பரதன் எடுத்த சபதம்




“சத்தியப் பிரமாணம் என்பது அளவுகோல். நான் என் வாழ்க்கைக்கு இந்த விழுமியங்களை அளவுகோலாகக் கொண்டு வாழ்வேன். இவற்றில் எதாவது ஒன்றையாவது தவறினேனானால் அந்த பாவம் என்னை தீவிரமாக பீடிக்கும்” என்றான் உத்தமன் பரதன்.
தான் எவற்றை அளவுகோல்களாகக் கொண்டு வாழ்ந்து வந்தானோ அவற்றையே சபதங்களாகக் கூறி அவற்றை மீறி நடப்பவன் அடையும் துர்கதிகளை தானும் அடைவேன் என்று கௌசல்யா தேவியிடம் சொல்கிறான் பரதன்.
கௌசல்யா தேவியைக் காண வந்த பரதனும் சத்ருக்னனும் தாயின் நிலையைக் கண்டு துக்கத்தை அடக்க முடியாமல் அவளை அணைத்துக் கொண்டு அழுகின்றனர்.
“ஏனடா அழுகிறாய்? ராஜ்யத்தை விரும்பிய உனக்காகச் செய்ய வேண்டிய கொடூரமான செயல்களை எல்லாம் உன் அன்னை செய்து ராஜ்யத்தை உன் கைவசப்படுத்தி விட்டாளே! இன்னும் என்னை கூட வனத்திற்கு அனுப்பிவிடும் முயற்சியில் இறங்குங்கள். ஹிரண்யகர்பனான ராமன் இருக்கும் வனத்திற்கு அக்னி ஹோத்திரத்தை எடுத்துக் கொண்டு நானும் சென்று விடுகிறேன்” என்று கௌசல்யாதேவி கூறியதைக் கேட்ட பரதனுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போல் மனம் வலித்தது.
பரதன், கௌசல்யா தேவியின் பாதங்களில் விழுந்து கதறினான், “அம்மா! ராமரிடம் எனக்குள்ள அன்பை நீ அறியாதவளா! எந்த குற்றமும் செய்யாத என்னை ஏன் இப்படி நிந்திக்கிறாய்? அம்மா! ராமச்சந்திரன் யாருடைய அனுமதியோடு வனம் சென்றாரென்று நீ நினைக்கிறாயோ அதாவது எனக்குத் தெரிந்துதான் அவர் சென்றாரென்று நீ நினைக்கிறாய் அல்லவா? அதனால் எனக்கு இந்த பாவம் தெரிந்திருந்தால் நான் இவ்விதம் ஆவேனாக! இப்படிப் பட்ட துர்கதிகளை அடைவேனாக!” என்று கூறி முப்பதெட்டு சபதங்களை வரிசைப்படுத்துகிறான்.
சத்தியப் பிரமாணங்கள் செய்வதும் அவற்றைக் கடைப்பிடிக்காமல் விடுவதும் உத்தமர்களுக்கு கடினமான செயல். பரதன் எடுக்கும் சபதங்கள் நமக்கு மிகச் சிறியனவாகத் தோன்றலாம். ஆனால் சமுதாய விழுமியங்களையும் வாழ்வின் உண்மைகளையும் இவை தெரிவிக்கின்றன. அறியாமல் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள் கூட எத்தனை பெரிய தீமையை விளைவிக்கும் என்பதை இவை தெரிவிக்கின்றன.
“சூரியனுக்கு எதிராக நின்று மல ஜலம் கழிப்பது, தூங்கும் பசுமாட்டை காலால் உதைப்பது போன்ற பாவங்களை செய்பவன் அடையும் துர்கதியை நான் அடைவேனாக” என்கிறான் பரதன்.
இவை பெரிய குற்றங்களா என்று கேட்டால் ஆமாம். பெரிய குற்றங்கள்தான். அக்னி, சூரியன், சந்திரன், நீர்நிலை,வேதம் கற்ற பிராமணன், பசுமாடு, எதிர்காற்று – இவற்றுக்கு எதிராக சிறுநீர் கழித்தால் புத்தி மந்தம் ஏற்படும். தன் அறிவைத் தானே அழித்துக் கொள்ளும் தவறுகள் இவை.
“பணியாளனிடம் அதிக வேலை வாங்கிவிட்டு தகுந்த கூலி கொடுக்காமல் ஏமாற்றுபவன் அடையும் துர்கதியை நான் அடைவேனாக” என்று சபதம் கூறுகிறான் பரதன். இது பெரிய குற்றமே. இவ்வாறு செய்வது பாவம் என்று தர்ம சாஸ்திரமான ராமாயணம் கூறுகிறது.
“நம்மிடம் நம்பிக்கை வைத்து யாரோ நமக்கொரு விஷயத்தை ரகசியமாக கூறினால் அதை எல்லோரிடமும் போய்ச் சொல்லி பிரச்சாரம் செய்பவன் அடையும் துர்கதியை நானும் அடைவேனாக” என்று கூறுகிறான் பரதன்.
இது ஒரு பெரிய மன பலவீன நிலை. இதனையே கோள் சொல்வது என்கிறோம். இது ஒரு நன்றிகெட்ட நிலை. உண்மையில் பெரிய தவறு.
“யாருக்கும் கொடுக்காமல் தானே உண்பவன் அடையும் துர்கதியை அடைவேனாக!” என்கிறான் பரதன்.
யார் மீதும் பாசம் இருக்காது. தனக்குப் பிடித்த பதார்த்தத்தை தான் ஒருவனே தின்று தீர்ப்பது. பிடித்ததை தானமளிக்கும் குணமில்லா மனம். இது கூட ஒரு பாவமே. காசி யாத்திரைக்குச் செல்லும்போது கயையில் பிடித்த பதார்த்தத்தை விட்டுவிடும்படி கூறுவார்கள். யோசித்து யோசித்து பிடிக்காத ஒன்றை விட்டுவிட்டு வருவோம். உண்மையில் விட வேண்டியது மாயையான இந்த லௌகீகத்தை. அனால் அதை தவிர அனைத்தையும் விடுவோம்.
“இரண்டு சந்தியா காலங்களான சூரியோதயம், சூரிய அஸ்தமனம் இந்த சமயங்களில் தூங்குபவன் அடையும் துர்கதியை அடைவேனாக!” என்கிறான் பரதன்.
இது சோம்பேறியின் குணம். இது வாழ்வின் விழிப்பு சம்பந்தப்பட்ட விஷயம். வேதமும் இது பற்றி உரைக்கிறது. இது ஒரு பெரிய தோஷம். சூரியோதயத்துக்கு முன்பே எழுந்து இரவு ஒன்பது மணிக்கு முன் உறங்க மாட்டேன் என்று நாம் எல்லோரும் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டு வாழ வேண்டும்.
அடுத்து சமுதாய விஷயம் வருகிறது. குடும்ப எல்லை சம்பந்தப்பட்டது. அதிக சந்தானம். உணவிட்டு போஷிக்க வக்கில்லாதவனுக்கு இத்தனை குழந்தைகள் எதற்கு? அந்த துக்கம் பாவங்களுக்கு மூலம். இது ஒரு குடும்பத் தலைவன் செய்யக் கூடாத பாவம் என்கிறது ராமாயணம். திட்டமிட்ட குடும்பமில்லாதவன் பாவி என்கிறது ராமாயணம். இது பரதன் கூறிய கூற்று.
“தாகத்தால் தவிப்பவனுக்கு குடிக்க நீர் தராமல் நிராகரிப்பவன் அடையும் துர்கதியை நான் அடைவேனாக!” என்கிறான் பரதன்.
கஞ்சன் தன்னிடம் இருந்தாலும் கேட்டவனுக்குத் தண்ணீர் தரமாட்டான். அவன் பாவி. தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்களா என்ன? என்று தோன்றும். ஆனால் நகர வாழ்க்கையில் குழாய்த் தண்ணீர் தினமும் வராத நிலையில் இப்படிப்பட்ட பாவிகள் நிறைய பேர் இருப்பார்கள் என்றே தோன்றுகிறது. நீரே அளிக்காதவன் வேறு எதை அளித்து விடுவான் ? அவன் என்றுமே தானம் செய்பவன் என்ற நிலையை அடைய மாட்டன்.
இவ்விதம், முப்பதெட்டு சபதங்களை எடுக்கிறான் பரதன். பரம துக்கத்தை அனுபவிக்கிறான். மகாத்மாவும் ஸ்ரீ ராமச்சந்திர தாசனுமான பரதன் செய்த இந்த பிரதிஞைகளைக் கேட்ட கௌசல்யமாதா, தனக்கு மன ஆறுதல் கிடைத்ததென்றும், தன் உயிர் நிலை பெற்றதென்றும் கூறி பரதனை அன்போடு அணைத்து தன் மடியில் அமர்த்தி, “நீயும் லட்சுமணனைப் போலவே தர்ம வழி விட்டு விலகாதவன். இது என் அதிர்ஷ்டம். நீ சத்திய வாக்கு மீறாதவன்.சத் புருஷன்” என்கிறாள்.
இவற்றைக் கேட்கும் நாமும் இப்படிப்பட்ட தவறுகளிலிருந்தும் துர்கதிகளிலிருந்தும் நம்மைக் காத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.”
தெலுங்கில் -பிரம்மஸ்ரீ காசீபொட்ல சத்யநாராயணா அவர்கள் தமிழில் – ராஜி ரகுநாதன்.
-தீபம், ஜூன்,20, 2016ல் வெளியானது.
தெலுங்கில் -பிரம்மஸ்ரீ காசீபொட்ல சத்யநாராயணா
தமிழில்-ராஜி ரகுநாதன்.