பல்டி!





ஒரு செயலுக்கு எதிரான செயலை செய்வதும், ஒரு சொல்லுக்கு எதிரான சொல்லை சொல்வதும், சொன்னதை உடனே மாற்றிச்சொல்வதும் சிகனுக்கு பிடித்தமான ஒன்று.
‘நாம் பேசுவதால் மற்றவர்கள் ஏதாவது தவறாக நினைத்து விடுவார்களோ…?’ எனும் சிந்தனை அறவே இல்லாதவனாய் நடந்து கொள்வான்.

“ப்ளீஸ் சாமி… தக்காளி இல்லாததுனால தேங்காய் சட்னி பண்ணிட்டேன். ஊட்டி வேணுன்னாலும் விடறேன். சாப்பிடாம போயிடாதே….’ கெஞ்சும் தாயின் பேச்சை சட்டை செய்யாமல், சட்டையணிந்து பள்ளிக்குச்செல்பவன், தந்தையின் சட்டை பாக்கெட்டிலிருந்து எடுத்த பணத்தில் ஹோட்டலில் சாப்பிடுவான்.
மறுநாள் தக்காளி சட்னி செய்தால் தேங்காய் சட்டி செய்யாததால் வேண்டாம் என்பான். அடுத்த நாள் இரண்டு சட்னியும் செய்த பின் பசியில்லை என தாயை வருத்தப்பட வைப்பான். ஒரு விசயத்தைச்சொல்லி உண்மை என்றால் பொய் என்பான். ஒருவரை நல்லவர் என்றால் கெட்டவர் என்பான். படி என்றால் படிக்க மாட்டான். இவன் படிக்கவே மாட்டான் என்ற பின் விடியும் வரை தூங்காமல் படிப்பான். இறுதித்தேர்வுக்கு முதல் நாள் தியேட்டரில் சினிமா பார்க்க அடம் பிடிப்பான்.
தந்தையின் பைக்கில் பின் பக்கம் திரும்பி அமர்ந்து பின் வருபவர்களையும், சுற்றியுள்ள காட்சிகளையும் வேடிக்கை பார்ப்பான். அனைவரும் கட்டிலுக்கு மேல் தூங்கினால், இவன் கட்டிலுக்கு அடியில் படுத்து தூங்குவான்.
‘மனநோயோ…?’ என மருத்துவரிடம் அழைத்துச்சென்று காட்டினால் அப்போது மட்டும் இயல்பாக நடந்து மருந்து, மாத்திரை, ஊசியிலிருந்து தப்பித்துக்கொள்வான்.
அனைத்து விசயங்களிலும் எதிராக செயல்படுவதால் பள்ளியில் உடன் படிப்பவர்கள் சிகனுக்கு ‘பல்டி’ என பட்டப்பெயரும் வைத்து விட்டனர்.
“ஏண்டா நீ பெரிய கல்டி மாதிரி ஒவ்வொன்னையும் தலைகீழா பண்ணி பல்டினு பேர் வாங்கீட்டே… எவ்வளவு கேவலமா பேசறாங்க தெரியுமா? உன்ன நெனைச்சு எனக்கு தூக்கமே வரலே… தெரியுமா உனக்கு….?” சொன்ன ரம்யாவை நேராகப்பார்க்காமல் திரும்பி நின்று கொண்டான்.
அவன் திரும்பிய பக்கமாகச்சென்றவள் “டேய் நீ என்ன செஞ்சாலும் உன்ன வெறுக்க என்னால முடியாது. ஏன்னா நான் உன்னோட பெஸ்ட் பிரண்ட். ப்ளஸ் டூல எப்படியாவது பாஸாயிடு. அப்பதான் காலேஜ்ல நாம இதே மாதிரி அடிக்கடி சந்திக்க முடியும். உன்னப்பார்க்காம என்னால ஒருநாளக்கூட ஓட்ட முடியாது” சொல்லி கண்ணீர் விட்டவளை அணைத்து ஆறுதல் சொன்னவன், தேர்வில் தேர்ச்சி பெற்று விட சிகனை விட ரம்யா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
கல்லூரி வாழ்க்கை சிகனை முற்றிலும் மாற்றியிருந்தது. சிறுவயதில் தான் விரும்பியது கிடைக்காத போதும், பெற்றோர் அடித்து பணிய வைத்த போதும் ஏற்பட்ட மன அழுத்தம் பின்னாளில் வெளிப்பட்டு பிறரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் செயல்களைச்செய்ய வைத்து விட்டது.
தனக்கு சிறுவயதில் பிடித்த உணவைக்கொடுக்காமல், தாய் விரும்பிய உணவை தன்னைச்சாப்பிடுமாறு அடித்து பணிய வைத்ததாலேயே பெரியவனானதும் தனக்கு பிடித்ததே வேண்டும் என கூறி சமைக்க வைத்து, பின் சாப்பிட மறுத்து, தாயை வேதனைப்பட வைத்து, அழ வைத்து தான் அழுதபோது ஏற்பட்ட மன அழுத்தத்தை வெளியேற்றினான்.
வீட்டிலும், பிறந்த கிராமத்திலும், படித்த பள்ளியிலும் இருந்த கட்டுப்பாடுகள் கல்லூரியில் இல்லாதது மகிழ்ச்சியளித்தது. யாருடனும் யாரும் பேசலாம், பிடித்த உடைகளை அணியலாம் எனும் சுதந்திரமே அவனை மாற்றியிருந்தது. சிகன் எழுதும் கவிதைகளை ரசித்துக்கேட்கவே ரசிகையர் கூட்டம் எப்பொழும் அதிகமிருப்பது தோழி ரம்யாவிற்கு பயத்தை ஏற்படுத்தியது.
“சிகன் நீ இப்ப ரொம்பவே மாறிட்டே…. ஸ்கூல்ல பொண்ணுங்க கூட பேசவே கூச்சப்படுவே… எங்கூடவே நேரா பாத்துப்பேசாம திரும்பி நின்னுதான் பேசுவே…. ஆனா இப்ப மகியோட கை கோர்த்துட்டு சுத்தரே…”
“ஆமா. மகிய எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நான் என்ன சொன்னாலும் கேக்கறா… எனக்கு புடிச்சத வீட்ல சமைச்சு கொண்டு வந்து கொடுக்கறா…. நான் எழுதற கவிதைக்கு நானே சொல்ல முடியாத பொருள் கண்டு பிடிச்சு சொல்லறா. நான் போன செம்ல நல்ல மார்க் வாங்கினதுக்கே மகி தான் காரணம்….”
“அதுக்காக பள்ளித்தோழி என்னை மறக்கலாமா….?”
“தோழி வேற. காதலி வேற…”
“என்னடா சொல்லறே…?”
“நாங்க லவ் பண்ணறோம்….” சிகனின் பேச்சைக்கேட்டு ரம்யாவிற்கு மூச்சே நின்று வந்தது. அவன் முன் அவளால் நிற்க முடியவில்லை. எதைச்சொன்னாலும் மாற்றிச்சொல்லும் மன நிலை கொண்டவன் காதலைச்சொன்னாலும் அவ்வாறே மாற்றி ‘முடியாது’ எனச்சொல்லிவிடுவானோ… என நினைத்ததாலேயே தனக்குள் ஏற்பட்ட விருப்பத்தை பள்ளியில் படிக்கும் போது அவனிடம் சொல்லாமல் ஒரு தலையாக வைத்துக்கொண்டாள்.
கல்லூரிக்கு சென்ற பின் படிப்பில் முதல் தேர்வின் தேர்ச்சிக்குப்பின் பக்குவமாக காதலைச்சொல்லலாம் என நினைத்திருந்தவளுக்கு இன்று சிகன் சொன்ன வார்த்தை இடியாய் தலையில் இறங்கியிருந்தது.
தோழியாக அவளை மனதில் நினைத்திருப்பவனுக்கு காதலியாக ஏற்கும் மனப்பக்குவம் கண்டிப்பாக இருக்காது. மற்ற வார்த்தைகளிலும், செயலிலும் இதுவரை தெரிந்தே பல்டி அடித்தவன் இப்போது அவள் விசயத்தில் தெரியாமல் பல்டியடித்து விட்டான்.
இதை நாம் ஏற்பதைத்தவிர எதிர்ப்பதால் பலனில்லை என்பதைப்புரிய வைத்த அவளது அறிவை புறந்தள்ளி ஏற்க முடியாமல் தவித்த ரம்யாவை அவளது மனம் தனித்துச்செல்ல வைத்து கண்ணீர் சிந்த வைத்தது.