பிறந்த மண்!
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2024
பார்வையிட்டோர்: 2,707
ஊருக்குள் நுழைந்ததும் ரங்கனுக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. பழைய ஞாபகப்பதிவுகள் காட்சிகளாக கண்முன்னே தெரிந்தன. சொந்த பூர்வீக ஊரை விட்டுப்போய் நாற்பது வருடங்கள் ஓடி விட்டன.
பத்து வயது சிறுவனாக இருந்த போது வயல் காட்டில் களையெடுக்கும் போது தந்தையை பாம்பு கடித்ததால் இறந்து விட, தாய் நிலைகுலைந்து போனாள். பத்து நாட்கள் பச்சைத்தண்ணீரை மட்டுமே குடித்தவளை உறவுகள் கூடவே இருந்து தேற்றினர்.
“அவரு விதி வந்து போய் சேர்ந்துட்டாரு. உனக்குன்னு ஒரு ஆம்பளப்புள்ளையக் கொடுத்துப்போட்டு போயிருக்கிறத மறந்துடாதே. நீயும் போய் சேர்ந்துட்டீன்னா அவன ஆரு பாத்துக்குவா?” என ரங்கனின் ஒன்று விட்ட அத்தை பேசிய போது தாயின் மடியிலிருந்து தனக்காகப்பேசிய அத்தையின் மடிக்குத்தாவி அமர்ந்தான்.
தந்தை இல்லாததால் தாயின் பேச்சைத்தட்டாமல் செய்ததோடு, சொல்லாமலேயே வேலைகளைச்செய்தான். பள்ளிக்குச்சென்று வந்ததும் தாய் காட்டுக்குள் வேலை செய்தால் உதவிக்கு அழைக்காமல் தானாக இருக்கும் உணவை சாப்பிட்டு விட்டு தாயுடன் வேலை செய்யப்போய்விடுவான். தோட்டத்து மரத்தில் காய்க்கும் கொய்யாப்பழங்களை பறித்து பள்ளிக்கு எடுத்துச்சென்று சக மாணவர்களுக்கு விற்று அதில் நோட்டுப்புத்தகங்களை வாங்கிக்கொள்வான்.
நல்ல பையன் என்று அனைவரும் தன்னைப்பற்றிச்சொன்னாலும் உறவுகள் யாரும் தந்தை இறப்புக்கு வந்து சென்ற பின்பு உதவி செய்ய வருவதோ, விடுமுறை நாட்களில் அவர்களது வீடுகளுக்கு ரங்கனை அழைத்துச்செல்வதோ இல்லை. உடன் படிக்கும் கேசவன் அடிக்கடி ‘என்னோட மாமா அது வாங்கி வந்தாரு, என்னோட அத்தை இது வாங்கி வந்தாங்க’ என சொல்லிக்காட்டும் போது ஏக்கம் வாட்டினாலும் புத்திசாலித்தனம் மேலோங்கி இருப்பதால் சகித்துக்கொள்வான்.
‘அப்பனில்லாத பையன் தப்பானவனா இல்லாட்டியும் நம்ம ஊட்டுக்கு வாரதுக்கோ, நம்ம பசங்களோட பழகறதுக்கோ தகுதியோ, தரமோ இல்லாதவன் தான்’ என உறவினர் பேசிய பேச்சால் மனம் உடைந்து போனான்.
ஒரு முறை தந்தை இருந்த போது மளிகைப்பொருட்கள் வாங்கும் கடையில் தாய் சொன்னதாகச் சொல்லி அடுத்தவாரம் பணம்கொடுப்பதாக காஃபி பொடி கேட்ட போது ‘பணம் கொண்டு வந்து அடுத்த வாரமே வாங்கிக்க’ என கடைக்காரர் சொல்ல, கவலையில் வீடு வந்தவன் அன்றிலிருந்து ‘காஃபி இனிமேல் குடிப்பதில்லை’ என சபதம் எடுத்தவன் இன்று வரை ஒரு முறை கூட குடிக்கவில்லை.
பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதும் டிப்ளமோ படிப்பில் நகரில் உள்ள ஒரு கல்லூரியில் ஸ்காலர்ஷிப் மூலமாக கட்டணம் ஏதுமின்றி சேர்ந்து கொண்டவன் விடுமுறை நாட்களில் ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்து அதில் கிடைக்கும் பணத்தை இதர செலவுகளுக்கு பயன் படுத்திக்கொண்டான்.
படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைத்தும் போகாமல் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஹோட்டல் ஆரம்பிக்க, அத்தொழில் பல இடங்களில் விரிவுபடுத்தும் நிலைக்கு வந்தது. திருமணம் செய்து நகரிலேயே வீடு வாங்கி தாயாரையும் அழைத்துக்கொண்டு குடியேறியவன் குழந்தைகளும் கிடைக்க மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.
இந்நிலையில் ஊரில் குல தெய்வக்கோவில் கும்பாபிஷேகம் நிகழ்வுக்கு வந்த போது பழைய நினைவுகளில் தன்னையே மறக்க நேர்ந்தது. சிறுவயதில் தாயாருக்கு உதவியாக இருந்த, தற்போது வயதான நிலையில் இருந்த வேலையாட்களை அவர்களது வீட்டிற்கே தேடிப்போய் நலம் விசாரித்ததோடு பண உதவியும் செய்து மகிழ்ச்சிப்படுத்தி தானும் மகிழ்ந்தான்.
‘வெளியில் சென்று பல கோடி சம்பாதித்து வாழும்போது கிடைத்த மகிழ்ச்சியை விட வருமானம் அதிகம் கொடுக்காத இடமாக இருந்தாலும் பிறந்த மண்ணில் கால் வைக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி, மன நிறைவு எங்கும் கிடைப்பதில்லை’ என உணர்ந்தவன், கோவிலில் மாதம் ஒரு முறை பூஜைக்கு, அன்னதானத்துக்கு தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்து மாதம் ஒரு முறை பிறந்த ஊருக்கு வந்து செல்லும் நிலையை உருவாக்கியது மறைநிறைவு கொள்ள வைத்தது ரங்கனை!