பால்ய காலத்துச் சிநேகிதி!
கதையாசிரியர்: வ.ந.கிரிதரன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: June 6, 2026
பார்வையிட்டோர்: 148
(2021ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6
5. நினைவில் நிறைந்தவள்!

வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த மணிவண்ணனின் நினைவெல்லாம் அடுத்து என்ன நடக்கும் என்பதிலேயே இருந்தது. சந்திரமதி அக்கடிதத்தைப் படித்திருப்பாளோ? ஒருவேளை காந்திமதியிடம் அவன் அவளுக்குக் கடிதம் எழுதிய விடயத்தைக் கூறியிருப்பாளோ? இவ்விதமான சிந்தனைகளில் மூழ்கிக்கிடந்த அவன் தான் அவசரப்பட்டு விட்டானோ என்றும் எண்ணினான். ஒருவன் ஒருத்தியை விரும்புவது மனித வாழ்க்கையில் மிகவும் சாதாரணமான ஒரு விடயம். அதனை வெளிப்படுத்துவதுக்குக் கூட எவ்வளவு தடைகள். அதனையொரு பாவ விடயமாக, ஒழுங்கற்ற நடத்தையாக உருவகித்து வைத்துள்ளதே இச்சமுதாயமென்று எண்ணமொன்று எழுந்தோடியது. அதே சமயம் இன்னுமொரு எண்ணமும் எழுந்தது. பதின்ம வயதுப்பருவம் இவ்விதமான உணர்ச்சிக்கொந்தளிப்பு நிறைந்த பருவம். இப்பருவம் தாய், தந்தையரின் அரவணைப்பில், ஆதரவில் கழியும் பருவம். வாழ்க்கையில் தனித்து நிற்கும் நிலையை அடைந்த பருவமல்ல. இப்பருவத்தில் இக்காதல் உணர்வுகள் அவசியம்தானா என்றும் எண்ணினான். உணர்வுகள் அவசியமென்றும் எண்ணிய அவன் அவை அவசியமானவைதாம். பருவத்தின் தேவைகளிலொன்றுதான். ஆனால் அதே சமயத்தில் இக்காதல் உணர்வுகள் கல்வியைத் தடுக்கும் வகையில் அமையக் கூடாது. தனித்து நின்று வாழ்வை எதிர்நோக்கும் நிலை வரும் வரையில் காதலிப்பவர்கள் காத்து நிற்க வேண்டும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும். உண்மையான காதலென்றால் காத்து நிற்கும் தன்மை மிக்கதாக அமையும். அவ்விதம் காத்து நிற்க முடியாத காதல் உண்மையானதாக இருக்க முடியாது. அவ்விதம் காத்து நிற்க முடியாதென்றால், அவ்விதம் காத்து நிற்கையில் எதிர்ப்படும் தடைகளை உறுதியுடன் எதிர்கொண்டு வெற்றியடையும் காதலே உண்மையானது என்றும் எண்ணினான். ஆனால் உண்மையான காதல் கூட சில சந்தர்ப்பங்களில் கடமைகளின் காரணமாக, உறவுகளின் மீதான பாசத்தின் காரணமாக நிறைவேறாமல் போய்விடும் சாத்தியங்களுள்ளன என்பதையும் அவன் நினைத்துப்பார்த்தான். இவ்விதமான எண்ணங்களின் மத்தியில் அவன் சந்திரமதி மீதான தன் காதல் உணர்வுகளை எண்ணிப்பார்த்தான். அவள் அவனது காதற் கோரிக்கைக்கு அனுமதியளிக்கும் பட்சத்தில் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன? அவன் அவளிடம் தான் படித்து முடிக்கும் வரையில், அவள் படித்து முடிக்கும் வரையில், இருவரும் தனித்து வாழ்க்கையை எதிர்நோக்கும் நிலை வரும் வரையில் காத்து நிற்க வேண்டும். இதற்கு இருவருமே சம்மதிக்க வேண்டும். இவ்விதமான முடிவினை இருவருமே எடுக்க வேண்டும். இவ்விடயத்தில் இருவருக்கும் தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும்.
ஒருவேளை அவள் அவனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால்.. அது அவனைப்பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் சிரமமானது. ஆனால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவளது நிலையை ஏற்றுக்கொண்டு அவன் தன் வாழ்க்கைப்பாதையில் உறுதியாக நடைபோட வேண்டும். .அவனுக்கு வாழ்க்கையில் செய்வதற்குப் பல திட்டங்கள், எண்ணங்கள் உள்ளன. அவனது வாழ்க்கை அவனுக்காக, குடும்பத்துக்காக மட்டுமே அமைந்துவிடுவதாக இருந்து விடக்கூடாது. அவன் வாழும் சமுதாயத்துக்காக, மானுட சமுதாயத்துக்காகவும் அமைந்திருக்க வேண்டும். இவ்விடயத்திலும் அவன் மிகவும் தெளிவாக இருந்தான். இவ்விடயத்தில் அவனுக்கு வழிகாட்டி அவனது நண்பன் கேசவன் தான். அவன் சமுதாயப் பிரக்ஞை மிக்க ஒருவன். அவனது சிந்தனையெல்லாம் எப்போதும் வர்க்கமற்ற சமுதாய அமைப்பை எவ்விதம் அடைவது என்பதிலேயே இருந்தது. அவன் வாசிக்காத நூல்களேயில்லை. அவன் சிந்திக்காத விடயங்களேயில்லை. இதனால் அவனால் எவ்விடயத்திலும் தெளிவான முடிவுகளை மிகவும் இலகுவாக எடுக்க முடிகின்றது. அவனைப்போலவே தன் வாழ்வும் எப்பொழுதுமிருக்க வேண்டுமென்பதில் மணிவண்ணன் மிகவும் உறுதியாகவிருந்தான். அவனைப்போன்ற ஒருவனை நண்பனாகப்பெற்ற தான் ஒரு பாக்கியசாலியென்று எண்ணினான்.
இவ்விதமாகப் பலவகை எண்ணங்களில் மூழ்கியவனாக மணிவண்ணன் வீடு நோக்கிச் சைக்கிளில் விரைந்து கொண்டிருந்தான். மீண்டும் அவனது சிந்தனை அவன் கொடுத்த கடிதத்தின் மீது திரும்பியது. ஒருவேளை அவள் அவனை விரும்பாமலிருந்தால், அவனை ஏற்றுக்கொள்ளாமலிருந்தால் அக்கடிதத்தைக் கிழித்து எறியுமாறு கூறியிருந்தான். அவள் அதனைச் செய்வாளா அல்லது யாரிடமாவது காட்டி விடுவாளா? அவ்விதம் காட்டி விடுவாளென்றால் அதனால் ஏற்படும் விளைவுகளை அவன் அனுபவிக்கச் சித்தமாகவிருக்க வேண்டும். இருப்பான். இவ்விதம் முடிவு செய்தான். அதன் பின் மனத்தில் சிறிது ஆறுதலுடன் கூடிய தெளிவும் அமைதியும் படர்ந்தன.
மாலை ஐந்து மணியளவில் கேசவன் வந்தான். இருவரும் வீட்டின் வளவில் வேலியோரமிருந்த மாமரத்தின் கீழ் பிரம்புக் கதிரைகளிரண்டைக்கொண்டு சென்று அவற்றில் அமர்ந்தவாறு உரையாடலைத்தொடர்ந்தனர். மணிவண்ணின் வீட்டு வளவு பலவகை மரங்கள் நிறைந்ததொரு சோலையென்று கூறலாம். மூன்று தென்னைகள், இரண்டு பனைகள், முருங்கை மரமொன்று, ஒரு வேம்பு, மூன்று மாமரங்கள், ஜாம் மரமொன்று, கொய்யா மரமிரண்டு என்று எந்நேரமும் குளிர்ச்சியாகவுள்ள வளவு. வடக்கு வேலியின் அருகில் அவனது தங்கை இந்திராவின் வீட்டுப்பூந்தோட்டமிருந்தது. மல்லிகை, ரோஜா, செவ்வந்தியென்று பல்வகைப் பூ மரங்களை அவள் அதிலவள் வளர்த்து வந்தாள். எப்பொழுதும் பூத்துக்குலுங்கிக்கொண்டிருக்கும் பூந்தோட்டமது. தெற்கு வேலியின் அருகில் அவனது தாயாரின் வீட்டுத்தோட்டமிருந்தது. பல்வகைக் காய்கறிவகைகள் விளையும் வீட்டுத்தோட்டமது. இவ்விதம் பச்சைப்பசேலென்று கிடந்த வளவில் பல்வகைப் பட்சிகளின் நடமாட்டத்துக்கும் அளவில்லை. எத்தனை வகை புள்ளினங்கள்: சிட்டுக்குருவி, கொக்குறுபான், குயில், பச்சைக்கிளி, மரங்கொத்தி, செம்போத்து, தேன் சிட்டு, மைனா, மணிப்புறா…. இவ்விதம் கூறிக்கொண்டே செல்லலாம். அணில்களுக்குக் குறைவில்லை. மேற்கு வேலியை அண்டிய மாமரத்தின் கீழ் அமர்ந்து உரையாடுவது மணிவண்ணனுக்கு மிகவும் பிடித்த விடயங்களிலொன்று. கேசவனுக்கும் மிகவும் பிடித்திருந்தது. அணில்கள் ஓடித்திரியும் மாமரத்தின் கீழ் பல்வகைப்புள்ளினங்களையும் இரசித்தப்படி, அந்திச்சூரியனின் அழகில் மெய்ம்மறந்தபடி உரையாடுவதிலுள்ள இன்பம் தனித்துவமானது. இயற்கையின் தாலாட்டில் தம்மை மறந்து உரையாடுவதிலிருவருக்குமே மிகுந்த விருப்புண்டு.
மணிவண்ணனே பேச்சைத் தொடங்கினான்: “கேசவா, ஒரு விசயத்தை நானுனக்குக் கூற வேண்டும்”
‘என்ன?’ என்பதுபோல் அவனை நோக்கினான் கேசவன்.
மணிவண்ணன் தொடர்ந்தான்: “இன்றைக்குக் காலையிலை டியூசன் வகுப்பை மிஸ் பண்ணிட்டேன். அதாலை சந்திரமதிக்குக் குடுப்பதாகவிருந்த கடிதத்தைக் குடுக்க முடியேலை. நான் காலையிலை நித்திரையாலை எழும்ப நேரமாயிட்டுத்து. அதாலை ஒரே தலையிடியிலை இருந்தனான். லைப்ரரிக்குப்போனால் மைண்ட்டுக்கு நல்லாயிருக்குமென்று போனனான். அங்கை தற்செயலாகச் சந்திரமதியைக் கண்டனான். குடுத்திட்டேன்.”
இதற்குக் கேசவன் கூறினான்: “குட். நல்லதுதானே. அதுக்கேன் முகத்தை இப்பிடிச் சோகத்திலை வைத்திருக்கிறாய்?”
“குடுத்திட்டு வெளியிலை வரேக்கைதான் பார்த்தன் காந்திமதியை. அவளுக்கு அங்கை சந்திரமதி பாடம் சொல்லிக்குடுக்கப்போறாளாமென்று காந்திமதி சொன்னாள்” மணிவண்ணன் கூறிவிட்டு மேலும் தொடர்ந்தான்:
“அதுதான் கொஞ்சம் பயமாயிருக்கு. சந்திரமதி எல்லாத்தையும் காந்திமதியிடம் போட்டுடைக்கிறாளோவென்று. நீயென்னடா நினைக்கிறாய்?”
“இஞ்சைப்பார் மணி, இதுக்கேன் இப்படிப்பயப்படுறாய்? அவள் இவளிடம் சொன்னால் சொல்லிட்டுப் போகட்டும். காந்திமதிக்குத் தெரிந்தாலென்ன.. தெரிஞ்சிட்டுப் போகட்டுமே. எப்பவோ தெரியிறது இப்போ தெரியட்டுமே..”
“அப்படிச் சொல்லாதை கேசவா, அப்படி மட்டும் நடந்தால் தேவையில்லாத பிரச்சினைகள்தான் வரும். அப்படி நடப்பாமலிருப்பதுதான் நல்லது.”
“தேவையில்லாமல் யோசிக்காதை. எது நடந்தாலும் நல்லதுக்கு என்று நினையடா. சும்மா மனத்துக்குள்ளை வைத்துக் கவலைப்படுகிறதுக்குப் பதிலாக இதிலை ஒரு முடிவைக் காணுறது நல்லதுதானே. அப்படிச் சந்தோசப்படு”
இவ்விதம் கேசவன் கூறி மணிவண்ணனைச் சமாதானப்படுத்தினான். இதற்குப்பின்னர் நண்பர்களின் உரையாடல் நாட்டு நிலைமை பற்றியதாகத் தொடர்ந்தது.
கேசவன் கூறினான்: “மணி, இந்த உலகத்தின் அனைத்துப் பிரச்சினைக்கும் சரியான தீர்வு வர்க்கமற்ற சமத்துவச் சமுதாய அமைப்பொன்றை உருவாக்கிறதுதான். ஆனால் அப்படியொரு பொதுவுடமைச் சமுதாய அமைப்பு உருவாவதை இலாபத்தை மையமாகக்கொண்ட முதலாளித்துச் சமுதாய அமைப்பு விரும்பாது. அது போடுற தடைகளாலைதான் இதுவரை உலகமே முழுவதுமாகப் பொதுவுடமைக் கூடாரத்துக்குள் போகமுடியாமல் இருக்கிறது.”
தொடர்ந்தும் அவனே தொடர்ந்தான்: “இப்பிடி மக்கள் அனைவரும் வர்க்கரீதியில் ஒன்றாவதை, ஒன்றிணைவதைத் தடுப்பதற்காகக்த்தான் முதலாளித்துவ ஆதிக்க சக்திகள் மக்களை மொழி, இன, மதரீதியாக, சாதிரீதியாகப் பிரித்து வைத்திருக்கிறது. ” இவ்விதமாக நண்பர்களின் உரையாடல்கள் பல விடயங்களைத் தொட்டுச் சென்றன. இவ்விதமாக நண்பர்களிருவரும் உரையாடிக்கொண்டிருக்கையில் வளவினுள் நுழைந்தாள் காந்திமதி. அவளைக் கண்டதும் ஒரு கணம் திடுக்கிட்டான் மணிவண்ணன். அவனது மனத்தில் பல்வகை எண்ணங்களும் படர்ந்தன. இவள் எதற்கு இங்கு வருகின்றாள்? ஒருவேளை சந்திரமதி எல்லாவற்றையும் இவளிடம் கூறிவிட்டாளோ? அப்பொழுதுதான் காந்திமதி கைகளில் கொப்பியொன்றைக் கொண்டு வருவதைக் கண்டான். தனது கையிலிருந்த கொப்பியை ஆட்டிக்கொண்டு வந்த காந்திமதி அருகில் வந்ததும் ” என்னதான் நடக்குது . எனக்கென்றால் ஒன்றுமே விளங்கேலை” என்றபடியே கொப்பியை மணிவண்ணனிடம் கொடுத்தாள். அது மணிவண்ணன் சந்திரமதிக்குக் கொடுத்த கணிதக்கொப்பி. இதையேன் சந்திரமதி இவளிடம் கொடுத்தாள் என்றெண்ணியவனாக மணிவண்ணன் கொப்பியை வாங்கித் திறந்து பார்த்தான். அங்கே அவனது கடிதமில்லை. இப்பொழுது அவனது வேறொரு எண்ணமெழுந்தது. சந்திரமதி கடிதத்தை எடுத்தாளோ அல்லது காந்திமதி எடுத்து ஒளித்து வைத்திருக்கிறாளோ?
“ஏய் காந்தி, ஏன் அவள் உன்னற்றை இந்தக் கொப்பியைத் தந்தாள்? என்னிடம் கிளாசிலை சந்திக்கேக்கை தந்திருக்கலாமே”
“மணி அண்ணா, சந்திரமதி அக்கா மாஸ்டரிடம் ஓல்ரெடி மாட்த்ஸ் நோட்ஸ் வாங்கிட்டாவாம். அதுதான் இதை உன்னற்றைக் குடுத்து விடத் தந்தா. தாங்க்ஸ் என்றும்
சொல்லச் சொன்னா”
“வேறெதாவது இந்தக்கொப்பியுடன் தந்தவவா? ” என்று இன்னுமொரு கேள்வியை அவளிடம் கேட்டான் மணிவண்ணன்.
“இல்லையண்ணா, இந்தக் கொப்பியை மட்டும்தான் தந்தவா” இவ்விதம் கூறிய காந்திமதி கண்களைச் சிமிட்டியவாறு “என்னதான் உங்களுக்கிடையிலை நடக்குது. நோட்ஸ் குடுக்கிறியள். வாங்கிறியள். எனக்கென்றால் ஒன்றுமே விளங்கேலை. “
மணிவண்ணனுக்கு ஒரு விதத்தில் திருப்திகரமான உணர்வு ஏற்பட்டது. சந்திரமதி கடிதத்தை எடுத்து விட்டு இவளிடம் கொப்பியைக் கொடுத்திருக்கின்றாளென்று தோன்றியது. காந்திமதியிடம் கடிதத்தைக் கொடுத்திருந்தால் நடப்பதே வேறாகவிருந்திருக்கும்.
காந்திமதி சென்றதும், மீண்டும் நண்பர்களின் உரையாடல் தொடர்ந்தது. நாட்டு நிலைமை பற்றியே அதிகமாக உரையாடல் அமைந்திருந்தது. ஆகஸ்டில் பாராளுமன்றத்தேர்தல் நடைபெறவிருப்பதால் கட்சிகளின் பிரச்சாரங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டிருந்தன. இம்முறை முதன் முறையாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி ‘தனிநாட்டு’க் கோரிக்கையை முன்வைத்துத் தேர்தலில் குதிக்கின்றது. இதே சமயம் நாட்டில் நிலவிய படையினரின் மனித உரிமை மீறல்கள், அவ்வப்போது நடைபெற்ற இனக்கலவரங்கள், தமிழ்ப்பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திட்டங்கள், அபிவிருத்தி, வேலை வாய்ப்பு போன்ற விடயங்களிலான அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கு, உயர் கல்வியில் அமுல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தரப்படுத்தல் கொள்கை. .இவ்விதம் பல் காரணங்களால் தமிழ் மக்கள் திருப்தியற்றிருந்தார்கள். அதன் விளைவுதான் தமிழ்க்கட்சிகளின் ஒன்றிணைந்த தனிநாட்டுக் கோரிக்கை. இது இவ்விதமிருக்க இன்னொரு புறத்தில் ஆயுதப்போராட்டமே பிரச்சினக்குத் தீர்வு என்னும் நோக்கில் தமிழ் இளைஞர் குழுக்களின் மறைமுக ஆயுதப்போராட்ட நடவடிக்கைகளும் தொடங்கி விட்டிருந்தன. கேசவனைப்பொறுத்தவரையில் மார்க்சியக் கருத்துகளை நம்புபவன். மிகவும் தெளிவாகப் பிரச்சினைகளை ஆராய்ந்து சிந்திப்பவன். உணர்ச்சியின் அடிப்படையில் சிந்திப்பவன் அல்லன். வர்க்க விடுதலையே அனைத்துப்பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பதை நம்புபவன். ஆனால் இலங்கையில் பெரும்பான்மையின மார்க்சியவாதிகள் தமிழர் பிரச்சினை விடயத்தில் உரிய கவனத்தைச் செலுத்தவில்லையென்று அவன் கருதினான். தமிழ் மக்களின் பிரச்சினையை அனைத்து மக்களுக்குமான வர்க்கப்போராட்டத்துடன் சிந்திக்கும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள இடதுசாரிகள் ஆட்சியிலிருக்கும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசுடன் இணைந்திருந்ததும் அவனது இவ்விடயத்திலான அதிருப்திக்கான முக்கிய காரணங்களிலொன்று. முதலில் தமிழ் மக்களின் விடுதலை இலங்கையின் அனைத்து மக்களின் வர்க்க விடுதலைக்குமான முதற்படி என்னும் முடிவுக்கு அவனை நாட்டு நிலைமைகள் கொண்டுவந்து விட்டிருந்தன. இந்த அடிப்படையிலேயே அவனது அரசியற் சிந்தனைகளிருந்தன.
அவனது பாதிப்பு மணிவண்ணனின் சமூக, அரசியற் சிந்தனைகளிலும் ஆதிக்கம் செலுத்தின. கேசவனைப்போல் மார்க்சியக் கருத்துகளை முற்றாக அறிந்த நிலையில் மணிவண்ணன் இருக்கவில்லை. அண்மைக்காலமாகத்தான் கேசவன் மூலம் அக்கருத்துகளை அறியத்தொடங்கியிருந்தான். அதுவரை இனரீதியாக மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்த அவனது சிந்தனைப்போக்கை, கிணற்றுத்தவளைப்போக்கிலிருந்து வெளியே கொண்டுவரக் கேசவனின் நட்பு பெரிதும் உதவியதென்று கூறலாம். இதனால் இவ்விடயத்தில் கேசவனுடான உரையாடல்களை அவன் விரும்பினான். மணிவண்ணனின் சிந்தனை உலகம், நாடு, நகரமென்று மனிதரின் பிரச்சினைகளை வைத்து நோக்கப் பெரிதும் உதவியது கேசவனின் அவன் மீதான ஆதிக்கமென்று கூறலாம். மொழி, மதம், இனம், நாடு, வர்ணமென்று பல்வகைப்பிரச்சினைகளுமற்ற உலகை அவனது மனம் கனவு காணத் தொடங்கியது. ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ என்று வாழுமொரு நிலையிருந்தால் எவ்விதம் நன்றாகவிருக்குமென்று அடிக்கடி அவன் எண்ணுவதுண்டு. மனிதரின் இருப்பு பற்றிய அறியாமையின் விளைவுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணமென்றும் அவன் பூரணமாக நம்பினான்.
அன்றிரவு படுக்கையில் புரண்டுகொண்டிருக்கையில் மணிவண்ணனின் நினைவுகளில் பல்வகை எண்ணங்களும் எழுந்து தலைவிரித்தாடின. இறுதியில் அடுத்த நாள் காலையில் நடைபெறவுள்ள டியூசன் வகுப்பு பற்றியும், சந்திக்கப்போகும் சந்திரமதி பற்றியும், கடிதத்துக்கான அவளது பதில் எதுவாகவிருக்குமென்பது பற்றியும் எண்ணியவாறே தூக்கத்திலாழ்ந்தான். அவ்விதம் ஆழ்கையில் அவனது மனத்தில் சந்திரமதியின் வட்டக்கருவிழிகள் படம் விரித்தன; அவளது புன்னகை படம் விரித்தது; இரட்டைப்பின்னல்கள் சதிராட்டமாடின. நினைவுகளில் நிறைந்திருந்த அவளைப்பற்றிய கனவுகளில் ஆழ்ந்தவனாக அவன் தூக்கத்தில் மூழ்கிப்போனான்.
– தொடரும்…
– பால்ய காலத்துச் சிநேகிதி! (குறுநாவல்), பதிவுகள்.காம், 2021.
![]() |
(நவரத்தினம் கிரிதரன், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்) ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய. ஈழத்து எழுத்தாளர். இவர் பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள். ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை ஆக்கியுள்ளார். பதிவுகள் இணைய இதழின் ஆசிரியரும் ஆவார். வ.ந.கிரிதரன் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்டவர். இவரின் தந்தை பெயர் நவரத்தினம். இளமையில் வவுனியாவில் வாழ்ந்த இவர். வன்னி மண்ணின் பற்று காரணமாக வ என்று தன் பெயருக்கு முன் சேர்த்து கொண்டார். ஆரம்ப கல்வியை வவுனியா மகாவித்தியாலத்தில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உறுப்புகளைத் தேடி…
காரை ஆடலரசன்
June 6, 2026
அமெரிக்காவில் கிச்சா
கிரேஸி மோகன்
June 6, 2026
ஏவிவிடப்பட்ட கொலையாளி
திசேரா
June 3, 2026
