பாட்டையா
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 7, 2025
பார்வையிட்டோர்: 1,803
(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஏழாங்கிளாஸ் பிள்ளைகளுக்கு சயன்ஸ் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது – என்னவோ தெரியவில்லை – அரிஞ்சர் பாட்டையா ஞாபகம் வந்து உறுத்தியது. அவர் சாகக் கிடக்கிறாராம். ஏற்கனவே ரெண்டு மூன்று தடவைகள் பார்த்துவிட்டு, கொஞ்சம் பணம் தந்துவிட்டு வந்தேன். இப்போது, இழுத்துக்கொண்டு கிடக்கிற தாம். பார்த்துவிட்டு வந்தால் நல்லது.
ஆவணி மாசம்.காற்று நின்று போயிற்று. மழைக் கோப்பு, முகம் காட்டிவிட்டது. வெயில் பழுத்து அடிக்கிறது. உக்ரமான வெயில். சுள்ளென்று உறைக்கிறது. உள்ளுக்குள் ஒருவித படபடப்பையும், இறுக்கத்தையும் ஏற்படுத்துகிறது. வெக்கையும் புழுக்கமுமாய் உடம்பு அவிந்து, மூச்சுத் திணறுகிறது.
மேகம் சினந்து கனக்கிறது. அப்புறம் விலகிப் பிரிகிறது. வேப்பமர நிழலில்தான் ஏழாங்கிளாஸ். மைனாக்கள் சப்பிப்போடுகிற வேப்பம் பழங்கள் ‘சொத், சொத்’ தென்று மஞ்சள் சளியாய் வந்து விழுகின்றன. நோட்டில் விழுந்துவிடுமோ என்ற பயத்திலேயே பிள்ளைகள்.
எனக்கேகூட மைனாக்களும், காக்கைகளும் பெரும் தொல்லையாகத்தான் இருக்கின்றன. பாடம் நடத்தவிடாமல் மனசைக் கலைக்கின்றன.
சிறுபிள்ளையாக இருந்து கொஞ்சம் முற்றியவுடனேயே, இந்த யோசனை முளைவிட்டு விட்டது, முண்டியது. யாரிடமும் கேட்கவும் தோன்றவில்லை.
‘அறிஞ்சர் பாட்டையா’ என்று யார் உச்சரித்தாலும் சரி, எனக்குள் அரிக்கேன் லைட்டின் வடிவம்தான் தோன்றி மறையும். எழுத்துக்களில் உள்ள ‘அரி’ என்ற உச்சரிப்பு ஒற்றுமைதான் காரணமா?
இல்லை,தோற்றமே ஏறக்குறைய அப்படித்தான். நல்ல கறுப்பு,உடம்பெல்லாம் ரோமம் பொக்கைவாய், பொடிக்கண்.
அவர் உட்கார்ந்திருக்கும்போது பார்த்தால்…அரிக்கேன் லைட் மாதிரியான சாயல் தெரியும்.
ரொம்ப நாள் யோசனைக்குப் பிறகு…
‘அந்தா, இந்தா’ என்று பாவலா காட்டிக்கொண்டிருந்த அந்தப் பெயர் விஷயம், ஒருவழியாக எனக்குள் பிடிபட்டது.
‘ஆங்…அப்படித்தானிருக்கும்’ என்று, நானே உறுதிப்படுத்திக் கொண்டேன்.
‘அறிஞர் என்று தாய் தகப்பன் பெயர் வைப்பார்களா? அறிவழகன், அறிவுமதி, அறிவரசன் என்றெல்லாம் உண்டுதான். அப்பவும் அறிஞர் என்றா பெயர் வைப்பார்கள்?
ஒருவேளை… பட்டப் பெயராக இருக்குமோ…
இட்டுக்கட்டி பாட்டு படிக்கிற பாட்டையா, இம்புட்டுத்தான் என்ற எல்லையே கிடையாது. அம்புட்டுக் கதைகள் போடுவார்.
சிலசமயம்… குழந்தைகள் நச்சரிப்பு தாங்காது. மனசிலும் கதை பிடிபடாது. எந்த யோசனையும் இல்லாமல் வெறுமனே “ஒரு ஊருலே ஒரு ராஜா இருந்தாரு” என்று துவங்கிவிடுவார். அப்புறம் சொல்லச் சொல்ல… சிலந்திப் பூச்சி வாய்ப்பசை மாதிரி, கதை வந்து கொண்டேயிருக்கும்.
முடிக்கும்போதுதான் அவரே உணர்வார், ‘இது ஒரு புதிய கதை’ என்று.
இப்படித் திறமைகள் உள்ளவர் என்பதால், ‘அறிஞர்’ என்று பட்டப் பெயர் வைத்து… அதுவே நிலைத்து, மருவி, இப்படி அரிஞ்சர் ஆகியிருக்குமோ? இருக்கலாம். அப்படியும் கிராமத்தில் நிறைய உண்டுதான்.
மறுநாளுக்கு மறுநாள், ஞாயிற்றுக்கிழமை.
எழுந்து முகம் கழுவி விட்டு வெளியே வந்தவுடன், தெருவில் வந்து மோதிய செய்தி: “அரிஞ்சர் பாட்டையா மண்டையைப் போட்டுட்டார்.”
சாம்பல் நிற வெளிச்சம் இருக்கிற காலைப் பொழுது. டீக்கடையில் ஏகமாய்க் கூட்டம். சாரல் வாடை, மெல்லிய கூதலாக அடிக்கிறது.
“ஒரு டீ போடுப்பா” என்று சொல்லிவிட்டு, ஒரு கல்லில் உட்கார்ந்தேன். டீக் கடைக்குள் உட்கார்ந்து ரெண்டாவது டீ, மூன்றாவது டீ அடிப்பவர்களெல்லாம் ‘கசா முசா’வென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய சப்ஜெக்ட்: ‘பாட்டையா’ தான்.
மூணுநாளா இழுத்துக்கிட்டு கிடந்துச்சு. இன்னிக்குக் காலையிலே நாலரை மணிக்குத்தான் உசுர் போச்சு.”
“ஆளு ரொம்ப மெலிஞ்சுப் போயிட்டாரு. வெறும் எலும்பாக் கிடந்தாரு.சட்டடியா படுத்துட்டாரு. நெஞ்சுக்குழியிலே மட்டும் லேசா துடிச்சிக்கிட்டிருந்துச்சு.”
“நல்ல வலுத்த கட்டை. பழைய காலத்துக் கட்டை. காந்தி காலத்து விஷயம். போஸ் காலத்துச் சமாசாரம் எல்லாம் சொல்லுவாரு. வயசு நூறை அடுத்து இருக்கும்.”
“மனுசன் கதை சொன்னாருன்னா… என்னமாய்ச் சொல்லுவாரு! கண்ணு முன்னாலே சினிமா மாதிரி ஓடுமே!”
“அவரு போடுற அழிப்பான் கதையை (விடுகதை) எந்தக் கொம்பாதி கொம்பனும் அழிச்சிட முடியாதே.அம்புட்டு நுட்பமா போடுவாரே.”
”ஊர்லே யார் வீட்லே கல்யாணம்னாலும், அவருதானே வாழ்த்துப்பாட்டு படிப்பாரு.அந்நேரத்துக்கு அந்நேரம் இட்டுக்கட்டி, பொருத்தமாய் படிச்சிருவாரே.”
“அந்தப் பாட்டுலேயும் என்னமாய்க் கேலி பண்ணுவாரு. கேலின்னே தெரியாது. யோசிச்சுப் பார்த்தாத்தான் கேலிங்குறது, முள்ளுமாதிரி நறுக்குன்னு குத்தும்.”
“அப்படித்தான் ஏங் கல்யாணத்துலே பாட்டு படிச்சாரு.
‘அயிரை மீனு கூடை தூக்கி
அய்யமாரு தெருவுலே போய்
அருமையாக ஏவாரம் பண்ணுவாரு.
அள்ளி அள்ளி லாபம் குவிப்பாரு.
அழகு சீமை ராசாவாம்-எங்க
ஆசைச் சீமை மாப்பிள்ளையாம்.'”
டீக்கடைக்குள் ஒரே சிரிப்பாணிச் சத்தம். அந்தக் காலை நேரத்துச் சூழலுக்குப் பொருந்தாமல், வெடிச்சிரிப்பு… சரவெடி விடாமல் வெடிக்கிற மாதிரி.
என்னால் இதில் கலந்துகொள்ள முடியவில்லை. எரிச்சலாகக் கூட இருந்தது.
பாட்டையா செத்துப் போனார் என்ற நிஜம், ஒரு கனத்த சோகமாய் மனசை அழுத்துகிறது. ஆழ் மனசில் உறைந்து கிடந்த, ஏதேதோ ஞாபகங்களைக் கிளறி விடுகிறது. எனது பால்ய நாட்கள்…
தாய்ப்பாலைப்போல, பாட்டையாவின் கதைப்பாலை ஞானப் பாலாகக் குடித்து, ரசித்து, லயித்துக் கிடந்து நாட்கள். தேனில் விழுந்த ஈயைப்போல, எழமுடியாமல் மயங்கித் திளைத்த நாட்கள்.
அறிஞ்சர் பாட்டையா எனக்குச் சொந்தமில்லை. நெருங்கிய உறவுமில்லை. ஆனால் அவரது சாவு, என் மனசை ரொம்பப் பாதிக்கிறது. என் சொந்தத் தாத்தாவின் சாவுகூட என்னுள் இத்தனை சலனத்தை ஏற்படுத்தவில்லை. எதனால் இப்படி? எப்படி இது?
அவர்தான் எனக்கு ஞானத்தந்தையா? என் அரும்புப் பருவத்து மனசைச் செதுக்கிய ஆசானா? ம்ஹும், அதுக்கும் மேலே.
பனியனுக்குமேல் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு, பாட்டையா வீட்டுப் பக்கம் போனேன். இழவு வீட்டுக்குரிய அடையாளங்கள்.
சின்னப் பந்தல், பந்தலின் அடிவயிற்றில் விரித்துக் கட்டப்பட்ட வெள்ளைத் துணி. அதற்குள் மாலையும் பூச்சரமும்.
வீட்டுக்கு எதிரில்,’அங்கே, இங்கே’ என்று சிதறிச் சிதறி உட்கார்ந்திருக்கிற கிராமத்து ஜனங்கள். திண்ணையில் நாட்டாண்மை முன்னால் ஒரு நார்ப் பெட்டி. அதில், வெற்றிலைக்கட்டு, பாக்கு, சுண்ணாம்பு.
வழக்கம்போல்…இந்த ஆட்களோடு சேர்ந்து உட்கார மனசில்லை. உட்கார்வதற்கு முன், பாட்டையாவைப் பார்க்கணும். கண்ணாரப் பார்க்கணும். மனசு கரையப் பார்க்கணும். உள்மனசு குவிந்து, கும்பிடணும்.
மளமளவென்று வீட்டுக்குள் நுழைந்தேன்.
பாட்டையாவைச் சுவரோரத்தில் நாற்காலி போட்டு, அதில் சாத்தி வைத்திருத்தார்கள். நாடிக்கட்டு போட்டிருந்தது. நெற்றியில் பொட்டாக ஐம்பது பைசா நாணயம். பாதத்துக்கு ஒரு பலகை வைத்து, கால் கட்டைவிரல் இரண்டையும் துணியால் கட்டியிருந்தனர்.
வற்றி உலர்ந்து ஒடுங்கிப் போன நெஞ்செலும்பு. அவற்றை மறைக்க முடியாத மெல்லிய துணியாகக் கருப்புத் தோல். நிறைய ரோமங்கள். முடிவேயில்லாமல் வண்டி வண்டியாய்க் கதை போட்ட வாயில், சிவப்பாக எதையோ வைத்திருந்தார்கள்.
சுற்றிலும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த கிராமத்துப் பெண்கள், ஒரு வியப்போடு என்னைப் பார்க்கின்றனர். வியப்பை மறைக்கத் தெரியாமல், ஒரு மெல்லிய கிசுகிசுப்புச் சத்தம்.
“என்ன வாத்யாராய்யா…? பாட்டையாவைப் பாக்க வந்தீகளாக்கும்?”
“ம்.”
“ம். நல்ல சீவன். யாருக்கும் ஒரு தொல்லைதராம, சீப்படாம போய்ச் சேந்துட்டாரு.”
வெறுமனே அவர்களைப் பார்த்து, ஒப்புக்குத் தலையாட்டி விட்டு வெளியே வந்தேன். யாரிடமும் பேச்சுக் கொடுக்கிற மனநிலையில்லை. ஒரு கனம். இழப்பைத் தாங்கமாட்டாத கனம்.
வீடுகளின் நிழல், மேற்காக நீண்டுகிடக்கிறது. காலை நேர வெயிலில் ஒரு உக்கிரம் தெரிகிறது. நானும் ஒரு சுவரடியில் உட்கார்ந்தேன்.
யாரோ ஒருவர் வெற்றிலை பாக்கைக் கொடுத்தார். போட்டுப் பழக்கமில்லை. மறுப்பது அநாகரிகம். வாங்கிச் சுருட்டி வைத்துக் கொண்டேன்.
மனசு முழுக்க பாட்டையா. கதை போடுகிறபோது அவரது குரல். காதுக்குள் வந்து ரகசியம் பேசுகிற மாதிரியான குரல். சின்ன வயசு வாழ்க்கை முழுவதையும் ஆக்ரமித்திருந்த பாட்டையா.
பொழுதடைந்துவிட்டால் போதும். அம்மாவிடம் சோறுகேட்டு நச்சரிக்க ஆரம்பித்துவிடுவேன். அம்மா ரொம்ப இச்சிலாத்திப் படுவாள்.
“ஏண்டா, உசுரை வாங்குறே? இந்நேரத்துலே பசிக்கவா செய்யுது?”
“பசிக்கலே.”
“பெறகு ஏண்டா,’சோறு சோறு’ங்கிறே?”
“கதை கேக்கப் போவணுமில்லே!”
சாப்பிட்ட கையின் ஈரத்தை டவுசரில் துடைத்துக்கொண்டு, ஒரே ஓட்டம்தான்.அம்மாவின் சத்தம் முதுகுக்குப் பின்னால் துரத்திக் கொண்டு வரும்.
“ஏலேய்… பாடம் படிக்கலியா?”
“இல்லே…கதை கேக்கப் போறே…ன்” என்று சத்தத்தை எறிந்து விட்டு… ஓடுவேன்.
வைத்தியர் தாத்தா வீட்டு முன்னால், முற்றத்தில் பாட்டையா உட்கார்ந்திருப்பார். அவரது விரலிடுக்கில் பொடிப் பட்டை. அவரைச் சுற்றிலும் ஈக்களாகச் சிறுவர் பட்டாளம். பாவாடையும், டவுசருமாய்ச் சிறுவர்-சிறுமியர்.
“பாட்டையா… பாட்டையா… கதை போடுங்க பாட்டையா…”
- என்று நச்சரிக்கிற சிறுவர்களில், நானும் ஒருவனாய்ப் போய் விழுவேன். நானும் நச்சரிப்பேன். கெஞ்சுவதே பெரும் கூச்சலாக இருக்கும்.
“அடச் சும்மாயிருங்க கொரங்குகளா?” என்று கோபத்தொனியில் சொல்லுவார். ஆனால், பொடிக்கண்களில் பெருமிதம் இருக்கும்.
என்னைப் பார்த்துவிட்டால், அவர் கண்ணில் ஒரு மின்னல்.
“இந்த உண்டு வளர்ந்தானும் வந்துட்டானா?” என்று சலிப்போடு கேட்டுவிட்டுச் சிரிப்பார். மேல் வரிசையில் ஒன்றும், கீழ் வரிசையில் இரண்டுமாய்ப் பற்கள், அந்தமாய் நிற்கும். செவலை நிறமாய், கறை படிந்து கிடக்கும்.
“கதை போடுங்க பாட்டையா.”
“போட்டா…என்ன தருவீக?”
“என்ன வேணும் பாட்டையா? துட்டா?”
“துட்டு என்னத்துக்கு? பொடிப்பட்டை தருவீகளா?”
“ம். நா வாங்கித்தாரேன். பாட்டையா”
“அதுக்குத் துட்டு வச்சிருக்கீகளா?”
கப்சிப். பேச்சு மூச்சில்லாமல் பம்மிக் கிடப்போம். நிதர்சனத்தைத் தாங்காத திணறல்.
“சரி…கதையைக் கேளுங்க” என்று பாட்டையா சொன்ன பிறகுதான், எங்களுக்கு மூச்சு வரும். உயிர் வரும். மனசுக்குள் ஓர் உற்சாகம். துள்ளலான மகிழ்ச்சி. என்ன கதை போடுவாரோ என்ற துறுதுறுப்பு.ஆவல். சிட்டுக்குருவிகளின் சிறகடிப்பாக…மனசு.
அவரே அவருக்குச் சொல்லிக் கொள்வதைப்போல – ஒரு ருசியோடு – ரசனையோடு – லயித்துப் போய்ச் சொல்லுவார்.
பாட்டையா போடுகிற கதைகளில், ஈனாப்பூச்சி என்று ஒரு பயங்கரப் பூச்சி வரும். நாலு பூச்சிகள் சேர்ந்தால் ஓர் ஆளைத் தின்று தீர்த்துவிடும் என்பார். பெரிய பெரிய பூச்சிகள்!
பௌர்ணமி நிலா வெளிச்சம். ராணியைச் சிறை மீட்டுக் கொண்டு,ராசா குதிரையில் பறப்பார். காவலுக்கு நின்ற ஈனாப் பூச்சிகள் படையாகத் துரத்தும். எட்டுக்கால் பாய்ச்சலில் விரட்டும். ராசா திரும்பித் திரும்பிப் பார்ப்பார். பூச்சிகள் ரொம்ப நெருங்கிவிடும். அவற்றின் கண்கள், நிலாவெளிச்சத்தில் நெருக்கமாய் மின்னும். ராசா பதறுவார். கத்துவார். ஐயய்யோ என்று அலறுவார். ராணி தைர்யம் சொல்வாள். தப்பிக்க முடியாத அபாய கட்டம். ராணி கழுத்தில் கிடந்த நவரத்தினமாலையை அறுத்து, பின் பக்கமாய் எறிந்து விடுவாள்.
சிதறிக் கிடக்கிற ரத்தினங்கள், நிலா வெளிச்சத்தில் கண்ணைப் பறிக்கும். எல்லாப் பூச்சிகளும் ரத்தினங்களை மொய்த்துக்கொள்ள, ராசாவும் ராணியும் தப்பிவிடுவார்கள்.
அப்பாடா!
அப்பத்தான் எங்களுக்கும் உயிர் வரும். நாங்களே ஈனாப்பூச்சியின் கொலைப் பசியிலிருந்து தப்பித்துவிட்டமாதிரி, ஓர் ஆறுதல்.தவிப்படங்கும்.
ஜம்புலிங்கம் கதையை மட்டும் நாலு நாட்களுக்குப் போடுவார். காதுகளில் தங்கப் பாம்படம் போட்டிருக்கிற கிழவி, காட்டு வழியே செல்லப் பயப்படுவாள். துணைக்கு வருகிற ஜம்புலிங்கத்தின் அக்கிரமங்களைச் சொல்லிப் புலம்பி, அவனைத் திட்டித் தீர்ப்பாள்.
ஊர் எல்லையில் கொண்டு போய்ப் பத்திரமாகச் சேர்த்துவிட்டுத் திரும்புகிற வழிப் போக்கனைக் கிழவி கையெடுத்துக் கும்பிடுவாள்.”நீ நல்லா இருக்கணும், தர்மராசா.
அவன் சொல்வான்: “நாதர்மராசா இல்லே. கொள்ளைக்காரன் ஜம்புலிங்கம்.”
கதை சொல்வதில், பாட்டையா ஒரு ராசாதான். அப்படியே கண் முன்னால் காட்சிகள் ஓடும். கதையோடு சேர்ந்து நம் மனசும் துடிக்கும். ஜம்புலிங்கத்தைப் போலீஸ் நெருங்குகிறது என்றால்…நம் மனசெல்லாம் கிடந்து பதறும். ‘ஐயோ, ஐயோ’ என்று தவிக்கும்.
ராசா, தனது புது மனைவியோடு பயணம் செய்வான். நண்பனும் உடன்வருவான். களைப்பாற ஆலமரத்தடியில் ஒதுங்கி ஓய்வெடுப்பார்கள். ராசாவும் – ராணியும் உறங்க,நண்பன் காவல் இருப்பான்.
மரத்தில் உட்கார்ந்திருக்கிற அண்ட பேரண்டப் பட்சிகள் பேசிக் கொள்ளும்.
“பாவம் இந்த இளைஞன்! புது மனைவியோடு நிம்மதியாக உறங்குகிறான். இன்னும் கொஞ்ச நேரத்தில் சாகப் போவதையறியாமல், கனவு கண்டு உறங்குகிறான்.”
“எப்படிச் சாவான்?”
“இந்த ஆலமரக்கிளை ஒடிந்து, நசுக்கிக் கொன்றுவிடும்.”
“அதிலிருந்து தப்பிவிட்டால்?”
“பெரிய ஆற்று வெள்ளத்தைக் கடப்பார்கள். திடீரென்று வெள்ளப் பெருக்கு உயர்ந்து, சுழலாகி, ராசாவை இழுத்துச் சென்றுவிடும்.”
“அதிலிருந்து தப்பிவிட்டால்?”
அந்தப் பட்சி இன்னும் மரண வாசல்களை அடுக்கிக்கொண்டே போகும். விழித்திருக்கிற நண்பனுக்கு, அந்தப் பட்சிகளின் பாஷை புரியும் என்பார், பாட்டையா.
“அதெப்படி? பட்சிகளோட பேச்சு நமக்கு எப்படிப் புரியும்?”
“ஒனக்குப் புரியாது. அவன் பெரிய படிப்பாளி. அறிவாளி. மந்திரி. அவனுக்கு எல்லாம் புரியும்.”
“சரி… பாட்டையா, மைனா என்ன பேசுது? உங்களுக்குத் தெரியுமா?”
“காடை கரையுதே… அதுக்கு என்ன அர்த்தம் பாட்டையா?’ ‘மயிலு கூப்பாடு போடுது. அது என்ன சொல்லிக் கூவுது?”
கேள்விகளைக் கண்டு அசரவே மாட்டார். கோபப்படவும் மாட்டார். சளைக்காமல் பதில் சொல்வார். தெரியாது என்று எதையும் சொல்லவே மாட்டார். அது அதற்கு, எதையாவது சொல்லி அடைத்து விடுவார்.
பதினைந்து வயசு வரைக்கும், நான் அவரிடம் கதை கேட்டு வளர்ந்திருக்கிறேன். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதுகூட, கதை கேட்டிருக்கிறேன்.
எங்க ஊர் நாவிதனிடம்தான் அப்போ முடிவெட்டிக் கொள்வேன். நான் சம்மணக்கால் போட்டு, தலையைக் குனிந்திருப்பேன். நாவிதன், குத்துக்கால் வைத்து முடிவெட்டுவான். என் காதோரத்தில் அவனது ‘கத்தரிப்பான்’, ‘கரிச், கரிச், கர்ரீச்” என்று கிறீச்சிடும்.
அது, எனக்கு மைனாவின் கத்தல் போலவே ஒலிக்கும். இந்த ஒலிக்கு என்ன அர்த்தம்? என்ன வார்த்தை வடிவம்? என்ன பேசுகிறது? நானாகவே ரொம்பக் காலம் யோசித்திருக்கிறேன்.
“கரிச், கரிச், கர்ரீச்….’
“வெட்டு, வெட்டு… வெட்ட்டு…”
அப்படீன்னா, மைனாவின் சத்தமும் இதே சந்தத்தில். அதற்கு என்ன வார்த்தை வடிவம்? “கொத்து..கொத்து… புழுக்கொத்து…”
நான் சொல்லிப்பார்ப்பேன். சரியாகவே இருக்கும்.
அம்புட்டுதான். எனக்குள் சந்தோஷம் சொல்லிமாளாது. ஏதோ அதிசயத்தைக் கண்டுபிடித்துவிட்ட சந்தோஷம். ஏதோ மர்மத்தை – ரகசியத்தை – தொட்டுணர்ந்துவிட்ட களிப்பு.
எனக்கும் பறவைகளின் பாஷை புரியத் தொடங்கிவிட்டமாதிரி, ஓர் உற்சாகம்.
இதெல்லாம்… பாட்டையாவின் கதைகளால் வந்த ஞானப் பயிற்சி. அவரது தூண்டுதல். பாட்டையாவின் கதைகள், எனக்குள் எத்தனையோ நல்ல விளைவுகளை அற்புதங்களை நிகழ்த்தியிருக்கின்றன.
கதை சொல்லுகிற அவரது நேர்த்தி…என்னுள் கதை கேட்டுக் கரைகிற ஆர்வத்தையும், பாடம் கேட்டுப் பதியவைத்துக்கொள்ளுகிற ஈடுபாட்டையும் வளர்த்திருக்கிறது. கற்பனா சக்தியை வளர்த்திருக்கிறது; மந்திர தந்திரக் கதைகள், நம்பக்கூடியது எது – நம்ப முடியாதது எது என்று பகுத்தறிகிற சுயதீவிரத்தை வளர்த்திருக்கிறது; நடத்துகிற பாடங்களை உள்வாங்குகிற ஆற்றலை -அதைச் சொந்த வார்த்தைகளில் வெளிப்படுத்துகிற தகுதியை வளர்த்திருக்கிறது; இளவயசுக்குரிய மன உலகத்திற்குள் ஜீவ ரத்த ஓட்டம் துரிதமாகி, துடிப்புடன் வளர்த்திருக்கிறது.
அதனால்தான்… எல்லா வகுப்பிலும் முதல் ரேங்க் மாணவனாகவே இருந்து வந்திருக்கிறேனா? இருக்கும்.
பாட்டையாவின் கதை நாயகர்கள் எல்லாரும் சராசரி மனிதர்களல்ல; தனித்துவமிக்கவர்கள்; சாகசக்காரர்கள்; சாதனையாளர்கள்; இளம் மனசுகளைக் கொள்ளைகொண்டவர்கள்.
என் மனசுக்குள் அவர்கள் பேசியிருக்கிறார்கள். என் கனவுகளில் வந்து மந்திரம் போட்டிருக்கிறார்கள். “சும்மா கிடக்காதே…சராசரியாக இருக்காதே… தனித்துவமாக இரு. சாதனை செய்து காட்டு… சாகசமாய் ஜொலி” என்று தூபம் போட்டிருக்கிறார்கள். வேட்கையை ஏற்படுத்தி, உத்வேகம் ஊட்டியிருக்கிறார்கள்.
பாட்டையா, உமது கதைகள் என்னை வார்த்திருக்கின்றன. என்னையறியாமல் எனக்குள் இயங்கியிருக்கின்றன. என்னை இயக்கியிருக்கின்றன.உசுப்பிவிட்டு, ‘ஓடு, ஓடு’ என்று முடுக்கி விட்டிருக்கின்றன. துவண்டு சோர்ந்தபோதெல்லாம்… தட்டி எழுப்பி வழிநடத்தியிருக்கின்றன.
அர்ஜுனனுக்கு வாய்த்த பார்த்தசாரதியைப் போல… எனக்கு நீரும் ஒரு கிருஷ்ண பரமாத்மாவா? என்னைப் போல எத்தனை பேருக்கு நீர் கிருஷ்ண பரமாத்மாவாக இருந்து வழிநடத்தியிருப்பீர்? எங்க அப்பாவுக்கும்கூட.
நேரம் இளமதியம் ஆகிவிட்டது. எனக்குச் சாப்பிடத் தோன்றவில்லை. நான் உட்கார்ந்திருந்த இடத்தில், நிழல் சுருங்கி வருகிறது.
அங்கே இங்கே என்று உட்கார்ந்திருக்கிற எல்லாரும் கல்யாண வீட்டில்போல கலகலப்பாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
ஊர், நிலவரம், கட்சிக் கலவரம், உரவிலை உயர்வு, நிலத்தைச் சீரழிக்கிற டக்கர் உழவு,பருத்தி மார்க்கெட் என்று பேச்சு, சர்க்கரையில் மொய்க்கிற ஈக்களாக அங்கும் இங்குமாய்ப் பறந்து கொண்டிருக்கிறது.
ரெண்டு வாரிகளை நீளவாக்கில் போட்டு, குறுக்கு வாட்டில் நாலு குச்சிகளைப் போட்டு, பச்சை வாகைக் குச்சிகளை வளைத்துக் கட்டி, மேலே கலர்ச் சேலைகளைச் சுற்றி…ஒரு நிமிஷத்தில் தேர் செய்துவிட்டார்கள். அதற்குப் பூ அலங்காரம் வேறு. தேருக்குள் சிம்மாசனம்போல ஒரு நாற்காலியைப் போட்டு இறுக்கிக் கட்டிவிட்டார்கள்.
நீர் மாலைக் கிணற்றுக்குப் போவதற்காக, நாவிதன் மூன்று தடவை சங்கு ஊதினான். ஆண்கள் எல்லோரும் பின்தொடர, நீர் மாலைக் கிணறு போய் வந்தவுடன்…
இளவட்டங்கள் ‘தூக்குவதற்காக’ மும்முரமாக வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டனர்.
பாட்டையாவைக் குளிப்பாட்டி, மல்லு வேட்டி கட்டி, தேரில் உட்காரவைத்து, கயிறுபோல முறுக்கிய வேட்டியால் கட்டி-
ஏகாலி தேருக்கு முன்னால் சேலைகளை விரிக்க, ‘ஜே,ஜே’ என்று தூக்கிவிட்டார்கள். கிராமத்து மக்கள் பேச்சின் தொடர்ச்சி அறுபடாமல், தேரைப் பின்தொடர்ந்தனர்.
எனக்குள் கனம். இழப்பின் சுமை தாளாத திணறல். யாருடனும் பேசவில்லை. பேசமுடியவில்லை. பேசுகிற மனசில்லை. பேசினால் மனப்பாரம் குறையும். பேச ஆளில்லை.
இவர்களைப் பொறுத்தவரை…இது ஒரு வெறும் சாவு. வயசான கட்டையின் பயணம். எந்தக் கவலையும் படத் தேவையில்லாத, இயல்பான பழுத்த உதிர்வு. நீண்ட காலம் வாழ்ந்து, முடிந்து, திருப்தியோடு சுருண்டு கொண்ட ஒரு சாவு. அவ்வளவுதான்.
எனக்கு அப்படியா? என்னைச் செதுக்கிய ஞானத்தந்தை. பார்த்தனுக்குத் தேரோட்டிய சாரதியைப்போல, என்னை வார்த்து வழி நடத்திய கிருஷ்ண பரமாத்மா. எனது ஆன்ம வளர்ச்சியில் தீப ஒளி காட்டிய கிருஷ்ணன். அப்பேற்பட்டவரல்லவா, பாட்டையா.
பாட்டையாவுக்குப் பிறகு… யார் இப்படிக் கதை போடுவார்? என் பிள்ளைகளுக்கு இப்படியோர் பார்த்தசாரதி இல்லையே…கதை போட – கற்பனை ஆற்றலை வளர்க்க – சாதனையாளர்களாக வார்க்க ஒரு பாட்டையா இல்லையே…
ஈரச் சிலிர்ப்பும், இனிமைப் பரவசமும் நிறைந்த ஒரு வாழ்க்கையை-வாய்ப்பையே -என் பிள்ளைகள் இழந்துவிட்டனர்.
இதை எப்படி ஈடுகட்டுவது? ஈடுகட்டக்கூடிய இழப்பல்லவே, இது! வாழ்க்கை என்ன சக்கரமா? மறுபடியும் மறுபடியும் பாட்டையா பிறப்பாரா? மாட்டார். அவ்வளவுதான்.
யந்திரமயமான பரபரப்பாகிவிட்ட இந்த டக்கர்யுகக் கிராமத்தில்… இனிப் பாட்டையா பிறக்க வழியில்லை. பிறந்தாலும், பாட்டையாப் போல, கதை போட முடியாது.
நான் பெற்ற வாய்ப்பை, என் பிள்ளைகளுக்கு என்னால் பெற்றுத்தர முடியாது. முகம் மாறிப்போன வாழ்க்கையில், முடிந்து போன யுகம் மீண்டும் அரும்பப்போவதில்லை…
மயானக்கரை. பனைமரங்களின் நிழலில் ஜனங்கள். குழிக்குள் பாட்டையாவை இறக்கினர். “வாய்க்கரிசி போட வாங்க” என்று சத்தமாய் நாவிதன் அழைத்தான். நெருங்கிய உறவினர்கள், அவன் நீட்டிய வட்டிலில் சில்லறையைப் போட்டுவிட்டு, நீரும் அரிசியும் அள்ளி, பாட்டையாமேல் போட்டனர்.
நானும் போனேன். என்னை வியப்புடன் பார்த்தனர். என் வருகையின் உட்காரணம் யாருக்கும் புரியவில்லை.
‘நெருங்கிய உறவில்லாத இவன் எதுக்கு, வாய்க்கரிசி போட வரணும்?’ என்ற யோசனை எல்லார் கண்களிலும். எதையும் நான் பொருட்படுத்தவில்லை.
முழுசாக ஒரு ரூபாயை வட்டிலில் போட்டுவிட்டு, வாய்க்கரிசியைப் போட்டேன். குழிக்குள் மடங்கிக் கிடந்த பாட்டையாவின் திறந்த வாயைக் கூர்ந்து பார்த்தேன். மனசுக்குள் அள்ளி வைத்துக் கொள்வதைப்போலப் பார்த்தேன்.
இன்னும் சில நிமிஷத்தில் மண்ணைப் போட்டு மூடிவிடுவார்கள்.
குழிக்குள் கிடப்பது பாட்டையாவா? கதைகள். கற்பனைக் கதை சொல்லுகிற கலை. சிறுவர்களின் பூப்போன்ற மன உலகை உரியமுறையில் வார்க்கத் தெரிந்த உயிர்க்கலை. சிருஷ்டிப்புக் கலை.
உடைந்த மீனசு கண்ணில் கசிய… பனைமர நிழலுக்கு வந்தேன்.
மயானக்கரை வேலைகள் முடிந்து, பணச் செலவு முடிந்த பிறகு, சிரிப்பும் பேச்சுமாக-ஓட்டமாக -கலகலப்பாக – எல்லோரும் கிணறுகளை நோக்கிக் கிளம்பினர், குளிக்க.
நானும் ஒரு கிணற்றில் இறங்கி, மௌனமாய்க் குளித்துவிட்டுக் கிளம்பினேன். சுள்ளென்று அடிக்கிற வெயில். கண்ணை உறுத்துகிற மழை வெயில். தோள், புஜமெல்லாம் காந்தியது.
வீடு வந்து சேர்ந்தேன். இழவு வீட்டிலிருந்து திரும்பியிருந்த பார்வதியும் குளித்திருந்தாள். ஈரத்தலையோடு இருந்தாள்…
“இன்னும் சாப்டலியா?”
“ம்…”
ஈரவேட்டியைக் காயப்போட்டேன். வேறு கைலியை உடுத்திக் கொண்டேன். வெயிலின் உக்கிரத்திலிருந்து வந்திருந்ததால், வீட்டு நிழல் இருட்டாகத் தெரிந்தது.
இன்னும் மனசுக்குள் பாட்டையா. அப்பாவுக்கும், எனக்கும் கிடைத்த கதைப் பாட்டையா, என் பிள்ளைகளுக்கு இல்லை. நிரந்தரமாகத் தொலைந்துபோன பொக்கிஷம். இழந்துவிட்ட ஞானப் புதையல்.
நான் வந்ததைக்கூடக் கவனிக்காமல், என் பிள்ளைகள் ஆர்வமாய் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் பக்கத்தில் கோகுலம்,அம்புலிமாமா புத்தகங்கள்.
டி.வி.யில் பஞ்சதந்திரக் கதை, கார்ட்டூன் படமாக ஓடிக் கொண்டிருந்தது. மொழி புரியாவிட்டாலும், கதை புரிகிற உற்சாகத்தில் ஒன்றிக்கிடக்கிற என் பிள்ளைகள்.
நானும் நின்றுகொண்டே பார்த்தேன்.
புலி பேசுகிறது. மரம் விழிக்கிறது. நரி பாட்டுப் படிக்கிறது. எல்லாம் இந்தியில்தான். டி.வி.க்குள்ளிருந்து வருகிற சத்தம், எனக்குள் அரிஞ்சர் பாட்டையாவின் குரலாக…
பிள்ளைகள்மீது சீற்றமாய்ப் பாய்ந்தாள்.
“அப்பா வந்ததைக்கூட கவனிக்காம… அப்படியென்ன டீ.வி.யிலே? ரொம்பத் திமிர்தான்!”
டி.வி.யை அணைக்க, கோபமாய் முன்னேறிய பார்வதியைத் தடுத்தேன்.
“பாட்டையா கதை போடுறார். போடட்டும். தடுக்காதே.”
பார்வதி, குழப்பமாய் என்னைப் பார்த்தாள். விளங்காமையுடன் அலைகிற அவள் விழிகளைப் பார்த்தேன். மெல்லிசாகச் சிரித்தேன். அமைதி முறுவலுடன் குனிந்து, கோகுலத்தை எடுத்தேன்.
– 1991 கல்கி தீபாவளி மலர்.
– மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் (பாகம்-2), முதற் பதிப்பு: 2002, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
