பாசமாம் பற்றறுத்து
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2024
பார்வையிட்டோர்: 358
(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி வாழ்க, என்று பெரியோர்கள் வாழ்த்துவதன் பொருள் என்னவென்று விளங்காமல் அவன் தவித்த நாள்கள் பல உண்டு. ஆனால், பிறந்து வளர்ந்து பேதைமை நிலையகன்று பேதா பேதங் களை உணரும் புலனுணர்வு அடைந்தபின் அவன் வாழ்வில் மின்னலாய் முகிழ்த்து மேகக் கூட்டமாய்ப் புகைந்து பெருகிக் கடைசியில் மின்மினியாய் மறைந்த நிகழ்ச்சிகள் தாம் எத்தனை! அந்த நிகழ்ச்சிகளின் பின்னலால் விளைந்த விளைவுகள் தாம் எத்தனை வலிமை படைத்தவை? அப்பப்பா! நினைத்தாலே நெஞ்சமெல்லாம் பதறுகிறதே அவனுக்கு…
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எண்ணற்ற சம்பவங்கள் நிகழ்வதுண்டு. அந்தச் சம்பவங்கள் அவரவர் சொந்த வாழ்விலோ, சுற்றியிருப்பவர் வாழ்விலோ பல மாற்றங்களை ஏற்படுத்துவதுண்டு. அந்த மாற்றங்கள் சிலருக்கு ஏமாற்றங் களாகப் போய் விடுவதுமுண்டு.
பிறரைப் பற்றிய கணிப்பு சரியோ என்னவோ விசுவத்தைப் பொறுத்தவரை அவனது வாலிபப் பருவத்தில் நடந்த அந்த ஒரே ஒரு திருப்பம் அவனைச் சார்ந்த சிலரையும்கூட ஆட்டமெல்லாம் ஆட வைத்து விட்டதே!
இன்று – நாற்பது வயதைக் கடந்த நிலையில் ஏகாந்தி யாக அந்தப் பெரிய ஆலமரத்தின் தெளிவும் அந்தத் தெளிவில் முகிழ்க்கும் சிந்தனைத் தொடரும் அடுத்தடுத்து ஏற்படும் கடலலைகள் போல எழும்பி ஆர்ப்பரித்து நெஞ்சமெனும் கரையில் மோதும் போது – அலைமோதித் திரும்புகையில் கரைமண் “சொர சொர” வென்று ஈரம் காய்ந்து போகின்ற தன்மை போல. நெஞ்சின் நினைவுகள் ஒருவிதச் சொரசொரப்பை – உணர்ச்சிக் கலவையோடு அமைத்துப் பார்த்து ஆனந்த வாரிதியில் திளைத்துக் கொண்டிருந்தது.
மாலை மயங்கும் வேளை. இந்த இரவு அந்த ஆலமரத் தடியில்தான் கழிய வேண்டுமென்று விதியிருக்கும்போது அதைத் தடுக்க வல்லார் யார்?
தன்னுடைய நிலையை எண்ணிப் பார்க்கும்போது அவனுக்கே சிரிப்பாக வந்தது. வெள்ளை உடை அணிந்திருக்கிறான். உள்ளே காவியுடை தரித்திருக்கும் சாமியார்களுக்கு இருக்க வேண்டியதென்று சொல்லக் கூடிய அவா அறுத்த மேலான எண்ணங்களை வளர்த்து வைத்துக் கொண்டிருக்கிறான்.
உலகில் காவியுடையில் கயமைத்தனம் புரிவோர் பட்டியல் அதிகரித்துக் கொண்டு வருகின்ற இக்காலத்தில் மனம் வெறுத்து மாயைப் பிடியில் இருந்து தூர விலகி, அவா அறுத்து, அங்கங்களின் கிரக்க நிலையில் இருந்து மீண்டும், உலகின் ஆசாபாசங்களில் இருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்ளக் கருதி… அதற்கென எடுத்து வரும் முயற்சிகளுக்கு வித்தாக, ஊன்று கோலாக, என்ன உடை தரிக்கலாம் என்ற சிந்தனை அவனுள் கிளர்ந்தெழுந்தபோது முதலில் சட்டெனத் தோன்றிய எண்ணம் காவியுடை தரித்துச் சாமியாராவோம் என்பதுதான்!
ஆனால், இந்தக் காலத்தில் காவியுடை தரித்த பல சாமியார்களுக்குச் சமுதாயத்தில் மக்கள் என்ன வகையான மதிப்புக் கொடுத்து வருகிறார்கள் என்பதை உணர்ந்த பிறகு வள்ளலார் வழியில் வெள்ளையுடை தரித்துக் காவிக்குரிய “அந்தப் புனித வாழ்க்கை” வாழ முடிவு செய்தான். அப்போது அவனுக்கு வயது எழுபத்து ஏழு இருக்கும்.
சில இலட்சங்களுக்கு உரிமையாளரான சண்முக நாதனுக்கு ஒரே பிள்ளை. சீரோடும் சிறப்போடும் போற்றி வளர்க்கப்பட்டான். பணக்கார வீட்டுப் பிள்ளை என்ப துடன் அழகும் பட்டப் படிப்பும் சேர்ந்து இருந்ததால் பெண் கொடுக்கப் பலர் போட்டி போட்டார்கள். அப்பாவுக்குச் சில இடங்கள் பிடித்திருந்தன. ஆனால் அவனுக்கோ அந்த இடங்களில் எதுவுமே பிடிக்கவில்லை.
வழக்கம் போல் தனது புத்தம் புதிய காரை எடுத்துக் கொண்டு வெளியே போய்விட்டு இரவு எட்டுமணி அளவில் வீடு திரும்பியவன், காரை நிறுத்திவிட்டு மூடியிருந்த கம்பிக் கதவைத் திறக்க நடந்து வந்தான். காம்பவுண்ட் சுவரின் ஓரமாக யாரோ ஒருவர் ஒண்டிக் கொண்டு நிற்பது தெரிந்தது.
“யாரது” என்று அதட்டினான்; அதற்குள் அப்பா உள்ளிருந்தவாறே முன்வாசல் விளக்கை எரியவிட்டு விட்டு அவரும் வெளியே வருகிறார். விளக்கு வெளிச்சத்தில் அங்கு நடுங்கி நின்ற இரண்டு உருவமும் அப்பாவின் பக்கம் நடக்கின்றனர். அந்த இருவரையும் பார்த்து அப்பா அதிர்ச்சி அடைந்தார். உள்ளே அழைத்துப் போனார். அப்பா அந்தச் சின்னப் பெண்ணைத் தன்னோடு வாரியணைத்துக் கொண்டார்.
”மாலதி…நீயா.. அம்மா எப்படியம்மா தனியா வந்தே.. உங்கம்மா எங்கேம்மா!”
பதற்றமும் உருக்கமுமாய்க் கேட்கிறார். அந்தப் பெண் அவரைக் கட்டிக்கொண்டு ஓவென்று அழுகிறாள்.
அம்புபட்ட புறாப்போன்று அவள் துடிப்பதைப் பார்த்துக் கொண்டு அவனால் மௌனமாய் இருக்க முடியவில்லை. அவளருகில் சென்று அவளுக்கு ஆறுதல் கூறினான். அவள் தவிப்பையும் துடிப்பையும் கண்ட அப்பா அவளைத் தட்டிக் கொடுத்துவிட்டு அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.
அவர்களைக் குளித்து உணவை முடித்துக் கொள்ளும் படி கூறிவிட்டுத் தன் அறையில் காத்திருந்த அவனுடைய அப்பா அந்தப் பெண் வந்ததும் அவளிடம் பேசினார்.
“மாலதி….எதனால ராத்திரி நேரம் தன்னந் தனியா வந்தே..! அம்மா எங்கே… எனக்குச் சொல்லியிருந்தா நானே வந்து உங்களை எல்லாம் கூட்டி வந்திருப்பேனே. இப்படியா அனாதையாட்டம் தனியா வர்றது…’
அப்பா கேட்டதும் மாலதி தேம்பத் தொடங்கினாள்.
மாமா அம்மா திடீர்னு செத்துப் போய்ட்டாங்க, மாரடைப்புன்னு சொல்றாங்க… எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலே… நெஜமாவே நான் அனாதையாயிட்டேன் மாமா…
அப்பா சோகத்தில் ஆழ்ந்தார். விசுவம் அதிர்ச்சியாய் அவளைப் பார்த்தான்; பதினெட்டு வயதுதான் இருக்கும். மிகச் சறிந்த பேரெழிலை இறைவன் வாரித் தந்திருந்தான். குப்பையில் கோமேதகம் என்பது போல் வறுமைகூட அவளை அழகுபடுத்திக் கொண்டிருந்தது.
எப்போதோ தான் விரும்பிய ஒருவனுடன் ஓடிப் போன தன் தங்கை ஒருத்தி, தன் ஒரே மகள் மாலதியுடன் விதவையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்று அப்பா சொன்னது அவனுக்கு நினைவு வந்தது.
அப்படியென்றால் வந்திருப்பது தன் அத்தை மகள் மாலதியா… என்று மனம் ஆர்வமாய் அடித்துக் கொண்டது.
“விசு… இது மாலதி.. உன்னோட அத்தைப் பொண்ணு-. உன் அத்தை பிடிவாதக்காரி. கடைசிவரைக்கும் ரோஷத் தோட இருந்தே செத்துப் போய்ட்டா. இனி மாலதி நம்ம வீட்டலதான் இருக்கும். உனக்கொன்னும் ஆட்சேபணை இல்லியே!” என்று கேட்டார்.
அவன் அப்பாவிடம் லேசாய்த் தலையசைத்துவிட்டு உள்ளே போனான். மனம் தீவிரமான சில திட்டங்களைப் போட்டு அவற்றை மறைமுகமாய்ச் செயலாக்கவும் துடிக்கத் தொடங்கியது.
நாள்கள் நகர்ந்தன. பெண்ணை வைத்துக் கொண் டிருந்தவர்கள் திருமணத்திற்கு நெருக்க ஆரம்பித்தார்கள். அப்பாவும் அம்மாவும் அவனை நெருக்கத் தொடங் கினார்கள்.
“இப்போதைக்கு எனக்குக் கல்யாணம் வேண்டாம்னு பையன் சொல்றான்னு சொல்லி விடுங்கப்பா… என்று ஒரே பதிலுடன் தன் அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டவன் மனம் எங்கும், மாலதி நிறைந்து நின்றாள்.
வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்துவிட்ட தனக்கு வாழ்க்கைத் துணையாய் வரப்போகின்றவள் ஓர் ஏழைப் பெண்ணாய் இருக்க வேண்டும் என்று நீண்ட காலம் கனவு று கண்டவன் அவன்! அதே போன்று அனாதையாய் ஓர் ஏழைப் பெண் தங்கள் வீட்டில் காத்திருக்கும் போது, வெளியே ஏன் போக வேண்டும்!
மனத்தில் பட்டதை முடிந்த முடிவாய் அப்பா அம்மாவிடம் சொன்னான். அவர்கள் ஆனந்தமாய் ஏற்றுக் கொண்டார்கள்.
நல்லதொரு நாளில் மணமேடையைக் கண்டான். மனத்துக்கேற்ற மங்கை நல்லாள் வாய்த்துவிட்ட மகிழ்ச்சியில் திருமணம் வெகு சிறப்பாக நடந்தது. பல பெரியோர்கள் வந்திருந்து வாழ்த்தினார்கள். அனைவரும் ஒருமித்த குரலில். “ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி வாழ்க” என்றே வாழ்த்தினார்கள்.
திருமணத்திற்குமுன் வசதி இருந்தும் தன்னால் பெறமுடியாத வாழ்க்கை இன்பங்களை சந்தோஷங்களை மாலதி மூலம் கண்டான் விசுவம். ஊரே வியந்து பாராட்டும் வண்ணம் வாழ்ந்தார்கள். துன்பத்தின் நிழலே படாதபடி இன்பத்தின் உச்சாணிக் கிளையில் நின்று இன்பங்கள் அனைத்தையும் நுகர்ந்தார்கள். அனுபவித்தார்கள். ஆனந்த வெள்ளத்தில் மிதந்தார்கள்.
ஈராண்டு கழிந்தது. அம்மா இறந்து போனார். அது அவனைக் கொஞ்சம் அதிரவைத்தது. அந்த அதிர்ச்சி மறைவதற்குள் மகப்பேற்றுக்காக மருத்துவமனை சென்ற மாலதி வீடு திரும்பாமலேயே அவனை விட்டு, இம்மண்ணை விட்டுப் பிரிந்தாள். இரண்டு மூன்று மாதங்கள் அழுது அழுது ஓய்ந்தான். யாருடைய ஆறுதலும் அவனை அமைதிப் படுத்தவில்லை. இறுதியில் இரவிலே ஒருநாள் போதிமரப் புத்தனைப் போல் வீட்டைவிட்டு ஏகாந்தியாய் வெளி யேறினான். அதன் பின் அவன் கால்கள் அந்த மாளிகை பக்கம் திரும்பவே இல்லை.
அவன் உடல் பசியை மறந்தது. கண்கள் தூக்கத்தை மறந்தன. எங்கெங்கோ சுற்றினான். தாடியும் மீசையும் உருவத்தை மட்டுமல்ல மன விகாரங்களையும் மறைக்க உதவியது. இன்று அவன் வெண்ணிற ஆடைக்குள் புகுந்துவிட்ட சாமியார்… ஆகா! இந்த வாழ்க்கைதான் எப்படி இனிக்கின்றது.
பொழுது விடிகிறது. யாரோ அவனைத் தட்டி எழுப் புவது கண்டு கண் விழித்தவன், தன் எதிரில் தன்னுடைய தந்தை நிற்பதைப் பார்த்துத் திகைக்கிறான். பின் உணர்ச்சியை மறைத்துக் கொண்டு, குரலையும் மாற்றிக் கொண்டு என்ன வேண்டும் உங்களுக்கு என்று கேட்டான்.
அவனுடைய நீண்ட முடியும் தாடியும் மீசையும் மெலிந்த தோற்றமும் முற்றிலுமாக அவனை அடையாளம் தெரியாமல் செய்திருக்க வேண்டும். அவர் அவனைக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.
சாமி… பத்துப் பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால வீட்டைவிட்டுப் போன என் மகன் வருவானா சாமி.. அவன் எங்கே இருக்கான்னு சொல்வீங்களா…?
உடம்பும் தளர்ந்து உணர்வுகளும் தளர்ந்து போன நிலை! தன்னைப் பிரிந்த மகனைத் தேடும் அவரைப் பார்க்கிறார்.
இறுகிக் கிடந்த நெஞ்சப் பாறையில் மெல்லப் பாசமென்னும் ஈரக் கசிவு சுரக்கின்றது. அதன் அடையாள மாய் இரு சொட்டுக் கண்ணீர்த் துளிகள் கீழே விழுகின்றன. விசுவம் சட்டென இறுகிப் போகிறான். யாவற்றையும் கடந்த நிலைக்குத் தன்னைக் கொண்டு போய் நிறுத்திவிட்டு –
தன்னைப் படைத்த இறைவனுக்கே சமமான தந்தைக்கே ஆறுதல் கூறினான்.
“ஐயா! உங்களைப் பார்த்ததுமே கையெடுத்துக் கும்பிடணும் போலத் தோணுது. உங்களுக்கு அறிவுரை சொல்ற தகுதி எனக்கு இல்லை. இருந்தாலும் ஆறுதல் சொல்லலாம்னு நெனக்கிறேன். நான் எனதுங்கிற மன விகாரங்களைக் கடந்து வாழும் மனப் பக்குவத்தை அடைஞ் சிட்டா மனிதன் எவ்வளவோ துன்பங்கள்ளேயிருந்தும் அறியாமையிலேர்ந்தும் விடுதலை பெறலாம்.
“கை நழுவி விழுந்த கண்ணாடிப் பாத்திரத்தை நெனச்சு கவலைப் படறதிலே அர்த்தமே இல்லே..
“சுகம் அனுபவிக்கிற வரைக்கும்தான் செல்வத்தோட மதிப்பு நமக்குத் தெரியுது. அந்தச் செல்வத்தைக் கொண்டு தேவையான சுகத்தை அனுபவிக்க முடியாத நிலைமை ஏற்படும்போது அந்தச் செல்வமே நமக்குப் பெருஞ் சுமையா ஆயிடுது. அதுக்காகத்தான் உரிமை கொண் டாடக்கூடிய எண்ணத்தைத் தோற்றுவிக்க வல்லநான், எனது என்ற தளைகளை அறுத்தெறிய வேண்டுமென்கிறேன். உங்கள் சொத்துகளைத் தாய் தந்தையற்ற குழந்தைகளுக்குக் கொடுங்கள். உங்கள் பாசத்தையும் பரிவையும் அன்புக்காக ஏங்கும் அந்த அனாதைகளுக்கு வாரி வழங்குங்கள். அதுவே உங்கள் மன அமைதிக்கு உகந்த உயரிய பணி.”
அவன் பேசி முடிக்கவில்லை. தடாலென்று அவர் அவன் கால்களில் விழுகிறார். பதறிப் போய் நகர்ந்து கொள்கிறான். பின் கைகளால் அவரைத் தூக்கி நிறுத்தி-
“ஐயா…உங்ககிட்டே நான் ஒரு யாசகம் கேட்கலாமா?” என்றான்.
“கேளுங்க சாமி.. என்ன வேணுமின்னாலும் கேளுங்க சாமி புத்தனைப்போல, இயேசுவைப் போல, காந்தியைப் போல, முகம்மதுவைப் போல என் மன இருளைப் போக்கிய மகான் நீங்கள்…. கேளுங்கள்.”
“என்னை ஒரு முறை மகனே என்று அழையுங்கள் ஐயா”.
“என்ன சாமி… உங்களைப் போய் நான் மகனேன்னு கூப்பிடறதா.! மகானைப் போய் மகனேன்னு கூப்பிடலாமா… அது மகா பாவமில்லையா?”
“பாவ புண்ணியமெல்லாம் மனிதன் பேசுற பேச்சில இல்லே! அது அவனவன் செய்யும் செயலின் தன்மையைப் பொறுத்தது. தயவு செய்து என் வேண்டுகோளை நிறை வேற்றுங்கள்.”
“மகனே…”
“அப்பா…”
“மகனே…”
“அப்பா…”
இரண்டு மூன்று முறை அவன் அப்படி அழைத்ததும் அவர் அவனை அடையாளம் கண்டு கொள்கிறார். அதிர்ச்சியில் ஐம்புலன்களும் ஒடுங்க மயங்கி விம்முகிறார்.
ஓடிப்போய்க் குளிர்ந்த நீரைக் கொண்டு வந்து முகத்தில் தெளித்து எழுப்புகிறான். முனகுகிறார். வாயில் கொஞ்சம் நீர் ஊற்றுகிறான். ஒரு மிடறு … இரண்டாவது மிடறு…. மூன்றாவது மிடறு விழுங்கக் கொஞ்சம் சிரமப்பட்டார்.
விழிகளை அகல விரித்து “மகனே” என்று அழைத்தவாறு அவனை இறுகத் தழுவினார். பிடி தளரவே இல்லை! மடியில் தலைவைத்துப் பிடியை விடாத நிலையில் உலகத்தின் பந்த பாசங்களை எல்லாம் விட்டுப் பயணம் தொடங்கி விட்ட தன் தந்தையின் உயிரற்ற உடலில், அவன் கண்களி லிருந்து இறுதியாய் விழுந்து தெறித்த இரு சொட்டுக் கண்ணீர் மிச்ச சொச்சமிருந்த பந்த பாசத்தின் உருவாய் அவனுக்குத் தோன்றியது.
– சிங்கை வானொலி. 16-12-95.
– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.