பார்வை வரம்!






முகியை கல்லூரி படிப்பு முடித்து நான்கு வருடம் கடந்து இன்று தான் வேலை பார்க்கும் அலுவலகத்திலேயே சந்திக்க நேர்ந்த போது பழைய நினைவுகள் சிகனுக்குள் வந்து நிகழ்வுகளைக்காட்சிப்படுத்தின.
சிகனுக்கு முகியின் பார்வையால் தனக்குள் மலர்ந்த காதல் நினைவுகளை அடிக்கடி தனது மனத்திரையில் திரையிட்டுப்பார்த்துக்கொள்வான். கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்த போது கண்ணில் பட்ட முதல் பெண்ணும், அழகான பெண்ணும் அவள் தான். அவனைப்போல அவளும் காதலித்திருந்தால் கல்லூரி காதலர்களிலியே முதலிடம் பிடித்திருப்பார்கள்.
‘ஏஐ பெண் போல இருக்கிறியே….
என் மனசுக்குள்ளே எட்டு வச்சு நடக்கிறியே….
உன் முதல் பார்வை முழுப்பார்வையானதடி….
முழுதாக விழ வைத்தாய்
உனக்குள்ளே என்னையடி….’
கவிதையாக வரிகளை தன் மன டைரியில் எழுதியவன், அவளுடன் முதல் வார்த்தை பேச வார்த்தைகளைத்தேடிக்கொண்டிருந்தான்.
“நீங்க ஹாஸ்டலா….?”
“ம்….” என்று சொல்லிச்சென்றாள் சிக்கனமாக.
“நானும் ஹாஸ்டல் தான்….” என சிகன் பேசியதை காதில் வாங்கிக்கொள்ளாதவாறு யாரையோ அவளது விழிகள் தேடிக்கொண்டிருந்தன. அப்போது காரில் வந்து இறங்கிய பெண் தோழியுடன் கல்லூரி வகுப்பறையை நோக்கிச்சென்றாள்.
வகுப்பறையில் அடிக்கடி சிகனை அவள் தனது விழிகளால் முழுமையாக விழுங்கினாள். பாம்பின் வயிற்றுக்குள் மாட்டிக்கொண்ட தவளையைப்போல அவளது மனதுக்குள் மாட்டிக்கொண்டு வெளியே வர இயலாமல் தவித்தான். பாடத்தில் கவனம் செலுத்த இயலவில்லை.
வகுப்பறையில் பார்வையால் விழுங்கியவள் வெளியில் வந்தவுடன் அவனைப்பார்க்க விரும்பாதவளாய் முகத்தைத்திருப்பிக்கொண்டு தோழிகளுடன் சிரித்துப்பேசியபடி சென்று விடுவாள்!
‘பார்வையால் வீசுகிறாள் வலை, பார்த்தால் பார்க்காமல் திரும்புவதே அவளது நிலை, இது என்ன புதிய கலை?, இதனால் என் உயிரையே செய்கிறாள் கொலை’ என தனது மன டைரியில் இரண்டாவதாக கவிதை வரிகளை அழகாக எழுதினான் நிகன்.
பல நாட்கள் உறக்கம் தொலைத்தவனாய் கற்பனைக்காதல் கல்லூரியில் எழுதிய தேர்வில் முழு மதிப்பெண்களைப்பெற்று முதலிடம் வந்தவன், நிஜமான கல்லூரியில் எழுதிய தேர்வில் அனைத்து பாடங்களிலும் அவனைத்தவிர மற்றவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் நிகன் மட்டும் தோல்வியைத்தழுவினான்.
அனைவரும் சிரித்துப்பேசியபடி மகிழ்ச்சியாக வகுப்பறையை விட்டு வெளியே செல்ல அவன் மட்டும் கண்ணீர்சிந்திய படி இருக்கையிலேயே தன்னை மறந்து கவலையில் ஆழ்ந்திருந்திருந்தான்.
கொலுசின் சத்தம் ஒரு பெண்ணின் வருகையை உணத்தியது. ஒரு தாயின் ஸ்பரிசம் குழந்தைக்கு கிடைத்தது போல் அப்பெண்ணின் கைகள் அவனது தலை முடியை வருடியது.
“என்ன ஆச்சு..? ” அவனது முகத்தருகே தனது முகத்தை நேருக்கு நேராக வைத்துக்கொண்டு பல நாட்கள் பழகியவளைப்போல் கேட்டாள் முகி. உடல் நடுங்கியது. பதில் வரவில்லை”
“புரியல.…” என்றான் ஒத்தை வார்த்தையில். அவளுக்கு புரிந்தது. உடனே அங்கிருந்து மறு வார்த்தை பேசாமல் சென்று விட்டாள்.
நினைவு வந்தவனாய் எழுந்து ஓடினான். கல்லூரி முழுவதும் தேடினான். அவன் சென்று வெகு நேரம் ஆனது என்றார்கள். எல்லாம் பிரம்மையென புரிந்தது.
இப்போதெல்லாம் முதல் முன்பு போல் வகுப்பறையில் அவனைப்பார்ப்பதைத்தவிர்த்தாள் முகி. அடுத்த தேர்வில் முதல் மதிப்பெண்கள் வாங்கி தேர்ச்சி பெற்றிருந்தான் சிகன்.
அவள் எதிர்பார்த்தது தான் நடந்திருந்தது. ‘தேர்வில் தேர்ச்சி பெறாததால் தான் தன்னைப்பார்க்காமல் அவள் தவிர்க்கிறாள் எனப்புரிந்ததால் வெறிகொண்டு படிந்திருக்கிறான்’ எனப்புரிந்து கொண்டாள்.
மற்ற மாணவர்களை விட சிகன் ‘நல்லவன்’ எனும் அளவில் வித்தியாசமானவனாகப்பட்டதால் அவன் மீது அவளுக்கும் ஈர்ப்பு இருந்தது. ‘ பொது வெளியில் எளிதாகப்பேசினால் காதல் என்ற பெயரில் தன்னைச்சுற்றிக்கொண்டு படிக்காமல் போனால் அவனது எதிரிகாலம் வீணாகி விடுமே….’ என நினைத்ததால் எங்கும் பார்ப்பதைத்தவிர்த்தாள்.
பெண்களை விட ஆண்கள் சீக்கிரமாகவே காதலுக்குள் விழுந்து விடுகின்றனர். சற்று நேரம் உற்றுப்பார்த்தாலே காதல், அக்கறையுடன் சில வார்த்தைகள் பேசினாலே காதல், உதவி கேட்டாலே காதல், உண்மையாகப்பேசினாலே காதல், பக்கத்தில் அமர்ந்தாலே காதல், ஒரே வாகனத்தில் சென்றாலே காதல், ஒரே புகைப்படத்தில் இருந்தாலும் காதல் என அனைத்தையுமே காதலாகப்பார்த்து படிப்பில் கோட்டை விட்டு விடுகின்றனர்.
பெண்கள் பொறுமையாக, நிதானமாக, நட்பாக, நம்பிக்கையாக பழகியபின் காதலுக்குள் விழுகின்றனர். பின் விளைவுகளைச்சிந்திக்கின்றனர். விழுந்த பின் வேறு நபரைப்பற்றி யோசிப்பதில்லை. முகிக்கு சிகன் மேல் காதல் வரவில்லை என கூறவும் முடியாது. அவனை அவள் மனதார நேசித்தாள். ஆனால் வெளிப்படையாக அவனிடம் சொல்லவில்லை. அவனது எதிர்காலத்தைப்பற்றி பொறுப்புணர்வோடு சிந்தித்தாள்.
‘சக மாணவியான தனது பார்வையால் அவனது எதிர்காலமே வீணாகிறதென்றால் அதைத்தவிர்ப்பதே நல்லது என தான் கருதியது சரி’ என்பதை உணர்ந்தவள், இப்போதெல்லாம் முன்பு போல் அவனை முழுப்பார்வையாகப்பார்க்காமல், அனைவரையும் பார்ப்பது போல் அரைப்பார்வையாகவே பார்க்க ஆரம்பித்தாள்.
“க்கூம்…. என்ன பார்த்ததும் பேசாமல் கனவு தேசத்துக்குள்ளே போயிட்டீங்க….?” முகி கேட்ட பின்பே சகஜ நிலைக்குத்திரும்பியவன், “ஆமாம். நாம் படித்த கல்லூரி காலத்துக்குள் சென்று வந்தேன்… எப்படி இருக்கீங்க….?” எனக்கேட்டான்.
“நல்லா இருக்கிறதுனால தான் இங்கே வந்திருக்கேன்…” என்றவள் முழுப்பார்வையில் அவனை விழுங்கிய படியே வாங்கிய ஐஸ்கிரீமையும் வாயில் வைத்து விழுங்கினாள்.
“கல்யாணம் ஆயிடுச்சா….?” தைரியமாகக்கேட்டான்.
‘க்ளுக்’கென சிரித்தவள், “கல்யாணமா? எனக்கா? அது காலேஜ் பர்ஸ்ட் இயர்லியே, பர்ஸ்ட் டேலியே ஆயிடுச்சு.யாரோடன்னு கேட்கறீங்களா? சிகனோடதான்” வெட்கத்தில் அவளது முகம் சிவந்திருந்தது.
“முதலாம் பார்வையிலே என்னை முழுசாய் விழுங்கியது நீங்க தானே….? அப்புறம் யாரோட கண்ணுக்கும் நான் தெரியவே இல்லை….”
“இதை ஏன் அப்பவே நீங்க எங்கிட்ட சொல்லலை….?”
“சொன்னா உங்க படிப்பு கெடுமேன்னு தான்…. அப்பா இல்லாத நீங்க, உங்களோட குடும்பத்த சம்பாதிச்சு காப்பாத்தப்போற நிலைல இருந்த நீங்க, காதல நெனைச்சு கவிதை எழுதிட்டு தேர்வு எழுதாம போயிடுவீங்களோங்கிற பொறுப்பு தான். அதான் இப்ப சொல்லிட்டேனே…. நிஜ கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடுங்க நான் ரெடி” என்றவளை அப்படியே அல்லாக்காகத்தூக்கி உற்சாகத்தில் ஒரு சுற்று சுற்றினான்.
இருவரும் எதுவுமே பேசாமல் சிறிது நேரம் மௌனமாக இருந்தனர். ஏஸி அறையிலும் சிகனுக்கு வேர்த்திருந்தது.
“வகுப்பறை பார்வைக்காக தவமிருக்கிறேன். அந்தப்பார்வையை இந்தப்பாவையால் இப்போது என்னை நோக்கிப்பார்க்க முடியுமா?” எனக்கேட்ட மறு நொடி ‘அதற்காகத்தானே நானும் காத்திருந்தேன்’ என்பதாக முழுப்பார்வை வரத்தை முகி சிகன் மீது வாரி வழங்க, சிகன் முழுமையாக அவள் விழி எனும் வழியில் சென்று அவளது மனதுக்குள்ளே தன்னை வைத்துப்பூட்டிக்கொண்டான் நிரந்தர காதல் கைதியாக.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |