பயம்




(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
எல்லாமே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. விட்டு விட்டு வீசுகின்ற காற்றிலேகூட தீவிரமான அசைவு செறிந்தி ருப்பதாக உணர்ந்தான். நிமிர்ந்த போது எதிரேயுள்ள மரம் அசைவற்று நின்றது. காகம் ஒற்றையாக மிரட்சி யோடு எங்கோ பார்த்து விட்டுப் பறந்தது. தூரத்திலே தலையில் மூட்டையொன் றுடனே தள்ளா டித் தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்த கிழவர் ஒரு வரை வேகமாகத் தாண்டிய வாறு பஸ்வண்டி வந்தது. நேரத் தைப் பார்த்தான் சிவசாமி. ஏழு மணி பத்து நிமிஷம். அந்த நேரத்திலே சந்தேகப்படத் தேவையில்லை. சுவிற்சலாந் தின் பிரபல்யம் வாய்ந்த மணிக் கூட்டுத் தயாரிப்பு நிறுவனத்தில் ஆறுமாதங்களின் முன்னர் தான் அந்தக் கைக்கடிகாரத் தினை அவன் வாங்கியிருந்தான்.

விமானத்தில் இருந்து இறங்கியதும் இலங்கை நேரத்திற்கு சரியாக, கடிகார நேரத்தினை மாற்றிக் கொண்டான். விமானத் திலிருந்து இறங்கி வெளியே வந்து, கனகேஸ்வரன் கூட்டி வந்த ‘வானி’ல் ஏறிய போதே உஷ்ணத்தகிப்பை உணர்ந்தான். வழிவழியேயும் பல இடங்களில் இராணுவத்தாராலும், பொலிஸாராலும் நிறுத்தப்பட்டுச் சோதனை என்ற பெயரில் குறுக்கு விசாரணை செய்யப்பட்ட போது மனதினுள்ளே எரிச் சலும் கவலையும் வெறுப்பும் உண்டாயிற்று. கனகேஸ்வரன், முதலிலேயே சோதனைச் சாவடிகளில் ஏதாவது வாதாடினால் தேவையின்றி மாட்ட வேண்டி வரும் என்று ஒன்றுக்கு மூன்று முறை சொன்னதால் தன்னை அடக்கிக் கொண்டு மௌனமாயிருந்தான்.
சுவிற்சலாந்திலிருந்து இங்கே வந்து ஏழு நாட்கள்.
இருபது ஆண்டுகால இடைவெளியில் பல மாற்றங்களைக் காண வேண்டி வரும் என்று நினைத்திருந்தான். மாற்றங் களுக்குப் பதிலாக சிதைவுகளும் மங்கலும் இனந்தெரியாத அச்சமும் நிறைந்திருப்பதைக் கண்டான். முன்பு மிகவும் சாதாரணமாகப் போய் வந்த இடங்களிலெல்லாம் மஞ்சள் கறுப்பு நிறத்தடுப்பு வேலிகள். அதனருகே இறுகிப் போன முகத்தோடும் துப்பாக்கிகளோடும் நிற்கும் பொலிஸாரும் சிப்பாய்களும்.
சுவிற்சலாந்துக்கு வந்த ஒருவரிடம் இலங்கை ஆங்கிலத் தினசரி ஒன்றினைச் சென்ற வருடம் தற்செயலாக வாங்கிப் பார்த்தான். அதில் அமைச்சர் ஒருவர் ஆணித்தரமாகக் கூறிய கருத்தொன்றினைப் படித்தான். வியப்பும் கேள்விகளும் மனதினுள்ளே ஒன்றாய்ப் பத்தாகப் பெருகின. கடந்த காலங்களைவிட இப்போது இலங்கையில் வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்திருப்பதாக விகிதாசாரத் தொகையோடு அவர் விளக்கியிருந்தார். அதை அப்போது அவன்
அரசியல்வாதிக்குரிய பொய் வார்த்தையென நினைத்தான். இப்போது நேருக்கு நேராகப் பார்க்கிறபோது, சந்திக்குச் சந்தி காணப்படுகிற சாவடிகளையும், மீசையே அரும்பிடாத இளமுகங்களையும் பார்க்கிற போது அது, அந்த அமைச்சரின் வாக்கு மூலம் உண்மையென்றே கொள்ளத் தோன்றுகிறது. இனந்தெரியாத கவலையோடு மனதினுள் உதிர்ந்தது சிரிப்பு.
“அண்ணா …”
யோசனை கலைந்தான்.
எதிரே உதயன்.
“என்ன?”
புன்னகையோடு கேட்டான்:
“வீட்டுக்காரனோடு பொலிசில் பதியப் போவது தள்ளிப் போகிறது. திடீர் திடீரென்று சோதனை நடக்கிறது… அந்த ஆள் வந்ததும் செய்ய வேணும்…”
உதயன் நிதானமாக அவனைப் பார்த்தான்.
“உதயா, நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். நான் இந்த நாட்டுப் பிரஜை அல்ல. சுவிற்சலாந்துப் பிரஜை. இந்த நாட்டுப் பிரஜைகளுக்காக கொண்டு வரப்பட்ட சட்டம் என்னை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?”
உதயனின் முகத்தில் புன்னகை. அறியாமை நிறையப்பெற்ற ஒருவனுக்காக வெளிப்படும் புன்னகை. இரக்கமான அபிப்பிராயம். அவனை உதயனின் பார்வை மேலுங்கீழுமாக அளந்தது.
“ஆனால்…” இழுத்தான்.
“சொல்லும்?’ சிவசாமியின் குரலில் கனிவு.
“ஆனால் நீங்கள் ஒரு தமிழன் “
“யாராக இருந்தாலுமென்ன சட்டம் சட்டந்தானே…”
அழுத்தமாகக் கேட்டான் சிவசாமி.
“நீங்கள் நன்றாகப் படித்தவர்தானே… நானா இதை உங்களுக்குச் சொல்ல வேணும்…”
“இல்லை – சொல்லும்…..” கூறி முடிக்கவில்லை அவன்.
அவர்கள் சென்ற வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.
சோதனைச் சாவடி!
“இறங்குங்க…” சிங்களத்தில் சொன்னான், சிப்பாய் தடித்த குரலில். இன்னொருவன் துப்பாக்கியைப் போல அ.. றிணையாகத் தெரிந்தான்.
“பாஸ்போர்ட்”
நீட்டியவனை மேலுங்கீழுமாகப் பார்த்தான் சிப்பாய். அடையாள அட்டையை நீட்டிய இன்னொரு ஆளை. அதைப் பார்க்காமலே சைகை காட்டி சிங்களத்திலே ஏதோ கூறி அவனைப் போக விட்டான். இவனைப் பார்த்து ‘ஐசி’ என்றான். சிப்பாயைப் பார்த்து ஆங்கிலத்திலே தனக்கு அடையாள அட்டை தேவையில்லை. நான் சுவிற்சலாந்துப் பிரஜை என்று கூறினான்.
சிப்பாய் கோபத்தோடு அவனை ஏறிட்டான். ‘மட்ட ஜாதிக் ஹந்தனும் பக்த சகா பொலிஸ் வார்த்தாவ. வென்வன்ன வெனுவா. நத்னங் ஏக்க நீதியிங் வறதா’
இவனுக்கு அருகே நின்ற வயதான ஒருவர். சிங்களவராக இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சொன்னார்:
“உங்களுடைய அடையாள அட்டையையும் பொலிஸ் பதிவையும் காட்டச் சொல்கிறான். அவை இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாம்…”
வயதானவருக்குத் தன்னை அறிமுகப்படுத்திய சிவசாமி, தனது நிலை பற்றிச் சிங்களத்தில் சிப்பாய்க்குக் கூறுமாறு அவரிடம் கேட்டான். அவரது முகம் சுருங்கிற்று. சட்டென்று அங்கிருந்து போய் விட்டார். போகும்போது அவர் முணுமுணுத்தது அவனது காதோடு கேட்டது. “இப்படியான சிக்கலுள் மாட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை…”
அப்போது அங்கே இன்னொருவன் வந்தான். அதிகாரியாய் இருக்க வேண்டும். சிப்பாய் அவனிடம் ஏதோ சொன்னான்.
அதிகாரி ஆங்கிலத்திலே சிவசாமியிடம் கேட்டான்:
“என்ன விஷயம்?”
சிவசாமி யாவற்றையும் விளக்கமாகச் சொன்னான். அதிகாரி கவனமாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு கண்களைச் சுருக்கியவாறு அவனைப் பார்த்தான்.
“ஆனால், நீ ஒரு தமிழன் தானே…”
சிவசாமிக்கு எரிச்சல் பெருகிற்று.
“..ம்ம்ம்.. ஆனால் இந்த நாட்டுப் பிரஜை இல்லை …”
“பிறகு எதற்காக இங்கு வரவேண்டும்?”
நையாண்டியாக அதிகாரி அவனைப் பார்த்தான். “எனது உறவினர்களைப் பார்க்க வந்தேன்…”
அதிகாரி எரிச்சலூட்டும் விதத்திலே சிரித்தான். சிவசாமியின் மனதுள் ஆத்திரம் கொழுந்து விட்டெரிந்தது. உடம்பே எகிறுவதை உணர்ந்தான். முகத்தில் ஆத்திரம் சிவந்தது.
“இந்த நாட்டுப் பிரஜை இல்லை என்கிறாய். பிறகு உனக்கு எப்படி இங்கே உறவினர்கள் இருக்க முடியும்…”
ஆத்திரம் எல்லை கடந்து போயிற்று அவனுக்கு.
“இப்போ நான் என்ன செய்ய வேண்டும்?”
அதிகாரி தலையைச் சொறிந்து கொண்டான்.
“உன்னைப் பற்றி யாரிடம் விசாரிக்கலாம்?”
சட்டென்று சொன்னான் சிவசாமி: “சுவிற்சலாந்து ‘எம்பசி’யில் விசாரிக்கலாம். நானே அவர்களோடு வேண்டுமானால் தொலைபேசியில் பேசுவேன்…”
அதிகாரியின் முகம் மாற்றங் கண்டது. சிவசாமியை உறுத்துப் பார்த்தான். பின்பு அவனுடைய ‘பாஸ்போர்ட்’டை வாங்கிப் பார்த்து விட்டுத் திருப்பிக் கொடுத்தான்.
“நீ போகலாம். ஆனால், தங்கியிருக்கும் முகவரியைத் தரவேண்டும்…”
அவன் தங்கியிருந்து வீட்டுச் சொந்தக்காரன் திசநாயக்கா. நல்ல மனிதன். தனது வீட்டிலே ஆறு ஆண்டுகளாகக் குடியிருக்கும் தியாகராசா, மாதம் பிறந்த மூன்றாம் நாளே வாடகைப் பணம் கொடுத்து வருவதால் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தான். அங்கே இன்னொருவரான சிவசாமியை தியாகராசா. தங்க வைப்பதாகச் சொல்லி அதற்காக இன்னும் ஐந்நூறு ரூபா அதிகமாகத் தருவதாகக் கூறியதும் அதற்கு சந்தோஷமாக ஒப்புக் கொண்டான். ஆனால் பொலிஸ் பதிவு அவசியமென்றான்.
மறுநாட் காலையில் காலியிலுள்ள திசநாயக்காவின் அண்ணன் காலமானதும் அவசர அவசரமாகக் காலிக்குப் புறப்பட்டுச் சென்று ஏழு நாட்களின் பின் இரவு பதினொரு மணிக்கு வீடு திரும்பினான். களைப்பை ஆற்ற தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது சடசடவென்ற சத்தத்துடன் உள்ளே நுழைந்தனர் சிப்பாய்கள்.
திசநாயக்காவின் உடல் வெடவெடவென்று நடுங்கிற்று. அப்போது சிவசாமி வெளியே வந்தான். திசநாயக்காவைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
“ஏன் பயப்படுகிறீர்கள்?” என்றான்.
இராணுவ அதிகாரி சத்தமிட்டான்:
“ஐ.சி. காட்டுறதுங்…”
சிப்பாய் ஒருவன் சிவசாமியைக் கேள்வியோடு பார்த்தான். சிவசாமி அறையினுள்ளே போய் தனது ‘பாஸ்போர்ட்டை எடுத்துவந்து அதிகாரியிடம் கொடுத்தான். அதைப் பார்த்து விட்டுத் திருப்பிச் சேர்த்த அதிகாரி சாதாரணமாகக் கூறினான்.
“நீங்கள் பொலிசிலும் பதிய வேண்டும்…”
அவர்கள் போனதும் திகைத்துப் போயிருந்த திசநாயக்காவைப் பரிவோடு நோக்கினான் சிவசாமி,
“எதற்கு இப்படிப் பயந்தீர்கள்?”
“இல்லை … இவர்கள் கூட்டிச் சென்றால்… அது நரகம்.
ஒருமுறை பொலிஸ் ஸ்டேஷனுக்கு நான் முறைப்பாடு செய்யச் சென்றேன். வீட்டுக்குத் திரும்பி வந்து ஒரு கிழமையாகக் காய்ச்சலில் படுத்திருந்தேன்…”
“ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்?”
திசநாயக்கா யோசித்தார். பிறகு தனக்குத் தானே கூறுவது போலச் சொன்னார்:
“சின்ன வயதில் நடுச்சாமத்திலை நானும் காமினியும் பந்தயம் கட்டி சுடுகாட்டிலை எத்தனையோ தரம் போய் இருந்திருக்கிறோம். காமினி அரசியலுக்குப் போனான். ஒரு நாள் களனியிலை அழுகிய பிரேதமாய் மிதந்தான். தெரியேல்லை. ஏன் இப்படி நான் ஆகிப் போனேன் என்று தெரியேல்லை …”
ஆங்கிலம் கொச்சை தட்டிற்று. ‘நல்லகாலம். வந்த அதிகாரி நல்ல ஆள். அல்லாவிட்டால் நாங்கள் இருவரும் ஏதாவது ஒரு பொலிஸ் நிலையத்துக்குக் கூட்டிப் போகப்பட்டிருப்போம். நாளைக் காலை முதல் வேலையாகப் பொலிஸில் பதிய வேண்டும்’ மனதினுள்ளே சிரித்துக் கொண்டான் சிவசாமி.
கண்டி என்ற அழகிய கனவின் மீது தூசியும் அழுக்கும் படிந்துள்ளது போல சிவசாமிக்கு உணர்வு தட்டிற்று. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற போது நெஞ்சைப் பறித்தெடுக்கும் நீல மலைகளையும், வளைந்து ஓடும் மகாவலியையும், வண்ணங்களைத் தூவி நிற்கும் செடிக் கூட்டங்களையும், மலைகளைச் சுற்றி மெல்லவே புரளும் சோம்பல் மேகத்திரளையும், சிலிர்த்துச் சிதறும் மழைத் துமியலையும் பார்த்து உணர்ந்து பரவசமெய்திய நாட்களெல்லாம் இப்போது பழங்கனவாகி விட்டாற் போல உணர்ந்தான் சிவசாமி. மனதுள் வெறுமை பரவிற்று. வீதிகளின் நெருக்கத்தில், ஆளை ஆள் பார்க்கையில் நம்பிக்கையீனம் ஒளிவின்றித் தொனித்தது.
கொழும்பு பஸ்ஸில் ஏறினான்.
அருகே இருந்தவனோடு மெல்ல அறிமுகம் உண்டாயிற்று. பொன்னையா மலைநாட்டு இளைஞன். மெல்லிய குரலிலே கதைத்தான். பஸ் கண்டக்டர் டிக்கட் கொடுக்க வந்தான். பொன்னையா ஐந்நூறு ரூபாவைக் கொடுத்தான். மிகுதியை டிக்கட் கொடுத்து முடிந்ததும் தருவதாகச் சொன்னான் கண்டக்டர். பொன்னையா மௌனமானான்.
அரைமணி நேரம் போயிற்று. கண்டக்டர் திரும்பவும் அருகே வந்தான். பொன்னையா அவனைக் கேள்வியோடு பார்த்தான். பிறகு தருவேன் என்று சைகையில் கூறிவிட்டு பின்பக்கமாகப் போனான் கண்டக்டர். பொன்னையாவின் முகம் சோர்ந்து சுருங்கிற்று.
பஸ் போகையில் ஓரமாகப் பார்த்தான் சிவசாமி. முன்பு பழங்களும் பச்சைக் காய்கறிகளும் நிறைந்திருந்த இடங்களில் இப்போது தண்ணீர்ப் போத்தல்களும், வண்ண வண்ணப் ‘பக்கெற்று ‘களில் கொறிப்புத் தினிகளும் தொங்கின. சில எருமைகள் நிலத்தில் சிதறியிருந்த கொறிப்புத் தீனியின் வெறும் பைகளை அதக்கி அதக்குத் தின்று கொண்டிருந்தன.
திடீரென்று அருகே கேட்ட சத்தம் சிவசாமியைத் திரும்ப வைத்தது. திரும்பினான்.
பொன்னையாவின் சட்டையைப் பிடித்து உலுப்பிக் கொண்டிருந்தான் கண்டக்டர்.
அதிர்ந்து போனான் சிவசாமி. எழுந்து அவர்களைப் பிடித்துத் தனியாக்கினான்.
கண்டக்டர் சிங்களத்தில் கத்தினான்.
பஸ்ஸில் இருந்த அனைவரும் மௌனமாயிருந்தனர். இந்த விஷயங்கள் எதிலுமே சம்பந்தமில்லாமல், தாங்கள்
வேறெங்கோ இருப்பது பொல அமர்ந்திருந்தனர்.
பொன்னையா கவலையோடு சொன்னான்:
“ஐயா, நான் பஸ் டிக்கற்றுக்குரிய பணத்தை மட்டுந்தான் கொடுத்தேனென்று… கண்டக்டர் சொல்லுகிறார்…”
“என்ன?”
அதிர்ந்த து சிவசாமியின் குரல். “நான் உனக்கு சாட்சியென்று அவனிடம் சொல்லு…” பொன்னையா அதைச் சொன்ன மறுகணமே கண்டக்டர் பொன்னையாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். பிறகு விறுவிறுவென்று டிரைவரின் அருகே சென்று சத்தமாகக் கத்தினான்.
பஸ்ஸில் இருந்த அனைவரும் மௌனமாயிருந்தனர். ஒருவரை ஒருவர் பார்க்காமல் பேசாமல் மெழுகுச் சிலைகளாக.
கொஞ்ச நேரத்தில் பஸ் பொலிஸ் நிலையமொன்றினுள் வந்து நின்றது.
டிரைவரும் கண்டக்டரும் உள்ளேபோய் இரண்டு பொலிஸாருடன் அங்கே வந்தனர். பொன்னையாவை கண்டக்டர் அடையாளம் காட்ட, ஒரு பொலிஸ்காரன் அவனை இழுத்துக் கீழே இறக்கினான். ஏளனமாக அவனைப் பார்த்த கண்டக்டர் சிவசாமியை வெறுப்போடு ஏறிட்டான்.
சிவசாமிக்குத் தன் மீது அடங்காத வெறுப்பு வந்தது. பொன்னையா இப்போது எப்படி இருப்பான். என்ன நடந்திருக்கும் என்ற கேள்விகள் மனதினைக் குடைந்து வேதனைப்படுத்தின. வேதனை மெல்லவே கேள்விகளை எழுப்பிற்று. பொன்னையா இறக்கப்பட்ட போது தானும் இறங்கிப் பொலிஸ் ஸ்டெஷனில் சாட்சி சொல்லி அவனை விடுவித்திருக்க வேண்டும். அதைச் செய்யாதது பெரிய தவறல்லவா என்று மனதினுள்ளிருந்து சத்தம் கேட்டது. ஏன் அப்படிச் செய்யவில்லை … குரல் பெருகிற்று. அவற்றிடையே திசநாயக்காவின் மெலிந்த சத்தமும் கேட்டது. திசநாயக்காவைத் தான் கேட்ட கேள்விகளெல்லாம் ஒவ்வொன்றாகத் தன்னைச் சுற்றிச் சுற்றிக் குரலிடுவதாக சிவசாமிக்கு உணர்வு தட்டிற்று. நெற்றியைக் கைகளால் அழுத்திக் கொண்டான். ஆனாலும் குரல்கள் ஓயவேயில்லை. இப்போது கனகேஸ்வரனின் வார்த்தைகளை யும் அக்குரல்களிலே சிவசாமி அடையாளம் கண்டு கொண்டான்.
– விநோதினி (பதினொரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, விண்மீன் பப்ளிகேஷன், கொழும்பு.