பழைய பாடல்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 7,455
ரவியின்,காம்பிலிருந்து ‘இதயக்கோயின்..சோகப்பாடல் ஓடியோ கசட்டிலிருந்து காற்றில் தவழ்ந்து வந்து கொண்டிருந்தது.ரவிக்கு,சிறிது அடர்த்தியான தலை மயிர்,கூடைபோல சிறிது வாரிவிட்டிருந்தான். ரவுசரும்,சேர்ட்டுமாக… பல்கலைக்கழகப் பெடியன் போல.. இருந்தான். காம்பில்,’பிரீட்டீஸ்’என்று அழைக்கப்படுற-கதிர், இளங்கோ, பரமேஸ் ஆகியோரும் இருந்தார்கள். 1983ம் ஆண்டு நடந்த கலவரம் தான் அவர்களை தோழர்களாக்கி.. விட்டிருந்தன. அதற்கு,முதல் நண்பர்களாகவே இருந்தார்கள்.கலவரம் முடிந்து பத்து நாட்களாகியும்.. இளங்கோவின்,அண்ணன் -செந்தில் திரும்பி வரவே இல்லை. ஏற்கனவே,ஊருக்கு வந்தவர்கள்’சொல்லிய கதைகளும்,வராதவர்களின் சோகங்களும் அவர்களின் மனங்களை கனன்றுகொண்டிருக்கச் செய்திருந்தன.”நான் இயக்கத்தில் சேரப் போறேன்ரா”என்று இளங்கோ தனித்து வெளிக்கிட்ட போது,மனம் கேளாமல் மற்றவர்களும் சேர்ந்து விட்டவர்கள். அவர்கள், இப்ப.. இயல்பான சந்தோசங்களை இழந்தவர்கள்;காதல்,கல்யாணம், குடும்பம்,சகோதர உறவுகள்.. எல்லாம் அறுபடும் நிலையில் இருப்பவர்கள்.ரவிக்கு,முந்தி ஊர்ப்பெட்டைகள் மேல் மையல் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.’கமலத்’தை நினைத்தால்..நண்பர்கள் இப்பவும் கதைத்து சிரிப்பவர்கள்.
கலவரத்துக்கு முதல்,அரசாங்க வேலை செய்தவர்களில் பலர்,ஸ்ரைக் செய்த போது மட்டகளப்பு கசசேரியில் வேலை செய்த அவ் ஊரைச்சேர்ந்த சபாவதி,தர்மராஜா,கந்தசாமி ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.அரசாங்கம் அமைத்திருந்த அரசியற் கட்சி வெளிநாடுகளில் நடப்பது போல .. சட்டமூலத்தை பார்ளிமெண்டில் கொண்டு வந்து ,அத்தனை பேரின் வேலைகளையும் பறித்து விட்டிருந்தது. பிறகு,மன்னிப்பு கோரி கடிதம் எழுதினால்’அன்றி மீள வேலையில் சேர்க்கப்படமாட்டார்கள்’என்று சிறு திருத்தம் கொண்டு வந்தது.பல சிங்களவர்கள் கடிதத்தைக் கொடுத்து வேலையில் கொளுவி விட்டார்கள். சில சிங்களவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்து வேலையில் சேர விட்டார்கள். ஆனால்,தமிழர் பகுத்¢யில் சேரல் வெகுவாக நடக்கவில்லை.சிங்களத்தில் கடிதம் எழுதப்படாதாலோ.. என்னவோ? இழந்தது இழந்ததாகியே போனது.அவர்கள் குடும்பங்களோடு ஊர் திரும்பி இருந்தார்கள். தர்மராஜா குடியில் வீழ்ந்து போனார்.சபாவதி’இயக்கப் பெடியளால் தான்..உந்த அரசியலை மாற்றி அமைக்க முடியும்’என்று நம்பினார்.அவசரத்திற்கு தன் சைக்கிளைக் கொடுத்து உதவி செய்ப்பவர்.அவருடைய மூத்தவன்,செல்வன், ..உயர்தர வகுப்பில்(கணிதப்பிரிவில்)நல்ல மார்க்குகளைப் பெற்று ..பொறியியல் துறையில்படிக்க சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.கடவுள் ‘ஒன்றை இழந்தால் இன்னொன்றைக் கொடுப்பார்’என்பார்கள். செல்வன் மூலமாக மீண்டும் தலையெடுக்கப் போகிறார்கள். அப்பவும்,சிங்களம் படிக்கவில்லை, சிங்களத்தில் எழுதவில்லை எனத் தூக்கி எறியப்போறானோ? அது எதிர்காலத்தின் பிரச்சனை!கமலம் அவனுக்கு அடுத்தாக 2-3 வயசு இளையவளானவள். அவளை சிறுவயதிலிருந்தே டான்ஸ் வகுப்புகளுக்கு அனுப்பியிருந்தார்கள். ஒல்லியான அச்சிறுப்பெட்டையைக் கவனித்ததிற்குக் காரணம் அந்த டான்ஸ் தகமை தான். பள்ளிக்கூடத்தில், சரஸ்வதிப் பூசை விழாவில்,அவள் ஆடியது..”இந்த சுட்டியிடம் இத்தனைத் திறமையா? “என அவளைப் பார்க்க வைத்து விட்டது. ஊர்ச்சனங்களால் வெகுவாக பாராட்டப்பட்டாள். கமலம் சாமர்தியப்பட்ட பிறகு, இவர்கள் மையல் கொள்ளும் பெண் வரிசையிலும் இடம் பெற்றுவிட்டாள்.பெடியள் கெட்டவர்களில்லை.அவளையும் முழுசிப் பார்த்தார்கள்.அவள் வெடுக்கென முகத்தை சுளித்துக் கொண்டு போவாள்.அவளில் ஏற்பட்ட மாற்றம் அப்படி பார்க்க வைத்து விட்டது. அவ்வளவு தான்.அவர்கள் பார்த்தது சபாவதிக்கோ,செல்வனுக்கோ தெரிந்திருக்கவில்லை.இயக்கப்பெடியளை ஊரவர்கள் ஒதுக்கியே வைத்திருந்தார்கள். எங்களுக்கெல்லாம்..அநீதி நடக்கையிலே தான் விழிக்கிறோம்; மற்றவர்களுக்கு நடந்த அநீதிகளை எதிர்த்துப் போராட என்று படிப்பை,வீட்டை,உறவை,வசதிவாய்ப்புக்களை விட்டு விலகி நிற்கிறவர்கள் பெடியள். அவர்கள் ஊர்ப்பெட்டைகளை ஏக்கத்துடன் பார்ப்பது அவருக்கு தவறாகப் படவில்லை. அவர்களும் சமானியர் தானே. அவர்களால் இனிமேல் இயக்கத்தை விட்டு விலகி சாதாரண வாழ்க்கைக்கு வருவது முடியாது போலவேப் பட்டது. கந்தசாமிக்கு வயல் நிலங்கள் இருந்தன.அவர்க்கு இயக்கங்களிலும் நம்பிக்கையில்லை, அரசியல்க்கட்சிகளிலும் நம்பிக்கை இல்லை.தானுண்டு,தன் குடும்பமுண்டு என்றிருந்தார். இந்தியாவிற்குப் போய் பயிற்சி பெற்று வந்த பிறகு அவர்கள் பார்வையில் மாற்றம் நிகழ்ந்திருந்தது. முழுசிப் பார்க்கிறது..முற்றிலும் குறைந்து போய்யிருந்தது. ஊர்ப்பெட்டைகள் ”அண்ணே, இவங்கள் சேட்டை விடுறாங்கள்,கொஞ்சம் கவனியுங்கள்” என்று கேட்ட போது, அப்பள்ளிப் பெடியள்களை மிரட்டியிருக்கிறார்கள்; கையை நீட்ட கண்டிச்சுமிருக்கிறார்கள். வயசுப்பெட்டைகள் போற போதுஅவர்களை மீறி பார்வை எறியியறதும் நடக்கத்தான் செய்கிறது. அதேசமயம்,’நமக்கு இந்த வாழ்க்கை இல்லை’என்ற உண்மையும் செவிடில் அடித்த மாதிரி புரிகிறது. இப்பவெல்லாம் அவர்களுக்கு பழைய மாதிரி கனவுகள் வருவதில்லை.
சுசிலாவின் பழையப்பாடல்களே அவர்களை ஆறுதல் படுத்துகின்றன.காம்களில் அடிக்கடிப் போட்டுக் கேட்கிறார்கள். அப்பாடல்களிலுள்ள …காதல் உறவுகள், மொழிகள்,ஏக்கங்கள், சோகங்கள்..எல்லாவற்றுடனும் ஜக்கியப்பட்டு விடுகிறார்கள். இவர்களுக்கு ஒரு வித தாலாட்டை அளிக்கின்றன. இவர்களை மட்டுமில்லை,எல்லா இயக்கக் காம்களையும் பழைய பாட்டுக்கள் கட்டிப் போட்டேயிருக்கின்றன. அதோட, இதயக்கோவில் சோகப்பாட்டுக் கசட்டும் கூட சேர்ந்தே இருக்கின்றது. அவர்களுடைய காம், அரசாங்க அதிபருடையது போன்ற தலைப்பகுதி. உப அரசாங்கப்பிரிவினரைப் போல ஒரமைப்புப் பெடியளும், சில ஊர்ப்பிரதிநிதிகளும் வந்து ரவியோடு கதைக்கிறார்கள். ரவி தெளிவாய் கதைப்பதில் பேர் போனவன். ஆற அமர கதைக்கிறான்.திரும்பிச் செல்லும் அவர்கள் முகங்களில் ‘நிம்மதி’ தெரிகின்றன. ரவணன் கிராமத்து அமைப்பைச் சேர்ந்தவன்,கிராமசேவை அமைப்பைப் போன்று அவனுக்கு மேலவிருந்த உபஅரசாங்க அமைப்பைப் போன்ற அமைப்பைச் சேர்ந்த சிவமும் ரவிக்காக.. காத்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு என்ன,ஏதோப் பிரச்சனையை பேசிக்கதைக்கவே வந்திருக்கிறார்கள். பிரிட்டீஸ் அவர்களுக்கு ‘டீ’கொண்டு வந்து கொடுக்கிறான். பாட்டுக்கள் முடிய கசட்டை மாற்றிப் போட்டும் விட்டுப் போகிறான். ”வானுயர்ந்த சோலையிலே…” பாட்டு பெடியள் மனதை கவ்விக் கொண்டு.. தொடர்கிறது. சரவணன்,உயர் வகுப்பில் ..உயிரியல்ப் பிரிவில் படித்தவன்.பரிட்சையில் தவறியதே இயக்கத்தில் சேர்வதற்குக் காரணம். அந்த ஏமாற்றத்தை தாங்க முடியாது அள்ளுப்பட்டவன். அவன் கிராமத்துபள்ளி ஆசிரியை ஒருவரின் மகன் என்பதால் ,அங்கே தனி மரியாதை நிலவியிருந்தது. தன் தரப்பு மரியாதைகளை எல்லாம் இயக்கத்திற்கு தாரை வார்க்க செய்து விட வேண்டும் என்று விரும்பினான். ஆனால்,அவனுக்கு இயக்கம் என்பது என்னவென்றே தெரியாது. தவிர,சேர்ந்திருந்த கிராமத்துப் பெடியள்.. அவனை விட பல மடங்கு பின் தங்கிய அறிவைக் கொண்டிருந்த சிறுவர்கள். அவர்களுக்கு படிப்பிக்க வந்த டியூசன் மாஸ்ரர்களாலும், பல்கலைப்பெடியள் வைத்த கூட்டங்களாலும் இயக்கத்தினுள் தம் பேரை கொடுத்துப் பிணைத்துக் கொண்டவர்கள்.அவர்களை வழி நடத்தும் பொறுப்பு சரவணன் தலையில் இருந்தது.அவனுடையதைப் போல, 12-13 காம்களை… சிவத்தின் காம் பிரதிநிதிப்படுத்தியது. சிவத்திற்கும் அவன் வயசு தானிருந்தது, நண்பர்களாகி விட்டார்கள். சிவத்தின் காம்களைப் போல,50-60 காம்களை… ரவியின் காம் பிரதிநிதிப்படுத்தியது. எனவே,பெடியள்களுக்கும் சிவத்தின் காம்பிற்குமிடையில் தபால் காரனாகவிருப்பதே தன்னுடைய முதல் வேலை என்பதை சரவணன் சுலபமாக புரிந்து கொண்டான்.மிச்சப்படி, இயக்கத்தின் மேல்மட்டதினர்..பிரசுரிக்கிற பிரசுரங்கள் ,நூல்கள் ,பேப்பர்கள்,விளக்கக் கையேடுகள் எல்லாம் சிவம் அனுப்பிற பிரச்சாரப்பிரிவினரால் கூட்டங்கள் வைக்கப்பட்டு சரிவர கிராமத்துப் பெடியள்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டன. “அத்தைமகனே போய் வரவா..?” அந்தப்பாட்டு அவனுக்கு மச்சாளின் ஞாபகத்தை ஏற்படுத்தி விட்டது.படிப்பில் தவறி இயக்கம் என சிரழிகிற அவனை அந்தப் பெண் கூட ஏறெடுத்துப் பார்த்ததில்லை.அவளின் பெற்றோர்கள் அவனை ஒருப் பொருட்டாக கூட மதிக்கவில்லை.ஒதுக்கப்பட்டவனாக இருந்தான்.தனக்குள் சிரித்துக் கொண்டான். யாழ்ப்பாணத்துப் பெற்றோர், படியாத பெடியள்களை தறுதலை என ஒதுக்கிவைத்ததுப் போல ,இயக்கப்பெடியள்களையும் ஊரவர்களும், உறவுகளும்..’சாதாரண வாழ்க்கைக்கு ஒத்து வராதவர்கள்’ என்று ஒதுக்கியே வைத்திருந்தார்கள்.ஆமி,பொலிஸ் இவர்களைத் தேடி வருவதால்..எதிர்காலத்தில் தம் பெண் பிரசைகளுக்கு ஆபத்து என்ற பயங்கள் வேறு..!ஜனநாயக அரசியலில் பணக்காரர்களே பயன் பெறுகிறார்கள். அதோடு,அவற்றில் இருக்கிற அரசப் படைகளில்.. பெண்பிரசைகள் மேல் பாலியல் வன்முறை செய்வதை ஒரு ராஜதந்திரமாகவே வைத்திருக்கிறார்கள்.நேர்மையற்ற இவ்ஒழுங்கீனத்தை யூ.என்.ஓ போன்ற அமைப்புகள் கூட கண்டுக்கிறதில்லை. இதெல்லாம் பெடியள்களை வெகுவாக தனிமைப்படுத்தி விடத்தான், ..ஒரு வித ‘சைக்கோ’நிலையில் இயக்கங்களுக்கு அள்ளுப்பட்டுக் கொண்டுக்கிறார்கள். இயக்க கட்டுமாணங்களும் சரிவர கட்டப்படாதலால்.. அங்கேயும் நிறையப் பிரச்சனைகள்.விடுதலைப் பெற்ற மண்ணில் தான் எவருக்குமே சுபிட்ச வாழ்க்கை காத்திருப்பதாக நம்புகிறார்கள். கல்யாணம் கட்டி..நிறைவான குடும்பமாகிவிருப்பவர்கள் வாழ்க்கையில் கூட..அரசப்படைகளின் கூரிய நகங்கள் நீட்டப்பட்டே கிடக்கின்றன.விட்டில் பூச்சிகளாக அவர்களைப் போல மடிவதிலும் பார்க்க,கல் எடுத்து எறியிற பாலாஸ்தீன பெடியள்களைப் போல.. இயக்கமாகி மடிவதே மேல் என வந்தவர்கள் அவர்கள். என்னதான் கட்டாய வாழ்க்கை கவிந்திருந்தாலும் அவர்களும் சமானியர் தானே.சுசிலாவின் பழையப் பாடல்களுக்கு அடிமையாகிப் போய்க் கிடக்கிறார்கள். “ஆலைய மணியின் ஒசையை நான் கேட்டேன்..”என்ற பாட்டு தவழ்ந்து கொண்டிருந்தது.ரவி”என்னடா மச்சான் பிரச்சனைகள்?” என்று அவர்களை நோக்கி வந்தான்.”வடமராட்சிப் பக்க பெடியள் எம் பகுதியில்,மோட்டார் சைக்கிள் ஒன்றைப் பறித்துக் கொண்டு போய்விட்டார்களாம்.ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா?”கேட்டான் சரவணன்.”முயற்சித்துப் பார்க்கிறேன்.பெரும்பாலும் முடியாது என்றே படுகிறது.”என்றான் தணிவான குரலில். சில பகுதி அமைப்புக்கள் ஆயுதப்பற்றாக்குறையால்.. இப்படி சில விசயங்களை செய்து, இந்தியாவிற்குப் படகுகளில் கடத்தி.. விற்று ,அப்பணத்தில் கள்ளமார்க்கட்டில் ஆயுதங்களை வாங்கி வருகிறார்கள்.மற்ற இயக்க நெருக்குவாரமும்,புல்லுருவிகள் போல ..புலன் உருவிகள் ஊடுருவி விட்ட பகுதிகளின் நெருக்குவாரமும் அதிகமாகவிருக்கும் பகுதிகளிலே..இப்படி தன்னிச்சையாக செயல் படுவது நடக்கின்றது. வானில் வட்டமிடும் கெலியும், பொம்பர்களின் மத்தியிலும் வாழ்ற அவர்களுக்கு கையில் ஒரிரண்டு ஆயுதங்களாவது இருக்க வேண்டும்.ஆயுத வறுமை அவர்கள் மத்தியில் ..அந்த மாதிரி நிலவியிருந்தது.இயக்க மேல் மட்டத்தினருக்கும் ,இந்திய இரகசிய உதவியாளர் மத்தியிலும் எழுந்த பிரச்சனைகளால்..போதியளவு ஆயுங்களோ,தகுந்த ஆயுங்களோ சரிவர வழங்கப்படவில்லை.ஆயுதக் கலாச்சாரமும்,ஒப்பந்தங்களும் எப்போதுமே சிக்கலானவை. அவர்கள் தம் அரசியல் நலன்களை முதன்மைப் படுத்தி பேரம் பேசும் போது .. அனேகமான பெரிய இயக்கங்களுக்கு வெறுத்துப்போய் விடுகின்றன. அவர்கள், அவ்வவ்வியக்கங்களிலிருந்து பிரிபட்டு பிரிபட்டு இருக்கும் சிறு சிறு அணிகளுக்கு உதவிகளை வழங்கிப் பிரச்சனைகளை பெருப்பித்து விடுகிறார்கள். இவர்களாகவே தன்முயற்சியால் பணத்தைத் திரட்டி,களவாக ஆயுதங்களை கொள்வனவு செய்கிற போதும்..இந்தியப் பிரிவு மூக்கை நுழைத்து பறிமுதல் செய்துவது நடக்கிறது. அவர்களுடையது இரு தடவைகள் அகப்பட்டுக் கொண்டு விட்டிருந்தன. தளத்தில் தலை நிமிர்ந்து நிற்க முடியாதளவு ஆயுத வறுமையில் இருக்கிறார்கள். ஒரு தடவை, வடமராட்சிப் பகுதியில் கொஞ்சப் பெடியள் சிறிலங்கா ஆமிகளால் சுற்றி வளைக்கப்பட்டு விட்டனர். கையில் கிடந்த ஓர் எ.கே 47 ரைபிளுடனும்,சில கிரனைற்றுகளுடனும் கடைசி வரையில் போராடியப் போது, ..தீர்ந்து ..தப்பி ஒடுகையில், இரண்டு மூன்று பேர் சுடப்பட்டு இறப்பைத் தழுவினர். இயக்க மேல் மட்டங்களின் மத்தியில் பகைமை மோசமாகவிருந்தப் போதிலும்..கீழ்ப்பிரிவினர்,சமயோசிதமாக நடந்து கொள்றதும் இருந்தன.தோழமையை விட, ஊரவர், நண்பர், ஒரே வகுப்பில் படித்தவர்கள்.. என்ற மனச்சாட்சி விழிப்பினாலும் செயல்பட்டார்கள். பெடியள்களின் தசையாடியது. மற்ற ஒரு இயக்கம் வந்து, ஆமியை விரட்டியது. ஆமி பழையபடி கெலியில் ஏறி, தப்பி ஓடியது. பிறகு,அவர்கள் மத்தியில் நடந்த விசாரணையில்,”அண்மையில் இருந்த எம் காம்பிற்கு கிட்டவாக வந்து விட்டார்கள்,அதனாலே ஆமியை விரட்டினோம்”என்றதை.. அவ்வியக்கம் பெரிசு படுத்தாது விட்டு விட்டார்கள். அதற்குப் பிறகு, அவ்வமைப்பு இப்படி’ மோட்டார் சைக்கிள்களை பறித்து ‘ஆயுதமாக்குவது பல்வேறு இடங்களில் நடந்தன. இங்கே, சிறிதளவு பிடிபட்டு விட்டார்கள்.பிடிபட்டது என்றால் பெடியள்களை பிடித்துவைத்திருக்கிறார்கள் என்றில்லை, இவர்கள் தான் செய்தவர்கள்..என்று. அச்செய்தியை மற்ற இயக்கம் பொது மக்கள் மத்தியில் காரசாரமான விமர்சனமாக வைத்து விட. .நம் பெடியள் வார்த்தையாடி களைத்துப் போய்விட்டார்கள்.’பெடியள் நல்லாய் அரசியல் பேசுறான்கள்’என்ற பேர் தான் கடைசியில் கிடைத்திருந்தது. ரவி “விசாரித்துப் பார்ப்போம்.விசாரிக்கிறோம்..என்று சொல்லி வையுங்கள்.இந்த விசாரணை நீளமாக.. நீளமாக..மக்களை வேறொருப் பிரச்சனை வந்து பிடித்துக் கொள்ளும்”என்றான்.அவர்கள் என்ன செய்வார்கள்.
“அத்தான்..உன்னைத்தான்..”பாடல் தவழ்ந்தது.பழையப் பாடல்களைப் போய்க் கேட்க வேண்டியது தான்.சீர்காழியின் வீர முழக்கப் பாடல்கள்,அவர்களின் இயக்கப் பாடல்கள்..அவர்களை பாடல்கள் தாலாட்டுற காலம்.
[ இக் கதை நிகழ்ந்த காலகட்டம் 1983-1986 ]