பிணக்கு எதுவரை?




(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பானுவேலைகளை முடித்து ‘அப்பாடா’ என்று படுக்கையில் விழுந்தும், நிம்மதியாயில்லை. ‘இனியென்ன’ என்ற ஆயாசம் தான் மிஞ்சியது. ஒரு வாரமாக அவளுக்கும் அவள் கணவனுக்கும் சண்டை!

ஒருவாரத்தில் எரிச்சலும், கோபமும் முறுக்கவிழ்த்துக் கொள்ள இப்போ வெறுமைதான் எஞ்சியது. இன்று ஞாயிறாயிருந்தும், கணவன் வெளியே போயாயிற்று.
பிற ஞாயிறுகளில் கோழி குருமாவை வெட்டி விட்டு, தூங்கி எழுந்து,நேரம்,கலாட்டா என்று இனிமையாகப் பொழுது கழியும்.
போன வாரம், செட்டியார் வீட்டு வாசலிலேயே கொண்டு வந்து, வண்ண வண்ணச் சேலைகளைப் பிரித்துப் போட்டார். அண்டை வீட்டுப் பெண்கள் ஆளுக்கொன்றை எடுக்க, இவளும் இரண்டைத் தூக்கிக் கொண்டாள். கணவளிடம் அவற்றைக் காட்ட, “என்ன பானு, இதுக்கென்ன அவசரம்” உங்கிட்ட சேலை இல்லையா என்ன? ஜூன் மாசம் பிள்ளைங்களுக்கு யூனிபார்ம், பை, ஷூ. புஸ்தகம்ன்னு ஆயிரம் செலவு பண்ணி நா முழி பிதுங்கியிருக்கற நேரத்தில்…” சிடுசிடுத்தார்.
அதிலுள்ளது உண்மையும்கூட. பானு வேறு விதத்தில் பாய்ந்தாள்.
“உங்க தங்கச்சிமாருக்கு அசராம எடுத்துக் கொடுப்பீங்க. எனக்குன்னா கசக்கும்.”
“வருஷத்துக்கு ஆளுக்கொரு சேலை. அதும் எங்கப்பா இறந்த பிறகு நான் அதுங்களுக்கு வாங்கித் தரேன், அதுல உனக்கென்ன?”
“அது 400 ரூபா சேலை. இது இரண்டும் சேர்ந்தே 300 நானே”
“அவங்களுக்குக் கொடுக்கற நானூறுக்கு, அவங்க உனக்குத் திரும்பச் செய்யறதில்லையா? சரிகைக் கரை போட்ட சுங்குடி, ஆளுக்கு இரண்டுன்னு, உனக்கு 4 சேலை கிடைச்சிடுதில்ல?”
“அழுது வடியற் கலரும். கனமுமா, மாமி மாதிரி 4 சேலை.”
“நீ அதைக் கட்டறப்போதான் சேலை ரொம்ப அழகுன்னு யாராவது உன்னைப் பாராட்டறதுண்டு. காசைக் கொட்டினாப் போதாது. ரசனையும் வேணும்.”
”ஆஹா… இவங்க குடும்பத்துக்குத்தான் ரசனையும் கெட்டிக்காரத்தனமும். அல்பமா இரண்டு கைத்தறிப் புடவைக்கு இத்தனைப் பீத்தல்”
கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகள் வளர்ந்து நடிக்க கடைசியில் கத்தல், அழுகை என்று முடியும்.
சண்டையின் தீவிரத்தைப் பொறுத்து அவர்களது சமரசம் தள்ளிப் போடப்படும்.
நேற்றிரவு பிள்ளைகள் இருவரும் பேய்ச் சண்டையிட்டனர். முடியை இழுத்து, உதைத்து அவர்கள் புரள,
“சே… நல்ல குடும்பத்து பிள்ளைங்க மாதிரியா இருக்கிறீங்க? குணங்கெட்டதுங்க” என்று பானு அவர்கள் முதுகில் சாத்தினாள்.
“ஆமா, நீங்களும் அப்பாவும் போடலையாக்கும்” என்று தலையைச் சிலுப்பிக் கொண்டான் இளையவன்.
அவ்வார்த்தைகள் முகத்தில்அறைய, பானு அன்று வெகு நேரம் சிந்தித்தாள்.
அவள் செய்தது வீண் செலவு தான். பொருந்தாத நேரமும் நாள். பிரிக்காது சேலைகளை செட்டியாரிடம் திருப்பியிருக்கலாம். ”பளீ”ரென்ற நிறமும். டிஸைனுமாக நாத்தனார் இருவரும் அவளுக்கு 4 சேலைகளை பரிசளிப்பதும் வாஸ்தவம். இதில் எரிச்சல், பதட்டம், மட்டந்தட்டுதல் எதற்கு?
அனுசரணையில்லாது சண்டையிடுவதும், அவை உப்புச் சப்பில்லாது வாசக் கணக்கில் நீள்வதும் அவளுக்கு வெட்கமாயிருந்தது.
மேலும் படுத்திருக்க முடியாது எழுந்தவள் வாசலோரம் பூத்துக் கிடந்து சுனகாம்பரத்தைப் பறித்து தொடுக்கலானாள். அந்நேரம் சிரித்து, கை கோர்த்து வந்த தன் பிள்ளைகளைப் பார்த்தவளின் புருவங்கள் உயர்த்தன.
“என்னடா, இன்னைக்கு பிரண்ட்ஸாக்கும்?”
“பின்னே? இன்னிக்கு காலைல சர்ச்சில என்ன பிரசங்கம்.”
“என்ன?” பாறு விழித்தாள்.
“நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ் செய்யாதிருங்கள். சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக் கடவது” – மூத்தவன் ஒப்பித்தான்.
“ஓ?”
“அம்மா பிரசங்கத்தைக் கவனிக்கவேயில்லை” சின்னவள் குற்றஞ்சாட்டினாள்.
ஆம். அவன்கவனிக்கத்தாளில்லை புதுச்சேலையைக்கட்டிப் போயிருந்தவளின் மனம், தங்களது சண்டையையே எண்ணி மருகியது. பிற பெண்களின் புடவைகளை நோட்டமிட்டது. மறுவாரம் எப்படி சண்டையை வளர்க்கலாம் என்று திட்டமிட்டது.
“சண்டை போடலாம்மா. ஆனா அதை சீக்கிரம் மறந்திடணும்.”
பிள்ளை பெரிய மனுஷத் தோரணையுடன் பேச, பானு சிரித்தாள்.
“சரிப்பா”
முன்பு பத்திரிகையில் அவள் பார்த்து விலா நோக சிரித்த ஒரு சிரிப்புப் படம் நினைவிற்கு வந்தது. ஒரு பயில்வான் கடும் சிரமத்துடன் முசும் அஷ்டகோணலாகத் தூக்கி பயிற்சிக்கும் இரும்பு தண்டாலை, வீடு கூட்டும் வேலைக்காரி, மிக அனாயாசமாய் ஒரு கையால் தூக்கி மறு கையால் பெருக்கித் தள்ளுவது போன்ற கேலிச் சித்திரம்.
இதுபோல பெரியவர்களுக்கு எளிதில் கைவராதி பல தத்துவங்களை சிறுவர்கள் வெகு சுலபமாகக் கையாண்டு விடுகிறார்கள் என்று தோன்றியது.
உள்ளே விரைந்தவள் பையும், காகமாக வெளியே வந்தாள்.
“‘அரைக் கிலோ கிழங்கும். ஒரு கட்டு புதினாவும் யாங்கி வந்திருப்பா” என்றாள் மகனிடம்.
“இன்னிக்கு பூரிக் கிழங்கு, புதினாச் சட்னி, அப்பாக்கு பிடிச்ச டிபனாம்மா?” மகன் உற்சாகமாய் கூவினான்!
குளித்து மயில் கழுத்து நிறத்தில் ஆரஞ்சுக் கரையிட்ட சுங்குடியைக் கட்டிக் கொண்டவள், கனகாம்பரத்தையும் சூடிக் கொண்டாள்.
‘இனி பிணக்குகள் வந்தாலும் அவை சூரியன் அஸ்தமிக்கிற வரைக்கும் தான்’ என மனதுள் நிச்சயித்துக் கொண்டவள், வாசலில் நின்று கணவனை எதிர்பார்க்கலானாள்.
(உயிர்நாடி)
– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.