பாட்டியும் பேரனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: August 31, 2026
பார்வையிட்டோர்: 106 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(மகாகவி காளிதாசரின் சாகுந்தலம் காவியக் கதையை அடிநாதமாகக் கொண்ட அடியேனுடைய (அதிகப்பிரசங்கித் தனமான) கற்பனை சொல் ஓவியம் இந்தப் புனைவு)

துஷ்யந்த மகாராஜன் , தன்னுடைய மனைவி சகுந்தலையுடனும் புதல்வன் பரதனுடனும் இணைந்து அவர்களைத் தன்னுடைய நாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக…

மலையடிவாரத்தில் இருந்த பசுமை போர்த்திய வனம் . பிற்பகல் , மாலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளை . வானிலிருந்து இறங்கி வந்த தேவ மாதர்கள் மேனகையும் ஊர்வசியும் அந்த வனத்தில் உலவிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உரையாடல் –

ஊர்வசி – மேனகா அங்கே பார்த்தாயா? அங்கே சிங்கக்குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிற மானுட பாலகன் உன்னுடைய பேரன்… அவன் பெயர் பரதன்…

மேனகை – என்ன உளறுகிறாய் ஊர்வசி? நம்மைப் போன்ற தேவ மாதர்களுக்கு ஏது பாசமும் பந்தமும்? உறவும் முறையும்?

ஊர்வசி – ஞாபக மறதி ஒரு வகையில் வசதி தான். விசுவாமித்திர மாமுனிவரின் தவத்தைக் கலைக்கச் சென்று அவருடன் நீ செலவழித்த காலம் தந்த பரிசு ஒரு மானிடப் பெண் குழந்தை. அந்தப் பெண் குழந்தையை கன்வ மகரிஷி அவரது மனைவியும் வளர்த்து வர கானகத்திற்கு வந்த துஷ்யந்த மகாராஜனும் பருவப் பெண்ணாக மலர்ந்து இருந்த அந்தப் பெண் குழந்தையுடன் காந்தர்வ முறை விவாகம் செய்து கொண்டான். அவர்கள் உறவால் மலர்ந்தது சூல் வடிவில் மற்றொரு உறவு. கரம் பிடித்தவன் நினைப்பில் இருந்த அந்த மங்கை, வந்திருந்த கோபாவேச முனிவரைக் கவனிக்காததால் , அவரது சாபத்தால் மன்னன் இவளைப் பற்றி மறந்து யார் என கேட்டு விட்டான். திரும்பி வனத்திற்கு வந்து வளர்ப்புத் தந்தையின் குடிலில் மகனுடன் இருக்கிறாள் – நீ பெற்றெடுத்த புதல்வி சகுந்தலா.

இருவரும் அந்த சிறுவனின் அருகில் சென்றார்கள்.

சிறுவன் பேசினான் –

அடியேனுடைய பெயர் பரதன் சகுந்தலை புத்திரன்.தாங்கள் இருவரும் யார்? இந்த வனத்தில் உங்களை நான் பார்த்தது இல்லையே?

மேனகை , அந்த சிறுவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க , ஊர்வசி ‘ குழந்தாய் .. இவர் மேனகை உனக்கு பாட்டியார்?

பரதன் – பாட்டியாரா ? எனக்கு தாத்தாவும் பாட்டியும் கன்வ முனிவரும் கௌதமி பாட்டியும் என்று தான் என் அன்னை சொல்லி யிருக்கிறாள் .

என் தாய் சொல்வதைத் தான் நான் ஏற்பேன்.

ஊர்வசி – பாலகனே உன்னை இந்த உலகிற்கு ஈன்று புறந்தந்தவர் யார்?

பரதன் – என் அம்மா சகுந்தலை சொன்னேன் அல்லவா நான் சகுந்தலை புத்திரன் என்று .

நாட்டை ஆளும் என் தந்தை எங்களை ஏற்காததால் இங்கு நாங்கள் வனத்தில் இருக்கிறோம் …

ஊர்வசி – உன்னை ஈன்றவர் சகுந்தலை என்பது போலவே உன் தாய் சகுந்தலையை ஈன்றவர் இவர் . மேனகை என்பது இவருடைய திருநாமம்..

மேனகை – பரதா … உன் தந்தை உங்கள் இருவரையும் விரைவில் அழைத்துச் செல்வார். இந்த புவனத்தை நீ ஆள்வாய் … இந்தக் கண்டம் உன் பெயரைத் தாங்கி நிற்கும்…

பரதன் – தங்கள் ஆசிகளுக்கு நன்றி அன்புக்கும் நன்றி … நீங்கள் எனக்கு பாட்டியார் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. தாயிடம் சென்று கேட்கிறேன். இருட்டும் வேளை வந்து விட்டது … நான் இந்த சிங்க குட்டிகளை குகைக்குள் அவற்றின் அம்மாவிட்ம் விட்டு விட்டு தாத்தாவின் குடிலுக்குச் செல்ல வேண்டும் . தாய் காத்திருப்பார் வருகிறேன்…

பரதன் சிங்க குட்டிகளுடன் ஓடுவதை மேனகை, கண்ணாரக் காண்பதை ஊர்வசி பார்த்தாள்.


மறு நாள் . மாலை வேளை . விண்ணில் இருந்து இறங்கி வந்த ஊர்வசியும் மேனகையும் பெரிய ஆண் சிங்கத்துடன் விளையாடிக் கொண்டிருந்த பரதனின் அருகில் வந்தார்கள் .

ஊர்வசி பேசினாள் –

அன்பான பாலகனே .. தாயிடம் சொன்னாயா … மேனகையார் என்னும் பாட்டியாரைப் பார்த்தது பற்றி ….

பரதன் – உன்னைப் போலவே இருந்தவர் , தன்னை பாட்டி என்றும் உன்னை ஈன்று புறந்தந்தவர் என்றும் கூறி என் மீது அன்பும் ஆசியும் பொழிந்தார் என்று என் தாயிடம் சொன்னேன்.

ஊர்வசி -அம்மா என்ன சொன்னாள்?

பரதன் – அம்மா ஒரு கேள்வி கேட்டார் – புதல்வனே ஒரு குழந்தையை ஈன்றெடுத்து புறந்தந்து பின்னர் புறக்கணித்தவரைப் போற்ற வேண்டுமா? புறக்கணிக்கப்பட்ட குழந்தையைக் கண்டெடுத்து வளர்த்தவரைப் போற்ற வேண்டுமா? என்று கேட்டார். நான் பேணிப் பாதுகாத்தவர் தான் போற்றுதலுக்குரியவர் என்றேன். அம்மா , பரதா இந்த கௌதமி பாட்டியார் மட்டும் தான் உனக்குப் பாட்டியார் என்றார்.

ஊர்வசி , மேனகையைப் பார்த்தாள். மேனகை ,ஏதும் பேசாமல் பரதனின் அருகில் வந்து அவனுடைய தலையை வருடினாள்.

இருவரும் அங்கிருந்து நகர்ந்து வானில் போவதை பரதன் பார்த்தான்.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *