் சத்தத்தோடு நடனமாடி நின்றது.
“என்ன விதியோ!, சர்க்கரை மருந்துக்கும், புற்று நோய் மருந்துக்கும் அடிமையாகும் விதி.”
“இதற்கெல்லாம் சர்வ சாதாரணமாக மருந்து சொன்னீரே!”
“எம் நாட்டு மருத்துவர்களுக்கு தெரிந்த சாதாரண விடயம் தான்”
“மேல் மக்களுக்கு உணர்வுகளை உயிரில் இருந்து பிடுங்கி எடுக்கும் கத்தியை தயாரியுங்கள் ஆக்கிரமிப்பு சக்திக்கு கொடுக்க. உலகம் யுத்தத்திற்கு தயாராகிவிட்டது தானே!”
அவன் முகத்தில் நகைப்பு உதிர்ந்தது. பார்வை புதிதாக மண்டபம் முழுவதும் அலைந்தது.
“இங்கு இருக்கைகள் இருந்திருக்கும்.”
“ஆம் நானும் நினைத்தேன்.”
“குளிர் பெட்டி, திரைப்பெட்டி, சலவைப்பெட்டி, சில பொம்மைகள். முருகன், புத்தகங்கள், அவ்வளவுதான் இருந்தது. சொகுசு வாழ்க்கை. காலத்தின் மாற்றம்.”
வான மேகம் கருமை நிறத்திற்கு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.
“ஆமா… காலத்தின் மாற்றம். சில பேருக்கு ஆர்ம்ட் ரெபெலியன் புத்தி வந்திருக்கும், இந்த சிலை உடைப்பைப்பார்த்தீரா?”
“அந்த ஆங்கிலத்தின் அர்த்தம் என்ன?”
“ஆயுத புரட்சி.”
“உலகில் பெரிய பிரச்சனை.”
“தாங்கள் உலகில்…!”
“மேல் உலகில் தான், இந்த இடம்…
இந்த சிறுகதை அனைவரும் படிப்பார்கள் தானே!”
“ஆம்! வசனங்களை கவனியுங்கள். தாங்கள் என் ஆய்வை நம்புகிறீர்களா?”
“அந்த வார்த்தையை தொலைக்காட்சியில் பார்த்தேன், தங்கள் வருகைக்கு மூன்று மாதங்களுக்கு முன் அதன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.”
வீரன் சமையலறை சென்று சமைத்த மீன் துண்டை உண்ணும்போது, ஜன்னல் காற்று அறைந்து திரும்பிப்பார் என்றது.
“சாதம் பார்த்துப் பல வருடங்கள் ஓடி விட்டது. ஆனால், மேல் நாட்டு போர் சூழல், அதை பார்த்துக்கொண்டு தான் இருந்தேன். அந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான வார்த்தை தான் அது. அல்லது ஏதோ! கிளர்ச்சி என்றாலும் நல்லதுதான்.”
வானம் முற்றாக இருளுக்குள் நகர்ந்தது.
அமைதிக்குரலில் ரட்சகர்,
“உலகம் போரில் சிக்கி அழிவது முன்னமே தெரியுமா? இது தங்கள் காலம் அல்ல, தங்கள் போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்து விட்டது.”
பதில் ஏதும் இல்லை. கைகளைக் கழுவிவிட்டு மண்டபத்திற்கு வந்து சப்பணமிட்டு தரையில் அமர்ந்து விட்டான். பரிதாபம் சுமந்த ஜீவன், தீவுக்கு அடிமையாக, மாளிகைச்சிறைக் கைதியாக, உடல் நலம் குறுகி இருந்தான்.
கையில்: ஏதோ உருவத்தை முயற்சித்த கல் செதுப்பில், பார்வை பதிந்தது.
இரட்சகரின் பார்வையில், பரிதாபமும் கேள்விக்குறியும் சேர்ந்து அவனில் படர்ந்தது.
“இதை இன்னுமா வைத்துள்ளீர்கள்? தங்கள் தண்டனை, காலத்தால் ஆனது!”
சூழல் புயல் காற்றில் அவன் பார்வை கலைந்தது.
இடி! அருகில் இருக்கும் கடலில் விழுந்து அந்த தீவு அதிர்ந்து போனது, காற்றும் அலையும் படையெடுத்தது. சற்று நொடியில் மழைவீழ்ச்சி தீவை அணைத்துக்கொண்டது.
“வானிலை மோசமாக உள்ளது. இங்கு மா மரங்களே இல்லை என்ன செய்வது! இந்த ஆறு வருடத்தில், மூன்றாவது முறை, காற்றோடு கூடிய மழை!”
ஜன்னல்கள் காற்றின் வேகத்தில் அதிர்ந்து அடித்துக்கொண்டன. மின்சாரம் இழந்த இருள், நொடியில். மீண்டும் ஒரு இடி சத்தம்! அந்த தீவு மீண்டும் ஒரு கணம் அதிர்ந்து பின் காடு பயம் கண்டது. தீ அரக்கனாக வெப்பம் கொண்டு பின்புறம் பற்றினான். ஒரு மரத்தை தீயின் வேகம் விழுங்கிக்கொண்டிருக்க, வெப்பம் மாளிகை பின் புறத்தில் படர்ந்துக் கொண்டிருந்தது.
வீரன் வெளியே ஓடினான், ரட்சகர் மாடி ஏறி ஓடோடி வந்தார்.
“ரணதீரா…!” என்று கூச்சல் இட்டார் ரட்சகர்.
அருகே இருக்கும் கப்பல் போன்ற எந்திர வில்லைத் தொட்டு நகர்த்தும் போது, ஒரு நொடி ரணதீரன் வீர தீன்ய காலத்திற்கே சென்றே திகைத்து வந்தார். அவனின் கைவண்ணம், வீர தீன்ய பாண்டியர்களின் பெருமை மின்னல் போல் அவருக்குள் விழுந்தது.
“ஆயுதங்களை விட பாதுகாப்புதான் முக்கியம்” பின்னே அவன் குரல் மழையோடு மின்னியது, இடி!
“இங்கு என்ன செய்றீர்! காட்டுக்குள் சென்று கிளைகளை வெட்டிவிடவும்.”
“உள்ளே சென்றால் வெளிவர சிரமம், பட்ட மரங்கள் தான். இயற்கை தன்னை பாதுகாத்துக்கொள்ளும்.”
மழை சடுதியாக அதிகரித்தது.
மாளிகை பின்புற புத்தக அறையில் தீப்பிழம்பின் வெப்பம் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து புகையோடு புத்தக அடுக்கை மறைத்துக்கொண்டது. இருவரின் முயற்சியில் புத்தக அடுக்கு சரிந்து கிடந்தது. காட்டுத் தீ குறைய ஆரம்பித்தது.
“தங்கள் தீயை கட்டுப்படுத்த மந்திரம் படித்தவரா?”
“நான் ஏன் கட்டுப் படுத்த வேண்டும்.”
மழை பிழிந்து, இயற்கை படுத்திய களைப்பில், அந்த அறையிலே அமர்ந்து
கொண்டனர். தீ பிழம்புகள் குறைந்த பின் இருளை விரட்டி, உடைந்த ஜன்னலின் ஊடாக சந்திரன் ஒளியால் அவர்களை தொட்டுக்கொண்டிருந்தார்.
கீழே விழுந்த ஒரு புத்தகம், கவனத்தை ஈர்க்க, பழைய நெடி, எடை அதிகம். கிழிந்த தாள் தன் நூலை விட்டுப்பிரிந்து பறந்து நிலத்தில் அவர்கள் கவனம் ஈர்க்க அமர்ந்தது.
அதன் ஒரு தாளில் இருக்கும் படத்தைப் பார்த்து
“எங்கள் நாட்டு சிப்பி பணம், வீரதீன்ய வரலாற்று நூல்!” என்று கையில் கொண்டான் ரணதீரன்.
“கான்ஸ்பிரசி தியரி என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். 1856 இற்குப்பின் தங்கள் ஆட்சி முடிந்தது. இந்த ரணதீரன் பாண்டிய படைத்தலைவன், இந்த வரலாற்றில் எங்கு தொலைந்திருப்பான்.”
“எப்போது படித்து முடித்தீர்?”
“தங்கள் பெயரை இதனுள் தேடினேன் அவ்வளவுதான்.”
சிலை போன்றிருந்த அவன் கையிலிருந்து நூலை எடுத்துக்கொண்டார்.
“இயற்கை தங்களுக்கு பதில் தருகிறது, ஆங்கிலேய ஆட்சி முடிந்து ஒரு நூற்றாண்டே முடியப் போகிறது. ஒற்றன் வர மாட்டான். அவன் வந்தாலும் கப்பல் வராது. இந்த தீவு சில அறிகுறிகள் சொல்லும் அதை…”
வீரன் முகம் சிறு சந்தேகத்தோடு ஆச்சர்யத்திற்கு மாறியது.
“ஆறு வருடம், மூன்று அனர்த்தம்.”
“ஒன்பது படைவீரர்கள்! ம்ம்
இல்லை ஒன்பது ஜன்மம்.”
“தாங்கள் வந்து மூன்று மாதமாகி விட்டது… தங்கள் காரியத்தை நிறைவேற்ற தவறி விட்டீரா?”
“இதுதான், இந்தத் தீவில் தாங்கள் இயற்கையாக, இயற்கையோடு வாழ்கிறீர்கள். ஆனால் உலகம், அழிந்துகொண்டிருக்கிறது. அழித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த உலகம், இந்த வரலாறு எல்லாம் முடிந்த பின் உலகம். காலத்தை வென்ற தாங்கள் எங்கே! இந்த உலகில் தமிழர்கள் எங்கே! மனிதப் பரிணாமத்தை இழந்த கூட்டம், வீர தீன்ய புராணம் இருப்பதால் இந்தத் தீவு மட்டும் மீதி உள்ளது போல.”
“நான் பார்த்திருக்கிறேன், வருடம் 2047, இத்தனை வருடம்!, இது எனக்கு ஒரு புதிராக இருந்தது. பின் இங்கிருந்து எங்கும் தப்பிக்க முடியாது என்றாகிவிட்டது. அது தாங்களுக்கு தெரியும். ஒற்றன் என்ற வார்த்தையை நம்பினேன்.”
வீரன் மேல் சந்தேகத்தில் சிக்கினார் ரட்சகர். அவன் வசனங்கள் அவரை ஒரு நொடி உறைய வைத்தன.
“அது…”
குறுக்கிட்டு,
“எதிரி வீரர்களின் சதிசெயல்? என்று ஐயம் இட்டேன், இல்லை…”
குரல் கலங்கி,
“என் கண் முன்னே என் உலகம் அழிந்துவிட்டது என்கிறீரா! எங்கள் ஆட்சி 18 ஆம் நூற்றாண்டில் முடியவில்லை. எங்கள் இறை மக்களின் வேலைக்காரர், நான் அவரின் வேலைக்காரன். கடமை தவறி விட்டேன் என்றுதான் குற்ற உணர்வு. தனிமையை விட இது அநியாயம். காலம் கடந்து செல்ல எப்படி முடியும். தங்கள் உருவக கோட்பாட்டை விட இது ஆச்சரியமானது.”
“ஆனால் இந்த உலகம் அழிந்துக் கொண்டிருக்கிறது. அணு ஆயுதம் போர், மூன்றாம் உலகப்போர். தங்கள் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மேல் நாட்டு மக்கள் உலகத்தை அழிக்கவும் தொடங்கிவிட்டார்கள், மீதி இருக்கும் இயற்கை இது தான். அந்த அழிவு தங்கள் போர் மாதிரி அல்ல. அறம் இருக்காது, சர்வ நாசம் மட்டும் இருக்கும். கடலும் தங்களை தாங்கும் இந்த இயற்கையும் முடிவு சொல்லட்டும்.
“ஏன்!”
கண்கள் பொங்கியன. அவர் பார்வையிலிருந்து அவன் முகம் திரும்பியது.
புயல், மழை ஆற்றல் குறைந்தும் ஓய்ந்தபாடில்லை. பாவம் சுமந்த ஜீவன் அந்த மாளிகை மண்டபத்திற்குச் சென்றது. அந்த தீவிற்கு மைந்தனாகி, மாளிகை பாதுகாப்பில் குறுகி அமர்ந்து இருந்தான். வருடங்கள் சிதைத்த உடல் நலத்தை விட, மனம் நொடியில் சிதைந்து போயிருக்கும். ரட்சகர் பார்வை கண்ணீர்துளி பிம்பமாக பரிதாப பார்வையானது. அவன் மாயமானான். காட்டிற்கு சென்றிருப்பான்.
வானிலை அனர்த்தம் இதே தான், இந்த நாள், ஆறு வருடத்தை, நூறு வருடமாக்கிவிட்டது!
தீயை கட்டுப்படுத்தியது போல் காலத்தை, கட்டுபடுத்த வேண்டும்? நான், நான் செல்வேன், என் அரசரைப் பார்க்க, படைகளைப் பார்க்க, என்னவளைப் பார்க்க,
அந்த இடி! அவனை ஆறு வருடத்தின் முதல் நாளுக்குள் கொண்டு சென்றது. இந்த தீவில் என் முதல் நாள்: இடைவிடாத காற்றும் மழையும், மண் தரை சேற்றில் புதைந்திருந்தேன். எழுந்தேன். உடல் முழுக்க காயம், துணிகள் சுற்றியிருந்தன. வாளைத் தேடினேன். வடுக நாட்டு வீரர்கள் என்ன சதி செய்கிறார்கள். அதோ! என் படை கப்பல், கடலில்! மின்னல் வெளிச்சம் தீவின் அழகை வினாடியில் மின்னி சென்றது. மாளிகை வாசல் திறந்திருக்க, உள்ளே தலைத் தெறிக்க ஓடினான். இருளும், குளுமையும் மட்டுமே, அவனுக்குத் திக்கு தெரியாத சிறையாக்கியது. ஜன்னல் வழியாக பார்வையில், கடலில் மிதந்த கப்பல் காணவில்லை.
இந்த தீவில் மாட்டிக்கொண்டு, நாட்கள் ஓட்டத்தில், தாங்கமுடியாமல் வானத்தைப்பார்த்து, நதியைப்பார்த்து, மேல் மாடத்தில் இருந்து… கத்தி கூச்சல் இட்டது நினைவில் வந்த போது… நிலவும் கதிரவனும் தான் மாறி மாறி வந்து எனக்கு ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டிருந்தார்கள். நாட்களை சுவரில் கோடுகளாக கணித்துக்கொண்டேன்.
என்னில் இருந்து வரும் என் செவிகள் கேட்கும் பாடல்கள், அமைதியின் மருந்து; நிறைந்த தூக்கம் போன்ற மயக்கம். அதன் கனவுகளே, நான் இங்கிருந்து தப்பித்து சென்ற உலகம். போர் முடியும் தருவாயில். எல்லாம் என்னை விட்டு தூரம் சென்றுவிட்ட உணர்வு. இனிமேல் அந்த வாள் வராது என்ற உணர்வு, ஏதோ ஒரு பரிதாப உணர்வு.
காதல், போர், வீடு, வீரர்கள், வெற்றிவேல் வீரவேல் என்ற சத்தம். இந்த தீவின் இயற்கையும் காற்றும், பசுமையும் அனைத்தையும் ஒன்றுமே இல்லாமலாக்கிவிட்டன. “ம்ம்… இந்த தீவு முழுவதும் எனது ராஜ்ஜியம், இந்த இயற்கைக்கு சேவகனாக்கியது. அவளது ஞாபகம் தான் நிரம்பி வழிகின்றது. தனிமையிலும், நினைவிலும், அவளை நினைக்க சொல்கிறது இந்த மனிதம் காணாத மரங்கள். இந்த தீவில் ஏன் இரும்பை துருப்பிடிக்க வைத்துள்ளார்கள்!” செல்வத்தின் பயன்பாடு தெரியவில்லை. இதை பயன்படுத்துவது எங்களை விட இந்த மேல் உலகத்தில் வேறு யாருக்கு தெரியப்போகிறது.
நீருக்கும், உணவுக்கும் அவதிப்பட்ட நாட்கள், நரகத்தைவிட கொடுமையாக இருந்தது. உணவு கூட இல்லாமல் இந்த உயிர் போய்விடுமா என்ற ஒரு கலக்கம். இந்த மண்ணும், காடும், நீரும் என் உயிரை காப்பாற்றி வாழவைத்துக்கொண்டிருக்கிறது.
மூன்று தடவை நீச்சல் முயற்சியில் நீரின் வழி பயணப்படும் போது எனது வீட்டிற்கு திரும்பினேன்: இந்த மாளிகைக்கு. வாழ் நாளில் நான் அவ்வளவு பலவீனமாக உணர்ந்தது இல்லை. உடல் முழுக்க குளிர், சுரம் பீடித்த நாட்களில், தாங்க முடியாத உச்சத்தில் கத்தி கூச்சல் இட்டேன். சந்திரன் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது கதிர்கள் அன்று குளிர்மையாக இல்லை, என் மேல் பரிதாபம் வந்திருக்கும்.
கடவுள் கல்லாகவே இருந்தார், காலம் சுமையான நாட்களில் பொழுதை ஒரு சிலை வடிப்பில் போக்கினேன். அது ஒரு பொருளாகவே இருந்தது. எதுவும் என்னோடு பேசவில்லை, நதி நீரும், காலையில் எழுப்பும் குயிலும் பறவைகளும் தவிர, என் குரல் பேசியது, நான் உருவாக்கிய சிலையோடு.
288 நாட்கள் எனக்கு அனுபவத்தை கற்று தந்தது, போர் களத்தை மிஞ்சிய அனுபவம். பித்தனாக்கியது. இதற்கு மரணம் மேல். இறப்பதற்கு முன் ஒரு தடவையாவது… எனது ஆறு தோழர்களுக்கு இந்த இடம் தெரியவரும், அப்போது நான் வாழ்ந்த நிமிடங்களோடு பேசட்டும். உன்னோடு நேரம் அதிகமாகவே செலவாகிவிட்டது. தனிமையை விட யோசனைகள் என்னை தின்றுக்கொண்டிருக்கின்றன.
அந்த பூஜையறை முருகன் சிலைக்கு பூஜை செய்வது வழக்கமாகிவிட்டது.
இரட்சகருக்கு அவன் ஒரு சுவாரஸ்ய கதையாக தெரிந்தார். அலைகள் எட்ட முடியாத கற்பாறையில் என்றும் இல்லாத புதுமையில் மன்னன் போல் அமர்ந்திருந்தான்.
“உங்கள் பார்வையில் தான் என் மாற்றம் காட்சி போல் தெரிகிறது, புரிகிறது.”
“தாங்கள் தப்பிப்பதற்கு ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லையே?”
தெப்பம் உறுதிபடுத்த, கயிறை இறுக்கிக்கொண்டு, அந்த இறுக்கம் வார்த்தை தொனியிலும்.
“இங்கிருந்து எங்கு செல்வேன்!”
“நான் வந்தும் ஒரு வருடம் ஆகிவிட்டது, நாம் இருவரும் தப்பிக்க வேண்டும்.”
“இருவருமா! அவளை விட்டு வந்த போர் தான் என் இறுதி வீடு, 6000 படை வீரர்கள், ஆறு வருட காலமாக அங்கு தங்க வேண்டிய சூழ்நிலை…”
“பழைய கதை இருக்கட்டும் தாங்கள் தெப்பம் கட்டுவதிலும் ஆர்வம் காட்டவில்லை, நம் திட்டம் என்ன ஆயிற்று?”
“நடக்கும், அந்த மலை அருகே தெப்பம் மிதந்தால் சரி தானே, இந்த இயற்கை மீது அன்பு வைத்து வேலை இல்லை, உழைப்பு இருக்க வேண்டும், தெப்பம் இன்னும் உறுதியாக, வேண்டும்.”
“இன்னுமா! கப்பலில் கை தேர்ந்தவர்கள், ஒரு தெப்பம் உடையாமல் கட்ட…”
“ஆறு வருடம், தெப்பம் கட்ட முடியாமல் அல்ல,.. ம்ம் நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? நீங்கள் வரும் சில மண்டலங்களுக்கு முன் நான் ஒரு.., மருத்துவனாக இருந்தேன். ஒரு மருந்து தயாரித்தேன், அதை அருந்தி தெப்பத்தில் சாய்ந்து கொண்டேன். உயிர் போக வில்லை.
மரணம் எங்குள்ளது என்று தேடினேன். பசி, தூக்கம் எல்லாம் தொலைந்து போனது. ரட்சகர் பார்த்தவுடன், இந்த மரணத்திற்கு முன் ஒரு உயிரை பார்த்து விட்டோம் என்று, கண்ணீர் பொங்கி ஆனந்த கடலில் மிதந்தேன். அப்போது தடுக்கியும் விழுந்தேன் நினைவில் மட்டும் ஒரு படை வீரனாக. இந்த மரமும் காடும் மண்ணும் கடலும் இருந்து என்ன பயன். வாழ ஒரு வழி அமைக்கும், பறவைகள் கூட தனித்து பறந்து பார்த்ததில்லை, மீன்கள் கூட கூட்டமாக தூண்டிலை நோக்கி ஓடி வரும். என் இறுதி போருக்கு முன், சுற்றிலும் 6000 படை வீரர்கள், 60 யானைகள், எங்கள் இறையாகிய அரசர், அந்த கிராமத்திலே மக்களை அதிகாரவர்க்கத்திற்கு கீழ் கொண்டு வந்து ராஜ்யம் அமைத்தார். அவர்களை அடிமையாக்கவில்லை. கொடுங்கோலாக இருந்த எதிரி வீரர்கள் நான் வந்த பின் சிரசு தனியாக, உடல் தனியாக கிடந்தார்கள். என்றும் அடங்காத வெற்றி வேல் என்ற எங்கள் கோஷம், இப்போதெல்லாம் மறந்து போய் விடுகிறது. இந்த சிறு கத்தியை உருவாக்கியதே, கழுத்தை அறுத்துக்கொள்ள, குருதி பார்க்க, வலிக்கு பயந்தேன்”
பாறையில் அமர்ந்தவன் காலங்கள் தாக்கிய அம்பால் சோர்ந்து இருந்தான். நான்கு பக்கமும் தெப்பத்தின் இறுக்கம் கச்சிதமாக இருந்தது. இரட்சகரின் செயல் சோர்வு, ஈரம் சொட்ட சொட்ட நனைத்திருக்க, அவனை ஆச்சர்ய பார்வையில் பதித்திருந்தார். முழு நிலவு இருவர்களையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தது. ஆந்தை ஒன்று அலறியது.
“விடியல் வரை காத்திருக்க வேண்டாம். தங்கள் கதை கேட்டு மேகமும் வானமும், இந்த கடலும் அமைதியாகி விட்டது. ஏறுங்கள்.”
“சற்று நேரம் காத்திருக்கலாம் விடிந்து விடும், இந்த உலகம் அழிந்து போவது உண்மையா! மனிதர்கள் எல்லோரும் இறந்த பின் என்ன மிஞ்சும், இந்த சிறு தீவு கூட மிஞ்சாது! கடல் கூட பொறுக்காது!”
“அந்த மலை அப்பால் சென்றவுடன், தாங்கள் பிறவி பயன் அடைவீர்கள், அப்போது…
“நான் தடுக்கி விழமாட்டேன், கடந்த காலத்தினால் என் உடலும், பக்குவமும், மாறிவிட்டது.”
வீரன் முகம் ஒளித்து வைத்த ஏதோ ஒரு வெற்றி மகிழ்வில் படர்ந்தது.
“கற்று உணர்ந்தது மட்டும் தான் இருக்கும் அல்லவா!”
பாறையில் இருந்து பரிதாபமாக இறங்கினான். அவன் உடல் நலம் பார்த்த ரட்சகர் சற்று ஏதோ ஆனார்! வார்த்தை நின்றது.
“நீங்கள் என்னுடன் வர மாட்டீர் தானே! இந்த அழியும் உலகத்தில் என்ன செய்ய வேண்டும்! போரா! இந்த பிறவி பயன் எந்த காலத்தில் அடையும். இறுதி போர் எப்படி, எப்போது ஞாபகம் வந்தது தெரியுமா? மரணம் பின் என்ன ஆகும் என்று தனிமை காலத்தில் சிந்தனை ஆட்டி வைத்த போது”
தெப்பத்தில் ஏறி வானைப்பார்த்தான், அமர்ந்தான்.
“மலை அருகில் சென்றவுடன் சரியாக விடியல் வந்துவிடும். ஆ…யுத்த சத்தம் அடங்கும் முன் அம்புகள் துளைத்த என் உடல் காயப்பட்டு கிடந்தது.”
“தங்கள் பிறவி பயன் அழியா உலகத்தில் தான் சேரும், மனிதாபிமானம் அழியாத உலகில்.”
“குப்பியும் கத்தியும் வேடிக்கை அல்லவா!”
“ஆம்.”
அவன் வார்த்தையை பரிவோடு வாங்கிக்கொண்டார்!
“மரணம் அமைதியானது அல்லவா! ஆறு வருடமாக உணராததை இன்று தானே உணர்கிறேன்.”
தொடர்புள்ள சிறுகதைகள்
எண்களுடன் பயணித்தல்
திசேரா
June 9, 2026
எரிமலை
ஜெ.ஜெயகுமார்
June 9, 2026
எரித்தது குற்றமா?
ஞானம்
June 9, 2026