பழமொழியாம் பழமொழி..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 28, 2026
பார்வையிட்டோர்: 85 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(கதைப் பாடல்)

(அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்)

பாரில் அந்தக் காலத்தின்
பண்பை விதைத்தன பழமொழிகள்
யார்க்கும் இன்று அதவருமை
எள்ள ளவேனும் தெரியாது!

மக்கள் அன்பை அறிவையென
மண்ணில் அந்தப் பழமொழிகள்
திக்கு எட்டும் பறைசாற்றி
திகைக்க வைத்தன பார்க்கையிலே!

“ஊரில் கொழுத்த பணக்காரர்
உண்டாம் அவர்க்குப் பல்வேலி
சீர்மை மிக்க நெல்வயலாம்
சீர்மை கெட்டது வறட்சியினால்

சாகப் போகும் வேளையிலே
ஆகச் சிறந்த மக்களையே
அருகில் அழைத்து அப்பெருமான்
அறிவுரை ஒன்றைச் சொன்னாராம்!

செந்நெல் வயலைச் சீராக்க
மண்ணில் கிணறு தோண்டுங்கள்
அந்நீர் கொண்டு பயிர்செய்து
அவைவரும் வாழ்வீர் எனச்சொன்னார்.

இருந்த நான்கு புதல்வர்களும்
சிறந்த கிணறு தனைத்தோண்ட
நால்வரும் நான்கு திக்குகளில்
நன்கு தோண்ட முயன்றார்கள்

நால்வரும் நான்கு திக்குகளில்
நாற்பது நாற்பது அடிதோண்ட
உள்ள நீரது வரவில்லை
ஒடிந்து நின்றனர் மனம்வாடி!

ஊரில் உள்ள பெரியவராம்
டைந்து நின்ற நால்வருக்கும்
தேறுதல் சொல்லித் தேற்றிவிட்டு
திடமாய் பழமொழி சொன்னராம்!

அகலத் தோண்டல் விடநீங்கள்
ஆழத் தோண்டல் சிறந்ததென்றும்
ஆளுக்கு நாற்பது அடியென்று
அடிகள் தோண்டலின் மாற்றாக

ஒற்றை இடத்தில் ஒருசேர்ந்து
நூற்றறுபது அடிகள் தோண்டுங்கள்
உங்கள் வயலுக்கு மட்டுமல்ல
ஊருக்கே ஆகும் நீர்பெருகும்

என்றவர் சொன்னதை ஏற்றார்கள்
ஒன்றாய்ச் சேர்ந்து உழைத்தார்
என்றும் உதவி யாவர்க்கும்
இனிதே வாழ்ந்து களித்தார்கள்.

பழமொழி முதுமொழி யாவினையும்
வளமாய்க் கொண்ட தமிழ்வழியில்
நிலத்தில் ஒன்றி வாழுங்கள்
நிலைத்த புகழைக் கூடுங்கள்!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *