பதின்ம வயதை கடப்பவள்






“காசி, பள்ளிகூடத்துக்கு நேரமாச்சு போயி குளி”-என்றாள் அவள் அம்மா. காசியம்மை அவர்களுக்கு ஒரே மகள். கொஞ்சமும் வெயில் படாமல் வளர்ந்தவள்.எட்டாம் வகுப்பு படிக்கிறாள். இப்பவோ அப்பவோங்கற வயசு அவளுக்கு. குழந்தைமை அவளிடமிருந்து இன்னும் விட்டு விலகவில்லை. உள் அறையில் தன் ஆடைகளை களைந்துவிட்டு பிறந்த மேனியாக சமையல் கட்டுக்குள் இருக்கும் குளியலறைக்கு போவாள். அவள் தந்தையை திரும்பி பார்த்து சிரிப்பாள். பின் அம்மாவையும் பார்த்து சிரிப்பாள். ஒய்யாரமாக நடந்து குளியலறைக்குள் போகும் முன் அவள் அம்மாதான் வந்து தலைவாசல் கதவை அடைப்பாள். வெளி கண்கள் பார்த்துவிடாமல் இருக்க. அவளோ நிர்வாணம் என்பது யதார்தமானதுதான் என்றே புரிந்து கொண்டிருந்தாள்.ஆனாலும் அவள் தந்தையை பார்த்து சிரிக்கும் போது அதன் அர்த்தம் என்ன என்பது புரிந்து கொள்ள முடியாத நிலையில்தான் உள்ளது. தினமும் காலையில் இப்படித்தான் நடக்கிறது. அம்மணமாக இருப்பதற்கும் ஒரு வயது இருக்கிறது. வெட்கத்தை உணரும் போது ஆடையை இறுக பற்றிக் கொள்வாள். வெட்கம் எப்போது மலரும். அவளுக்கு மலரும் வயதுதான். சிலருக்கு வெட்கத்தை உணர்த்தினாலொழிய உணரவே மாட்டார்கள். அதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா.
ஒரு நாள் காலையில் அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் எல்லாம் “ஹே”-என்று கத்தினார்கள். சமையல் அறையில் வேலையாக இருந்த அம்மா வெளியே வந்து பார்த்தாள்.எல்லோரும் அவளைத்தான் கைகாட்டி “ஹே!”-என்றார்கள். சடுதியில் புரிந்து கொண்ட காசியின் அம்மா கிணற்றடியில் நிற்கும் பாட்டியை தள்ளிக் கொண்டு வந்து பாட்டியின் வீட்டிற்குள் உட்கார வைத்தாள். கிணற்றில் சேந்தி வைத்திருந்த இரண்டு குட நீரையும் பாட்டியின் தலையில் கவிழ்த்தினாள். நிர்வாணமாக இருந்த பாட்டியை பார்த்த காசிக்கு என்னவோ போல் இருந்தது. தன் வழுவழுப்பான அடிவயிற்றை தொட்டு யோசித்தாள், ஐந்து பிள்ளைகளை பெற்ற பாட்டியின் வயிறு பள்ளமும் மேடுமாக,தையலும்-தளும்புமாக இருக்கிறதே.பெண் அழகு முற்றிலும் உடைந்து போய்…!
தாத்தாவின் மறைவிற்கு பிறகு அவரது ஓய்வூதிய பணம் பாட்டிக்கு வருகிறது. மது அருந்தும் பழக்கத்தை தாத்தாவிடமிருந்துதான் கற்றிருந்தாள் பாட்டி. பணம் கையில் இருக்கும் நாட்களில் இரவில் அளவுக்கு அதிகமாக குடித்திருப்பாள். காலை வரை நிதானமின்றி இருப்பவளுக்கு தன் இடுப்பு துணியைப் பற்றின சுயப்ரக்ஞைகூட இல்லாதிருப்பாள் போல. மதுவுக்கு கடிப்பானாக எப்போதும் அவள் வீட்டில் மீன் சட்டியில் பொரிந்து கொண்டே இருக்கும். வாசலிலும் ஓட்டின் மேலும் பூனைகள் அலைந்து கொண்டிருக்கும்.
பள்ளிக்கு சென்ற காசி அன்று பாதியிலேயே திரும்பி இருந்தாள். அவள் போட்டுச் சென்ற உடைகளை நனைத்து வைத்துவிட்டு மாற்று உடையை தந்திருந்தாள் அம்மா. காசியின் தந்தைக்கு மகள் ருதுவாகிவிட்ட செய்தியை சொன்னாள். மூன்று நாட்களுக்கு காசி பள்ளிக்கூடம் போகவில்லை.சொந்த பந்தங்கள் எல்லோரும் வந்து சென்றார்கள்.
முதல் அழுக்கு துணிகளை ஜன நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆழம் தோண்டி புதைத்தார் அவள் அப்பா.
பதின்பருவம் வரை கூந்தல் வாரி இறுக்கி ஜடை பின்னிவிடும் போதெல்லாம் பாலியல் உறவுமுறைகளை பூடகமாகவே சொல்லித் தருவாள் அம்மா.
ஆயிற்று, வழக்கம் போல் அன்று பள்ளிக்கு செல்லும் நாள். “காசி, பள்ளிக் கூடத்துக்கு நேரமாச்சு போய் குளி” – என்று சமையலறையிலிருந்து சொன்ன அம்மா, அன்று விசேசமாக மகளை கவனித்தாள். உள் அறையில் ஆடைகளை களைந்துவிட்டு நெஞ்சு வரை முண்டுத் துணியை கட்டிக் கொண்டு குளியலறைக்கு போகும் போது அவள் அப்பாவை பார்த்து சிரிக்கவில்லை. குனிந்த தலை நிமிராமல் குளியலறைக்கு போனாள். வெட்கம்’ அவளுக்குள் ஜனித்துவிட்டது. ஆனால், அவள் மனதுக்குள் பாட்டியின் நிர்வாணம் மட்டும் உறுத்திக் கொண்டே இருந்தது. அதைப்பற்றி கேட்கவும் அவளுக்கு தயக்கமாக இருந்தது. அவளுக்கான சந்தேகங்களை தெளிவாக விளக்கிவிடும் ‘காலம்’. அதுவரை அவள் பொறுத்திருக்க வேண்டும். இப்போது அவள் சிறுமி அல்ல. மனுஷி!
– தங்கமங்கை இதழில் மே,2025 ல் பிரசுரமானது.