பாப்பா




சந்தோஷ், “வீட்டுக்கு வந்துட்டீங்களா?”
“நான் ஆபீஸ்ல தான் இருக்கேன்.. நீ எங்கே இருக்கே?
“நர்மதா ஹஸ்பெண்டுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சுன்னு கால் பண்ணினா, அதனால அர்ஜென்ட்டா அவிநாசி வந்துட்டேன்.”
“ஆக்சிடென்ட்டா? எப்படி ஆச்சு?”
“மதியம் அவிநாசி ரோட்ல பைக்ல வரும்போது எதிர்ல கார் வர்றது தெரியாம இவரே போய் நல்லா மோதி கீழ விழுந்திருக்கார்.. நல்லவேளை, வலது முழங்கையில் மட்டும் நல்ல அடி …”
“அடடே, இப்போ எப்படி இருக்கார்?”
“பரவால்லையா இருக்கார்.. நான் வர ஏழு மணி ஆகும். நீங்க வீட்டுக்கு சீக்கிரமா போயிடுங்க..”
“என்னது சீக்கிரமா போறதா? காலையில தானே சொன்னேன் போர்டு மீட்டிங் இருக்குன்னு, அதுக்குள்ளே மறந்துட்டியா?”
“அச்சச்சோ, சுத்தமா மறந்தே போயிட்டேன்.. பாப்பா வேற வீட்ல தனியா இருப்பாளே?”
“அவளை மாமி வீட்ல விட்டுட்டு வர வேண்டியது தானே?”
“ஐயோ அவங்களா? அந்த மாமிக்கு கொஞ்சம்கூட அக்கறை இருக்காது டிவி போட்டால் எல்லாத்தையும் மறந்துடு வா.. அதனால பதட்டத்துல, அவ தூங்கும் போது, வீட்டை லாக் பண்ணிட்டு வந்துட்டேன்…”
“சரியா போச்சு போ, என்னாலயும் இப்போ பெர்மிஷன் கேக்க முடியாது…”
“நீங்க நேரமே வந்துடுவீங்கன்னு நெனச்சுட்டு தப்பு பண்ணிட்டேன்… இந்நேரம் முழிச்சிட்டு, கண்டிப்பா அழுதுட்டு நம்மை தேடிட்டு இருப்பா..”
“கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு? இப்போ நான் கிளம்பி வந்தா கூட, இந்த ட்ராபிக்ல வீடு வந்து சேர நைட் எட்டு மணி ஆயிடும்”
“இப்போ என்ன செய்யறது சந்தோஷ்?”
“என்னை கடுப்பேத்தாம உடனே கிளம்பற வழியை பாரு!”
கண்ணீர் பீறிட்டுக்கொண்டு வந்தது விமலாவிற்கு, அழுகையை அடக்கிக்கொண்டே, நர்மதாவிடம் விடை பெற்றுக்கொண்டு, காரை இயக்கி, நூற்றி முப்பதில் கோவையை நோக்கி பறக்க ஆரம்பித்தாள் விமலா மனதில் பாப்பாவின் நினைவுகளோடு …
“கெட்டில்ல இருந்த சுடு தண்ணியை பிளாஸ்க்ல நிரப்பி வைக்காம வந்துட்டேனே? சுவிட்ச் கூட ஆப் பண்ண மறந்துட்டேன்..”
“என்ன மனுஷி நான்? எங்கிருந்து வந்தது, இப்படியொரு அவசரமும், அலட்சியமும்?”
“ஒருவேளை பாப்பா கெட்டிலை தொட்டிருந்தா? ஐயோ கற்பனை கூட பண்ண தோணல”
வீடு முழுவதும் தேடி இருப்பாளோ?
“இன்னைக்குன்னு பார்த்து இவ்ளோ டிராஃபிக்”
கனியூர் டோல் கேட் தாண்டியதும், எலெக்சன் விஜிலென்ஸ் டீம் ஒவ்வொரு வாகனங்களாக சோதனை செய்து கொண்டிருந்தது…
“அடக்கடவுளே, இன்னைக்கு யார் முகத்துல முழிச்சேனோ தெரியலையே? இன்னும் எவ்ளோ நேரம் ஆகுமோ?”
பதினைந்து நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின், விமலாவின் கார் சோதனை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது…
பீளமேட்டை கடக்கும் போது மணி ஆறு முப்பது. சாய்பாபா கோவிலைக் கடந்து கொண்டே,
“அப்பா என் குழந்தை பத்திரமா இருக்கணும், என் மேல தான் தப்பு, என்னை மன்னிச்சிடுங்க”
அப்பொழுது விமலாவின் கவனம் சிதற, காரை ஓவர் டேக் செய்த ஆட்டோ டிரைவர்,
“வழியை பார்த்து ஒட்டும்மா, அரைகுறையா கார் ஒட்டி பழகிட்டு, இந்த பொண்ணுங்க பண்ற அலப்பறை தாங்கல,” என்று சலித்துக்கொள்ள,
படபடப்புடன் இரவு எட்டு மணிக்கு, வடவள்ளியில் இருக்கும் தனது வீட்டை அடைந்தாள்…
பாப்பா பதட்டப்பட்டு கத்தி விடக்கூடாது என்பதற்காக, காரை காம்பவுண்டுக்கு வெளியே ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு,வாயிற்கதவை சப்தமில்லாமல் மெதுவாக திறந்து, ஜன்னல் வழியே கலவரத்துடன் எட்டிப்பார்த்தாள் விமலா.உள்ளே நிசப்தமாக இருந்ததால், நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டே, கதவை சாவி கொண்டு திறக்க, கதவை ஓட்டிக்கொண்டே, கால்மிதியின் மீது, நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்த பாப்பா, விமலாவைப் பார்த்ததும், வாலை ஆட்டிக்கொண்டு மேலே தாவ,
“ஐ அம் வெரி சாரி டி என் செல்லமே” என்று கண்ணீருடன் கட்டியணைத்தாள் விமலா..